இது 1962 அல்ல, 2022!

-ஆசிரியர் குழு

அமரர் கல்கியின் நெடும்புதினத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வெளியாகியுள்ள  ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில், ராஜராஜசோழனை இந்து அடையாளங்களுடன் காட்டி விட்டதாக தமிழகத்தில் சிலர் (அவர்களின் பெயர்கள் எதற்கு? பொருட்படுத்த தகாதவர்கள் அவர்கள்!) வயிறெரிகிறார்கள். அவர்களில் சிலர் ஒருபடி மேலாகச் சென்று  ‘இந்து என்ற மதமே இருந்ததில்லை’ என்று விதண்டாவாதம் செய்கிறார்கள். அவர்கள் வாங்கிய காசுக்குக் கூவுகிறார்கள்; தொலையட்டும். 

ஈசனுக்கு தஞ்சையில் மிக பிரமாண்டமான ஆலயம் எழுப்பிய, ‘சிவபாதசேகரன்’ என்று தன்னை அறிவித்துக்கொண்ட, ‘திருமுறைகண்ட சோழன்’ என்ற பெயர் பெற்ற ராஜராஜ சோழனை இந்து அடையாளங்களுடன் காட்டாமல், சிலுவை அணிந்தோ, தொப்பி அணிந்தோ தான் காட்ட வேண்டுமா? அவர் திருநீறு அணிந்திருப்பது சைவ அடையாளம் தானே? அதை ‘இந்து என்று ஒரு மதம் இல்லை; சைவம், வைணவம் என்ற மதங்கள் மட்டுமே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் இருந்தன’ என்று சொல்பவர்கள் எதிர்க்கக் காரணம் என்ன? மதமாற்ற நரிகளுக்கு உதவும் வேட்டைநாய்களாக தாங்கள் மாறிவிட்டதைத் தானே இவர்கள் தங்கள் நச்சரவங்களால் வெளிப்படுத்துகிறார்கள்?

எனினும், விழிப்புணர்வுள்ள சமய அறிஞர்களும், ஹிந்து செயல்வீரர்களும் சமூக ஊடகங்களில் தங்கள் வாதங்களால் இந்த அறிவிலிகளுக்கு சம்மட்டி அடி கொடுத்து, பந்தாடி வருகிறார்கள்; இது 1962 அல்ல, 2022 என்பதை அந்த மண்டூகங்களின் மர மண்டையில் ஆணி அடித்தது போலப் புரிய வைக்கிறார்கள். அவற்றில் இரு பதிவுகள் இங்கே…

$$$

1. வேத நெறியும் இந்து மதமும்

– கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா

இந்து என்ற சொல் ஆதியில் இருந்ததா? பாதியில் வந்ததா? என்பது பற்றிய அனல் பறக்கும் விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு சொல் இருந்ததா, இல்லையா? என்ற விவாதத்தின் மூலம், இரு தரப்பினரும் நிறுவ விரும்புவது என்ன? 

பண்டைய காலங்களில் பாரதம் முழுவதும் ஒரே சமய பெருநெறி இருந்ததா, இல்லையா? என்பதை நோக்கித்தான் இந்த விவாதம் செல்கிறது. 

உதாரணமாக, “சைவம் என்பது தனி மதமாக இருந்தது. அது தமிழ்நாட்டுக்கு உரிய சமயம்; எனவே தென்னாடுடைய சிவனே போற்றி என்றார்கள்” என்பதாக சிலர் ஒரு வாதத்தை வைக்கிறார்கள். இதன் மூலம், வடமொழிக்கும், வேதத்திற்கும், தென்னிந்திய சைவத்திற்கும் தொடர்பில்லை என்று நிறுவ முற்படுகிறார்கள்,

சைவத்துக்கு என்று சில பிரமாண நூல்கள் உண்டு. அத்தகைய நூல்களில் முதன்மையானவை சைவத் திருமுறைகள். சைவ சமய குரவர்கள் என அழைக்கப்படுபவர்கள், தேவார மூவரும் மாணிக்கவாசகரும் ஆவார்கள். 

இவர்கள் வேதங்களையும் வடமொழியையும் ஏற்றுக் கொள்கிறார்களா என்று பார்க்க வேண்டும். பிரமாண நூல்கள் சொல்வதுதான் சைவர்களுக்கான வழிகாட்டுதல். 

திருமுறைகள், வேதங்களையும் வடமொழியையும் ஏற்றுக் கொள்பவை. எத்தனையோ சான்றுகள் சொல்லலாம் என்றாலும், உதாரணத்திற்கு ஒன்று: 

"வானவன் காண் வானவர்க்கும் மேலானான் காண் 
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் 
ஆனவன் காண்..." 

-என்கிறார் திருநாவுக்கரசர். 

அவரே சிவபெருமானை, “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்றும் பாடுகிறார்.

இத்தகைய குறிப்புகளை தேவார மூவர் – மாணிக்கவாசகர் ஆகிய சமயாச்சாரியர்களின் அருளிச் செயல்களிலும், நாயன்மார்களின் அருளிச் செயல்களிலும் மிகுதியாகக் காணலாம். அவர்தம் கூற்றுகளே சைவத்தின்  பிரமாணங்கள் ஆகும்.

அப்படியானால் சைவம் என்பது தனி நெறியாக இருந்ததா என்கிற கேள்விக்கு தெளிவான பதில், திருமுறைகளிலேயே கிடைக்கிறது. உதாரணமாக தெய்வச் சேக்கிழார்: 

"வேதநெறி தழைத்தோங்க- மிகு சைவத் துறை விளங்க" 

-என்று பாடுகிறார். 

வேதநெறி சமயப் பெரு நெறியாகவும் அதில் மிகுதியும் புகழ்பெற்ற துறையாக சைவம் இருந்ததையும் இதன்வழி உணர்ந்துகொள்ளலாம். காணாபத்யம், கௌமாரம், சாக்தம், சைவம், வைணவம், சௌரம் ஆகிய துறைகள், ஒரே நெறியின் அங்கங்கள்.

சனாதன தர்மம் எனும் பெரு நெறிக்கு ஹிந்து என்கிற பெயர், வழக்குக்கு வரும் முன்பு வேதநெறி என்கிற பெயர் இருந்தமைக்கு இதுவே சான்று. 

அதனால் தான் வைஷ்ணவ மரபிலும் நம்மாழ்வார், “வேதம் தமிழ் செய்த மாறன்” என அழைக்கப்படுகிறார். 

மகாகவி பாரதி இந்தப் பெருநெறி வாழ்வை, வேத வாழ்வு என்று குறிக்கிறார். 

 “வியன் உலகு அனைத்தையும் அமுதென நுகரும் 
    வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்” 

-என்பதன் மூலம் பாரதி, உலகமெங்கும் இருக்கிற நல்ல அம்சங்களையே அடையாளம் கண்டு, அதனைத் துய்க்கும் வாழ்வு வேத வாழ்வு என்கிறார். 

சைவத்துக்கும் வேத வாழ்வுக்கும் இருக்கும் தொடர்பு, அருளாளர்களின் மங்கல வாழ்த்துப் பாடல்கள் வழியும்  உணர முடியும். 

“வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க - மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க!
நான்மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க!
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!"

-என்பது கச்சியப்பர் திருவாக்கு. 

இந்து என்று சொல்லப்படுவதற்கு முன்பாகவே, பல்வேறு சமயத் துறைகள் கொண்ட ஒரே சமயப் பெருநெறி இருந்து வந்தது என்பதுதான் உண்மை. பெயர் பிற்காலத்தில் வந்திருக்கலாம். ஆனால் பெருநெறி, வேறு பெயரில், வழக்கில் இருந்தே வந்திருக்கிறது. வேதநெறி என்பதே அந்தப் பெயர்.

  • நன்றி: கவிஞரின் முகநூல் பக்கம்

$$$

2. பழைய ஏற்பாட்டில் இந்து தேசம்

– பா.இந்துவன்

நண்பர்: இந்து என்று ஒரு மதமே இல்ல ப்ரோ. இந்து என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வைத்ததுதான் ப்ரோ‌.

நான்: இந்து என்ற பெயரை வள்ளலார், பாம்பன் சுவாமிகள் போன்ற மகா ஞானிகள் பயன்படுத்தி இருக்காங்க ப்ரோ.

நண்பர்: இல்லை இல்லை. வில்லியம் ஜோன்ஸ் தான் இந்து என்ற பெயரை நமக்கு வைத்தார். அதற்கு முன்பு இந்து என்ற பெயரே இல்லை.

நான்: அப்படீனா 15ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தேவராய மகாராயர் தன்னை இந்து நாட்டின் சுல்தான் என்று எப்படி அழைத்துக்கொண்டார்?

“சுபமஸ்து ஸ்வஸ்திஸரீ ஸரீமன் மகா மண்டலேசுவர அரி ராய விபாடன் பாஷைக்குத் தப்புவராய கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் -  ‘இந்து ராயசுரத்ராண’ இராசாதி ராசன் இராச பரமேசுவரன் பூர்வ தட்சிண பச்சிம உத்தர

சமுத்ராதிபதி ஸரீவீர கசவேட்டை கண்டருளிய பிரதாப இம்மடி தேவராய மகாராயர் பிருதிவி ராச்சியம் பண்ணியருளா நின்ற சகாப்தம் 1373 ன் மேல் செல்லா நின்ற பிரசாபதி வருஷத்து மீனஞாயிற்று அமரபட்சத்து நவமியும் வியாழக் கிழமையும் பெற்ற திருவொணத்து நாள்”

      - இரண்டாம் தேவராய மகாராயரின் மெய்க்கீர்த்தி (1426-1452)

நண்பர்: இல்லை இல்லை இதெல்லாம் ஏத்துக்க முடியாது. 15 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயர் இல்லை.

நான் : அப்படீனா 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞரான அல்பெரூனி என்பவரால் இந்திய தத்துவ ஞான மரபுகள் பற்றி எழுதப்பட்ட நூலான ‘தாரிக் அல் ஹிந்த்‘”’ என்ற நூலில் இந்திய தத்துவ ஞான மரபிற்கு ஹிந்து என்று பெயரிட்டு எப்படி எழுதினார்? அதாகப்பட்டது இன்றிலிருந்து 1000 ஆண்டுகளுக்கு முன்பே பாரத தேசத்து மக்களை  இந்து என்ற பெயர் இருந்துள்ளது என்பதற்கு இது ஒரு இஸ்லாமிய அறிஞரின் சான்றாகும்.

நண்பர்: இல்லை இல்லை இதெல்லாம் ஏத்துக்க முடியாது. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயர் இல்லவே இல்லை.

நான்: அப்படீனா 8 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட  ‘மேரு தந்தரம்’ என்ற நூலில்  “ஹீனானி குணானி தூஷயதி இதி ஹிந்து” என்ற வாசகம் எப்படி வந்தது? அதாவது கீழ்த்தனமான குணங்களை அழிப்பவன் எவனோ அவனே ” ஹிந்து” என்று 8 ஆம் நூற்றாண்டில் எப்படி எழுதினார்கள்?

நண்பர்: இல்லை இல்லை 8 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயரே இல்லை.

நான்: அப்படீனா கி.மு. 300 களில் இன்றைய இந்தியாவின் நிலப்பரப்பை விளக்கியும்  ‘இண்டிகா’ என்ற நூலையும் எதன் அடிப்படையில் எழுதினார் மெகஸ்தனிஸ்?

“India then (4 rolver "Ludinh) being four-sided in plan, the side which looks to the Orient and that to the South, the Great Sea compasseth; that towards the Arctic is divided by the mountain chain of Hemödus from Seythia, inhabited by that tribe of Scythians who are called Sakai; and on the fourth side, turned towards the West, the Indua marks the boundary, the biggest or nearly so of all rivers after the Nile.”

நண்பர்: இல்லை இல்லை கிமு 300 க்கு முன்பு இந்து என்ற பெயரே இல்லை.

நான்: அப்படீனா Herodotus எனும் கிரேக்க வரலாற்று அறிஞா் எவ்வாறு கீழ்க்கண்டவாறு இப்பாரதத்தின் நிலப்பரப்பை இந்து என்ற பெயர் கொண்டு குறிப்பிடுகிறார்?

“Eastward of India lies a tract which is entirely sand. Indeed, of all the inhabitants of Asia, concerning whom anything certain is known, the Indians dwell nearest to the east, and the rising of the Sun.”

நண்பர்: இல்லை… இல்லை. கி.மு. 5 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயர் இல்லை.

நான்: அப்படீனா முதலாம் டேரிஸ் என்ற அரசனின் காலத்தில் கிடைக்கும் DNA கல்வெட்டில் எப்படி இந்து என்ற பெயர் வந்தது?

நண்பர்: அதெல்லாம் ஏத்துக்க முடியாது.

நான்:  ப்ரோ உங்க பெயர் என்ன?

நண்பர்: என்னோட பெயர் ஸ்டீபன்.

நான்: ஓ…! பைபிள் பழைய ஏற்பாடு படிச்சிருக்கீங்களா?

நண்பர்: ஓ…! முழுமையா பத்து முறை படிச்சிருக்கேன் ப்ரோ.

நான்: பைபிள் பழைய ஏற்பாடு எத்தனை ஆண்டுகாலம் பழமையானதுனு சொல்ல முடியுமா ப்ரோ?

நண்பர்: அது குறைந்தபட்சம் 3500 ஆண்டுகள் பழமையானது.

நான்:  உண்மையாகவா?

நண்பர்: ஆமா ப்ரோ. அது 3000 ஆண்டுகளுக்கு மேல இருக்கும். நம்புங்க ப்ரோ.

நான்: எனில் பைபிள் பழைய ஏற்பாட்டின் ‘எஸ்தரின்’ முதல் அதிகாரம் முதல் வசனத்தை சொல்லுங்களேன்.

நண்பர்: “இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது” – எஸ்தர் 1:1

நான் : உங்க கணக்குப்படி 3500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த பைபிளில் இந்து என்ற பெயர் எப்படி வந்தது ப்ரோ?

நண்பர்: ????

நான்: சொல்லுங்க ப்ரோ.

நண்பர்: பைபிள்ல கூட இந்து என்ற பெயர் இருக்கா?

நான்: இந்த வசனத்தை நீங்கதானே சொன்னீங்க ப்ரோ…

நண்பர்: நான் இன்னொரு நாள் வரேன் ப்ரோ.

நான் : டேய் நில்லுடா ஓடாதடா…!

.

  • நன்றி: தோழரின் முகநூல் பக்கம்

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s