-மகாகவி பாரதி
புதுவையில் மகாகவி பாரதி நடத்திய ‘இந்தியா’ இதழில் 1909-இல் வெளியான இக்கவிதை, பெரும்பாலான பாரதி கவிதைத் தொகுப்புகளில் காணப்படுவதில்லை.

.
அன்னாயிங் குனைக்கூறப் பிழையில்லை,
யாமே நின்னருள் பெற்றோங்க
என்னானுந் தகுதியிலேம் மிகப் பொல்லேம்
பழியுடையேம் இழிவு சான்றேம்
பொன்னான வழியகற்றிப் புலைவழியே
செல்லும் இயல் பொருந்தி யுள்ளேம்
தன்னால் வந்திடு நலத்தைத் தவிர்த்துப்பொய்த்
தீமையினைத் தழுவுகின்றோம். 1
.
எல்லை யில்லாக் கருணையுறுந் தெய்வதநீ
யெவர்க்கு மனமிரங்கி நிற்பாய்
தொல்லை யெலாந் தவிர்த் தெங்கள் கண்காண
நொடிப் பொழுதில் துருக்கி மாந்தர்
நல்ல பெரும் பதங்காணப் புரிந்திட்டாய்
பலகால நவை கொண்டன் னார்
சொல்லரிய பிழை செய்தது அத்தனையு
மறந்தவரைத் தொழும்பு கண்டாய். 2
.
அரைக் கணமாயினுமுன்னைத் திரிகரணத்
தூய் மையுடன் “அன்னாய் ஞானத்
திரைகடலே அருட்கடலே சீரனைத்துதவு
பெருந்தேவே யிந்தத் முதவு
தரைக்கணிய பெரும் பொருளே காவாயோ?”
என்றலறித் தாயுன் னாமம்
உரைக்கமனம் எமக்கின்றி யாமழிந்தாம்
பிழை சிறிதும் உளதாங் கொல்லோ? 3
.
வேண்டுமென விளக்கில்விழுஞ் சிறுபூச்சி
தனை யாவர் விலக்கவல்லார்
தூண்டுமரு ளாலயாமோர் விளக்கையவித்
தாலதுதான் சுற்றிச் சுற்றி
மீண்டுமொரு விளக்கிற்போய் மாண்டுவிழும்
அஃதொப்ப விருப்போ டேகித்
தீண்டரிய புன்மையினில் யாம் வீழ்ந்தா
லன்னாய் நீ செய்வ தென்னே? 4
.
அந்தநா ளருள்செயநீ முற்பட்ட
பொழுதெலாம் அறிவிலா தேம்
வந்தமா தேவிநினை நல்வரவு
கூறிய(ப)டி வணங்கிடா மல்
சொந்தமா மனிதருளே போரிட்டும்
பாழாகித் துகளாய் வீழ்ந்தேம்
இந்தநா ளச்சத்தால் நீவருங்கால்
முகந்திரும்பி இருக்கின்றோ மால். 5
.
இந்தியா (8-5-1909) இதழ், புதுவை. ஆதாரம்: பாரதி புதையல் 1 - பக்கம் 10-11.
$$$