அறிவியலின் பிதாமகரும் ஆன்மிக சூரியனும்

-அரவிந்தன் நீலகண்டன்

தற்கால தமிழ் ஆய்வாளர்களுள் திரு. அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிடத் தக்கவர். ஹிந்துத்துவ சிந்தனையுடன் கூடிய இவரது ஆய்வுகளும் நூல்களும் தேசிய அளவில் கவனம் பெற்று வருகின்றன. சுவாமி விவேகானந்தரையும் விஞ்ஞானி ஐன்ஸ்டைனையும் ஒப்பிட்டு இவர் எழுதிய கட்டுரை இங்கே...

சுவாமி விவேகானந்தரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் – ஓர் ஒப்பீடு 

முன்னுரை: 

சுவாமி விவேகானந்தர் (1863-1902) பாரதத் துறவி. சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலகட்டத்தில் பாரத தேசம் பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டிருந்தது. அதற்கு முன்னரும் அன்னிய ஆட்சியாளரிடம் அடிமைப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் அரசாட்சி பாரதத்தின் மீது கடுமையான பொருளாதாரச் சுரண்டலை ஏற்படுத்தியிருந்தது. பாரதத்தின் சமுதாய வாழ்க்கை தேக்க நிலை அடைந்திருந்தது. அத்துடன் அன்னிய ஆக்கிரமிப்பாளர்கள் பாரதத்தின் பண்பாட்டு, ஆன்மிகப் பாரம்பரியங்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். பாரதம் ஒரு இருண்ட பிரதேசமாகவும், பாரத சமுதாயம் பண்பாடற்ற சமுதாயமாகவும், ஐரோப்பியரைக் காட்டிலும் இழிந்த சமுதாயமாகவும் உலகத்துக்கும், பாரத மக்களுக்குமே காட்டப்பட்டன.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955) அறிவியலாளர். பிறப்பால் யூதர். அவர் வாழ்ந்த ஜெர்மனியில் யூத வெறுப்பு, சுவாசித்த காற்றோடு கலந்திருந்தது. ஐன்ஸ்டைன் அமெரிக்காவுக்கு அகதியாக வர நேரிட்டது. இயற்பியலின் முக்கிய புரட்சியின் மைய நாயகனாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விளங்கினாலும், அவரது அறிவியலும் அவரது தத்துவ சிந்தனையும் அவருக்கு பெரும் எதிர்ப்பை உருவாக்கின. ஜெர்மனியில் யூதர் என்பதால் ஐன்ஸ்டைன் வெறுக்கப்பட்டார் என்றால் அவர் தஞ்சம் புகுந்த அமெரிக்காவிலும் அவரது தத்துவ- சமுதாய சிந்தனைகளுக்காக மதவாதிகளால் அவர் எதிர்க்கப்பட்டார்; தாக்கப்பட்டார்.

ஆக இரு மனிதர்கள். காலத்தால் சற்று முற்பட்டவராக விவேகானந்தர். பிற்பட்டவராக ஐன்ஸ்டைன். ஒருவர் ஆன்மிகத் துறவி, இந்து சாது. மற்றொருவர் பிறப்பால் யூதர், அறிவியலாளர். முழுக்க முழுக்க வேறுபட்ட பண்பாட்டு சமுதாயச் சூழ்நிலைகள். ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில், மானுடம் குறித்த முக்கியமான விஷயங்களில் இருவரது பார்வையும் ஒன்றுபட்டது தான்.

ஆனால் இதை மற்றொரு விதத்திலும் பார்க்கலாம். இயற்பியலில் ஒரு மகத்தான புரட்சியின் மையத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும், ஆன்மிகத்தில் ஒரு பெரும் புரட்சியின் மையத்தில் சுவாமி விவேகானந்தரும் இருந்தனர்.

இருவருமே நிறுவனங்களுக்கு வெளியில் உண்மைகளைக் கண்டடைந்தனர். அதே நேரத்தில் இருவரது சமுதாயத்தைச் சார்ந்த மக்களும் கொடுமைகளுக்கும் பொய் பிரசாரங்களுக்கும் ஆட்படுத்தப்பட்டனர்.

தாம் வாழ்ந்த சமுதாயங்களின் குறை, நிறைகளை அவர்கள் வெளிப்படையாகக் கூறினர். பாரதத்தின் சாதியக் கொடுமைகளை, சமுதாயத் தேக்க நிலைகளை சுவாமி விவேகானந்தர் சாடினார். அதே நேரத்தில் பாரதத்தின் பாரம்பரியத்திலிருந்தே அதன் எதிர்காலத்தை சிறப்பானதாக்க வழிகாட்டுதலைப் பெற்றார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் யூத மறைஞான மரபுகளை நவீன சமுதாயத்தில் மீட்டெடுத்தார். மேற்கின் ஆயுதக் கலாச்சாரத்தையும், ஆப்பிரிக்க ஆசிய நாடுகளின் மீது அது செலுத்தும் பேராதிக்க மனோபாவத்தையும் அவர் எதிர்த்தார். எனவே இருவரது கருத்துகளும் ஒன்றுபட்ட தன்மை கொண்டதில் அதிசயமில்லை என்றும் சொல்லலாம்.

இறை தரிசனங்கள்:

ஐன்ஸ்டைனின் கடவுள் கோட்பாடு ‘ஆளுமை கொண்ட கடவுள்’ (Personal God) என்பதை நிராகரித்தது. அச்சத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கடவுள் – அந்தக் கடவுளின் தீர்ப்புக்கள், பரிசுகள், தண்டனைகள் – இவற்றின் அடிப்படையில் எழுந்த ஒழுக்கவிதிகள் ஆகியவற்றை ஐன்ஸ்டைன் நிராகரித்தார். அவரது மரணத்துக்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட பேட்டியில் அவரது கடவுள் நம்பிக்கை குறித்துக் கேட்கப்பட்டபோது அவர்கூறினார்:

கடவுளைப் பொறுத்தவரையில், நான் மதச்சபையின் (Church) அதிகாரத்தின் அடிப்படையில் அமைந்த எந்த நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து பொதுஜனங்களுக்கு கோட்பாட்டு நம்பிக்கைகள் கொடுக்கப்படுவதை நான் விரும்பியதில்லை. இம்மை குறித்த அச்சம், மறுமை குறித்த அச்சம், கண்மூடித்தனமான நம்பிக்கை ஆகியவற்றை நான் ஏற்றுக்கொண்டதேயில்லை.

ஆளுமைத்துவமுடைய இறைவன் இல்லை என நான் உங்களுக்கு நிரூபிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நான் (‘கடவுள்’ எனும் போது) அத்தகைய இறைவனைக் குறித்து பேசுவதாக இருந்தால், என்னைப் பொய்யன் என்றுதான் சொல்ல வேண்டும். இறையியல் கற்பிக்கும் ‘நன்மைகளுக்கு பரிசும், தீமைகளுக்கு தண்டனையும் வழங்கும் இறைவன்’ மீது எனக்கு நம்பிக்கை இல்லை. *1 

ஐன்ஸ்டைனின் ஆளுமைத்துவ கடவுள் கோட்பாட்டு மீதான எதிர்ப்பு சுவாமி விவேகானந்தரில் மேலும் விரிவாக்கம் பெறுகிறது:

நிர்குணக் கடவுள் வாழும் கடவுள் ஆவார். ஆளுமைத்துவமுடைய கடவுளுக்கும் நிர்குணக் கடவுளுக்குமான வேறுபாடு என்னவென்றால், ஆளுமைத்துவமுடைய கடவுள் ஒரு மனிதன் தான். ஆனால் நிர்குண க் கடவுள் மனிதர்கள், தேவதைகள், விலங்குகள் மற்றும் நம்மால் காணமுடியாதவையாகவும் இருக்கிறார். ஏனென்றால் நிர்குணக் கடவுள் அனைத்து ஆளுமைகளையும் உள்ளடக்கியவராக இருக்கிறார். பிரபஞ்சமனைத்துமாக இருக்கிறார். அதற்கும் மேலானதான முடிவிலியாகவும் இருக்கிறார். *2 

ஒழுக்கவிதிகளும் மதங்களும்

சுவாமி விவேகானந்தரைப் பொறுத்த வரை மானுட ஒழுக்கத்துக்கும் சமயத்துக்குமான தொடர்பு ஏற்புடையதல்ல. “சமுதாயச் சட்டதிட்டங்களை உருவாக்குவது மதத்தின் வேலை அல்ல” என்று அவர் கூறினார். *3

ஐன்ஸ்டைன் ஒழுக்க விதிகள் மற்றும் சட்டங்கள் ஆகியவற்றை சமயத்துடன் தொடர்புபடுத்துவது மானுட வரலாற்றில் ஒரு தவிர்க்க இயலாத படிக்கல் என்றும், ஆனால் மானுடம் அதிலிருந்து முன்னகர்ந்து செல்ல வேண்டும் என்றும் கருதினார். அவர் கூறினார்:

ஆளுமைத்தன்மை கொண்ட கடவுள் என்ற கருத்து மனிதத்தன்மையுடன் உருவாக்கப்பட்ட ஒன்று என்றே கருதுகிறேன். அதனை முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை…. ஒழுக்கம் மற்றும் மதிப்பீடுகள் முழுக்க முழுக்க மானுடம் மட்டுமே சார்ந்த பிரச்னையாகவே கருதப்படவேண்டும். மானுடத்தின் முதன்மையான பிரச்னையாகவும் கூட. *4 

அறிவியலும் சமயமும்

சுவாமி விவேகானந்தரைப் பொறுத்த வரையில், மதத்துக்கும் அறிவியலுக்குமான தொடர்பில் மதம், அறிவியல் எனும் நெருப்பில் புடம் போட்டு எடுக்கப்பட வேண்டியது எனக் கருதினார்.

“மற்றெந்த அறிவுப்புலங்களையும் போல அறிவின் கண்டடைதல்களால் மதம் தன் இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டுமா கூடாதா? அறிவியலுக்கும் புற அறிதலுக்கும் நாம் பயன்படுத்தும் அதே வழி முறைகள் சமயம் என்னும் அறிவுத்துறைக்கும் பொருந்துமா? என் கருத்து அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதே.

எவ்வளவு விரைவாக அறிவியல் கண்ணோட்டத்தில் மதம் மதிப்பிடப்படுகிறதோ அத்தனைக்கத்தனை அது நல்லது என்பதே என் எண்ணம். அத்தகைய சோதித்தலால் ஒரு மதம் அழிந்துவிடும் எனில் அது எப்போதுமே உபயோகமற்ற, மதிக்கப்படக்கூடாத மூடநம்பிக்கையாகத் தான் விளங்கியிருக்கிறது. அத்தகைய மதம் எவ்வளவு விரைவாக அழிய முடியுமோ அத்தனை விரைவாக அழிய வேண்டும்.

அத்தகைய மதம் அழிவதே மானுட குலத்துக்கு நடக்கக்கூடிய மிகச்சிறந்த விஷயமென நான் கருதுவேன். அத்தகைய விதத்தில் மதம் பரிசோதிக்கப்பட்டால் மதத்தின் அனைத்து தேவையற்ற மோசமான விஷயங்களும் அழிந்து சமயத்தின் சாராம்சமான கரு வெற்றிகரமாக அந்த பரிசோதனையிலிருந்து வெளிவரும் என்றே நான் கருதுகிறேன்.”*5 

வியக்கத்தக்க விதத்தில் இதே கருத்தை மென்மையாக ஐன்ஸ்டைன் தெரிவித்தார். “அறிவியலுடன் மதத்துக்கான பிரச்னை, மதம் குறியீட்டுத்தன்மையின்றி தொன்மங்களை அணுகுவதன் மூலம் அறிவியலுக்கான இடத்துக்குள் அத்துமீறி நுழைவதுதான்” என்று அறிவியலுக்கும் சமய நம்பிக்கைக்குமான மோதலைக் குறித்து ஐன்ஸ்டைன் கருதினார்.

எனவே உண்மையான சமயத் தன்மைக்கு உகந்ததல்லாத இந்த விஷயங்களை மதம் கைவிட வேண்டுமென அவர் கருதினார்:

“குறியீட்டுத்தன்மையைக் கைவிட்ட தொன்மங்களைக் கொண்ட மத சம்பிரதாயங்களினாலேயே மதம் அறிவியலுடனான மோதலுக்கு வருகிறது. எனவே உண்மையான சமயத்தினை நிலைநிறுத்த இத்தகைய மோதல்களைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இத்தகைய மோதல்கள் எழுவதற்கான காரணங்கள் சமயத்தின் தேடலுக்கு அத்யாவசியமானவை அல்ல….பொய், துவேஷம், மோசடி மற்றும் படுகொலைகளை நியாயப்படுத்தும் ஒரு சமுதாயம் நீண்டகாலத்துக்கு ஜீவித்திருக்க முடியாது”. *6 

சமுதாயத்தின் அடிப்படையாக சத்தியமே அமைய வேண்டும் என்பதை சுவாமி விவேகானந்தரும் சுட்டிக் காட்டுகிறார். அவரைப் பொறுத்த வரையில் சத்தியமே ஒரு சமுதாயத்தின் அடிப்படையாக அமைய வேண்டும். அப்படி இல்லாத சமுதாயம், சத்தியத்தை சந்திக்கச் சக்தியற்ற சமுதாயம் வாழ நியாயங்கள் எதுவுமில்லை. அவர் சொல்கிறார்:

சத்தியம் எந்த சமுதாயத்துக்கும் தலை வணங்க முடியாது. அந்த சமுதாயம் மிகப் பழமையானதோ அல்லது மிக நவீனமானதோ சத்தியம் சமுதாயத்துக்கு தலை வணங்காது.சமுதாயமே சத்தியத்துக்கு தலை வணங்க வேண்டும். சமுதாயம் தான் சத்தியத்துக்கு தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டுமே அல்லாது சத்தியம் சமுதாயத்துக்கு ஏற்ப வளைக்கப்பட முடியாது. *7

சத்தியம், சிவம், சுந்தரம்

இத்துடன் ஐன்ஸ்டைன் நிற்கவில்லை. அறிவியலிலிருந்து எவ்வாறு மானுடத்தின் ஆன்மிக சமய வேட்கை தன்னை ஆக்கப் பூர்வமாக மீள் அமைத்துக்கொள்ள முடியும் என்பதை குறித்தும் அவர் சிந்தித்தார்:

மானுட குலத்துக்கு நல்லொழுக்கம் வேண்டுமென விழையும் சமய ஆச்சாரியர்கள், இந்த ஆளுமைத்துவம் கொண்ட இறைவனைக் கைவிட வேண்டும் – அதாவது எந்தக் கோட்பாடு அளவு கடந்த அச்சத்துக்கும் நம்பிக்கைக்கும் மூல ஊற்றாக அமைந்து சமயவாதிகளின் கையில் அளவு கடந்த அதிகாரத்தை கொடுத்ததோ அந்த இறைவன் எனும் கோட்பாட்டைக் கைவிட வேண்டும்.

அதற்கு பதிலாக சுபம் (Good), உண்மை (Truth) மற்றும் அழகு (Beautiful) எனும் தன்மைகளை வெளிக்கொணரச் செய்யப்படும் முயற்சிகளிலிருந்து சமயவாதிகள் இந்த பிரயத்தனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். *8

சுவாமி விவேகானந்தரும் இதையே வலியுறுத்தினார்.  பிரபஞ்ச ஒழுங்கின் அடிப்படையாக சத்தியம்  (Truth), சிவம்  (Good), சுந்தரம் (Beauty) என்பதை அவர் கூறுகிறார். ‘சத்தியம் சிவம் சுந்தரம்’ என்பதை ஒரு பேரண்டங்களெல்லாம் நிறைந்திருக்கும் பெண்மையாக தரிசிக்கும் விவேகானந்தர், அதனை உணருதல் என்பதன் அடிப்படையில் இருப்பது விடுதலை உணர்வே என்கிறார். அனைத்து பௌதீக விதிகளும் அவற்றை கண்டடையும் மானுட முயற்சிகளும் அந்த விடுதலை வேட்கையே என்கிறார் விவேகானந்தர். *9

ஐன்ஸ்டைனும் இந்த சத்திய வேட்கையையே அறிவியல் தேடலின் ஊற்றுக்கண்ணாக அறிகிறார். இதனையே அவர் பிரபஞ்ச சமய உணர்வு என கூறுகிறார். இப்பிரபஞ்சமளாவிய பேருணர்வின் முன்னர் மனிதனின் தனிப்பட்ட ஆசாபாசங்கள் எத்தனை சிறுமையாகி விடுகின்றன. இப்பேருணர்வே அவனை விரிவடைய செய்கிறது. ஐன்ஸ்டைன் கூறுகிறார்:

தனிமனிதன் தன் ஆசாபாசங்களின் வெறுமையை, பொருளற்ற தன்மையை உணர்கிறான். புற இயற்கையிலும் அவன் அகப்புலத்திலும் இருக்கும் ஆழ்ந்த அழகையும் பெரும் ஒழுங்கையும் உணர்கிறான். அவனது தனிமனித வாழ்க்கையானது ஒரு கூண்டுச்சிறையாக அவனுக்குக் காட்சி அளிக்கிறது. அவன் முழுப் பிரபஞ்சத்தையும் ஒரு உன்னத ஒருமையாக உணரத் தலைப்படுகிறான். இதுவே பிரபஞ்ச சமய உணர்வு.…

இவ்வுணர்வின் அழுத்தமான தன்மையை ஷோஃபனர் (Arthur Schopenhauer) மூலம் நாம் அறியும் புத்த சமயம் கொண்டிருக்கிறது. அனைத்துக் காலங்களிலும் சமய மேதைகளால் இது உணரப்பட்டிருக்கிறது. இதற்கு இறையியலோ மதச்சபையோ இறைவனது உருவகமோ தேவை இல்லை.…

இதனை உணர்ந்தவர்கள் அவர்களது சமகாலத்தவர்களால் பலசமயங்களில் நாஸ்திகர்கள் என்றும் சில சமயங்களில் பேரருளாளர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்விதமாகக் காணும் போது டெமாக்ரிட்டஸும், அஸிஸியின் பிரான்ஸிஸும் ஸ்பினோசாவும் ஒரே தன்மை கொண்டவர்கள்தாம்….

அறிவியலுடையவும் கலையுடையவும் முக்கிய பணியே இப்பிரபஞ்ச சமய உணர்வைப் பேணி, அதன் வெளிப்பாடாக அமைந்து, அதனைப் பெறத்துடிப்போருக்கு அளிப்பது ஆகும். *10

 [டெமாக்ரிட்டஸ் (Democritus) கிறிஸ்தவத்துக்கு முந்தைய கிரேக்க ஞானி. அசிசியின் பிரான்ஸிஸ் (St. Francis of Assisi) ரோமன் கத்தோலிக்க துறவி, ஆனால் விலங்குகளுக்கு ஆன்மா உண்டு என கிறிஸ்தவ இறையியலுக்கு எதிராக சொல்லியவர். இது கத்தோலிக்கத்துக்கு எதிரான கத்தாரிய பேதகம் என்பதிலிருந்து பெறப்பட்டது என்றும் கத்தாரிய பேதகம் என்பது இந்திய சமய தாக்கத்தால் உருவானது எனவும் லின் வைட் எனும் வரலாற்றறிஞர் கூறுகிறார். ஸ்பினோஸா (Baruch Spinoza) யூத சமுதாயத்தில் பிறந்த தத்துவ மேதை, அத்வைதக் கோட்பாடு கொண்டவர்; எனவே சமுதாய விலக்கம் செய்யப்பட்டவர்].

அறிவியல் தன்மையை சமயம் அடைய வேண்டுமெனவும், சமய அனுபவமே அதன் அடிப்படையாக அமையவேண்டுமெனவும் சுவாமி விவேகானந்தரும் கருதுகிறார்:

சமயம் மட்டுமே நிச்சயமற்ற அறிவுப்புலமாக இருக்கிறது ஏனெனில் அது அனுபவத்தின் அறிவியலாகக் கருதப்படவில்லை. அவ்வாறு இருக்கக் கூடாது. எல்லாக் காலங்களிலும் அனுபவத்திலிருந்து சமயத்தைப் பெற்றவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்கள் பேரனுபூதியாளர்கள் – மறைஞானிகள். இவர்கள் எந்த மதச்சூழலில் தோன்றியிருந்தாலும் இவர்கள் வெளிப்படுத்தும் சத்தியம் ஒன்றேயாகத் தான் இருக்கிறது. இதுவே உண்மையான அறிவியலின் மதம். எப்படி உலகின் எந்தப் பகுதியில் தோன்றிய கணிதவியலாளனும் ஒரு சத்தியத்தில் மாறுபடுவதில்லையோ அது போல இவர்களும் மாறுபடுவதில்லை.*11

பிராணன் – பிரபஞ்ச சக்தி

சுவாமி விவேகானந்தர் பிராணனை பிரபஞ்ச சக்தியாகக் காண்கிறார். இங்கு ஐன்ஸ்டைனின் பல அறிவியல் தேற்றங்களைக் கவித்துவமாக விவேகானந்தர் முன்னறிவிப்பதாகவே கொள்ளலாம். பொருள் என்பது ஆகாசமே என்கிறார் விவேகானந்தர். ஆகாசத்தை பொருண்மைப் பிரபஞ்சமாக்குவது (material world) சக்தி என்கிறார்.

“பிராணன் எங்கும் நிறைந்த வெளிப்படு சக்தியாக இருக்கிறது. …இந்தப் பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கிற, நாம் சக்தி என்று அழைக்கிற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவது அனைத்தும் பிராணனே. உடல் இயக்கங்களாக, எண்ண சக்தியாக, நாடி ஓட்டங்களாக வெளிப்படுவதெல்லாம் பிராணனே. எண்ணம் முதல் மிகச் சாதாரண சக்தியாக இருப்பவை அனைத்தும் பிராணனின் வெளிப்பாடுகளே.” *12

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கும் இந்தச் சித்தாந்தத்தில் நம்பிக்கை இருந்தது:

“சக்தியே சிருஷ்டியின் அடிப்படை விசை என நான் கருதுகிறேன். என் நண்பர் பெர்குஸன் அதனை எலன் வைட்டால் (elan vital) என அழைக்கிறார். ஹிந்துக்கள் அதனை பிராணன் என்கிறார்கள்.” *13

கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கு எதிராக…

கிறிஸ்தவ மதபோதகர்களால் இந்துக்கள் மிகவும் மோசமாக சித்தரிக்கப்படுவதைக் கண்டு சுவாமி விவேகானந்தர் மிகவும் வேதனையடைந்தார். தங்கள் மதப் பிரசார வேலைகளுக்கு அமெரிக்காவில் பணம் திரட்ட எப்படியெல்லாம் இந்தியாவைக் குறித்தும், இந்துக்கள் குறித்தும் மிக மோசமான சித்தரிப்புக்களை கிறிஸ்தவ மதபோதகர்கள் பரப்பினார்கள் என்பதை நேரடியாகக் கண்டறிந்த விவேகானந்தர் மனம் வெதும்பிக் கூறினார்:

கிறிஸ்துவின் சிஷ்யர்களான இவர்களுக்கு இந்துக்கள் என்ன செய்துவிட்டார்கள்? ஒவ்வொரு கிறிஸ்தவக் குழந்தைக்கும் இந்துக்களை கொடியவர்கள், தீயவர்கள், உலகிலுள்ள பயங்கரமான பிசாசுகள் என்று அழைக்க கற்றுக் கொடுக்கிறார்களே. ஏன்?

கிறிஸ்தவரல்லாத அனைவரையும், குறிப்பாக இந்துக்களை வெறுப்பதற்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் ஞாயிற்றுக் கிழமை பாடத் திட்டங்களில் இப்படிக் கற்பிப்பது ஓர் அம்சமாகும். சத்தியத்துக்காக இல்லாமல் போனாலும் தமது சொந்தக் குழந்தைகளின் நீதி நெறி உணர்ச்சி பாழாகாமல் இருப்பதற்காகவாவது கிறிஸ்தவப் பாதிரிகள் இது போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது.

அப்படிக் கற்பிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது ஈவிரக்கமற்ற கொடிய மனம் படைத்த ஆண்களாகவோ, பெண்களாவோ ஆனால் அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

…. பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று இந்து மகா சமுத்திரத்துக்கு அடியில் உள்ள எல்லா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும் கூட நீங்கள் இன்று எங்கள் மீது வீசுகிற சேற்றின் அளவில் தினையளவு கூட பதிலுக்குப் பதில் செய்வதாக ஆகாது … இது போன்ற ஆக்கிரமிப்பான பொய்ப் பிரசாரங்களையெல்லாம் கிறிஸ்து ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்…

கிறிஸ்துவின் லட்சியத்துடன் இன்றைக்கு மேற்கத்திய நாடுகள் அடைந்துள்ள அபரிமிதமான வளக்கொழிப்பை இணைக்க முடிந்தால் நல்லது தான். உங்களால் முடியாது என்றால் இந்த போகங்களைக் கைவிட்டு அவரிடம் திரும்புவதே நல்லது. *14

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது யூத இனத்துக்கு மேற்கத்திய கிறிஸ்தவ உலகம் செய்த கொடுமைகளையும் அது அடைந்த உச்சத்தையும் நேரில் பார்த்தவர். அனுபவித்தவர். அறுபது லட்சம் யூதர்கள் கொலை செய்யப்படுகையில் கத்தோலிக்க சர்ச் நாசிகளுடன் கை குலுக்கியதைக் கண்டு அதிர்ந்தவர். எனவே கிறிஸ்தவத்தை அவர் மிகக் கடுமையாக விமர்சித்தார்:

அரவிந்தன் நீலகண்டன்
சில நேரங்களில் ஏசு என்று ஒரு மனிதர் வாழாமலே இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைப்பதுண்டு. வேறெந்தப் பெயரும் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகாரத்துக்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதில்லை… மனித இனம் ஏசுவின் பெயரால் தனக்குத் தானே என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். கிறிஸ்தவர்கள் என்ன செய்கிறார்கள், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் யூதர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதையும் பாருங்கள்.

நாஸி ஜெர்மனியில் யூதர்களுக்கு என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் தீர்க்க தரிசியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவ சபை யூதர்களுக்கு எதிராகச் செய்து வந்துள்ள சொல்லக்கூட முடியாத கொடுங்குற்றங்களுக்கெல்லாம் வத்திக்கானின் ஆசிர்வாதம் இருந்தது என நான் சொல்லவில்லை. ஆனால் கிறிஸ்தவ சபை தனது நம்பிக்கையாளர்களின் கொடுஞ்செயல்களின் கொடுரத்தை அவர்கள் மனம் உணராத படி  ‘நம்மிடம் உண்மையான தேவன் இருந்தார். யூதர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்’ என்னும் நம்பிக்கையால் இறுக வைத்திருந்தது. *15

முடிவுரை:

இவ்வாறாக இரு வேறு சமுதாயங்கள், இரு வேறு காலகட்டங்கள், இரு வேறு புலங்களில் இயங்கிய மகாத்மாக்கள் இருவரின் ஆன்மிகத் துடிப்பின் வெளிப்பாடு,  மானுடம், இறை அனுபவம், சமுதாய ஒழுக்கம், தமது சமுதாயத்தின் மீதான அன்னிய ஆக்கிரமிப்பு ஆகிய விஷயங்களில் ஒன்றாகவே இணைந்து இணை குரலாக வெளிப்பட்டது.

ஆதாரச் சுட்டிகள்:

1. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், 1954 இல் அளித்த பேட்டியில் கூறியது.

2. சுவாமி விவேகானந்தர், செயல்முறை வேதாந்தம்- இரண்டாம் பேருரை லண்டனில், நவம்பர்-12 1896 இல் ஆற்றியது.

3. சுவாமி விவேகானந்தர், Complete Works Vol.4: p.358

4. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், 26-ஏப்ரல்-1947 தேதியிட்ட கடிதம்

5. சுவாமி விவேகானந்தர், Complete Works Vol.1: p.367

6. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், Religion and Science: Irreconcilable? என்ற தலைப்பில் நியூயார்க்கில் ஆற்றிய உரை: ஜூன் 1948

7. சுவாமி விவேகானந்தர், Royal Institute of Painters in Watercolors, இலண்டனில் அன்று ஆற்றிய உரை, ஜூன் 21, 1896

8. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், Science and Religion எனும் தலைப்பில் 1941ல் நியூயார்க்கில் ஒரு கருத்தரங்கில் பேசியது, மூலத்தில் ஆங்கில வார்த்தைகளுக்கு ஐன்ஸ்டைனே பெரிய எழுத்துக்களாக -capitalization- மாற்றியிருந்தார்.

9. சுவாமி விவேகானந்தர், Complete Works Vol:V pp.336-7

10. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், Religion and Science என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் 1930 இல் எழுதியது.

11. சுவாமி விவேகானந்தர், Complete Works -Vol:VI p.81

12. சுவாமி விவேகானந்தர், இராஜயோகம், பிராணன்: பக்.40

13. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், சமூகவியலாளர் வில்லியம் ஹெர்மான்ஸுடனான உரையாடல், ஆகஸ்ட் 1943, பக்.61

14. சுவாமி விவேகானந்தர், Complete Works -Vol:VIII p.212

15. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், சமூகவியலாளர் வில்லியம் ஹெர்மான்ஸுடனான உரையாடல், ஆகஸ்ட் 1943. பக்.62-63

பயன்படுத்தப்பட்ட நூல்கள்:

சுவாமி விவேகானந்தர், The complete works of Swami Vivekananda, Advaita Ashrama, 1970

சுவாமி விவேகானந்தர், ராஜயோகம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை 2005

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், Ideas and Opinions, [Edited by Carl Seeling], Rupa 1998

மாக்ஸ் ஜாம்மர் (Max Jammer), Einstein and Religion: Physics and Theology, Princeton University Press, 2002

வில்லியம் ஹெர்மான்ஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

Einstein and the Poet: In Search of the Cosmic Man, Branden Books, 1983.

  • நன்றி: தமிழ் ஹிந்து இணையதளம்

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s