-சேக்கிழான்
தற்போது பயன்பாட்டில் உள்ள ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2023 மே 19-இல் அறிவித்திருக்கிறது. மக்கள் தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி செப். 30-ஆம் தேதிக்குள் மாற்று ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றதல்ல. அதேசமயம், அதன் தொடர்ச்சியான நடவடிக்கையும் கூட. இந்தத் தருணத்தில், 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 'காண்டீபம்’ காலாண்டிதழில் (தை 2017) வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை நினைவுகூர்வதற்கு உரியதாக உள்ளது. அக்கட்டுரை (பகுதி- 2) இங்கே நமது சரித்திரத் தேர்ச்சிக்காக..

.
விமர்சனங்களும் புலம்பல்களும்:
மோடி அரசு மேற்கொண்ட கருப்புப் பணத்தின் மீதான துல்லியத் தாக்குதல், எதிர்பார்த்த விளைவுகளை அளிக்கத் துவங்கி விட்டது. ஆனால், அரசின் எதிர்ப்பாளர்களும், வரி ஏய்ப்பர்களின் நண்பர்களும் அரசை கடுமையாக்க் குறை கூறுகிறார்கள். அவர்களின் விமர்சனங்கள் சரியானவை தானா என்று பார்ப்போம்.
1. முதலில் இந்த நடவடிக்கையை பாஜக நண்பர்களுக்கு முன்கூட்டியே பிரதமர் சொல்லிவிட்டார் என்று புகார் கூறினர் அரவிந்த் கேஜ்ரிவாலும் ராகுலும். அது உண்மையானால், நாட்டில் ஆங்காங்கே பாஜகவினரிடமிருந்தும் கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி? அடுத்து நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கே தெரியாமல் இந்த நடவடிக்கையை பிரதமர் மேற்கொண்டார் என்று முன்னுக்குப் பின் முரணாக ராகுல் குற்றம் சாட்டினார். அவரது கருத்து, பிரதமர் எதேச்சதிகாரமாக நடந்திருக்கிறார் என்பதாகும். இதில் எதை எடுத்துக் கொள்வது? ஜேட்லிக்கே தகவல் தெரிவிக்காத பிரதமர் பிற பாஜக நண்பர்களுக்கு மட்டும் எப்படி தகவல் தெரிவிப்பார்? இதற்கு எதிர்ப்பாளர்களிடம் பதில் இல்லை.
2. இந்த நடவடிக்கை முன்யோசனையற்றது; திட்டமிடாமல் எடுத்த அவசரச் செயல் என்கிறார் ப.சிதம்பரம். அவருக்கு பிரஸார் பாரதியின் தலைவர் ஏ.சூர்யபிரகாஷ் சரியான விளக்கம் (தினமணி 24.12.2016) அளித்திருக்கிறார். மே 22-ஆம் தேதி அகில இந்திய வானொலியில் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் மோடி ஆற்றிய உரையில், நாட்டு மக்கள் மின்னணு பணப் பரிமாற்ற முறைகளுக்கு மாறுவது அவசியம் என்று கூறியிருப்பதையும், “இந்த மின்னணு பணப் பரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்த நாம் பழகிவிட்டால், நமக்கு ரொக்கப் பணம் தேவைப்படாது. வர்த்தகம் ரொக்கமில்லாமலேயே தன்னியல்பாக நடைபெறும். அதன்மூலமாக சட்ட விரோதமான பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும். நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் கருப்புப் பணத்தின் மதிப்பும் குறையும்” என்று கூறியதையும் சூர்யபிரகாஷ் சுட்டிக்காட்டி இருக்கிறார். தவிர, ஏழைகளுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள், வங்கிக் கணக்கில் ஆதார் இணைப்பு, செல்போன் இணைப்பு என்ற முத்தரப்பு ‘ஜாம்’ நடவடிக்கையை அரசு திட்டமிட்டு மேற்கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் பெரும்பாலோருக்கு வங்கிக் கணக்கு துவங்கிய பிறகே, ஆதார் எண்கள் மூலமாக போலி கணக்குகளைக் கட்டுப்படுத்திய பிறகே, உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற நிலையை அரசு மேற்கொண்டது. உண்மையில் இந்த நோக்கத்துக்காக சுமார் 1.5 ஆண்டுகள் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கிறார் பிரதமர்.
3. திடீரென அறிவித்ததால் பலரும் கஷ்டப்படுகிறார்கள் என்று நீலிக் கண்ணீர் சிந்துகிறார் மமதா பானர்ஜி. இதுபோன்ற கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையை முன்கூட்டியே அறிவித்துவிட்டுச் செயல்படுத்த இயலாது. இப்போதே கூட, நவ. 8 இரவு கணக்கில் காட்டப்படாத பணத்தை மறைக்க தங்க நகைகளை பலர் வாங்கிக் குவித்தனர். அதையும் தற்போது அரசு ஆராய்கிறது. தவிர, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் எல்லை தாண்டி துல்லியத் தாக்குதல் நடத்திய நாளிலிருந்து (செப்டம்பர் 29) ஒருவார காலத்துக்குள், மோடி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘கருப்புப் பணத்துக்கு எதிரான துல்லியத் தாக்குதல் விரைவில் அரசால் நடத்தப்பட உள்ளது’ என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. பிரதமரின் திடீர் அறிவிப்பை மக்கள் புரிந்துகொண்டு செயல்பட்டனர். ஆனால், இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகள், ‘ஏழைகள் பாதிக்கப்படுவதாகக் கூறி’ தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர் என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.
4. புழக்கத்திருந்து நீக்கப்பட்ட பணம் முழுவதும் புதிய ரூபாய் நோட்டுகளாக அச்சிடப்பட்டு மக்களுக்கு திரும்பக் கிடைக்க 9 மாதம் ஆகும் என்று பயம் காட்டினார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சி. இது ஓரளவு உண்மையே. நீக்கப்படும் அனைத்து நோட்டுகளின் மதிப்புக்கு குறைந்த மதிப்புள்ள நோட்டுகளை அச்சிட்ட பிறகே இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டுமானால், அந்தத் தகவல் கசிந்துவிடும் என்பது ப.சி. அறியாததல்ல. இருப்பினும், உடனடித் தேவையை உத்தேசித்தே ரூ. 2000 புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. மக்களின் தேவையை அவை பூர்த்தி செய்ய இயலவில்லை. தவிர அதற்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் திண்டாடினர். இதற்கு அரசு தகுந்த முன்னேற்பாடு செய்திருக்கலாம். குறைந்தபட்சம், ஏ.டி.எம்.களை புதிய நோட்டுக்குத் தக்கவாறு மாற்றி அமைத்திருக்கலாம். இருப்பினும், மக்களின் சிரமத்துக்கு வங்கி நிர்வாகத்தில் உள்ள சில கருப்பாடுகளும் காரணம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அவர்களை ஏன் எந்த எதிர்க்கட்சியும் கண்டிப்பதில்லை?
தவிர, புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட ஒட்டுமொத்த உயர்மதிப்பு நோட்டுக்களுக்கும் நிகரான ரூபாய் நோட்டுகள் கண்டிப்பாக அச்சிடப்படாது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெளிவுபடுத்தி இருக்கிறார். டிச. 19 நிலவரப்படி சுமார் ரூ. 5.92 லட்சம் கோடி புதிய நோட்டுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அடுத்து ரூ. 500 நோட்டுகளாக சுமார் 4 லட்சம் கோடி அச்சிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ரூ. 10 லட்சம் கோடிக்கு மேல் ரொக்கப் பணத்தை புழக்கத்தில் விடாது என்று தெரிகிறது. அதன் நோக்கம், ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மக்களை- முழுமையாக இல்லாவிடிலும் இயன்ற வரை – மாற்றுவதே. மேலும், நாட்டின் ஜி.டி.பி.யில் 10 சதவீதத்தை மிகாமல் ரொக்கக் கையிருப்பை (ரூபாய் நோட்டுகள்) அச்சிடலாம். அதைவிட மிகுதியாக முந்தைய காங்கிரஸ் அரசு அச்சிட்டு செய்த தவறை இந்த அரசு கண்டிப்பாகச் செய்யாது.
5. அரசுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்காது என்று ஊடக மேதாவிகள் கூறுகின்றனர். அவர்களுக்கு பிரதமர் மோடி கூறியிருப்பதே தெளிவான பதில். “இந்த நடவடிக்கையால் மாபெரும் உடனடி லாபத்தை அரசு எதிர்பார்க்கவில்லை. அதற்காக இதனை அரசு மேற்கொள்ளவும் இல்லை. நமது நோக்கம், நமது பொருளாதாரத்தையும் கருப்புப் பணத்தால் கட்டுண்டுள்ள நமது சமுதாயத்தையும் சுத்தப்படுத்துவதாகும். இது நீண்டகால சீர்திருத்தத்திற்கான முதல்படி” என்றார் மோடி. (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்- 29.12.2016). இனிவரும் நாட்களில் அரசு மேற்கொள்ளும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான வலிமையான ஆதாரம் இப்போது எழுப்பப்பட்டுவிட்ட்து.
6. அடுத்து, கிராமப்புறங்களில் வங்கிக் கட்டமைப்பு போதிய அளவு இல்லாததால் கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதாகும். கடந்த 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சி இதைக் குறையாக முன்வைக்கிறது – இதற்குக் காரணமே தாங்கள்தான் என்பதை அறியாமல். தற்போது நாட்டில் 27 பொதுத் துறை வங்கிகள், 19 தனியார் துறை வங்கிகளைச் சேர்ந்த 1,38,626 வங்கிக் கிளைகள் செயல்படுகின்றன. இவற்றில் சுமார் 51 ஆயிரம் கிளைகள் ஊரகப் பகுதிகளில் உள்ளன. அதேபோல நாட்டிலுள்ள 1.97 லட்சம் ஏ.டி.எம்.களில் 33 ஆயிரம் கிராமப் பகுதிகளில் உள்ளன. இவை போதுமானவை அல்ல என்பது உண்மையே. இந்த நிலையை மாற்ற தற்போதைய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது முழுமையடைய இன்னும் 3 ஆண்டுகள் ஆகலாம். அதுவரை அரசின் துல்லியத் தாக்குதலைத் தள்ளிப் போட முடியாது. இது ஒருபுறமிருக்க கிராமப்புற வங்கிகளில் இதுவரை காணாத வகையில் பெருமளவு வங்கிக் கையிருப்பு கூடியிருக்கிறது. வரும் நாட்களில் இந்தக் கையிருப்பு கிராம மக்களுக்கு அளிக்கப்போகும் லாபங்கள் அதிகமாக இருக்கும்.
7. ரொக்கமற்ற பரிமாற்றம் (Cashless Transaction- Digital India) என்பதை மோடி முன்வைத்தபோது, அரசு தனது இலக்கை மாற்றுவதாக எதிர்க்கட்சியினருடன் கூடிக்கொண்டு ஊடகங்கள் புலம்பின. இதற்கு சரியான விளக்கத்தை ஏற்கனவே பார்த்துவிட்டோம். ஆனாலும், அரசை கேலி செய்ய ஊடகங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக பல ஏ.டி.எம்.கள் (சுமார் 40 சதவீதம்) இயங்கவில்லை. இதனை Cashless India என்று கேலி பேசி மகிழ்ந்தனர் ஊடக அறிஞர்கள். இதற்கு, திரை மறைவில் மோசடிப் பேர்வழிகளுடன் கைகோர்த்துக்கொண்டு கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகளை அள்ளி வழங்கிய வங்கி அதிகாரிகளும் ஒரு காரணம். இதை அரசு நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. இப்போதும்கூட, அரசு நடவடிக்கையால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும், விரைவில் போராட்டம் நடத்தப் போவதாகவும், வங்கி அலுவலர் சங்கங்கள் சில அறிவித்துள்ளன. இதன்மூலமாக இடதுசாரி கட்சிகள் அரசின் நல்ல திட்டத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பதை ஏன் யாரும் கண்டிப்பதில்லை?
8. அரசின் நடவடிக்கையால் பணப்புழக்கம் குறைந்து, வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமான புகார். இது ஒதுக்கப்பட முடியாத புகார். இதை அரசு முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தது. அதனால்தான் 50 நாட்களுக்கு நாட்டு மக்கள் சிரமங்களை சகித்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இப்போது நிலைமை சீரடைந்து வருகிறது. வங்கியில் பணப் புழக்கம் சிறிது சிறிதாக அதிகரிக்கிறது. ஏ.டி.எம்.களிலும் முன்னிருந்த நீண்ட வரிசை இப்போது இல்லை. 2017 ஜனவரி இறுதிக்குள் அனைத்தும் சரியாகிவிடும். வலியில்லாமல் அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது. அதற்காக, அகற்றியே ஆக வேண்டிய கட்டியை அகற்றாமல் வேடிக்கை பார்க்க முடியாது; கூடாது.
9. 2016 நவ. 8 முதல் டிச. 30-க்குள் அரசும் ரிசர்வ் வங்கியும் பல தடவை விதிமுறைகளை மாற்றி மக்களை அலைக்கழித்தன என்பது மற்றொரு புகார். இதற்கு பிரதமர் தெளிவான பதில் அளித்திருக்கிறார். செயல்படும் உணர்வுள்ள அரசானது மக்களிடமிருந்து கிடைக்கும் எதிர்வினைகள், ஆலோசனைகளை உடனடியாக அமல்படுத்தும் என்றார் அவர். அப்படித்தான் இந்த 50 நாட்களும், அரசின் பணமதிப்பு நீக்கத் திட்டத்தில் ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுத்துள்ளது. இதுவரை உலகில் எந்த நாடும் செய்யாத மாபெரும் பொருளாதார நடவடிக்கை இது. இதற்கு முன்மாதிரியும் இல்லை. எனவே, தவறுகள், பிழைகளைத் திருத்திக் கொண்டு முன்னேறும் செயல்திட்டமே இங்கு கையாளப்பட்டது. மோசடிப் பேர்வழிகள் இதில் பயன் பெற்றுவிடக் கூடாது என்பதே அரசின் இலக்கு. எனவேதான், தினசரி தேவைக்கேற்ப, பிரதமருக்கு மக்கள் அளித்த ஆலோசனைகளுக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றப்பட்டன.
10. சமுதாயத்தில் சிறிய எண்ணிக்கையில் உள்ள பதுக்கல்காரர்களைக் களைய ஒட்டுமொத்த தேசமும் சிரமப்பட வேண்டுமா, அனைவரையும் சந்தேகக் கண்ணுடன் அரசு பார்க்கலாமா என்ற கேள்வி, கேட்க புத்திசாலித்தனமாகத் தோன்றும். ஆனால், சாமானிய மக்கள் ஏன் அவ்வாறு யோசிக்கவில்லை என்பதை இந்தக் கேள்வி கேட்பவர்கள் உணரவில்லை. சாமானிய குடிமக்கள் அரசின் நோக்கத்தைத் தெளிவாக உணர்ந்தார்கள். ஆனால், எதிர்ப்பாளர்களோ அதில் குறையும் உள்நோக்கமும் காண விழைகிறார்கள். இதுதான் வேறுபாடு. அனைவரையும் சோதிக்கும்போதுதான் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்ற சராசரி உண்மையும்கூட அறியாத அரசியல் எதிர்ப்பாளர்கள், இத்திட்டத்தின் இயல்பான குறைபாடுகளைப் பெரிதுபடுத்தி, தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டார்கள். மிக விரைவில் அரசு தனது துல்லியத் தாக்குதல் நடவடிக்கையின் பலன்களை முழுமையாக வெளியிடும்போது, அவர்களுக்கு உரிய பதில் கிடைக்கும்.
இது முதல் முறையல்ல..
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படுவது இந்தியாவில் முதல்முறையல்ல. உள்நாட்டுப் பொருளாதாரத்தை விழுங்கும் வகையில் ரொக்கப் பணம் பதுங்கும்போது, அதை முறியடிக்க உலக நாடுகள் கையாளும் வழக்கமே இது. நம் நாட்டிலும் 1946-இல் ரூ. 1000, ரூ. 10,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட்து. பிறகு 1954-இல் தான் ரூ. 1000, ரூ. 5000, ரூ. 10,000 புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டன.
பிறகு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1978 ஜன. 16-இல் ரூ. 1000, ரூ. 5000, ரூ. 10,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. முந்தைய நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நடவடிக்கைக்கும் உள்ள வேறுபாடு, மொத்த ரொக்கத்திலிருந்து நீக்கப்படும் நோட்டுகளின் மதிப்பு இம்முறை மிகவும் அதிகம் என்பதே.
இதற்கு முன் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ஒட்டுமொத்த ரொக்கத்தில் 10 சதவீதம் கூட இருந்ததில்லை. தவிர அப்போதைய இந்தியப் பொருளாதாரத்தின் அளவும் மிகச் சிறியது. ஆனால், இம்முறையோ, புழக்கத்திலுள்ள ரொக்கப் பணத்தில் 86.4 சதவீதம் அளவுக்கு உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள், அதுவும் மிக குறைந்த 50 நாட்களில் புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டன. இவற்றின் எண்ணிக்கை மட்டுமே, சுமார் 2,203 கோடி நோட்டுகள்! இவற்றில் சுமார் ரூ. 14 லட்சம் கோடி வங்கிகளுக்கு வந்துவிட்டதாக டிச. 27-ஆம் தேதி புள்ளிவிவரம் கூறுகிறது.
வங்கியில் இந்த நோட்டுகளைச் செலுத்த அளிக்கப்பட்ட காலக்கெடு டிச. 30-உடன் முடிவடைந்தாலும், மார்ச் 31, 2017 வரை, ரிசர்வ் வங்கியில் தகுந்த விளக்கம் அளித்து, அதற்கான வரியைச் செலுத்தி பணத்தை மாற்ற முடியும். (வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்தக் கால அவகாசம் 2017 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது). அதுவரை, இந்த நோட்டுகளை அதிக அளவில் வைத்திருப்பது பொருளாதாரக் குற்றம் என்று அறிவித்து டிச. 28-இல் அவசரச் சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட உயர்மதிப்பு நோட்டுகளின் முகமதிப்புக்கு இனி ரிசர்வ் வங்கி பொறுப்பாகாது என்பதே அந்த அவசரச் சட்டத்தின் பொருள். அதாவது, மார்ச் 31-க்குள் வங்கிக்கு மீதமுள்ள 1.44 லட்சம் கோடி உயர்மதிப்பு நோட்டுகள் வராவிட்டால் அவை, அரசுக் கணக்கில் பறிமுதலானவை ஆகிவிடும். அவற்றை வைத்திருந்தாலும் அவை மார்ச் 31-க்குப் பிறகு வெறும் வண்ணத்தாள்கள் மட்டுமே.
இதற்கு முந்தைய அரசுகள் போலல்லாது தற்போதைய அரசு அறுதிப் பெரும்பான்மை பெற்ற அரசாக இருப்பதால், கொள்கை முடிவுகளை துணிவுடன் தொடர்வதிலும், பொருளாதாரச் சீர்திருத்தங்களில் தயக்கமின்றி ஈடுபடவும் முடிகிறது. ஆகவேதான், மோடியின் இந்த அதிரடி நடவடிக்கை, இந்தியப் பொருளாதாரத்தைப் புதுப்பிக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
பண மதிப்பிழப்பின் உடனடி நன்மைகள்:

அரசின் பண மதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையால் நாட்டில் புழங்கி வந்த கள்ளநோட்டுகள் செல்லாது போயின. ஒரு புள்ளிவிவரத்தின்படி சுமார் ரூ. 9,000 கோடி கள்ள நோட்டுகள் புழங்கி வந்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் கள்ள நோட்டு என்று தெரிந்தாலும் அவை பயன்பாட்டில் இருந்தன. அவை முடக்கப்பட்டதால் உடனடி நன்மையாக பயங்கரவாதிகள், நக்ஸலைட்களின் செயல்பாடுகள் குறைந்தன.
உதாரணமாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களாக காவல்துறையினர், ராணுவத்தினர் மீது நடத்தப்பட்டு வந்த கல்வீச்சு சம்பவங்கள் நவ. 8-க்குப் பிறகு நின்று போயின. கல்வீச்சு நடத்தும் இளைஞர்களுக்கு கூலியாக கள்ள நோட்டுகள் வழங்கப்பட்டன. அதற்கு தினசரி கூலியாக ரூ. 1000 வரை அளிக்கப்பட்டது. கள்ள நோட்டுகள் செயலிழந்ததாலும், உயர்மதிப்பு நோட்டுகள் மதிப்பிழந்ததாலும், அவற்றை கூலியாகக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால், ஸ்ரீநகரில் அமைதி திரும்பியது. இதனை பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறி இருக்கிறார். மும்பையில் குற்றங்கள் குறைந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார் (தி ஹிண்டு- 27.11.2016).
சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் தலைமறைவாக இயங்கும் நக்சலைட்கள் பலர் தங்களிடம் இருந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததால் அரசிடம் தாங்களாக முன்வந்து சரண் அடைந்துள்ளனர் (எகனாமிக் டைம்ஸ்- 29.11.2016).
ஹவாலா முறைகேடுகள் கட்டுக்குள் வந்துள்ளன. ஹவாலா முறை மூலமாகவே நமது நாட்டுப் பணம் வெளிநாட்டு வங்கிகளுக்கு கடத்தப்படுகிறது. ஏற்கனவே வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி பணத்தை மீட்டு வரும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ள நிலையில் உள்ளூர் ஹவாலா தரகர்கள் முடக்கப்படுவது முக்கியமானதாகும் (இந்தியா டுடே- 10.11.2016).
செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ. 100, ரூ. 500 நோட்டுகளைப் பயன்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளில் வரி நிலுவையைச் செலுத்த அரசு அனுமதி அளித்ததால், நாடு முழுவதும் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளின் வங்கி இருப்பு அதிகரித்திருக்கிறது. உதாரணமாக, ஹைதராபாத் மாநகராட்சியில் மட்டுமே, நவ. 8-க்குப் பிந்தைய 4 நாட்களில் ரூ. 160 கோடி வசூலானது. இது சாதனை அளவாகும்.



உரைகற்கள்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி: கணக்கில் வராத பணத்தையும் கள்ளநோட்டுகளின் புழக்கத்தையும் அரசின் இந்த உறுதியான நடவடிக்கை தடுக்கும். எஸ்.பி.ஐ தலைவர் அருந்ததி பட்டாசார்யா: நம்மைப் போன்ற ஒரு பெரிய நாட்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர் செயல்பாடாகும். கருப்புப் பணத்தை ஒழிப்பதில் இது மிகவும் துணிவான நடவடிக்கை. பிகார் முதல்வர் நிதிஷ்குமார்: சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை மத்திய அரசின் இந்த நடவடிக்கை தடுக்கும்.
அடுத்தது என்ன?
மக்கள் வங்கிகள் முன்னும் ஏ.டி.எம். இயந்திரங்களின் முன்னும் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதாக அரசின் விமர்சகர்கள் புகார் கூறியபோது, பிரதமர் மோடி கூறிய வாசகம் முக்கியமானது. “சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே அரசின் எந்தத் திட்டத்தைப் பெற வேண்டுமாயினும், சான்றிதழ் பெற வேண்டுமாயினும், மக்க்ள் வரிசையில் காத்திருக்கவே செய்தார்கள். தற்போது மக்கள் வங்கி முன்பு நிற்பதே கடைசியாக இருக்கும். இனி அவர்கள் வரிசையில் காத்திருக்கத் தேவை ஏற்படாத வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்கும்” என்றார் மோடி. மின்னணு பணப் பரிமாற்ற முறைக்கு மக்களை மாற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் கூட அரசு நடவடிக்கையின் ஓர் அங்கமே.
அதற்காக மக்களை மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு ஊக்குவிக்க அரசு பரிசுத் திட்டங்களையும் அறிவித்துள்ளது. இதற்காக ரூ. 340 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. உண்மையிலேயே, பற்று அட்டை, கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதும், பணப்பை (வாலட்) செயலிகளைப் பயன்படுத்துவதும் பெருமளவு குற்றங்களைக் குறைக்கும். தவிர, ஒவ்வொரு விற்பனையும் வர்த்தகச் செயலும் வங்கிக் கணக்கிற்கு வருவதால் வர்த்தகர்கள் வரி ஏய்க்க முடியாது. இதுவரை, பல லட்சம் ஈட்டும் வியாபாரிகள் முறையான வரி செலுத்தவில்லை. அவ்வாறு இனிமேல் செய்ய முடியாது.
இந்நிலையில் நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் 2012-இல் கூறிய முக்கியமான ஒரு கருத்தைப் புறந்தள்ள முடியாது. “கருப்புப் பொருளாதாரத்தை முறியடிக்க உயர் மதிப்பு ரொக்கம் மதிப்பிழப்பு தீர்வாகாது. பினாமி சொத்துகள், தங்கம் என பதுக்கல் இருக்கும் வரை கருப்புப் பணத்தைக் குறைக்க முடியாது. வருமான வரித் துறை கணக்கீட்டின் படி கருப்புப் பணமாக 6 சதவீதம் மட்டுமே ரொக்கமாக உள்ளது” என்று அந்த வாரியம் கூறியது.
எனவேதான் அடுத்து, பினாமி பெயர்களில் சொத்துகள் வாங்கிக் குவித்தவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று அறிவித்திருக்கிறார் பிரதமர். அனேகமாக 5 மாநிலத் தேர்தல் முடிந்த பிறகு அரசின் கடும் நடவடிக்கையை இத்திசையில் எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள், நடிகர்கள், பெரு வணிகர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் தங்கள் குடும்பத்தினர் பெயரில் மட்டுமல்லாது மாற்றார் பெயரிலும் சொத்துகள் வாங்குவது வழக்கமாக உள்ளது. அவர்கள் அரசு நடவடிக்கையை திசைதிருப்பக் கையாளும் இத் தந்திரம் அரசு நடவடிக்கையால் முறியடிக்கப்படும். அதாவது, யாருடைய பெயரில் சொத்து இருக்கிறதோ அவரே அதன் உண்மையான உரிமையாளராகி விடுவார் என்று அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, தனது பெயரில் ஒருவர் பினாமி சொத்து வாங்கி இருப்பதாக யாரேனும் புகார் செய்தால், அவ்வாறு சொத்து வாங்கியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சட்டத் திருத்தங்கள் 2016 நவம்பருக்கு முன்னமே நிறைவேற்றப்பட்டுவிட்டன!
அதேபோல தங்கக் கட்டுப்பாடு சட்டம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதாவது ஒரு குடும்பத்தினர் குறைந்தபட்சம் எவ்வளவு தங்க நகைகளை வைத்திருக்கலாம் என்பதற்கு ஏற்கனவே 1968-ஆம் வருடத்திய சட்டம் உள்ளது. அதை அரசு தீவிரமாக அமல்படுத்தினால், கருப்புப் பணத்தை தங்கமாகப் பதுக்குவதைத் தடுக்க முடியும். இதிலும் கூட சாமானிய மக்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கப் போவதில்லை.

வரும் நாட்களில் வருமான வரித் துறையினர், அமலாக்கத் துறையினர், மத்தியப் புலனாய்வு அமைப்பினர் ஒருங்கிணைந்து நடத்தும் சோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளன. ஏற்கனவே அத்தகைய நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. மணல் மாஃபியா வேலூர் சேகர் ரெட்டி, சென்னை ஈ.டிஏ. குழுமம், முன்னாள் தலைமை செயலர் ராம மோகன ராவ், அன்னிய செலாவணி தரகர் பாரஸ்மல் லோதா ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஓர் உதாரணம்.
2016 டிச. 28 வரை நடத்தப்பட்ட 983 ரெய்டுகளில் சுமார் ரூ. 4172 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவை தொடர்பாக 5027 விசாரணை நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 477 வழக்குகள் சிபிஐயால் பதியப்பட்டுள்ளன. இந்த ரெய்டுகளில் சிக்கிய புதிய 2,000 ரூபாய் நோட்டுகளின் குவியல் மூலமாக வங்கியாளர்கள் – கருப்புப்பண முதலைகள்- ஹவாலா பேர்வழிகளின் கூட்டணியை மக்கள் உணர முடிந்தது. தவறு செய்த சுமார் 1200 வங்கி அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை நடந்த கருப்புப் பண நடவடிக்கைகளின் விளைவை மேற்கண்ட கடும் நடவடிக்கைகளால் தடுக்க முடியாது. ஆனால், அவர்களை வரிவிதிப்புக்குள் கொண்டுவருவதும் பறிமுதல் நடவடிக்கையும் அரசால் செய்யக் கூடியதாகும். அதேசமயம், இனிவரும் நாட்களில் ரூ. 2 லட்சத்துக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட உள்ளதால், முன்னர் நடந்த பதுக்கல் தொடர்வது சிரமமே. இதுவே தற்போதைய மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் உச்சகட்ட நன்மையாகும்.
மொத்தத்தில், ரத்தசோகையால் பீடிக்கப்பட்ட நோயாளி போல, கருப்புப் பணப் பொருளாதாரத்தால் உள்ளூற சக்தி குறைந்திருந்த இந்தியா தற்போது புத்திளமைக்கான கசப்பு மருந்தை விழுங்கிவிட்டது. வரும் நாட்களில் இந்தியப் பொருளாதாரம் மேம்படும்போது, இந்தக் கசப்பு மருந்தின் வீரியம் புலப்படும். அரசியல் ரீதியாக ஆபத்தானது என்ற போதிலும் கட்சி அரசியலை மீறி துணிவுடன் சிர்திருத்தத்தை மோடி மேற்கொள்வதால், அடுத்து வரும் அரசின் தொடர் நடவடிக்கைகள் நமது பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கையும் உருவாகிறது.
$$$
One thought on “கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்-2”