அகமும் புறமும் – 6இ

-பேரா.அ.ச.ஞானசம்பந்தன்

பழந்தமிழ் மன்னர்கள் புகழுக்காக போர் தொடுப்பதை ஒரு கடமையாகவே கொண்டிருந்தனர். அவர்களது புகழாசையால் தமிழ்நாட்டில் தமிழர்தம் குருதியே ஆறாய்ப் பாய்ந்தது என்பதைச் சுட்டிக்காட்டும், பேரா. அ.ச.ஞானசமபந்தன், போரால் அடையும் புகழை விட, வள்ளன்மையால் அடையும் புகழே மிகச் சிறப்பானது என்று இந்த அத்தியாயத்தில் நிறுவுகிறார். கரிகால்பெருவளத்தானை விட வள்ளல் பாரியே புகழ் மிக்கோங்கியவர் என்பது இவர்தம் தீர்ப்பு.

புறம்

6. தமிழர் கண்ட அரசன் – இ

ஆட்சியாளர் கவனிக்க வேண்டுவன

ஆட்சியாளர் அன்றும், இன்றும் நாட்டுக்கு எவ்வாறு நன்மை புரிந்தனர், புரிகின்றனர்? பொதுமக்கள் தருகின்ற இறைப்பணத்தை (வரி) வைத்துத் தானே ஆட்சி நடைபெறுகிறது? இன்றும் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தின் தலையாய கடமைகளுள் ஒன்று அன்றோ? எவ்வாறு புதிய வரிகளை விதித்துப் பணம் சேகரிக்கலாம் என ஆட்சியாளரும், எவ்வாறு வரிச்சுமையைக் குறைக்கலாம் எனப் பொதுமக்களும் சிந்தித்தல் இயற்கை. புதிய வரிகளை விதித்தலில் எந்த அளவைக் கொள்வது என்பது பற்றி எந்த அரசினும் முடிந்த முடிபாக இதுவரை ஒன்றும் கூறப்படவில்லை. கொடுப்போருடைய வன்மை தான் வரி விதிப்போருக்கு அளவாக அமைதல் வேண்டுமே தவிர, அரசியலாருக்கு ஏற்படும் செலவு அளவாக அமைதல் கூடாது. இக்கருத்து இன்றும் சிறந்த அரசியல்வாதிகள் அனைவரும் ஒத்துக் கொள்கிற கொள்கையாகும். இக்கருத்தை பிசிராந்தையார் என்ற புலவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் அழகிய ஓர் உதாரணத்துடன் விளக்கினார்.

 ‘யானை பெருந்தீனி தின்னும் பிராணி. ஆனாலும் சிறிய மா அளவுள்ள நிலத்தில் விளையும் நெல்லை அறுத்து அரிசியாக்கித் தந்தால், பெரிய யானைக்குக்கூட அது பல நாட்கட்கு ஆகும். அவ்வாறு செய்யாமல், யானை தானே சென்று தின்னட்டும் என்று அவிழ்த்து விட்டுவிட்டால், நூறு ஏக்கர் நிலமாயினும் வாயில் புகுவதைக் காட்டிலும் காலில்பட்டு அழிவது மிகுதி. எனவே, அறிவுடை வேந்தன் முறைதெரிந்து இறைப் பணத்தை வசூலித்தால், பல காலம் அவனும் மக்களும் இன்பமாக வாழ முடியும். அரசன் அறிவற்றவனாகித் தீயவர்களை நட்புக்கொண்டு செலவை முன்னிட்டு வரியைப் பெற்றால், யானை புகுந்த வயலைப் போல நாட்டையுங் கெடுத்துத் தானும் கெடுவான்’ என்ற கருத்தில் அவர் பாடுகிறார்:

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்கு ஆகும்
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிதும் நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்என் கற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான்; உலகமும் கெடுமே. 

   (புறம்-184)

(காய்நெல்- விளைந்த நெல்; கவளம்- யானைக்குத் தரும் சோற்று உருண்டை; மா-ஒரு சென்ட் போன்ற நில அளவு; செறு- ஏக்கர் போன்ற அளவு; நந்தும்- பெருகும்; வைகல்- தினந்தோறும்; கல்என் சுற்றம்- ஆரவாரக் கூட்டம்; பரிவு தப- அன்பு கெடும்படி, பிண்டம்- பொருள் தொகுதி; நச்சின்- விரும்பினால்)

தமிழ் நாட்டகலம்

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும்’

இந்நல் உலகத்தைப் பண்டு தொட்டு ஆண்டவர் மூவேந்தர் எனப்படுவர். சேர, சோழ, பாண்டியர் என்று கூறப்பெறும் இவர்களைப் பற்றிப் பண்டை இலக்கியங்கள் பரக்கப் பேசுகின்றன. இம்மூவரும் சேர்ந்து ஆட்சிபுரிந்த இடத்தின் பரப்புத்தான் யாது என்று நினைக்கிறீர்கள்? வடக்கே வேங்கடமலை (இப்பொழுது திருப்பதி என்று கூறும் மலையே) தெற்கே கன்னியாகுமரி, மேற்கும் கிழக்கும் கடல்கள், வடக்கிலிருந்து தெற்கே ஏறக்குறைய 500 மைல்கள், கிழக்கிலிருந்து மேற்கே அகன்ற விடத்தில் 400 மைல், குறுகிய இடத்தில் சில அடிகள் (குமரி முனையில்) இந்த அளவு குறுகிய நிலத்தை ஆட்சி செய்தவர் மூவர்.

‘மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசு முழங்குதானை மூவர்’ 

   (புறம். 35)

என்ற புறப்பாடல் இதற்குச் சான்று. இந்த அளவுடைய நாட்டை மூவர் ஆட்சி செய்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் தந்தமைக் கூறிக்கொள்ளும் பொழுது பேரரசர்களாகவே (சக்கரவர்த்திகள்) கூறிக் கொண்டனர். அவ்வரசர்கள் ஒரோவழி அதை மறந்திருப்பினும், உழை இருப்போர் அவர்கட்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தனர். மேலே கூறப்பெற்ற பாடலின் அடுத்த அடியே போதுமானது. சோழன் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை வெள்ளனக்குடி நாகனார்  என்ற புலவர் பாடிய பாடம் அது.

‘முரசு முழங்கு தானை மூவருள்ளும்
அரசெனப் படுவது நினதே பெரும்!’ 

  (புறம்.-35)

என்று கூறிய புலவர் பெருமான் இன்னும் ஒரு படி மேலே சென்று,

 ‘நாடு எனப்படுவது நினதே’ 

  (புறம்-35)

என்றும் கூறிவிடுகிறார். தமிழ்நாட்டை மூவர் ஆட்சி செய்தாலும்,  ‘அரசன்’ என்று கூறினால் சோழனைத்தான் குறிக்குமாம்! நாடு என்று கூறினால் சோழநாட்டைத்தான் குறிக்குமாம்.!

சக்கரவர்த்திகள்

இன்னுஞ் சில சந்தருப்பங்களில் அவர்கள் ஆளும் பகுதிகளை  ‘உலகம்’ என்றுகூடக் குறிப்பிட்டனர்.  ‘பிரமனார்’ என்ற புலவர்.

‘பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்’ 

  (புறம்-357)

என்று கூறிய அடிகள் ஆழ்ந்து நோக்கற்குரியவை. உலகம் என்ற சொல்லால் நாட்டின் ஒரு பகுதியைச் சுட்டிக் கூறுதல் அக்கால மரபுதான்.

‘மாயோன் மேய காடுறை உலகமும்’ 

  (அகத்திணை, 5)

என்று தொல்காப்பியம் கூறுகிறது. என்றாலும் ‘மூவர் உலகம்’ என்று புறப்பாடல் புலவர் கூறும்பொழுது, அவர் இவர்களுடைய நாட்டின் பரப்பை ஓரளவு மிகுதிப்படுத்தியே கூறுகிறார் என்பது விளங்கும். ஒவ்வொரு சந்தருப்பத்தில் இம்மூவருள் வலிமை பெற்ற ஒருவன் ஏனைய இருவரையும் அடக்கி ஆளுதலும் உண்டு. இன்னும் கூறப்போனால் இவர்களுள் ஒவ்வொருவனும் ஏனையோரை அடிப்படுத்தலையே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தனன். புறநானூற்றில் 357-ஆம் பாடலில் ‘பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்’ என்று கூறுவது இவ்வாறு ஒரோவழி ஏனைய இருவரையும் வெற்றி கண்ட ஒருவனையே குறிக்கிறது.

தமிழருக்குள் அடிதடி

கரிகாற்பெருவளத்தான் போன்ற ஒரு சிலர் தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டிச் சென்று, பிறநாடுகளிலும் வெற்றி கண்டார்களாயினும், பெரும்பான்மையான தமிழ் மன்னர்கள் வெற்றி கண்டது பிற தமிழ் மன்னர்களையேயாம். தமிழனை மற்றொரு தமிழன் போரிட்டுத் தொலைப்பதைப் பெரு வெற்றியாகக் கொண்டாடி மகிழ்ந்தனர், அந்நாளில் பெரும்பான்மையான தமிழர். சில சந்தருப்பங்களில் இவர்களுடைய போர் அவ்வளவில் நின்றுவிடாமல், யாதொரு தீங்கும் புரியாத மக்களையும் வருத்தத் தொடங்கிற்று. வெல்லப்பட்டவர் நாட்டை (தமிழ்நாட்டின் மற்றொரு பகுதிதான்) அழித்து, நெருப்பூட்டல் ஒரு வழக்கம்.

“கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந்தண் பணை பாழாக
ஏம நல்நாடு ஒள்எரி ஊட்டினை”. 

  (புறம்-16)

[கரும்பு விளையும் விளைநிலங்களை எல்லாம் நெருப்பூட்டினாய்]

என வரும் அடிகள் நம் சிந்தனையைக் கிளறாமல் இருக்க முடியாது. இவ்வாறு இவர்கள் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடும் பொழுதுகூட தோற்றவரைப் பற்றி நினைத்ததில்லையா? அவர்களும் தம்மைப் போன்ற மொழி பேசும் ஒரே நாகரிகம் உடையவர் என்ற எண்ணம் இவ்வெற்றி வீரர்கட்கும் தோன்றி இராதா? போரில்லாத நாட்கள் மிகவும் குறைவு என்று கூறத்தக்க முறையில் இவர்கள் வாழ்ந்துள்ளனர். இப்பெரு மன்னர்கள் ஒரோவழி வாளாவிருந்தாலும், இவர்கட்குக் கீழ் வாழ்ந்த சிற்றரசர்கள் வாளாவிருப்பதில்லை. இவ்வாறு போரிட்டு மடியக் காரணம் யாது? படை வைத்திருந்தமையின் வாளாவிருக்க முடியாமல் ஓயாது போரிட்டனாரா?

போரிடக் காரணம்

புறப்பாடல்களை ஒரு முறை புரட்டினவருங்கூட ஓர் உண்மையை அறியாமல் இருத்தல் இயலாது. ஏனைய எத்துணைக் காரணங்கள் இருப்பினும், இவர்கள் ஓயாமல் பூசலிட்டதற்குத் தலையாய ஒரு காரணம் காணப்படுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் காணப்பெறும் இரண்டு உணர்ச்சிகளே இதன் காரணம் என்று நினைய வேண்டி உளது. இயற்கையாகத் தோன்றும் வெறுப்பு உணர்ச்சி ஒன்று; ஏனையது புகழ் ஈட்ட வேண்டும் என்று தோன்றும் உணர்ச்சி. இவை இரண்டும் கூடினவிடத்து விளைவது போரேயன்றி வேறு யாதாக இருத்தல் இயலும்?

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே 

  (புறம். 165)

[நிலைபேறில்லாத இந்த உலகில் புகழை நிலைநாட்டிப் பலர் மாய்ந்தனர்]

புகழ்ப் பைத்தியம்

இத்தமிழருடைய புகழ்ப் பைத்தியம் மிகவும் ஆழமாய் இருந்ததென்பதைக் காட்ட நூற்றுக்கணக்கான உதாரணங்கள் தரவியலும்.

தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. 

  (குறள்-238)

என்று குறளாசிரியர் கட்டளை இடுமுன்பே இம்மக்கள் தம் வாணாளில் பெற வேண்டிய ஒரு குறிக்கோளாக இதனைக் கொண்டிருந்தனர் என்பதை நன்கு அறிய முடிகிறது. இலக்கணம் இதற்குப் பெரியதோர் இடந்தந்து,  ‘பாடாண்திணை’ என்றதொரு திணையையே வகுத்து விட்டது.

புகழடைய வழி

மனிதனாய்ப் பிறந்தவன் புகழ் ஈட்டியே தீரவேண்டும் என்றால், அதற்குரிய வழிகள் யாவை என்று கேட்கத் தோன்றுகிறதன்றோ? வழிகள் பலவாக இருக்கலாம். எந்த வழியை மேற்கொண்டால் புகழ் பேசுகிறவர்கள் எளிமையாகப் புகழ்வார்கள்? அந்த வழியே சிறந்த வழி என்று நினைத்திருத்தல் கூடும் அக்கால மக்கள். மேலும், புகழ் ஈட்டும் வழி மூலமாகவே தம்முடைய மனக் கருத்தையும் முற்றுப் பெறச் செய்யக் கூடுமாயின், அது மிகவும் நலமானதாகப் பட்டிருக்கும். இயற்கையாக மனத்தில் தோன்றும் வெறுப்புணர்ச்சிக்கு வடிவு கொடுப்பதன் மூலம் இரண்டு பயன்கள் கிட்டுகின்றன. முதலாவது, யாரை வெறுக்கிறோமோ அவர் மேல் போர் தொடுத்து வெற்றி காண முடிகிறது. இரண்டாவது, அவ்வாறு பெறும் வெற்றியே பிறர் புகழவும் காரணமாகிறது. இவ்வாறு இரண்டு வழிகளிற் பயன் பெறக் கூடுமாயின், வன்மை மிக்க அரசர்கள் போர் என்ற வழியை மேற்கொண்டதில் வியப்பிருத்தல் இயலாது. மேலும், அந்த அரசர்கள் புரியும் இந்தப் போர்களைத் தம்முடைய நாட்டு மக்களின் நலத்திற்காகவே செய்ததாகவும் கூறினர்; அம்மக்களும் இதனை நம்பினர்.

வெற்றி வெறி

பிறருடைய நாட்டின் மேல் போர் தொடுத்துச் செல்லுதல் அரசர்க்குரிய அறமாகவும் போற்றிக் கூறப் பெற்றது. தற்காப்புச் செய்யுமுறையில் போரிடுதல் அன்றியும், பிறர்மேல் படைகொண்டு வலுப் போருக்குப் போதலும் அறமெனவே கருதப்பெற்றது. புகழ் வேட்டையாடப் பிறருடைய நலத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் போரிடுதலை ஒரு வாய்ப்பாகக் கொண்டனர் அற்றை நாள் தமிழர். எவ்வளவு பெரிய அரசனும் இதற்கு விலக்காமாறு இல்லை. மேலும், ஓரிரண்டு போர்களில் வெற்றி கண்டு விட்டால், அது குடிப்பழக்கம் போல ஆகிவிடும். அவ்வெற்றி தந்த வெறி, மேலும் மேலும் போர்செய்யத் தூண்டும். தாம் இவ்வாறு போர் செய்து அதனால் பெறுவதாகக் கருதிய புகழ் உண்மையானதா என்று ஆராயக்கூட அவர்கள் முற்படவில்லை.

வாழ்வின் குறிக்கோள் போரன்று

அரசராய்த் தாம் பிறந்ததே போர் செய்யத்தான் என்று கூடப் பலர் கருதிவிட்டனர். இத்தகைய ஒரு நிலையில் அறிவுடைப் பெருமக்கள் சிலர் மனத்திலாதல் ஓர் ஐயம் தோன்றியிருத்தல் வேண்டும். கேவலம் போரிடுதல் ஒன்று தானா புகழை வளர்க்கும்? இது தவிர இவ்வரசர் பெருமக்கள் செய்யத்தக்க நற்செயல்கள் வேறு இல்லையா? இவ்வாறு சிலர் தம்மைத்தாமே கேட்டுக்கொண்டு பெற்ற விடைகளும் புறப்பாடல் முதலியவற்றில் காணக்கிடக் கின்றன.  மாங்குடி மருதனார் என்ற புலவர் தம்முடைய அரசனுக்குண்டான போர் வெறியைத் தணிக்க ‘மதுரைக் காஞ்சி’ என்றதொரு நூலையே (எவ்வளவு பெரிய பாடல் அது!) இயற்றினார் என்றால், பழந்தமிழர் போர் வெறி என்ற பாலைவனத்தில் இது ஒரு நீர் ஊற்றுப் போன்று காணப்படுகிறது. 782 அடிகளையுடைய அப்பாடலில், அப் புலவர், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு நல்லதோர் அறிவுரை வழங்குகிறார்.

பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந்து ஏத்த
விலங்குஇழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும!
வரைந்துநீ பெற்ற நல்ஊ ழியையே 

  (மதுரைக்காஞ்சி, 778-82)

(உனக்கிருக்கும் வாழ்நாள் ஓரளவுடையதாதலின், நல்ல முறையில் உண்டு உடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக).

இப்புலவரே இம்மன்னனையே பாடும் புறப்பாட்டு ஒன்றில் இன்னும் ஒருபடி மேலே செல்கிறார்.

ஒண்தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப...... 

   (புறம்-24)

இவ்வாறு இன்புற்று வாழ்வதே வாழ்க்கை எனப்படும் என்று அவர் கூறும் பொழுதுதான், இவ்வாறு செய்யாதவர்களுடைய வாழ்வு எவ்வளவு பயனற்றது என்பதையும் அறிய முடிகிறது.

ஏனைய வழியால் பெரும் புகழ்

போர் செய்தலையே தம் வாணாளின் குறிக்கோளாகக் கொண்ட இம்மன்னர்கள் புகழடைவதற்கு மேற்கொண்ட வழி சற்று விந்தையானதே! இதனைக் காட்டிலும் வேறு வழியில் வாழ்வதால் நல்லதொரு புகழை அடைய முடியும் என இவர்கள் ஏனோ நினைக்கவில்லை! ஆனால், இப்பேரரசர்கள் வாழ்ந்த அதே காலத்தில் சில சிற்றரசர்களும் வாழ்ந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் மேற்கொண்ட குறிக்கோள் முற்றிலும் வேறானதாகக் காணப்படுகிறது. கடைஏழு வள்ளல்களைப் பற்றியும் இப்புறப்பாடல் முதலியன பேசுகின்றன. அவர்களும் புகழ் படைத்தவர்களாகவே உள்ளனர். என்றாலும் என்ன வேற்றுமை? புகழ் என்ற ஒன்றை அடைய முற்றிலும் வேறுபட்ட இரு வழிகளைக் கையாண்டுள்ளனர். யாருடைய வழி சிறந்தது?

போர் வெறி கொண்டு, நாட்டிற்கு நன்மை என்ற பெயரால் தமிழர்களுடைய குருதியைத் தமிழ் மண்ணில் ஆறாகப் பெருகவிட்டுத் தம்முடைய மக்களும் தோற்ற மக்களும் ஒருசேர அவதிப் படச் செய்த இப்போர் வெறியர்களும் புகழடைந்து விட்டதாகச் செருக்குற்றிருந்தனர். இவர்கள் செருக்கை வளர்க்கத் தமிழ் புலவர்களும் காரணர்களாய் இருந்தனர். குறுநில மன்னர்கள் எழுவரை ஒரே நாளில் வென்றுவிட்டான் என்பதற்காகத் தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியனை எத்தனை புலவர்கள் புகழ்ந்துள்ளனர்! அதுவும் அளவுமீறிப் புகழ்ந்துள்ளனர். நன்கு ஆராய்ந்து பார்த்தால், இதனை மிகப் பெரிய வெற்றிகளுள் ஒன்று என்றுகூடக் கூறவியலாது. தம்முடைய நாட்டைவிட்டுப் பன்னூறு மைல்கள் கடந்து சென்று வேற்று நாட்டில் போர்கள் புரிந்து வெற்றி பெற்ற செங்கிஸ்கான், அலெக்ஸாந்தர் முதலானோருடன் ஒப்பு நோக்கினால் நெடுஞ்செழியன், கரிகாலன் போன்றார்கள் வெற்றி மிகச் சிறியதாகிவிடக் காண்கிறோம். ஆனால், அலெக்ஸாந்தர் கிரேக்கர்களுடனும், செங்கிஸ்கான் மங்கோலியருடனும் போரிடவில்லை. நெடுஞ்செழியனோ என்னில், தமிழருடன் போரிட்டான். வென்றவனும் தமிழன்; தோற்றவனும் தமிழன். இவ்வெற்றியை என்னவென்று பாராட்டுவது? இவ்வெற்றியால் புகழடைந்ததாகக் கருதிய மன்னரும் நம் இரக்கத்திற்கு உரியர். புகழுக்குரிய ஒரு செயலைச் செய்துவிட்டான் அம்மன்னன் என்று கருதி அவன்மேல் பாடாண்திணைப் பாடல்கள் பாடிய புலவர்களும் நம் இரக்கத்திற்கு உரியவரேயாவர்.

இவ்வெற்றிகளால் பெறுவது இன்பமாயினும், புகழாயினும் அவை விரும்பத் தக்கனவல்ல. இவ்வுண்மையை தமிழர் நன்கு அறிந்திருந்துங்கூட போரால், வெற்றியால் இன்பங்காண முயன்றனர். அதனால் பெற்ற புகழையும், அப்புகழ் நிலையற்றதாயினும், விரும்பினார்கள். போர் செய்தலாகிய முறையை மேற்கொண்டு புகழடைய முயன்ற இவர்களினும் வேறுபட்ட முறையைக் கையாண்டு புகழீட்டியவர்களும் உண்டு. பிறருக்குத் தீங்கு புரிவதைக் கனவிலும் கருதாதவர்களாய் வாழ்ந்த அவ் வள்ளல்களும் புகழ் பெற்றனர். அறிவின் துணைகொண்டு புகழ் தேட முயன்ற இப்போர் வெறியர்கள் எங்கே, உணர்வின் துணைகொண்டு கொடை என்ற சிறப்பால் புகழ் படைத்த வள்ளல்கள் எங்கே! இவ்விரு சாராரும் பெற்றது ஒரே புகழ்தான் என்றாலும், இருவர் கையாண்ட வழிகள் எவ்வளவு மாறானவை! அடையும் பயன் ஒன்றே யாயினும், மேற்கொள்ளும் வழி வேறுபாட்டால் இருவரும் இரு வேறு துருவங்கட்குச் சென்றுவிட்டனர்.

புகழடைய இருவழிகள்

அறிவு வழி மேற்கொண்ட இவர்கள் புகழ் சிறந்ததா, அன்றி, அன்பு வழி மேற்கொண்ட அவர்கள் புகழ் சிறந்ததா? அறிவு அறிவு என்று கூவி அறிவிற்கு வணக்கம் செலுத்தும் இக்காலத் தமிழ்நாடு, ஒருவேளை இப்போர் வெறியர்களைப் பாராட்ட முன் வரலாம். ஆனால், உண்மையில் இவர்கள் புகழ் நிலை நின்றதா? இது நன்கு ஆராயற்பாலது. அன்பு வழி மேற்கொண்டு புகழ் படைத்தார் பற்றி அடுத்துக் காண்போம்.

எவ்வழி சிறந்தது?

அறிவு வழியை மேற்கொண்டு படைதிரட்டித்  ‘தன் வலியும் துணைவலியும் மாற்றான் வலியும் இருள் தீர எண்ணிப்’ போர் மேற்கொண்டு வெற்றி பெற்றுப் புகழடைந்தவர்கள் பற்றியும் கண்டோம், புகழ் தேட வேண்டும் என்ற தலையாய விருப்பும், உள்ளே தோன்றும் வெறுப்புணர்ச்சிக்கு வடிவு கொடுக்கும் முயற்சியும் சேர்ந்து போராக வெளிப்பட்டன என்றும் கண்டோம். இவ்வரசர்கள் வாழ்ந்து இன்று இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு கூட இவர்கள் செய்கை போற்றத்தக்கது என்று ஒரு தலையாகக் கூறக் கூடவில்லை.

அகங்காரமும் மமகாரமும்

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் ஆணவமும் மமகாரமும் இயற்கையாக அமைந்துவிடுகின்றன. பல சந்தர்ப்பங்களில் வேறு வழியாற் கூறினவிடத்தும் ஏற்றுக் கொள்ளாதவர்களை மடக்க இது பயன்படுகிகிறது.  ‘இத்துணைப் பெரியவனான நீ இந்தக் காரியம் செய்ய லாமா’ என்று கேட்டால் சிலர் திருந்திவிடக் காண்கிறோம். எனவே, ஒவ்வொருவனும் தன்னைப் பற்றி ஒரு மதிப்பைத் தானே வகுத்துக்கொண்டுள்ளான் என்பது தெரிகிறது.

தான் செய்யும் காரியம் தன் மதிப்புக்கு ஏலாதது என்பதை ஒருவர் எடுத்துக்காட்டியவுடன் அச் செயல் செய்வதிலிருந்து விலகி விடுகிறான். இதிலிருந்து ஒன்றை அறிய முடிகிறது. மனிதனிடத்து அமைந்து கிடக்கும்  ‘அகங்காரம்’ எனப்படும்  ‘யான்’ என்பதையோ  ‘மமகாரம்’ எனப்படும்  ‘எனது’ என்பதையோ தொட்டு விட்டால், அவன் துள்ளி எழுகிறான். உறங்கிக் கிடக்கும் ஒருவனைத் தொழிற்படுத்த வேண்டுமாயின், இவற்றைத் தூண்டி விடுவது சிறந்த வழி என்றே படுகிறது.

தூண்டிலில் இரை

‘யான், எனது’ என்பனவற்றைத் தூண்டுவதன் மூலம் ஒருவனை நல்லது செய்யவும் தூண்டலாம்; அல்லது தீயவை செய்யவும் செலுத்தலாம். இவை இரண்டும் தூண்டுபவன் மன நிலையைப் பொறுத்தவை. பழந்தமிழ் அரசர்களின் புகழ் விருப்பம் இவ்வகங்காரத்திலிருந்து அரும்பினதே யாகும். அவன் புகழைப் பாடினவர்கள் ஒரு வகையில் அம்மன்னனுடைய  ‘யானுக்கு’ இரை இட்டனர்.  ‘யான்’’ என்ற மீனுக்குப்  ‘புகழ்’ என்னும் இரையைக் காட்டிலும் சிறந்தது ஒன்றில்லை. அதிலும்  ‘கவிதை’ என்னும் தூண்டிலிற்கோத்த  ‘புகழ்’ என்னும் இரையைக் கண்டு மயங்காத மனிதர்களே மிக மிகக் குறைவாவர். பழந்தமிழ் மன்னர்களில் பெரும்பான்மையானவர்  ‘மனிதர்’களே. எனவே அவர்கள் இத்தூண்டிலில் சிக்குண்டதில் வியப்பில்லை. இது கருதியே போலும் வள்ளுவப் பெருந்தகை  ‘புகழ்’ என்ற அதிகாரத்தை இல்லறவியலின் இறுதி அதிகாரமாக வைத்துப் போனார்!

மேலே கூறப்பட்ட முறையில் அறத்தைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று கூறிய ஆசிரியர், மக்கள் இனத்தை மறுமுறையும் கூர்ந்து நோக்குகிறார். ஒரு சிலர் பயன் என்ற ஒன்றைக் கண்டால் ஒழிய நன்னெறி ஒழுக மாட்டார்கள். ஆனால், பயன் என்பது இம்மையில் அன்றி மறுமையில்தான் கிடைக்குமெனின்,  ‘அது கிடக்கட்டும்’ என்று கூறுகிறவர்களும் இம்மக்கள் தொகுப்பில் உளராகலின், அவர்கள் பொருட்டாகவே  ‘புகழை’ இறுதி அதிகாரமாக வைத்தார் போலும்! இந்தத் தூண்டில் பொன் முள்ளாகலின் இல்லறத்தார்க்கே உரியது என்பார் போல இல்லறவியலின் இறுதி அதிகாரமாக வைத்து உள்ளார். துறவு நெறி செல்பவர் இப்புகழ் என்னும் வலையில் பட்டால் மீள்வது அரிதன்றோ?

‘யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்’ 

  (குறள்-346)

என்று கூறிய பிறகு துறவிக்குப் புகழ்மேல் ஆசை இருத்தல் முறையன்று. எனவே, துறவறத்தில் இவ்வதிகாரத்தை வள்ளுவர் வைக்கவில்லை.

புகழ் தேட வழி

இல்லறவியலில்  ‘புகழ்’ அதிகாரத்தை வைக்கும் பொழுது ஆசிரியர் மிகுந்த கவனத்துடன் வைத்துள்ளார் என்பதை முன் பின் பார்த்தால் நன்கு விளங்கும். ஈகை என்ற அதிகாரத்தின் பின்னர் இவ்வதிகாரம் அமைந்துள்ளது நோக்கற்குரியது. அதனை ஒருவேளை மக்கள் கவனியாமல் விட்டு விடுவார்களோ என்று அஞ்சிப் போலும் ஆசிரியர் புகழ் அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களில் முதல் இரண்டு குறள்களிலும் ஈகை உடையானுக்கே புகழ் உண்டு என நினைவூட்டுகிறார்! புகழ் தேட வேண்டும் எனினும் அதற்குப் போரைக் கருவியாகக் கொள்வதை வள்ளுவர் விரும்பியிருக்க மாட்டார். பிறர்க்குத் தீமை புரிந்து அதனால் புகழ் வருவதாயின் அதனைப் புகழ் என்றுகூற ஒருப்பட மாட்டார்,

‘மறந்தும் பிறன்கேடு சூழற்க’ 

  (குறள்-204)

என்று கூறிய பெரியார்.

பிழை எங்கே?

வள்ளுவர் கருத்து இதுவாயின் பிழை எங்கே நேர்ந்தது? பழந்தமிழ் மன்னர்கள் ஏன் போரைக் கருவியாகக் கொண்டனர்? அறிவை அதிகம் நம்பியதால் ஏற்பட்ட பயன்தான் அது. ஓயாது பிறரைப் பற்றியும் அவருடைய வலிமை பற்றியும் எண்ணிக்கொண்டிருந்த அம்மன்னர்கள் இப்பிழை செய்வது எளிய காரியம். அதிலும் மன்னராய்ப் பிறந்த தாங்கள் செய்வன அனைத்தும் சிறந்தவை என்ற எண்ணமும் உடன் தோன்றி விட்டால் பிறகு கேட்கவும் வேண்டுமா? பெற்ற பயன் இதுதான்.

அறிவாராய்ச்சியும் பயனும்

இந்தப் பாலைவன வாழ்வில் வேறு கருத்துடையவர்களே இருந்ததில்லையா? இல்லாமல் இல்லை. ஆனால், அறிவும் உணர்வும் வளர்க்கப்பட வேண்டிய இவ்வுலகில் அறிவின் துணைகொண்ட இவ்வரசர்கள் கூட்டம் மிகுதி. ஆனால், உணர்வின் துணைகொண்ட மன்னர்கள் கூட்டம் சற்றுக் குறைவு. அறிவைத் துணைக்கொண்டு உலகை நோக்கும்பொழுது, உலகம் வழங்குகின்ற காட்சியே வேறு; உணர்ச்சியைத் துணைகொண்டு காணும் பொழுது கிடைக்கும் காட்சியே வேறு; அறிவால் ஆராய்ந்த மன்னன் முதலிற் கண்டது தன்னையும், தன் பெருமையையும் ஆம். அடுத்துக் கண்டது தன்னைப் போன்ற மன்னர்களையும், குடிமக்களையும். ஆனால், அறிவுக்காட்சி அம்மட்டோடு நிற்கவில்லை. அந்த அரசர்களைத் தன்னுடன் ஒப்புமை செய்து பார்த்து அவர்களுடைய வன்மைக் குறைவை எடுத்துக்காட்டிற்று. தன் அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் கூறிற்று. வந்த வாய்ப்பை விடாமல் பயன்படுத்த வேண்டும் என்று சுட்டிக் காட்டிற்று. பிறருடன் தன்னை எடை போடத் தொடங்கியவுடன் எவ்வாறாயினும் அவர்களினும் தான் மேம்பட்டவன் என்று பிறர் கூற வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. தான் ஆளும் இந்த நிலம்  ‘பிற மன்னர்கட்கும் பொது’ என்ற சொல்லைப் பொறுக்காத ஒரு நிலை வந்துற்றது.

‘வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறா அது
இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்ப’ 

  (புறம்-8)

[பிற அரசர் புகழும்படி இன்பத்தை விரும்பிய வாழ்வை நடத்தாமல், இந்த உலகம் பிற மன்னருக்கும் பொது என்று பிறர் சொல்லும் சொல்லைப் பொறுக்காமல்.]

அறிவால் ஆராய்ந்த பொழுது பெற்ற பயன் இதுவாகும்.

உணர்வு வழி வாழ்வு

உணர்ச்சியால் ஆண்ட பெருமக்களுள் தலையாயவன் பாரி வள்ளல். அறிவை அடக்கிக்கூட உணர்ச்சிக்கு இடந் தந்த பெருமை அப்பெருமகனுக்கே உண்டு.  ‘இவ்வளவு தூரம் அறிவை இழந்து உணர்ச்சி வசப்படலாமா?’ அதுவும் மன்னனாகிய அவன் இவ்வாறு செய்யலாமா? என்றுகூடக் கேட்கப்படலாம். உணர்வை இழந்து, அன்பை இழந்து, தம்மொடு பொருது மடிகிறவரும் தம்மைப் போன்ற தமிழர் என்பதை மறந்து, தமிழ் மண்ணில் தமிழ்க் குருதியைப் பரவவிட்ட நூற்றுக் கணக்கான தமிழ் மன்னர், உணர்ச்சியை விட்டு அறிவின் துணை கொண்டனர். அவர்கள் எதிரில் பாரியும் பாரி போன்ற ஒருசிலரும் அறிவைவிட்டு உணர்ச்சியைப் பெருக்கி வாழ்ந்தது தவறா?  ‘உடையுடுத்தாத ஊரில் உடையுடுத்தவன் பைத்தியக்காரன்’ என்பது முதுமொழி. அவ்வாறு கூறுவது சரிதான் என்று கூறும், அறிவுவாதிகள் வேண்டுமானால் பாரியைத் தவறு கூறட்டும். மற்றவர் அனைவரும் பாரியைப் போற்றத்தான் செய்தனர்; செய்கின்றனர்; செய்வர்.

கொடைக்கு உவமை

பாரியின் கொடைத்திறத்திற்கு உவமை கூற வந்த புலவர், உலகம் முழுவதும் தேடியும் உவமையைக் காண முடியாமல், இறுதியில்  ‘மேகம்’ ஒன்றைத்தான் கூறினார். என்ன அழகான உவமை! இதைவிடப் பாரியைத் திட்ட  வேறு உவமை வேண்டுமா? என்கிறார் அறிவுவாதியர்; மேகம் செய்யும் தொழிலைப் பற்றிப் பரணர் இதோ பாடுகிறார்; அதுவும்  மேகம்  என்ற வள்ளலைப் பற்றித் தான் பாடுகிறார்.

அறுகுளத்து உகுத்தும் அகல் வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போல 

  (புறம்- 142)

[வற்றிய குளத்திலும் விளை வயலிலும் பெய்து, அதனால் நாம் நினைக்கும்படியான பயனை உண்டாக்காமல், கார் நிலத்தில் பொழிந்து எவ்விடத்தும் வரையாத இயல்புடைய மேகம் போல]

இவ்வாறு கொடுப்பதை ஆராயாமல் தருவதை என்னவென்று கூறுவது? இது முறையா? பெருமையா? அறந் தானா? இல்லை என்பார் என்க. ஆனால், இவ்வாறு தருவதன் அடிப்படையை உணர்ந்து கொண்டாலன்றிப் பாரியை அறியுமாறு இல்லை.

தனி இனம்

பாரி போன்றோர் ஒரு தனி இனமாவர். ஏனையோருக்கு மனம் வேலை செய்வதைப் போல இவர்கட்குச் செய்வதில்லை. அறிவாளன் உலகைக் காணும்பொழுது முதலிற் காண்பது தன்னை (அகங்காரம்) என்றும் அடுத்துக் காண்பது தனதை (மமகாரம்) என்றும் கூறினோம். பாரி போன்றோர் முதலிற் காண்பது இவற்றை யன்று. கூறப் போனால் இறுதியிற்கூட இவற்றைக் காண்பதில்லை அவர்கள். இதுவே வேற்றுமை. இதை உதாரணத்தால் நன்கு அறியலாம். யானும் எனதும் அவர்கள் பார்வையில் வராமையின்,  ‘புகழ்’ என்னும் தூண்டிலில் அவர்கள் சிக்குவதும் இல்லை. யான், எனதை உடைய மீன்கட்கே புகழ் என்னும் பொன் தூண்டில் உரியது. அவற்றிலிருந்து விடுதலைப் பெற்ற திமிங்கிலங்கள் போல்வர் இவ்வள்ளல்கள்.  ‘யான்,  எனது’ அற்றவன் பாரி என்பதைச் சற்று விளங்கக் காணலாம்.

அறிவால் ஆய்ந்தால்?

காட்டில் தேரூர்ந்து சென்ற பாரி முல்லைக்கொடி ஒன்று கொழுகொம்பு இல்லாமல் வாடிய துயரைக் கண்டான். கண்டவன்,  ‘ஆறு அறிவு படைத்த’ மனிதனான பாரி. காணப்பட்டது,  ‘ஓர் அறிவு’  மட்டும் உடைய உரு கொடி, பாரியின் அறிவு வேலை செய்யத் தொடங்கியிருப்பின் யாது நிகழ்ந்திருக்கும் என்று காணலாம். முதலில் இக்கொடிக்கு ஒரு கொழுகொம்பு தேவை என்று நினைத்திருப்பான்.  ‘எத்தகைய கொம்பு தேவை? சிறிய ஒரு கொம்பு போதுமா, அன்றிப் பெரியதொரு மரம் தேவைப்படுமா? வீட்டிற்குச் சென்றவுடன் ஏவலாளன் ஒருவனை ஏவி நல்லதொரு கொம்பை நடச்சொல்ல வேண்டும்’ என்ற முறையில் நினைந்திருப்பான். இன்னுங் கொஞ்சம் அறிவு முதிர்ந்திருந்தால், கீழ்க்காணும் முறையில் அவன் நினைவு ஓடியிருப்பினும் வியப்படைவதற்கு ஒன்று இல்லை:  ‘இது நாம் வளர்க்கும் கொடியன்று. காட்டில் இயற்கையாய் இந்த ஒரு கொடிதானா வளர்கிறது? எத்தனையோ ஆயிரக்கணக்கான கொடிகள் உள. முல்லை மட்டும் என்ன? எத்தனையோ கொடிகள்! இவற்றிற் கெல்லாம் கொழு கொம்பு தேவையா என்று காண்பதுதானா நமது வேலை? அரசனாய் இருக்கும் நமக்கு எத்தனை தொல்லைகள்! முறை வேண்டியும் குறை இரந்தும் நம்மிடம் வருபவர்கட்கே தக்க வழிதேட முடியாத பொழுது இந்தக் கொடிக்காகக் கவலைப்படுவது அறிவீன மன்றோ? கிடக்கட்டும். இன்று நாம் இந்தக் கொடிக்கு ஒரு கொம்பு நட்டுவிட்டால் நாளை வரும் கொடிகளையெல்லாம் யார் காப்பாற்றப் போகிறார்கள்? அப்படியே இந்தக் கொடி அழிந்துவிட்டால்தான் என்ன? உலகமா முழுகிவிடும்? செலுத்துத் தேரை மேலே!’ இவ்வாறு நினைக்க அறிவுவாதிக்கே முடியும். ஆனால், பாரி அறிவுவாதி அல்லனே!

பாரியின் மனநிலை

பாரி செய்தது யாது? தான் ஓர் அரசன் என்பதையும் எதிரே இருப்பது கேவலம் ஒரு கொடிதான் என்பதையும் அறவே மறந்துவிட்டான். அந்தப் பண்பட்ட உள்ளத்தில், கலை மனத்தில், உலகிலுள்ள உயிரெல்லாம் ஒன்று என்று கருதும் கருணை உள்ளத்தில், எதிரே முல்லைக் கொடி தெரியவேயில்லை. பின்னர் என்ன தெரிந்தது? கொழு கொம்பின்றி வாடும் ஓர் உயிர்தான் தெரிந்தது. பாரியின் உயிரே ஊசலாடிவிட்டது. கொடி கொம்பில்லாமல் ஆடினதைக் கண்ட கருணை மறவனின் உள்ளம் துடித்தது; உயிர் துடித்தது. ஓர் உயிர் மற்றோர் உயிரின் வாட்டத்தைக் கண்டுவிட்டது. தன்னுடைய இனமாகிய மற்றோர் உயிர் வருந்துவதைக் கண்டுவிட்டது.  ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் என்னுள்ளம் வருந்திய வருத்தம் நீயே அறிவாய்!’ என்று பிற்காலத்தில் ஒரு கருணை உள்ளம் (இராமலிங்க வள்ளலார்) பேசிற்று. பாரி இக்காட்சியில் தன்னை மறந்து, தன்னிலைமையை மறந்து, அறிவிழந்து, கூர்த்த, அறிவெல்லாம் கொள்ளை கொடுத்து, வருந்தும் கொடியுடன் உணர்வின் உதவியால் ஒன்றாகிவிட்டான். பாரியின் இந்த நிலைமையைக் கற்பனை செய்துகொண்டு தான் ஆசிரியர்,

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை? 

  (குறள்-315)

என்று பாடினார் போலும்! அந்த ஓரறிவுயிர் தன்னுடைய துயரை நம் போன்றவர் காதாற் கேட்கும்படி வாய்விட்டுக் கூறவில்லை. முல்லைப் பூக்கள் பற்கள் போல் இருப்பினும், வாய்விட்டு ஒன்று வேண்டும் என்று கேட்பது உயிர் போகும் நேரத்திற்கூட இழிந்த செயலாகலின், கேட்கவில்லை போலும்! அது தமிழ்நாட்டு முல்லைக் கொடியன்றோ? ஆனால், எதிரில் நிற்பவனும் ஒரு தமிழ் மகன் அல்லனோ? எனவே, வாய் திறந்து கேட்பதன் முன்னரே தருவதுதான் முறை என்று கருதித் தந்து விட்டான். எதனைத் தந்தான்? தன் பெருமைக்கேற்பத் தன் தேரையே தந்துவிட்டான். வேறு ஆராய நேரம் ஏது? அறிவின் தூணைகொண்டு ஆராய்ந்திருப்பின், பாரியாக முடியாதன்றோ? உணர்ச்சி உலகத்தில் வாழும் அந்தக் கருணை வள்ளலுக்குத் தனக்கும், கொடிக்கும், தேருக்கும் உள்ள வேறுபாடு எங்கே தெரியப் போகிறது! தான் நடந்து செல்ல முடியும். ஆனால், அம் முல்லைக் கொடி பற்றிப்படரக் கொம்பு வேண்டும். கொம்பின் வேலையைத் தேரும் செய்யும், எனவே, தேரை நிறுத்தி விட்டான்.

மடவன் பாரி

விலையுயர்ந்த அந்தத் தேர் முல்லைக்கொடிக்குத் தேவை இல்லை; ஆனால் அரசனாகிய தனக்கு மிகவும் இன்றியமையாதது என்று கருதினானா? அரசனுக்குப் பயன்படும் தேரைத் தேவையற்ற முல்லைக்கொடிக்குப் பயன் படுத்தியது அறிவுடைய செயலா? அன்று. ஆகலாற்றான் அவனை அறியாமையுடையவன் என்று புலவர்கள் பாடினார்கள்,  ‘மடவன் பாரி’ என்று கூறி மகிழ்ந்தார்கள்.

இத்தகைய செயலால் பாரி புகழ் பெற்றானா இல்லையா? பெற்றான்; அழியாப் புகழைப் பெற்றான்.

பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கஎனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி. 

  (புறம்-200)

(நிறைந்த பூக்களையுடைய முல்லைக்கொடி பாரியைப் புகழ்ந்து பாடவில்லை எனினும் ஒலிக்கின்ற மணிகள் கட்டிய தேரைக் கொடுத்த பரந்த புகழையுடைய பாரி)

என்று கபிலராலும்,

கொடுக்கி லாதானைப் பாரி யேஎன்று கூறி
னும்கொடுப் பார்இலை 

  (தேவாரம்-7,34-2)

என்று இறைவனையன்றி மக்களைப் பாடாத சுந்தரமூர்த்தி நாயனாராலும்,

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டும் அறிதும். 

  (பழமொழி-36)

என்று பழமொழியாசிரியராலும் போற்றப்பட்டான். போர் வெறியர்களின் புகழ் பரந்ததைக் காட்டிலும் இவனுடைய புகழ் ஓங்கி வளர்ந்தது உண்மை. அலெக்ஸாண்டர் செங்கிஸ்கான் என்பவர்களுடன் ஒப்புநோக்க, கரிகாலன், நெடுஞ்செழியன் முதலானோர் வெற்றிப் புகழ் மங்கி விடுகிறது. ஆனால், யாருடன் ஒப்பு நோக்கினும், பாரியின் புகழ் மங்குமாறு இல்லை. காரணம், அவர்கள் புகழை வேட்டையாடிச் சென்றனர். ஆனால், புகழோ அவர்களை விட்டுவிட்டுத் தன்னைப் பற்றிக் கவலை கொள்ளாமல் உள்ளத் துறவால் உயிர்கள் அனைத்தும் ஒன்று என்று கருதி வாழ்ந்த பாரியைத்தான் வேட்டையாடிச் சென்றது. புகழை வேட்டையாடிய அவர்களினும், புகழால் வேட்டை ஆடப்பெற்ற பாரி, அறிவைவிட உணர்வு வாழ்வே சிறந்ததென்பதை உலகுக்கு அறிவிக்கும் கலங்கரை விளக்கமாய் நிற்கிறான்!

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s