-பேரா. இளங்கோ ராமானுஜம்
திருவேடகம், விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரான பேரா. இளங்கோ ராமானுஜம், சுவாமி சித்பவானந்தரின் வழியில் ஆன்மிக சிந்தனைகளைப் பரப்பி வருபவர். அன்னாரது இனிய ஒப்பீட்டுக் கட்டுரை இது…

(1898 மார்ச் 11 – 1985 நவ. 16)
எத்தனையோ துறவியர் பெருமக்கள் இருந்தாலும் சுவாமி சித்பவானந்தரை மட்டும் ‘தமிழகத்தின் விவேகானந்தர்’ என்று அழைப்பது முற்றிலும் பொருத்தமானது. ஏனென்றால், இவர்கள் இருவரும் ஒரே சூழலில் இருந்தனர். ஆம்! தேசிய விடுதலைப் போர் சூடு பிடிக்கும்போது சுவாமி விவேகானந்தரும், விடுதலை வேள்வித் தீயின் வெப்பம் உச்சத்தில் இருக்கும்போது சுவாமி சித்பவானந்தரும் பிறந்தனர். விடுதலைப் போரில் இருவரும் நேரடியாக ஈடுபடவில்லை. ஆனால், இருவரின் சிந்தனைகளும் விரிந்து, பரந்து இருந்தன.
ஆன்மிக விழிப்புணர்வே உண்மையான விடுதலை! அதன் இடைவிளைவாக இந்திய விடுதலையும் அமையும் என இருவருமே நம்பினார்கள். ஹிந்து மதம் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டபோது அந்த உன்னத தர்மத்தின் பொருளை அவர்கள் எடுத்துரைத்தனர். அதனால் நாத்திகர் மனமும் தெளிவடைந்தது.
அனைத்திற்கும் மேலாக விவேகானந்தரின் லட்சியக் கனவை நனவாக்கினார் சுவாமி சித்பவானந்தர். அந்தக் கனவு ஹிந்து மதக் கோட்பாடுகளை பாமரனுக்கும் புரியும் வண்ணம் அந்தந்த வட்டார மொழிகளில், எளிமையாக மொழிபெயர்த்து மனிதனைச் சான்றோனாக மாற்ற வேண்டும் என்பதே! இதனைத் தன் எழுத்துக்கள் மூலம் செய்து காட்டியவர் சுவாமி சித்பவானந்தர்.
“பாரதத்திற்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அது உலகுக்கு ஆன்மிகத்தையும், ஆழ்ந்த தத்துவங்களையும் போதிக்க வேண்டும். போராட்ட உணர்வோடு கூடிய நாட்டுப்பற்று நம்மை நெடுந்தூரம் பயணிக்க விடாது. பக்குவப்படாத மனதோடு வெறுமனே காங்கிரஸில் கூச்சல் போடுவது எந்தப் பயனையும் அளிக்காது” என்றான் நரேந்திரன்.
1885-இல் தான் அகில இந்திய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. எழுச்சிமிகு இளைஞர்களை தலைவர்களின் உணர்ச்சிமிகு சொற்கள் கவர்ந்தன. ஆனால் நரேந்திரனின் மனது அகண்டாகாரத்தில் சிந்தித்தது. ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று ஆண்டாள் ஆழ்வார் சொன்னாரே அந்த உலகத்தார் தான் அவர் கண் முன் நின்றனர்.
உலகத்தார் உய்வடைய வேண்டும் என்ற எண்ணமே நரேனிடம் ஓங்கி இருந்தது. தேச விடுதலை வேண்டும் என்று ஆணித்தரமாகப் பகர்ந்தான் நரேந்திரன். சுவாமி விவேகானந்தராக தமிழகத்தை அவர் 1897-இல் வலம் வந்தபோது இன்னும் ஐம்பது ஆண்டுகளில் பாரதத்திற்கு விடுதலை கிடைத்து விடும் என்று பிரகடனம் செய்தார். அது அசிரீரி போல அன்றைக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது; பின்னாளில் உண்மையானது.
நரேந்திரன் எல்லைகளைத் தகர்த்தெறிந்தான். மனிதன் ‘ஆன்மாவை அறிவதே’ உண்மையான விடுதலை. அது தேச விடுதலையை நொடிப் பொழுதில் பெற்றுத் தந்துவிடும் என்றான் அவன். தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் பயணிக்க ஆரம்பித்தான்.
“இறைவனும் சத்தியமும் மட்டுமே எனக்குத் தெரிந்த அரசியல்; மற்றவை வெறும் குப்பைகளே! மனிதன் தன்னிடத்தில் உள்ள அளப்பரிய ஆற்றலை உணர்ந்தால் போதும். மற்ற அனைத்தும் சரியாகிவிடும். எனவே மனிதன் ஆத்ம ஞானம் பெற வேண்டும். அந்த நினைவூட்டும் பணியே எனது லட்சியம்” என உரக்கச் சொன்னான் நரேந்திரன்.
இதே சூழலில்தான் சுவாமி சித்பவானந்தர் 1920-களில் இருந்தார். சுதந்திரப் போராட்டம் உச்சக்கட்டத்தில் அப்போது இருந்தது. காந்தியை நேசித்தவர் அவர். அவரிடம் சுவாமிஜிக்கு மிகுந்த பக்தி உண்டு. ஆனால் அவர் தன் குருவான சுவாமி விவேகானந்தரின் பாதையையே தேர்ந்தெடுத்தார். ‘ஆன்மிக விழிப்புணர்வே’ உண்மையான, நிரந்தர விடுதலை என்று நம்பினார்.
சுவாமி விவேகானந்தர் மேற்கத்திய நாடுகளில் தன் வேதாந்த விழிப்புணர்வு பயணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு வந்தபோது நமது கலாச்சாரத்தை எள்ளி நகையாடும் மாணவர் கூட்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் நமது இந்து மத சம்பிரதாயங்களையும், மூடப்பழக்க வழக்கங்களையும், கேலிப் பார்வை வீசி, குறை சொல்லி மகிழ்ந்தனர். அவைதான் ஹிந்து மதத்தின் அடிப்படைத் தத்துவம் என்ற தவறான கருத்தைக் கொண்டிருந்தனர்.
அவர்கள் குழுமி இருந்த கூட்டத்தில் பேசிய சுவாமி விவேகானந்தர், அனைவரையும் அறவோராக்கும் சீரிய தர்மமே ஹிந்து மதத்தின் அஸ்திவாரம். மனிதன் தன்னிடம் உள்ள அளப்பெரிய தெய்வீக ஆற்றலை உணர்ந்து, மேலோனாக மாறுவதே நம் மதத்தின் நோக்கம். ‘நிறை மனிதனே இறைவன்’ (Perfect man is God); ‘நிறைவை நோக்கி நகரும் கடவுளே மனிதன்’ (Imperfect God is man). எனவே எப்படி இருந்தாலும் மனிதன் பரம்பொருளின் அம்சமே என விளக்கி அவர்களுக்கு ஆன்மிகத் தெளிவைக் கொடுத்தார். இந்த உன்னதத் தத்துவத்திற்கு எதிரான எந்தக் கருத்தையும் உதறித் தள்ளுங்கள் என்று அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதே சூழல், சுவாமி சித்பவானந்தர் காலத்திலும் உருவானது. நாத்திகர்களின் உரத்த குரல் நம் சாஸ்திரங்களை நிந்தித்தது; நிறை மனிதனே கடவுள் என வாழ்ந்து, நிரூபித்துக் காட்டிய ராமபிரானைச் சாடியது. ஆனால், மனித குலத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ராமபிரானின் உன்னத குணங்களை உலகிற்கு உரக்க உரைத்தார் சுவாமி சித்பவானந்தர்.
அது நாத்திகர்கள் அதிகாரத்தில் அமர்ந்த காலத்தின் தொடக்கம். ஆனால் சுவாமிஜியின் தவ வலிமை அவரைச் சுற்றி நெருப்பு வட்டமாக அவரைக் காத்தது. அவரின் தியாக உணர்வையும், சேவை மனப்பான்மையையும் உணர்ந்து கொண்ட நாத்திகர்கள் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொள்ள தபோவன பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை மாணவர்களாக அனுப்பி வைத்தனர். இறைவன் செயலே இது!
பிறருடைய துயரத்தைக் காணும் போது மனமிரங்கி, அவன் துன்பத்தைத் தன் துன்பமாக எண்ணி அவனுக்கு உதவி புரிய எவன் துடிக்கிறானோ அவனே உண்மையான வைஷ்ணவன் என்று நம்பினார் பகவான் ராமானுஜர்.
“இரக்கப்படுங்கள் குழந்தைகளே! இரக்கப்படுங்கள்! ஏழைகளுக்காக இரக்கப்படுங்கள்! அறியாமையில் மூழ்கி இருப்பவர்களுக்காக இரக்கப்படுங்கள்! சமுதாயத்தின் அடித்தளத்தில் துயரூரும் நலிந்தோருக்காக இரக்கப்படுங்கள்! எவ்வளவு தூரம் இரக்கப்பட வேண்டும்? உன் நெஞ்சம் உடையும் வரை! உன் தலை சுற்றும் வரை! நீ பைத்தியமாகும் வரை! இரக்கப்பட வேண்டும்”
-என்று ஏழைகளுக்காகக் கண்ணீர் சிந்துகிறார் சுவாமி விவேகானந்தர். பாமரர்களுக்காக இரக்கப்படும் ராமானுஜரையும் விவேகானந்தரையும் நாம் சுவாமி சித்பவானந்தரிடம் காணலாம்.
சாமானியர்களிடம் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்த சுவாமி சித்பவானந்தர் பயன்படுத்திய ஆன்மிக யுக்தி, அவர் நடத்திய அந்தர்யோகக் கூட்டங்கள். இதுகாறும் யாரும் செய்யாத முயற்சி! ஜாதி வேறுபாடு, ஏழை- பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பினரையும் ஒன்றுசேர்த்து அவர்களிடம் தெய்வீக விழிப்புணர்வை ஏற்படுத்தி, நேர்மையான, அறம் சார்ந்த ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இல்லற வாழ்க்கை வாழ்ந்தால் வாழ்க்கையின் பிரச்சினைகளுக்குத் தானாகவே தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை அந்தர்யோகக் கூட்டங்களில் ஏற்படுத்தினார்.
இறைச் சிந்தனையே வாழ்க்கைச் சிக்கல்களுக்கு மத்தியில் மனிதனுக்கு மன அமைதி கொடுக்கும் என்னும் கருத்தை முன்னிறுத்தி, அவர்களுக்கு தியானப் பயிற்சி, நாமாவளியை மீண்டும் மீண்டும் பக்திப்பூர்வமாகக் கூறுவது போன்றவற்றை பக்தர்கள் அவர்தம் முன்னாலேயே செய்யச் சொல்லி, பயிற்சி கொடுத்தார் சுவாமி சித்பவானந்தர்.
இந்து மதக் கோட்பாடுகள் சமுதாயத்தில் உள்ள சாதாரண மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பது சுவாமி விவேகானந்தரின் கனவு. அதை முறையாக நிறைவேற்றியவர் சுவாமி சித்பவானந்தர்.
நம் கலாச்சார பொக்கிஷங்கள் வேதாந்தம் எனும் ஆன்மிக விஞ்ஞானத்தில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை சாமானியரிடம் கொண்டுசேர்க்க வேண்டும் எனத் தன் சீடர்களைப் பணித்தார் சுவாமி விவேகானந்தர். அவை அடர்ந்த காடுகளிலும், இருண்ட குகைகளிலும், பூட்டி வைக்கப்பட்ட புத்தகங்களிலும் ஒரு காலத்தில் இருந்தன. இன்னும் அந்த தத்துவங்கள் முழுமையாக மக்களிடம் போய்ச் சேரவில்லை. இதுவே இந்து மதத்தைத் தவறாக சிலர் புரிந்துகொள்ளக் காரணமாக இருந்தது. இதை அனைத்துத் தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவரின் அவா.
"வேதாந்தம் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. அதை எளிமையாக்க வேண்டும். சுலபமாக்க வேண்டும். ஜனரஞ்சகமாகச் சொல்ல வேண்டும். அதற்காக அதன் தரம் தாழ்ந்துவிடக் கூடாது. கற்றவர் சபையில் விவாதிப்பதற்கு ஏற்ற கருப்பொருளாகவும் இருக்க வேண்டும். அதில் கவிதை ரசம் ததும்ப வேண்டும். ஒழுக்க நெறிகள் மிளிர வேண்டும். அது விஞ்ஞானபூர்வமாகவும், நடைமுறை உளவியல் பாடமாகவும் இருக்க வேண்டும். இதை எல்லாம் சொல்லும்போது ஒரு குழந்தை கூட புரிந்து கொள்ள ஏதுவாகவும் இருக்க வேண்டும். இது என் வாழ்க்கையின் லட்சியம். ஆனால் இது எளிதான காரியம் இல்லை என்பது அதைச் செய்ய முயற்சித்தவர்களுக்குத் தெரியும்”
-என்று மொழிபெயர்ப்புக்கு எல்லை வகுத்துக் கொடுக்கிறார் சுவாமி விவேகானந்தர்.
இதை அப்படியே தனது வாழ்வில் செய்து காட்டியவர் சுவாமி சித்பவானந்தர். தன் ‘தினசரி தியானம்’ தமிழ், ஆங்கிலம் நூல்கள் இரண்டிலும், தன்னுடைய விளக்க உரைகளிலும் குறிப்பாக, தாயுமானவரின் பாடல்களுக்கு அவர் எழுதியவற்றில் சுவாமி விவேகானந்தரின் கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றி முடிக்கிறார்.
ஓர் எடுத்துக்காட்டு.
தாயுமானவர் தன் பராபரக் கண்ணியில்-
“மண்ணும் மறிகடலும் மற்றுஉளவும் எல்லாம் உன் கண்ணில் இருக்கவும் நான் கண்டேன் பராபரமே”
வேதாந்தத்தின் ஓர் கோட்பாடான ‘பரம்பொருளே பிரபஞ்சமாகக் காட்சியளிக்கிறார்’ என்பதைத் தன் அழகிய கவிதையில் கோடிட்டுக் காட்டுகிறார்.
இதைத் தன் விளக்க உரையில் சுவாமி சித்பவானந்தர் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் திரைப்பட அமைப்பை உதாரணமாகக் காட்டி விளக்கும்போது படித்தோரும், படிக்காத பாமரனும் எளிதில் புரிந்து கொள்கின்றனர். அந்த அளவிற்கு திரைப்படத்தின் தாக்கம் அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருப்பதால் இந்த ஜனரஞ்சக உதாரணத்தின் மூலம் வேதாந்தக் கோட்பாடு புரிந்து கொள்ளப்படுகிறது.
“பரம்பொருள் என்னும் அறிவுப் பெருவெளி தன் அருளால் தன்னிடத்தே பிரபஞ்சத்தையும், உயிர் வகைகளையும் தோற்றுவித்துக் கொள்கிறது. தோற்றத்துக்கு வந்துள்ள ஜகத்தும், ஜீவனும் பின்பு அந்த பரத்துக்குள்ளேயே ஒடுங்குகின்றன. ஆயினும் பரத்தின்கண் எந்த விதமான விகாரமும் உண்டாவதில்லை. இதை அனுபூதியில் அறிந்து கொள்ளுதல் வாழ்க்கையின் குறிக்கோள் என்பது இக்கண்ணியில் அடங்கியிருக்கிறது”
-என்று விளக்கம் கொடுக்கிறார் சுவாமி சித்பவானந்தர்.
பரவஸ்துவும், திரையரங்கில் நாம் காணும் வெள்ளித்திரையும் நிரந்தரமானது. பரவஸ்து தன்னிடத்தே இந்த பிரபஞ்சத்தையும், அலை வீசும் கடலையும் மற்ற எல்லா உயிரினங்களையும் தோற்றுவிப்பது ‘தொடக்கம்’ (சிருஷ்டி) . அவை அனைத்தும் பகவானாகிய பிரபஞ்சத்திலேயே சஞ்சரிக்கின்றன என்பது ‘இருப்பு’ (ஸ்திதி). இவை அனைத்தும் ஊழிக் காலத்தில் பிரபஞ்சமாகக் காட்சி கொடுக்கும் இறைவனிடத்திலேயே ஒடுங்கி விடுவது ‘ஒடுக்கம்’ (சம்ஹாரம்).
அதுபோலவே படக்காட்சியின் ‘தொடக்கம்’ திரையில் தெரிகிறது. பலவிதமான கதாபாத்திரங்கள் பல்வேறு விதத்தில் நடித்து கதையினை வளர்த்துக்கொண்டு செல்லும்போது அவர்கள் அனைவரும் திரையில் சஞ்சரிப்பதைக் காண்கிறோம் அது ‘இருப்பு’. பின்பு கதை இன்பமாகவோ துன்பமாகவோ முடிந்து திரையில் ஒடுங்கி விடுவது ‘ஒடுக்கம்’. கதை முடிந்து ‘வணக்கம்’ போட்ட பின்பு திரை அருகே சென்று அதைத் தொட்டுப் பார்த்தால் அதில் எந்த மாறுதலும் இல்லை. ‘தொடக்கம், இருப்பு, ஒடுக்கம்’ ஆகிய மூன்று செயல்களும் பரவஸ்துவிலும், திரையிலும் நிகழ்ந்தாலும் அவற்றில் எந்தவிதமான விகாரமும் மாறுதலும் உண்டாவதில்லை. இந்த வேதாந்தக் கோட்பாட்டினை அனைவருக்கும் புரியும் வண்ணம் திரைப்பட உதாரணம் மூலமாக சுவாமி சித்பவானந்தர் விளக்கி அருளி விவேகானந்தரின் கனவை நனவாக்குகிறார்.
இதனால்தான் சுவாமி சித்பவானந்தர் ‘தமிழகத்தின் விவேகானந்தர்’ என்று அழைக்கப்படுகிறார்.
$$$