அதிகமான் நெடுமான் அஞ்சி-13

-கி.வா.ஜகந்நாதன்

13. வஞ்சமகள் செயல்

தன் படை முற்றுகை இட்டிருந்தும் பட்டினி இன்றி, வாடாமல் வதங்காமல் அதிகமான் உள்ளே இருப்பதைச் சேரமான் நினைத்த போதெல்லாம் வியப்பாக இருந்தது; ஆத்திரமும் வந்தது. ‘கோழை வீதியில் மாடு ஓடி வருகிறதென்று மடைப் பள்ளிக்குள்ளே ஒரு வீரன் புகுந்தானாம்! அவனைப் போலவே இவனும் இருக்கிறான்’ என்று இழிவாக எண்ணினான்.

நாட்கள் போய்க் கொண்டிருந்தன. வீரர்களுக்குச் சுறுசுறுப்பே இல்லை. இரவு நேரங்களில் தம்மை அறியாமல் கோட்டைக்குள் உணவு செல்லுகிறதோ என்பதை ஆராயப் புறப்பட்டார்கள் சிலர். கையில் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு சுற்றி வந்தார்கள். அது கோட்டைக்குள் இருப்பவர்களுக்குத் தெரிந்தது. சுற்றி வந்தவர்களின் மேல் அம்பை எய்தார்கள். அம்புக்குத் தப்பி ஆராய்ச்சி செய்தும் ஒன்றும் புலனாகவில்லை. கோட்டைக்கு நெடுந்தூரத்துக்கு அப்பால் காட்டினிடையே சுருங்கையின் வழி ஒன்று இருக்கிற தென்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்? திரும்பத் திரும்பக் கோட்டை வாயிலைக் கவனித்தார்கள். சில இடங்களில் உள்ள திட்டிவாசலைக் கூர்ந்து நோக்கினார்கள். மேலிருந்து கயிற்றின் வழியாகவோ நூலேணியின் வழியாகவோ யாரேனும் இறங்கி வரக் கூடுமோ என்றும் ஆராய்ந்து பார்த்தார்கள். எத்தனை விதமாகத் துருவிப் பார்த்தும் அவர்களுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

மறுபடியும் சேரன் அந்தரங்க அவையைக் கூட்டினான். ‘அதிகமானை நாம் வெல்ல முடியாது போல் இருக்கிறதே! அவன் நெடுந்தூரத்தில் இருந்து, நம்மால் அவனை அடைந்து எதிர்க்க முடியாது என்று முடிந்தாலும், அதற்குப் பொருள் உண்டு. இங்கே நம்முன் அருகில் தான் இருக்கிறான். ஆனாலும் அவனை நம்மால் அணுக முடியவில்லை. அவன் பல ஆண்டுகளாகத் தன் கோட்டையில் இருந்துகொண்டே இருப்பான் போல் இருக்கிறது. இதுவீரமா? கோட்டையின் வலிமையினால் தன் கோழைத்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கிறான். அது கிடக்கட்டும். இத்தனை காலமாக அவனும் அவன் வீரர்களும் உண்ணும் சோறு அங்கேயே கிடைக்கிறதா? அல்லது மண்ணைத் தின்று பசியைப் போக்கப் பழகிக் கொண்டிருக்கிறார்களோ!”

சேரமான் பேச்சில் அச்சம், கோபம், இழிவு, பெருமிதம் எல்லாம் குரல் கொடுத்தன. அருகில் அமர்ந்திருந்தவர்கள் வாய் திறக்கவே இல்லை. அவர்கள் பேசுவதற்குப் புதியதாக என்ன இருக்கிறது? காரி முகம் சோர்ந்து உட்கார்ந்திருந்தான். அவன் தானே இந்த முற்றுகைக்குக் காரணம்? ஏதோ குற்றம் செய்தவனைப் போல் அவன் தலையைக் குனிந்து கொண்டிருந்தான்.

“என்ன, நீர் ஒன்றும் பேசாமல் இருக்கிறீரே?” என்று சேரமான் கேட்டான்.

“என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் விடிகிறது; முடிகிறது. நாமும் எழுகிறோம்; இன்று ஏதாவது நமக்கு வாய்ப்பாக நடக்காதா என்று எதிர்பார்க்கிறோம்; இரவிலே உறங்கப் போகிறோம். இந்த அவல வாழ்வைக் கண்டு எனக்கே உள்ளம் குமைகிறது. இதற்கு நான் தானே காரணம் என்ற எண்ணம் வேறு இப்போது என் நெஞ்சை உறுத்துகிறது” காரி மனம் உளைந்து பேசினான்.

சேரனுக்கு உணர்வு வந்தது. மலையமான் உள்ளத்தில் சோர்வு புகுந்தால் பிறகு ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான். அதை நினைத்தபோது சேரனுக்கு வயிற்றை என்னவோ செய்தது. இனித் தான் சோர்வாகப் பேசக்கூடாது என்று கருதினான். “என்ன அப்படிச் சொல்கிறீர்? எனக்கே அதிகமானை அடக்க வேண்டுமென்று நெடு நாட்களாக ஆவல் இருந்தது. உமக்கு வந்த இழிவு எனக்கு இல்லையா? அதிகமானை எதிர்ப்பதற்கு ஏற்ற செவ்வி வர வேண்டுமென்று காத்திருந்தேன். நீர் வந்து அந்தச் செவ்வியை உண்டாக்கினீர். நமக்குச் சரியானபடி போர் வாய்த்தால் விடலாமா? கையில் வலிமை இருந்தும் அதைப் பயன்படுத்த வகையில்லாமல் இருக்கிறதே என்றுதான் சொல்ல வந்தேன். நீர் சோர்வடைய வேண்டாம். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா? இன்னும் எவ்வளவு காலமானாலும் காத்திருப்போம். நமக்கு என்ன? உணவுப் பஞ்சமா? உடைப் பஞ்சமா? வஞ்சிமா நகரிலிருந்து உணவுப் பொருள் வந்து கொண்டிருக்கிறது” என்று கூறுகையில் அவனுடைய குரல் மாறியிருந்தது; ஊக்கமும் ஆறுதலும் ஊட்டும் வகையில் அவன் பேசினான்.

இப்படி இரண்டு மூன்று நாட்கள் சென்றன. படைத் தலைவர்களில் யாரேனும் ஒருவர் புறத்தே கோட்டையைச் சூழ வருவதும், அரசனும் மற்றத் தலைவர்களும் பாசறையிலேயே இருப்பதுமாக இருந்தார்கள். அன்று அரசனே கவசத்தைப் பூண்டு தன் குதிரையின்மேல் ஏறிப் புறப்பட்டான். மாலை கவிந்து வந்தது.

அந்தச் சமயத்தில் ஒரு பெண் தன்னுடைய உடம்பை யெல்லாம் வெள்ளை ஆடையால் மூடிக் கொண்டு பாசறைக்கு அருகில் வந்தாள். படை வீரர்கள் அவளைக் கண்டவுடன் யாரோ ஒற்றாக வந்திருக்கிறார் என்ற எண்ணத்தால் அவளைப் பற்றிக் கொண்டு விரட்டினார்கள்; “நீ எங்கே வந்தாய்? உண்மையைச் சொல். யார் உன்னை அனுப்பினார்கள்?’ என்று உலுக்கிக் கேட்டார்கள்.

அவள் அஞ்சவில்லை; நடுங்கவில்லை; “உங்கள் அரசரைப் பார்க்க வந்திருக்கிறேன்” என்றாள்.

“அரசரை அவ்வளவு எளிதில் பார்க்க முடியுமா? நீ யார்? எதற்காக அவரைப் பார்க்க வேண்டும்?”

”அவரிடம் தனியே பேசவேண்டும்.”

வீரர்கள் சிரித்தார்கள். “உன்னைப் பார்த்தால் இள மங்கையாகத் தோன்றுகிறாய். நீ தனியே அரசரைச் சந்திக்கவேண்டுமென்று வந்திருக்கிறாயே; உனக்கு அச்சம் உண்டாகவில்லையா? நாணம் சிறிதும் எழவில்லையா?”

“உங்களுக்குப் பயன்படும் செய்தியைச் சொல்ல வந்திருக்கிறேன். ஆதலால் நான் அஞ்ச வேண்டியதில்லை. சேர நாட்டு வீரர்கள் பிற பெண்களை உடன் பிறந்தவர்களாக நினைப்பவர்கள் என்று கேள்வியுற்றிருக்கிறேன்; அதனால் நாணம் அடையவும் அவசியம் இல்லை. நல்லதைச் செய்ய முனைந்தால் சிறிதளவு துணிவு வேண்டியதுதானே?” என்று அந்தப் பெண் கூறினாள்.

“நன்றாகப் பேசுகிறாயே! உன்னுடைய மனத் துணிவைப் பாராட்டத்தான் வேண்டும். நீ சொல்ல வேண்டியதை எங்களிடம் சொல்; நாங்கள் அரசரிடம் அறிவிக்கிறோம்.”

“அப்படிச் சொல்கிற செய்தி அன்று அது; மிக மிக இரகசியமானது.”

வீரர்கள் அவளைப் பிட்டங்கொற்றனிடம் அழைத்துச் சென்றார்கள். “இவள் யார்? எங்கே அழைத்து வந்தீர்கள்?” என்று அவன் கேட்டான்.

“நான் சேர அரசரைப் பார்க்க வந்திருக்கிறேன். நீங்கள் அவரிடம் அழைத்துச் செல்ல முடியுமா?” என்று அவளே பேசினாள்.

அவன் சிரித்துக் கொண்டான். “முடியுடை மூவேந்தர்களில் ஒருவராகிய சேர அரசரையா சந்திக்க விரும்புகிறாய்? போர் மூண்டிருக்கிற இந்தச் சமயத்தில் எங்கள் பாசறையில் புகுந்ததோடு, அரசரையே பார்க்க வேண்டும் என்று சொல்கிறாயே; உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ?”

 “அரசரிடம் நான் சொல்ல வேண்டியது ஒன்று உண்டு. அதை அவர் தெரிந்து கொண்டால் எனக்கு எது வேண்டுமானாலும் தருவார்.”

“ஓகோ! அரசரிடம் பரிசு பெற வந்திருக்கிறாயா? அதை என்னிடம் கேள்; நானே தருகிறேன்.”

வந்த பெண் சற்றே சினம் கொண்டாள். “உங்களைப் பார்த்தால் பொறுப்புள்ள பதவி தாங்குகிறவர்கள் போலத் தெரிகிறது. ஆனால் உங்கள் பேச்சு அதற்கு ஏற்றபடி இல்லையே! நான் வலிய வந்து உங்களிடம் உங்கள் நன்மையைக் கருதி ஒன்று சொல்லக் கருதினால் இப்படி இகழ்ந்தா பேசுவது? இது ஆண்மையும் அன்று; அரசியல் தந்திரமும் அன்று.”

அந்தப் பேச்சைக் கேட்டதும் பிட்டங்கொற்றன் அயர்ந்து போனான். அவளை அழைத்துக் கொண்டு காரியிருந்த கூடாரத்துக்குச் சென்றான். “இந்தப் பெண் நம் அரசரைப் பார்க்க வேண்டுமாம்; ஏதோ ஓர் இரகசியமான செய்தியைக் கூற வேண்டுமாம்” என்றான்.

காரி அவள் முகத்தைப் பார்த்தான். உடம்பைத்தான் அவள் மூடிக் கொண்டிருந்தாளே! “உன்னை யார் அனுப்பினார்கள்?” என்று கேட்டான்.

‘யாரும் அனுப்பவில்லை; நானேதான் வந்திருக்கிறேன்.”

‘நீ எங்கே இருக்கிறவள்? உனக்குச் சுற்றத்தார் யார்?’

“நான் தகடூரில் இருக்கிறவள்; கோட்டைக்குள் வேலை செய்து கொண்டிருந்தவள்.”

அறிவாளியாகிய காரி அவள் மிகவும் பாயனுள்ள செய்தியைச் சொல்ல வந்திருக்கிறாள் என்பதை நம்பினான். பிட்டங்கொற்றனை அனுப்பிவிட்டு அரசனிடம் அவளை அழைத்துக்கொண்டு சென்றான். அப்போது தான் அரசன் வெளியிலிருந்து வந்து அமர்ந்திருந்தான். அரசனைக் கண்டவுடன் அந்தப் பெண் கும்பிடு போட்டாள். “யார் இவள்?” என்று கேட்டுக்கொண்டே அவளை ஏற இறங்கப் பார்த்தான் அரசன்.

“இவள் ஏதோ இரகசியமான செய்தியைச் சொல்ல வந்திருக்கிறாளாம். இவளை நம்பலாமென்று எனக்குத் தோன்றுகிறது” என்று அரசன் காதில் மட்டும் கேட்கும்படி சொன்னான் காரி.

“என்ன சொல்ல வந்தாய்?” என்று அவளைக் கேட்டான் அரசன்.

அவள் பேசாமல் காரியைப் பார்த்தாள்; அரசன் அவள் குறிப்பை உணர்ந்து கொண்டான்.  “அவர் இருக்கலாம். அவர் அறியாத மந்தணம் ஒன்றும் இங்கே இல்லை” என்றான். காரியோ, “நான் சற்றே புறத்தில் இருக்கிறேன்” என்று சொல்லி, சேரன் ஏதாவது சொல்வதற்குமுன் வெளியே போய்விட்டான்.

அந்த இளம்பெண் பேசத் தொடங்கினாள். “எனக்குக் கோட்டையின் அமைப்பெல்லாம் தெரியும்; இரகசியமும் தெரியும். உங்களுக்கு அது பயன்படும் என்று எண்ணிச் சொல்லத்தான் வந்தேன்.”

“என்ன பெரிய இரகசியத்தை உன்னிடமிருந்து நான் எதிர்பார்க்க முடியும்?’

‘அப்படி எண்ணக் கூடாது, மன்னர் பெருமானே! சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும். செய்தி தெரிந்தால் பிறகு தங்களுக்கு அதன் அருமையும் பெருமையும் தெரியும்.”

“எங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அக்கறை உனக்கு ஏன் வந்தது? உனக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? உன் வார்த்தைகளை நம்பலாம் என்பதற்கு என்ன பிணை?” என்று அரசன் கேள்விகளை அடுக்கினான்.

“இன்னும் பல கேள்விகளைத் தாங்கள் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும். தங்களுக்கு நன்மை செய்வதைவிட அதிகமானுக்குத் தீமை செய்வதுதான் என் நோக்கம். அந்தத் திறத்தால் தாங்களும் நானும் ஒத்த நிலையில் இருக்கிறோம். நான் அவனைப் பழி வாங்க வேண்டும். அதனைத் தங்களைக் கொண்டு முடித்துக் கொள்ளலாம் என்ற ஆவலோடு வந்திருக்கிறேன்.”

“உன் பேச்சைக் கேட்டு எனக்கு உன்னைப் பற்றி ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. சிரிப்பதா, சினப்பதா என்றும் தெரியவில்லை. ஏதோ செய்தி சொல்ல வந்தேன் என்றாய். இப்போது அதிகமானைப் பழிவாங்க வேண்டும் என்கிறாய். அதற்கு நாங்கள் கருவியாக இருக்க வேண்டும் என்கிறாய். நீ சொல்வது இன்னதென்று தெரிந்து கொண்டுதான் பேசுகிறாயா?’

“மன்னர் பெருமான் சற்றே பொறுமையோடு கேட்க வேண்டும். ஓர் இளம்பெண் துணிவாகத் தங்களைத் தேடி வந்திருப்பதைக் கொண்டே ஏதோ அரிய செய்தி இருக்கிற தென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமான் கோட்டைக்குள் போகும் வழி எனக்குத் தெரியும்.”

“கோட்டைக்குள் போக வாயிலை யல்லாமல் வேறு வழி இருக்கிறதா?’

“ஆம்; ஒரு சுருங்கை வழி இருக்கிறது. அதன் வழியாகத்தான் உள்ளே உணவுப் பொருள்கள் போகின்றன” என்று அவள் கூறியபோது அரசனுக்கு வியப்புத் தாங்கவில்லை; ‘ஆ!’ என்று மலைத்துப் போனான்.

”சுருங்கை வழியா? உனக்கு எப்படித் தெரியும்? எங்களுக்குத் தெரியவில்லையே!”

“இரகசியமாக இருக்கவேண்டு மென்றுதானே அதை அமைத்திருக்கிறார்கள்? உங்களுக்குத் தெரியும்படி இருந்தால் அதற்கு என்ன பெருமை?”

 “நீ எப்படி அதை அறிந்தாய்?”

“நான் கோட்டைக்குள் வேலை செய்து கொண்டிருந்தேன். அதிகமான் மனைவியோடு நெருங்கிப் பழகினேன். அதனால் எனக்குக் கோட்டையின் இரகசியம் தெரிந்தது. ஒரு சமயம் அந்தச் சுருங்கை வழியில் நானே அரசியுடன் போய் வந்திருக்கிறேன்.”

“ஓ! அப்படியா? அங்கே வேலை செய்தவள் இப்போது இந்த வஞ்சச் செயல் செய்வதற்கு என்ன காரணம்?”

“அதைக் கேளுங்கள். சொல்கிறேன்” என்று கூறித் தன் மேற்போர்வையை அகற்றிக் கீழே வைத்தாள். அரசன் அவளை நன்றாகப் பார்த்தான். நல்ல அழகி என்பதைத் தெரிந்து கொண்டான்.

 “சொல்” என்று ஆவலோடு கேட்டான்.

“அந்தப்புரத்துக்கு நான் அடிக்கடி போய் வருவேன். ஒரு நாள் ஒரு கயவன் என்னைக் கண்டு சொல்லத் தகாத சொற்களைச் சொன்னான். நான் அரசியிடம் தெரிவித்து அவனை ஒறுக்கச் சொன்னேன். அவள் அதிகமானிடம் அந்தச் செய்தியைச் சொன்னாள். அவன் மிகவும் அலட்சியமாகப் பேசினான். மகளிர் கற்பைக் கிள்ளுக் கீரையைப் போல மதித்துப் பேசினான். அன்று நான் மேற்கொண்ட வஞ்சினத்தால், பிறகு அந்தப் பக்கமே போவதை ஒழித்தேன். மகளிரைப் பாதுகாவாத அரசனும் ஓர் அரசனா? அவன் இருப்பதை விட அழிந்தொழியட்டும் என்று தோன்றியது. ஏழையாகிய என்னால் என்ன செய்ய முடியும்? கடவுளே என் பங்கில் இருந்து தங்கள் படைகளை இங்கே அனுப்பியிருக்கிறார்.”

சேரமான் சற்றே சிந்தனையில் ஆழ்ந்தான். “என் நண்பரும் பெரிய வீரருமாகிய காரி வெளியே நிற்கிறார். அவரையும் உள்ளே அழைத்து யோசனை செய்ய வேண்டும். அதில் உனக்குத் தடை ஒன்றும் இல்லையே?” என்றான்.

“இந்த இரகசியத்தைத் தெரிவிக்கத்தான் வந்தேன். இங்கிருந்து நெடுந்தூரத்தில் ஒரு காட்டுக்குள் சுரங்க வழியின் வாசல் இருக்கிறது. நான் அதைத் தங்களுக்குக் காட்டச் சித்தமாக இருக்கிறேன். அதன் வழியே உள்ளே செல்லலாம். தாங்கள் யாருக்குச் சொன்னாலும் சரி; இரகசியத்தை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தங்களுக்குத்தெரியாதா?”

மணியை அடித்துக் காவலனை அழைத்தான் அரசன்; காரியை அழைத்து வரச் சொன்னான். வந்த அவனிடம் எல்லாவற்றையும் சொன்னான். “இந்தப் பெண்ணால் ஓர் அரிய நன்மை நமக்கு உண்டாகப் போகிறது என்று அப்போதே நான் உய்த் துணர்ந்தேன்” என்றான் காரி.

“அந்தப் பெண் இன்னாளென்று தெரிவிக்கவும் வேண்டுமா? அந்தப்புரத்தில் ஆடை வெளுத்து வந்த பெண்தான். இப்போது வஞ்ச மகளாக மாறி விட்டாள்.”

காரியும் சேரனும் கூடிப் பேசினார்கள். அன்று இரவில் அந்தக் காட்டுக்குச் சென்று சுருங்கையின் வாசலைப் பார்த்தறிவது என்று திட்டமிட்டார்கள். சில வீரர்களை அழைத்துக்கொண்டு, காரியும் மன்னனும் புறப்பட்டார்கள். வஞ்சப்பெண்ணும் உடன் சென்றாள்.

காட்டுக்குள் சென்று மறைந்து நின்றார்கள். நள்ளிரவில் சிலர் தீப்பந்தங்களுடனும் தலையில் மூட்டைகளுடனும் அங்கே வந்து கீழே இறங்குவதைக் கண்டார்கள். உடனே வீரர்கள் அவர்களைப் போய்ப் பற்றிக் கொண்டார்கள். அவர்களைச் சிறைப்படுத்தினார்கள். காவலர் சிலரை அங்கே நிறுத்திவிட்டுப் பாசறைக்கு வந்தார்கள். அதிகமானை வென்றுவிட்டது போன்ற மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்தான் பெருஞ்சேரல் இரும்பொறை. அந்தப் பெண்ணுக்குச் சில பரிசிலை அளித்து அவளை வீட்டுக்குக் காவலுடன் அனுப்பினான். தான் அறிந்த இரகசியத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற ஆராய்ச்சியில் அவன் இப்போது இறங்கினான்; காரியையும் உசாவினான்.

“நம்முடைய படைகளை அந்தச் சுருங்கையின் வழியே அழைத்துக் கோட்டைக்குள்ளே போய்ப் போர் செய்யலாமா?” என்று கேட்டான் அரசன்.

“சுருங்கை சுருங்கியதாகவே இருக்குமென்று நினைக்கிறேன். அதில் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று பேருக்கு மேல் போக முடியாது. படை போவதற்காக அமைத்தது அல்லவே அது?”

“பின் அதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது?’

“நமக்கு அதனால் ஒரு பயனும் இல்லை. அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவதே நல்லது.”

சேரமானுக்கு அந்த விடை இனிக்கவில்லை. நமக்குக் கிடைக்காத இரகசியம் கிடைத்திருக்கிறது. அந்த வழியை நாம் கண்ணாலே பார்த்தோம். அதை வீணாகப் போகச் செய்வதா? நீர் சொல்வது விளையாட்டாக இருக்கிறதே!” என்றான்.

“நான் வினையைத்தான் சொல்கிறேன். அந்தச் சுருங்கையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று சொன்னேனேயன்றி, நாம் அறிந்த இரகசியத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லையே!”

“உமது பேச்சு எனக்கு விளங்கவில்லை.”

“விளங்கும்படி சொல்கிறேன். இதுவரையில் நாம் அறியாமல் மயங்கியிருந்த ஒன்று இப்போது நமக்குத் தெளிவாகி யிருக்கிறது. அதிகமான் இத்தனை காலம் உள்ளே இருந்து வருவதற்கும், உணவு பெறுவதற்கும் உரிய துணை என்ன என்று நமக்குத் தெரியாமல் இருந்தது; இப்போது தெரிந்துவிட்டது. அவனுக்கு உணவு செல்வதைத் தடுக்கும் நிலையில் நாம் இருக்கிறோம். அந்தச் சுருங்கை நமக்குப் பயன்பட வேண்டாம்; அதிகமானுக்கும் பயன்பட வேண்டாம். இதுவரையில் அது நமக்குப் பயன்படவில்லை; அதிகமானுக்குப் பயன்பட்டது. இப்போது அதனால் அவனுக்குப் பயன் கிட்டாமல் செய்துவிட்டால் உணவு வராமல் திகைப்பான். உள்ளே இருப்பவர்கள் பட்டினியால் வாடுவார்கள். ஒன்று, எல்லோரும் இறந்து போவார்கள்; அல்லது வெளியே வந்து நம்மோடு போர் செய்வார்கள்.”

“நல்ல அறிவு உமது அறிவு! நல்ல யோசனை! அப்படியானால் அந்தச் சுருங்கையில் நம் காவலரை வைத்துப் பாதுகாக்கச் செய்யலாமா?”

“அதுகூட வேண்டியதில்லை. அந்த வழியை அடைத்துவிட்டு, யாராவது ஒருவனைச் சும்மா அந்தப் பக்கத்தில் உலாத்திக் கொண்டிருக்கச் செய்தால் போதும்.”

அதிகமான் அன்று தன் மனைவி கூறியதைக் கூர்ந்து கவனிக்காமல் பேசிய பேச்சு இப்படி விளைந்தது. ஏழைப் பெண்ணின் குறையைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்த செயல் அவனுக்கே தீங்காய் முடிந்தது. ஊழ்வினையின் வலியை மாற்ற யாரால் தான் முடியும்?

அடுத்த நாளே சுருங்கை வாயிலை அடைத்துக் கனமான சுவர்களைக் கட்டி விட்டார்கள், சேரன் படை வீரர்கள். அதிகமான் வாயில் துணியை அடைத்தது போன்றது அது என்று சொல்வதா? அல்லது அவன் வயிற்றில் அடித்தது என்று சொல்வதா? இரும்பொறையினுடைய ஆட்கள் சுருங்கை வாயிலிலா மண்ணைப் போட்டார்கள்? அதிகமான் வாயிலே அல்லவா மண்ணைப் போட்டுவிட்டார்கள்?

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s