இந்தியா (30.03.1907) சித்திர விளக்கம்

-மகாகவி பாரதி

மிகப் பெரிய கட்டுரையில் தெரிவிக்க வேண்டிய கருத்தை ஒரே கருத்துப்படம் மூலமாகத் தெரிவித்து விடலாம். எனவேதான் அது கருத்துப்படம் அல்லது ‘கார்ட்டூன்’ எனப்படுகிறது. தமிழில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர், நமது இதழியல் தந்தை மகாகவி பாரதியே.

அவர் தமது ‘இந்தியா’ இதழில் முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட சித்திர விளக்கங்களே, தமிழ் இதழியலில் கார்டூன்களின் துவக்கம். இங்கு இந்தியா (30.03.1907) இதழில் வெளியான சித்திர விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

நமது சித்திரத்திலே யானை யிருப்பது இந்திய ஜனங்களைக் குறிப்பிடுகின்றது.

இந்திய தேசத்தை யானை யென்று சொல்வதற்குப் பல முகாந்தரங்களிருக்கின்றன. மிகுந்த சாந்தம், அளவற்ற பலம்; ஆனால் தன் பலத்தைத் தான் எளிதிலே அறிந்து கொள்ளாமை. மனதிலே ஓர் நிச்சயம் தோன்றும் பக்ஷத்தில் அதை அந்த க்ஷணமே நிறைவேற்றிக் கொள்ளும் திறமை முதலியன யானையின் குணங்கள். இவை இந்தியா தேசத்தாரிடமும் இருக்கின்றன.

இந்த யானையின் கழுத்து மேலே ஏறி ஸவாரி செய்திறவர் ஜான் புல் (John Bull) துரை; அதாவது ஆங்கிலேய ஸர்க்கார். இதன் முதுகிலே சுமத்தி யிருக்கும் மூட்டைகளெல்லாம் வரிச் சுமைகள் – சுங்க வரி, நில வரி, தொழில் வரி, வருமான வரி முதலிய சுமக்க முடியாத தீர்வைகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. இந்தச் சுமைகளைப் பெரும்பாலும் துரை தன்னுடைய சொந்த அனுகூலத்தின் பொருட்டாகவே ஏற்றி யிருக்கிறார்.

இவ் வருஷத்திலே ஒரு சிறு உப்புவரிச் சுமையை மட்டும் கீழே எடுத்துப் போடுகிறார். உடனே அந்தத் தாராள செய்கையைப் பற்றி அவருக்கே அளவிறந்த சந்தோஷம்.

யானையைத் தட்டிக் கொடுத்து  “ஏ, மூட யானையே, பார்த்தாயா உன்னிடத்தில் நான் எத்தனை கருணை வைத்திருக்கிறேன்! உனக்கு முதுகு வலிக்குமே யென்றெண்ணி உப்புச் சுமையில் ஒரு பகுதியைக் கீழே தூக்கி யெறிந்துவிட்டேன். எனக்கு ஸலாம் போடு!” என்கிறார்.

அடடா! துரையின் கருணையை என்ன சொல்வோம்! துரை இப்படி சந்தோஷ மடைந்து கொண்டிருக்கிறார். யானை மனதிலே என்ன ஹடம் வைத்துக் கொண்டிருக்கிறதோ, யார் அறிவார்?

இந்தியா (30.03.1907)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s