-சின்னப்பா கணேசன்
இடதுசாரிகள், ஹவாலா கும்பல்கள், லிபரல்களால் கைப்பற்றப்பட்ட இந்திய சினிமாவும், திராவிட, நாத்திகக் கும்பல்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்த் திரையுலகும் மீட்சி பெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன என்கிறார், தமிழ்த் திரைப்பட உதவி இயக்குநர் திரு. சின்னப்பா கணேசன். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தையும் அதையொட்டி வெளியான சில படங்களையும் முன்வைத்து, இந்த அவதானிப்பை இவர் முன்வைக்கிறார்….

இந்திய சினிமாவில் மிகப் பெரிய மாற்றம் சமீப காலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்த மாற்றம் சினிமா படைப்பாளிகள் மத்தியில் அல்ல, சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் படைப்பவர்களும், ரசிகர்களின் ரசிப்பு தன்மைக்கு ஏற்ப மாற வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் தேதி ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி, இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. அதுவரை ஹிந்துக்களுடைய கஷ்டங்களையும், இந்திய வரலாற்றுச் சிதைவுகளையும், ஹிந்து கலாச்சார ஒழிப்புகளையும், இந்திய மன்னர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளையும் பெரிய அளவில் யாரும் படமாக்கியதில்லை.
இந்திய வரலாற்று நாயகர்கள் என்ற பெயரில் அந்நியர்களுக்கு காவடி தூக்கியவர்களைத்தான் திரைத் துறையினர் கொண்டாடினார்கள். சுருங்கச் சொன்னால் உண்மைகளை தார்ப்பாய் போட்டு மறைத்துவிட்டு, பொய்களுக்கு முலாம் பூசி வெண்திரைகளில் உலவ விட்டார்கள். அதையும் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளையே கொண்டாடி மகிழ வைத்தனர்.
ஆனால் தற்போது காலம் மாறிப் போய்விட்டது ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் மூலமாக, ஆழக் குழி தோண்டிப் புதைக்கப்பட்ட, மறைக்கப்பட்ட உண்மைகளைத் தோண்டி எடுத்து வெளியே கொண்டுவந்து திரையில் உயிருடன் உலவ விட்டார் அதன் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. பாதிக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட் சமுதாய மக்கள், உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் கசிந்தபடி, அந்தப் படத்தை நெக்குருகிக் கொண்டாடினார்கள்.
முஸ்லிம் மதவெறியின் உச்சத்தால், காட்டுமிராண்டிகளாக மாறி, அப்பாவி பண்டிட்களை சொல்லொனாக் கொடுமைகளுக்கு ஆளாக்கிய மனித மிருகங்களின் தோழர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்த சில நவீன காட்டுமிராண்டிகள், அந்தப் படத்தை எதிர்த்து குரல் எழுப்பினார்கள். ஆனால் அது கடலில் கரைத்த பெருங்காயமாகக் காணாமல் போய்விட்டது; உண்மை உரக்க ஒலித்தது. அந்த உண்மையை உலகம் உன்னிப்பாகப் பார்த்தது. அந்த உண்மைக்கு மகுடம் சூட்டினார்கள் ரசிகர்கள். அவர்கள், புதைக்கப்பட்ட உண்மையின் அழுத்தமான பதிவைப் பார்த்து அதிர்ந்து போனார்கள்.
தமிழ் ரசிகர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? அவர்களும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை மனதார வரவேற்றார்கள், கொண்டாடினார்கள். 15 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம், 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி ஒட்டுமொத்த திரை உலகத்தையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது; அதே நேரம் இது ஹிந்து விரோதிகள் மற்றும் தேசத் துரோகிகளின் தூக்கத்தைக் கெடுத்தது.
பொதுவாக இந்திய சினிமாவிலும் சரி, தமிழ்த் திரையுலகிலும் சரி, படம் பார்ப்பவர்களில் அதிகமானோர் ஹிந்துக்களாகவும், தேச பக்தர்களாகவும் இருந்தாலும், தேசத் துரோகிகள் மற்றும் அந்நிய கைக்கூலிகள் கக்கிய விஷத்தைப் புரிந்து கொள்ளாமல் அவர்களின் திரைப்படங்களைக் கொண்டாடி மகிழ்ந்து வந்தார்கள். அதனுள் புதைக்கப்பட்டு இருந்த ஆபத்துகளை ரசிகர்கள் கவனிக்கத் தவறியதே இதற்குக் காரணம்.
சமீப காலமாக இத்தகைய போக்கில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ‘திரைப்படங்களை திரைப்படங்களாக மட்டுமே பார்க்க வேண்டும்’ என்ற நியதியைப் போதிக்கின்ற பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள், தங்களது திரைப்படங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, வக்கிரமான விஷத்தைக் கக்குவதையே தங்களின் முழுநேர வேலையாகக் கொண்டுள்ளனர் என்பதை இந்திய ரசிகர்கள் பாகுபடுத்திப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
இந்திய அளவில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தாலும், அதற்கு முன்னதாகவே 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தமிழில் வெளியான ‘திரௌபதி’ திரைப்படம் தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 65 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம், சுமார் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. சினிமா விமர்சகர்கள் அல்லது நடுநிலைவாதிகள் போன்ற முகமூடிகளை அணிந்துகொண்ட தேசத் துரோக கும்பல்களும், அந்நியக் கைக்கூலிகளும், அதனை நம்ப முடியாமல், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், திக்கிக் திணறி மண்ணைக் கவ்வினார்கள்.


‘திரௌபதி’ திரைப்படத்தைத் தொடர்ந்து அதன் இயக்குநர் மோகன் ஜி அடுத்த படைப்பாக ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தை 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி வெளியிட்டார். இந்தத் திரைப்படமும் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.
‘ருத்ர தாண்டவம்’ திரைப்படம் திரைக்கு வந்த நேரம் மிக முக்கியமானது. கொரோனாவின் ருத்ரதாண்டவம் முடிந்து திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட சூழல் அது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி, விஜய் சேதுபதி நடித்த ‘லாபம்’ திரைப்படம் 2021, செப்டம்பர் 9-ஆம் தேதி திரைக்கு வந்தது, சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் 2021, அக்டோபர் 9-ஆம் தேதி திரைக்கு வந்தது. அதேபோல யோகிபாபு கதாநாயகனாக நடித்த ‘பேய் மாமா’ திரைப்படம் 2021, செப்டம்பர் 24-ஆம் தேதி திரைக்கு வந்தது.
‘ருத்ர தாண்டவம்’ திரைக்கு வந்த அதே காலகட்டத்தில் திரைக்கு வந்த பெரிய நடிகர்கள் நடித்த மேற்கண்ட மூன்று படங்களில் ஒன்றுகூடத் தேறவில்லை. இந்தப் படங்கள் எதுவுமே ரசிகர்களை திரையரங்குப் பக்கம் கொண்டு வரவில்லை. ஆனால் ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படமோ கொரோனா பீதியையும் தாண்டி ரசிகர்களை திரையரங்குகளில் ஆர்ப்பரிக்க வைத்தது.
இத்தனைக்கும் இந்தப் படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது அல்ல. மிகப் பெரிய அளவில் மேக்கிங் மிரட்டல்களும் இதில் இல்லை. ஆனால் உண்மையைத் தொட்டுப் பேசியது. அதுதான் ரசிகர்களைக் கட்டிப் போட்டது.
இதில் மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. அதாவது நீண்ட காலமாக திரையரங்குப் பக்கம் எட்டிப் பார்க்காதவர்களையும் திரையரங்குக்கு வர வைத்த பெருமை ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்திற்கு உண்டு. அதேபோல கொரோனா பெருந்தொற்றால் முடங்கி, அவநம்பிக்கையில் துவண்டு போய்க் கிடந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்திய படமும் ‘ருத்ர தாண்டவம்’தான்.
அதன் பிறகு 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியான அமீர் கானின் ‘லால்சிங் சத்தா’ திரைப்படம் மரண அடியைச் சந்தித்தது. அதற்கு முந்தைய 12 ஆண்டுகளில் சந்திக்காத பேரிடியை, பெரும் இழப்பை எதிர்கொண்டார் அமீர் கான். ஹிந்தி ரசிகர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மற்ற ரசிகர்களும் இந்த திரைப்படத்தைப் புறக்கணித்தார்கள். அதன் காரணமாக, திரைப்பட வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்கப் போகிறேன் என்று அறிவித்தார் அமீர் கான். அந்த அளவிற்கு அவருக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள் ரசிகப் பெருமக்கள். காரணம் அமீர் கானின் தொடர் ஹிந்து வெறுப்பு, ஹிந்து தெய்வங்கள் அவமதிப்பு.
இதேபோன்ற ஒரு மரண அடியை தமிழில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படமும் சந்தித்தது. இந்தப் படம் 75 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. சன் பிச்சர்ஸால் தயாரிக்கப்பட்டது; உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மொத்தத்தில் இது முதல்வர் ஸ்டாலினின் குடும்பப் படம். எனவே தயாரிப்புச் சிக்கலோ, விளம்பர சிரமமோ அல்லது திரை அரங்குகளில் வெளியிடுவதில் இடையூறுகளோ கிஞ்சித்தும் இந்தத் திரைப்படத்திற்கு இல்லை.


ஆனால் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக இந்தப் படத்தைப் புறக்கணித்தார்கள். சூர்யாவின் தொடர் ஹிந்து வெறுப்பு மற்றும் தேசத்துரோகப் போக்கிற்கு ரசிகர்கள் சரியான பாடம் புகட்டினார்கள். 2021, நவம்பர் 2-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் உண்மைக்குப் புறம்பான, கட்டமைக்கப்பட்ட புனைவுகளைத் திட்டமிட்டுப் புகுத்தி, ஹிந்து விரோத விஷத்தைக் கக்கி இருந்தார் சூர்யா. இந்தத் திரைப்படத்தை அவரது டூ டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் கதாநாயகனாகவும் சூர்யா நடித்து இருந்தார்.
இந்தத் திரைப்படத்தின் பின்புலத்தில் கிறிஸ்தவ மிஷனரி கும்பல்கள் இருந்தன. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே இந்தத் திரைப்படத்திற்கு தனது ஆசீர்வாதத்தை வழங்கினார். இதையெல்லாம் அமைதியாகக் கவனித்து வந்த ரசிகர்கள் கூட்டம், சூர்யாவின் அடுத்த படமான ‘எதற்கும் துணிந்தவன்’ வெளிவந்த போது மௌனப் புரட்சி மூலம், எதற்கும் துணிந்தவனை எதற்கும் உதவாதவனாக மாற்றினார்கள்.
இயக்குநர் ராஜமௌலி படங்களில் இந்தியக் கலாசாரமும், நமது பண்பாடும் மையம் கொண்டிருக்கும். எனவே மொழி கடந்து, இனம் கடந்து, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தொடர்ந்து அவற்றைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதேபோல, 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வந்த கன்னட சிறு முதலீட்டு படமான ‘காந்தாரா’ பான் இந்தியா திரைப்படமாக உருமாறி, மெருகேறி, மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியைக் கொண்டாடியவர்களை விட, இதை ஜீரணிக்க முடியாமல் திண்டாடியவர்கள் தான் தமிழகத் திரைத்துறையில் அதிகம். புதைக்கப்பட்ட நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வழிபாட்டையும் காட்சிப்படுத்தியதே, இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடியதற்கு முதற்காரணம்.
இந்த வரிசையில் கடந்த மே 5-ஆம் தேதி வெளியாகி (05.05.2023) தற்போது உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படமும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படமும் முன்னாள் ரசிகர்களையும், திரையரங்குப் பக்கம் தலைவைத்துப் படுக்காதவர்களையும் திரையரங்குகளுக்குக் கட்டி இழுத்து வருகிறது.
இதற்கு மூல காரணமும், முக்கிய காரணமும் ஒன்றே ஒன்றுதான். இந்தத் திரைப்படம் உண்மையைப் பேசுகிறது. அதுவும் மறைக்கப்பட்ட, குழி தோண்டிப் புதைக்கப்பட்ட உண்மைகளை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதிப்தோ சென் இயக்கத்தில் 30 கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம், கடந்த மே 23-ஆம் தேதி வரை 248 கோடி ரூபாயை வசூல் செய்து வெற்றிகரமாக 300 கோடி ரூபாயை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்பட பெரும்பாலான உலக நாடுகளில் இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டு ரசிகர்களின் அமோக வரவேற்புப் பெற்று வருகிறது.
’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியான அதே நாள் திரைக்கு வந்த நேரடி தமிழ்த் திரைப்படங்களான குலசாமி, தீர்க்கத்தரிசி ஆகிய படங்கள், ரசிகர்கள் ஆதரவின்றி திரையரங்குகள் ஈ ஓட்டிக் கொண்டிருந்தன. அப்போதுதான், ‘தி கேரளா ஸ்டோரி’ மிகப்பெரிய வசூல் சக்கரவர்த்தியாகப் பரிணமித்தது. இத்தனைக்கும் இந்தத் திரைப்படம் தமிழகத்தில் ஹிந்தி மொழியில்தான் வெளியிடப்பட்டது. மொழி புரியாவிட்டாலும், தமிழ் ரசிகர்களை உணர்ச்சிப் பூர்வமாக தட்டி எழுப்பியது இப்படம். காரணம், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் கோரத்தாண்டவங்களை, உண்மை சம்பவங்களின் மூலம் வெளிச்சம் போட்டு வெளி உலகத்திற்கு காட்டியது இந்தத் திரைப்படம்.


இந்தத் திரைப்படத்திற்குத்தான் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் மறைமுகத் தடையை ஏற்படுத்தி, நெருக்கடியை உருவாக்கி, தனது முஸ்லிம் பாசத்தை வெளிப்படுத்தினார். உண்மையில் இந்தத் திரைப்படம் எந்த வகையிலும் முஸ்லிம் மதத்தையோ, முஸ்லிம்களையோ குறித்துப் பேசவில்லை. இந்தத் திரைப்படம் முழுவதும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் பயங்கரவாதச் செயல்களையும் ‘லவ் ஜிஹாத்’தின் கொடுமைகளையும் மட்டுமே பேசுகிறது. ஆனாலும் சில முஸ்லிம் பயங்கரவாத ஆதரவாளர்கள் கோர்ட் படி ஏறினார்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். இறுதியில் நாட்டின் தலைமை நீதிமன்றத்திடம் குட்டு வாங்கித் திரும்பியதுதான் மிச்சம்
வழக்கம் போல இந்தத் திரைப்படத்திற்கும் தமிழகத்தில் முஸ்லிம் அடிப்படைவாத, பயங்கரவாதக் கும்பல்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதற்கு சீமான் போன்ற சில தேசத்துரோகத் தலைவர்களும் ஆதரவுக் கரம் நீட்டினார்கள். அவர்களுக்கெல்லாம் முஸ்லிம் பயங்கரவாதத்தைப் பற்றியோ, நாடு அவர்களால் சீரழிவது பற்றியோ கவலையில்லை. அவர்களுக்குத் தேவை முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஓட்டு. அது சீமான் போன்றவர்களுக்கு ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை என்பது வேறு கதை.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ரசிகர்களின் பேராதரவை இப்படம் தொடர்ந்து பெற்று வருகிறது. ஆனால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் ஓட்டு அரசியலுக்காக, முஸ்லிம்களை தாஜா செய்வதற்காக இந்தப் படத்திற்கு தடை விதித்தார்.
மம்தாவேனும் நேரடியாக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தைத் தடை செய்தார். அதில் அவரது துணிச்சல் வெளிப்பட்டது. ஆனால் தமிழக சர்வாதிகாரி முதல்வர் ஸ்டாலினோ இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் தடை செய்யாமல், திரையரங்கு உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து, அதன்மூலம் மறைமுகத் தடையை அமல்படுத்தினார்.
05.05.2023 மற்றும் 06.05.2023 ஆகிய இரு தினங்களிலும் தமிழகத்தில் திரையிடப்பட்ட 21 திரையரங்குகளிலும் ஏறக்குறைய அரங்கு நிறைந்த காட்சிகளாக ‘தி கேரளா ஸ்டோரி’ பயணப்பட்டது. ஆனால், கூட்டம் வரவில்லை என்று காரணம் கூறி இப்படத்தை திரையரங்க உரிமையாளர்கள் நிறுத்திவிட்டனர். இதன் பின்புலம் என்னவென்று பகுத்தறிவுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்.
மேற்கு வங்க மாநில அரசின் தடையையும் தமிழக அரசின் மறைமுகத் தடையையும் எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத் தயாரிப்பாளர், கருத்துரிமையை தனது வழக்கின் மூலமாக நிலைநாட்டினார். மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட அரசின் தடையை நீக்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி, தமிழகத்தில் இப்படம் வெளியாக அனைத்து வகையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டார். ஆனால், இந்த நீதித்துறை உத்தரவு இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை ரசிகர்கள் கவனத்தில் வைத்திருக்கிறார்கள்.
’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் முஸ்லிம் பயங்கரவாதிகளை, அவர்களின் செயல் வடிவங்களை வெளி உலகத்திற்கு படம் பிடித்துக் காட்டியதை, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் இழிவு படுத்தியதாக பொதுமைப்படுத்தி, வழக்கம்போல தமிழகத்தில் சிலர் கட்டமைத்தார்கள்; அதை அனைவரையும் நம்ப வைப்பதற்காக நாடகம் ஆடினார்கள். இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள் இந்தப் பிரசாரத்தின் பீரங்கிகளாக முன்வரிசையில் வந்தது நின்றதுதான் கேவலத்தின் உச்சம். இவர்கள் தங்கள் ஈனச் செயல் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும், மீண்டும் ஒருமுறை அவப்பெயரை ஏற்படுத்தினார்கள் என்பதே உண்மை.
இதில் மற்றொரு வேடிக்கையும் அரங்கேறியது. ஐஎஸ்ஐஎஸ் போன்ற சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாகச் செயல்பட்டு வரும் சில தமிழக அமைப்புகளும், அதன் தலைவர்களும், அமீர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற அரைகுறை ஞானிகளும், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தைப் பார்க்கவே இல்லை என்பதுதான் உச்சகட்ட சோகம். படத்தைப் பார்க்காமலேயே அதை விமர்சனம் செய்து, கற்பனையில் முடிவுரையும் எழுதி, இஷ்டம் போல முடிவுக்கும் வந்த இந்தக் கும்பலைப் போன்ற கோமாளிகள் உலகம் முழுவதும் தேடினாலும், எந்த நாட்டிலும் கிடைக்க மாட்டார்கள்.
இப்படித்தான் முஸ்லிம் மத பிரசாரப் படமான ‘பர்கானா’ திரைப்படத்தைப் பார்க்காமலேயே (இது நடிகர் சூர்யா குடும்பத்தின் ஆதரவு பெற்ற டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு) இந்தப் படத்தை திருவாரூர் மாவட்டத்தில் பல திரையரங்குகளில் ஓட விடாமல் முடக்கினார்கள். அதன் பிறகு முஸ்லிம் மதவெறிக் கும்பல்களும், அமீர் முதல் நடிகர் சூர்யா வரை திரைப் பிரபலங்களும், இந்த படம் முஸ்லிம்களுக்கு எதிரான படம் அல்ல, எனவே அனைவரும் படத்தைப் பாருங்கள் என்று கெஞ்சிக் கூத்தாட வேண்டியதாயிற்று. இருப்பினும் ரசிகர்கள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

படத்தைப் பார்க்காமலேயே தீர்ப்பு எழுதிய முஸ்லிம் மதவெறிக் கும்பல்கள், தங்கள் பகுத்தறிவின் அளவை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி உள்ளன.
ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற மற்றொரு திரைப்படம் ‘கிடுகு’. குறைந்தபட்ச சினிமா இலக்கணத்தைக் கூடப் பின்பற்றாத திரைப்படம் ‘கிடுகு’ என்று சொன்னால் சாலப் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு அனைத்து அம்சங்களும் மிக சாதாரணமாக இருக்கும். ஆனாலும் கருத்தும், வசனங்களும் அனல் பறக்கும் விதமாக அமைந்து, அவை ரசிகர்களை திருப்திப்பட வைத்தன. திரைக்கு வராமலே, ஓடிடி தளங்களிலும் வெளியிடப்படாமலே, யூட்யூப் சேனல் மூலமாக ஒரு படத்தை வெளியிட்டு வெற்றிவாகை சூட வைக்க முடியும் என்று நிரூபித்தது ‘கிடுகு’.
ரசிகர்கள் மாறிவிட்டார்கள். திரையிலும் உண்மையைத் தேடிப் புறப்பட்டு விட்டார்கள். மாற வேண்டியவர்கள் படைப்பாளிகள், குறிப்பாக தமிழக திரைப்படப் படைப்பாளிகள் தான். மாறாவிட்டால் அவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதே கசப்பான உண்மை.
$$$