-ஆசிரியர் குழு
மகாகவி பாரதியின் பகவத் கீதை தமிழாக்கம் ‘கடமையைச் செய்!’ என்ற தலைப்பில் விஜயபாரதம் பிரசுரத்தால் நூலாக வெளியிடப்படுகிறது. இந்த நூலில் இடம் பெறும் பதிப்புரை இது....

பகவத் கீதை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வார்த்தைகளில் கடல் போன்ற வேத – சாஸ்திர ஞானத்தின் சாரமாக விளங்குகிறது. கீதையின் விசேஷமே அது தனி மனிதர்களை நோக்கிப் பேசுகிறது. கீதையைப் படிப்பவர்கள் தங்களை அர்ஜுனனாக உணர்ந்து கொண்டு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களைக் கேட்கும் போது, அவரவர் துன்பங்களுக்கு மருந்தாக ஆகிறது. ஸ்ரீ கிருஷ்ண- அர்ஜுன உரையாடல் வழியே பரமாத்மா ஜீவாத்மாவிற்கு வழங்கும் உபதேச அமுதமே பகவத் கீதை எனும் ஞான சாஸ்திரம்.
ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் போன்ற ஆச்சார்ய புருஷர்கள் தொடங்கி, சமீப காலத்தில் விவேகானந்தர், அரவிந்தர், திலகர் போன்ற எண்ணற்றோர் பகவத் கீதைக்கு உரைகளும், கட்டுரைகளும் வழங்கியுள்ளனர். மகாகவி பாரதியின் பகவத் கீதை தமிழ் வடிவம் இவற்றில் கவனிக்கத் தகுந்த ஒன்றாகும். பாரதியார் சமஸ்கிருதத்திலும் புலமை மிக்கவர். கீதையின் மூல சுலோகங்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை, ரத்தினச் சுருக்கமாக அவர் அளித்திருக்கும் விளக்க உரையானது, எளிமையும் இனிமையும் கூடிய இலக்கியப் பொக்கிஷமாகும்.
மகாபாரதத்தின் பகுதியாகிய ‘பகவத் கீதை’யில் கண்ணனை அத்வைத வேதாந்தத்தின் சிகரமாகக் காண்கிறோம்.
“நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்ப் பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்”
விளங்குகிறான் கண்ணன் என பாரதியார் (கண்ணன் பாட்டு – 4) கூறுவது, அவர் பகவத் கீதையின் தாக்கத்தைப் பெற்றிருந்தார் என்பதைக் காட்டுகிறது. ‘கர்மம் செய்வதிலே தான் உனக்கு அதிகாரம்; அதன் பயனில் ஒருபோதும் இல்லை’ என்பதும் கண்ணபிரானின் அருள்வாக்கு. இதையே பாரதியும் கீழ்க் கண்டவாறு தன் பாடலில் எடுத்துரைக்கின்றார்.
“செய்தல் உன் கடனே - அறம் செய்தல் உன் கடனே - அதில் எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே”
-என்கிறார். பாரதியாரின் பாடல்களில் பகவத் கீதை மேற்கோள் வரும் இடமெல்லாம் இலக்கிய நயத்தைக் காணலாம்.
மேலும் ஆரிய தரிசனம் என்ற பாடலில், கிருஷ்ணார்ஜுன தரிசனம் என்ற தலைப்பில் கீதையின் சாரத்தைப் பிழிந்து தருகிறார்:
“வில்லினை எடடா! கையில் வில்லினை எடடா! அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா. வாடி நில்லாதே – மனம் வாடி நில்லாதே;– வெறும் பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே”
– என்கிறார்.
மகாகவி பாரதியின், பகவத் கீதை தமிழ் வடிவமான இந்த மகத்தான நூலினை ‘கடமையைச் செய்!’ எனும் தலைப்பில் வெளியிடுவதில் விஜயபாரதம் பிரசுரம் பேருவகை கொள்கிறது. இந்த நூலினை சிறந்த முறையில் தொகுத்தளித்த சேக்கிழான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நூலின் பக்க வடிவமைப்பினை சீரிய முறையில் செய்து கொடுத்த கௌரி கிராஃபிக்ஸ், நேர்த்தியான அட்டைப்பட ஓவியம் வரைந்தளித்த கோவை ஓவியர் ஜீவானந்தன் மற்றும் இந்நூலின் உருவாக்கத்தில் பங்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல!
பாரதியின் இந்த பகவத் கீதை தமிழ் வடிவ நூலினைப் படிப்பதன் வாயிலாக, பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்து, அவனுக்கு ஞானத்தை அருளியது போல, படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் பகவான் கிருஷ்ணரே கற்பக விருட்சமாக ஞானத்தை அருளி நல்வழி காட்ட, கீதாச்சாரியன் கண்ணனை மனமாரப் பிரார்த்தனை செய்கிறோம்.
விஜயபாரதம் பிரசுரம்
$$$