-சேக்கிழான்

புதிய பார்வையில் புதிய ஆத்திசூடி
2. நோக்கமும் நுணுக்கமும்…
பாரதி ‘புதிய ஆத்திசூடி’ எழுதியது, இளம்பருவத்தினரிடம் நல்ல கருத்துகளை விதைப்பதற்காகவே என்பதை நாம் அறிவோம். ‘பருவத்தே பயிர் செய்’ என்ற ஔவையின் (ஆத்திச்சூடி- 22) வழிநின்று, மழலைகளுக்கு அவர் உபதேசம் செய்கிறார்.
புதிய ஆத்திசூடி, அகர வரிசையில் எழுதப்பட்டது. இதன் அமைப்பு முறை கீழ்க்கண்டவாறு உள்ளது:
- கடவுள் வாழ்த்து
- உயிர் வருக்கம் (1 – 12 / 12 வரிகள்)
- ககர வருக்கம் (13 – 24 / 12 வரிகள்)
- சகர வருக்கம் (25 – 36 / 12 வரிகள்)
- ஞகர வருக்கம் (37 – 41 / 5 வரிகள்)
- தகர வருக்கம் (42 – 53 / 12 வரிகள்)
- நகர வருக்கம் (54 – 64 / 11 வரிகள்)
- பகர வருக்கம் (65 – 74 / 10 வரிகள்)
- மகர வருக்கம் (75 – 85 / 11 வரிகள்)
- யகர வருக்கம் (86 – 88 / 3 வரிகள்)
- ரகர வருக்கம் (89 – 96 / 8 வரிகள்)
- லகர வருக்கம் (97- 102 / 6 வரிகள்)
- வகர வருக்கம் (103 – 110 / 8 வரிகள்)
குழந்தைகள் மனனம் செய்ய எளிதாக இருக்க வேண்டும்; அதன்மூலம் மொழியின் கட்டுமானத்தையும் இயல்பாக உணர வேண்டும் என்பதற்காகவே பண்டைய திண்ணைப்பள்ளிகளுக்கான நீதிநூல்களை இம்முறையில் நமது முன்னோர் இயற்றினர். அவர்களின் அடியொற்றி, மகாகவி பாரதியும் இதே நடையில் ‘புதிய ஆத்திசூடி’யை இயற்றி உள்ளார்.
மேலும், தனது உபதேசங்களில் தான் விரும்பும் பல அம்சங்களை வலியுறுத்திச் செல்கிறார். அவரது புதிய ஆதிச்சூடியை ஏழு அம்சங்கள் கொண்டவையாகப் பிரிக்கலாம். அவை:
- அ. பண்புநலம் கூறுபவை
- ஆ. உடல்நலம் வலியுறுத்துபவை
- இ. அறிவுநலம் வளர்ப்பவை
- ஈ. நடைநலம் நாடுபவை
- உ. எண்ணநலம் விதைப்பவை
- ஊ. சமூகநலம் விழைபவை
- எ. கடமைநலம் விதிப்பவை
இந்த 7 அம்சங்கள் தொடர்பான அறிவுரைகளும், புதிய ஆத்திசூடியில் ஆங்காங்கே விரவி வரும் வகையில் அமுதத் துளிகளாகத் தெளிக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் முதலில் வகைப்படுத்தித் தொகுத்துக் கொள்வது மேலும் நுணுகி ஆராய்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
ஏனெனில் ஒரு விஷயத்தையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் வகையில் பல இடங்களில் பலவிதமான அமுத மொழிகளைச் சொல்லிச் செல்கிறார் பாரதி. அதன் நோக்கம், அந்த விஷயத்தை குழந்தைகள் மனதில் பசுமரத்தாணி போல பதிய வைப்பதே. உதாரணமாக,
- அச்சம் தவிர்
- கீழோர்க்கு அஞ்சேல்
- சாவதற்கு அஞ்சேல்
- தீயோர்க்கு அஞ்சேல்
- தொன்மைக்கு அஞ்சேல்
- பேய்களுக்கு அஞ்சேல்
-ஆகிய வரிகளில் பாரதி மீள மீள வலியுறுத்துவது அச்சமின்மையே. அச்சமே அடிமை வாழ்வின் அவலத்துக் காரணம் என்று நன்கு உணர்ந்திருந்த பாரதி, அச்சமின்மையை குழந்தைகளுக்கு பல வகைகளில் இதனை வலியுறுத்திச் செல்கிறார்.
‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’
என்று ‘பண்டாரப்பாட்டி’லும்,
‘பயமெனும் பேய்தனை அடித்தோம்- பொய்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்!’
என்று ‘ஜயபேரிகைப் பாடலிலும் முழங்கும் பாரதி,
‘நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே’
என்று ‘பாரத ஜனங்களின் தற்கால நிலைமை’ பாடலில் வருந்திப் பாடுவது, அக்கால மக்களின் அச்சம் கருதியே. பெண்களின் சுதந்திரத்தை வலியுறுத்தும் ‘புதுமைப்பெண்’ கவிதையில் கூட,
‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்…’
-என்று பாடுகிறார் பாரதி. அச்சத்தை விட்டாலே நாடு விடுதலை அடைந்துவிடும் என்ற அவரது தாபமே இவ்வாறெல்லாம் அவரைப் பாடச் செய்கிறது.
இவ்வாறே புதிய ஆத்திச்சூடி நெடுகிலும் அவரது ஆன்மதாபத்தைக் காண முடியும். எனவே அவரது தேசிய வேட்கையை 7 அம்சங்களாகப் பகுத்துக்கொண்டு, அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது, புதிய திசையை நமக்குக் காட்டக் கூடும்.
$$$