வலிமைக்கு மார்க்கம்- 2

-வ.உ.சிதம்பரம் பிள்ளை

வலிமைக்கு மார்க்கம்

6. துன்பத்தின் கற்பனை

கவலையும் துன்பமும் துக்கமும் வாழ்க்கையின் சாயைகள். உலகம் முழுவதிலும் கவலையால் கலங்காத உயிரே இல்லை; துன்பத்தால் துடியாத மனமே இல்லை; துக்கத்தால் துளியாத கண்ணே இல்லை. உலகத்தில் பிணியும் மரணமுமாகிய எமதூதரால் உயிர்க்குயிராகிய உறவினர் பிரிக்கப்பட்டுத் துக்கமாகிய இருட் போர்வையால் மூடப்படாத குடும்பம் இல்லை. வலியதாகவும் எளிதில் அறுக்க முடியாததாகவும் தோற்றுகிற தீமைவலையில் சகல மனிதரும் முன்னர்ச் சிக்கிப் பின்னர்க் கவலையாலும் துன்பத்தாலும் துக்கத்தாலும் வருந்துகின்றனர்.

இவ்வருத்தத்திலிருந்து தப்புவதற்காகப் புருஷர்களும் ஸ்திரீகளும் எண்ணிறந்த உபாயங்களைச் செய்கின்றனர்; எண்ணிறந்த மார்க்கங்களிற் பிரவேசிக்கின்றனர்; அவற்றால் அழிவில்லாத ஓர் சுகத்தை அடையலாமென்று நம்புகின்றனர். சிலர் மதுபானம் செய்தும், விபச்சாரம் செய்தும் திரிகின்றனர்; சிலர், உலகக் குழுவை விட்டு நீங்கித் தனித்த ஓர் இடத்தை அடைந்து, தம்மைச் சுற்றிப் பல போக்கியப் பொருள்களை அமைத்துக் கொண்டு வசிக்கின்றனர்; சிலர் பொருளையோ புகழையோ அவாவி, அவற்றை அடைதற்காக மற்றைய எல்லாற்றையும் கீழ்ப்படுத்துகின்றனர்; சிலர் மதசம்பந்தமான சடங்குகளைச் செய்து திருப்தியடைகின்றனர்.

அவாவிய சுகம் எல்லாருக்கும் கிடைப்பது போலத் தோன்றுகின்றது; ஆன்மா சிறிது காலம் துன்பத்தை மறந்து இன்பத்துள் களிக்கின்றது. அதனால் கடைசியில் ஒருநாள் ஒரு பெரும் நோயோ, துக்கமோ, கவலையோ கேடோ தன்னைப் பலப்படுத்திக் கொள்ளாத ஆன்மாவைத் திடீரெனத் தாக்குகின்றது; ஆன்மா அதுவரையில் கொண்டிருந்த இன்பம் சிதறுண்டு போகின்றது. அப்படியே ஞானத்தால் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளாத மனிதனுடைய ஆன்மாவின்மீது எந்த நிமிஷத்திலும் விழுந்து அதனை அழித்துவிடத்தக்க ஒரு கூரிய வாள் ஒவ்வொரு பொறியின்பத்தின் தலைமீதும் தொங்கிக் கொண்டிருக்கின்றது.

குழந்தையானது குமரன் அல்லது குமரியாவதற்கு அழுகின்றது; குமரனும் குமரியும் தமது கழிந்த குழந்தைப் பருவத்தை நினைத்துப் பெருமூச்சு எறிகின்றனர். எளிய மனிதன் தனது வறுமை விலங்கால் வருந்துகின்றான்; வலிய மனிதன் தன்பால் வறுமை வந்துவிடுமோ என்ற அச்சத்தால் வருந்துகிறான் அல்லது தான் சுகமெனக் கருதுகின்ற நிலையற்ற ஒரு சாயையை அடைவதற்காக உலகத்தை வருத்துகிறான். சில வேளைகளில் ஆன்மா ஒரு மதத்தைத் தழுவுவதாலோ, ஒரு மனோதத்துவ சாஸ்திரத்தைக் கற்பதாலோ ஒரு மனக்கொள்கையை அல்லது தொழிற் கொள்கையை அனுசரிப்பதாலோ, தான் நிலையுள்ள அமைதியையும் சுகத்தையும் அடைந்துவிட்டதாகக் கருதுகின்றது. ஆனால் விலக்கமுடியாத ஓர் ஆபத்து அம்மதத்தைத் தகுதியற்றதாக்கி விடுகின்றது; அத்தத்துவ சாஸ்திரத்தைப் பயனற்றதாக்கி விடுகின்றது; பல வருஷங்களாக வருந்திக் கைக்கொண்ட அக்கொள்கையை ஒரு நிமிஷத்தில் தூள் தூளாக்கி விடுகின்றது.

அப்படியானால் துன்பத்திலிருந்தும் துக்கத்திலிருந்தும் தப்புவதற்கு மார்க்கம் இல்லையா? தீமையின் கட்டுகளை அறுப்பதற்கு உபாயங்கள் இல்லையா? ஸ்திரமான அமைதியும் நிலையுள்ள செல்வமும் நித்திய சுகமும் வெறுங் கனவுகளா? இல்லை. ஒரு மார்க்கம் இருக்கிறது; அதனால் தீமையை வேரோடு களைந்து விடலாம். ஓர் உபாயம் இருக்கிறது; அதனால் பிணியையும் மற்றைய பிரதிகூல நிலைமைகளையும் சந்தர்ப்பங்களையும் அடியோடு நீக்கி விடலாம்; ஒரு முயற்சி இருக்கின்றது; அதனால் வறுமை வருமோ என்ற அச்சமே உண்டாகாத ஸ்திரமான செல்வத்தை அடையலாம். ஓர் அப்பியாசம் இருக்கின்றது; அதனால் முடிவும் அழிவும் இல்லாத அமைதியையும் சுகத்தையும் அடையலாம். இப்பெரும் பேற்றை அடையச் செய்யும் மார்க்கத்தின் தொடக்கம் துன்பத்தின் தன்மையைச் சரியாக அறிதலேயாம்.

துன்பத்தை வெறுத்தலோ கவனியாதிருத்தலோ போதாது; அதனை அறிய வேண்டும். துன்பத்தை நீக்கும்படி கடவுளைப் பிரார்த்தித்தல் போதாது; அஃது எதன் பொருட்டு வந்திருக்கிறதென்றும், அஃது எதனை உங்களுக்குக் கற்பிக்க நிற்கிறதென்றும் நீங்கள் அறிய வேண்டும். உங்களைப் பந்தப்படுத்துகிற விலங்குகளைப் பார்த்து நீங்கள் பெருமூச்சு விடுவதாலும், சத்தமிடுதலாலும், அழுவதாலும் யாதொரு பயனும் இல்லை; அவை எதற்காக உங்களைப் பந்தப்படுத்தியிருக்கின்றனவென்றும் நீங்கள் அறிய வேண்டும். ஆதலால் நண்பர்களே! நீங்கள் உங்களுக்கு அந்நியராக நின்று கொண்டு, நீங்கள் உங்களை ஆராய்ந்தறிதற்குத் தொடங்க வேண்டும்; அநுபவம் என்னும் கலாசாலையில் நீங்கள் கீழ்ப்படிதலில்லாத மாணவராயிருப்பதை விட்டு, நீங்கள் பணிவோடும் பொறுமையோடும் உங்கள் அபிவிர்த்திக்கும் பூர்ணத்துவத்திற்கும் அத்துன்பம் கொண்டிருக்கும் பாடங்களைக் கற்கத் தொடங்க வேண்டும். ஏனெனில், துன்பமானது சரியாக அறியப்பட்ட காலையில் அது பிரபஞ்சத்தில் அளவற்ற ஒரு சக்தியன்றென்றும் தத்துவமன்றென்றும், ஆனால் கழிந்து போகக்கூடிய ஒரு மனித அநுபவமென்றும் தெரியவரும்; ஆதலால், துன்பமானது கற்க விரும்புகிறவர்களுக்கு ஓர் ஆசிரியன் போல உதவுகின்றது. துன்பமானது உங்களுக்குப் புறத்திலுள்ள ஒரு பொருளன்று; அஃது உங்கள் அகத்தின் ஓர் அநுபவம்; நீங்கள் உங்கள் அகத்தைப் பொறுமையோடு ஆராய்ந்து பார்த்து ஒழுங்குபடுத்துவதால் நீங்கள் துன்பத்தின் மூலத்தையும் தன்மையையும் நாளடைவில் காண்பீர்கள்; பின்னர் அஃது உங்களை விட்டு அறவே நீங்கிவிடும்.

ஒவ்வொரு துன்பத்தையும் திருத்தலும் பரிகரித்தலும் கூடும்; ஆதலால், அது நிலையில்லாதது. அது பொருள்களின் உண்மையான இயற்கையையும் சம்பந்தத்தையும் அறியாத அஞ்ஞானத்தால் வேரூன்றியிருக்கிறது; அவ்வஞ்ஞான நிலைமையில் நாம் இருக்குங் காலமெல்லாம் நாம் துன்பத்திற்கே ஆளாகியிருக்கிறோம். பிரபஞ்சத்திலுள்ள சகல துன்பங்களும் அஞ்ஞானத்தின் காரியங்கள்; அவற்றின் கற்பனைகளை நாம் கற்றுக் கொள்வதற்கு விருப்பமுடையவராகவும் தயாராகவும் இருப்போமானால், அவை நம்மை முற்றிலும் உயர்ந்த அறிவாளிகளாக்கிவிட்டு நீங்கி விடும். ஆனால் மனிதர் எப்பொழுதும் துன்பத்தில் இருக்கின்றனர்; அஃது அவரை விட்டு நீங்குவதில்லை. ஏனெனில் அஃது அவருக்குக் கற்பிக்கக் கொண்டிருக்கும் பாடங்களை அவர் கற்பதற்குத் தயாராகவும் விருப்பமுடையவராகவும் இல்லை. யான் ஒரு குழந்தையை அறிவேன். அதன் தாய் அதனை இராக் காலத்தில் படுக்கைக்கு கொண்டு போனபோதெல்லாம் எரிகின்ற மெழுகுவர்த்தியுடன் அது விளையாட விரும்பி அழுவதுண்டு. ஓர் இரவில் தாய் வெளியிற் போயிருந்த சமயத்தில் குழந்தை மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்தது. அது குழந்தையின் கையைச் சுட்டு விட்டது. அக்காலம் முதற்கொண்டு அக்குழந்தை மெழுகுவர்த்தியுடன் விளையாட ஒருபோதும் விரும்பியதில்லை. அது தனது ஒரு மடச்செய்கையினால் பெற்றோர் வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற பாடத்தைப் பூர்த்தியாகப் படித்துக் கொண்டது; நெருப்பு சுடுமென்ற ஞானத்தையும் அடைந்துவிட்டது. சகல துன்பங்களுடைய இயல்புகளையும், நோக்கங்களையும் முடிவுகளையும் பூர்த்தியாக விளக்குவதற்கு இவ்வொரு சம்பவமே போதுமானது. குழந்தை நெருப்பின் உண்மையான இயல்பை அறியாத அஞ்ஞானத்தால் வருந்தியது போலப் பெரிய குழந்தைகளாகிய மனிதர், தாம் அடைந்தபோது தமக்கு வருத்ததைக் கொடுக்கும் பொருள்களின் உண்மையான இயல்புகளை அறியாத தமது அஞ்ஞானத்தால் அவற்றை அடைய அலாவியும் அழுதும் அடைந்து வருந்துகின்றனர். இரண்டிற்கும் ஒரே ஒரு வேற்றுமை உண்டு. பெரிய குழந்தைகளாகிய மனிதரின் அஞ்ஞானமும் துன்பமும் அதிக ஆழத்தில் வேரூன்றியனவாகவும் எளிதில் நீக்க முடியாதனவாகவும் இருக்கின்றன.

நன்மைக்கு ஒளியையும் தீமைக்கு இருளையும் உபமானங்களாகக் கூறுகின்றனர். இவ்வுபமானங்கள் நன்மை தீமைகளுடைய முழு அர்த்தத்தையும் உண்மையையும் விளக்கத்தக்கவை. ஒளி பிரபஞ்சமெல்லாம் விளங்கும் சூரியனது உண்மைத் தோற்றம். அதுபோல, நன்மை பிரபஞ்சமெல்லாம் பரவி உயிர்களைக் காக்கும் மெய்ப்பொருளினது உண்மைத்தோற்றம். இருள்சூரியனது ஒளியின் ஒரு பாகத்தை மறைக்கும் பூமியினது நிழலாகிய இன்மைப் பொருள். அதுபோலத் தீமை மெய்ப்பொருளினது நன்மையின் ஒரு பாகத்தை மறைக்கும் ஜீவனது நிழலாகிய இன்மைப் பொருள். இரவு தனது கருப்புப் போர்வையால் நமது பூமியின் ஒரு பக்கத்தை மாத்திரம் மறைக்கிறது. அது மற்றைய பாகங்களிலெல்லாம் ஒளி விளங்கிக் கொண்டிருக்கிறது. அதுபோல, அஞ்ஞானம் தனது கேடும் துன்பமும் துக்கமுமாகிய கருப்புப்போர்வையால் மெய்ப்பொருளின் ஒரு பாகத்தை மாத்திரம் மறைக்கிறது; அதன் மற்றைய பாகங்களிலெல்லாம் ஆக்கமும் இன்பமும் சுகமும் விளங்கிக் கொண்டிருக்கின்றன. ஒளிமயமான சூரியனைப் பூமி மறைப்பதால் அஃது இருளால் மூடப்படுகின்றது. அப்படியே ஞானமயமான மெய்ப்பொருளை ஜீவன் மறைப்பதால் ஜீவன் அஞ்ஞானத்தால் மூடப்படுகின்றது. இருளால் மூடப்பட்ட புவியினர்கள் நல்ல வழியையும் தீய வழியையும் அறியமாட்டாது தீய வழியில் சென்று இடர்ப்படுகின்றனர். அவ்வாறே, அஞ்ஞானத்தால் மூடப்பட்ட ஜீவர்கள் நன்மையையும் தீமையையும் பகுத்தறிய மாட்டாது தீமையைப் புரிந்து கேட்டையும் துன்பத்தையும் துக்கத்தையும் அடைந்து வருகின்றனர். இரவின் இருளையடைந்தே பகலின் ஒளிக்குச் செல்ல வேண்டும். அவ்வாறே, அஞ்ஞானத்தின் துன்பத்தை அநுபவித்தே ஞானத்தின் இன்பத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால், “சிலர் துன்பத்தின் வழியாகச் செல்வானேன்?” என்று வினவல் கூடும். அஞ்ஞானத்தால் நீங்கள் அவ்வழியிற் பிரவேசித்திருக்கிறீர்கள்; நீங்கள் அவ்வழியாகச் செல்வதனால் இன்பத்தின் பெருமையை நன்கு அறிவீர்கள்; இருள் வழியாகச் செல்பவர் ஒலியின் பெருமையை நன்கு அறிவது போல் துன்பம் அஞ்ஞானத்தின் நேரான காரியமாதலால் துன்பத்தின் கற்பனைகளைப் பூரணமாய் கற்று முடித்தபொழுது அஞ்ஞானம் நீங்கி விடுகிறது; அதன் இடத்தில் ஞானம் வந்து அமருகிறது, ஆனால் கீழ்ப்படிதல் இல்லாத ஒரு குழந்தை தனது பள்ளிக்கூடத்துப் பாடங்களைப் படியாமல் எப்பொழுதும் மடமையில் இருந்து கொண்டு மேன்மேலும் சிட்சை அடைந்து கொண்டிருத்தல் போல், மனிதரிற் சிலர் துன்பங்களின் கற்பனைகளைக் கல்லாமல் எப்பொழுதும் அஞ்ஞானத்தில் இருந்துகொண்டு நோயும் ஆசாபங்கமும் துக்கமுமாகிய சிட்சைகளை மேன்மேலும் அடைந்துகொண்டிருத்தல் கூடும். எவன் தன்னைச் சூழ்ந்திருக்கிற துன்பத்தினின்று நீங்கிக் கொள்ள விரும்புகிறானோ, அவன் துன்பத்தின் கற்பனைகளைக் கற்றுக்கொள்வதற்கு விருப்பமுடையவனாகவும் கடுமையான முயற்சி செய்யத் தயாராகவும் இருத்தல் வேண்டும். ஏனெனில், கடுமையான முயற்சியின்றி ஞானத்தையாவது சாந்தியையாவது நிலையான சுகத்தையாவது ஒரு சிறிதும் அடைய முடியாது.

ஒரு மனிதன் ஓர் இருட்டறையுள் போய் அதன் கதவை அடைத்துக்கொண்டு உலகத்தில் ஒளியென்பதே இல்லையென்று சொல்லலாம்; ஆனால், ஒளி, வெளியில் எங்கும் நிறைந்திருக்கிறது; இருள் அவனுடைய சிறிய அறையில் மாத்திரம் இருக்கிறது. அப்படியே நீங்களும் மெய்ப்பொருளின் ஒளி உங்கள் மீது படாமல் மறைத்துக் கொள்ளலாம்; அல்லது உங்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிற வெறுப்பு, சுயநலம், பாவம் முதலிய மதில்களை இடித்துச் சர்வ வியாபகமான பேரொளியைக் காணற்குத் தொடங்கலாம்.

நீங்கள் உங்களை ஆண்மையோடு ஆராய்ந்து பார்த்து துன்பமானது கழிந்துபோகும் ஒரு நிலைமையென்றும், அஃது உங்களால் உண்டு பண்ணப்பட்டதென்றும், உங்களுடைய சகல கேடுகளும்; துன்பங்களும், துக்கங்களும், சிறிதும் பிழையாத ஒரு சட்டப்படி உங்கள்பால் வந்திருக்கின்றனவென்றும், அவற்றை நீங்கள் விரும்புவதாலும், அவற்றை நீங்கள் அடைவதற்கு அருகர்களானதாலும் அவை உங்களைச் சார்ந்திருக்கின்றனவென்றும், அவற்றை முன்னர் அநுபவித்துப் பின்னர் அறிவதால் நீங்கள் மிக்க பலமும் ஞானமும் மேம்பாடும் அடைவீர்களென்றும் நீங்கள் அபரோட்சகமாக அறியுங்கள். அவ்வபரோட்ச ஞானத்தை நீங்கள் பூர்த்தியாக அடைந்தபொழுது, நீங்கள் உங்கள் நிலைமைகளைத் திருத்திக் கொள்ளவும், சகல துன்பங்களையும் இன்பங்களாக மாற்றிக் கொள்ளவும், உங்கள் ஊழை விலக்கிக் கொள்ளவும் வல்லவர்களாவீர்கள்.

நேரிசை வெண்பா

நீளிரவில் துன்புற்று நெஞ்சுடையும் காவலனே!
வாளொளியைப் பார் அந்த மாமலைமேல்;-நாளின்
ஒளிக்கொளியா நிற்கின்ற ஓர்மெய்யின் தூதன்
களிப்பொடுவைத் தான்மலைமேல் கால்.

(வாள்-பிரகாசமுள்ள)

$$$

7. உலகம் மனத்தின் பிரதிபிம்பம்

நீங்கள் எப்படி இருக்கின்றீர்களோ அப்படியே உங்கள் உலகமும் இருக்கின்றது. உங்கள் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் உங்கள் அகத்தின் தன்மைக்குச் சரியாகச் செய்யப்பட்டிருக்கின்றது. உங்கள் புறநிலைமை எவ்வாறிருந்தாலும் பெரிதன்று; உங்கள் புறநிலைமைகளெல்லாம் உங்கள் அகநிலைமைகளின் பிரதிபிம்பங்களேயாகலான், உங்கள் அகத்தின் நிலைமைதான் பெரிது. உங்கள் புறத்திலுள்ள ஒவ்வொன்றும் உங்கள் அகத்திலுள்ளவற்றிற்குச் சரியாகச் செய்யும் திருத்தவும் படுமாகலான், எவையெல்லாம் உங்களால் இதுமுன் அறியப்பட்டிருக்கின்றனவோ அவையெல்லாம் உங்கள் அனுபவத்தில் அடங்கியிருக்கின்றன; எவையெல்லாம் உங்களால் இனிமேல் அறியப்படப்போகின்றனவோ அவையெல்லாம் உங்கள் அநுபவமாகிய வாயிலின் மூலமாகச் செல்ல வேண்டும்; ஆதலால், அவையெல்லாம் உங்கள் ஜீவனில் ஒரு பாகமாகும்.

உங்கள் நினைப்புக்களும், அவாக்களும், நோக்கங்களும் உங்கள் உலகமாகின்றன; அழகும், இன்பமும் சுகமுமாகிய உங்கள் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும், அல்லது அழகின்மையும், துன்பமும் துக்கமுமாகிய உங்கள் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும், உங்கள் அகத்துள் அடங்கியிருக்கின்றன. உங்கள் நினைப்புக்களால் உங்கள் வாழ்க்கையை-உங்கள் உலகத்தை-உங்கள் பிரபஞ்சத்தை ஆக்குகிறீர்கள்; அல்லது அழிக்கின்றீர்கள். நினைப்பால் உங்கள் அகத்துள் நீங்கள் அமைக்கின்ற வாழ்க்கையையும் நிலைமைகளையும் போலவே உங்கள் புறவாழ்க்கையும் நிலைமைகளும் அமைகின்றன. உங்கள் அகத்தின் ஆழ்ந்த அறைகளில் எதனைப் பொதிந்து வைத்திருக்கின்றீர்களோ அது சிறிதும் தவறாத ஒரு நியதிப்படி உங்கள் புறவாழ்க்கையின் நிலைமையாக வந்து உங்களைப் பொருந்தும், அசுத்தமும், கீழ்மையும், சுயநலமுமுள்ள ஆன்மா கேட்டையும், துன்பத்தையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது; சுத்தமும், மேன்மையும், பரநலமுமுள்ள ஆன்மா ஆக்கத்தையும், இன்பத்தையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு ஆன்மாவும் தனக்குச் சொந்தமானவற்றைக் கவர்கின்றது; அதற்குச் சொந்தமல்லாத எஃதும் அதனை அணுகாது. இதனை அபரோக்ஷமாக அறிதல் தெய்வ நீதியின் சர்வ வியாபகத் தன்மையை அறிதலாம். ஆக்கத்தையும் கேட்டை உண்டுபண்ணுகிற ஒவ்வொரு மனித வாழ்க்கையின் சம்பவங்களும் அவனவனது அக நினைப்பின் சக்தியாலும் தன்மையாலும் அவனவனைச் சார்கின்றன. கைக்கொள்ளப்பட்ட நினைப்புக்களும் அநுபவங்களும் சேர்ந்த சேர்க்கையே ஜீவன்; அதன் விளக்கத்திற்காக அதனாற் செய்து கொள்ளப்பட்ட கருவியே உடம்பு. ஆதலால், உங்களுடைய நினைப்புக்கள் எவையோ அவையே நீங்கள்; உங்களைச் சுற்றியுள்ள சரவுலகமும் அசரவுலகமும் உங்களுடைய நினைப்புகளுக்குத் தக்க உருக்களைக் கொள்கின்றன. புத்தர், “நமது நிலைமைகளெல்லாம் நமது நினைப்புக்களின் பலன்கள்; அவைகளெல்லாம் நமது நினைப்புகளையே ஆதாரமாகக் கொண்டுள்ளன; அவைகளெல்லாம் நமது நினைப்புக்களாலேயே செய்யப்பட்டுள்ளன” என்று கூறியிருக்கிறார். ஆதலால், ஒருவன் சந்தோஷகரமான நினைப்புக்களில் வசிக்கின்றமையால் சந்தோஷமுள்ளவனாயிருக்கிறான்; மற்றொருவன் விசனகரமான நினைப்புக்களில் வசிக்கின்றமையால் விசனமுள்ளவனாயிருக்கிறான். ஒருவன் அச்சமுள்ளவனாகவோ அல்லது துணிவுள்ளனவாகவோ, மடையனாகவோ அல்லது அறிஞனாகவோ, கலக்கமுற்றவனாகவோ அல்லது அமைதியுற்றவனாகவோ இருந்தால் அவனுடைய அந்நிலைமைக்குரிய காரணம் அவன் அகத்துள்ளேயே இருக்கின்றது; புறத்தில் இல்லவே இல்லை. ஆனால், சிலர், “புறநிலைமைகள் நமது மனங்களைப் பாதிப்பதேயில்லையென்று நீர் சொல்லுகிறீரா?” என்று வினவக்கூடும். நான் அப்படிச் சொல்லவில்லை. நான், “எவ்வளவு தூரம் உங்களைப் புற நிலைமைகள் பாதிக்கும்படி இடங்கொடுக்கிறீர்களோ அவ்வளவு தூரமே அவை உங்களைப் பாதிக்கக் கூடும்” என்று சொல்லுகிறேன். இஃது ஒருபோதும் மாறாத உண்மையென்று அறியுங்கள். நினைப்பின் தன்மையையும் பிரயோஜனத்தையும் வலிமையையும் நீங்கள் சரியாக அறிந்து கொள்ளாததனாலேயே புறநிலைமைகள் உங்களைப் பாதிக்கின்றன. புறப்பொருள்கள் உங்கள் வாழ்க்கையை ஆக்குதற்கும் அழிப்பதற்குமுரிய சக்தியைக் கொண்டிருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள். (உங்களுடைய சகல துக்கங்களும் நம்பிக்கை என்னும் இச்சிறு சொல்லில்தான் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.) நீங்கள் அப்படி நம்புவதால் நீங்கள் அப் புறப்பொருள்களுக்குக் கீழ்ப்படுகின்றீர்கள்; நீங்கள் அவற்றின் அடிமைகளென்றும், அவை தம் இஷ்டப்படி செய்யக் கூடிய உங்கள் எஜமான்களென்றும் நீங்கள் ஒப்புக்கொள்ளுகின்றீர்கள்; அப்படிச் செய்வதால் நீங்கள் அவற்றினிடத்திலில்லாத ஒரு வலிமையை அவற்றிற்குக் கொடுக்கின்றீர்கள், நீங்கள் புற நிலைமைகளுக்கு இலக்காகுவதோடு அவற்றைப்பற்றி நீங்கள் உங்கள் நினைப்பிற் கொண்டுள்ள விசனத்திற்கோ அல்லது சந்தோஷத்திற்கோ, அச்சத்திற்கோ அல்லது துணிவிற்கோ, பலத்திற்கோ அல்லது பலஹீனத்திற்கோ இலக்காகின்றீர்கள்.

பல வருஷங்களாகக் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து வைத்திருந்த நிதிகளையெல்லாம் சிறு வயதில் இழந்து விட்ட இரண்டு மனிதர்களை நான் அறிவேன். அதனால் ஒருவன் மிக வருத்தமடைந்து கவலைக்கும், கிலேசத்திற்கும், ஏக்கத்திற்கும் இடங் கொடுத்துவிட்டான். மற்றொருவன் தனது நிதியைக் கொடுத்து வைத்திருந்த வட்டிக்கடை முறிந்து விட்டதென்று பத்திரிகையில் வாசித்தவுடன், “நமது பணம் போய்விட்டது; கவலையும் கிலேசமும் அதனைத் திரும்பக் கொண்டு வரமாட்டா. ஆனால், கடுமையான முயற்சி அதனைத் திரும்பக் கொண்டு வரும்” என்று சாந்தமாகவும் திடமாகவும் கூறினான். அதுமுதல் அவன் அதிக ஊக்கத்தோடு வேலை செய்து வந்தான். விரைவில் அவன் செல்வன் ஆகிவிட்டான். முந்திய மனிதனோ தனது பணம் போய்விட்டதைப் பற்றிக் கிலேசித்துக் கொண்டும் தனது துரதிருஷ்டத்தைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டுமிருந்து மிகத் தரித்திரமான நிலைமைகளுக்கு, உண்மையில் தனது பலஹீனமும் அடிமைத்தனமும் பொருந்திய நினைப்புகளுக்கு ஆளாகிவிட்டான். பண நஷ்டம் ஒருவனுக்கு ஒரு தீமையாக அமைந்தது, அவன் அதனைக் கிலேச நினைப்போடும் அச்ச நினைப்போடும் கொண்டதனால்; பண நஷ்டம் மற்றொருவனுக்கு ஒரு நன்மையாக அமைந்தது, அவன் அதனைத் திடமும் நம்பிக்கையும் புதிய ஊக்கமும் பொருந்திய நினைப்புக்களோடு கொண்டதனால்.

புறநிலைமைகள் இன்பத்தையாவது துன்பத்தையாவது கொடுக்கும் சக்தியை உடையனவாயிருப்பின், அவை எல்லா மனிதருக்கும் ஒரே விதமான இன்பத்தையாவது துன்பத்தையாவது கொடுத்தல் வேண்டும். ஆனால், ஒரே நிலைமை சிலருக்கு இன்பத்தையும் சிலருக்குத் துன்பத்தையும் கொடுக்கின்றது; ஆதலால் இன்பமும் துன்பமும் நிலைமையில் இல்லையென்பதும், அவற்றைக் கொள்ளுகிற மனிதனது மனத்திலேயே உள்ளனவென்பதும் தெளிவாக விளங்கவில்லையா? இதனை நீங்கள் அபரோட்சமாக அறியத் தொடங்குங்காலையில் நீங்கள் உங்கள் நினைப்புக்களை ஆளுதற்கும், உங்கள் மனத்தைத் திருத்தி ஒழுங்கு செய்தற்கும், உங்கள் ஆன்மாவின் அகக் கோயிலைத் திரும்பக் கட்டுவதற்கும் தொடங்குவீர்கள். அப்பொழுது நீங்கள் பிரயோஜனமற்ற நினைப்புக்களையும் அவசியமற்ற நினைப்புக்களையும் உங்கள் அகத்தினின்றும் வெளிப்படுத்தி, சந்தோஷமும், சாந்தமும், உறுதியும், உரமும், இரக்கமும், அன்பும், அழகும், நித்தியத்துவமும் பொருந்திய நினைப்புக்களை உங்கள் அகத்துள் கொள்ளுவீர்கள். இவ்வாறு நீங்கள் செய்யுங்காலையில் நீங்கள் சந்தோஷமும் சாந்தமும் உள்ளவர்களாகவும், வலிமையும் ஆரோக்கியமும் உள்ளவர்களாகவும், நித்திய அழகும் நித்திய வாழ்வும் உள்ளவர்களாகவும் இருப்பீர்கள்.

நமது வாழ்க்கையில் நேரும் சம்பவங்களில் இவையிவை சுககரமானவை, இவையிவை துக்ககரமானவை என்று நாம் நினைக்கிறதுபோல, நம்மைச் சூழ்ந்துள்ள பொருள்களிலும் இவையிவை சுககரமானவை, இவையிவை துக்ககரமானவை என்று நாம் நினைக்கிறோம். அதனால் ஒருவன் ஒற்றுமையையும் அழகையும் பார்க்கிற இடத்தில் மற்றொருவன் ஒற்றுமையின்மையையும் அழகின்மையையும் பார்க்கிறான். ஓர் உற்சாகமுள்ள இயற்கைத் தத்துவ சாஸ்திரி ஒருநாள் தனது தொழில் சம்பந்தமாக ஒரு கிராமத்தின் மூலை முடுக்குகளெல்லாம் அலைந்து கொண்டிருந்தான்; அப்பொழுது அவன் ஒரு நெற்களத்திற்குச் சமீபத்திலுள்ள ஓர் உவர் நீர்க்குட்டத்தைக் கண்டான். அவன் பூதக்கண்ணாடி கொண்டு பரீட்சிப்பதற்காக அக்குட்டத்தின் நீரில் சிறிது ஒரு பாத்திரத்தில் மொண்டு கொண்டிருந்தபோது அவன் பக்கத்தில் நின்ற கல்வியில்லாத ஒரு கிருஷிகனிடத்தில் அக்குட்டத்தில் மறைந்து கிடக்கும் எண்ணிறந்த அதிசயங்களைப் பற்றிச் சொல்லி, கடைசியாக, “இக்குட்டத்தில் எத்தனையோ கோடிப் பிரபஞ்சங்கள் இருக்கின்றன. அவற்றைக் காணத்தக்க புத்தியாவது கருவியாவது நம்மிடம் இல்லை” என்று கூறினான். அவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷிகள், “இந்நீருள் எண்ணிறந்த தவளைகள் இருப்பதை நானும் அறிவேன்; ஆனால் அவைகளை எளிதில் பிடித்து விடலாம்” என்றான். இயற்கைப் பொருள்களின் ஞானம் நிரம்பிய மனத்தையுடைய அவ்வியற்கைத் தத்துவ சாஸ்திரி இயற்கையின் அழகையும் ஒற்றுமையையும் காட்சிக்குப் புலப்படாத பெருமையையும் அக்குட்டத்தில் பார்த்தான். அப்பொருள்களில் ஞானமில்லாத மனத்தையுடைய கிருஷிகன் அருவருக்கத்தக்க தவளைகளை மாத்திரம் அக்குட்டத்தில் கண்டான்.

வழிப்போக்கனது காலில் மிதிபடுகிற காட்டுப்பூ, ஒரு புலவனது ஞானக்கண்ணிற்கு (பொறிகளால் காணமுடியா)க் கடவுளினது தூதன் போலத் தோன்றுகிறது. அநேகருக்குச் சமுத்திரமானது கப்பல்கள் சென்று உடைவதற்கேதுவாகிய ஒர பயங்கரமான நீர்ப்பரப்பாகத் தோன்றுகிறது; ஒரு சங்கீத வித்வான் அதனை ஓர் உயிருள்ள பொருளாகக் காண்கிறான்; அதனுடைய சகல மாறுதல்களிலும் அவன் தெய்வ கீதங்களைக் கேட்கிறான்; ஒரு சாதாரண மனிதன் இவ்வுலகத்தின்கண் ஆபத்துக்களையும் குழப்பங்களையும் பார்க்கிறான்; ஒரு தத்துவ ஞானி இவ்வுலகத்தின்கண் காரண காரிய ஒழுங்கைப் பார்க்கிறான். ஒரு நாஸ்திகன் இவ்வுலகத்தில் நித்திய மரணத்தையே காண்கிறான். ஓர் ஆஸ்திகன் இவ்வுலத்தில் நித்திய வாழ்வையே காண்கிறான்.

இவ்வுலக சம்பவங்களுக்கும் பொருள்களுக்கும் நாம் நமது நினைப்புகளாகிய வஸ்திரங்களை உடுத்துவதுபோல நாம் நம்மைச் சுற்றிலுள்ள மற்றை மனிதர்களுக்கும் நமது நினைப்புகளாகிய வஸ்திரங்களை உடுத்துகிறோம். சந்தேக நடத்தையுள்ளவன் ஒவ்வொரு மனிதனையும் சந்தேக நடத்தையுள்ளவனாக நினைக்கிறான்; பொய்யன் எல்லா மனிதரையும் பொய்யரென்று நினைக்கிறான்; பொறாமையுள்ளவன் ஒவ்வொருவனிடத்திலும் பொறாமையைப் பார்க்கிறான்; உலோபி தனது பொருளைக் கவருவதற்கு ஒவ்வொரு மனிதனும் ஆசை கொண்டிருக்கிறதாக நினைக்கிறான்; தனது மனச்சாட்சிக்கு விரோதமான காரியங்களைச் செய்து பணம் சம்பாதிக்கிறவன் உலகத்திலுள்ளவர்களெல்லாம் மனச்சாட்சிக்கு விரோதமான காரியங்களைச் செய்வதாகவும் தனது பொருளை அவர்கள் திருடுவதற்காக அவாக் கொண்டிருப்பதாகவும் எண்ணித் தனது தலையணையின்கீழ் கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டு உறங்குகிறான்; பெருங் காமுகன் சாதுக்களை வெறும் வேஷதாரிகளென்று நினைக்கிறான். இதற்கு மாறாக அன்புள்ள நினைப்புகளில் வசிக்கின்றவர் எல்லா மனிதரையும் அன்புடையவராக நினைத்து, அவரிடத்து அன்பும் அநுதாபமும் பாராட்டுகின்றனர்; யோக்கியத்தையும் நம்பிக்கையுமுள்ளவர் எவரிடத்தும் சந்தேகம் கொள்வதில்லை; பிறருடைய பெருஞ் செல்வத்தைக் கண்டு சந்தோஷப்படுகிற நற்சுபாவமும் தயாளமுமுடையவர், பொறாமை எப்படியிருக்குமென்றும் அறியார்; தமது அகத்துள் மெய்ப்பொருளை அபரோட்சமாகக் காண்கின்றவர் விலங்குகளுள்பட சகல உயிர்களிடத்தும் மெய்ப்பொருளைக் காண்கின்றனர்.

புருஷர்களும் ஸ்திரீகளும் தமது மனத்தில் கொண்டுள்ள நினைப்புகளுக்கு ஒத்தவாறு காரியங்கள் நிகழக் காண்கிறார்கள்; ஏனெனில், அவர்கள் தமது மனத்திலிருந்து எவற்றைப் புறத்தே அனுப்புகின்றனரோ, அவற்றையே காரணகாரிய நியதிப்படி புறத்திலிருந்து கவருகின்றனர்; ஆதலால், அவர் தம்மையொத்த மனிதரின் சேர்க்கையைக் கொள்கின்றனர். “இனம் இனத்தோடு சேரும்” என்னும் பழமொழி பெரும்பாலார் கொள்ளும் பொருளினும் மிக ஆழ்ந்ததோர் பொருளைக் கொண்டிருக்கின்றது; அது ஜடவுலகத்திலுள்ள ஒவ்வொன்றும் தன்தன் இனத்தோடு சேர்ந்திருக்கிறது போலச் சித்துலகத்திலுள்ள ஒவ்வொன்றும் தன் தன் இனத்தோடு சேர்ந்திருக்கிறதென்ற உண்மையையும் விளங்குகின்றது.

வெண்பா

அன்புகொள வேண்டினுயிர்க் கன்புசெய்வாய்; மெய்வேண்டின்
இன்பமொடு மெய்மொழிவாய்; ஏனையர்க்கு-முன்பெதனை
நல்குவையோ அஃதுநினை நண்ணும்; நினதுள்ளம்
நல்குபிம்பம் நின்னுலகம், நாடு.”


நீங்கள் உங்கள் மரணத்திற்குப்பின் ஒரு பேரின்ப உலகத்தை அடையவேண்டுமெனக் கோரிக் கொண்டிருப்பீர்களாயின், இதோ! ஒரு சந்தோஷ சமாசாரம் உங்களுக்குச் சொல்லுகிறேன். அப்பேரின்ப உலகத்தில் நீங்கள் இப்பொழுதே பிரவேசித்துப் பேரின்பத்தை அநுபவிக்கலாம். அப்பேரின்ப உலகம் பிரபஞ்ச முழுவதிலும் நிரம்பியிருக்கிறது. அஃது உங்கள் அகத்துள்ளேயும் இருக்கிறது. அதனை நீங்கள் கண்டு அடைந்து அநுபவிக்க வேண்டுமென்று அது காத்துக் கொண்டிருக்கிறது. ஆன்மாவின் அக ஒழுங்குகளையெல்லாம் அறிந்த ஒருவர், ‘கடவுளுலகம் இதோ இருக்கிறது; அதோ இருக்கிறது’ என்று மனிதர் சொல்லும்பொழுது, நீங்கள் அவர்பின் செல்ல வேண்டாம். ‘கடவுளுலகம் உங்கள் அகத்துள்ளேயே இருக்கிறது’ என்று கூறியுள்ளார். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் நீங்கள் இவ்வாக்கை நம்ப வேண்டும்; நீங்கள் இதனைச் சந்தேகம் சிறிதும் இல்லாத மனத்தோடு பூரணமாக நம்ப வேண்டும்; பின்னர் நீங்கள் இதனை அபரோட்சமாகக் காணும் வரையில் இதனைத் தியானிக்க வேண்டும், நீங்கள் இவ்வாறு தியானிக்குங் காலையில் உங்கள் அகவுலுவலகத்தைச் சுத்தப்படுத்தவும் புதுப்பிக்கவும் தொடங்குவீர்கள். நீங்கள் அதனைப் புதுப்பிக்குங் காலையில் உண்மைகளை ஒன்றன்பின் ஒன்றாக அறிவீர்கள்; அநுபவங்களை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிப்பீர்கள்; தன்னை ஆளும் ஆன்மாவின் மந்திர சக்தியைத் தவிரப் புறப்பொருள்களில் யாதொரு சக்தியும் இல்லையென்று காண்பீர்கள்.

நிலைமண்டில ஆசிரியப்பா

உலகினைத் திருத்தி, அஃதுற்றுள பலவகைக்
கேட்டையு மழிவையு மோட்டி யொழிக்கவும்,
களைநில மனைத்தையும் விளைநில மாக்கவும்,
பாலை வனங்களைச் சோலையா மாற்றவும்,
உன்னுவை யாயின், நின்னைத் திருத்தே;
உலகினை நீடு வலனொடு பிணைத்துள
மறத்தளை களையறுத் துலகைவெளி யேற்றி,
உடைந்த உளங்கள் திடங்கொள உதவவும்,
துயரினை யொழித்துச் சுகமுறச் செய்யவும்,
விரும்புவை யாயின், அறுக்கநின் தளையே.
உலகின் நீண்ட பிணிகளைத் தீர்த்ததன்
துயரையும் துன்பையும் மயலையும் தொலைக்கவும்,
பிணியெலாம் தீர்த்ததில் பேரின்ப மாக்கவும்,
துன்பமுற் றார்க்கெலாம் இன்பம் நல்கவும்,
நினைப்பை யாயின், நின்பிணி தீரே.
உலகின் மரணக் கனவி னின்றும்
அமரி னின்றும் உலகை யெழுப்பிஅஃ
தன்பும் நட்பும் அறிவும் அழிவிலா
வாழ்வின் ஒளியும் மன்னிடச் செய்ய
எண்ணுவை யாயின், எழுப்புக நின்னையே.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s