-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்-1; பகுதி- 5
மீரட் முந்திக் கொண்டது… தில்லி அதிர்ந்தது!
வங்காளத்தில் பாரக்பூரில் சிப்பாய் மங்கள் பாண்டே வெடித்த துப்பாக்கி குண்டையடுத்து, கம்பெனியின் படைப்பிரிவு 19-ம் 34-ம் ஆங்கிலேயர்களின் நேரடிப் பார்வையில் வந்தன. சுபேதார் ஒருவர் ரகசியமாக கம்பெனிக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அவரைக் கொன்றனர்.
கம்பெனி படைப்பிரிவுகள் 19, 34 -இவ்விரண்டும் கலைக்கப்பட்டு, சிப்பாய்களிடமிருந்த ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. வேலையிழந்த சிப்பாய்கள் இனியாவது திருந்தி தனது வெள்ளை எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்க விருப்பம் தெரிவித்து மீண்டும் அடிமையாக வந்து சேர்வார்கள் என்று கம்பெனியார் எண்ணியிருந்தனர்.
சிப்பாய்களுக்கோ தங்கள் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த அடிமைத்தளை அகற்றப்பட்டது கண்டு மகிழ்ச்சி; ஆடிப்பாடி கொண்டாடினர். இனி தங்கள் மனம்போல அன்னியர்களை எதிர்க்கலாமே, எஜமானர்களுக்குப் பயந்து பயந்து செயல்பட வேண்டாமே என்கிற துள்ளல்.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் மங்கள் பாண்டே செய்த உயிர்த்தியாகம், மேற்குக் கோடியில் இருந்த அம்பாலாவுக்கும் பரவி, அங்குள்ள சிப்பாய்களைச் சிலிர்க்க வைத்தது. பாண்டேயின் கொலைக்குப் பழிவாங்கத் துடித்தனர் அம்பாலா வீரர்கள். அங்கு வெள்ளை ராணுவ அதிகாரிகள் வீடுகள் திடீர் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கின. அம்பாலாவில் இருந்த படைத்தளபதி ஆன்சன் என்பான் திகைத்து நின்றான்.
நானா சாஹேப் லக்னோவுக்குச் சென்ற பிற்பாடு அங்கும் அவ்வப்போது ஆங்கில அதிகாரிகள் வீடுகள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. பாரத தேசம் முழுவதும் ஒரே நாளில் கலகம் செய்து அன்னியர்களை நாட்டைவிட்டு ஓட்டிவிட வேண்டுமென்கிற திட்டம் உருவானது. அதற்கான நாளும் குறிப்பிடப்பட்டது. அந்த நாள்தான் 1858 மே மாதம் 31-ஆம் தேதி.
புரட்சிக்கு நாள் குறித்துவிட்ட போதிலும், அந்த நாள் வர இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டுமே! முடியவில்லை. உடனே புரட்சித் தீயை மூட்டிவிட வேண்டுமென துடித்தனர் சிப்பாய்கள்.
மீரட் நகரத்து வெள்ளை அதிகாரிகளுக்கு ஓர் ஐயம். உண்மையிலேயே கொழுப்பு தடவிய தோட்டாக்களை இந்திய சிப்பாய்கள் தொட மறுக்கிறார்களா? அந்தச் செய்தி உண்மையா? தெரிந்துகொள்ள விரும்பினான் ஒரு ஆங்கில அதிகாரி. படைவீரர்களிடம் கொழுப்புத் தடவிய தோட்டாக்களைக் கொடுத்த போது அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். அவர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அவர்கள் அனைவருக்கும் எட்டு முதல் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. கை கால்கள் விலங்கிடப்பட்டு அந்தச் சிப்பாய்கள் அடித்து, உதைத்து சிறைக்குக் கொண்டுசெல்லும் அநீதி கண்டு, பின்னால் வரவிருந்த புரட்சி அன்றே தொடங்கிவிடும் நிலைமை உருவானது.
அப்படி சிப்பாய்கள் கை, கால்கள் விலங்கிடப்பட்டு சிறைக்குக் கொண்டுசென்ற அன்றிரவே மீரட் நகரம் உறங்கப் போகவில்லை. மாறாக இந்திய வீரர்களில் குதிரைப் படையினர் சிறையை உடைத்து சிறைப்பட்ட வீரர்களை வெளிக் கொணர்ந்தனர். காவல் இருந்த இந்திய வீரர்களும் புரட்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டனர். சிறைக்கூடம் தகர்த்து தரைமட்டமானது. கூட்டம் கூட்டமாக வீரர்கள் தெருக்களில் ஓடியபோது அவர்களைப் பார்த்து தன் கைத்துப்பாக்கியால் சுட்ட கர்னல் பின்னிஸ் என்பானைச் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
வெள்ளையர் எவரும் கண்ணில் பட்ட மாத்திரத்தில் பிணமானார்கள். மக்களும் கலகத்தில் கலந்து கொண்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை ஏந்திக்கொண்டு வெள்ளையர்களின் பங்களாக்களைத் தாக்கி அழித்தனர். எங்கும் தீ! புகை மண்டலம்! அபயக் கூக்குரல்கள். எங்கும் ஒரே கோஷம் எதிரொலித்தது, அது “மாரோ பறங்கீகோ!” (அயலவரை உதையுங்கள்!)

மீரட் கலவர பூமியாக மாறியது. கலகம் செய்த சிப்பாய்கள் அனைவரும் ஒன்று திரண்டனர், அவர்களோடு மக்களும் சேர்ந்து கொண்டனர். கூட்டம் கூட்டமாக அவர்கள் தில்லியை நோக்கி ஓடத் தொடங்கினர். மீரட் கமிஷனராக இருந்த கிரேட் ஹெட்டின் என்பானின் வீடு தீக்கிரையானது. அப்போதும் அவன் வீட்டினுள் ஒளிந்து கொண்டிருந்தான். தீயின் கரங்கள் அவனைத் தீண்டியதும் வெளியே ஓடிவந்தவன் மக்கள் கால்களில் விழுந்து உயிர்ப்பிச்சை கேட்டு அவனது பட்லரின் தயவால் தப்பி ஓடினான்.
ஊரின் பல்வேறு பகுதிகளில் பல ஆங்கில அதிகாரிகளும் அவர்தம் குடும்பத்தினரும் கொடுமையாகக் கொலை செய்யப்பட்டனர். மொத்தத்தில் மீரட் நகரில் தோன்றிய திடீர்ப் புரட்சி ஆங்கிலேயர்களைச் செய்வதறியாது திகைக்க வைத்துவிட்டது. இப்படியும் நேரும் என்பதை அவர்களால் சிந்தித்துப் பார்க்க முடியாமல் போயிற்று.
புரட்சி செய்த சிப்பாய்கள் கூட்டம் கூட்டமாக தில்லி நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். செய்தி அனுப்பும் சாதனங்கள் அனைத்தும் உடைத்தெறியப்பட்டு விட்டன. கம்பிகள் அறுக்கப்பட்டுவிட்டன. சிறையிலிருந்த கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மீரட் நகர் முழுவதும் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ரத்தம் படிந்த வாட்களுடன் இந்திய சிப்பாய்கள் டெல்லியை நோக்கி ‘சலோ தில்லி’ என கோஷமிட்டபடி ஓடினார்கள்.
திட்டமிட்டது ஒன்று, நடந்தது ஒன்று.
ஏற்கனவே திட்டமிட்டபடி மே மாதம் 31-இல் நாடு முழுவதும் புரட்சியை நடத்த ஏற்பாடுகள் செய்வதற்காக நானா சாஹேப் தில்லிக்கு வந்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக மீரட்டில் முன்கூட்டியே புரட்சியை திட்டமின்றித் தொடங்கிவிட்டனர் சிப்பாய்கள். மீரட்டில் புறப்பட்டு ஓடத் தொடங்கிய வீரர்கள் இரவு முழுவதும் ஓடி, தில்லியை அடைந்தனர். தங்களை ஆங்கிலப் படை எதுவும் பின்தொடர்ந்து வரவில்லை என்பதையும் உறுதி செய்துகொண்டனர். மீரட்டுக்கும் தில்லிக்கும் இடைப்பட்ட தூரம் 32 மைல்கள். தில்லிக்குள் நுழைந்த வீரர்கள் முதலில் கண்ணில் தென்பட்ட யமுனை நதிக்கு ஜே என்று கோஷமிட்டு, வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
குதிரைகள் மீதும், நடந்தும், ஓடியும் வந்த வீரர்கள் யமுனைப் பாலத்தைக் கடந்து செங்கோட்டைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு உள்ளே ஆங்கில தளபதி கர்னல் ரிப்லி என்பவன் தலைமையில் இந்திய சிப்பாய்கள் புரட்சி வீரர்களைத் தாக்க வெளியே வந்தனர். கர்னலுக்கு மகிழ்ச்சி. ஆனால் கோட்டைக்கு வெளியே வந்த ரிப்லியின் வீரர்கள் தங்கள் சகோதரர்கள் புரட்சி செய்து தில்லி வரை வந்துவிட்ட காட்சியைப் பார்த்து அவர்களுடன் இவர்களும் சேர்ந்து கோஷமிட்டனர். கர்னலுக்கு அதிர்ச்சி. இனி முடிந்ததா இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி என்று திகைத்தான்.
மீரட்டிலிருந்து கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்த இந்திய சிப்பாய்கள் தில்லி செங்கோட்டையினுள் நுழைய முற்பட்டனர். அங்கு கோட்டைக் கதவுகள் தாழிடப்பட்டிருந்தன. தங்கள் பலம் கொண்டமட்டும் தாக்கி கதவை உடைத்து வீரர்கள் உட்புகுந்தனர். உள்ளே புகுந்த சிப்பாய்கள் ஆங்கில அதிகாரிகளின் வீடுகளை நோக்கி ஓடினார்கள். சிறிது நேரத்தில் அந்த வீடுகள் அனைத்தையும் தீப்பிழம்புகள் கவ்விக் கொண்டன. தப்பியோடிய வெள்ளையர்களை சிப்பாய்கள் வெட்டிச் சாய்த்தனர்.
தில்லியை ரணகளமாக்கிய வீரர்கள் தில்லி சக்கரவர்த்தியின் அரண்மனை வாசலுக்கு வந்து சேர்ந்தனர். காயத்தோடு அரண்மனைக்குள் நுழைந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கமிஷனர் பிரேஸர் என்பார் இந்திய சிப்பாய்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அப்போது அரண்மனையில் இருந்த வெள்ளையர் அனைவரும் கொல்லப்பட்டனர். தில்லி அரண்மனை சிப்பாய்கள் வசமாயிற்று.
இதற்கிடையே மீரட்டிலிருந்து பீரங்கிப் படையும் தில்லி வந்து சேர்ந்தது. சக்கரவர்த்தி பஹதூர்ஷா சற்று தெளிவும் நம்பிக்கையும் பெற்று வெளியே வந்தார். இந்திய சிப்பாய்கள் அவரை ‘சக்கரவர்த்திக்கு ஜே’ என்று கோஷமிட்டு, தங்கள் மன்னராக அவரை ஏற்றுக் கொண்டார்கள். தில்லி நகரம் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.
தில்லியின் ஒரு பகுதியில் இருந்த ஆயுதசாலையில் ஏராளமான வெடிமருந்து, பல லட்சம் தோட்டாக்கள், பல்லாயிரம் துப்பாக்கிகள், பீரங்கிகள் இருந்தன. அதைக் கைப்பற்றிவிட வேண்டுமென இந்திய சிப்பாய்கள் துடித்தனர். அதற்குக் காவல் இருந்த ஆங்கிலேயர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் ஆயுதக்கிடங்கின் அதிகாரியான வில்லபி என்பான் இவர்களை அலட்சியம் செய்தான்.
தேனீக்களின் கூட்டம் போல சிப்பாய்கள் சுவரேறி உள்ளே குதித்து ஆயுதசாலையைக் கைப்பற்ற அங்கிருந்த ஆங்கில படையினருடன் போரிட்டனர். ஆயுதங்கள் இந்திய சிப்பாய்கள் வசம் போய்விட்டால் தங்கள் உயிர்களுக்கெல்லாம் ஆபத்து என நினைத்து வெள்ளையர்கள் அந்த ஆயுதசாலைக்குத் தீ வைத்துவிட்டனர். அது வெடித்து சிதறியதில் ஏராளமானோர் இந்திய சிப்பாய்கள் உட்பட பலரும் உடல் சிதறி இறந்தனர்.
ஆங்கில அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான வெள்ளையர்களும் அந்த தீயில் வெந்து மடிந்தனர்.
தில்லியில் அடுத்த ஐந்து நாட்கள் வெள்ளையர்கள் வேட்டையாடப்பட்டனர். பல வெள்ளையர்கள் உயிர் பிழைத்து ஊர் திரும்ப தில்லியை விட்டு ஓட்டம் பிடித்தனர். தாங்கள் வெள்ளையர் அல்ல என்பதைக் காட்டும் பொருட்டு உடலில் கரியைப் பூசிக் கொண்டனர். இத்தனை களேபரத்திலும் இந்திய சிப்பாய்கள் தங்கள் பண்பாட்டைக் காக்கும் பொருட்டு, ஒரு வெள்ளைப் பெண்மணியைக் கூட துன்புறுத்தவோ, கொலை செய்யவோ இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
‘தில்லியை மீட்டு விட்டோம்’ என்று சிப்பாய்கள் உலகுக்கு அறிவித்தனர். எதிர்பாராத இந்தச் செய்தி பாரத நாடு முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியது. ஏனைய பகுதிகளில் இருந்த ஆங்கிலேயர்களால் இந்தச் செய்தியை நம்ப முடியவில்லை.
கல்கத்தாவில் இருந்த கேனிங் பிரபு தனது ஆங்கிலப் படைகளுக்கு தில்லியைத் தாக்கும்படி உத்தரவிட்டான். அம்பாலாவிலிருந்து தாக்குதலைத் தொடுக்க நினைத்த ஆங்கிலேய தளபதிக்கு நம்பிக்கை தளர்ந்தது. மேலும் பல இந்திய படைப்பிரிவுகள் புரட்சியில் சேர்ந்துவிட்டன என்ற செய்தி தான் அதற்குக் காரணம்.
ஆனால் வெள்ளையர்கள் நம்பிக்கை கொள்ள இந்திய துரோகிகள் சிலர் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தனர். வடக்கே மூன்று சமஸ்தானங்கள் இந்த மாபெரும் துரோகத்தை மனமாரச் செய்தனர். அம்பாலாவிலிருந்தும் மீரட்டிலிருந்தும் வந்த ஆங்கிலப் படையினருக்கு இந்திய துரோக சிந்தையுள்ள சில சமஸ்தான அதிபதிகள் உதவிகளைச் செய்து தந்தனர்.
இப்படிப் புரட்சிக்காரர்கள் ஒரு புறமும், கிழக்கிந்திய கம்பெனியார் மற்றொரு புறமும் ஒருவரையொருவர் அழித்துவிட வேண்டுமென்கிற வெறியில் வட இந்தியா முழுவதும் யுத்த மேகம் சூழ்ந்திருந்தது. அதில் யாருடைய கைகள் ஓங்கியிருந்தன, யார் தோல்வியை நோக்கிச் சென்றார்கள் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
$$$
2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 1(5)”