-மகாகவி பாரதி
‘பஞ்சகோணக் கோட்டை’ என்ற தத்துவார்த்தமான இந்தக் கதை திரு. வ.ரா. புதுவையில் நடத்திவந்த ‘சுதந்திரம்’ என்ற மாதப் பத்திரிகையில் வெளிவந்தது; பிறகு, 1945 செப்டம்பர் 9-ஆம் தேதி இது சென்னை ‘ஹநுமான்’ வாரப் பதிப்பிலும் வெளியாயிற்று. உண்மையில், சமுதாயத்திற்கு அறிவுரை கூற வந்த மகாகவி பாரதியின் அற்புதமான கட்டுரை இது...

ஒரு தேசத்தில் ஒரு கோட்டை இருந்தது. அதற்குப் பஞ்ச கோணக் கோட்டை என்று பெயர், அதாவது அந்தக் கோட்டைக்கு ஐந்து மூலைகளும் ஐந்து பக்கங்களும் உண்டு. அந்தக் கோட்டையை வெகு காலமாய் எந்தச் சத்துருவாலும் பிடிக்க முடியவில்லை. அதை அழிவற்ற கோட்டை என்று உலகத்தோர் புகழ்ந்து வந்தார்கள். முன்பக்கம் ஆழமான கரும்பாறை அஸ்திவாரமாக இருக்க, அதன் மேல் பெரிய பெரிய கற்களால் ஆகாயமளாவக் கட்டப்பட்டிருந்தது, கற்கள், ஒன்றில் ஒன்றாகப் பதிக்கப்பட்டுப் பின்னல் வரிசைகளாயிருந்தன, ஒரு சுவரைப் பெயர்த்தால்தான் ஒரு கல்லைப் பெயர்க்க முடியும். இவ்விதமாக, நான்கு பக்கங்களும், மிகுந்த பலத்தோடும் கூடி அமைக்கப்பட் டிருந்தன. ஆனால் பின் பக்கமாகிய ஐந்தாம் பக்கம் மாத்திரம் பலமற்றதாகவே இருந்தது. அந்தப் பக்கத்தில் மண் சுவர்தான் இருந்தது.
இந்த ரகஸியம் வெகு காலமாக ஒருவருக்கும் தெரியாமலிருந்தது. அந்தக் கோட்டையைப் பிடிக்க வந்த வீர ஸேனர்கள் எல்லாம் பலமான பக்கங்களைத் தாக்கி அபஜயமடைந்து போனார்கள். அதனால், அந்தக் கோட்டையின் கீர்த்தி உலகமெங்கும் பரவி விட்டது. இவ்வாறிருக்கும் காலத்தில் அந்தக் கோட்டைக்குள் – சிநேகமாய்ப் புகுந்த ஒரு அந்நியன் வெகு காலமாய் அங்கிருந்ததால் அந்தக் கோட்டையின் பலஹீனமான பக்கம் இன்னதென்று அறிந்து கொண்டான். பலமான நாலு பக்கங்களும் பலஹீனமான மண் சுவராலாகிய ஐந்தாம் பக்கத்தை மிக இழிவாக மதித்து, நடத்தி வந்தன. கல் சுவர்களுக்கும், மண் சுவருக்கும் பொருத்தமிருக்குமா?
அந்தக் கோட்டையைச் சுற்றி ஆழமான அகன்ற அகழி ஒன்று இருந்தது. ஆனால், பின் பக்கம் இருந்தது மண் சுவராகையால் அதையடுத்திருந்த அகழியின் பாகம் ஆழ மில்லாமல் மேடாயிருந்தது. அகழியின் ஜலம் சிறிது வற்றும் காலத்தில் மண் சுவர் பக்கம் தரை தெரியும்படி வற்றிப் போகும்.
இந்த மர்மங்களை யெல்லாம் அறிந்த அந்நியன் ஒரு சிறிய படை திரட்டிக்கொண்டு வந்து அகழி ஜலம் வற்றியிருந்த மண் சுவர்ப் பக்கம் இறங்கி அந்தச் சுவரைத் தாக்கி அதைக் கைவசப்படுத்திக் கொண்டு கோட்டையைப் பிடித்துக் கொண்டான்.
கோட்டையிலிருந்த அளவற்ற, நிகரற்ற செல்வங்களை யெல்லாம் தன் தேசத்திற்கு வாரிக்கொண்டு போனான்.
வீராதி வீரர்களுக்கும் கைவசப்படாத இந்தக் கோட்டையைப் பிடித்த. காரணத்தாலும், அதிலிருந்து வாரிக்கொண்டு போன செல்வத்தின் உடைமையாலும் அந்த அந்நிய ஜாதியார் உலகத்தில் தலையெடுத்துக் கீர்த்தி பெற்று வாழ்ந்தார்கள். உண்மையை அறியாத உலகோர்கள் கோட்டை முற்றிலுமே பலமற்றதாக இருக்க வேண்டுமென்றும் அல்லது அதைக் கைவசப்படுத்திக் கொண்ட அந்நியர் மகா வீரர்களாக இருக்க வேண்டுமென்றும் பேச ஆரம்பித்தார்கள். கோட்டைக்குள் இருந்தவர்களில் பலரும் அவ்வாறே மதி மயங்கிப் பிதற்றி வந்தார்கள்.
தெய்வானுகூலத்தால், கோட்டைக்கு உரியவர்களில் அநேகருக்குச் சுய அறிவு வந்து, பலஹீனம் இந்த இடத்தில்தான் இருக்கிறதென்று தெரிந்து கொண்டார்கள். உடனே அவர்கள் மண்சுவரைக் கற் சுவராய்க் கட்ட ஆரம்பித்தார்கள். அப்படிச் செய்ய வொட்டாமல் அவர்களைப் பலவித உபாயங்களாலும் அந்த அந்நியர்கள் தடுத்தார்கள். எனினும், அவர்கள் விடாமுயற்சியோடும், ஒற்றுமையோடும் வேலை செய்து வந்ததால் காரியசித்தி பெற்றார்கள். ஐந்து பக்கங்களும் பலப்பட்டு ஒரே கற்கோட்டையாய்ப் போகவே அது முன்னிலும் அதிகமாய் உறுதியடைந்து உலக முற்றிலும் அழிந்தாலல்லது அழியாத கோட்டையாகி விட்டது.
நண்பர்களே, இந்தக் கதையின் உட்பொருள் இன்னதென்று உங்களுக்குத் தெரியுமா? பாரத தேசத்தாராகிய நாம், அந்தப் பஞ்ச கோணக் கோட்டை யாவோம். கற்சுவர்கள் நாலும் மேலான ஜாதிகள். மண்சுவரே பஞ்சமர் என்ற ஐந்தாம் ஜாதியாம். கோட்டையைச் சூழ்ந்திருக்கும் அகழி சுதேசாபிமானம். பஞ்சமர்களை நாம் எவ்வளவு அநாதரவாகவும், கொடுமையாகவும் நடத்தி வருகிறோம்? மேல் குலத்தார் குடியிருக்கும் தெருக்களில் அவர்கள் குடியிருக்கக் கூடாதென்று தடுக்கிறோம். அவர்களைத் தொட்டாலே பாபம் வந்துவிடும் என்று விலகியோடிப் போகும்படி ஏவுகிறோம். விராட புருஷனுடைய அங்கமாகிய ஒரு வகுப்பாரை ஈன ஜாதியாரென்று நிராகரித்துத் தள்ளிவிடுதல் தர்மமாகுமா? ஒரே தேசத்தில் எத்தனையோ யுகங்களாய் வசித்து வரும் நமது சகோதரர்களாகிய பஞ்சமர்களை நாம் அவ்வாறு நடத்தி வந்தால் அவர்களுக்குச் சுதேசாபிமானம் எவ்வாறு ஏற்படும்? அந்நியர்கள் அவர்களை நாம் நடத்துவதைக் காட்டிலும் மேலாக நடத்தினால் அவர்கள் அந்த அந்நியர்களுக்கு வசப்பட்டுப் போகிறார்கள்.
கடவுள் எல்லோரையும் சமமாகவே சிருஷ்டித்தார். கடவுள் முன்னிலையில் ஜாதி வித்தியாசம் நிற்குமா? நல்வினைக்கு நற்பலனும் தீவினைக்குத் தீய பலனும் சித்தித்தல் அனாதியான பிரமாணம். பஞ்சமர்களை நாம் எவ்வாறு சகிக்க முடியாத கொடுமைக்கிடமாக நடத்தினோமோ அவ்வாறே நம்மையும் அந்நியர் நடத்திக்கொண்டு வருகிறார்கள்.
இனியேனும், நாம் பஞ்சமரை ஆதரித்து அவர்களுக்குக் கல்வி புகட்டிச் சுசீலமான வழக்கங்களை அவர்கள் அனுசரிக்கும்படிச் செய்து, அவர்களையும் நாகரிகத்தில் நமக்குச் சமமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து நாம் – எல்லோரும் ஒற்றுமைப் பட்டால், நம்மை வெல்ல வல்லவர்கள் இவ்வுலகத்தில் யாரேனும் இருப்பார்களா?
$$$