-கவியரசு கண்ணதாசன்
ஆண்களை வெறுக்கும் நாயகியின் மனதை மாற்ற முயலும் நாயகன் பாடுவதாக அமைந்த இப்பாடல், கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் இடம்பெற்றது. இன்றைய பெண்ணியவாதிகளுக்கு இப்பாடல் பிடிக்காமல் போகலாம்; ஆனால், பெண்களுக்குப் பிடிக்கும். கவியரசரின் வைர வரிகள் வசீகரிக்காமலா போகும்?

கம்பன் ஏமாந்தான்!
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே,
கற்பனை செய்தானே!
கம்பன் ஏமாந்தான்!
அம்பு விழி என்று ஏன் சொன்னான்,
அது பாய்வதனால் தானோ? அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்,
அது கொதிப்பதனால் தானோ?
(கம்பன்)
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ? அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ?
(கம்பன்)
வள்ளுவன், இளங்கோ, பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் – அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல, அட
நானும் ஏமாந்தேன்!
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே? ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே?
(கம்பன்)
திரைப்படம்: நிழல் நிஜமாகிறது (1978) இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடகர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
$$$