-கவியரசு கண்ணதாசன்

அந்தமான் தீவில் பணியாற்றும் இளைஞனும் பழங்குடியினப் பெண்ணும் அன்பால் இணைகிறார்கள். விதிவசத்தால் பிரிகிறார்கள். செய்யாத குற்றத்துக்கு அஞ்சி அங்கிருந்து தப்பி தமிழகம் வரும் இளைஞன், இங்கு ஒரு செல்வந்தரின் ஆதரவால் பணக்காரனாகி விடுகிறான். ஆயினும், தனது காதல் மனையாளின் நினைவிலேயே தனிமரமாக நிற்கிறான். இங்கே காதலியைப் பிரிந்து வாடும் நாயகன், அந்தமானிலோ, நாயகன் வருவான் எனக் காத்திருக்கும் காதலி. 25 ஆண்டுகள் கழித்து நாயகன் திரும்பவும் அந்தமான் செல்லும் வாய்ப்பு அவனது முதலாளியின் மகள் மூலமாகக் கிடைக்கிறது. அங்கு சென்று தனது முன்னாள் காதலியைத் தேடிக் கண்டடைகிறான். விதியின் விளையாட்டை இருவரும் உணர்கிறார்கள். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் அவள் சொல்லொனாக் கொடுமைகளைச் சந்தித்து மீண்டிருக்கிறாள். இவர்களது அன்பில் விளைந்த குழந்தை, தகப்பன் பெயர் தெரியாமல் வளர்ந்து, தந்தையை வெறுக்கும் இளைஞனாக நிற்கிறான். நாயகியின் மாமனோ, அவளது காதல் கணவனைக் கொல்லக் காத்திருக்கிறான். எனவே இருவரும் தங்களை வெளிப்படுத்த தயங்குகிறார்கள். இந்த விதியின் முடிச்சு எவ்வாறு அவிழ்கிறது? இதுவே அந்தமான் காதலி திரைப்படத்தின் கதை. இன்றைய 2கே கிட்ஸ் குழந்தைகளுக்கு இந்தக் கதையும், திரைப்படமும் நகைச்சுவையாகத் தெரியலாம். எனினும், படம் வெளிவந்த 1978-இல் தமிழகம் எங்கும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அன்று குழந்தையாகவும் இளமைப் பருவத்திலும் பார்த்த இதே படத்தை இப்போது பார்த்தால் மிகவும் நாடகத்தனமாகவும், நம்ப இயலாத காட்சிகளின் கோவையாகவும், செயற்கையாகவும் தான் இருக்கிறது. ஆனால்… ‘அந்தமான் காதலி’ படத்தின் பாடல்கள் அன்று முதல் இன்று வரை, செவிக்கு இதமாகவும் மனதைப் பக்குவப்படுத்தும் மருந்தாகவும் இருக்கின்றன. காதலியைப் பிரிந்து அவள் நினைவாகவே வாடும் நாயகன் அவளை தனது இதயத்திலிருந்து ஒருநாளும் அகற்றவில்லை. அதன் அடையாளமாகவே, “நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்” என்று கூறும் நாயகன், தனது காதலியை “திருக்கோயிலே ஓடி வா!” என்று அழைக்கிறான். எவ்வளவு இனிய உவமை! கவியரசரின் சிந்தையில் மலர்ந்த திரைக்கவிதை இன்று மட்டுமல்ல, என்றும் மணம் வீசும். வாழ்வின் வசந்தகாலம் முடிந்த நரைப்பருவத்தில், இளமை நலிந்து முதுமை நெருங்கும் வாழ்வின் மத்திமக் கட்டத்தில், அன்பில் பிணைந்த இணைகள் இருவரும் எத்துணை இயல்பாக விதியின் போக்கை எதிர்கொள்கிறார்கள்! இந்த அற்புதமான திரைப்பாடலே, இப்படத்தை இனிய திரைப்படம் ஆக்கிவிடுகிறது.
ஆண்:
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்….
திருக்கோவிலே ஓடி வா…ஆ…ஆ..ஆ
திருக்கோவிலே ஓடி வா!
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்….
திருக்கோவிலே ஓடி வா…ஆ…ஆ..ஆ
திருக்கோவிலே ஓடி வா!
நீரின்றி ஆறில்லை, நீயின்றி நானில்லை!
நீரின்றி ஆறில்லை, நீயின்றி நானில்லை!
வேரின்றி மலரே ஏதம்மா?
வேரின்றி மலரே ஏதம்மா?
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்….
திருக்கோவிலே ஓடி வா!
பெண்:
ஐயா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்!
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்!
ஐயா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்!
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்!
கண்ணீரிலே நான் தீட்டினேன்,
கன்னத்தில் கோலங்கள்….
கன்னத்தில் கோலங்கள்!
ஆண்:
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்,
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்,
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்!
திருக்கோவிலே ஓடி வா!
பெண்:
ஆ…ஆ..ஆ… திருக்கோவிலே ஓடி வா!
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!
ஆண்:
முல்லைக்குக் குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ!
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ!
முல்லைக்குக் குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ!
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ!
அதிகாலையில்…. நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்!
பெண்:
என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி,
என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி,
செவ்வானம் ஆனேன்
உனைத் தேடித் தேடி!
திருக்கோவிலே ஓடி வா!
ஆண்:
ஆ…ஆ..ஆ..திருக்கோவிலே ஓடிவா!
நினைவாலே சிலை செய்து,
உனக்காக வைத்தேன்….
திருக்கோவிலே ஓடி வா!
இருவரும்:
ஆ…ஆ..ஆ..திருக்கோவிலே ஓடி வா!
படம்: அந்தமான் காதலி (1978) இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் குரல்: கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம் நடிப்பு: சிவாஜி கணேசன், சுஜாதா
பாடலின் திரைவடிவம்:
$$$