கடற்கரையாண்டி

-மகாகவி பாரதி

ஒரு நாள், நடுப்பகல் நேரத்திலே, நான் வேதபுரத்தில் கடற்கரை மணலின் மேல் அலைக்கு எதிரே போய் உட்கார்ந்திருந்தேன். காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான். அலைகள் எதிரே மோதின. வடகீழ்த் திசையிலிருந்து சில்லென்ற குளிர்ந்த காற்று வீசிற்று.

குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும் போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளி நாட்டு வியாபாரக் கப்பல் வந்து நின்றது. நானும் பொழுது போகாமல், ஒரு தோணிப்புறத்திலேயிருந்து கடலையும் அலையையும் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தேன். ‘அடா! ஓயாமல், எப்போதும் இப்படி ஓலமிடுகிறதே! எத்தனை யுகங்களாயிற்றோ! விதியன்றோ! விதியன்றோ இந்தக் கடலை இப்படியாட்டுவது? விதியின் வலிமை பெரிது.

‘விதியினால் அண்டகோடிகள் சுழல்கின்றன. விதிப்படியே அணுக்கள் சலிக்கின்றன. மனுஷ்யர், தேவர், அசுரர் முதலிய பல கோடி ஜீவராசிகளின் மனங்களும், செயல்களும் விதிப்படி நடக்கின்றன. இந்த சூரியன் விதிக்குக் கட்டுப்பட்டிருக்கிறான். மேகங்களெல்லாம் விதிப்படி பிறந்து, விதிப்படி யோடி, விதிப்படி மாய்கின்றன. இவ்வாறு யோசனை செய்து கொண்டிருக்கையிலே அங்கொரு யோகி வந்தார்.

இவருக்கு வேதபுரத்தார் கடற்கரையாண்டி என்று பெயர் சொல்லுவார்கள். ஏழைகள் இவரைப் பெரிய சித்தரென்றும், ஞானி யென்றும் கொண்டாடுவார்கள். கண்ட இடத்தில் சோறு வாங்கித் தின்பார்: வெயில் மழை பார்ப்பது கிடையாது. சில மாதங்கள் ஓரூரில் இருப்பார், பிறகு வேறெங்கேனும் போய், ஓரிரண்டு வருஷங்களுக்குப் பின் திரும்பி வருவார். இவருடைய தலையெல்லாம் சடை, அரையிலொரு காவித்துணி, வேதபுரத்திலே தங்கும் நாட்களிலே இவர் பெரும்பாலும் கடலோரத்தில் உலாவிக் கொண்டிருப்பார். அல்லது தோணிகளுக்குள்ளே படுத்துத் தூங்குவார். இந்தக் கடற்கரை யாண்டி நடுப்பகலில் நான் அலைகளைப் பார்த்து யோசனை செய்வது கண்டு புன்சிரிப்புடன் வந்து என்னருகே மணலின் மேல் உட்கார்ந்து கொண்டு, “என்ன யோசனை செய்கிறாய்?” என்று கேட்டார்.

“விதியைப்பற்றி யோசனை செய்கிறேன்” என்றேன்.

“யாருடைய விதியை?” என்று கேட்டார். “என்னுடைய விதியை, உம்முடைய விதியை; இந்தக் கடலின் விதியை, இந்த உலகத்தின் விதியை” என்று சொன்னேன். அப்போது கடற்கரையாண்டி சொல்லுகிறார்:

“தம்பி, உனக்கும், கடலுக்கும், உலகத்துக்கும் விதி தலைவன். எனக்கு விதி கிடையாது; ஆதலால் உங்கள் கூட்டத்தில் என்னைச் சேர்த்துப் பேசாதே” என்றார்.

“எதனாலே?” என்று கேட்டேன்!

அப்போது அந்த யோகி மிகவும் உரத்த குரலில், கடலோசை தணியும்படி பின்வரும் பாட்டை ஆச்சரியமான நாட்டை ராகத்தில் பாடினார்.

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில்; தேங்கடம்பின் 
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் 
வேல் பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்புமவன் 
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கைகொழுந்தே!

கந்தரலங்காரத்தில் நான் பலமுறை படித்திருக்கும் மேற்படி பாட்டை அந்த யோகி பாடும்போது, எனக்கும் புதிதாக இருந்தது. மேலெல்லாம் புளகமுண்டாய்விட்டது. முதலிரண்டடி சாதாரணமாக உட்கார்ந்து சொன்னார். மூன்றாவது பதம் சொல்லுகையில் எழுந்து நின்று கொண்டார். கண்ணும், முகமும் ஒளிகொண்டு ஆவேசம் ஏறிப் போய்விட்டது. “வேல் பட்டழிந்தது வேலை (கடல்)” என்று சொல்லும்போது சுட்டு விரலால் கடலைக் குறித்துக் காட்டினார். கடல் நடுங்குவதுபோல் என் கண்ணுக்குப் புலப்பட்டது.

பிறகு சொன்னார்:

“தெய்வத்தின் வேலாலே கடல் உடைந்தது. மலை தூளாய்விட்டது. சூரபத்மன் சிதறிப்போனான். அந்த முருகனுடைய திருவடி என் முடிமீது தொட்டது, நான் விடுதலை கொண்டேன். விடுதலைப் பட்டது பாச வினை விலங்கே.”

இங்ஙனம் அவர் சொல்லிக் கொண்டிருக்கையில் மழை வந்துவிட்டது. நானெழுந்து வீட்டுக்குப் புறப்பட்டேன். அவர் அப்படியே அலையில் இறங்கி ஸ்நானம் செய்யப் போனார். நான் மணலைக் கடந்து சாலையில் ஏறும்போது, கடற்புறத்திலிருந்து சிங்கத்தின் ஒலி போலே, ‘விடுதலை; விடுதலை; விடுதலை’ என்ற ஒலி கேட்டது.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s