ஸ்வர்ண குமாரி

-மகாகவி பாரதி

ஸ்வர்ண குமாரி (ஓர் சிறு கதை)

மகாகவி பாரதியின் இரண்டாம் சிறுகதையான இந்தக் கதை ‘இந்தியா’ (2-2-1907) இதழில் பிரசுரமானது. 

இந்தக் கதை காதல்வயப்பட்ட ஸ்வர்ண குமாரி - மனோரஞ்ஜனன் ஆகிய இருவர் வாழ்க்கைச் சூழல்களுக்கிடையே, காதலைக் காட்டிலும் சுதேசாபிமானமே மாணப் பெரிது என்பதை மிக அழகாக - ஆழமாக எடுத்துச் சொல்கிறது. 

தேசபக்தி, திலகர் பக்தி - இந்த இரண்டையும் பாரதி இரு கண்களாகப் பாவித்தார் என்பதை இந்தக் கதை மூலம் நாம் அறிகிறோம்.

அத்தியாயம் – 1

பெங்காளம் என்று கூறப்படும் வங்க தேசத்திலே சாந்த்பூர் (சந்திரபுரம்) என்ற கிராமத்தில் மனோரஞ்ஜன பானர்ஜி என்ற ஒரு பிராமண வாலிபன் உண்டு. இவன் கல்கத்தாவிலே போய் பி.ஏ. பரீக்ஷைக்குப் படித்துக் கொண்டிருக்கையில் 1904-ம் வருஷம் டிஸம்பர் மாதம் ரஜாவின் பொருட்டாகத் தனது சொந்த ஊராகிய சாந்த்பூருக்கு வந்திருந்தான்.

மனோரஞ்ஜனன் வெகு சுந்தரமான ரூபமுடையவன். பார்ப்பதற்கு மன்மதனைப் போலிருப்பான். மேலும் குழந்தைப் பிராய முதலாகவே பள்ளிக்கூடத்துப் பந்தாட்டம் முதலிய விளையாட்டுக்களிலேயும், மற்றும் சிலம்பம், கர்லா முதலிய சுதேசீய தேகாப்பியாசங்களிலேயும் இவன் மிகுந்த தேர்ச்சி யுடையவனாகித் தன்னோடு ஒத்த வயதுள்ள வாலிபர்க ளெல்லாராலும் ‘அர்ஜூனன்’ என்றழைக்கப்பட்டு வந்தான்.

வயது இருபத்து மூன்று ஆயிருந்த போதிலும் இவனுக்கு என்ன காரணத்தினாலோ இன்னும் விவாகம் நடக்காமல் இருந்தது.

பெங்காளத்தார் மிகுந்த சொற்ப வயதிலேயே விவாகாதிகள் நடத்திவிடுவது முறைமை. இவன் விஷயத்தில் மட்டும் இவ்வாறு நடக்கவில்லை. இதற்கு வேறொரு உள் முகாந்திரமுண்டு.

மனோரஞ்சனனுடைய தந்தை உயிரோடிருந்திருக்கும் பக்ஷத்தில் இவனை இதற்கு முன் விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி யிருப்பார். ஆனால் இவனுக்கு ஏழு வயதா யிருக்கும்போதே தந்தை இறந்து போய் விட்டார். தாய்க்கு இவன் ஒரே பிள்ளை யாதலால் அவள் இவன்மீது மிகுந்த அருமை கொண்டவளாகி, வீட்டில் இவன் சொன்னதற்கு மறுசொல் இல்லாமல் காரியங்கள் நடந்து வந்தன.

இந்தக் குடும்பத்திற்கு அதிக ஆஸ்தி இல்லாவிட்டாலும், உள்ள நிலத்தை விற்றுப் பணம் எடுத்துக்கொண்டு தான் கல்கத்தாவுக்குப் போய் பரீக்ஷைகள் தேறி வர வேண்டுமென்று இவன் சொன்னவுடனே தாய் யாதொரு ஆக்ஷே பமும் சொல்லாமல் சரியென்று சம்மதித்து விட்டாள். இதுபோலவேதான் எல்லா விஷயங்களிலும்.

அடிக்கடி இவனுடைய தாய் இவனைக் கூப்பிட்டு “குழந்தாய் ரஞ்ஜன்! உனக்கு வயதாய் விட்டதே. விவாகம் எப்போதடா செய்து கொள்வாய்?” என்று கேட்டால், இவன் முரட்டுத்தனமாக “அம்மா! அந்தப் பேச்சை மட்டிலும் என்னிடம் பேசாதே” என்று சொல்லிவிட்டு வெளியே போய்விடுவான்.

அந்தரங்கத்திலே இவன் வடக்கு வீதி, ஸுர்யகாந்த பாபு என்ற பெருஞ்செல்வரின் குமாரத்தியான ஸ்வர்ண குமாரியின் மீது மோஹம் வைத்திருக்கிறா னென்ற விஷயத்தைத் தாயார் நன்றாக அறிவாள். ஆனால், இவனுக்கும் ஸ்வர்ண குமாரிக்கும் ஒருபோதும் விவாஹம் நடப்பது சாத்தியமில்லை யென்பது அவளுக்கு நிச்சயந்தான். அப்படி ஒருவேளை அந்த விவாகம் நடப்பது ஸாத்தியமாகக் கூடுமானால் அதை இவள் கேட்ட மாத்திரத்திலே இவளுக்குப் பிராணன் போய்விடும். தனது மகன் ஸுர்யகாந்த பாபுவின் பெண்ணை விவாகம் செய்து கொள்வதைக் காட்டிலும் அப் பிள்ளை இறந்து போவது விசேஷமென்று அவளுக்குத் தோன்றும்.

தனது குல தெய்வமான ஸ்ரீ கிருஷ்ண பகவானைத் தியானித்து இவள், “ஸர்வஜீவ தயாபரா! எனது பிள்ளைக்கு அந்த மிலேச்சனுடைய பெண் மீது இருக்கும் மோஹத்தை நீக்கி அவனுக்கு நல்ல புத்தி கொடுக்கலாகாதா?” என்று அடிக்கடி கண்ணீர் சொரிந்து பிரார்த்தனை புரிவாள்.

$$$

அத்தியாயம் – 2

ஸ்வர்ண குமாரியை மனோரஞ்ஜனன் மணம் புரிந்து கொள்வதிலே மனோரஞ்ஜனனுடைய தாயாருக்கு இத்தனை விரோதம் ஏன் இருக்க வேண்டு மென்பதை நமது கதாப்பிரியர்கள் அறிய ஆவலுறலாம். அதன் காரணம் பின்வருமாறு:

ஸ்வர்ண குமாரியின் தந்தையாகிய ஸுரியகாந்த பாபு பிராமண குலத்திலே பிறந்த போதிலும், பிராமண ஆசாரங்களையும், அனுஷ்டானங்களையும், மார்க்க முறைகளையும், நம்பிக்கைகளையும் திலதர்ப்பணம் செய்துவிட்டு,  ‘பிரம ஸமாஜம்’ என்ற புதிய மார்க்கத்தைச் சேர்ந்து கொண்டு விட்டார்.

இந்த ஸமாஜத்தார் “ஜாதி பேதம் இல்லை, விக்கிரஹாராதனை கூடாது. பெண்களும் ஆண்களும் சமானமாக ஒத்துப் பழகலாம்” என்பது போன்ற நவீனக் கோட்பாடுகள் கொண்டிருப்போர்.

ஸ்வர்ண குமாரியின் தகப்பனார் எந்த ஜாதிக் காரனுடனும் கலந்து சாப்பிடுவார். அவர்கள் வீட்டு ஸ்திரீகள், பகிரங்கமாக வெளியே உலாவுவதும், கண்ட புருஷர்களுடன் சம்பாஷிப்பதும் பிழையில்லை யென்று நடப்பவர்கள். ஸ்வர்ண குமாரிக்கு வயது பதினெட்டாகியும் இன்னும் விவாகமில்லை. இதுவெல்லாம் மிகுந்த புராதன இயற்கை கொண்ட மனோரஞ்ஜனன் தாயாருக்குக் காதால் கேட்கக்கூட வெறுப்பாக இருந்தது.

இங்ஙன மிருக்க ஸ்வர்ண குமாரியின்மீது தனது மகன் அடங்காத மையல் கொண்டிருக்கிறா னென்பதையும், அதன் பொருட்டாகவே வேறு விவாகத்தில் விருப்பமில்லாதிருக்கிறா னென்பதையும் இந்த அம்மை பல முகாந்தரங்கள் மூலமாக ஊஹித்தறிந்து கொண்ட நாள் முதலாக இவள் மனதிலே தோன்றிய வருத்தங்களுக்கு அளவு கிடையாது. நிற்க.

இங்கே ஸ்வர்ண குமாரியின் நிலை, எப்படி யிருக்கிற தென்பதைக் கவனிப்போம். இவள் மனதிலே மனோரஞ்ஜனனுடைய வடிவம் என்றும் அகலாத சுந்தர விக்கிரஹமாகப் பதிந்து போய் விட்டது. வரம்பில்லாத செல்வமுடைய குடும்பத்திலே பிறந்து, ஸங்கீதம், ஸாஹித்யம் முதலிய கலைகளிலே யெல்லாம் சிறந்த பழக்கம் கொண்டவளாகித் தனக்கு இசைவான கணவனைத் தவிர மற்றப்படி சாதாரண மனிதன் எவனையும் மணம் செய்து கொள்ளக்கூடாதென்று இவள் ஒரே பிடிவாதமாக இருந்தாள்.

இவளது ரூபலாவண்யமோ சொல்லுந் தரமன்று. கருமை நிறங்கொண்ட அமிருதத்தின் கடல்களென்று சொல்லத்தக்க இவளுடைய நேத்திரங்களும், முல்லை போன்ற புன்சிரிப்பும், மூக்கும், கன்னமும், நெற்றியும், ஸ்வர்ணமயமான சரீரமும், இவளை என்னென்று சொல்வோம்! சுகப்பிரம ரிஷி பார்த்தபோதிலும் மயங்கிப் போய் விடுவார்.

இவளுக்கு மனோரஞ்ஜனன் பாலிய சினேகன். பள்ளித் தோழன். தேவரூபனாகிய இவனையே கடைசிவரை பள்ளித் தோழனாகவும் கொள்ள வேண்டுமென்று இவள் ஆசை கொண்டு விட்டாள்.

இதற்கு முன் எத்தனையோ முறை இவர்கள் அடிக்கடி சந்திப்பதும், காதற் சுவையிற் கனிந்து நிற்பதுவும் உயிரென நோக்கி உள்ளம் வாடுவதும் பொருளிலாத் தெய்விக மொழி பல புகல்வதும் – என இவ்வாறு தமது மோஹ நெருப்புக்கு நெய் ஊற்றிக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

இப்போது மனோரஞ்ஜனன் மறுபடியும் சாந்த்பூருக்கு வந்தவுடனே வழக்கம் போலவே இவர்களது சந்திப்புகள் தொடங்கி விட்டன.

இதை நமது ஸ்வர்ணத்தின் தந்தையாகிய ஸூரிய காந்த பாபு அறிந்து ஒரு நாள் இவளை அழைத்து, “மகளே, நீ நான் சொன்னபடி ஹேமசந்திர பாபுவை விவாகம் செய்து கொள்ளச் சம்மதிக்காம லிருப்பாயானால் இனி என் வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். கையிலே காசற்றவனும், விக்கிரகாராதனை செய்யும் மூட பக்திக் கூட்டத்தாரைச் சேர்ந்தவனுமாகிய அந்த மனோரஞ்ஜனப் பயலை நீ அடிக்கடி பார்த்துப் பேசுகிறா யென்ற வார்த்தை என் காதிலே படக் கூடாது. அடுத்த தை மாதம் உனக்கும் ஹேமசந்திர பாபுவுக்கும் விவாகம். நீ இப்போதே எனக்கு ஆகட்டுமென்ற வார்த்தை கொடுத்துத் தீர வேண்டும். நான் எத்தனையோ வருஷம் உன்னுடைய மூடத்தன்மையான பிடிவாதத்தைச் சகித்தாய்விட்டது. இனி ஒரு க்ஷணம் பொறுக்க மாட்டேன்.

“இன்று மாலை இங்கே ஹேமசந்திரர் வருவார், நீ தோட்டத்திலே யுள்ள பூஞ்சோலையில் 6 மணிக்குப் போயிரு. அங்கே அவரை வரச் சொல்கிறேன். நீ அப்போது அவரிடம் உன்னுடைய சம்மதம் தெரிவித்தே தீர வேண்டும். இல்லா விட்டால் உன்னைக் கையும் கப்பரையுமாக நாளைக் காலையில் வெளியே ஓட்டி விடுவேன்” என்று மஹா கோபத்துடன் படபடவென்று சொல்லிவிட்டு ஸுர்யகாந்த பாபு எழுந்து போய் விட்டார். தனது மகள் கண்ணீர் மாரிக்கிடையே தரைமீது சோர்ந்து விழுந்து விட்டதைக்கூட அவர் கவனிக்கவில்லை.

$$$

அத்தியாயம் – 3

பகல் முழுவதும் ஸ்வர்ண குமாரி தனது தந்தையின் கொடூரத்தை நினைத்து நினைத்து மனம் தயங்கிக் கொண்டிருந்தாள். இவளுக்கு ஒன்றுந் தோன்றவில்லை. இது போன்ற சமயங்களிலே தாய் இருக்கும் பக்ஷத்திலே எவ்வளவோ தைரியம் சொல்லுவாள், ஆனால், நமது ஸ்வர்ணத்திற்கோ தாயார் அதிபாலியத்திலே இறந்து போய்விட்டாள். வீட்டிலுள்ள ஸ்திரீக ளெல்லாம் தூர பந்துக்களே யல்லாமல் இவள் தன் மனதை யெல்லாம் சொல்லி முறையிடக் கூடியவாறு அத்தனை நெருங்கிய நட்புடையோர் யாரும் கிடையாது.

தனியே நெடுநேரம் யோசித்து யோசித்து இவள் பின் வருமாறு நிச்சயம் செய்து கொண்டாள்: ‘தந்தையோ இரும்பு நெஞ்சுடையவர். மனோரஞ்சனனோ தனது தாயிருக்கும் வரை பிரம சமாஜத்திலே சேரப்போவது கிடையாது. நமக்கு இந்த ஹேமசந்திரனை விவாகம் செய்து கொள்ள வேண்டு மென்றே விதி யிருக்கின்றது போலும். மனோரஞ்சனனுடனேதான் வாழ்வே னென்று நான் தெய்வ சாக்ஷியாக விரதம் கொண்டாய் விட்டது. மனோரஞ்சனன் என்னை விவாகம் செய்து கொள்வதும் சாத்தியமில்லை. இனி தந்தை வீட்டிலிருந்து பிச்சைக்காரி போல வெளியே துரத்துண்டு ஏன் அவமான மடைய வேண்டும்? ஹேமசந்திரனையே விவாகம் செய்து கொள்வதாக இன்று மாலை சம்மதமளித்துவிட்டு, விவாகத்திற் கென்று குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் விஷத்தைத் தின்று உயிரை மடித்துக் கொள்கிறேன், இதற்கிடையே ஏதேனும் அகஸ்மாத்தாக அனுகூலம் ஏற்பட்டால் பார்த்துக் கொள்வோம். இல்லாவிட்டால் மரணமே கதி’ என இவ்வாறு மனவுறுதி செய்துகொண்டு விட்டாள்.

இந்த ஹேமசந்திரன் யார்? இவன் ஒரு பணக்கார ஜமீந்தார். பிரம ஸமாஜத்தைச் சேர்ந்தவன். ஆனால் புராதன ஆசாரங்களைக் கைவிட்ட இவன் மற்ற பிரம ஸமாஜிகளைப் போல அத்துடன் நிறுத்திவிடாமல், மதுபானம், கோமாமிச போஜனம் முதலிய புது ஆசாரங்களும் படித்துக் கொண்டு விட்டான். பார்ப்பதற்கு எருமைபோலே கொழுத்து வெகு குரூபியாக இருப்பவன், மஹாமூடன்; குரூர சிந்தை யுடையவன்.

இவனிடம் ஸ்வர்ண குமாரியின் தந்தை செல்வம் பற்றி விருப்புக் கொண்ட போதிலும் நமது ஸ்வர்ணத்தின் கோமள நெஞ்சு காதலுறுதல் எங்ஙனம் இயலும்? நிற்க.

மாலை 6 மணி ஆயிற்று. பெரிய வனம்போல விஸ்தாரமுடைய சோலையினிடையிலே ஓர் அழகிய கொடி வீட்டின் கண் ஸ்வர்ண குமாரி தனியே உட்கார்ந்திருக்கின்றாள். ஹேமசந்திரன் வந்து சேர்ந்தான்.

“பெண்ணே ! இப்பொழுது உன் மனது எப்படி யிருக்கிறது?”

“சரிதான்! சிறிது நாற்காலியைச் சற்றே விலகிப் போட்டுக் கொண்டு பேச வேண்டும்.”

“அடடா! இந்தக் குணம் இன்னும் மாறவில்லை போல் இருக்கிறதே! ஸுரிய பாபு நீ சரிப்பட்டு வந்து விட்டாயென்று சொன்னாரே.”

“ஆமாம்! அவருடைய கட்டாயத்தின் பேரில் சரிப்பட்டு விட்டேன்.”

“ஆனால், என்னை விவாகம் செய்து கொள்வதில் உன் மனதிற்குத் திருப்தி கிடையாதோ?

“கிடையாது.”

“அது எப்படியேனும் போகட்டும். உன் தகப்பனார் பலவந்தத்தின் பேரிலாவது நீ என்னை விவாகம் செய்து கொள்ளப்போவது நிச்சயந்தானே”

“ஆமாம்.”

“சபாஷ்! ஸ்வர்ணா, மெத்த சந்தோஷம், நீ இனி என் மனைவிதானே! அடடா என்ன சௌந்தரியம்! என்ன செளந்தரியம்! உன்னைப் பெறுவதற்குப் பட்ட பாடெல்லாம் தகும்! தகும்! கண்ணே ஒரு முத்தம் தர மாட்டாயா?”

“நாற்காலியை விலகிப் போட்டுக் கொள்ளும்.”

“நீ எனக்கு மனைவி யென்பதோ நிச்சயமாய் விட்டது. மூடபக்தியுள்ள ஹிந்துக்களைப் போல நாம் விவாகச் சடங்குகளுக்குக் காத்திருப்பது அவசியமில்லை யல்லவா? விவாஹ பலனை இப்போதே ஏன் அனுபவித்துக் கொள்ளக் கூடாது? இனி உனது திவ்விய சரீரம் என்னுடையதுதானே!”

“விவாக தினத்திலேயே நான் இறந்து போய்விட்டால் எனது சரீரம் உமதாக மாட்டாதல்லவா?”

“அப்படியா யோசிக்கிறாய்? ஆனால் விவாகப் பயனை இப்பொழுதே நுகர்ந்தறிகின்றேன்” என்று சொல்லி ஹேமசந்திரன் பலவந்தமாகத் தழுவக் கையெடுக்கின்றான்.

ஸ்வர்ண குமாரி “கோகோ” என்றலறத் தொடங்கி விட்டாள்.

திடீரென்று கொடி மாடத்திற்குப் பின்னே புதரில் பதுங்கி நின்ற மனோரஞ்ஜனன் கையும் தடியுமாக வந்து ஹேமசந்திர பாபுவைப் பிடித்து வெளியே தள்ளி நையப் புடைத்தான். இந்தக் கலவரையிலே தந்தையாகிய ஸுரியகாந்த பாபுவும் வந்து விட்டார். மகள் கீழே மூர்ச்சை யுண்டு கிடக்கிறாள். வரும்போது குடித்து வந்த கள்ளின் வெறியாலும், அடிபட்ட கோபத்தாலும் ஹேமசந்திரன் ஏதோ வாய்க்கு வந்தபடி உளறினான்.

உடனே ஸுரியகாந்தர் மனோரஞ்ஜனனைப் பார்த்து “ஏதடா! பையலே நீ இங்கே ஏன் வந்தாய்? இதெல்லாம் என்ன குழப்பம்?” என்று கேட்டார்.

மனோரஞ்ஜனன் “ஐயா, உமது குமாரத்தி மூர்ச்சை யுண்டு விழுந்து கிடக்கிறாள், இன்னும் சிறிது நேரம் கவனியாம லிருந்தால் மிகவும் அபாயம் நேர்ந்துவிடும். அதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யும். மற்ற விஷயங்கள் பிறகு பேசிக் கொள்ளலாம்” என்றான்.

அதன்படியே ஸூரியகாந்தர் மகளை வீட்டிற் கெடுத்துச் சென்று வேண்டிய சிகிச்சைகள் செய்ததன் பேரில் ஸ்வர்ண குமாரிக்கு முர்ச்சை தெளிந்தது. இரண்டு மணி நேரத்திற்கப்பால் ஸுரிய பாபு வந்து மகளிடம் விசாரணை செய்தததில், அவள் உண்மையாக நடந்த விஷயங்களை யெல்லாம் தெரிவித்தாள்.

அவள் சொல்வதெல்லாம் மெய்யென்று அவருக்குப் புலப்பட்டு விட்டது. ‘அடடா! நமது குடும்பத்திற்குப் பெரிய அவமான மிழைக்கத் தெரிந்த பாதகனுக்கா பெண் கொடுக்க எண்ணி யிருந்தேன்?” என்று தம்மைத் தாமே நொந்து கொண்டு ஸுரியகாந்தர் சென்று விட்டார்.

மறுநாட் காலை மகளிடம் வந்து, “பெண்ணே உனது மனோரஞ்ஜனனை நான் நேற்றுதான் நன்றாக உற்றுப் பார்த்தேன், அவன் செல்வமில்லாது வறியனா யிருந்த போதிலும் ரூபத்தினாலும் அறிவினாலும் நமக்கு மருமகனா யிருப்பதற்கு யோக்கியதை யுடையவனாகவே காணப்படுகின்றான், அவன். ஹிந்து மார்க்கத்தினின்றும் நீங்கி பிரம்ம சமாஜத்தில் சேர்ந்து கொள்ளும் பக்ஷத்தில் உங்களிருவருக்கும் விவாஹம் முடித்து வைப்பதில் எனக்கு யாதொரு ஆக்ஷேபம் கிடையாதென்று அவனிடம் தெரிவித்துவிடு” என்று சொல்லிச் சென்று விட்டார்.

இது முறையே மனோரஞ்சனனுக்குத் தெரிவிக்கப் பட்டது. ஆயினுமென்ன பயன்? மனோரஞ்சனன் தான் பிரம ஸமாஜத்தில் சேர்ந்து கொள்வானாயின் தனது தாய் மனமுடைந்து இறந்து போவாளென்பதை நன்றாக அறிவான்.

எனவே, தாயினிடத்து அன்பு ஒருபுறமும் ஸ்வர்ண குமாரியின் மீது மையல் மற்றொரு புறமும் அவனது மனதை இழுக்க இன்ன செய்வதெனத் தெரியாமல் திகைப்பா னாயினான். இவ்வாறே ஒன்றரை வருஷகாலம் கழிந்து விட்டது. இவன் கடைசிவரை பிரம சமாஜத்தில் சேராமலே யிருந்துவிடும் பக்ஷத்தில் தான் விவாகம் செய்து கொள்ளாமலே யிருந்துவிட வேண்டுமென ஸ்வர்ண குமாரி நிச்சயித்துக் கொண்டிருந்தாள்.

$$$

அத்தியாயம் – 4

இப்படி யிருக்க 1906-ம் வருஷம் கல்கத்தாவிலே காளிபூஜை திருவிழா நடந்து கொண்டிருந்த (நவராத்திரி) காலத்திலே ஸ்வர்ண குமாரி தனது வீட்டு அடியிலே ஒரு பஞ்சணை மீது சாய்ந்து கொண்டு  ‘ஸந்தியா’ என்னும் தினசரிப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தாள். அதில் திடீரென அவளது கண்களுக்குப் பின்வரும் குறிப்புத் தென்பட்டது.

“சாந்த்பூர்வாசி யாகிய ஸ்ரீயுத மனோரஞ்ஜன் பானர்ஜி நேற்று மாலை பிரம ஸமாஜத்திலே சேர்ந்து விட்டார். இவர் மிகுந்த திறமையும் புகழுமுள்ள அதி வாலிபராதலால் இவர் ஹிந்து மார்க்கத்தினின்றும் பிரிந்து விட்ட விஷயம் எங்கே பார்த்தாலும் பேச்சாய்க் கிடக்கிறது.”

மேற்கண்ட வரிகளைப் படித்தவுடனே ஸ்வர்ண குமாரிக்குப் புளகமுண்டாய் விட்டது. ஆனந்த பரவசத்திலே அமிழ்ந்து விட்டாள். உடனே மற்றோரிடத்தில் மனோரஞ்ஜனனுடைய பெயர் காணப்பட்டது. அதென்ன வென்று பார்த்தாள். அதிலே,

“சென்ற சில தினங்களாக லோகமான்ய பாலகங்காதர திலகர் புனாவிலிருந்து நமது நகரத்திற்கு வந்து சுதேசீயம், ஸ்வராஜ்யம் என்ற பெரு விஷயங்களைப் பற்றிப் பதினாயிரக் கணக்கான ஜனங்களின் முன்பு உபந்நியாசங்கள் புரிந்து வருகின்றார். இவருக்கு நடக்கும் உபசாரங்களும் சிறப்புக்களும் முடியரசர்களுக்குக்கூட நடக்கமாட்டார். அப்படி யிருக்க இவருடைய கோட்பாடுகளுக்கு விரோதமாகச் சில வாலிபர்கள் சாந்த்பூர் ஸ்ரீ மனோரஞ்ஜன் பானர்ஜியின் அக்கிராசனத்தின் கீழ் ஒரு எதிர்க் கூட்டங் கூடி இந் நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் சில நிந்தனைத் தீர்மானங்கள் செய்து கொண்டார்களென அறிந்து விசன மடைகிறோம்”

என்று எழுதப்பட்டிருந்தது.

இதைக் கண்டவுடனே ஸ்வர்ண குமாரிக்கு மனம் பதைத்து விட்டது. இவள் குழந்தை முதலாகவே ஸ்ரீ பாலகங்காதர திலகரைத் தெய்வம் போலக் கருதி வந்தவள். இவளுக்கு மனோரஞ்ஜனனிடமிருந்த அன்பைக் காட்டிலும் சுதேசத்தின் மீதுள்ள அன்பு பதினாயிர மடங்கு வன்மை யுடையது.

‘சுதேச பக்தர்களின் திலகமாகிய பாலகங்காதர திலகருக்கு விரோதமாக உழைக்கின்ற ஸ்வஜன விரோதியினிடமா நாம் இத்தனை நாள் காதல் கொண்டிருந்தோம்? இவனையா மாசற்ற குமரனென் றெண்ணி மதி மயங்கினோம்?’ என்று பலவாறு யோசித்து மிகவும் வருந்துவாளாயினாள்.

இவள் நிலைமை இங்ஙனமாக, தன் கண்போல் வளர்த்த ஒரே ஆசைக் குமாரன் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கி விட்டானென்று கேள்வியுற்ற வுடனே மனோரஞ்ஜனனுடைய தாய் மூர்ச்சித்து விழுந்து இறந்து போய் விட்டாள்.

இந்தச் செய்தி கேட்டவுடனே அலறிக்கொண்டு சாந்த்பூருக்கு வந்த மனோரஞ்ஜனன் தனது தாயின் கிரியைகளை யெல்லாம் ஹிந்து ஆசாரங்களின்படி ஒரு பந்துவின் மூலமாக நடப்பித்துவிட்டு ஸ்வர்ண குமாரியைப் பார்க்கச் சென்றான்.

அங்கே வீட்டில் ஸ்வர்ண குமாரி யில்லை. அவளுடைய தந்தை பின்வரும் கடிதத்தை மனோரஞ்ஜனனிடம் கொடுத்தார்,

“எனது காதலனா யிருந்த மனோரஞ்ஜனனுக்கு,

நெடுங்காலமாக உறங்கி நின்ற நமது சுதேச மாதா இப்போது கண்விழித்திருக்கிறாள். நமது நாடு மறுபடியும் பூர்வகால மஹிமைக்கு வருவதற்குரிய அரிய முயற்சிகள் செய்து வருகின்றது. இந்த முயற்சிகளுக்கு விரோதமிழைக்கும் ஸ்வஜனத் துரோகிகளின் கூட்டத்திலே நீயும் சேர்ந்து விட்டாயென்று கேள்வியுற்றவுடனே எனது நெஞ்சம் உடைந்து போய்விட்டது, இனி உன்னைப் பற்றி வேறு விதமான பிரஸ்தாபம் கேட்கும் வரை உன் முகத்திலே விழிக்கமாட்டேன். பெற்ற தாய்க்குச் சமானமான தாய்நாட்டின்மீது அன்பு செலுத்தாத நீ என்மீது என்ன அன்பு செலுத்தப் போகிறாய்? நமது வாலிப எண்ணங்களைப் பற்றி நீ திருந்திய பிறகு யோசனை செய்து கொள்ளலாம், நான் காசியிலே எங்கள் அத்தை வீட்டிற்குச் சென்று ஒரு வருஷம் தங்கியிருக்கப் போகிறேன். அங்கே நீ என்னை வந்து பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன்.”

இங்ஙனம் இக் கடிதத்தைப் பார்த்தவுடனே மனோரஞ்சனன் மனம் தீயிலகப்பட்ட புழுவைப் போலத் துடிக்கலாயிற்று.

இப்போது மனோரஞ்ஜனன் புனாவிலே திலகரிடம் தேசபக்திப் பாடங்கள் படித்து வருகிறானென்று கேள்வி யுறுகின்றோம்.

  • இந்தியா (02.02.1907)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s