-திருநின்றவூர் ரவிகுமார்

ஒரு நாள், ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் பாகவதர்கள் கூட்டத்தில் திவ்ய பிரபந்த பாசுரங்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். ‘தேனார் பூஞ்சோலை திருவேங்கடம்’ என்ற பாசுர வரிக்கு விளக்கம் அளிக்கும்போது, திருமலையில் பூந்தோட்டம் அமைத்து சுவாமிக்கு புஷ்ப கைங்கரியம் செய்ய விருப்பமுள்ளவர் யாரேனும் உண்டோ என்று கூட்டத்தினர் இடையே வினவினார்.
அந்தக் காலத்தில் திருமலையில் தங்கி இருப்பதும் அங்கேயே பூந்தோட்டம் அமைத்து வளர்ப்பதும் மிகவும் கடினமான காரியமாக இருந்தது. ஆச்சாரியரின் ஆவலைப் புரிந்து கொண்டாலும் சிரமத்தை எண்ணி சீடர்கள் அமைதியாக இருந்தனர்.
அப்போது அனந்தன் என்ற சீடர் எழுந்து, “தாங்கள் அனுகிரகித்தால் அடியேன் அதற்கு சித்தமாய் இருக்கிறேன்” என்றார். பலரும் பயந்து அமைதியாய் இருக்க அனந்தன் மட்டும் தீரமுடன் எழுந்ததால், அவர் (அனந்தன்+ ஆண் பிள்ளை) அனந்தான் பிள்ளை என்றும் அனந்தாழ்வார் என்றும் அழைக்கப்பட்டார்.
அனந்தாழ்வான் திருமலைக்கு வந்தார்; பூந்தோட்டம் அமைத்தார்; தண்ணீர்த் தேவைக்காக அவர் வெட்டிய ஏரி ‘அனந்தன் ஏரி’ என்று இன்றும் திருமலையில் உள்ளது. அதற்கு அவர் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் கடப்பாரை கோயில் நுழைவாயிலில் இன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏரி வெட்டும்போது அவரது கர்ப்பிணி மனைவிக்கு உதவிய சிறுவனை அவர் தாக்க, அந்த சிறுவன் தாடையில் ரத்தம் சிந்தியது. அவன் ஓடினான்; கோயிலில் சென்று மறைந்தான். சீனிவாசப் பெருமாள் தாடையில் ரத்தம் வர சிறுவன் வடிவில் வந்தது பெருமாளே என்று அனைவரும் உணர்ந்தனர். ரத்தத்தை நிறுத்த போடப்பட்ட பச்சைக்கற்பூரக் கட்டுதான் இன்றும் பெருமாளின் தாடையில் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என்பது ஐதீகம்.
அந்த அனந்தாழ்வான் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அவரது இறைப் பற்றையும் உறுதியான இறை நம்பிக்கையையும் தெரிவிக்கிறது.
ஆறா, குளமா?
ஒருமுறை, திருமலையில் அனந்தாழ்வானை பாம்பு தீண்டியது. அவர் அதைக் குறித்து எதுவும் கவலைப்படாமல் மலர் பறித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்தவர்கள், “பாம்புக் கடிக்கு மருந்து இட வேண்டாமா? மந்திரிக்க வேண்டாமா?” என சொன்னார்கள்.
அதற்கு அவர், “கடித்தவன் (பாம்பு) வலிமை உடையவன் என்றால் நான் விரஜையில் நீராடி பரமபத நாதனை சேவிப்பேன் (விரஜா நதி பரமபதத்தில் உள்ளது) கடிபட்டவன் (நான்) வலிமையுள்ளவனாய் இருந்தால் இங்கே சுவாமி புஷ்கரணியில் நீராடி மலையப்பனை சேவிப்பேன்” என்றார். என்னே இறைப்பற்று! எவ்வளவு உறுதி!
முத்துத்தாண்டவர் வாழ்விலும் இதுபோல நடந்துள்ளது. அவர் யார்?


சீர்காழி மூவர்
தேவார மூவர், சங்கீத மும்மூர்த்திகள் இவர்களுக்கு இடையில் தமிழிசை வளர்த்த மூவரை இசை உலகம், பக்தி உலகம் மறக்காது. சீர்காழி அருணாசல கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை என்ற மூவரும் சீர்காழி பகுதியில் வாழ்ந்ததால் ‘சீர்காழி மூவர்’ என்றே அழைக்கப் படுகிறார்கள்.
1560 முதல் 1640 வரை 80 ஆண்டுகள் வாழ்ந்தவர் முத்துத் தாண்டவர். தாண்டவர் என்று இயற்பெயர். முத்து முத்தான பாடல்கள் தந்ததால் முத்துத் தாண்டவர் ஆனார் என்பார்கள்.
சிறு வயதிலேயே பயங்கரமான நோய் வந்ததால் (தொழுநோய் என்றும் சிலர் எழுதி உள்ளார்கள்) உறவினர் யாவரும் கண்டு கொள்ளாமல் இவரை ஆதரவற்ற நிலையில் கோயிலில் விட்டு விட்டனர்.
கோயில் பிரசாதம் உண்டு, அங்கேயே குளத்தடியில் உறங்கி வாழ்நாளை ஓட்டி வந்தவருக்கு, ஒரு நாள் பராசக்தியே பத்து வயது சிறுமியாக வந்து உணவு தந்து, “தாண்டவா, நீ சிதம்பரம் போ! நடராஜரைப் பாடு. உன் நோய் தீரும்” என்று சொன்னாள். “பாடத் தெரியாதே” என்று இவர் தவிக்க, “யாராவது முதலடி தருவார். உடனே நீ பாடு” என்றாள் உமையம்மை!
சிதம்பரம் கோயிலில் நுழைந்ததும் யாரோ ஒரு சேவார்த்தியிடம், தீக்ஷிதர் “பூலோக கைலாசகிரி சிதம்பரம்தான்” என்று சொல்ல, உடனே நடராஜரின் அருள்வாக்குப் பெற்றதாய் மகிழ்ந்த முத்து தாண்டவர் “பூலோக கைலாசகிரி” என்று பாடத் தொடங்கினார். அவரது நோயும் இறையருளால் குணமானது.
இசையால் இறையருள் பெற்ற முத்துத் தாண்டவர், கோயில் வாழ்வையே மேற்கொண்டு பாடுவதே தன் பணியாக, தரிசனமே ஆனந்தப் பரவசமாக, பிரசாதமே உயிர் வளர்க்கும் அமுதமாக வாழ்ந்து வந்தார்.
இவர் நிறைய பாடல்களைப் பாடியிருந்தாலும் இன்று சுமார் எண்பது பாடல்களே கிடைத்துள்ளன. பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அமைப்பை இவர்தான் பாடல்களில் அறிமுகம் செய்தார் என்பார்கள்.
அரவு தீண்டலும் அசையா உறுதியும்
ஒரு நாள் முத்து தாண்டவரை பாம்பு தீண்டி விட்டது. பக்கத்தில் இருந்தவர்கள் மந்திரிக்கப் போகலாம் என அழைத்த போது “அற்புத மருந்து அம்பலத்தே உள்ளது” என்றார். புதிய பாடல் பிறந்தது….
பல்லவி அருமருந்தொரு தனி மருந்து அம்பலத்தே கண்டேன்! அனுபல்லவி திருமருந்துடன் பாக மருந்து தில்லை அம்பலத்தே ஆடும் மருந்து (தித்தி தித்தி என்று ஆடும் மருந்து) இருவினைகளை அறுக்கும் மருந்து ஏழை அடியார்க்கு இரங்கும் மருந்து சரணம் கொன்றை தும்பை அணிந்த மருந்து கோதை மீதில் படர்ந்த மருந்து மன்றுள்ளே நின்று ஆடும் மருந்து மாணிக்கவாசகர் கண்ட மருந்து
என்று பாடியவாறு குஞ்சிதபாதம் தரிசிக்க விஷம் இறங்கிவிட்டது.
இப்படிப்பட்ட மகான்கள் வாழ்ந்த ஆன்மிக பூமி இது.
$$$