-உ.வே.சாமிநாதையர்

முதல் பாகம்
24 B. புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றல்-ஆ
புதுச்சேரி சென்றது
பிரபவ வருஷ ஆரம்பத்தில் (1867) திருவாவடுதுறை யாதீனத்து ஸ்ரீ அம்பலவாண தேசிகரும் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரும் திருவண்ணாமலைக்கு யாத்திரையாகப் புறப்பட்டார்கள். உடன் வரும்படி விரும்பினமையால் மாணாக்கர்களோடு இவரும் சென்றனர். அங்கங்கேயுள்ள ஸ்தலங்களைத் தரிசித்தும் நிகழ்ந்த சிறப்புக்களைக் கண்டு ஆனந்தித்தும் இவர் திருவண்ணாமலையை அடைந்தார். அத்தலத்திலேயே ஸ்வாமி தரிசனஞ் செய்துகொண்டு சில தினம் இவர் இருந்தார். அப்போது அங்கே புதுச்சேரியிலிருந்து வந்து அழைத்த சவராயலு நாயகர் முதலிய அன்பர்கள் விருப்பத்தின்படி, ஆதீன கர்த்தரவர்களிடத்தில் விடைபெற்றுக்கொண்டு இவர் புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றார். போகும்போது அந்த நகரத்துக்கு அருகிலுள்ள சிவஸ்தலமாகிய *9 வில்வராய நல்லூர் சென்று அதிலுள்ள ஒரு சத்திரத்தில் தங்கியிருந்தார். அந்தச் சத்திரம் புதுச்சேரியிலே செல்வவானாகவிருந்தவரும் பெருங்கொடையாளியும் வக்கீலுமாகிய தானப்பாசாரியாரென்பவராற் கட்டப்பட்டது. அதில் இருந்த காரியஸ்தர்கள் இவரைத் தக்கவாறு உபசரித்து இவருக்கு விருந்து செய்வித்தனர். அங்கே இப்புலவர் சிகாமணி வந்து தங்கியிருத்தலையறிந்த புதுச்சேரிவாசிகளிற் சிலர் அங்கே வந்து இவரை வரவேற்று வேண்டிய உபசாரங்களைச் செய்தார்கள். தானப்பாசாரியாரைச் சார்ந்தவர்களும் வந்து புதுச்சேரிக்கு வர வேண்டுமென்று அழைத்தார்கள். அப்பொழுது தானப்பாசாரியாருடைய செல்வப் பெருக்கத்தையும் கெளரவத்தையும் தமிழுணர்ச்சியையும் அவர் வித்துவான்களை ஆதரிக்கும் வண்மையையும் பிற இயல்புகளையும் அவர்கள் வாயிலாகக் கேட்டு இவர் மகிழ்ந்தனர். முன்பும் அவரைப் பற்றிப் பலர் சொல்லக் கேட்டிருந்தவராதலின் மிகுந்த மகிழ்ச்சியையடைந்து,
விருத்தம் *10 “தானப்பா வடிக்களிறும் பாய்மாவுங் கலையுணர்ச்சித் தன்மை சால்வி தானப்பா வலர்க்குதவிப் புகழ்ப்படாங் கொடுபுதுவை தன்னில் வாழும் தானப்பா வில்வையினின் சத்திரச்சீ ரென்னுரைக்கேன் சசிகோன் மன்றம் தானப்பா வரம்பையொடு கற்பகமா தியதருக்கள் சான்றா மன்றோ”
என்னும் செய்யுளை எழுதி அவருக்கு அனுப்பினார். அதைப் பார்த்த அவர் ஆனந்தமுற்று உடனே புறப்பட்டு வில்வராயநல்லூருக்கு வந்து மிக்க விமரிசையோடு இவரை அழைத்துச்சென்று புதுச்சேரியில் வேண்டிய செளகரியங்களை அமைத்துக் கொடுத்து அவ்வூரிலேயே சிலதினம் இருந்து செல்ல வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். அவ்வண்ணமே இவரும் இருந்தனர். அதுவரையில் இவர் செய்துள்ள நூல்களிற் சில சில பகுதிகளைச் சொல்லச் சொல்லிக் கேட்டு இன்புற்று அவர், “இதுவரையில் இத்தகைய ஆனந்தத்தை நான் அடைந்ததில்லை” என்று மகிழ்ந்தார். பழகப் பழக இவருடைய பெருமையை அறிந்து அவர் செய்த உபசாரங்கள் அதிகரித்தன. அவருடைய பேரன்பை நினைந்து அவர் மீது ‘தசவிடுதூது’ என்னும் ஒரு நூல் இவரால் இயற்றப்பெற்றதென்பர். இப்பொழுது அது கிடைக்கவில்லை.
தானப்பாசாரியாருக்கு நெருங்கிய உறவினரொருவர் பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலருடைய பாடல்களையும் பிரபந்தங்களையும் கீர்த்தனங்களையும் படித்துக்கொண்டே காலங் கழித்து வந்தார். அந்த நாவலர் இயற்றிய குமரனந்தாதிக்குப் பொருள் சொல்ல வேண்டுமென்று அவர் இவரைக் கேட்டுக் கொண்டார். அதுவரையில் இவர் அதனைப் படித்திராவிட்டாலும் அவருக்கு அன்புடன் பாடஞ் சொன்னார். அதன் நடையைக் குறித்துப் பாராட்டி, ”மாம்பழக் கவிராயர் நல்ல தமிழ்க் கவிஞர்; அக் கவிராயருடைய செய்யுளை முதன்முறை கேட்டது இங்கேதான்” என்று இவர் கூறினார்.
அப்பால் இவர் இயற்றிய *11 துறைசையந்தாதியிற் சில பாடல்களைக் கேட்டவர்கள் அந்நூல் முழுவதற்கும் பொருள் கேட்க விரும்பினார்கள்; அச்சுப் புத்தகம் இல்லாமையால், “இதனை அச்சிற் பதிப்பித்தால் எல்லோரும் எளிதில் பெற்றுப்படிக்கவும் பாடங்கேட்கவும் அனுகூலமாக இருக்கும்” என்று இவரிடம் தங்களுடைய கருத்தை வெளியிட்டார்கள். அவர்களுடைய விருப்பத்தின்படி அவ்வந்தாதி பிரபவ வருடம் ஆனி மாதம் (1867) புதுச்சேரியில் அச்சிடப்பெற்றது. அதனைப் பெற்றுப் பலர் இவரிடம் பாடங்கேட்டு இன்புற்றனர்.
அப்பால் தானப்பாசாரியார், சவராயலு நாயகர் முதலியவர்களால் வலிந்து செய்யப்பெற்ற சிறந்த ஸம்மானங்களை யெல்லாம் பெற்றுக்கொண்டு புதுச்சேரியை விட்டுப் புறப்பட்டு இவர் இடையேயுள்ள தலங்களைத் தரிசித்து அங்கங்கேயுள்ள அன்பர்களாற் பாராட்டப் பெற்றுத் திருவாவடுதுறை வந்து சேர்ந்தார்.
தனியூர்ப் புராணம்
மாயூரத்திற்கு மேல்பாலுள்ள கூறைநாட்டைச் சார்ந்ததாகத் தனியூர் என்னும் சிவஸ்தலமொன்றுண்டு. அது புழுகீச்சரம் என்றும் வழங்கும். புழுகுபூனை இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றமையால் அத்தலம் அப் பெயர்பெற்றது. அவ்வூர் சாலியச் செல்வர்களுக்கு இருப்பிடமாக உள்ளது. அங்கே பள்ளிக்கூடம் வைத்துக்கொண்டிருந்த தமிழ் வித்துவானாகிய சாமிநாதைய ரென்னும் வீர சைவரொருவரது முயற்சியால் முத்துச் செட்டியாரென்னும் சாலியப்பிரபு வேண்டிக்கொள்ள அத்தலத்திற்கு ஒரு புராணம் இவராற் செய்யப்பட்டது. மற்ற நூல்களிற் போலப் புராணத்தின் உறுப்பாகிய கடவுள் வாழ்த்து, அவையடக்கம், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, நைமிசாரணிய வருணனை, மூர்த்தி தல தீர்த்த மான்மியங்களென்பவை சுருக்கமாக அதில் அமைந்துள்ளன. இவர் அப்புராணத்தில் நாட்டுச் சிறப்புச் செய்து வருகையில் ஸம்மானம் செய்வதற்காகச் சாலியச் செல்வர்களிடம் முற்கூறிய சாமிநாதையர் பணம் சேகரித்து வந்தார். அவர்களுட் சிலர், “எங்கள் சாதியாரைப் பற்றி ஏதாவது அதிற் சொல்லியிருக்கிறார்களா? இந்த ஸ்தலத்திற்குப் புராணம் செய்யும்பொழுது எங்களைப் பற்றியும் சொன்னாலல்லவோ எங்களுக்குக் கெளரவமாக இருக்கும்?” என்று சொன்னார்கள். அவர் அச்செய்தியை இவரிடம் அறிவிக்கவே இவர், ”அதில் என்ன ஆட்சேபம்? அவர்களைப் பற்றிப் பாட வேண்டுவது இன்றியமையாததே” என்று சொல்லிவிட்டு அச் சாதியாருடைய தொழிற்சிறப்பு முதலியவற்றைப் பாராட்டிச் சிலேடை முதலிய அணிகளமைய நகரச் சிறப்பிற் பாடினர். அப்பகுதியிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:-
விருத்தம் “சீர்தளை செய்த வெள்ளை முதலிய செழும்பாக் கொண்டு பார்பர வணியு மிக்க பொருளுமீப் படரச் செய்யும் ஆர்தரு கலைக ளாலே புலவரு மானார் நாளும் தேர்தரு கோசி கத்தாற் செழுமறை யவரு மானார்.” (கலைகள் - ஆடைகள், நூல்கள். கோசிகம் - சாமவேதம், பட்டாடை.) “கோடியுள் ளவரை யிந்தக் குவலயங் குபேர னென்றும் நாடிய மகவா னென்றும் நவின்றிடு மனையார் மாடத் தூடிய லொருசா ரெண்ணில் பற்பல கோடி யோங்கும் நீடிய வளத்த தென்னி னிகரெடுத் துரைப்ப தெங்கே” (கோடி - கோடி யளவான பொருள், புதிய ஆடை.) “கண்ணகன் ஞால மெல்லாங் கலைவளம் பரவு மாறே எண்ணகன் றொழில்கள் செய்து குரவரு மென்ன நின்றார் பண்ணமை யுலக மெங்குந் தானைகள் பரவச் செய்து வண்ணவில் லரசர் போன்ற ரவர்திறம் வகுக்க லாமோ.” (குரவர் - ஆசிரியர். தானைகள் - சேனைகள், ஆடைகள்.) “திருவமிக் கோங்கு மந்தச் செழுநக ரகத்து வாழும் தருநிகர் புருடர் யாருஞ் சாலிய ரதான்று வெய்ய பொருவருங் கூற்றின் மேலும் போர்த்தொழில் தொடங்கும் வேற்கண் உருவமிக் குடைநல் லாருஞ் சாலிய ருண்மை மாதோ.” (சாலியர் - சாலியச் சாதியிலுள்ளார், அருந்ததியைப் போன்றவர்கள்.)
புழுகீசப்படலத்தில், யானை முதலிய பல அஃறிணைப் பொருள்கள் சிவபிரானைப் பூசித்துப் பேறு பெற்றனவென அத்தலத்திற் பூசித்துப் பேறு பெற்ற புழுகு பூனை ஒன்று எண்ணியதாக உள்ள பகுதி சிவநேசச் செல்வர்களுக்கு இன்பத்தை உண்டாக்கும்.
அப்புராணம் அரங்கேற்றப்படுகையில் முத்துச் செட்டியார் முதலிய செல்வர்களும் வித்துவான்கள் பலரும் வந்திருந்து கேட்டு மகிழ்ந்தனர். அப்பொழுது வாசித்தவர் கம்ப ராமாயணப் பிரசங்கியும் இவருடைய மாணாக்கருமாகிய சாமிநாதக் கவிராயர். பின்பு சாலியச் செல்வர்கள் தக்க ஸம்மானம் செய்தார்கள். அந்தப் புராணத்தைப் பற்றிச் சுப்பிரமணிய தேசிகர், “இது செய்யுளளவிற் சிறிய புராணமாக இருந்தாலும் பல விஷயங்களும் கற்பனைகளும் பெரிய நூலிற் போலவே நிறைந்து எளிதில் இன்பத்தைத் தருவதாக இருக்கின்றது” என்று சொல்லுவதுண்டு. அதில் உள்ள படலங்கள் எட்டு; செய்யுட்டொகை 202.
அந்தப் புராணம் விபவ வருடம் மார்கழி மாதம் (1868) அச்சிடப் பட்டது.
பெரியபுராணக் கீர்த்தனத்திற்குச் சிறப்புப் பாயிரம் அளித்தது
சில சிவநேசச் செல்வர்கள் கேட்டுக்கொண்டபடி ஸ்ரீ மகா வைத்தியநாதையர் தமையனாராகிய ஸ்ரீ இராமசாமி ஐயர் பெரிய புராணத்தைக் கீர்த்தன ரூபத்தில் மிகச் செவ்வையாகச் செய்து முடித்துப் பின்பு திருவாவடுதுறையில் ஆதீன கர்த்தர்கள் முன்பு அதனை அரங்கேற்றினார். அப்பொழுது இவர் அந்த நூல் பெரிய புராணக் கருத்திற்கு மாறுபாடின்றி நன்றாக அமைந்திருத்தலை அறிந்து மகிழ்ந்து பின்வரும் சிறப்புப்பாயிரச் செய்யுட்களை அளித்தனர்:-
விருத்தம் “நாடுவா னவர் முனிவர் தொழுதேத்த வானந்த நடன மன்றுள் ஆடுவா னடியெடுத்துக் கொடுப்பவுயர் சேக்கிழார் அருளிச் செய்த பாடுவான் புராணத்தை யெழுதுவார் வாயாரப் படிப்பா ரின்பம் நீடுவான் சிந்திப்பா ரானார்க ளானாலும் நிலத்து வாழ்வார்” “அடியெடுத்துக் கொடுத்தவன்போற் றண்ணுமையா திகடழுவி அளவா வின்பம் படியெடுத்துக் கொளப்புரியா விதமுணர்ந்தாங் கதினுளநாற் பதமுங் கொண்டோர் கொடியெடுத்த நிறத்தவன்வாழ் பதமுதற்பல் பதங்கடத்து குணரும் வேட்கக் கடியெடுத்து வீசுபல பதஞ்செய்தா னனையவன்யார் கரைவா யென்னின்” “பொன்னிவளந் தருநாடு புரிதவத்தால் *12 வையையெனும் புரிதோன் றிற்று மின்னியது செய்தவத்தாற் பஞ்சநத மாமறையோன் விருப்பின் வந்தான் மன்னியவன் புரிதவத்தான் மறைநாலு மெனவுதித்த மைந்தர் தம்முட் பன்னியது தன்னதெனத் தன்னியல்பி னுணருமொரு பான்மை மேயோன்” “சாம்பமூர்த் திக்கிளையா னென்பதலா விளையானெத் தமிழ்வல் லோர்க்கும் மேம்படுமா வயித்தியநா தனுக்குமூத் தானென்று விளம்பல் போல ஆம்பலவா மிசையினுமூத் தானொழுக்கம் பலதிரண்டால் அன்ன மெய்யான் ஓம்பல்புரி யிராமசா மிச்சுகுண மாமறைதேர் உயர்ச்சி யோனே” ''ஓங்குபுக ழிராமசா மிச்சுகுண மறையவன்பாட் டுவந்தான் வாமம் தாங்குகற்றோ கையுமருட்சுப் பிரமணிய குருவெனுஞ்சேய் தானு மேவ வீங்குதுறை சையினாளு மெய்கண்டான் சந்தானம் விளங்க மேயோன் பாங்குபுனை பேரருளம் பலவாண தேசிகனெம் பரமன் றானே.” (வாமம் தாங்கு கல் தோகை - இடப்பக்கத்தில் நாலவிட்ட காவியுடையின் தலைப்பு, இடப்பாகத்தில் கொண்ட உமாதேவியார்; ' வாமம் .........மேவ ' என்பது சிவபெருமானுக்கும் அம்பலவாண தேசிகருக்கும் சிலேடை.)
மாயூரப் புராணம்
“மற்ற ஸ்தலங்களுக்கெல்லாம் புராணம் செய்கின்றீர்களே; இந்த ஸ்தலத்திற்கு நாடுநகரச் சிறப்புக்களுடன் ஒரு புராணம் செய்ய வேண்டாமா? நீங்கள் இவ்வூரில் வாசம் செய்தற்கு அடையாளமாக ஒரு புராணம் செய்தால் நன்றாயிருக்கும்” என்று ஸ்ரீ மாயூரநாதர் கோயிற் கட்டளைத் தம்பிரானாக இருந்த முத்துக்குமாரத் தம்பிரானவர்களும் சில சைவப்பிரபுக்களும் மற்றத் தமிழபிமானிகளும் இவரைக் கேட்டுக்கொண்டார்கள். அவ்வண்ணம் அது வடமொழிப் புராணத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழிற் செய்யுள் நடையாக இவரால் இயற்றப்பட்டது. மாயூரம் ஸந்நிதித் தெருவிலிருந்த ஓரபிஷேகஸ்தர் வேண்டுகோளின்படி சைவர்களுக்குரிய நித்தியகர்ம விதிகள் செய்யுள் நடையாகச் செய்யப்பெற்று அப்புராணத்தின் இறுதியிற் சேர்க்கப்பட்டன. அப்புராணத்தை எழுதியவரும் அரங்கேற்றும்பொழுது படித்தவரும் அவ்வூரில் இருந்த முத்துச்சாமிபிள்ளை யென்பவர்.
அப்புராணத்திலுள்ள படலங்கள் 61; செய்யுட்டொகை 1894.
அந்நூலில், தருமன் பூசித்த படலம் முழுவதும் கட்டளைக் கலித்துறையால் அமைந்திருக்கின்றது. அகத்தியர் பூசித்தபடலத்தில் சுவை பொதிந்த மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா ஒன்று உண்டு. அம்பிகை கொண்டருளிய மயில்வடிவத்தின் சிறப்பைக் கூறும்,
கலிநிலைத்துறை ''வரையு தித்திடு மயிலென்று மயிலிய லென்றும் புரையில் கேள்விய ருருவகஞ் செய்தலும் போற்றி உரைசி றப்பவன் மொழித்தொகை செய்தலு மொருவக் கரைசெய் சாதிப்பே ரெனமயி லாயினள் கவுரி” (மாயூரப்படலம், 4)
என்னும் செய்யுளும், அம்பிகை மயில் வடிவங்கொண்டவுடன் ஸ்ரீ மாயூரநாதரும் மயில் வடிவங்கொண்டதைக் கூறும்,
கலிநிலைத் துறை “சத்த னெவ்வுருக் கொள்ளுமவ் வுருவிற்குத் தகவே சத்தி யும்முருக் கொளுமெனச் சாற்றலு மிருக்கச் சத்தி யெவ்வுருக் கொள்ளுமவ் வுருவிற்குத் தகவே சத்த னும்முருக் கொளுமென றரையெழுந் தன்றே” (மேற்படி, 29)
என்னும் செய்யுளும், அகத்தியர் முருகக்கடவுளைத் துதிசெய்ததாகவுள்ள,
தரவு கொச்சகக் கலிப்பா “கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப் படியாதி யெவ்வுலகும் படைத்தருளும் பிரானை முடியாத முதலோனை மூவர்பெரு மானை வடிவேலன் றனைப்பேசா வாயென்ன வாயே வள்ளிமணா ளனைப்பேசா வாயென்ன வாயே” (அகத்தியர் பூசைப்படலம், 22)
என்னும் செய்யுளும் சுவை யமைந்து விளங்குகின்றன.
அந்தப் புராணம் அரங்கேற்றி முடிந்தவுடன் அதனை அச்சிட வேண்டுமென்று சிலர் விரும்பியபடி விபவ வருடம் புரட்டாசி மாதம் (1868) சென்னையிலுள்ள தி.சுப்பராய செட்டியாருக்கு அப்புத்தகத்தை அனுப்பினார். அவருடைய மேற்பார்வையில் அந் நூல் அந்த வருடம் தை மாதத்துக்குள் அச்சிடப்பட்டு நிறைவேறியது. தை மாதத்தில் சுப்பராய செட்டியார் மனைவியார் தேகவியோகம் அடைந்தனர். சுபஸ்வீகரண காலத்தில் வந்த வித்துவான் காஞ்சீபுரம் சபாபதி முதலியாரிடம் சுப்பராய செட்டியார் அப்புராணத்திலுள்ள சில பகுதியைப் படித்துக் காட்டினர். முதலியார் அதைக்கேட்டு அதன் அருமையை வியந்தனர்.
“அந்தியேஷ்டியின்போது காஞ்சீபுரம் மகாகனம் ஸ்ரீ சபாபதி முதலியாரவர்கள் வந்திருந்தார்கள். மாயூர புராணத்தில் சில சில பகுதிகளை வாசித்துக் காட்டினேன். மிகவும் ஆராமைப்பட்டார்கள்” என்று பிள்ளையவர்களுக்குச் சுப்பராய செட்டியார் (மாசி மாதம் 62) எழுதிய கடிதத்தின் பகுதி இதனைத் தெரிவிக்கின்றது.
ஸ்ரீ காசி ரகசியம்
காசியாத்திரை பலமுறை செய்தவரும் அக்காலத்தில் திருவிடைமருதூர்க் கட்டளை அதிகாரம் பெற்றுப் பார்த்து வந்தவருமான ஸ்ரீ சுப்பிரமணியத் தம்பிரானவர்களுடைய விருப்பத்தின்படி ஸ்ரீ காசியின் தலவரலாறுகளைக் கூறும் நூல்களுள் ஒன்றாகிய ஸ்ரீ காசி ரகசியமென்னும் நூல் இவரால் தமிழிற் செய்யுள் வடிவாக இயற்றப்பட்டது. அந்நூலை அவர் காசியிலிருக்கும்பொழுதே ஒரு வடமொழி வித்துவானைக் கொண்டு மொழிபெயர்க்கச் செய்து தமிழ் வசன நடையில் தாமே எழுதி வைத்திருந்தனர். அதைத் துணையாகக் கொண்டே இவர் ஸ்ரீ காசி ரசிகயத்தை இயற்றினார். இச்செய்தியை,
விருத்தம் “ஆனதிரு வாவடுதண் டுறைநமச்சி வாயனடிக் கடிமை பூண்டு ஞானநெறி யடைந்தவனற் காசியாத் திரைபலகால் நயந்து செய்தோன் ஈனமினற் குணமனைத்து மோருருக்கொண் டெனப்பொலிவோன் எண்ணி லாத மோனமுனி வரர்புகழப் பொலிந்தவச்சுப் பிரமணிய முனிவ னென்போன்” “உரவுமலி கருங்கடல்சூ ழுலோகோப காரமிதென் றுள்ளத் தோர்ந்து விரவுவட மொழியைமொழி பெயர்த்தெடுத்துச் செந்தமிழால் விளங்கு மாறு கரவுதவிர் சிறப்புடைத்தா யறமுதனாற் பயனளிக்கும் காட்சித் தாய பரவுபுகழ்த் திருக்காசி மான்மியமா மந்தணத்தைப் பாடு கென்ன” (மந்தணம் - இரகசியம்.) வேறு "அனையவன் மொழிந்த வார்த்தை யாருயிர்க் குறுதி யாகும் வினையம துணர்ந்து பாடும் விதஞ்சிறி துணரே னேனும் தனையில்பே ராசை தூண்ட நாணெனுந் தளையி னீங்கிப் புனைதரு தமிழி னாலே பாடிடப் புகுந்தேன் மன்னோ'' (காசிரகசியம்,பாயிரம்,24 - 6)
என்னும் செய்யுட்களால் உணரலாம்.
அந் நூல் திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி திருக்கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் அரங்கேற்றப்பெற்றது.
அதனை வடநாட்டிலிருந்து சுப்பிரமணியத் தம்பிரானவர்கள் கொணர்ந்த அருமையை,
விருத்தம் “வானுறைதி யாகரா சரையிங்குக் கொடுவந்த வள்ளல் போலும் தேனுறைகாக் கயிலையமர் போதமிங்குக் கொடுவந்த செல்வன் போலும் மானுறைகா சியினின்றம் மந்தணஞ்செந் தமிழ்த்தேயம் வரக்கொ ணர்ந்த மீனுறைநீர்த் துறைசையிற்சுப் பிரமணிய முனிவர்பிரான் மெய்ச்சீர் வாழ்க” (போதம் - சிவஞானபோதம். கொடுவந்த செல்வன் - ஸ்ரீ பரஞ்சோதி முனிவர்.)
என்னும் இந்நூலின் இறுதிச் செய்யுளிலும் இவர் பாராட்டியுள்ளார்.
அந் நூலை இவர் செய்து வருகையில் எழுதியவரும், அரங்கேற்றுகையிற் படித்தவரும் இவரிடத்தில் அப்பொழுது பாடங் கேட்டுக்கொண்டிருந்தவரான சுந்தரப்பெருமாள் கோயில் அண்ணாசாமி ஐயரென்பவர்.
அந்நூல் 26 அத்தியாயங்களையும் 1012 செய்யுட்களையும் கொண்டது; அந் நூலிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:-
விருத்தம் (சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி) “போகமென் பனவ ருந்தல் பொருந்தன்மற் றவைக ளுள்ள ஆகவோர் பகலி னள்ளும் ஆன்றதோ ரிரவி னள்ளும் பாகமார் பதஞ்சென் றேற்றும் பரிந்துசென் றூடல் தீர்த்தும் ஏகநா யகனே நிற்றற் கியைந்தவர் துணைத்தாள் போற்றி” வேறு “கந்த மூல பலமருந்திக் காற்றா லுதிர்ந்த சருகருந்தி முந்த வெழுநீர்த் துளியருந்தி முகிழ்க்கும் பசும்பொற் கொழுந்தருந்தி வந்த தருந்தி யதுவுநீத் தமர்வார் காசி மாதேவன் எந்த வுணவுண் டமர்ந்தாலும் எளிதி னருளும் வகையுணரார்.“''” (திருமால் திருமகளுக்குபதேசித்த. 23) (வந்தது - காற்றை; வந்து - காற்று.)
வீரவனப் புராணம்
பின்பு புதுவயல் முருகப்ப செட்டியார் முதலிய சில தன வைசியப் பிரபுக்கள் வேண்டுகோளின்படி *13 வீரவனப் புராணம் இவரால் இயற்றப்பெற்றது. அதிலுள்ள படலங்கள் 14; செய்யுட்கள், 704.
வீரவனக் கோயிலில் இறைவன் ஸந்நிதானத்தில் அப் புராணத்தை இவர் அரங்கேற்றினர்; கேட்ட தன வைசியப் பிரபுக்கள் தக்க ஸம்மானஞ் செய்து அனுப்பினார்கள்.
அத்தலத்திற் புதைந்திருந்த சிவலிங்கப் பெருமானைக் கிழங்கென்றெண்ணித் தன்னுடைய கருவியினால் குத்தித் தழும்புபடச் செய்து பின் அறிவு வரப்பெற்று உண்மையை உணர்ந்த வீரனென்னும் வேட்டுவன் இரங்கியதாக உள்ள,
விருத்தம் “என்னையாள் தரவிக் கானகத் திருந்தார் இருந்ததை யறிந்தில னந்தோ பொன்னைநேர் சடிலத் திறைவனா ரிங்குப் பொருந்திய தறிந்தில னந்தோ அன்னையே பொருவும் அறவனா ரிங்ஙன் அமர்ந்ததை யறிந்தில னந்தோ முன்னையூழ் கொல்லோ பலருமுள் ளிரங்க முடித்தனன் முடிந்திலே னென்பான்” (வீரசேகரர் திருமுடித்தழும்பேற்ற படலம், 28)
என்னும் செய்யுளும், அப்பொழுது அவனுக்கிரங்கிய சிவபெருமான் ஓரந்தண உருவத்தோடு தோன்றிக் கூறிய விடையாக உள்ள,
விருத்தம் “பரம்பரன் முடியிற் றழும்புறச் செய்தேம் பாவியே மென்றுநீ கவலல் பிரம்படித் தழும்பும் வில்லடித் தழும்பும் பெயர்த்தெறி கல்லடித் தழும்பும் வரம்பறு சிறப்பிற் செருப்படித் தழும்பும் வயங்கிய *14 வாள்வெட்டுத் தழும்பும் நிரம்பிய வியலிற் பரிக்குரத் தழும்பும் நிகழுறு பூசைவாய்த் தழும்பும்” “குடம்புரை செருத்தற் றேனுவோ டடுத்த குழக்கன்றின் குளப்படிச் சுவடும் தடம்புயத் தொருவன் கதையடிச் சுவடுந் தாங்கிய நமக்கிதோர் பொருளோ இடம்பட வுணரி னின்னமும் பலவால் இசைப்பது நமக்குமுற் றாது திடம்படு மிவைபோற் பலவுநந் தமக்குத் திருவிளை யாட்டெனத் தேர்தி” (மேற்படி. 33-34)
என்னும் செய்யுட்களும் படித்து இன்புறற்பாலன.
கன்னபுரம் பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ்
இவர் நாட்டுக்கோட்டை நகர்களுக்குச் சென்று தம் கவியாற்றலைப் புராணங்கள் செய்வதனால் வெளிப்படுத்தி வருகையில் கன்னபுரம் என்னும் ஊரிலிருந்த சிவபக்தர்கள் சிலர் இவர் பல பிள்ளைத்தமிழ்களைப் பாடியிருக்கின்றனரென்பதை அறிந்து இவர்பால் வந்து தங்கள் ஊரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள பாகம்பிரியாளென்னும் அம்பிகையின் மீது ஒரு பிள்ளைத் தமிழ் பாடித் தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே ஒரு பிள்ளைத்தமிழ் இவரால் இயற்றி அரங்கேற்றப் பட்டது. கேட்டுக்கொண்ட கனவான்கள் தக்க ஸம்மானம் செய்தார்கள். அந்நூற் செய்யுட்கள் சிலவற்றை நான் கேட்டிருக்கிறேன். எவ்வளவோ முயன்றும் அந்நூல் கிடைக்கவில்லை.
பிரிந்த மாணவர்கள்
மாயூரத்திலிருக்கும்பொழுது இவரிடம் பாடங்கேட்பவர்களிடம் உள்ளூரார் சிலரும் வெளியூர்களிலிருந்து வருவோர் சிலரும், ”ஐயாவிடம் இருந்தால் எப்பொழுதும் உடனிருக்க வேண்டும்; ஊருக்கு அனுப்ப மாட்டார்கள்; ஆதலால் சில நூல்களைப் பாடங்கேட்டுக்கொண்டு மெல்ல நழுவி விடுங்கள். நீங்கள் இவரைவிட்டுப் பிரிந்துவந்து பிரசங்கம் முதலியன செய்தால் நல்ல பொருள் வருவாயும் புகழும் உங்களுக்கு உண்டாகுமே. இப்படியே இருப்பதனால் என்ன பிரயோசனம்?” என்று கூறிக் கலைத்தார்கள். அதனால் சில மாணாக்கர்கள் இவரை விட்டுப் பிரிந்து செல்லவே இவருக்கு மனவருத்தம் மிகுதியாக இருந்து வந்தது.
அங்ஙனம் பிரிந்து சென்றவர்களுள் ஒருவர் பிள்ளையவர்களைப் போலவே தாமும் இருக்க வேண்டுமென்னும் நினைவினராய் இவரைப் போலவே நடையுடை பாவனையை மேற்கொண்டு ருத்திராட்சகண்டி, வெள்ளிப்பூணுள்ள பிரம்பு, விபூதி வைத்தற்குரிய வெள்ளி ஸம்புடம் முதலியவற்றோடு, மாணவர்களாகச் சிலரை உடனழைத்துக் கொண்டு இவரை அறியாத பிரபுக்களிடத்திற் சென்று, “இன்ன கனவான் இன்னாரைக்கொண்டு இன்ன புராணத்தை இயற்றுவித்தார்; தாங்களும் ஒரு புராணம் என்னைக் கொண்டு செய்வித்தால் தங்களுடைய புகழ் மிகவும் பரவும்” என்று கூறியும் பிறரைக்கொண்டு கூறுவித்தும் சில ஸ்தலபுராணங்களும், சில பிரபந்தங்களும் பாடிவந்தனர். முதலிற் பாடல்கள் சாதாரணமாக இருந்தாலும் பிள்ளையவர்களிடம் சிலகாலம் இருந்து வந்த பழக்கத்தால் பின்பு செப்பமுற்று விளங்குவனவாயின. அவர்களுட் சிலர், வெளியிடங்களில் இவரிடம் பாடம் கேட்டதாக மட்டும் கூறி இவரைத் தோத்திரஞ் செய்து பயனடைந்தார்களேயன்றிப் பின்பு இவருடைய இறுதிக்காலம்வரை இவரைப் பார்க்க வரவேயில்லை. அதற்குக் காரணம் தம்மைக் கண்டால் ஏன் வரவில்லையென்று இவர் கேட்பாரென்ற அச்சமே.
சிவஞான சித்தியார் பதவுரைச் சிறப்புப்பாயிரம்
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறையில் சைவசித்தாந்த சாஸ்திர பாடம் சொல்லி வருவதுண்டு. அப்பொழுது படிப்பவர்கள் இடர்ப்படுவதை யறிந்து சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கு ஒரு பதவுரையை அத்தேசிகர் வரைந்தளித்தனர்; அவ்வுரை மிகப் பயன்படுவதாயிற்று. அதனை இக் கவிஞர் பார்த்தபொழுது இன்புற்றுச் சில அன்பர்கள் விருப்பத்தின்படி அவ்வுரைச் சிறப்புப் பாயிரமாக ஐந்து செய்யுட்கள் இயற்றினார். அவை வருமாறு:-
விருத்தம் “ஒருபரைநேர் தரவுலகத் துயிர்பலவும் விருத்தியுற ஓம்பி மீட்டும் கருமலவே ரறுத்தருளித் தானோக்கும் பெருங்கருணைக் கடவுள் ஞானப் பெருவலிய னெமக்கெளியன் பேணாதார் தமக்கரியன் பெருகா னந்தம் தருதிருவா வடுதுறைச்சுப் பிரமணிய தேசிகன்பொற் சரணஞ் சார்வாம்.” “முற்றுணர்ந்த வருணந்தி சிவனருள்செய் சித்தியெனும் முடிபா நன்னூற் குற்றுணர்ந்த சிவஞான மாமுனிவ னுரைத்தபொழிப் புரையிம் மண்மேற் கற்றுணர்ந்த சிலர்க்கன்றிப் பலர்க்குமுப காரமுறாக் கருத்தா ழத்தைச் சற்றுணர்ந்த வெம்மனோர் களுமிடர்தீர்ந் தெளிதுணரும் தன்மை யோர்ந்து” “வளர்திருவா வடுதுறையம் பலவாண தேசிகன்கண் மணியாய் நாளும் தளர்வறவந் தருள்பொழிசுப் பிரமணிய வெங்கள்குரு சாமி யென்பான் விளர்தபுமப் பொழிப்புரையின் விரோதமுறாப் பதவுரையாம் விளக்கம் தந்தான் கிளர்தருமற் றவற்கியாது புரிதுமென்றும் பணிதலன்றிக் கிளக்குங் காலே.” “நல்லானந் துறைசையிற்சுப் பிரமணிய குருசாமி நவிறல் போன்முன் இல்லாமை யானன்றோ சமவாதப் படுகுழிவீழ்ந் திழிந்தார் சில்லோர் ஒல்லாத மாயாவா தக்கரிய சேறழுந்தி உழன்றார் சில்லோர் பொல்லாத வினுமுளபல் புகர்மதக்கோட் பாட்டழுந்திப் போனார் சில்லோர்.” “இனியாது மெண்ணாராய்த் திகழ்திருவா வடுதுறையை எய்தி யாரும் தனியானா மவனடியார்க் கடியாராய்ச் சித்தாந்த சைவ ராகி நனியாருஞ் சிவானந்தப் பெரும்பரவை யிடைத்தோய்ந்து நாளும் வாழ்வார் பனியாம லிவரினைய ரேலவற்காட் படுமெஞ்சீர் பகரொ ணாதே.”
ஸ்ரீ பிரம்மவித்தியாநாயகி பிள்ளைத்தமிழ்
திருவெண்காட்டுக்கு ஒருமுறை இவர் ஸ்வாமி தரிசனம் செய்யப் போனார். அப்பொழுது அங்கே இருந்த சிவநேசச் செல்வரும் வேளாளப் பிரபுவுமாகிய நடராச பிள்ளையென்பவருடைய வேண்டுகோளின்படி அந்தத் தலத்திற் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பிரம்மவித்தியாநாயகி மீது இவர் ஒரு பிள்ளைத்தமிழ் இயற்றினார். அது மிக்க சுவையுள்ளது; அந்நூல் அரங்கேற்றப்படவில்லை; பின்பு சில வருடம் வரையில் இவர்பால் இருந்துவந்தது; சிலர் படித்தும் இன்புற்றார்கள்; அப்பால் இரவலாக வாங்கிச் சென்ற ஒருவர் திரும்பக் கொடுக்கவில்லை. பின்பு எவ்வளவோ முயன்று பார்த்தும் அது கிடைக்கவில்லை.
சாய்வு நாற்காலிப் பாட்டு
இவர் திருவாவடுதுறையிலிருந்து அடிக்கடி மாயூரஞ்சென்று சிலதினம் இருந்துவிட்டு வருவார். ஒருமுறை மாயூரம் சென்றிருந்தபொழுது இவருக்குச் சுரநோய் கண்டது. அதனால் உடம்பு தளர்ச்சியுற்றது; இருப்பதற்கும் படுப்பதற்கும் இயலவில்லை. வைத்தியர்கள் சாய்வு நாற்காலியை உபயோகித்துக்கொண்டால் செளகரியமாக இருக்குமென்று சொன்னார்கள். அப்பொழுது தரங்கம்பாடி கோர்ட்டில் உத்தியோகத்திலிருந்தவரும் வேதநாயகம் பிள்ளையின் தம்பியுமாகிய ஞானப்பிரகாசம் பிள்ளைக்கு சாய்வு நாற்காலி யொன்று வேண்டுமென்று குறிப்பித்து,
குறள் வெண்பா 1. “பேராளா ஞானப் பிரகாச வள்ளலெனும் சீராளா விக்கடிதந் தேர்” விருத்தம் 2. “உறுவலியி னிடங்கொண்டு வனப்பமைந்த நாற்காலி ஒன்று வேண்டும் மறுவறுநாற் காலியெனல் யானையன்று குதிரையன்று வல்லே றன்று கறுவகல்பாற் பசுவான்றா லிவையெல்லா மியங்குதல்செய் கடன்மேற் கொள்ளும் பெறுபவர்பா லியங்காது வைத்தவிடத் தேயிருக்கப் பெற்ற தாமே” 3. “அத்தகைய தொன்றனுப்பி னதிலமர்ந்து மிக்கசுகம் அடைவேன் யானும் உத்தமநற் குணத்திலுயர் நீயுமிகு சீர்த்தியையா ஒளிரா நிற்பை வித்தகமற் றஃதெவ்வா றிருப்பதற்கு மிடங்கொடுத்தல் வேண்டு மேய சுத்தமிகு மதனைவரு பவன்பாலே யனுப்பிடுதல் தூய தாமே”
என்னும் மூன்று செய்யுட்களைப் பாடி ஒரு வேலைக்காரன் வசம் அனுப்பினார். அவற்றைக் கண்டவுடனே அவர் நல்ல சாய்வு நாற்காலி ஒன்று வாங்கி அவனிடம் கொடுத்தனுப்பினார். அதனை இவர் உபயோகித்துவந்தார்; அது பின்பு இவருடைய வாழ்நாள் முழுதும் இவர்பாலே இருந்து உதவியது.
*15 திருநாகைக் காரோணப் புராணம் இயற்றத் தொடங்கியது
விபவ வருஷ ஆரம்பத்தில் (1868 ஏப்ரலில்) நாகபட்டினத்தில் ஓவர்ஸியராக இருந்த அப்பாத்துரை முதலியார் முதலிய உத்தியோகஸ்தர்களும் தேவாரத் திருக்கூட்டத்தலைவராகிய வீரப்ப செட்டியார் முதலியவர்களும் இவரைத் திருநாகைக் காரோணப் புராணத்தைப் பாடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே செய்தற்கு இவர் இணங்கினார். ஒரு தலபுராணம் பாடுவதற்கு முன் அத்தலத்திற்குச் சென்று அதனையும் அதனைச் சார்ந்த இடங்களையும் பார்த்து அவற்றைப் பற்றிய செய்திகளை முதியோர் முகமாக அறிந்துகொண்டு தொடங்குதல் எப்பொழுதும் இவருக்கு வழக்கமாதலால் இவர் மாயூரத்திலிருந்து நாகபட்டினம் சென்று சில காலம் இருந்து பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்து விசாரிக்க வேண்டியவற்றையெல்லாம் விசாரித்து அறிந்து கொண்டனர்; அத்தலத்திற்குரிய வடமொழிப் புராணத்தை அப்பொழுது அங்கே இருந்த திருச்சிராப்பள்ளி ஸ்ரீ மகாதேவ சாஸ்திரிகளென்பவரைக் கொண்டு தமிழில் வசனநடையாக மொழிபெயர்ப்பித்து எடுத்துக்கொண்டு மாயூரம் வந்தார்.
மாயூரத்துக்குப் புறப்படும்பொழுது அன்பர்களிற் சிலர், ”நீங்கள் செய்யும் இப் புராணம் காஞ்சிப் புராணத்தைப்போல் இருக்கவேண்டும். அதில் சுரகரீசப் படலத்தில் மந்தரகிரியின் வளத்தைக் கூறப்புகுந்த சிவஞான முனிவர் பல சித்திர கவிகளை அமைத்ததுபோல நீங்களும் இப்புராணத்தின்கண் ஏற்ற இடத்தில் அவற்றை அமைக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். அவர்கள் வேண்டுகோளின்படியே நாகைக் காரோணப் புராணத்தில் நந்திநாதப் படலத்திற் சித்தாச்சிரம வருணனையிற் பல வகைச் சித்திர கவிகளை இவர் செய்தமைத்திருக்கின்றார்.
கோபால பிள்ளையின் தருக்கு அடங்கினமை
புராணம் தொடங்கிச் செய்யப்பெற்று வருகையில் அதனை எழுதி வந்தவர் முத்தாம்பாள்புரம் (ஒரத்த நாடு) கோபால பிள்ளை யென்பவர். மாணாக்கராக இவரிடம் வருவதற்கு முன்பு அவர் முத்தாம்பாள்புரம் தமிழ்க்கலாசாலையில் உபாத்தியாயராக இருந்து சிறந்த கவிஞராக விளங்கிய நாராயணசாமி வாத்தியாரென்பவரிடம் பாடம் கேட்டவர்; நல்ல இயற்கை அறிவுடையவர். பனையேட்டில் எழுதுவதில் அவருக்கு மிக்க ஆற்றல் உண்டு. இயல்பாகவே, ‘எழுதும் வன்மை நமக்கு அதிகம்’ என்று அவர் எண்ணிக்கொண்டிருந்தார்.
அப்படியிருக்கையில் ஒருநாள் இவருடைய வீட்டு விசாரணையைப் பெரும்பாலும் வகித்து வந்தவரும் இவரிடத்தில் மிக்க அன்புடையவருமாகிய வைத்தியலிங்கம் பிள்ளை யென்பவர் இவர் சயனித்திருக்கையில் மாணாக்கர் கூட்டத்திலிருந்து பேசிக்கொண்டிருந்தார். அவர் கோபாலபிள்ளையை விரைவாக எழுதுவதிற் சமர்த்தரென்று பாராட்டினார். அதனைக் கேட்ட கோபாலபிள்ளை, “எல்லாம் சரிதான்; ஐயா அவர்கள் என்னுடைய கை வலிக்கும்படி பாடல் சொல்லுகிறார்களில்லையே” என்று விடை பகர்ந்தார். அந்தச் சமயம் அவர் எவ்வளவோ மெல்லப் பேசியும் சயனித்திருந்த இவருடைய காதில் அவருடைய சொல் விழுந்தது. உடனே எழுந்து வந்தால், தாம் சொல்லியதைக் குறித்துக் கோபால பிள்ளை நாணமும் அச்சமும் அடைவாரென்று நினைந்து சிறிது நேரம் படுக்கையிலேயே இவர் படுத்திருந்துவிட்டு அப்பால் எழுந்து வந்தார்; பாடஞ்சொல்லுதல், நூல் எழுதுவித்தல் முதலியன அப்பால் வழக்கம்போல் நடைபெற்றன.
பின்பு ஒருநாட்காலையில் வழக்கப்படியே அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தார். எழுத வேண்டிய ஏடும் கையுமாகக் கோபால பிள்ளை வந்தனர்; அவருடன் வேறு சில மாணாக்கர்களும் செய்யுள் செய்வதைக் கவனிக்கும் அன்பர்களும் வந்து வேறு வேறிடத்தில் இருந்து வழக்கப்படியே கவனித்துக் கொண்டிருந்தார்கள். இக் கவிஞர்பிரான் அப் புராணத்தில் மேலே நடக்க வேண்டிய பகுதியின் வசனத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்டுவிட்டு உடனே செய்யுள் செய்யத் தொடங்காமல் ஒரு நாழிகைவரையில் யோசனை செய்து மூக்குத் தூளைப் போட்டுக்கொண்டு கையை உதறிவிட்டுப் பாடல் சொல்ல ஆரம்பித்தார்.
இவர் மூக்குத்தூளை அபூர்வமாக உபயோகிப்பது வழக்கம். அதைப் போட்டுக்கொண்டு தொடங்கிவிட்டால் யாதொரு தடையுமின்றிப் பாடல்களைச் சொல்லிக்கொண்டே செல்வார். அப்போது பக்கத்திலுள்ளவர்களெல்லாம் அன்றைக்கு மிக்க வேகமாகச் செய்யுட்கள் இயற்றப்படுமென்று அறிந்துகொள்வார்கள்.
ஆரம்பித்த இவர் ஓய்வின்றிச் சொல்லிக்கொண்டே சென்றார். அன்று நடந்த பகுதி சுந்தரவிடங்கப்படலாம். அது கற்பனை நிரம்பிய பாகம். எழுதினவரும் கையோயாமல் எழுதிக் கொண்டே சென்றார். தொடங்கிய காலம் காலை 7 மணி; 10 மணி வரையில் சொல்லிக்கொண்டு வருவதும், 10 மணிக்கு மேலே பூஜை செய்வதற்கு எழுந்து ஸ்நானத்திற்குப் போய்விடுவதும் இவருக்கு வழக்கம். மிக விரைவாக இவர் செய்யுட்களைச் சொல்லிக்கொண்டே சென்றமையால் எழுதுபவராகிய கோபால பிள்ளைக்குக் கையில் நோவுண்டாயிற்று. ‘எப்பொழுது பத்து மணியாகும்’ என்று எதிர்பார்த்திருந்தார். 10 மணியாகியும் ஸ்நானத்திற்கு எழாமல் இவர் பாடல்களைச் சொல்லிக்கொண்டே போனார்.
அப்பொழுது தவசிப்பிள்ளை வந்து ஸ்நானத்திற்கு எழ வேண்டுமென்று குறிப்பித்தான். சரியென்று சொல்லிவிட்டு எழாமல் மேலும் செய்யுட்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். மணி பதினொன்றும் ஆய்விட்டது. கோபால பிள்ளைக்கு வலக்கைச் சுண்டு விரலின் பின்புறத்திலும் இடக்கைக் கட்டை விரலின் நுனியிலும் ரத்தம் குழம்பிவிட்டது. வலி அதிகமாயிற்று; அவராற் பொறுக்க முடியவில்லை. தம்முடைய கஷ்டத்தை ஒருவாறு புலப்படுத்தினால் நிறுத்துவாரென்று நினைந்து ஏட்டைக் கீழேவைத்துவிட்டு இடக் கையை வலக்கையாலும் வலக்கையை இடக்கையாலும் தடவிக் கொண்டும் பிடித்துக்கொண்டும் குறிப்பாகத் தம்முடைய கஷ்டத்தைப் புலப்படுத்தினார். இவர் அதனைக் கவனியாராகிப் பாடல்களைச் சொல்லிக்கொண்டே சென்றார். மணி பதினொன்றரை ஆகி விட்டது. கோபாலபிள்ளை வாய்விட்டுக் கூறுவதற்கு நாணிப் பல்லைக் கடித்துக்கொண்டு எழுதிவந்தார். பக்கத்தில் இருந்தவர்களிற் பெரும்பாலோர் பதினொரு மணிக்கே எழுந்து சென்று விட்டார்கள். இவர் நிறுத்தவேயில்லை. மணி பன்னிரண்டும் ஆயிற்று. அப்பாற் சிறிதளவேனும் தம்மால் எழுத முடியாதென்றுணர்ந்த கோபால பிள்ளை இவர் சிறிது யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென எழுந்து கையிலே உள்ள ஏடுகளைச் சேர்த்துக் கயிற்றாற்கட்டி எழுத்தாணியை உறையிற் செருகிவிட்டு எல்லாவற்றையும் இவருக்கு முன்னே வைத்து ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணி எழாமலே கிடந்தார். இவர் அவரைப் பார்த்து விட்டு, “தம்பி! ஏன் இப்படி? என்ன விசேடம்? எழுந்திரு” என்றார்.
கோபால: ”இனி என்னால் எழுதவே முடியாது. என்னைப் போல எழுதுகிறவர்கள் யாருமில்லை யென்றிருந்த எண்ணம் எனக்கு அடியோடே இன்று நீங்கிவிட்டது. இது கிடக்க; ஐயா அவர்களுடைய பெருமையை இன்றுதான் உண்மையில் அறிந்து கொண்டேன். தேவரீர் எந்தத் தெய்வத்தின் அவதாரமோ, எந்தப் பெரியோர்களுடைய அம்சமோ யான் அறியேன்! இப்படிச் செய்யுள் செய்யும் ஆற்றலை யாரிடத்தும் நான் கண்டிலேன்; கேட்டுமிலேன். இன்றைக்கு நடந்த பாகம் சாதாரணமானதன்று. இதனை மற்றக் கவிஞர்கள் செய்வதாக இருந்தால் எத்தனையோ நாள் பிடிக்குமே. அது யாதொரு வருத்தமுமின்றி விரைவாகப் பாடப்பட்டதே! இந்தப் பணிக்கு உரியவனாக ஆவதற்கு அடியேனுக்குப் பலநாள்செல்லுமென்று தோற்றுகிறது. இடையிலே நிறுத்திவிட்டேனென்று கோபித்துக்கொள்ளக் கூடாது. க்ஷமிக்க வேண்டும்.”
மீ: “என்னப்பா! உனக்குச் சிரமமாயிருக்கிறதென்பதை முன்னமே தெரிவித்திருந்தால் நான் நிறுத்தியிருப்பேனே. இது மிகவும் சிறந்த பகுதியாக இருந்ததனால் மத்தியில் நிறுத்த மனம் வரவில்லை. முன்பே மனத்திற் செய்துகொண்ட ஒழுங்கு பின்பு தவறிவிடுமேயென்று நினைந்து சொல்லிவந்தேன். நீ ஸ்நானம் செய்து கொண்டு வரலாம்” என்று அவரை அனுப்பிவிட்டுத் தாமும் ஸ்நானம் செய்யப் போய்விட்டார். பக்கத்திலிருந்த சிலரால் இச்செய்தி மாயூரத்திலும், அயலூர்களிலும் பரவலாயிற்று. கேட்ட யாவரும் மிகவும் விம்மிதமுற்று வந்து வந்து பிள்ளையவர்களைப் பார்த்துப் பாராட்டிச் செல்வாராயினர்.
மிகவும் முகம் வாடிச் சோர்வோடு கோபால பிள்ளை அங்கேயிருத்தலைப் பிற்பகலில் வந்த மேற்கூறிய வைத்தியலிங்கம் பிள்ளை கண்டு, ”ஏன் இப்படி இருக்கிறீர்?” என்று கேட்டு நிகழ்ந்தவற்றை அயலாரால் தெரிந்துகொண்டு அவரைப் பார்த்து, ”என்ன! உம்முடைய கொட்டம் இன்றைக்கு அடங்கிற்றாமே. கையில் வலியுண்டாகும்படி ஐயா அவர்கள் பாடல் சொல்லுகிறார்களில்லையேயென்று அன்றைக்குச் சொன்னீரே! அன்றைத் தினம் நீர் சொன்னது எனக்கு மிக்க வருத்தந்தான். துள்ளின மாடு பொதி சுமக்கும்” என்று சொன்னார்.
அந்தச் சமயத்தில் அங்கே வந்த இப்புலவர்பிரான், ”தம்பி, அவனை ஒன்றும் சொல்லவேண்டாம். அவன் நல்ல பிள்ளை. மிகவும் வருந்துவான்” என்று சொல்லி அவரை அடக்கினார். அப்பால் கோபால பிள்ளையின் கைவலி தீரப் பலநாள் சென்றன. அவர் மறுபடியும், வந்து எழுதுவதை ஒப்புக்கொள்ளும் வரையில் எழுதி வந்தவர் மாயூரம் முத்துசாமி பிள்ளையாவர்.
இயல்பாகவே பிள்ளையவர்களிடத்தில் பக்தியுள்ளவராக இருந்த கோபால பிள்ளைக்கு இந்த நிகழ்ச்சிக்குப் பின் இவர்பால் அளவிறந்த மதிப்புண்டாயிற்று. உண்மையில் இவரை ஓர் அவதார புருஷரென்றே நினைத்து அச்சங்கொண்டு இவரிடம் ஒழுகிவருவாராயினர். இச் செய்தி பின்பு அவர் இயற்றிய,
விருத்தம் *16 “சீர்பூத்த மயிலாடு துறைத்தளிமே வருட்பெருமான் சீர்த்தி யாய பேர்பூத்த மான்மியமாம் வடமொழியைத் தென்மொழியாற் பிறங்கச் செய்தான் பார்பூத்த ஞானகலை முதற்பலவு முணர்ந்துபுகழ் பரந்து மேய வார்பூத்த சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே” “மாலாதில் லறத்தமர்ந்து துறவறத்தார் புகழவருள் மாண்பு பூண்டு பாலோடு தேன்கலந்த தெனத்தளிக டொறுஞ்சென்று பதிகஞ் சொற்ற ஆலால சுந்தரமே மீனாட்சி சுந்தரப்பேர் அமைய வாய்ந்து தோலாத மாயூரப் புராணமொழி பெயர்த்தனனேற் சொல்வ தென்னே”
என்னும் செய்யுட்களால் விளங்கும்.
சவேரிநாத பிள்ளை
வேதநாயகம் பிள்ளையால் அனுப்பப்பட்டுச் சவேரிநாத பிள்ளையென்ற ஒருவர் இவரிடம் அக்காலத்திற் படிக்க வந்தார். அவருடைய ஊர் காரைக்கால். அவர் நல்ல அறிவாளி. பிள்ளையவர்களிடத்தில் மிக்க பக்தி உள்ளவர். பிரசங்கசக்தி மிக்கவர். மற்றவர்களைக் காட்டிலும் பிள்ளையவர்களுக்கு வேண்டிய தொண்டுகளை அதிகமாகச் செய்துவந்தவர். கிறிஸ்தவ மதத்தினர்; சைவர்களைப் போலவே சீலமுடையவராகவும் மிகுந்த மரியாதையாகவும் நடந்துவந்தார். ஒருநாளேனும் இப்புலவர் சிகாமணியைப் பிரிந்திருக்க மாட்டார். இனிய சாரீரமுடையவர். இக் கவிஞர்பிரானுடைய இறுதிக்காலம் வரையில் நம்பிக்கையாக இருந்தவர்களில் அவரைப் போன்றவர் வேறு எவரும் இல்லை.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
9. இது வில்லையெனவும் வில்வேச்சுரமெனவும் வழங்கும்; இதற்குத் தமிழ்ப் புராணமும் இத்தலத்துள்ள அம்பிகை மீது ஒரு பிள்ளைத்தமிழும் உண்டு.
10. தானம் பா அடி களிறு ; தானம் – மதம். விதானப்பாவலர் – கூட்டமாகிய கவிஞர். சசிகோன் – இந்திரன். மன்றம் – சுதன்மை . அரம்பை – வாழை, தெய்வப்பெண். கற்பகம் – தென்னை, கற்பக மரம்.
11. துறைசை – திருவாவடுதுறை.
12. இது வையைச் சேரியெனவும் வழங்கும்.
13. இவ்வூர் சாக்கோட்டை யெனவும், சாக்கையெனவும் வழங்கும்.
14. வாள் வெட்டுத் தழும்புற்றதலம் வாட்போக்கி; குதிரைக் குளம்புத் தழும்புற்ற தலம் தென்திருமுல்லைவாயில்; பூனை வாய்த் தழும்புற்ற தலம் மாயூரத்துக்கருகிலுள்ள குன்றமருதூர்; பசுக்கன்றின் குளம்படிச்சுவடு பெற்ற தலம் திருப்பேரூர்.
15. திருநாகைக்காரோணம் – நாகபட்டினம்.
16. இவை மாயூரப் புராணம் அச்சிடும் போது பாடப்பட்டு அதிற் பதிப்பிக்கப்பெற்றன.
$$$