-மகாத்மா காந்தி

நான்காம் பாகம்
31. பட்டினி விரதம்
பால் சாப்பிடுவதையும், தானிய வகைகள் உண்பதையும் விட்டுவிட்டுப் பழ ஆகார சோதனையை ஆரம்பித்த அதே சமயத்தில், புலனடக்கத்திற்கு ஒரு சாதனமாகப் பட்டினி விரதம் இருக்கவும் தொடங்கினேன். இதில் என்னுடன் ஸ்ரீ கால்லென் பாக்கும் சேர்ந்து கொண்டார். இதற்கு முன்னால் அவ்வப்போது நான் பட்டினி விரதம் இருந்து வந்ததுண்டு. ஆனால், அந்த விரதம் முற்றும் தேக ஆரோக்கியத்திற்காகத்தான். புலனடக்கத்திற்கும் பட்டினி அவசியம் என்பதை ஒரு நண்பரின் மூலம் அறிந்தேன்.
நான் வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவனாதலாலும், என் தாயாரும் கடுமையான விரதங்களை எல்லாம் அனுசரித்து வந்ததாலும், இந்தியாவில் இருந்தபோது ஏகாதசி போன்ற விரதங்கள் இருந்திருக்கிறேன். ஆனால், அப்பொழுதெல்லாம் என் தாயாரைப் போல் நடக்க வேண்டும் என்பதற்காகவும், என் பெற்றோரை மகிழ்விப்பதற்காகவுமே அந்த விரதங்கள் இருந்தேன்.
பட்டினி விரதத்தின் நன்மை அந்தக் காலங்களில் எனக்குத் தெரியாது. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஆனால், நான் மேலே குறிப்பிட்ட நண்பர், பிரம்மச்சரியத்திற்குச் சாதனமாக பட்டினி விரதத்தை அனுசரித்து நன்மை பெற்றிருக்கிறார் என்பதை அறிந்ததும், அந்த உதாரணத்தை நானும் பின்பற்றி ஏகாதசி விரதம் இருந்து வந்தேன். ஹிந்துக்கள் இத்தகைய விரத தினங்களில் பாலும் பழமும் மாத்திரம் சாப்பிடுவது உண்டு. ஆனால், இந்த விரதத்தை நான் தினமும் அனுசரித்து வந்ததால், நீரைத் தவிர எதுவும் சாப்பிடுவதில்லை என்று விரதத்தைத் தொடங்கினேன்.
இந்தச் சோதனையை நான் ஆரம்பித்தபோது, ஹிந்துக்களின் சிராவண மாதமும், முஸ்லிம்களின் ரம்ஜான் மாதமும் ஒரே சமயத்தில் வந்தன. காந்தி வம்சத்தினர், வைஷ்ணவ விரதங்களை மட்டுமின்றி சைவ விரதங்களையும் அனுசரிப்பது உண்டு. சிவ ஆலயங்களுக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கும் போவார்கள். குடும்பத்தைச் சேர்ந்த சிலர், சிராவண மாதத்தில் பிரதோஷ விரதம் (மாலை வரையில் பட்டினி இருப்பது) அனுசரிப்பதும் உண்டு. இந்த விரதத்தை நானும் அனுசரிப்பது என்று தீர்மானித்தேன்.
இந்த முக்கியமான சோதனைகளையெல்லாம் டால்ஸ்டாய் பண்ணையில் இருந்தபோதே மேற்கொண்டோம். அங்கே ஸ்ரீ கால்லென்பாக்கும் நானும் சில சத்தியாக்கிரகிகளின் குடும்பங்களுடன் இருந்தோம். சில இளைஞர்களும் குழந்தைகளும் கூட எங்களுடன் இருந்தார்கள். இக்குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வைத்திருந்தோம். அவர்களில் நான்கு, ஐந்து பேர் முஸ்லிம்கள். தங்கள் மத சம்பந்தமான நோன்புகளையெல்லாம் அனுசரித்து வருமாறு அவர்களை நான் உற்சாகப்படுத்தி வந்தேன். நாள்தோறும் அவர்கள் நமாஸ் செய்து வருமாறும் கவனித்துக் கொண்டேன். கிறிஸ்தவ, பார்ஸிச் சிறுவர்களும்கூட அங்கே இருந்தார்கள். அவர்களும் தங்கள் தங்கள் மத சம்பந்தமானவைகளை அனுசரிக்கும்படி செய்ய வேண்டியது என் கடமை என்று கருதினேன்.
ஆகையால், அந்த மாதத்தில் ரம்ஜான் பட்டினி விரதத்தை அனுசரிக்கும்படி முஸ்லிம் சிறுவர்களைத் தூண்டினேன். என் அளவிலோ, பிரதோஷ விரதமிருப்பதென்று தீர்மானித்தேன். ஆனால், ஹிந்து, கிறிஸ்தவ, பார்ஸிச் சிறுவர்களையும் என்னுடன் சேர்ந்து விரதமிருக்கும்படி கூறினேன். விரதானுஷ்டானம் போன்றவைகளில் மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ளுவது நல்லது என்று அவர்களுக்கு விளக்கிக் கூறினேன். பண்ணையில் இருந்தவர்கள் பலர் என் யோசனையை வரவேற்றார்கள். ஹிந்து, பார்ஸிச் சிறுவர்கள், விரதத்தின் எல்லாச் சிறு விவரங்களிலும் முஸ்லிம்களைப் பின்பற்றவில்லை; அது அவசியமும் அல்ல. பகலெல்லாம் பட்டினி இருந்துவிட்டுச் சூரியன் மறையும்போதே முஸ்லிம் சிறுவர்கள் சாப்பிடுவார்கள். ஆனால் மற்றவர்களோ அப்படி சூரிய அஸ்தமனத்திற்குக் காத்திருப்பதில்லை. ஆகவே, இவர்கள் தங்கள் முஸ்லிம் நண்பர்களுக்கு இனிய பண்டங்களைத் தயாரித்துப் பரிமாற முடிந்தது. அதோடு மறுநாள் காலையில் சூரியன் உதயமாவதற்கு முன்னால் முஸ்லிம் குழந்தைகள் சாப்பிடுவார்கள். அதே போல ஹிந்து, பார்ஸிக் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் பகலில் தண்ணீர் குடிப்பார்கள்.
இந்தச் சோதனைகளின் பலனாக, பட்டினி விரதத்தின் நன்மையை எல்லோரும் உணர்ந்தார்கள். இவர்களிடையே அற்புதமான தோழமையும் வளர்ந்தது.
டால்ஸ்டாய் பண்ணையில் நாங்கள் எல்லோருமே சைவ உணவு சாப்பிடுகிறவர்கள். இதில் எல்லோரும் என் உணர்ச்சியை மதித்து நடந்து கொண்டதை நான் நன்றியறிதலுடன் ஒப்புக் கொள்ளவே வேண்டும். முஸ்லிம் சிறுவர்கள் வழக்கமாகச் சாப்பிட்டு வந்த மாமிச உணவை ரம்ஜான் காலத்தில் விட்டுவிட வேண்டிவந்தது. ஆனால், அதைக் குறித்து அவர்களில் யாரும் என்னிடம் குறை சொன்னதே இல்லை. சைவச் சாப்பாட்டை அவர்கள் சுவைத்துச் சாப்பிட்டு இன்புற்றனர். பண்ணையின் எளிய வாழ்வை அனுசரித்து, ஹிந்து இளைஞர்கள் அவர்களுக்கு அடிக்கடி சைவப் பட்சணங்கள் செய்து கொடுப்பார்கள். இந்த இன்பகரமான நினைவுகளை நான் வேறு எந்த இடத்திலும் கூற முடியாதாகையால், வேண்டுமென்றே பட்டினி விரதத்தைப் பற்றிய இந்த அத்தியாயத்தின் மத்தியில் கூறி இருக்கிறேன். என்னுடைய ஒரு குணாதிசயத்தையும் நான் மறைமுகமாகக் கூறியிருக்கிறேன். அதாவது நல்லது என்று எனக்குத் தோன்றியவைகளிலெல்லாம் என் சக ஊழியர்களும் என்னைப் பின்பற்றும்படி செய்வதில் எனக்கு எப்பொழுதுமே ஆசை. அவர்களுக்குப் பட்டினி விரதம் புதியது. ஆனால், பிரதோஷ, ரம்ஜான் விரதங்களின் காரணமாகப் புலனடக்கத்திற்கு ஓர் உபாயமாக பட்டினி இருப்பதில் அவர்களுக்கு சிரத்தை ஏற்படும்படி செய்வது எனக்கு எளிதாயிற்று.
இவ்வாறு புலனடக்கச் சூழ்நிலை இயற்கையாகவே பண்ணையில் தோன்றிவிட்டது. பண்ணைவாசிகள் யாவரும் எங்களுடன் சேர்ந்து அரைப் பட்டினி, முழுப் பட்டினி விரதங்களையெல்லாம் அனுசரித்தார்கள். இது முற்றும் நன்மைக்கே என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். ஆனால், இந்த விரதங்கள் எவ்வளவு தூரம் அவர்களுடைய உள்ளங்களைத் தொட்டு, உடலின்ப இச்சையை அடக்குவதில் அவர்களுக்கு உதவியாக இருந்தன என்பதை நான் திட்டமாகக் கூறிவிட முடியாதென்றாலும், என்னளவில் உடல் சம்பந்தமாகவும், ஒழுக்க சம்பந்தமாகவும் நான் அதிக நன்மையை அடைந்தேன் என்பது நிச்சயம். பட்டினியும் மற்ற கட்டுத் திட்டங்களும் எல்லோரிடத்திலும் அதே விதமான பலனை உண்டாக்க வேண்டும் என்பதில்லை. இதையும் நான் அறிவேன்.
புலனடக்கத்தையே நோக்கமாகக் கொண்டு பட்டினி விரதமிருந்தால் தான் மிருக இச்சையை அடக்குவதற்கு அது பயன்படும். இத்தகைய விரதங்களுக்கு பின்னால் நாவின் ருசிப் புலனும் மிருக இச்சையும் அதிகரித்து விட்டதை என் நண்பர்கள் சிலர் தங்கள் அனுபவத்தில் கண்டுமிருக்கிறார்கள். அதாவது, புலனடக்கத்தில் இடையறாத ஆர்வமும் சேர்ந்து இருந்தாலன்றிப் பட்டினி விரதத்தினால் மாத்திரம் எவ்விதப் பயனுமில்லை. இதன் சம்பந்தமாகப் பகவத்கீதை இரண்டாவது அத்தியாயத்தின் பிரபலமான சுலோகம் குறிப்பிடத்தக்கதாகும்.
“இந்திரியங்களைத் தடுத்து வைப்பவனுக்கு விஷயானுபவங்கள் அற்றுப் போய்விடுகின்றன. ஆனால், ஆசை எஞ்சி நிற்கிறது. பரமாத்மாவைத் தரிசித்தபின் அவனுடைய ஆசையும் அழிகிறது.”
ஆகையால் பட்டினி விரதமிருப்பதும் அதுபோன்ற கட்டுத் திட்டங்களும் புலனடக்கத்திற்கான சாதனங்களில் ஒன்றாகும். அதுவே எல்லாமும் அல்ல. உடலோடு சேர்ந்து உள்ளமும் பட்டினி விரதத்தை அனுஷ்டிக்காவிட்டால், அது நயவஞ்சகத்திலும், அழிவிலுமே முடியும்.
$$$
32. பள்ளி ஆசிரியனாக
தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகச் சரித்திரத்தில் சொல்லாத அல்லது சுருக்கமாக மாத்திரம் குறிப்பிட்டுச் சென்றுவிட்ட விஷயங்களை மட்டுமே நான் இந்த அத்தியாயங்களில் கூறி வருகிறேன் என்பதை வாசகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படி நினைவில் வைத்திருந்தால், சமீபத்திய அத்தியாயங்களுக்கிடையே இருக்கும் தொடர்பை அவர்கள் எளிதில் காண முடியும்.
பண்ணை வளர்ந்து வரவே அதிலிருந்த சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் படிப்புக்கு ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டியது அவசியமாயிற்று. இவர்களில் ஹிந்து, முஸ்லிம், பார்ஸி, கிறிஸ்தவச் சிறுவர்களும், சில ஹிந்துப் பெண்களும் இருந்தனர். இவர்களுக்குத் தனியாக உபாத்தியாயர்களை வைப்பது சாத்தியமல்ல. அப்படிச் செய்வது அவசியம் என்று நான் எண்ணவுமில்லை. தகுதி பெற்ற இந்தியப் பள்ளி ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. ஆகையால், ஆசிரியர்களை நியமிப்பது சாத்தியமில்லை. அப்படியே ஆசிரியர்கள் கிடைத்தாலும், குறைந்த சம்பளத்தில் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து 21 மைலுக்கப்பால் போக யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். அவர்களுக்குக் கொடுக்க எங்களிடம் பணமும் ஏராளமாக இல்லை. மேலும் பண்ணைக்கு வெளியிலிருந்து உபாத்தியாயர்களை இறக்குமதி செய்யவேண்டியது அவசியம் என்றும் நான் கருதவில்லை. அப்பொழுது நடைமுறையிலிருந்த கல்வி முறையிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அனுபவத்தினாலும், சோதனைகளினாலும், உண்மையானதொரு கல்வி முறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. ஒன்றை மாத்திரம் நான் அறிவேன். அதாவது, மிகவும் சிறப்பான ஒரு நிலையில் பெற்றோரினாலேயே உண்மையான கல்வியை அளிக்க முடியும். இதற்கு வெளி உதவி மிகக் குறைவாகவே இருக்க வேண்டும். டால்ஸ்டாய் பண்ணையோ ஒரு குடும்பம். அதில் தந்தையின் ஸ்தானத்தை நான் வகித்தேன். ஆகையால், சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பைச் சாத்தியமான வரையில் நானே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட யோசனையில் குறைகளும் இல்லாமல் இல்லை. எல்லா இளைஞர்களும் சிறு வயதிலிருந்தே என்னுடன் இருந்து வந்தவர்களல்ல. அவர்கள் மாறுபட்ட நிலையிலும், சூழ்நிலையிலும் வளர்ந்தவர்கள். அவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல. இத்தகைய நிலையிலிருக்கும் சிறுவர்களுக்கு நான் குடும்பத்தின் தந்தை என்ற ஸ்தானத்தை வகித்தாலும், எவ்விதம் முழுப் பயிற்சியையும் நான் அளித்துவிட முடியும்?
ஆனால், உள்ளத்தின் பண்பு அல்லது சன்மார்க்கத்தை வளர்த்துக் கொள்ளுவதற்கே எப்பொழுதும் நான் முதல் இடம் கொடுத்து வந்தேன். அவர்களுடைய வயதிலும், அவர்கள் வளர்ந்த விதத்திலும் என்னதான் வித்தியாசம் இருந்தாலும், எல்லோருக்கும் ஒரே விதமான சன்மார்க்கப் பயிற்சியை அளித்துவிட முடியும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும் அவர்களுடைய தந்தையாக அவர்களிடையே இருந்து வருவது என்றும் தீர்மானித்தேன். அவர்கள் பெறும் கல்விக்குச் சரியான அடிப்படை அவர்கள் ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுவதே என்று கருதினேன். அந்த அடிப்படையைப் பலமாகப் போட்டுவிட்டால், மற்ற விஷயங்களை யெல்லாம் அவர்களாகவோ அல்லது நண்பர்களின் உதவியாலோ அவர்கள் கற்றுக்கொண்டு விடுவார்கள் என்பதும் என் கருத்து.
அதோடு இலக்கியப் பயிற்சி இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்ததால் ஸ்ரீ கால்லென்பாக், ஸ்ரீ பிரக்ஜி தேசாய் ஆகியவர்களின் உதவியுடன் சில வகுப்புக்களையும் ஆரம்பித்தேன். உடலை வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நான் குறைத்து எண்ணிவிடவில்லை. அன்றாடம் வழக்கமாக அவர்கள் செய்து வந்த காரியங்களினால் இந்த உடல் வளர்ச்சியை அவர்கள் பெற்று வந்தார்கள். ஏனெனில், பண்ணையில் வேலைக்காரர்களே இல்லை. சமையலிலிருந்து தோட்டிவேலை வரையில் எல்லாவற்றையும் பண்ணைவாசிகளே செய்துவந்தனர். பழ மரங்கள் பலவற்றைக் கவனித்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது. தோட்ட வேலையும் அதிகமிருந்தது. தோட்டவேலையில் ஸ்ரீ கால்லென் பாக்குக்கு அதிக ஆர்வம். அரசாங்கத்தின் மாதிரித் தோட்டம் ஒன்றில் இருந்ததனால் அவருக்கு இதில் அனுபவமும் இருந்தது. சமையல் வேலையில் ஈடுபடாத மற்ற எல்லாக் குழந்தைகளும், பெரியவர்களும், கொஞ்ச நேரம் தோட்ட வேலை செய்தாக வேண்டியது அவர்களுடைய கடமையாயிற்று. இவ்வேலையில் பெரும் பகுதியைக் குழந்தைகளே செய்துவந்தனர். குழிகளைத் தோண்டுவது, மரம் வெட்டுவது, தூக்குவது போன்றவைகளை அவர்களே செய்தார்கள். இவை அவர்களுக்கு நல்ல தேகப்பயிற்சியை அளித்தன. இவ் வேலைகளை அவர்கள் சந்தோஷத்தோடு செய்துவந்தனர். ஆகையால், அவர்களுக்கு வேறு தேகப்பயிற்சியோ, விளையாட்டுக்களோ பொதுவாகத் தேவைப்படவில்லை. இக் குழந்தைகளில் சிலர் – சிற்சில சமயங்களில் எல்லாக் குழந்தைகளுமே – வேலைக்குச் சோம்பியதும் உண்டு. சில சமயங்களில் இதைப் பார்க்காதது போல இருந்து விடுவேன். ஆனால், அநேகமாக அவர்களிடம் நான் கண்டிப்பாகவே இருப்பேன். இந்தக் கண்டிப்பை அவர்கள் விரும்புவதில்லை என்றே சொல்லுவேன். என்றாலும், என் கண்டிப்பை அவர்கள் ஒரு சமயமாவது எதிர்த்ததாக எனக்கு ஞாபகமில்லை. நான் அவர்களிடம் கண்டிப்பாக இருந்த சமயங்களில் ஒருவர் செய்ய வேண்டிய வேலை விஷயத்தில் விளையாட்டாக இருந்துவிடக் கூடாது என்று எடுத்துக்காட்டி, அவர்கள் உணரும்படி செய்வேன். ஆனால், அந்த உறுதி அவர்களிடம் கொஞ்ச நேரத்திற்குத்தான் இருக்கும். அடுத்த கணம் அவர்கள் வேலையைப் போட்டுவிட்டு விளையாடப் போய்விடுவார்கள். என்றாலும், நாங்கள் சமாளித்துக் கொண்டு வந்தோம். அவர்கள் நல்ல உடற்கட்டும் அடைந்து வந்தார்கள். பண்ணையில் நோய் என்பதே இல்லை. இதற்கு நல்ல காற்றும், நீரும், உரிய வேலையில் சாப்பிடுவதும் காரணங்களாகும் என்றும் சொல்ல வேண்டும்.
கைத்தொழில் பயிற்சியைப் பற்றியும் கூற வேண்டும். சிறுவர்களில் ஒவ்வொருவருக்கும் பயனுள்ள ஏதாவது ஒரு கைத்தொழிலைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது என் நோக்கம். ஸ்ரீ கால்லென்பாக் செருப்புத் தைக்கும் தொழிலைக் கற்றுக்கொண்டு வந்தார். இந்த வித்தையை நானும் கற்றுக்கொண்டு, அதைக் கற்றுக்கொள்ள விரும்பியவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தேன். ஸ்ரீ கால்லென்பாக்குக்கு தச்சுவேலையிலும் கொஞ்சம் அனுபவம் உண்டு. அத் தொழிலறிந்த மற்றொருவரும் பண்ணையில் இருந்தார். ஆகவே, தச்சுத் தொழில் கற்றுக்கொடுக்கவும் ஒரு சிறு வகுப்பு ஆரம்பித்தோம். சமையல் வேலையோ அநேகமாக எல்லாச் சிறுவர்களுக்குமே தெரியும்.
இவை யாவும் அவர்களுக்குப் புதியவை. ஒரு நாளைக்கு இவைகளையெல்லாம் தாங்கள் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கும் என்று அவர்கள் கனவு கண்டதுகூட இல்லை. பொதுவாகத் தென்னாப்பிரிக்காவில் இந்தியச் சிறுவர்கள் பெற்று வந்த ஒரே பயிற்சி, படிப்பதும், எழுதுவதும், கணக்குப் போடுவதும்தான்.
டால்ஸ்டாய் பண்ணையில் உபாத்தியாயர்கள் எதைத் தாம் செய்யவில்லையோ, அவற்றைச் செய்யுமாறு சிறுவர்களிடம் சொல்லக்கூடாது என்பதை ஒரு விதியாக்கி விட்டோம். ஆகையால், ஒரு வேலையைச் செய்யுமாறு குழந்தைகளிடம் கூறினால், ஓர் உபாத்தியாயரும் அவர்களுடன் இருந்து அந்த வேலையைச் செய்து கொண்டிருப்பார். எனவே, சிறுவர்கள் எதைக் கற்றுக்கொண்டாலும் அதை மகிழ்ச்சியுடன் கற்றுக் கொண்டார்கள். இலக்கியப் பயிற்சியைப் பற்றியும் ஒழுக்கத்தை வளர்ப்பது பற்றியும் பின்னால் வரும் அத்தியாயங்களில் கவனிப்போம்.
$$$
33. இலக்கியப் பயிற்சி
டால்ஸ்டாய் பண்ணையில் தேகப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ததோடு தற்செயலாகத் தொழிற் கல்வியும் போதித்து வந்ததைக் குறித்து முந்திய அத்தியாயத்தில் கவனித்தோம். எனக்குத் திருப்தியளிக்கக் கூடிய வகையில் இவை நடந்தன என்று சொல்ல முடியாவிட்டாலும் ஏறக்குறைய வெற்றிகரமாக நடந்தன என்றே சொல்லலாம். ஆனால், இலக்கியக் கல்வி அளிப்பது அதிகக் கஷ்டமான விஷயமாக இருந்தது. அதற்கு வேண்டிய வசதிகளோ, தேவையான இலக்கிய ஞானமோ என்னிடம் இல்லை. அதோடு, இத்துறையில் செலவிட வேண்டும் என நான் விரும்பிய அளவு அவகாசமும் எனக்குக் கிடைக்கவில்லை. உடல் உழைப்பில் நான் ஈடுபட்டு வந்ததால், மாலையில் முற்றும் களைத்துப் போய் விடுவேன். இவ்விதம் எனக்கு ஓய்வு மிகவும் அவசியம் என்றிருக்கும் நேரத்தில்தான் வகுப்புகளை நான் நடத்த வேண்டியிருந்தது. ஆகையால், வகுப்புகளை நடத்துவதற்கு எனக்கு மன உற்சாகம் இராது. தூங்கி விடாமல் விழித்துக் கொண்டிருப்பதற்கே அதிகச் சிரமப்பட வேண்டியதாயிற்று. காலை நேரமெல்லாம் பண்ணை வேலைக்கும், வீட்டு வேலைகளுக்கும் சரியாகப் போய்விடும். எனவே, மத்தியானச் சாப்பாட்டிற்குப் பிறகே பள்ளிக்கூடத்திற்குரிய நேரமாக வைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. இதைத் தவிரப் பள்ளிக்கூடத்திற்குத் தகுதியான நேரம் கிடைக்கவில்லை.
இலக்கியப் பயிற்சிக்கு அதிகப் பட்சம் மூன்று பாட நேரங்களை ஒதுக்கினோம். ஹிந்தி, தமிழ், குஜராத்தி, உருது மொழிகள் போதிக்கப்பட்டன. சிறுவர்களின் மொழியிலேயே அவர்களுக்குப் பாடங்களைப் போதித்தோம். ஆங்கிலமும் கற்பித்து வந்தோம். குஜராத்தி ஹிந்துக் குழந்தைகளுக்குக் கொஞ்சமாவது சமஸ்கிருதமும் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமாயிற்று. எல்லாக் குழந்தைகளுக்குமே சரித்திரம், பூகோளம், கணக்கு இவைகளில் ஆரம்பப் பாடங்களையாவது போதிக்க வேண்டியிருந்தது.
தமிழும் உருதும் சொல்லிக் கொடுப்பதை நான் ஏற்றுக் கொண்டேன். எனக்குத் தெரிந்த சொற்பமான தமிழ், என் கப்பல் பிரயாண காலத்திலும், சிறையிலும் கற்றுக் கொண்டதாகும். போப் என்பவர் எழுதிய சிறந்த தமிழ்ப் பாடப் புத்தகத்தைத் தவிர வேறொன்றையும் நான் படித்ததில்லை. ஒரு கப்பல் பிரயாணத்தில் நான் கற்றுக்கொண்டதே, உருது எழுத்துக்களைக் குறித்து எனக்கு இருந்த ஞானம். முஸ்லிம் நண்பர்களுடன் பழகியதால், நான் தெரிந்துகொண்ட சாதாரணமான பர்ஸிய, அரபுச் சொற்களே உருதுவில் எனக்குத் தெரிந்ததெல்லாம் ஆகும். உயர்தரப் பள்ளியில் நான் படித்ததற்கு மேல் எனக்குச் சமஸ்கிருதமும் தெரியாது. பள்ளிக்கூடத்தில் படித்துக் கற்றுக் கொண்டதற்கு அதிகமானதுமல்ல, என் குஜராத்தி மொழி ஞானம்.
இத்தகைய மூலதனத்தைக் கொண்டே நான் சமாளித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இலக்கியத் தகுதியில் என் சகாக்கள் என்னைவிட அதிக வறுமையில் இருந்தனர். ஆனால், என் நாட்டு மொழிகளில் எனக்கு இருந்த ஆசை, உபாத்தியாயராக இருக்க முடியும் என்பதில் எனக்கு இருந்த நம்பிக்கை, என் மாணவர்களின் அறியாமை, அதைவிட அவர்களுடைய தாராள மனப்பான்மை ஆகியவைகளெல்லாம் சேர்ந்து என் வேலையை எளிதாக்கின.
தமிழ்ச் சிறுவர்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள். ஆகையால், அவர்களுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் எழுத்துக்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் தெரியாது. ஆகவே, அவர்களுக்கு நான் தமிழ் எழுத்துக்களையும் ஆரம்ப இலக்கண விதிகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இது மிகவும் எளிதானதே. தமிழில் பேசுவதில் என்னை எப்பொழுதும் தாங்கள் தோற்கடித்துவிட முடியும் என்பதை என் மாணவர்கள் அறிவார்கள். ஆங்கிலம் தெரியாத தமிழர்கள் என்னைப் பார்க்க வந்தபோது அம்மாணவர்கள் என் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர். எனக்கிருந்த அறியாமையை என் மாணவர்களுக்குத் தெரியாமல் மறைக்க நான் என்றுமே முயன்றதில்லையாகையால், நான் சந்தோஷமாகவே சமாளித்து வந்தேன். உண்மையாகவே எல்லா விஷயங்களிலும் நான் எவ்விதம் இருக்கிறேன் என்பதை அவர்களுக்குக் காட்டி வந்தேன். ஆகையினால், அம்மொழியில் எனக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தபோதிலும் அவர்களுடைய அன்பையும் மரியாதையையும் மாத்திரம் நான் என்றுமே இழந்ததில்லை. முஸ்லிம் சிறுவர்களுக்கு உருது சொல்லிக் கொடுப்பது இதைவிட எளிதாக இருந்தது. அம்மொழியின் எழுத்துக்கள் அவர்களுக்குத் தெரியும். படிக்கும்படியும், கையெழுத்தை விருத்தி செய்துகொள்ளுமாறும் அவர்களை உற்சாகப்படுத்துவதே நான் செய்ய வேண்டியிருந்ததெல்லாம்.
இச்சிறுவர்களில் பெரும்பாலானவர்கள், எழுத்து வாசனையையே இதற்கு முன்னால் அறியாதவர்கள்; பள்ளிக்கூடங்களுக்குச் சென்றும் அறியாதவர்கள். ஆனால், அவர்களுக்கு இருந்த சோம்பலைப் போக்கி, அவர்கள் படிக்கும்படி மேற்பார்வை பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்க வேண்டியது அதிகமில்லை என்பதை அனுபவத்தில் கண்டேன். இவ்வளவோடு நான் திருப்தியடைந்து விட்டதால், பல வயதையுடையவர்களையும், வெவ்வேறு பாடங்களைப் படிப்பவர்களையும் ஒரே வகுப்பில் வைத்துச் சமாளிப்பது சாத்தியமாயிற்று.
பாடப் புத்தகங்களின் அவசியத்தைக் குறித்துப் பிரமாதமாகக் கூறப்படுகிறது. ஆனால், அவை அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை. கிடைத்த பாடப் புத்தகங்களைக்கூட நான் அவ்வளவாகப் பயன்படுத்திக் கொண்டதாக எனக்கு நினைவு இல்லை. ஏராளமான புத்தகங்களைப் பிள்ளைகளின் மேல் சுமத்துவது அவசியம் என்பதையும் நான் காணவில்லை. மாணவருக்கு உண்மையான பாடப் புத்தகம் உபாத்தியாயரே என்பதை நான் எப்பொழுதும் உணர்ந்து வந்தேன். என் உபாத்தியாயர்கள் புத்தகங்களிலிருந்து எனக்குச் சொல்லிக் கொடுத்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை. ஆனால், புத்தகங்களைக் கொண்டல்லாமல் தனியாக அவர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்ததெல்லாம் இப்பொழுதும் கூடத் தெளிவாக என் நினைவில் இருக்கின்றன.
எப்பொழுதுமே குழந்தைகள் கண்ணால் பார்த்துத் தெரிந்து கொள்ளுவதை விட அதிகமாகவும், கஷ்டமின்றியும் காதால் கேட்டுத் தெரிந்து கொள்ளுகின்றனர். என் பையன்களுடன் நான் எந்தப் புத்தகத்தையும் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரையில் படித்து முடித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், பல புத்தகங்களிலும் நான் படித்துத் தெரிந்து கொண்டவைகளை எல்லாம் என்னுடைய சொந்த நடையில் அவர்களுக்குச் சொல்லி வந்தேன். அவை இன்னும் அவர்கள் ஞாபகத்தில் இருந்து வருகின்றன என்று நான் தைரியமாகச் சொல்லுவேன். புத்தகங்களிலிருந்து படிப்பவைகளை நினைவில் வைத்துக் கொள்ளுவது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. ஆனால், நான் வாய்மொழியாகச் சொன்னவைகளை யெல்லாம் வெகு எளிதாக அவர்கள் திரும்பச் சொல்லிவிட முடிந்தது. புத்தகத்தைப் படிப்பது அவர்களுக்குக் கடினமாக இருந்தது. ஆனால், சொல்லுகிற விஷயத்தை அவர்களுக்குச் சுவையாக இருக்கும்படி மாத்திரம் நான் சொல்லி விடுவேனாயின், அவைகளைக் கேட்பதே அவர்களுக்கு இன்பமாக இருந்தது. நான் பேசியதைக் கேட்டுவிட்டு, அதன்பேரில் அவர்கள் கேட்ட கேள்விகளிலிருந்து, அவர்கள் நான் கூறியதை எவ்வளவு தூரம் புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை நான் அளந்தறிய முடிந்தது.
$$$
34. ஆன்மப் பயிற்சி
சிறுவர்களின் உடல், அறிவுப் பயிற்சியைவிட அவர்களுடைய ஆன்மிகப் பயிற்சியே இன்னும் அதிகக் கஷ்டமானதாக இருந்தது. ஆன்மப் பயிற்சிக்கு நான் சமய நூல்களை அவ்வளவாக நம்பியிருக்கவில்லை. என்றாலும், ஒவ்வொரு மாணவனும் தன் சமயத்தைக் குறித்த மூலாதாரமான விஷயங்களை அறிந்திருப்பதோடு அச்சமய சம்பந்தமான நூல்களைப் பற்றியும் பொதுவாகத் தெரிந்திருப்பது அவசியம் என்று கருதினேன். ஆகவே, என்னால் இயன்றவரையில், அத்தகைய அறிவு அவர்களுக்கு இருக்கும்படி செய்து வந்தேன். ஆனால், அது அறிவுப் பயிற்சியின் ஒரு பகுதியே என்பது என் கருத்து. டால்ஸ்டாய் பண்ணையில் சிறுவர்களுக்குக் கல்வி போதிக்கும் பணியை நான் மேற்கொள்ளுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, ஆன்மப் பயிற்சி அதனளவில் தனியானது என்பதை அறிந்திருந்தேன். ஆன்மாவை வளர்ப்பது என்பது ஒழுக்கத்தை வளர்த்து, கடவுளைப் பற்றிய ஞானத்தை அடைவதற்கு ஒருவரைப் பாடுபடும்படி செய்வதோடு தன்னைத் தானே அறியச் செய்வதுமாகும். இளைஞருக்கு அளிக்க வேண்டிய பயிற்சியில் இது முக்கியமானதோர் பகுதி என்று கருதினேன். ஆன்ம வளர்ச்சியோடு தொடர்பில்லாத எல்லாப் பயிற்சியும் பயனற்றது என்றும், அது தீமையாகவும் ஆகக் கூடும் என்றும் எண்ணினேன்.
வாழ்க்கையில் நான்காவது நிலையான சன்னியாச ஆசிரமத்தை அடைந்த பிறகே ஆன்ம ஞானத்தை அடைய முடியும் என்ற மூட நம்பிக்கை இருந்து வருகிறது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால், மதிப்பதற்கரியதான இந்த அனுபவத்திற்கு வேண்டிய முயற்சியை வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தை அடையும் வரையில் தள்ளி வைத்துக்கொண்டு போனால் பிறகு அடைவது கிழப் பருவத்தையேயன்றி ஆன்ம ஞானத்தை அன்று. பரிதாபகரமான இரண்டாவது குழந்தைப் பருவத்திற்குச் சமமான அந்த முதுமைப் பருவம், பூமிக்குப் பாரமாக வாழ்வதேயாகும். நான் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்தபோதே, 1911-12-ஆம் ஆண்டிலேயே இக்கருத்தைக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. ஆனால், என்னுடைய இக்கருத்துக்களை இதே முறையில் நான் அப்பொழுது எடுத்துச் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும்.
அப்படியானால், ஆன்மப் பயிற்சியை அளிப்பது எப்படி? குழந்தைகள், தோத்திரப் பாடல்களை மனப்பாடம் செய்து பாடும்படி செய்தேன் நல்லொழுக்கத்தைப் போதிக்கும் நூல்களிலிருந்து அவர்களுக்குப் படித்துச் சொன்னேன். ஆனால் இவையெல்லாம் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. குழந்தைகளுடன் நான் நெருங்கிப் பழக ஆரம்பிக்கவே, நூல்களின் மூலம் அவர்களுக்கு ஆன்மப் பயிற்சியை அளித்துவிட முடியாது என்பதைக் கண்டேன். எவ்விதம் தேகாப்பியாசங்களின் மூலமே உடற்பயிற்சியும், அறிவு அப்பியாசங்களினாலேயே அறிவுப் பயிற்சியும் அளிக்க முடியுமோ அவ்வாறே ஆன்ம சாதனங்களினாலேயே ஆன்மப் பயிற்சியை அளிக்க முடியும். ஆன்ம சாதனப் பயிற்சியோ, முழுக்க முழுக்க உபாத்தியாயரின் வாழ்க்கையையும் ஒழுக்கத்தையும் பொறுத்தது. ஓர் உபாத்தியார் குழந்தைகளின் நடுவில் இருக்கும் போதும் சரி, தனியாக இருக்கும் போதும் சரி, தம்முடைய குணத்திலும் செயலிலும் எப்பொழுதும் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஓர் உபாத்தியாயர், மாணவர்களுக்குப் பல மைல்கள் தொலைவில் இருக்கும்போதும் தமது வாழ்க்கை முறையைக் கொண்டு அம்மாணவர்களின் ஆன்மப் பயிற்சிக்கு உதவவோ, தீமை செய்யவோ முடியும். நான் பொய்யனாக இருந்து கொண்டு, உண்மை பேசும்படி மாணவர்களுக்குப் போதிப்பது என்பது வீண் வேலை. தாம் கோழையாக இருக்கும் ஓர் உபாத்தியாயர், தம்மிடம் படிக்கும் மாணவர்களை வீரர்களாக்கிவிடவே முடியாது. புலனடக்கம் என்பதே தெரியாத ஓர் ஆசிரியர், புலனடக்கத்தை மாணவர்களுக்குப் போதித்து விடவும் முடியாது. ஆகையால், என்னுடன் இருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் நானே எப்பொழுதும் உதாரண பாடமாக இருக்கவேண்டும் என்பதைக் கண்டேன். இவ்விதம் அவர்கள் என் உபாத்தியாயர்களாயினர். அவர்களுக்காகவேனும் நான் நல்லவனாக இருந்து நேர்மையுடன் வாழ வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். டால்ஸ்டாய் பண்ணையில் இருந்தபோது எனக்கு நானே அதிகமாக விதித்துக் கொண்ட கட்டுத்திட்டங்களும் புலனடக்கங்களும், பெரும்பாலும் என் பாதுகாப்பிலிருந்த குழந்தைகளுக்காகவே என்றும் சொல்லலாம்.
அங்கே இருந்த பையன்களில் ஒருவன் முரடன்; அடங்காப்பிடாரி. அவன் பொய் சொல்லுவான்; யாருடனும் சண்டை போடுவான். ஒரு நாள் அவன் துஷ்டத்தனம் எல்லை மீறிப் போய்விட்டது. எனக்கு ஒரே கவலையாகிவிட்டது. சிறுவர்களை நான் தண்டித்ததே இல்லை. ஆனால், அச்சமயமோ எனக்கு அதிகக் கோபம் வந்துவிட்டது. அவனுக்குப் புத்திமதி கூறித் திருத்தப் பார்த்தேன். அவனோ, பிடிவாதமாக இருந்ததோடு என்னையும் எதிர்த்து மிதமிஞ்சிப் போகப் பார்த்தான். கடைசியாகப் பக்கத்திலிருந்த ரூல் தடியை எடுத்து அவன் கையில் ஓர் அடி கொடுத்தேன். அவனை அடித்தபோதே என் உடம்பெல்லாம் நடுங்கியது. இதை அவனும் பார்த்திருக்கவே வேண்டும். அவர்கள் எல்லோருக்குமே இது புதிய அனுபவம். அப்பையன் கதறி அழுதான். தன்னை மன்னிக்குமாறும் வேண்டினான். அவன் அழுதது, பட்ட அடி அவனுக்கு வேதனையாக இருந்ததனால் அல்ல. அவன் பதினேழு வயதுள்ள திடகாத்திரமானவன். விரும்பியிருந்தால், என்னை அவன் திருப்பி அடித்திருக்கவும் கூடும். ஆனால், அடிக்க வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டதைக் குறித்து நான் அடைந்த மனவேதனையை அவன் அறிந்துகொண்டான். இச் சம்பவத்திற்குப் பிறகு அவன் எனக்குப் பணியாமல் இருந்ததே கிடையாது. என்றாலும், பலாத்காரத்தை உபயோகித்ததற்காக நான் இன்றும் வருத்தப்படுகிறேன். அன்று அவனுக்கு முன்னால் என்னுள் இருக்கும் ஆன்ம உணர்ச்சிக்குப் பதிலாக மிருக உணர்ச்சியையே காட்டி விட்டேன் என்று அஞ்சுகிறேன்.
அடிப்பது போன்ற தண்டனையே கூடாது என்று நான் எப்பொழுதும் எதிர்த்து வந்திருக்கிறேன். என் குமாரர்களில் ஒருவனை ஒரே தடவை மாத்திரம் நான் அடித்துவிட்டதாக எனக்கு ஞாபகம். ஆகையால், அன்று நான் ரூல் தடியை உபயோகித்தது சரியா, தவறா என்பதில் நான் இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியாதவனாகவே இருக்கிறேன். கோபத்தினாலும், தண்டிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினாலும் தூண்டப் பெற்று நான் அவ்விதம் செய்ததால் ஒருவேளை அது தவறானதாக இருக்கலாம். என் மன வேதனையை வெளிப்படுத்துவதாக மாத்திரமே அது இருக்குமாயின், அது நியாயமானதே என்று நான் கருதியிருப்பேன். ஆனால், இவ்விஷயத்தில் நோக்கம் கலப்பானதாகவே இருந்தது.
இச்சம்பவம், என்னை ஆழ்ந்து சிந்திக்கும்படி செய்தது, மாணவர்களைத் திருத்துவதற்குச் சிறந்த முறையையும் அது எனக்குப் போதித்தது. ஆனால், அம்முறை நான் கூறிய அந்தச் சந்தர்ப்பத்தில் எவ்வளவு தூரம் பயன்பட்டிருக்கும் என்று நான் கூற முடியாது. இளைஞன் சீக்கிரத்திலேயே அச் சம்பவத்தை மறந்துவிட்டான். எப்பொழுதேனும் அவனிடம் அதிக அபிவிருத்தி காணப்பட்டதாகவும் எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இச் சம்பவம் மாணவர்கள் விஷயத்தில் உபாத்தியாயரின் கடமை என்ன என்பதை நான் நன்றாக அறிந்துகொள்ளும்படி செய்தது.
சிறுவர்கள் தவறாக நடந்துகொண்டுவிட்ட சம்பவங்கள் இதற்குப் பிறகும் நடந்தது உண்டு. ஆனால், அடி கொடுக்கும் தண்டனையில் அதன் பிறகு நான் இறங்கியதே இல்லை. இவ்விதம் என்னிடம் இருந்த சிறுவர் சிறுமியருக்கு ஆன்மிகப் பயிற்சி அளிக்க நான் செய்த முயற்சியில் ஆன்மாவின் சக்தியை மேலும் மேலும் நன்றாக நான் அறியலானேன்.
$$$
35. தானியத்தில் பதர்
அதற்கு முன்னால் எனக்கு என்றுமே தோன்றாத ஒரு பிரச்னையை டால்ஸ்டாய் பண்ணையில் ஸ்ரீ கால்லென்பாக் என் கவனத்திற்குக் கொண்டு வந்தார். பண்ணையிலிருந்த பையன்களில் சிலர் கெட்டவர்கள், கட்டுக்கடங்காதவர்கள் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். இவர்களில் ஒன்றுக்குமே உதவாதவர்களும் இருந்தனர். இவர்களுடன் என் குமாரர்கள் மூவரும் சேர்ந்து பழகி வந்தார்கள். என் குமாரர்களின் தரத்திலிருந்த மற்றச் சிறுவர்களும் அது போலவே பழகி வந்தார்கள். இது ஸ்ரீ கால்லென்பாக்குக்குக் கவலையாகிவிட்டது. ஆனால், என் குமாரர்களை அடங்காப் பிடாரிகளான அச்சிறுவர்களுடன் சேர்த்து வைப்பது சரியல்ல என்பதிலேயே அவருடைய கவனமெல்லாம் ஈடுபட்டிருந்தது.
ஒரு நாள் அவர் மனம்விட்டுச் சொல்லிவிட்டார். “உங்கள் குமாரர்களைக் கெட்டவர்களுடன் பழகவிடும் உங்கள் முறை எனக்குப் பிடிக்கவே இல்லை. இதனால் ஏற்படக்கூடிய பலன் ஒன்றே ஒன்றுதான். இந்தக் கெட்ட சகவாசத்தினால் அவர்களும் கெட்டுப் போவார்கள்” என்றார்.
இப் பிரச்னை அச்சமயம் எனக்குக் கலக்கத்தை உண்டாக்கியதா என்பது எனக்கு நினைவு இல்லை. ஆனால், அவருக்கு நான் பதில் சொன்னேன் என்பது எனக்கு ஞாபகமிருக்கிறது: என் பிள்ளைகளுக்கும், துஷ்டர்களாக இருக்கும் பிள்ளைகளுக்கும் நான் எவ்வாறு வேற்றுமை பாராட்ட முடியும்? இரு தரப்பார் விஷயத்திலும் நான் சமமான பொறுப்பை வகிப்பவன். நான் அழைத்ததன் பேரிலேயே இக்குழந்தைகள் இங்கே வந்திருக்கிறார்கள். கொஞ்சம் பணம் கொடுத்து அவர்களை நான் போகச் சொல்லிவிட்டால் அவர்கள் திரும்ப ஜோகன்னஸ்பர்க்கிற்கு ஓடிப்போய்த் தங்கள் பழைய வழிகளிலேயே நடக்கத் தலைப்பட்டு விடுவார்கள். ஓர் உண்மையை உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்கள் இங்கே வந்திருப்பதனால் எனக்கு ஏதோ நன்மையைச் செய்திருப்பதாக அவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் நினைத்திருக்கக் கூடும். இங்கே அவர்கள் பலவிதமான அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது என்பதை நீங்களும் நானும் நன்றாக அறிவோம். ஆனால், என் கடமை தெளிவானது. அவர்களை நான் இங்கே வைத்திருக்க வேண்டும். ஆகையால், என் குமாரர்களும் அவர்களுடன் சேர்ந்து அவசியம் வாழ்ந்தே ஆகவேண்டும். மற்றச் சிறுவர்களைவிடத் தாங்கள் உயர்வானவர்கள் என இன்றிலிருந்து உணரும்படி என் புத்திரர்களுக்கு நான் போதிக்க வேண்டும் என்று நிச்சயமாக நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அந்த உயர்வு எண்ணத்தை அவர்கள் புத்தியில் புகுத்துவது அவர்களைத் தவறான வழியில் செலுத்துவதேயாகும். மற்ற சிறுவர்களுடன் அவர்கள் பழகுவது அவர்களுக்கு நல்ல ஒழுங்கு முறையை அளிப்பதாக இருக்கும். நல்லது இன்னது, கெட்டது இன்னது என்பதை அவர்கள் தாங்களாகவே தெரிந்து கொள்வார்கள். என் புதல்வர்களிடம் உண்மையாகவே ஏதாவது நல்லது இருக்குமாயின் அவர்களுடன் பழகுகிறவர்களிடமும் அது பிரதிபலிக்கும் என்று நாம் ஏன் நம்பக் கூடாது? அது எப்படியானாலும் சரி, அவர்களை நான் இங்கேதான் வைத்திருக்க வேண்டும். அதில் சிறிது ஆபத்து இருந்தபோதிலும், அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டியதே” என்றேன்.
ஸ்ரீ கால்லென்பாக் தலையை அசைத்துக்கொண்டார். இதன் பலன் தீமையானதாக இருந்தது என்று நான் நினைக்கவில்லை. இந்தச் சோதனையினால் என் குமாரர்கள் எந்தக் கெடுதலையும் அடைந்துவிட்டதாகவும் நான் கருதவில்லை. ஆனால், இதற்கு மாறாக அவர்கள் சில நன்மைகளையும் அடைந்தார்கள் என்பதை நான் காண முடிகிறது. தாங்கள் உயர்வானவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் சிறிதளவு இருந்திருந்தாலும் அது அழிந்துவிட்டது. எல்லாவிதமான குழந்தைகளுடனும் தாராளமாகக் கலந்துகொள்ள அவர்கள் கற்றுக்கொண்டார்கள்; அவர்கள் சோதிக்கப்பட்டுக் கட்டுப்பாடுகளையும் பெற்றனர்.
கெட்ட குழந்தைகளுடன் சேர்த்து நல்ல குழந்தைகளுக்குப் போதித்தால், அவர்களுடன் சேர்ந்திருக்கும்படி செய்தால், இந்தப் பரீட்சை, பெற்றோர் அல்லது போஷகரின் ஜாக்கிரதையான கண்காணிப்பில் மாத்திரம் நடப்பதாக இருந்தால், நல்ல குழந்தைகள் எதையும் இழந்துவிடுவதில்லை. இதுவும் இதுபோன்ற மற்ற சோதனைகளும் இதையே எனக்குக் காட்டியிருக்கின்றன.
வெளிக்காற்றே படக் கூடாது என்று குழந்தைகளைப் பத்திரமாக மூடிவைத்து வளர்த்துவிடுவதால் மாத்திரம், அவர்களை ஆசாபாசங்களோ, தீமைகளோ பற்றாமல் இருந்து விடுவதில்லை. ஆனால், பலவிதமான முறைகளில் வளர்க்கப்பட்ட சிறுவர், சிறுமிகளைச் சேர்த்துவைத்து அவர்களுக்குப் போதிக்கும்போது பெற்றோரும் உபாத்தியாயர்களும் கடுமையான சோதனைக்கு ஆளாகிறார்கள் என்பது மாத்திரம் உண்மை. அவர்கள் எப்பொழுதுமே உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது.
$$$