-பி.ஆர்.மகாதேவன்
அற்புதமான உருவகக் கவிதை. எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவனின் இதயமெங்கும் வீசும் சத்திய அனல் கவிதையில் தெறிக்கிறது. ‘ஜாம்பி’ என்றால் என்ன என்று புரியவில்லையா? ‘ஜாம்பி’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘மதவெறி’ என்று போட்டுக் கொள்ளுங்கள்… (எந்த மதவெறி என்று சொல்லி ஜாம்பிக் காவலர்களிடம் கடி வாங்க நான் தயாரில்லை). அப்போது, நீங்கள் வாழும் உலகின் தரையடி மெள்ள உங்கள் கால்களுக்குக் கீழே நழுவிக் கொண்டிருப்பது புரியும்.

ஜாம்பிகள் உங்களைக் கடித்தால்,
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
நீங்கள் மனிதர்களாக வாழ்ந்திருந்தாலும்
அடுத்த சில நிமிடங்களிலேயே ஜாம்பியாகி விடுவீர்கள்.
அதன் பின் நீங்கள் யாரைக் கடித்தாலும்
அவர்களும் ஜாம்பியாகி விடுவார்கள்.
அதுவரையிலும் நீங்கள்
யாரையும் கடித்திருக்கவே மாட்டீர்கள்.
ஆனால் ஜாம்பியாக்கப்பட்ட பின்
அதை மட்டுமே செய்வீர்கள்!
*
நீங்கள் ஜாம்பியாக்கப்படும்போது…
உங்கள் மொழி
உங்கள் குலம்
உங்கள் தேசம்
உங்கள் நிறம்
உங்கள் அடையாளம்
உங்கள் கலாசாரம்
உங்கள் கலை
உங்கள் கருணை
உங்கள் வாழ்க்கை
அனைத்தும் பறிக்கப்பட்டுவிடும்.
அதன் பின் நீங்கள் வெறும் ஜாம்பி மட்டுமே!
அதன் பின் உங்களுக்கு
இன்னொருவரைக் கடித்து
அவரையும் ஜாம்பியாக்குவது மட்டுமே
ஒற்றை இலக்கு.
*
ஜாம்பி வைரஸ் உங்கள் உடம்புக்குள் புகுந்ததும்
மெள்ள ரத்தத்தில் கலந்து ஓட ஆரம்பிக்கும்.
அது ஓடும் நரம்பெங்கும் பச்சை நிறமேறும்.
உடம்பெல்லாம் முறுக்கிக் கொள்ளும்.
கண்கள் செருகும்.
சிந்தனை முழுவதுமாக அறுபடும்.
செயல் முழுவதுமாக முடங்கும்.
ஒருமுறை ஒரு வெட்டு வெட்டி சிலிர்த்து எழுவீர்கள்.
அது உங்கள் உலகிலிருந்து
ஜாம்பிகளின் உலகுக்கு
நீங்கள் சென்று சேர்வதன் அடையாளம்.
அதன் பின் நீங்கள் முழு ஜாம்பியாகியிருப்பீர்கள்.
நீங்கள் ஜாம்பியாக்கப்பட்டதும்
உங்களுக்கு மிக அருகில் இருப்பவரைத் தான்
கடிக்கப் பாய்வீர்கள்.
அவர்கள்…
உங்கள் உறவினராக,
நெருங்கிய நண்பராக,
சொந்த ஊர்க்காரராக,
அதுவரை ஜாம்பியிடமிருந்து தப்பிக்க
உங்களுக்கு உதவியவராக,
நீங்களே உதவியவராக,
யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
நீங்கள் ஜாம்பியாக்கப்பட்டுவிட்டால்
உங்களுடைய ஒரே இலக்கு
உலகம் முழுவதையும் ஜாம்பியாக்குவதே!
*
ஜாம்பிகளைப் பற்றிக் கேள்வியே பட்டிருக்காத சமூகங்கள்
ஜாம்பிகளுடன் நட்புக்கரங்கள் நீட்டியிருக்கின்றன.
பேச்சுவார்தைகள் மேற்கொள்ள முயற்சி செய்திருக்கின்றன.
ஜாம்பிகளுடன் நல்லிணக்க வாழ்வை விரும்பியிருக்கின்றன.
அது எதுவும் சாத்தியமில்லை என்பது புரியவருவதற்குள்
அந்தோ பரிதாபம்!
அவர்கள் அனைவரும் ஜாம்பியாக்கப்பட்டு விட்டிருந்தனர்.
*
ஜாம்பிகளிடமிருந்து தப்பிக்க ஒரே வழி-
ஜாம்பிகளை இல்லாமல் செய்வதே.
பாருங்கள்-
ஜாம்பியாகும் முன்பே உங்களை அது
சமநிலை பிறழச் செய்யும் அபாயத்தை.
உங்களுக்கு இந்த மென் உணர்வு இருந்தால்
நீங்கள் ஜாம்பிகளை வெல்லவே முடியாது.
ஆடுகளின் நல் மேய்ப்பன்
ஓநாய்கள் மீது கரிசனம் காட்டுவது போலாகி விடும்.
*
ஒரு ஜாம்பியைக் கொல்வது மிக மிகக் கடினம்
ஏனென்றால் அவை கூட்டமாக வந்துதான் தாக்கும்.
அத்தோடு
முதலில், உங்களைத் தனிமைப்படுத்தவே பார்க்கும்.
எனவே,
உயிர் பயத்தில் ஓடுபவர்கள் எல்லாம்
ஒன்றாகக் கைகோர்த்துக் கொண்டு ஓட வேண்டும்.
கொஞ்சம் கஷ்டம் தான்.
ஆனால், பழகிக் கொண்டாக வேண்டும்.
வாழ்ந்தாலும் ஒன்றாக வாழ்வோம்;
வீழ்ந்தாலும் ஒன்றாக வீழ்வோம் என்று
உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்
ஆனால், அனைவரும் ஒன்றாக இருப்பதும் அபாயமே.
ஒன்றாக வரும் ஜாம்பிக் கூட்டத்துக்கு
ஒன்றாக இரையாகிவிடும் அபாயமும் அதில் உண்டு.
எனவே,
கூட்டமாக ஒரு திசையில் தப்பி ஓடும்போதும்,
ஒரு சிலர் மட்டும் வேறு திசையில் தப்பிக்க வேண்டும்.
விளைநிலங்களை வெள்ளம் அழித்தாலும்
விதைநெல்கள் கோபுரக் கலசத்தில் பாதுகாக்கப்படுவது போல,
தப்பிப் பிழைக்கும் ஒற்றை விதைகளில் இருந்து
வனங்கள் முளைத்துக் கொள்ளும்.
*
ஜாம்பிகள் மனிதரைக் கடித்து ஜாம்பியாக்கி விடுகின்றன.
மனிதர்களால் ஜாம்பியைக் கடித்து மனிதராக்க முடியாதா என்று
மனிதர்குல மாணிக்கங்கள்
மென்மையான குரலில் பிரசங்கிக்கிறார்கள்.
ஜாம்பியிடம் இருக்கும் ஜாம்பித்துவம்
மனிதரிடம் இருக்கும் மனிதத்துவத்தைவிட
ஆழமானதா… அடர்த்தியானதா?
ஒரு ஜாம்பியையாவது கடித்து
மனிதராக்கும் அளவுக்கு
மனிதர் எவரிடமும் ஏன் இல்லை மனிதம்?
என்றெல்லாம் கூறி,
‘ஜாம்பிக்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ என்கிறார்கள்.
முற்றாக அழிந்த பூர்வகுடிகள் நினைவுக்கு வருகின்றனரா?
ஜாம்பிகளும் மனிதர்களாக இருந்தவர்கள் தானே என்கிறார்கள்.
இன்னும் ஒருபடி மேலே போய்,
ஜாம்பிகள் இப்போதும் மனிதர்கள்தானே என்கிறார்கள்.
ஜாம்பிகள் தரும் தொல்லை போதாதென்று இவர்கள் வேறு
நேரம் காலம் தெரியாமல் நியாயம் பேசுகிறார்கள்!
வேறென்ன-
இவர்களையும் காப்பாற்றித்தான் ஆக வேண்டும்.
இவர்களையும் மீறித்தான் காப்பாறியாக வேண்டும்!
*
மனிதர்களைப் பெருகச் செய்வது
ஜாம்பிகளிடமிருந்து தப்பிக்க உதவாது.
ஏனென்றால்,
மனிதர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக
ஜாம்பிகளின் வேட்டை அதிகரிக்கவே செய்யும்.
ஜாம்பிகளின் பலத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
ஒரு மனிதர் பிறக்க பத்து மாதங்கள் ஆகும்
ஆனால், ஒரு ஜாம்பி பிறக்க ஒற்றை நொடி போதும்.
வளர்ச்சி விகித வித்தியாசம் புரிகிறதா?
அத்தோடு,
அகதி முகாம்களைப் பெருக்குவது
பகைவனின் தாக்குதலை நிறுத்த உதவுமா என்ன?
*
ஜாம்பிகளிடமிருந்து தப்பிக்க இன்னொரு வழி,
ஜாம்பிகளைத் தனிமைப்படுத்துவதே.
ஜாம்பிகள் ஊடுருவியிருக்கும் வீடுகளைப் பூட்டிவிட வேண்டும்.
ஜாம்பிகள் ஏறியிருக்கும் வாகனங்களைப் பூட்டிவிட வேண்டும்.
ஜாம்பிகள் ஊடுருவிய தொழிற்சாலைகளை மூடிவிட வேண்டும்.
ஜாம்பிகள் ஊடுருவிய பூங்காக்களை மூடிவிட வேண்டும்.
ஜாம்பிகள் ஊடுருவிய பள்ளிகளைப் பூட்டிவிட வேண்டும்.
ஜாம்பிகள் ஊடுருவிய மருத்துவமனைகளை மூடிவிட வேண்டும்.
அத்தனையையும் மூடிவிட்டால்
எங்குதான் போவது… எப்படித்தான் வாழ்வது என்கிறீர்களா?
வேறு வழியில்லை.
ஜாம்பிகளிடமிருந்து தப்பிக்க ஒரே வழி-
ஜாம்பிகளைத் தனிமைப்படுத்துவது…
அல்லது
ஜாம்பிகளிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வது.
*
அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களுக்கு
அரண் சூழ்ந்த சரணாலயம் அதி அவசியம்.
காட்டுத் தீயை அணைக்க வேண்டுமென்றால்
பற்றிப் படர வழியின்றி
வெட்டி வீழ்த்தியாக வேண்டும்.
காட்டுத்தீயின் நாவுகளைவிட நீளமானது
ஜாம்பிகளின் கொடுங்கரங்கள்.
ஜாம்பிகளிடம் சிக்கியவர்களை மீட்க முயற்சி செய்யவே வேண்டாம்.
பூர்வ ஜாம்பிகளைவிட புதிய ஜாம்பிகள் மிகவும் கொடூரமானவை.
புதியவகை ஜாம்பிகளும் உருவாகிவிட்டன.
மனிதர் பாதி; ஜாம்பி பாதி கலந்து செய்த கலவை இவை.
வெளியே மனிதர்; உள்ளே ஜாம்பி விளங்க முடியா விபரீதங்கள் இவை.
இவற்றை முதலில் ஜாம்பிகளிடம் பிடித்துக் கொடுப்பதே
இவற்றிடமிருந்தும் நம்மைக் காக்கும்.
*
உயரங்களில் நிற்பவர்களுக்குத் தான்
ஜாம்பிகளின் நகர்வுகள் நன்கு தெரியும்.
விஷயம் என்னவென்றால்
அவர்கள் ஜாம்பிகளால் கடிக்கப்பட்டிருக்காமல் இருக்க வேண்டும்.
இல்லையென்றால்,
ஜாம்பிகளை முடக்குவதற்கு பதிலாக
அதன் வேட்டைக்கு வழிவகுத்துக் கொடுத்துவிடுவார்கள்.
ஜாம்பி வைரஸுக்கு தடுப்பு மருந்தே கிடையாது.
தடுப்புச் சுவர்தான் தடுப்பு மருந்து.
ஜாம்பிகளை ஜாம்பிகளின்
புதிய உலகுக்கு அனுப்பி வைக்காத வரை
ஜாம்பிகளின் கடியில் இருந்து தற்காத்துக்கொள்வதே
மனிதர்களின் ஒரே மீட்பு.
அப்படியே கடித்தாலும்
மரபணுவில் பொதிந்திருக்கும்
மனிதத்தை இழக்காமல் இருப்பதே
மனிதர்களுக்கான ஒரே சவால்.
$$$