-தஞ்சை வெ.கோபாலன்

(பிறப்பு: 1814 – மறைவு: – 1859, ஏப். 18)
பாகம்- 1; பகுதி- 7
மராட்டிய சிங்கம் தாந்தியா தோபே
நம்முடைய பாரத தேசத்தின் இதிகாசங்களில் எத்தனையோ வீரர்களைப் பற்றிப் படிக்கிறோம். அர்ஜுனன், பீமன், அபிமன்யு, அனுமன் என்றெல்லாம் படிக்கும்போது இவர்களைப் போன்ற மாவீரர்கள் இப்போதும் இந்த மண்ணில் தோன்றுகின்றார்களா என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆம்! ஒவ்வொருவர் மனதிலும் இந்தப் புராணகால வீரர்களைப் போல இன்றும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டு.
ஆம்! நம் காலத்திலும் அப்படிப்பட்ட வீரனொருவன் இருந்தான். அவன் தான் 1857-58-இல் நடந்த முதல் சுதந்திரப் போரில் சாகசங்களை நிகழ்த்திக் காட்டிய மாவீரன் தாந்தியா தோபே. இவன் ஒரு க்ஷத்திரியன் அல்ல. பிரம்மவர்த்தம் அரண்மனையில் கணக்கராக இருந்த ஒரு பிராமணனின் பிள்ளை. மகாபாரதத்தில் குரு துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமனைப் போல இவனும் பிறப்பால் பிராமணன், வீரத்தால் க்ஷத்திரியன்.
வீரம் பொதிந்து கிடந்த இந்த தாந்தியா தோபேயின் செயல்பாடுகள் வெளி உலகத்துக்குத் தெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது 1858-இல் பிரிட்டிஷ் கம்பெனியாரை எதிர்த்து நடந்த முதல் சுதந்திரப் போர். பிரம்மவர்த்தம் அரண்மனையில் தான் கடைசி பேஷ்வா பாஜிராவ் வாழ்ந்து வந்தார். தனக்கு மகன் இல்லை என்பதால் நாராயணபட் என்பவரின் மகனான நானாவை தத்து எடுத்துக்கொண்டார். அரண்மனையில் நானா இளவரசன் என்றால், இந்த தாந்தியா தோபே இளவரசனின் தோழன்.
பிரம்மவர்த்தம் அரண்மனையில் நானா, தாந்தியா தோபே, லக்ஷ்மி பாய் ஆகியோர் இளமையில் வீர விளையாட்டுக்களைத் தான் விளையாடி வந்தனர். ஆயுத சாலையில் இருந்த ஆயுதங்களை எடுத்து இவர்கள் பயிற்சி பெற்றது, பின்னாளில் ஆங்கில கம்பெனி படைகளை எதிர்த்துப் போரிட பெருமளவில் உதவி செய்தது.
தாந்தியா தோபே அரண்மனையில் கணக்கெழுதும் குமாஸ்தாவாகத் தொடங்கினாலும், யுத்தக் கலையைப் பயின்று மாவீரனாகவும், சிக்கலான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு காணக்கூடிய அறிவாற்றல் பெற்றவனாகவும், ராஜதந்திரியாகவும் அவனால் திகழ முடிந்தது. நல்லோர் சேர்க்கை, சூழ்நிலை ஆகியவை ஒரு மனிதனுடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகின்றன என்பதை தாந்தியாவின் வாழ்விலிருந்து புரிந்து கொள்ளலாம்.
பாஜிராவ் தன் பரிவாரங்களுடன் ஆலோசனை நடத்தும் சமயம் அவர்கள் விவாதிக்கும் விஷயத்துக்கு நல்லதொரு தீர்வை தாந்தியா கொடுத்து சில சமயங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். தர்க்க சாஸ்திரம் அந்த நாளில் நம் நாட்டில் கற்பிக்கப்பட்டு வந்தது. அந்த தர்க்க சாஸ்திரத்தில் தாந்தியாவுக்கு இயற்கையிலேயே நல்ல பயிற்சி இருந்தது.
டல்ஹவுசியின் கபடமான செயல்களால் இந்திய சுதேச மன்னர்களின் அரசுகள் பிடுங்கப்பட்டு, அவற்றை ஆங்கிலேய கம்பெனியார் ஏப்பமிட்ட நேரத்தில் அவர்களை எதிர்த்துப் போரிட யார் வருவார் என்ற நிலையில், தாந்தியா தோபே இந்தியாவின் பலபகுதிகளுக்கும் பயணம் செய்து, பல மன்னர்களைச் சந்தித்து வெள்ளையரை எதிர்த்துப் போரிட ஆதரவு கேட்டார்.
அப்படி அவர் சென்ற இடங்களில் எல்லாம் இவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களைக் காட்டிலும், துரோகிகளையே அவர் அதிகம் சந்தித்தார். தேசத்தைக் காக்கத் தங்கள் படைகளை அனுப்பும்படிக் கேட்டால், இந்திய சுதேச சமஸ்தானாதிபதிகள் புரட்சியை நசுக்க ஆங்கிலேயனுக்குத் தங்கள் படைகளை அனுப்பிவைத்த கொடுமைகள் நடந்தன.
தாந்தியா தோபேயைப் பற்றி ஒரு ஆங்கில வரலாற்றாசிரியர் சொல்கிறார்: “புரட்சிப் படைக்குத் தலைமை தாங்குபவர் சாமான்யர் அல்ல. ஐரோப்பாவில் யுத்தக் களத்தில் தங்கள் திறமையைக் காட்டி போர் புரிந்த ஆங்கில தளபதிகளையெல்லாம் தாந்தியா எந்தவித பயமோ, தயக்கமோ இன்றி எதிர்த்து மோதியிருக்கிறார். திறமையான ஒரு தளபதிக்கு இருக்க வேண்டிய மதிநுட்பமும், தீரமும், செயல் திறனும் பெற்றிருந்தார் தாந்தியா தோபே. எதிரியின் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஆற்றல் அவரிடம் இருந்தது.”
சிப்பாய்கள் புரட்சியில் கான்பூரில் தாந்தியாவின் படைகளுக்குத் தோல்விகள் ஏற்பட்டன. அவரது படைவீரர்கள் சோர்வுற்றிருந்தனர். ஆங்கிலத் தளபதி ஹாவ்லக்கை முறியடிக்கும் வழிமுறைகளை நானா சாஹேபின் தலைமையில் விவாதித்து வந்தார் தாந்தியா தோபே. அவர் எண்ணம் முழுவதும் வெள்ளைக்காரர்களை எப்படித் தோற்கடிப்பது என்பதிலேயே இருந்தது.
குவாலியர் மகாராஜா சிந்தியா ஆங்கிலேயர்களின் ஆதரவாளர். ஆனால் அவருடைய படைவீரர்கள் அனைவருமே அதற்கு எதிரானவர்கள் என்பதை தாந்தியா தெரிந்து வைத்திருந்தார். இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்து தாந்தியா மாறுவேஷத்தில் குவாலியர் சென்றார். அங்குள்ள படைவீரர்களையெல்லாம் சந்தித்து ‘நடக்கப்போகும் யுத்தம் நமது இந்தியர்களின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் யுத்தம், அந்த புனிதமான போரில் கலந்து கொள்ள அனைவரும் வாரீர்’ என்று அவர்களை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்.
இப்படி பல இடங்களுக்கும் சென்று தேசபக்தர்களை ஒன்று திரட்டும் வேலையை அவர் சிறப்பாகச் செய்தார். கான்பூரில் சுதேசச் சிப்பாய்களுக்கு ஏற்பட்ட தோல்வியை ஈடுகட்ட கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.
கான்பூரை வென்ற ஆங்கிலேயர்கள் லக்னோவைப் பிடிக்க அங்கு சென்ற நேரம் பார்த்து, தாந்தியா கான்பூரை மீண்டும் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்டார். இப்படி அந்தப் பகுதிகளில் இவ்விரு படைகளுக்கும் மாறி மாறி வெற்றி தோல்விகள் வந்து கொண்டிருந்தன. இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர தாந்தியா யுத்த தந்திரங்களைப் பயன்படுத்தி பீரங்கித் தாக்குதலை ஒருபுறமும், நானாவின் படைகளைக் கொண்டு மறுபுறமும் தாக்கச் செய்து, பெரும் வெற்றியைப் பெற்றார்.
தொடர்ந்து பல ராஜ்யங்களுக்கும் சென்று படைகளை உதவிக்கு அழைத்து வந்தார் தாந்தியா தோபே. அவரைப் பிடித்துத் தந்தால் ஏராளமான பரிசுகளை அறிவித்தும், ஓராண்டுக் காலம் வரை அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை ஆங்கிலேயர்களால்.
ஆனால் புரட்சிக் களத்தில் ஒவ்வொரு மாவீரரும் வரிசையாக பலியான செய்தி அதிர்ச்சியைக் கொடுத்தது. ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார். குமாரசிம்மன் உயிரிழந்தார். மெளல்வி அகமதுஷா நண்பன் எனக் கருதிய ஒரு இந்திய சிப்பாயால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாவீரன் நானா சாஹேப் நேபாளத்துக்குப் போய்விட்டார் என்றார்கள், அவர் என்ன ஆனார் எனும் செய்தியே தெரியவில்லை. இந்த நிலையில் தனித்து விடப்பட்ட தாந்தியா தோபே மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர்முறையைக் கையாண்டு ஆங்கிலப் படைகளைத் திணறடித்தார்.
தன்னிடம் பெரும் படையெதுவும் இல்லை, ஆயுதங்களும் சொல்லும்படியாக எதுவும் இல்லை, இருந்தும் அவரிடமிருந்த சாமர்த்தியமும் வீரமும் கைகொடுக்க, பிரிட்டிஷாருக்கு அவர் சிம்ம சொப்பனமாக இருந்தார். தாந்தியா என்ன மந்திரம் செய்தாரோ தெரியாது, எதிரிகளான சுதேச மன்னர்கள்கூட இவரைக் கண்டதும் கேட்ட உதவிகளைச் செய்து கொடுத்தார்கள். அப்படிப்பட்ட மாவீரன் துரோகி ஒருவனுடைய சூழ்ச்சியில் சிக்கி எப்படி உயிரிழந்தார் எனும் செய்தியைச் சொல்லி அவர் கதையை முடிக்கிறோம்.
ஒருநாள் தாந்தியாவும் தோழர்களும் ஒரு சிற்றூரில் கூடி யுத்தச் செயல்பாடுகள் குறித்து விவாதித்து வந்தார்கள். அது ரகசியமான இடம் என்றுதான் அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் என்ன கொடுமை. நம்பியவர்களில் யார் செய்த துரோகமோ? ஆங்கிலேயர்கள் அந்த இடத்தைச் சுற்றி வளைத்துவிட்டனர். ஓர் ஆங்கில அதிகாரி திடீரென பின்புறமாக வந்து தாந்தியாவை இறுகப் பற்றினார். கூட்டமாக வந்திருந்த ஆங்கிலப் படையினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தாந்தியா பிடிபட்டார் எனும் செய்தி எங்கும் பரவியது.
அப்போது என்ன நிகழ்ந்ததோ தெரியாது. நடந்த ஆரவாரத்திற்கிடையே தாந்தியாவைக் காணவில்லை. ஆங்கில அதிகாரியின் பிடியிலிருந்து அவர் எப்படித் தப்பினார்? யாருக்குத் தெரியும். தாந்தியாவைக் காணவில்லை, தப்பிவிட்டார் என்ற குரல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தன. சில நாட்கள் கழித்து தாந்தியாவைப் பிடிப்பதற்கென்றே அலைந்து கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் ஓரிடத்தில் அவரைக் கண்டு அவரைத் துரத்த, அவர் அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டார்.
அப்படி மறைந்து வாழ்ந்த நேரத்தில் குவாலியரைச் சேர்ந்த சர்தார் மான்சிங் என்பவனிடம் சென்று, தான் உடல் சோர்ந்திருப்பதால் சில நாட்கள் அவருடன் தங்கி ஓய்வெடுத்துக் கொள்வதாகச் சொன்னார் தாந்தியா. அவரும் சம்மதித்து தங்கவைத்துக் கொண்டார். அதற்குள் இந்தச் செய்தியை அறிந்த பிரிட்டிஷார் எப்படியோ மான்சிங்கை மனம் மாறவைத்து விட்டனர். தாந்தியா தோபே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம், மான்சிங் பிரிட்டிஷ் வீரர்களை வரவழைத்து அவரைச் சுற்றி நின்றுகொண்டு அவரைக் கைது செய்யக் காரணமாக இருந்தான். துரோகியின் துரோகச் செயல் வெற்றி பெற்றது.
1859-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி தாந்தியா தோபே கைது செய்யப்பட்டார். வழக்கம் போல விசாரணை எனும் நாடகத்தை நடத்தி அவருக்குத் தூக்கு தண்டனை விதித்தனர்.
பேடித்தனமாக ஒரு கயிற்றில் தொங்குவதைக் காட்டிலும் பீரங்கி வாயில் வைத்து என்னை சுட்டுவிடுங்கள் என்றார். ஆனால் அவரை வெள்ளையர் தூக்கு மேடைக்குக் கூட்டிச் சென்றனர். கம்பீரமாக நடந்து வந்து மனக்கலக்கம் எதுவுமின்றி முகத்தில் புன்சிரிப்புடன் தூக்குக் கயிற்றைத் தாமாகவே தன் கழுத்தில் மாட்டிக் கொண்டார் தாந்தியா தோபே எனும் ஈடு இணையற்ற பாரத வீரன் (1859, ஏப். 18).
அந்த தூக்கு மரத்தில் அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது; இந்தியா ஒரு வீரப் புதல்வனை இழந்தது. செய்தி கேட்டு தேசபக்தர்கள் எல்லோருமே கதறி அழுத காட்சியை இன்று நாம் மனக்கண்களால்தான் பார்க்க முடியும்.
வாழ்க தேசபக்தன் மாவீரன் தாந்தியா தோபேயின் புகழ்!
(கர்ஜனை தொடர்கிறது…)
$$$