அன்புஜோதியின் அவலமான பின்னணி

-டி.எஸ்.தியாகராசன்  

“சைவ உணவு விடுதி” என்ற பெயர் தாங்கிய நிறுவனத்தில் புலால் சமைத்துப் பரிமாறப்படுமானால் எப்படி பெயர் பொருத்தம் இல்லையோ, அது போன்றே காப்பகத்தின் பெயருக்கும், அங்கே நடக்கும் சம்பவங்களுக்கும் சற்றும் பொருத்தம் இல்லாத நிலையில் கடந்த 17 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் சின்னஞ்சிறு குக்கிராமத்தில் கொடுமைமிகு காப்பகம் இயங்கி வந்திருக்கிறது.

அமெரிக்காவில் இருந்து தாய்நாடு திரும்பிய ஒருவர் தனது உறவினர் தங்கியிருந்த பாதுகாப்பு இல்லத்தில் பார்க்க விழைந்தபோது அவர் அங்கு இல்லை  என தெரிந்து காப்பக நிர்வாகியைக் கேட்டபோது அவர் இங்கு இல்லை எங்கோ ஓடிப் போய் விட்டார் என்று பதில் கிடைக்கவே அவர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு முறையீடு செய்தார். நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் மூலம் விசாரிக்க உத்தரவு அனுப்புகிறது. மாவட்ட ஆட்சியர் நேரடியாக களத்தில் புலன் விசாரணை மேற்கொண்ட போதுதான் பல அதிர்ச்சி மிக்க தகவல்கள் உலகின் பார்வைக்கு வருகின்றன. 

விழுப்புரம் அருகே உள்ள சிறு கிராமமான  ‘குண்டலபுலியூர்’ அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்த கொடூரங்கள் மக்களின் மனங்களை ரணமாக்கியுள்ளன.

புராண, இதிகாச காலத்தில் கானகத்தில் தங்கி தவமியற்றும் தவசிகள், முனிவர்கள் வதியும் குடிலுக்கு பர்ணசாலை, ஆசிரமம் என்று பேசும். பாரத இதிகாசங்களான ராமயணமும், மகாபாரதமும் பல இடங்களில் பல முனிவர்களின் ஆசிரமக் குறிப்புகளைத் தருகின்றன. அறநெறி நின்று நீண்ட நெடுங்காலமாக தத்தம் தர்ம பத்தினிகளோடு தவ வாழ்க்கை வாழும் இல்லங்களுக்கு உலகம் வழங்கிய பெயர்தாம் ஆசிரமம். ஆனால் கேரளாவில் இருந்து வந்து தமிழகத்தின் பெரிதும் அறியப்படாத கிராமம் ஒன்றில் நான்கு மாடி கட்டடம் கட்டி 150-க்கும் அதிகமான ஆதரவற்றோர், மனநலம் குன்றியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களைப் பராமரிப்பதாக்க் கூறி,  ‘நல்ல சமேரியர் சாரிட்டபிள் டிரஸ்ட்’டின்  கீழ் அன்புஜோதி ஆசிரமம் அமைத்து பலவகையான குற்றங்களை புரிந்து வந்ததைக் கண்டுபிடித்த காவல் துறை,  அதன் நிர்வாகிகளான தம்பதியினரைக் கைது செய்து உள்ளனர். 

தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து புலன் விசாரணையைத் தொடங்கியுள்ளது. தற்போது சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்தான பாமர மக்களின் மனதில் ஏற்பட்டுள்ள ஐயங்களை வெறுமனே புறந்தள்ளி விட முடியாது.

இரண்டொரு ஆண்டுகட்கு முன்னர் காஞ்சிபுரம் அருகில் உள்ள கிராமம் ஒன்றில் காப்பகத்தில் நடந்ந கொடூரங்களை அப்போது செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. வழக்கம் போல் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. காப்பக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். காப்பகத்தில் தங்கி இருந்தவர்கள் அரசுக் காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். ஆனால், அந்த நிறுவனம் மீண்டும் தற்போது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  

இப்படி நாட்டில் பல சிறு கிராமங்களில் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் நடக்கும் மனிதத் தன்மையற்ற செயல்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதில் இரண்டு வித கருத்துக்கள் இருக்க முடியாது.

மக்களில் சிலர் தம் இல்லங்களில் உள்ள வயோதிகர்களை நம்மால் சரிவர பராமரிக்க இயலாது என்ற நிலையில் இது போன்ற காப்பகங்களை தேர்வு செய்கின்றனர். காப்பகங்கள் பராமரிப்புச் செலவிற்காக மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்கின்றன. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனில் கூடுதலாக தொகை வசூலிக்கிறார்கள். காப்பக நிர்வாகிகளை கருணை மிக்க கடவுளுக்கு நிகராக எண்ணி,  சேர்த்து விடுகின்றனர் அப்பாவி மக்கள். அதன் பின் அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்,  உடல்நலம் எப்படியுள்ளது என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.

மக்களின் மனவோட்டத்தைப் புரிந்துகொண்ட காப்பக நிர்வாகிகள் தங்களின் மனதிற்கு ஏற்ப தங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். ஓரிருவர் வந்து “என் உறவினர் எங்கே” என்று கேட்டால் சொல்லாமல் ஓடிப் போய்விட்டார் என்றும் அல்லது, உயர் சிகிச்சைக்காக பெரிய நகரத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளார் என்றும், சிலர் வயதின் முதிர்ச்சி காரணமாக மரணமடைந்து விட்டார் என்றும் செய்திகளைக் கூறியுள்ளார்கள். 

காப்பகத்தில் தங்களின் கருத்திற்கிசையாத எவரையும் உடல் ரீதியாகத் துன்புறுத்துவது,  ஜன்னல் இரும்புக் கம்பிகளில் இணைத்து பிணைத்து வைத்திருப்பது, எதிர்க்கும் எவரையும், நாய், குரங்கு போன்ற மிருகங்களை ஏவி கடித்து காயப்படுத்துவது போன்றவற்றைச் செய்து கொடுமைகள் இழைத்திருக்கிறார்கள் என்பதைக் கேட்கும் போது நமது கண்கள் குளமாகி, மனம் நொறுங்கிப் போகிறது.  பெண்கள் எனில் நிர்வாகத்தினர் உடல் இச்சைக்கு பலியான கொடூரங்களும் தொடர்ந்திருக்கின்றன. 

மனித வடிவில் உலவும் உன்மத்த அரக்கர்கள், தங்களின் சுகபோக வசிப்பிடங்களுக்கு என்ன பெயர் பூண்டு உள்ளார்கள்?  ‘அன்புஜோதி ஆஸ்ரமம்’!

ஒருவர்மாட்டு பிரிதொருவர் செலுத்தும் கருணைக்கு ‘அன்பு’ என்பர்.  அன்பு பெற்றவரை நெகிழச் செய்யும் என்பது மட்டுமல்ல, செலுத்தியவர் பால் ஈர்ப்பு வந்தெய்தும் என்பதும் உண்மை. இதனாலேயே “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்றார் உலக ஆசிரியர். வள்ளல் பெருமானும்  ‘அன்பெனும் பிடியிலுள் அகப்படும் அரசே, மலையே’ என்று இறைவனை உருகி பாடுகிறார்.

டிஸ்கவரி சேனல்களில் சில சமயம் சில அபூர்வமான காட்சிகள் வரும்.  அதில் ஒன்று ஒரு காட்டில் கொடிய குணம் கொண்ட சிங்கங்களோடு பல ஆண்டுகள் தங்கி அவற்றோடு ஒட்டி உறவாடிய ஒரு விலங்கின நிபுணர்  சில ஆண்டுகள் வேறிடம் சென்று திரும்பி வந்தபோது அவருடன் முன்பு பழகிய சிங்கங்கள்  பாய்ந்தோடி வந்து அவர் மேல் பாசப் பிணைப்போடு முட்டி, மோதி உச்சி முகர்ந்து ஆரத் தழுவிய காட்சியைக் காணும்போது அன்பிற்கு இவ்வளவு வலிமையா என்று வியந்து போகிறோம். பி ரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்ற பரவச நிலைக்கு அன்பு வழிகாட்டும், காட்சி அது. 

எவரையும் தாக்கிக்கொன்று பசியாறும் கொடிய மிருகங்களான சிங்கங்கள் தங்களோடு பழகிய, தங்களை பழக்கிய மனிதரை கண்ட மாத்திரத்தில் தங்களின் பிறவிக் குணத்தை மாற்றிக்கொண்டு பாசவலை பின்னுகிறதே! பறவையின் உயிரைக் காப்பாற்ற தன் தசையை அறுத்தெறிய முன்வந்த சிபிச் சக்கரவர்த்தி பிறந்த மண்ணில், மயிலின் குளிர் காக்க தனது மேலாடையை ஈந்த  மன்னன் பேகன்கோலோச்சிய பூமியில், முல்லைக்கு தனது மணித் தேரையே வழங்கிய பாரி வள்ளல் வதிந்த திருநாட்டில் சக மனிதர்களைக் கொடுமைப்படுத்தும் இவர்களை எப்படி ஏற்பது?

இத்தகைய அன்பு இந்தக் காப்பக நிர்வாகிகட்கு இல்லாமல் போனது எப்படி?  இந்நிலையில் பெயரில் மட்டும் அன்பா,  எங்ஙனம் பொருந்தும்?  இறைவனை ஜோதியாக வழிபட்ட வள்ளல் பெருமான் அவதரித்த மண்ணில் அவர் வணங்கிய ஜோதியையும் அடைக்கும் தாழ் இல்லாத அன்பையும் இணைத்து  ‘அன்புஜோதி ஆசிரமம்’ என்ற பெயரினை வைத்திட, இந்தச் சிறு மதியாளர்கட்கு எப்படி மனம் வந்தது?  தற்போதைய நிலையில் பல்வேறு ஐயங்களுக்கு விடை காண வேண்டிய அவசியம் சமூகத்தின்பால் அக்கறை கொண்டவர்கட்கு ஏற்படுவது இயற்கையே! இந்தக் கேரளத் தம்பதிகள் தமிழக எல்லையில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்தை தங்களது பணிக்காகத் தேர்வு செய்ய காரணம் என்ன? 

இது போன்றதொரு காப்பகம் அமைக்க உள்ளுர் ஊராட்சி மன்றமோ, கிராம நிர்வாக அலுவலகமோ, வட்டாட்சியர் அலுவலகமோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகமோ, மாநில அரசின் சமூகநல அமைச்சகமோ, மத்திய அரசின் ஒரு குறிப்பிட்ட துறையோ அனுமதி வழங்காமல், கடந்த 17 ஆண்டுகள் எப்படி இயங்கி வந்தது? இதனை மேற்கண்ட துறையைச் சார்ந்தவர்களின் கண்களில், கருத்தில் கவனம் கொள்ளாமல் போனது எங்ஙனம்?  சட்டங்கள் நடவடிக்கை எடுக்க முடியாவண்ணம் மெலிந்து இருக்கிறதா? அல்லது காப்பக நிர்வாகிகளின் கனிவான பார்வைக்குள் முடங்கி இருக்கிறதா?

காப்பக பெண் நிர்வாகி நாங்கள் இதுவரை 400 அனாதைப் பிரேதங்களை அடக்கம் செய்து இருக்கிறோம் என்று பெருமை பொங்கச் சொல்லுகிறாரே?  இறந்தவர்கட்கான இறப்புச் சான்றிதழ் பெற்றதுண்டா?  இறந்தவர்கள் பற்றி உறவினரிடம் தகவல் தெரிவித்ததுண்டா? உறவினர்கள் கேட்டால் ஓடிப் போய் விட்டார், நோய்க்கான சிகிச்சைக்கு பெரிய நகர மருத்துவமனைகட்கு அனுப்பப் பட்டுள்ளார் என்பன போன்ற தகவல்களையே தந்ததன் பின்னணி என்ன?  இது உண்மையானால் 400-க்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? 

வெளிநாட்டினர் ஏன் அடிக்கடி இங்கு வந்து தங்கிப் போனார்கள்?  மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் அபகரிக்கப்பட்டனவா?  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்காக நிதி வேண்டி  ‘பசுமைபயணம்’ என்ற திட்டத்தைத் தொடங்கி அயல்நாடுகளில் இருந்து பெருமளவு நிதி சேகரித்துள்ளனர் என்றால் இதற்கான முறையான அனுமதி மத்திய அரசால் வழங்கப்பட்டதா? வருமான வரி பிரிவுகளில் சலுகைகளுக்கான அனுமதி கிடைத்துள்ளதா?  இந்தக் காப்பகத்திற்கு நாடெங்கிலும் இதுபோன்ற நிறுவனங்களோடு தொடர் இணைப்பு உள்ளதால் சிலரை வெளியூர்க் காப்பகங்களுக்கு அரசு அலுவலர் இட மாறுதல் போல மாற்றியுள்ளது அதிர்ச்சியையும், பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறதே! 

இந்த சிறிய கிராமத்தில் உள்ள காப்பகத்திற்கு தொலைதூர மாநிலங்களில் இருந்து எப்படி பெண்கள், முதியோர்கள் வந்தார்கள்? இவர்களை இங்கு அனுப்பிய முகவர்கள் அல்லது தரகர்கள் பணியின் பின்புலம் என்ன?  இந்தக் காப்பகமும் பலரை பல இடங்களுக்கு அனுப்புவதில் கமிஷன் பெற்றதாக செய்தி வெளிவருகிறதே!  இதெல்லாம் எப்படி சாத்தியம்? 

ஒரு அரசின் நிர்வாக அமைப்பு போல, ஆனால் எந்தவித முறையான ஆவணங்களும் இல்லாமல் ஒரு நிறுவனம் தொடங்க முடியும், தொடர்ந்து பல ஆண்டுகள் நடத்த முடியும் எனில், என்ன சொல்வது? அதிர்ச்சி மிக்க சம்பவங்கள் நடந்தேறிய பிறகு மக்களின் புகார் மனு நீதிமன்றம் வரை சென்றால் தான் குற்றத்திரை விலகுமா?  இருள் அகன்று விடியல் பிறக்குமா?

உலகில் எவ்வளவோ தனவந்தர்கள், மனித நேயம் மிக்க சீலர்கள் அறச்சாலைகளை நடத்தி வரும் நாளில் இப்படிப்பட்ட புல்லுருவிகளும் அன்பின் மாண்பை, ஜோதியின் ஒளியைக் கெடுக்கிறார்களே!

ஒருமுறை சுவாமி விவேகானந்தரைப் பார்க்க அமெரிக்க கோடீஸ்வரர் ராக்பெல்லர் வந்தார், உரையாடும் நேரத்தில் தனது செல்வச் செழிப்பை சுவாமியிடம் கூறி மகிழ்ந்தார்.  அப்போது சுவாமி விவேகானந்தர் “மிஸ்டர் ராக்பெல்லர் உங்களிடம் இருக்கின்ற செல்வம் உங்களுடையது அல்ல, அது முழுவதும் ஏழை மக்களின் துயர் துடைக்க இறைவன் உங்களுக்குத் தந்தது. இறைவன் நல்ல பணியை தங்கள் மூலம் நடத்த எண்ணியே அபரிமிதமான செல்வத்தை உங்களுக்கு வழங்கியுள்ளான், என்பதை நினைவில் வையுங்கள்” என்றார். ராக்பெல்லர் நாளெல்லாம் சிந்தித்தார். தெளிவு பெற்றார். எளிய ஏழைமக்களின் பசியையும், பிணியையும் துடைத்தெறிய “ராக்பெல்லர் ஃபவுண்டேஷன்” அமைப்பைத் தொடங்கினார் என்பது உண்மை வரலாறு. 

இன்றைய நாளில் உலகின் முக்கிய பணக்காரரான பில் கேட்ஸ் பல ஆயிரம் கோடிகளை எய்ட்ஸ் நோய் ஒழிப்பிற்கு பயன்படுத்தி வருகிறார். நம் நாட்டில் கூட பிர்லா, டாடா, இன்போஸிஸ் போன்ற பெரு நிறுவனங்கள் தேவைப்படும் இடங்களில் ஓசையின்றித் தொண்டாற்றி வருகின்றன.

அந்நாளில் பசிப் பிணி போக்கவே “இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்” என்றார்கள். அரும்பசி போக்கவே மணிமேகலை அட்சய பாத்திரம் தாங்கினாள். நாடெங்கிலும் பயணிகள் பயணிக்கும் சாலைகளில் அன்ன சத்திரங்களைக் கட்டி வைத்தனர். மருத்துவ சிகிச்சைக்குப் பொருள் பெறுதல் பாவம் என்று கருதியே தர்ம வைத்தியசாலைகள் ஆங்காங்கே தோன்றின.

ஆதரவற்றோர் என்றதொரு பிரிவோ, அனாதைகள் என்ற குழுவோ அதிகம் தென்படாத காலமாக அக்காலம் இருந்தது.  வயது முதிர்ந்தவர்கள் அவரவர்தம் இல்லங்களிலேயே இருக்க வைத்து பிற உறவினர்கள் நலம் பேணினார்கள். “ஹிதம் சரீரம் பரோபகார்த்தம்” என்று வாழ்ந்தார்கள்.

இப்போது காப்பகங்கள் ஒரு மனிதத் தன்மையற்ற வணிக நோக்கில் நடப்பதும், சில இடங்களில் மத போதகர்கள் எளிய கிராம மக்களை அரைகுறை ஆடைகளோடும், கையில் உணவுப் பாத்திரங்களை கையில் ஏந்தியபடி நிற்கச் சொல்லியும் நிழற்படம் எடுத்து வளமான நாடுகட்கு அனுப்பி ஈகை செய்ய மனம் உள்ளவர்களின் நிதியைப் பெற்று இங்கே அவரவர் தம் வளத்தை பெருக்கி கொள்ளுகின்றனர். 

இனியாகினும் மத்திய, மாநில அரசுகளே விரைவாக நாடெங்கினும் இருக்கின்ற தொண்டு என்ற பெயரில் நடக்கும் காப்பகக் கொட்டடிகளைக் கணக்கெடுத்து முறைபடுத்த வேண்டும். அரசுகளே நாட்டில் உள்ள நல்ல மனம் படைத்த செல்வந்தர்களின் துணையோடு தூய மனத்தோடு இயங்கவல்ல தொண்டர்களோடு இணைந்து உண்மையான அன்பு, ஜோதி காப்பகங்களைத் தொடங்க வேண்டும்.  தேவைப்படும் எளிய மக்களுக்கு முறையான, தரமான சேவைகளைத் தர வேண்டும். 

இல்லை எனில், பெயருக்கும், நடக்கும் பணிக்கும் பொருத்தம் இல்லை என்பதை அன்பு ஜோதி ஆசிரமம் போன்ற நிறுவனங்கள் மெய்ப்பித்துக்கொண்டே இருக்கும்.

  • நன்றி: தினமணி (01.03.2023)

$$$

பின்னிணைப்பு: இணையதளச் செய்தி

மர்மான அன்பு ஜோதி ஆசிரமம்:
சிபிசிஐடி, தடய அறிவியல் துறையினர் அதிரடி ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் அன்புஜோதி ஆசிரமத்தில், சிபிசிஐடி போலீசாரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பலர் மாயமானதாக புகார் எழுந்த நிலையில் ஆசிரமம் மூடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு நடத்தினார்கள்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோர் கொடுமைப் படுத்தப்பட்டதாகவும், குரங்குகளை ஏவி கடிக்க வைக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவின. இதுமட்டுமின்றி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 50 பேர் மாயமாகி விட்டதாகவும், உடல் உறுப்புகள் திருடப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் அந்த ஆதரவற்றோர் இல்லம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.  

கண்டுபிடித்த போலீஸ்

விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே உள்ள குண்டலபுலியூரில் இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா என்பவர் காணாமல் போனதாக அவரது உறவினர் புகார் தெரிவித்தார். ஆடிப்போன அதிகாரிகள் இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி போலீசாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர்.

இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆஸ்ரமம் நடைபெற்று வருவது அப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அடித்துத் துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார்கள் வந்தன. ஆசிரமத்தில் இருந்த ஜாபருல்லா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் வந்த தகவலை கேட்டு அதிகாரிகள் ஆடிப்போயினர்.

ஆசிரம நிர்வாகி கைது

இதனையடுத்து அன்பு ஜோதி ஆஸ்ரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆஸ்ரம பணியாளர்கள் 6 பேர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அன்பு ஜோதி ஆஸ்ரம விவகாரத்தில் பல்வேறு தகவல்களை வெளியிட்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

டிஜிபி உத்தரவு

பல்வேறு அதிர்ச்சிக்குரிய சர்ச்சைக்குள்ளான தகவல்கள் வெளியானதால் அன்பு ஜோதி ஆஸ்ரம வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்து தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு  உத்தரவிட்டார். இதனையடுத்து அன்பு ஜோதி ஆஸ்ரம வழக்கு விசாரணையை மேற்கொள்ள விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் 4 ஆய்வாளர்கள் மற்றும் சிபிசிஐடி காவலர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இதையடுத்து அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் சோதனை நடத்தி இதுவரை வழக்கு விசாரணை நடத்தி வந்த தனிப்படை ஏடிஎஸ்பி கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா முன்னிலையில் வழக்கு ஆவணங்களை விழுப்புரம் சிபிசிஐடி ஆய்வாளர் ரேவதியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து. விசாரணையை மேற்கொள்வதற்காக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 15க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் வந்தனர்.

அன்பு ஜோதி ஆசிரமத்தில் தொடர்ந்து இன்று சிபிசிஐடி எஸ்.பி அருன் பாலகோபாலன் தலைமையிலான அதிகாரிகள் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். விழுப்புரம் தடய அறிவியல் துறை துணை இயக்குனர் சண்முகம் தலைமையிலான நான்கு பேர் கொண்ட நிபுணர்களும் நடமாடும் தடய அறிவியல் வாகனத்துடன் வந்து ஆய்வு நடத்தினார்கள். இந்த சோதனையால் அன்பு ஜோதி ஆசிரமம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • ஆதாரம்: ‘ஒன் இந்தியா’ செய்தி இணையதளம் (2023 பிப். 21)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s