-ஆசிரியர் குழு

தமிழகத்தை வாழ்விக்க வந்த தவச்செல்வர்களில் முக்கியமானவர்; சுவாமி விவேகானந்தரின் அடியொற்றி, தமிழகத்தில் ஆன்மிகப் புரட்சி நிகழ்த்தியவர், பெரிய சுவாமிஜி என்றழைக்கப்பட்ட சுவாமி சித்பவானந்தர் (1898 மார்ச் 11 – 1985 நவ. 16).
இவரைப் பற்றிய விரிவான வாழ்க்கை வரலாற்று நூலை ‘வேதாந்தம் தந்த வீரத்துறவி சுவாமி சித்பவானந்தர்’ என்ற பெயரில், 3 பாகங்கள் கொண்ட தொகுப்பாக, திருவண்ணாமலை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தின் நூல் வெளியீட்டுப் பிரிவாகிய ‘ஸ்வாத்யாயா’ வெளியிட்டுள்ளது.
சுவாமி சித்பவானந்த மகராஜிடம் சன்யாச தீட்சை பெற்ற, திருவண்ணாமலை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தின் தலைவர் யதீஸ்வரி ஸ்ரீ கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார். 55 அத்தியாயங்களில், 1,728 பக்கங்களில், 300க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களுடன் இந்நூல் வெளியாகியுள்ளது. சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் விரிவாக இந்த நூல் விளக்குகிறது.

நூலாசிரியர் யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா சுவாமி சித்பவானந்தரிடம், 1984-இல் தீட்சை பெற்று துறவியானவர். திருநெல்வேலி ஸ்ரீ சாரதா மகளிர் கல்லுாரியில் முதல்வராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, 2007-இல் திருவண்ணாமலையில் ஸ்ரீ சாரதா ஆசிரமத்தை நிறுவினார். பேராசிரியராகவும் சிறந்த கல்வியாளராகவும் விளங்கும் யதீஸ்வரி அம்பா அவர்கள் சகோதரி நிவேதிதை பற்றி நான்கு நுால்களும், ஹிந்து மதம் கூறும் இறை வழிபாடு தொடர்பான ஒரு நூலும் எழுதியுள்ளார்.
கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சிக்கு அருகில் செங்குட்டைப்பாளையம் என்ற ஊரில் பெரியண்ண கவுண்டர் – நஞ்சம்மை தம்பதிக்கு, ஏழாவது மகனாகப் பிறந்தவர் சுவாமி சித்பவானந்தர். பூர்வாசிரமத்தில் சின்னு என்ற பெயரில் விளங்கிய அவர் அந்தக் காலத்திலேயே ஆங்கிலக் கல்வியில் சிறந்து விளங்கி தமது கல்லுாரிப் படிப்பை சென்னை மாநிலக் கல்லுாரியில் முடித்தார்.
லௌகீக வாழ்வில் நாட்டம் ஏதுமின்றி, தெய்வீகத்தையும் ஞானத்தையும் துறவையும் தொண்டையுமே அவரது மனம் நாடியது. தனது குருவான சுவாமி சிவானந்தரால் தீட்சை அளிக்கப்பட்டு, சித்பவானந்தர் ஆனார் (ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவானந்தர் மஹாபுருஷஜி மகராஜ் அல்லது தாரக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்).
உதகை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகியாக இருந்த சுவாமி சித்பவானந்தர், பின்னாளில் திருப்பராய்த்துறையில் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை’ நிறுவினார். உபநிஷதங்கள், பகவத் கீதை, திருவாசகம், தாயுமானவர் பாடல்கள் ஆகியவற்றுக்கு அற்புதமான விரிவுரைகளையும், அத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் சுவாமிகள் எழுதியுள்ளார்.
ஏராளமானோர் நல்வழியிலும் ஆன்மிக வாழ்விலும் மேம்பாடு அடைய ‘அந்தர்யோகம்’ எனும் சிறப்பான பயிற்சியை சுவாமிஜி அறிமுகம் செய்தார். 1956-இல் சேலத்தில் ‘ஸ்ரீ சாரதா சமிதி’ என்ற துறவு ஸ்தாபனத்தை உருவாக்கினார். இது, பின்னாளில் கரூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது, தமிழகத்தில், சுவாமி சித்பவானந்தரின் போதனைகளைப் பின்பற்றி, 60 பள்ளிகளும், ஏழு கல்லுாரிகளும் செயல்பட்டு வருகின்றன. இத்தகு பெருமைகள் கொண்ட சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு தமிழக மக்களிடத்தில் பரவலாகச் சென்றடைய வேண்டியதாகும்.
நூல் குறித்த விவரங்கள்: வேதாந்தம் தந்த வீரத்துறவி சுவாமி சித்பவானந்தர் (விரிவான வாழ்க்கை வரலாறு) -யதீஸ்வரி ஸ்ரீ கிருஷ்ணப்ரியா அம்பா 3 பாகங்கள்; 1,728 பக்கங்கள் விலை: ரூ. 675/- (அஞ்சல் செலவுகள் தனி: தமிழ்நாடு- ரூ. 100, தென் மாநிலங்கள்- ரூ. 130, வட மாநிலங்கள் – ரூ. 160) கிடைக்கும் இடம்: ஸ்ரீ சாரதா ஆஸ்ரமம், 58, மணக்குள விநாயகர் தெரு, சாரதா நகர், ரமணாஸ்ரமம் அஞ்சலகம் எதிரில், திருவண்ணாமலை – 606 603 தொலைபேசி: 04175 – 235 246, அலைபேசி எண்கள்: 94421 31956, 86109 03226. மின்னஞ்சல்: ykpamba@gmail.com, ssatvmal@gmail.com
$$$