-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்-1; பகுதி- 6
ஜான்சியின் சிறுத்தை ராணி லக்ஷ்மி பாய்
மராத்திய பேஷ்வா பாஜிராவ் கங்கைக் கரையில் இருந்த பிரம்மவர்த்தம் எனுமிடத்தில் தங்கியிருந்த காலத்தில் நானாவை தத்து எடுத்துக் கொண்டதும், அதே அரண்மனையில் நானாவுடன் விளையாடவும், ஆயுதப் பயிற்சிகளைப் பெறவும் நட்பு பாராட்டிய சிறுமியைப் பற்றி பார்த்தோமல்லவா? அந்தச் சிறுமிதான் ஜான்சி மன்னரை மணந்து கொண்டு ஜான்சி ராணியாகத் திகழ்ந்த லக்ஷ்மி பாய்.
பாஜிராவ் இறந்த பின்னர் அவரது சுவீகாரப் புதல்வன் நானாவுக்கு ஆட்சியும் இல்லை, சொத்தில் உரிமையும் இல்லை என்றது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி. அதேநேரம் ஜான்சி மன்னர் கங்காதரராவ் பாவாசாஹேபைத் திருமணம் செய்து கொண்டு ராணியாகத் திகழ்ந்த லக்ஷ்மி பாய்க்கு ஒரு துன்பம் ஏற்பட்டது. அவரது கணவர் 1853-இல் திடீரென காலமானார். லக்ஷ்மி பாய் தன் அன்புக்குப் பாத்திரமான ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்துக் கொண்டார். இதனை அறிந்த ஆங்கிலேயர்கள் அந்த சுவீகாரம் செல்லாது, ஜானிசியைத் தங்களிடம் ஒப்புவித்துவிட வேண்டுமென்று லக்ஷ்மி பாய்க்கு ஆணையிட்டனர்.
ராணியே எந்த நடவடிக்கையும் எடுக்கும் முன்னரே ஆங்கிலேயர்கள் ராணியை அங்கிருந்து துரத்திவிட முடிவு செய்தனர். ராணி லக்ஷ்மி பாயின் தினசரி கடமைகளை ஒரு ஆங்கில ஆசிரியர் இப்படி எழுதுகிறார்.
“ராணி லக்ஷ்மி பாய் தினமும் காலை 5 மணிக்கு எழுந்திருந்து, நீராடிவிட்டு இறைவனைப் பிரார்த்திப்பார். துளசிக்கு பூஜை செய்வார். தொடர்ந்து பார்வதி தேவியை பூஜிப்பார். பூஜையின்போது சங்கீதக்காரர்களின் இசை நடைபெறும். பூஜைகள் முடிந்தபின் அரசு அதிகாரிகள், பிரதானிகள் முதலான நூற்றுக் கணக்கானோர் மரியாதை செய்ய வருவார்கள். தினமும் வருபவர்களில் யாராவது ஒருவர் வரவில்லையென்றால், அவரைப் பற்றி ஏன் வரவில்லை என்று விசாரிப்பார். ராணிக்கு நல்ல நினைவாற்றல் இருந்தது. தொடர்ந்து உணவு அருந்தச் செல்வார். பிற்பகல் மூன்று மணிக்கு தர்பார் நடக்கும். எப்போதும் அவர் இடையில் ஒரு ரத்தினங்கள் பதித்த வாள் தொங்கும். எப்போதுமே ஆண் உடையில் காணப்படுவார் ராணி. தர்பாரில் ராணி அனைவரும் பார்க்கும்படி உட்கார மாட்டார். பட்டுத் திரைக்குப் பின்னால் அவர் அமர்வார். அங்கு இரு வீரர்கள் காவலுக்கு இருப்பர். பிரதி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவர் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வழிபடுவார்.”
ஜான்சியைத் தங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டுமெனக் கேட்ட ஆங்கிலேயருக்கு ராணி பதிலளித்தார். ‘எந்தக் காரணம் கொண்டும் ஜான்சியைக் கைவிட முடியாது. தைரியம் இருந்தால் ஜான்சியைப் பறித்து கொள்ளட்டும்’ என்றார். உடனே ஒரு ஆங்கில அதிகாரி பெரும்படையுடன் ஜான்சியை முற்றுகையிட்டான்.
ஜான்சி கோட்டை முற்றுகைக்கு ஆளாகியது. முற்றுகையிட்ட ஆங்கிலப் படைக்குக் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை; தங்குவதற்கு மரநிழல்கூட இல்லை. அப்படி அந்தப் பகுதி முற்றிலும் பாலைவனமாக ஆக்கப்பட்டது. ஆனால் உடன்பிறந்தே கொல்லும் வியாதி எனும்படி குவாலியர் சிந்தியாவும், டெகிரி மன்னரும் ஆங்கிலேயர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர்.
முற்றுகை நீடித்தது. முதல் ஏழு நாட்கள் யுத்தம் கடுமையாக நடந்தது. ஜான்சிப் படைகளுக்குத் தலைமை ஏற்றிருந்த லக்ஷ்மி பாய் தன் குதிரையின் மேலேறி சுற்றிச் சுற்றி வந்து வீரர்களை ஊக்குவித்தார். எந்த நேரமும் ராணி வரலாம் என்பதால் வீரர்களும் தயார் நிலையிலேயே இருந்தனர்.
அந்தச் சமயம் கோட்டையை முற்றுகையிட்டிருந்த பிரிட்டிஷ் படைகளுக்குப் பின்புறம் ஒரு மராட்டிய வீரர் பெரும்படையுடன் வந்து சேர்ந்தார். அவர்தான் மாவீரர் தாந்தியா தோபே. தோபேயின் வரவு ராணி லக்ஷ்மிபாய்க்கு புதிய ஊக்கத்தையும் தெம்பையும் அளித்தது. குழந்தைப் பருவத்தில் ராணியுடனும் நானாவுடனும் விளையாடியவர் இந்த தாந்தியா தோபே. இப்போது மாபெரும் வீரராகத் திகழ்கிறார்.
ஆனால் அந்தோ, இந்திய துரோகிகளின் துரோகச் செயலால் தாந்தியாவின் படைகள் படுதோல்வி அடைந்தன. ராணி லக்ஷ்மி பாய் மனம் தளரவில்லை. தானே தன் குதிரையின் மீதேறி கையில் ஓங்கிய வாளுடன் போர்க்களம் புகுந்தார். போரில் துர்க்கையைப் போல ஆவேசம் கொண்டு போரிடலானார். அவருடைய வாள்வீச்சில் பலியான வெள்ளை சிப்பாய்கள் பலர்.
என்ன போராடி என்ன? எத்துணை வீரம் இருந்தென்ன? துரோகிகளின் செயல்பாட்டால் ஜான்சி வெள்ளையனிடம் வீழ்ந்தது. ராணியின் சபை கூடி நிலைமையை விவாதித்தது. ராணி சொன்னார், ‘நானும் தன்னுடன் சில வீரர்களும் போர்க்களத்தில் போராடி வீரமரணம் அடைவோம். மற்றவர்கள் தப்பி உயிர்பிழைத்துச் செல்லுங்கள். காலம் வரும்போது வெள்ளையர்களைப் போராடி விரட்ட முயற்சி செய்யுங்கள்’ என்றார். ஒருவரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘நாங்கள் அனைவருமே ராணியுடன் வருவோம், போர் புரிவோம், வெற்றி அல்லது வீரமரணம்’ என்று முழக்கமிட்டனர்.
அரண்மனை வாயிலில் கூடியிருந்த மக்களை ராணி கடைசியாகச் சந்தித்தார். இருள் சூழ்ந்தது. ராணியை இனி பார்க்க முடியுமா என கண்ணீர் சிந்தினர் மக்கள். அப்போது ராணி வீர ராணுவ உடை அணிந்து, தன் வெள்ளைக் குதிரை மீதேறி அமர்ந்து இடையில் அவருடைய புகழ்பெற்ற வாள் அசைய, முதுகில் தனது சுவீகாரக் குமாரன் தாமோதரனைத் துணியால் இருகக் கட்டிவைத்துக் கொண்டு போர்க்களம் புகத் தயார் நிலையில் இருந்தார்.
ராணியை அடையாளம் கண்டுகொள்ளாத நிலையில், அவரும் அவருடைய பாதுகாவலர்களும் கோட்டையிலிருந்து தப்பி அருகிலிருந்த காட்டு வழியாக ராணிபந்தீர் எனும் கிராமத்தை அடைந்தனர். அப்போது அங்கு வந்த வெள்ளைக்காரப் படைக்கும் ராணியின் படைக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. அப்போது ராணியின் வாளுக்கு பலியானவர்கள் பலர்.
இதனைக் கண்டு ஆங்கிலப் படை தளபதி பெங்கரே என்பவன் வந்து ராணியோடு நேருக்கு நேர் போர் தொடுத்தான். இவர் ஒரு பெண்தானே என்று அவனுக்கு அலட்சியம். சின்னஞ்சிறு சிறுமியாய் இருந்த காலம் தொட்டே வாள்வீச்சில் சிறந்து விளங்கியவள் ராணி லக்ஷ்மிபாய் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்? ராணியின் வாளுக்கு அந்த மடையனும் பலியாகி கீழே விழுந்தான். ஆங்கிலப் படை கலகலத்தது. சமயம் பார்த்து ராணி அங்கிருந்து மறைந்து போனார்.
ராணியும் பாதுகாவலர்களும் தொடர்ந்து பயணித்து ஒரு நகரத்தை அடைந்தனர். தஞ்சமென்று ஒரு ஊரில் சென்றடைந்த ராணியின் தந்தையை அந்த ஊர் ராஜா வெள்ளைக்காரனிடம் காட்டிக் கொடுக்க அவர் அங்கு கொலை செய்யப்பட்டார். துரோகிகள் பட்டாளம் எங்கெங்கும் இருக்கத் தான் செய்தன.

(பிறப்பு: 1835, நவ. 19- மறைவு: 1858, ஜூன் 17)
ராணி குவாலியர் சென்று அங்கிருந்த துரோகிகளை வீழ்த்திவிட்டு நகரின் ஒரு பகுதியில் தங்கினார். அவ்ரை எதிர்த்துப் போரிட அங்கும் வெள்ளைப் படைகள் வந்து சேர்ந்தன. ராணிக்கு உதவியாக ஆண் உடையில் இரு பெண்களும் , சில அந்தரங்கமான பாதுகாவலர்களும் புடைசூழ போர்க்களம் புகுந்தனர். அப்போது ராணியின் தோழி ஒருத்தி குண்டடிபட்டு சாய்ந்தபோது, அவளைச் சுட்டவனை வெட்டிக் கொன்றாள் ராணி. அதே நேரம் ராணியின் உடலிலும் ஒரு குண்டு பாய்ந்தது.
அப்போது ராணி பாதுகாவலர்களிடம் தான் போரில் இறந்து வீழ்ந்தால் தனது உடலை இந்த மிலேச்சர்கள் கையில் கிடைக்காமல் காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக குண்டுக் காயத்துடன் ராணி உயிர் பிழைத்தார். தன் குதிரையின் மீதேறி விரைந்து செல்கையில் ஒரு கால்வாயைக் குதிரை தாண்டும்போது கால்தவறி விழுந்தது. அப்போது வெள்ளைக்கார சிப்பாய் ஒருவன் தன் வாளால் ராணி லக்ஷ்மி பாயைத் தலையில் வெட்ட, அவர் கண் ஒன்று சிதறி, பலத்த வெட்டுக் காயமடைந்தார். அப்போது மற்றொரு ஆங்கிலேயன் அவரை மார்பில் வாளால் வெட்டினான். இப்படி மரண காயம் பெற்றும் ராணி தயங்காமல் தன்னை வெட்டிய அந்த வீரர்களைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார்.
மரணக் காயங்களுடன் மயங்கிய ராணி லக்ஷ்மி பாய் கண்விழித்த போது, தான் மரணத்தோடு போராடிக் கொண்டிருப்பதை அறிந்தார். தன் உடலை மிலேச்சர்கள் யாரும் தொட்டுவிட்டார்களோ என்று கண் விழித்துப் பார்த்தார். தன் சுவீகார மகன் மட்டுமே இருப்பதைக் கண்டு திருப்தியோடு தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் அந்த வீரப் பெண்மணி ராணி லக்ஷ்மி பாய்.
அப்போது ராணி லக்ஷ்மி பாயின் வயது இருபத்திமூன்று (ஜூன் 17, 1858). ஒரு மாபெரும் இந்திய வீராங்கனையின் வாழ்வு இப்படி இளம் வயதில் வீர சாகசங்களோடு முடிவுற்றது. அதனால் தான் இவரைப் பற்றி சுவாமி விவேகானந்தரும், மகாகவி பாரதியும், காந்தியடிகளும், ஜவஹர்லால் நேருவும்கூட புகழ்ந்து எழுதும்படி ஆயிற்று. காந்தியடிகள் சொல்கிறார், ‘சிப்பாய் புரட்சியின்போது எந்தவொரு ஆடவனும் காட்டியிராத வீரத்துடன் ஜான்சி ராணி லக்ஷ்மிபய் போராடி கீர்த்தி பெற்றார்’.
சுவாமி விவேகானந்தர் சொல்கிறார், ‘இந்திய நாட்டுக் கலகத்தில், தாமே படைகளை நடத்திச் சென்ற வீரப் பெண்மணி ஜான்சிராணி தான் நான் போற்றும் வீரப் பெண்மணியாவாள்.’
1857-இல் மூண்ட சுதந்திரத்தீ வான்முட்ட எழுந்து மீரட்டில் தெறித்து, இந்தியா முழுவதும் பரவியது. தில்லி முற்றுகை, கான்பூர் பலிகள், லக்னோ படுகொலை முதலானவை வரிசையாக நடந்து முடிந்தன.
“காரெனப் போர்களத்துப் பார்புகழ் வீரம் பூண்டு
சீரிலாப் பரங்கிக்கூட்டம் சிதறிட வெட்டி வீழ்த்தி
ஏறென விழுப்புண் ஏந்தி விண்ணிலோர் போற்றத் தீய்ந்த
வீரருக்கமுதே! எங்கள் வீர லட்சுமி பாய் போற்றி”
(கர்ஜனை தொடர்கிறது…)
$$$
2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 1(6)”