நவகவிதை: நூல் மதிப்புரை

 -திருநின்றவூர் இரவிகுமார்

அரவிந்த மகரிஷியின் 150 ஜெயந்தி ஆண்டு இது.  அவர் பாரதம் எழுச்சி பெற வேண்டும் என்றார். காரணம், பாரதம் உயர்வது என்றால் உலகில் நற்பண்புகள் அதிகரிக்கிறது என்பதே அர்த்தம் என்றார். கவிஞர் வ.மு.முரளியும் இதை எதிரொலிக்கிறார் ‘ஜய ஜய பவானி’ என்ற கவிதையில்: பாரதம் உயர்ந்திட, பண்புகள் ஓங்கிட… (பக்கம் 15). 

நவகவிதை என்றால் புதிய கவிதை என்பது மட்டுமல்ல, ஒன்பது கவிதைகள் என்றும் பொருள். நவராத்திரியை முன்னிட்டு நாளுக்கு ஒன்றென ஒன்பது நாளும் புனைந்த கவிதைகளின் தொகுப்பு  இச்சிறு நூல். 

நவராத்திரி இமயம் முதல் குமரி வரை கொண்டாடப்படுகிறது. ‘அம்பிகை துதி’ என்ற கவிதை (பக்கம் 16) பாரத தேச வர்ணனையாக இருப்பது பொருத்தமே.

இந்துக்களின் ஆன்மிகப் பயிற்சியே உருவ தியானத்தில் தொடங்குகிறது. ‘சிவமென ஒளிர்வாள் சக்தி’ (பக்கம் 17) கவிதை அம்பாளின் உருவத்தை வர்ணிக்கும் தியானக் கவிதை என்றால் மிகையல்ல.

நவராத்திரியில் தலா மூன்று நாட்கள் என மூன்று பெரும் தேவியர்கள் சமமாக வழிபடப் பட்டாலும் கவிஞர் திருமகளுக்கு அதிகம் (வரிகள்) இடம்  கொடுப்பது இவரை நடைமுறைக் கவிஞராக்குகிறது. 

தேசத்தை வர்ணித்த கவிஞர் முரளி அதன் ஆன்மாவைப் பாடி இருக்கிறாரா என்று பார்த்தேன். ராஷ்ட்ர நாயகன் ஸ்ரீ ராமபிரானைப் பற்றி ‘பொன் நெல்லி மழை பொழிக!’ (பக்கம் 21) பாடியது கண்டு மகிழ்ந்தேன். 

பாரதம் என்றால் ஒளி; ஒளிர்வது அறிவு. அறிவு என்றால் பாரதி. பாரதிக்கு இன்னொரு சொல் சரஸ்வதி. ‘சரஸ்வதி வந்தனம்’ கவிதையில் (பக்கம் 27) அவளே உலகின் சூத்திரம் என்கிறார். இக்காலம் அறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகம் (Knowledge based Society) என்று கூறுகிறார்கள். 

மனித இனத்தின் தொன்மையான பழக்கங்களில் ஒன்று மது அருந்துதல். அதை ஒழிக்க முடியாது. ஆனால் அரசே அதை இலக்கு நிர்ணயித்து விற்கும் அவலம் இங்குதான் உள்ளது. மதுவை ஒதுக்க வேண்டும் என்று ‘வரம் அருள்செல்வி’யில் கவிஞர் கூறுவது அவரது சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறது. 

நவராத்திரி கவிதைகளில் சம்பந்தப்படாதது ‘வேர்களின் தவம்’ என்ற கடைசிக் கவிதை (பக்கம் 30 – 32). அமிழ்ந்து கிடப்பதே அலாதியான தவம், அமைதியாய் உழைப்பதே அருமையான சுகம்…. பாரதத்தின் குடும்பத் தலைவிகளும் வேர்களும் ஒன்றெனப் புரியும் என்ற கடைசி வரியை படித்ததும் சிரித்து விட்டேன். பெண் அடிமைத்தனத்தின் உச்சமிது என்று புதுயுக கவிதாயினிகளின் படைப்பை படிக்கும் எவரும் கூறுவார்கள். ஆனால் இந்த மண் சீதையைக் கொண்டாடும் மண். சொல்லாலே சுடும் ஆற்றலைப் பெற்றவள்; அதனை மன்னவன் மாண்புக்கு மாசு என வீசியவள் சீதாபிராட்டி. இவர் மரபுக் கவிஞர். 

$$$

நூல் விவரம்:

நவகவிதை

-வ.மு.முரளி

32 பக்கங்கள்; விலை: ரூ. 25-

வெளியீடு:

உலகெலாம் பதிப்பகம்

36A, முத்துவிஜயம் இல்லம், ஐஸ்வர்யா கார்டன்,

காங்கயம் சாலை, திருப்பூர்- 641604.

அலைபேசி எண்: 099949 61216

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s