ரஸத் திரட்டு

-மகாகவி பாரதி

எல்லா மனிதரும் சமமென்ற கொள்கையை ஸமூஹ வாழ்க்கையில் ஸ்தாபனம் செய்யும்வரை மானிடருள்ளே இகல், பொறாமை, வஞ்சனை, போர் முதலிய ஏற்பாடுகள் நீங்க மாட்டாவாதலால் அக்கொள்கையை எப்படியேனும் அனுஷ்டானத்துக்குக் கொணர்ந்து விடவேண்டுமென்று ஐரோப்பிய ஞானிகள் பேராவல் கொண்டிருக்கின்றனர். இந்தியா ராஜாங்க விடுதலை பெற்றுவிடுமானால் தன் அனுஷ்டானத்தாலே உலகத்தாருக்கு இக்கொள்கையின் நலங்களை விளக்கிக் காட்டி உலகமுழுவதும் இதனைப் பரவச் செய்தல் ஸாத்யப்படும்.

10 ஜனவரி 1921                                                                   ரெளத்திரி மார்கழி 27



நிறவேற்றுமை

அமெரிக்காவில் செந்நிற இந்தியர் என்ற ஜாதியாருடன் அங்கு புதிதாக ஐரோப்பாவினின்றும் குடியேறிய வெண்ணிற மனிதர் ஒத்துவாழ முடியாமல் அவர்களைச் சுட்டழித்த செய்தி, ஆஸ்த்ரேலியாவின் புராதனக் குடிகளை வெள்ளையர் அழித்து முடித்த செய்தி, ஒரு நீகிரோவன் ஒரு வெள்ளை ஸ்திரீயை விரும்பினால் அவனைச் சட்டப்படி விசாரணை செய்யாமல் ஜனங்கள் அடித்தும் கல்லெறிந்தும் கொல்வதாகிய – இன்றைக்கும் அமெரிக்காவில் உள்ள அனுஷ்டானம், ஐரோப்பியரின் ஆட்சிக்குட்பட்ட இந்தியா முதலிய இதர நிறத்தாருடைய நாடுகளில் நிறவேற்றுமை காரணமாக ஏற்படும் அநீதிகள், அமெரிக்காவிலும் கனடாவிலும் ஜப்பானியரும் இந்தியரும் குடியேறி யிருப்பதால் அங்குள்ளவருக்குண்டாகும் பொறாமை, குடியேற்ற நாடுகளில் ஆசியாக்காரருக்குச் செய்யப்படும் கொடுமைகள் இவற்றாலெல்லாம் நிறவேற்றுமை பற்றிய பேத உணர்ச்சிகள் சில நூற்றாண்டுகளாக வெள்ளையரிடம் ததும்பிக் கிடப்பதாக நிச்சயப்படுவதை முகாந்தரமாகக் கொண்டு ஹிந்து பத்திரிகையில் நிற வேற்றுமை உணர்ச்சி மனித இயற்கைக்கே சகஜமென்றும் இது சமீபத்தில் இவ்வுலகை விட்டுப் பெயராதென்றும் எழுதப்பட்டிருந்த அபிப்பிராயத்தை ஏற்கெனவே சில தினங்களின் முன்பு மறுத்தெழுதியிருக்கிறோம்.

அங்ஙனம் மறுத்தெழுதுகையில் ஆசியாக் கண்டத்தாருக்கு இந்த உணர்ச்சி எப்போதுமே கிடையாதென்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறோம். அங்ஙனம் நாம் சொல்லியதற்கு வேறொரு நேர்த்தியான உபபலம் அகப்பட்டிருக்கிறது. அதனை நம் நேயர்களுக்குத் தெரிவித்தல் பயனுடையதாகும் என்று நினைக்கிறோம்.

சுக்ர நீதியிலுள்ள பிரமாணம்  

1921 ஜனவரி மாஸத்து ‘மார்டர் ரிவ்யூ’ பத்திரிகையிலே சரித்திர ஆராய்ச்சியில் கீர்த்தி மிகுந்தவராகிய ஸ்ரீ விநயகுமார சர்க்கார் என்பவர் சுக்ர நீதியின்படி  ‘ராஜ்யத்தின் செல்வ ஆதாரங்கள்’ என்ற மகுடத்தின் கீழ் எழுதிவரும் சிறந்த வியாசத்தின் 5-ம் பகுதி வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஸ்ரீ சர்க்கார் சுக்ர நீதியினின்றும் பலமான மேற்கோள் எடுத்துக் காட்டிப் பூர்விக இந்தியாவில் சேனாதிபதி வேலை, மந்திரி வேலை முதலாக ஸகல ஸ்தானங்களுக்கும் இந்தியாவிலுள்ள எல்லா ஜாதியாரையும் நியமிக்கலாமென்ற ஏற்பாடிருந்ததுடன், மிலேச்சர், யவனர் முதலிய மத்திய ஆசியாவாசிகளையும் தென் ஐரோப்பாவைச் சேர்ந்த வெள்ளை மனிதர்களையும் இந்தியாவில் எந்த உத்தியோகத்துக்கும் நியமிக்கலாமென்ற ஏற்பாடு  இருந்ததென்றும் உள்ளங்கை நெல்லிக்கனி போல மிகத் தெளிவாக விளங்கும்படி ருசுப்படுத்துகிறார். இங்குள்ள ஜாதிபேதங்களைக் கூட நாம் சீர்திருத்த இடமிருப்பினும் வெள்ளையர் கற்பிப்பது போல் இதனை உலகெங்குமில்லாத பெருங் கொடுமையாகப் பாவித்தல் சிறிதேனும் நியாயமில்லை. இந்த விஷயமும் ஸ்ரீமான் சர்க்காரின் வியாசத்தில் தெளிவுபடுகிறது.

எல்லா மனிதரும் சமமென்ற கொள்கையை ஸமூஹ வாழ்க்கையில் ஸ்தாபனம் செய்யும்வரை மானிடருள்ளே இகல், பொறாமை, வஞ்சனை, போர் முதலிய ஏற்பாடுகள் நீங்க மாட்டாவாதலால் அக்கொள்கையை எப்படியேனும் அனுஷ்டானத்துக்குக் கொணர்ந்து விடவேண்டுமென்று ஐரோப்பிய ஞானிகள் பேராவல் கொண்டிருக்கின்றனர். இந்தியா ராஜாங்க விடுதலை பெற்றுவிடுமானால் தன் அனுஷ்டானத்தாலே உலகத்தாருக்கு இக்கொள்கையின் நலங்களை விளக்கிக் காட்டி உலகமுழுவதும் இதனைப் பரவச் செய்தல் ஸாத்யப்படும்.

ஸமத்துவக் கொள்கையின் லோககுரு பாரதமாதா

வெறும்மே ஐரோப்பிய வித்வான்கள் செய்வது போல் இவ்விஷயமாக  நூல்களும் பத்திரிகை வியாசங்களும் ப்ரசுரிப்பதனாலும் உபந்யாஸங்கள் செய்வதாலும் அதிக பயனேற்படாது.  தன் உபதேசப்படி தானே நடக்காத ஐரோப்பாவின் உபதேசங்களில் வெளியுலகத்தாருக்கு நம்பிக்கை பிறப்பதெப்படி? எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக் கிடக்கிறது. இந்த வேதாந்தம் லெளகிகமான அனுஷ்டானத்தில் பரிபாணமான ஸம்பூர்ணமான ஸமத்துவம் ஏற்படுத்தும் இயல்புடையது. ஆனால் நமக்கும் ஐரோப்பியரின் உறவாலேதான் இக்கொள்கையில் உறுதி ஏற்பட்டது. எனினும் ஐரோப்பியர் அதை நடத்திக் காட்டக் கூடிய அளவு  தெளிவு பெறவில்லை. இக்கொள்கை அவர்களுக்குப் புதிது. புதிய கொள்கை உண்மையென்று நிச்சயப்பட்ட மாத்திரத்தில் அதை அனுஷ்டித்துத் தீர்க்க வேண்டுமென்பதில் இந்தியாவுக்குள்ள துணிவு  ஐரோப்பாவுக்குக் கிடையாது. ஆனால் நாம் இக்கொள்கையை முற்றிலும் அனுஷ்டித்தல் அன்ய ராஜ்யத்தின் கீழே ஸாத்யப்படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி.

வெண்மை நிறத்தோரின் ஆட்சி விஸ்தாரம்


பூமண்டலத்தின் தரையளவு சுமார் 5,30,00,000 (ஐந்து கோடியே முப்பது லட்சம்) சதுரமைல். இதில் 4,70,00,000 (நான்கு கோடியே எழுபது லட்சம்) சதுர மைல் விஸ்தாரமுள்ள பூமி வெண்மை நிறத்தோரின் ஆதிக்கத்திலிருக்கிறது. இங்ஙனம் உலகம் ஒரு சிறு  கூட்டத்தாரின் கீழே அகப்பட்டிருப்பதில் அச்சிறு கூட்டத்தார் தங்களுடைய வயிற்றையும் தமக்கு வேண்டிய இன்பங்களையும் மாத்திரமே கவனிப்பதுடன் மற்ற உலகத்தாரெல்லாரும் தங்களைக் காட்டிலும் தாழ்வென்றும் நினைத்துக் கொண்டிருக்குமிடத்தே ஸமத்வக் கொள்கையின் கதி என்னாகிறது?

  • சுதேசமித்திரன் (10 ஜனவரி 1921)

$$$

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s