ஆச்சார்ய புருஷர் விவேகானந்தர்

-சுப்பிரமணிய சிவா

விடுதலை வீரர், 'வீரமுரசு’ என்றழைக்கப்பட்ட தேசபக்தர் சுப்பிரமணிய சிவா,  ‘ஸ்வதந்திராநந்தன்’ என்ற புனைப்பெயரில் சுவாமி விவேகானந்தரின் அருள்மொழிகளை மொழிபெயர்த்து வெளியிட்ட நூலின் முன்னுரை இது. இச்சிறிய கட்டுரையில், தான் அறிந்த சுவாமி விவேகானந்தரை எளிய முறையில் அறிமுகம் செய்கிறார் சுப்பிரமணிய சிவா.

நன்றி: தமிழர் கண்ட விவேகானந்தர் (தொ.ஆ: திரு. பெ.சு.மணி), வானதி பதிப்பகம், 1974.

ஆச்சார்ய கோடிகளில் ஒருவராக அவதரித்து ஆத்மஞான ஒளியை எங்கெங்கும் வீசி  “அவனியே ஆத்மா, ஆத்மாவே அவனி” என்று எதிருரையாடுவோர் எவருமில்லாது, பாரத கண்டத்தில் மாத்திரமன்று, வேறு பன்னாடுகளிலும் சென்று பறையறைந்து திக்விஜயம் செய்து, உண்மையொன்றே பொருளென உரைத்து, கடைசியில் உண்மையில் உண்மையாய் கலந்துகொண்ட ஸ்ரீ ஸ்வாமி விவேகானந்தரைப் பற்றி எத்தனையெத்தனை எடுத்துரைத்தாலும் எனக்கு வாய் நோவதில்லை, நா தளர்வதில்லை. இரவு பகலாக எண்ணற்ற நாட்கள் எழுதிக் கொண்டே போனாலும் என் கை சலிப்பதில்லை.

அவரை ஸ்மரிக்கின்ற நேரமெல்லாமெனக்குப் புதிது புதிதாக ஊக்கமும் உற்சாகமும் உண்டாவதன்றியில், எங்கிருந்தோ எனக்குத் தெரியாமல், எனக்கு அறிவுப் பாலூட்டும் அன்னையாய், எனது கொள்கைகளுக்கெல்லாம் ஆதாரமாய், எனது புறத்தே நின்றுகொண்டு, எனது ஜீவிதத்துக்கொரு தூண்டுதலாய் என்றும் அவர் இருந்து வருகிறாரென்று திடமானதொரு எண்ணம் என் மனதிலேயே பதிந்து கிடக்கின்றது. அவருடைய உபதேசங்களை ஆதாரமாகக் கொண்டு நான் பல வேலைகள் செய்திருக்கின்றேன்; அவருடைய புத்தகங்கள் பலவற்றை நான் மொழிபெயர்த்திருக்கின்றேன்; ஆயினும், எனக்குத் திகட்டவில்லை.

அவர் சகலகலா வல்லவராயிருந்தார். அவருடைய ஜீவித சரித்திரம் அற்புதமானது. அதிலிருந்து அவருடைய மேன்மையைப் பலரும் அறியும் பொருட்டும், எனக்கே எடுத்துரைக்க இன்பமாயிருத்தலினாலும், சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றேன்.

குழந்தைப் பருவத்திலே, திண்ணியிலே உட்கார்ந்தும் தெருவிலே திரிந்தும் சிறார்களுடனே சேர்ந்து ஓடியாடி, உள்ளத்தில் கள்ளமில்லாமல் விளையாடும் காலத்திலே, இவருடைய பிதா பெரியதொரு வக்கீலாயிருந்தபடியினால், கட்சிக்காரர்களாகவும் நண்பர்களாகவும் பல ஜனங்கள் இவருடைய வீட்டுக்கு வருவதுண்டு. பல ஜாதியினரும், பல மதத்தினரும் வருவார்கள். நமது தமிழ்நாட்டிலே வீட்டிற்கு வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து உபசரிக்கும் வழக்கம் இருப்பது போல, வங்காளத்திலே ஹூக்கா (கூடாக் என்று சொல்வதுமுண்டு) குடிக்கக் கொடுத்து உபசரிக்கும் பழக்கம் உண்டு. வீட்டுக்கு வீடு அந்தந்த ஜாதியாருக்குத் தனித்தனியாக ஐந்து ஆறு ஹூக்காக்கள் எப்போதும் வைக்கப்பட்டிருக்கும். புகை குடிப்பதற்கு பயன்படும் இந்த ஹூக்காக்களை இந்து, முகம்மதியர்களுடைய வாசஸ்தலங்களிலே காணலாம். ஹூக்கா குடிப்பதனால் ஜீரணசக்தி அதிகரிக்கிறதென்றும், இரத்த ஓட்டம் வேகமடைகிறதென்றும், ஆகையால் இது சரீரத்திற்கு மிகவும் நல்லதென்றும் அநேகர் கூறுகின்றனர். இது முக்கியமாக முகமதியர்களுக்கு பிரியகரமானது. இந்த வழக்கத்தை அனுசரித்து, நமது ஸ்வாமிகளுடைய வீட்டிலும் ஹூக்காக்கள் வைக்கப்பட்டிருந்தன. முகம்மதிய நண்பர் ஒருவர் அடிக்கடி இவருடைய வீட்டுக்கு வருவார். அவரை ஸ்வாமிகள் மாமா என்று அழைப்பார். இந்த மாமா குடிக்கும் ஹூக்காவில் வேறொருவரும் குடிப்பதில்லை. ஏனெனில் இவர் முகம்மதியராதலால், ஒரு ஹூக்காவிலே குடிப்பவர்கள் வேறு ஹூக்காவிலே குடியாததையும், அவரவர் தனித்தனியே வேறுபட்டு வெவ்வேறு ஹூக்காக்கள் வைத்துக்கொண்டிருப்பதையும் பற்றி இவர் யோசனை செய்யத் தொடங்கினார்.

ஒருநாள் காலையில் இவருடைய பிதாவின் ஆலோசனா அறையில் எல்லா ஹூக்காக்களும் நெருப்பிடப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தன. அங்கு அப்போது ஒருவருமில்லை. நமது ஸ்வாமிகள் உள்ளே நுழைந்தார்;கதவை சாத்தித் தாளிட்டுக் கொண்டார். ஒவ்வொரு ஹூக்காவிலும் வாய்வைத்துக் குடிக்கத் தொடங்கினார். இதற்குள் வெளியே பிதாவானவர் அவ்வறைக்கு வர எண்ணி வர, கதவு தாளிடப்பட்டிருப்பதைக் கண்டு கதவிலிருந்து ஒரு துவாரத்தின் வழியாகப் பார்க்க பையன் அங்கே ஒவ்வொரு ஹூக்காவிலுமாக வாய்வைத்துக் குடிப்பதைக்கண்டு, கதவைத் தட்டினார். பையன் சட்டென்று கதவைத் திறந்தான். பிதா, என்னடா செய்தாய்? என்று கேட்டார். பையன் முதலில், “ஒன்றுமில்லை” என்றான். பிதா இன்னும் கொஞ்சம் அதட்டிக் கேட்கவே, பையன் “ஒரு ஹூக்காவிலே குடித்தவர்கள் வேறு ஹூக்காவிலே குடிக்கிறதில்லை. அதற்குக் காரணம் என்ன? வித்தியாசமில்லாமல் எல்லா ஹூக்காக்களிலும் குடித்தால் என்ன நேரிடும்? என்பதைப் பார்க்க, நான் எல்லா ஹூக்காக்களிலும் வாய் வைத்துக் குடித்துக் கொண்டிருந்தேன். எனக்கு வித்தியாசம் ஒன்றும் தோன்றவில்லை. எல்லாம் ஒருதன்மைத்தாகத் தான் இருக்கிறது”  என்றான். இவ்வளவு சிறிய வயதிலேயே பையனுடைய புத்திப் போக்கைக் கண்டு பிதா மனம் மகிழ்ந்து சந்தோஷித்தார்.

தவிர ஸ்வாமிகள் சரீராப்பியாசத்திலே கைதேர்ந்தவர்; குத்துச்சண்டையில் பெயர் போனவர். குத்துச் சண்டையிலே அநேக வெகுமானங்கள் வாங்கியிருந்தார். குஸ்தியிலே அவருக்கு மிகுந்த பிரியம். அமெரிக்கா சென்று கீர்த்தி பெறுவதற்கு முன், அவர் சென்னை வந்திருந்த காலத்திலே அவருக்கு “பயில்வான் ஸ்வாமி” என்று ஓர் பெயர் உண்டு. நீந்துவதில் மிக சமர்த்தர். மலையாளம் சென்றிருந்தபோது அங்கே ஒரு பெரிய காயலைக் கடக்க வேண்டியிருந்தது. எல்லோரும் படகிலேறிச் செல்வது வழக்கம். அதிலே முதலைகள் உள்பட பயங்கரமான ஜலஜந்துக்கள் பல உண்டு! படகுக்காரனுக்குக் கொடுப்பதற்கு  கையிலே பணமில்லையாகையினாலே ஸ்வாமிகள் இரண்டு மைலுக்குக் குறையாத விஸ்தீரணமுள்ள அந்த ஏரியைத் தமது கைகளால் வெகுவேகமாக நீந்திக் கடந்தார்.  சிலம்பவித்தையிலும் மகா நிபுணர். அதிபால்ய பர்வத்திலே இவருக்கு நண்பர்கள் பெரும்பாலும் முகம்மதியர்களாயிருந்தார்கள். அவர்களிடமிருந்து இந்த சரீராப்பியாச வித்தைகளையெல்லாம் கற்றுக்கொண்டார்.

சங்கீதத்தில் ஸ்வாமிகள் பெரிய வித்வான். தலையையாட்டி முகத்தைச் சுளித்துக் கழுத்தையிழுத்துக் கோரரூபம் கொடுக்கின்ற சங்கீதமன்று ஸ்வாமிகளுடைய சங்கீதம். ஸ்வாமிகள் பாட ஆரம்பித்து விட்டால், கேட்பவர்கள் பரவசமடைந்து ஸ்தம்பித்து விடுவார்கள். ஸ்ரீராமக்ருஷ்ண பரமஹம்சருக்கு எப்போதும் ஸ்வாமிகள் பாடிக்கொண்டிருந்தால் போதும். ஸ்வாமிகள் சங்கீதத்தை சாஸ்திர ரூபமாகப் பரிசீலனை செய்து அதன் உண்மையான லக்ஷணத்தை உள்ளவாறு அறிந்திருந்தார். வீணை வாசிப்பதிலே வல்லவராயிருந்தார்.

சமையலிலே மகா கெட்டிக்காரர். விதம் விதமாக, நூதனம் நூதனமாகச் சமையல்கள் செய்வதிலே சமர்த்து மிகுந்தவர். அதிலே சிரத்தையும் பிரியமும் மிகுதி உண்டு. பொழுதுபோக்காகச் சமையல் செய்யத் தொடங்கி, அதிருசிகரமான பதார்த்தங்களையெல்லாம் ஆக்கி வைத்துவிட்டு தமது சகாக்களையும் சிஷ்யர்களையும் அழைத்து உட்காரவைத்து அவர்களுக்குப் பரிமாறி, அவர்கள் அமிர்தமென உண்ணக் கண்டு களிப்பார்.

வேடிக்கை, விளையாட்டுகளிலே பச்சைக் குழந்தை போன்றிருந்தார். அவர் இரண்டாம் முறையாக அமெரிக்கா சென்று திரும்பி வந்தபொழுது, இவருடைய வரவை எவரும் அறியவில்லை. கல்கத்தாவில் ரெயிலிலிருந்து இறங்கினதும் ஒரு வண்டியமர்த்திக் கொண்டு மடத்துக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது இரவு ஒன்பது மணி. மடத்திலுள்ளவர்கள் வெளி வாசலைத் தாளிட்டு விட்டு எல்லோரும் சாப்பாட்டுக்கு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். ஸ்வாமிகள் வாசல் தாளிட்டிருப்பதைக் கண்டு சந்தடி செய்யாமல் சுவரேறி உள்ளே குதித்து, பந்தியிலே வந்து உட்கார்ந்து கொண்டார். அங்கிருந்தவர்கள் பார்த்து பிரமித்து, கதவைத் தட்டக் கூடாதா? என்று கூற நீங்களெல்லாம் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டேன். எங்கே நான் வருவதற்குள் “நீங்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டால், பின்னர் நான் சாப்பாடில்லாது பட்டினி கிடக்க வேண்டி வருமே, அதனால்தான் சுவரேறிக் குதித்து ஓடி வந்தேன்” என்றார்.  உலகெங்கும் கியாதி பெற்ற ஒருவர்,  மகா ஞானி,  தீரர், ஆயிரக் கணக்கான சிஷ்யர்களையுடையவர், இப்படி சுவரேறிக் குதித்து விளையாடினாரென்றால், அவருடைய பரிசுத்த ஹிருதயத்துக்கு வேறொரு அத்தாக்ஷியும் வேண்டுமோ?’

இன்னொரு சமயத்திலே அமெரிக்காவில் ஒரு சபையினர் தங்கள் சபையின் ஆதரவில் பிரசிங்கிக்கும்படி அவரை வேண்டிக் கொண்டனர். அவர் அதற்கிசைந்து, குறிப்பிட்ட நேரத்தில் அந்தச் சபா மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். போதிய ஜனங்கள் கூட்டத்துக்கு வராததினால், அச்சபையின் காரியதரிசி, ஸ்வாமிகளை அருகேயிருந்த ஒரு அறையினுள் இட்டுச் சென்று “ஸ்வாமி, இப்போது சீக்கிரத்தில் ஜனங்கள் வந்து விடுவார்கள். ஒரு பதினைந்து நிமிஷ நேரம் தயவு செய்து இதில் வீற்றிருங்கள்” என்று கூறி ஒரு சாய்வு நாற்காலியை காண்பித்துவிட்டு, அந்த அறையின் கதவைச் சாத்திவிட்டு வெளியே சென்றார். அந்த நாற்காலி ஒடிந்திருந்தது. ஸ்வாமிகள் அதில் உட்கார்ந்தவுடனே, அவரைத் தாங்க முடியாமல் கீழே பின்னப்பட்டிருந்த பிரம்பு விட்டு விட்டது. ஸ்வாமிகள் நடுவிலே விழுந்து விட்டார். என்ன முயன்றும் அதனின்றும் வெளியேற முடியாதபடி, அகப்பட்டுக் கொண்டுவிட்டார். அப்படியே சரிந்தார். சற்று நேரம் பொறுத்து வாசற் கதவண்டையில் காரியதரிசி வந்து நின்று “ஜனங்கள் வந்துவிட்டார்கள், ஸ்வாமி வரலாம்” என்று சொல்ல, ஸ்வாமிகள் “ஸ்வாமி வர முடியாது; கீழே விழுந்து கிடக்கிறார், யாராவது வந்து தூக்கிவிட்டால்தான் வர முடியும” என்றார். உடனே வெளியிலிருந்தவர்கள் வந்து மிகவும் கஷ்டப்பட்டு, அவரைத் தூக்கி விட்டார்கள். கீழே விழுந்து இடுக்கில் அகப்பட்டுக் கஷ்டப்படும்போதும் விளையாட்டுப் பேச்சுத்தான்!

புத்தியிலோ அவருக்கு நிகரேயில்லை. கேட்ட கேள்விகளுக்கு, கேட்டு வாய் மூடு முன்னே மறுமொழியுரைக்கும் சமர்த்து ஸ்வாமிகளிடம் நிறைந்திருந்தது. இவருடைய மறுமொழிகளைக் கேட்டால், அதற்கு மேல் கேள்வி கேட்க முடியாது திகைத்து நின்று விடுவார்கள். ஒரு சமயத்திலே, இவர் அமெரிக்காவிற்கு சென்று கீர்த்தியடையாததற்கு முன்; இவர் பெயரையே உலகறியாதிருந்த காலத்தில்; ஆள்வார் தேசத்து அரசருடனே அவருடைய கொலு மண்டபத்தில் வீற்றுச் சம்பாஷிக்கும்படியான சந்தர்ப்பம் ஒன்று உண்டாயிற்று. அப்பொழுது அங்கே ஸ்ரீ ராமக்ருஷ்ணருடைய படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஸ்வாமிகள் அதைப் பார்த்ததும் இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டார். அரசர் அதைப் பார்த்து, “ஸ்வாமி! தாங்கள் சன்யாசியாச்சே, சந்யாசிக்கு வடிவம் கும்பிடும் பழக்கம் கிடையாதே; அழிந்து போகும் தன்மையதாய அந்த வடிவத்தைக் கும்பிடுதல் தங்களைப் போன்றவர்க்கு அழகாமோ?” என்று கேட்க,  விக்கிரகாராதனையைப் பற்றிய விவாதம் தொடங்கிற்று.

என்ன வாதித்தும் அரசருடைய குயுக்தி ஒடுங்கவில்லை. பின்னர் வேறு விஷயங்களிலே சம்பாஷணை போயிற்று. ஆனால், எப்படியாவது விக்கிரகாராதனையிலே அரசனுக்கு நம்பிக்கையுண்டாகும்படி செய்ய வேண்டுமென்று ஸ்வாமிகள் சிந்தித்துக் கொண்டிருந்தார். அங்கே சுவற்றில் அந்த அரசருடைய படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. ஸ்வாமிகள் மந்திரியைக் கூப்பிட்டு அந்தப் படத்தையெடுக்கும்படி சொன்னார். அப்படியே எடுத்துக் கொடுக்கவே,ஸ்வாமிகள் அதை வாங்கி கீழே வைத்து மந்திரியை அதில் எச்சில் துப்பும்படி சொன்னார். அரசருடைய படத்திலே அந்த அரசருக்கு நேர் முன்னே, மந்திரி எச்சில் துப்பத் துணிவாரா? தயங்கினார். பின்னர் ஸ்வாமிகள் அங்கிருந்த பிரதானிகள் முதலிய எல்லோரையும் அவ்வாறே கூற, ஒருவரும் அதைச் செய்யத் துணியாதவர்களாய் விழித்தார்கள்.

ஸ்வாமிகள் அரசனை நோக்கி, “இந்தப் படத்தின் மேல் எச்சில் துப்புவதற்கு ஏன் இவர்கள் இப்படித் தயங்குகிறார்கள்?” என்று கேட்க, அரசன் “அது என்னுடைய படமாயிற்றே; எனது முன்னிலையில் அவர்கள் அதன் மீது எச்சில் துப்பத் துணிவார்களா? என்றான். ஸ்வாமிகள், “உங்களது படத்துக்கே இவ்வளவு மதிப்பும் மரியாதையுமிருந்தால், சாக்ஷாத் ஜகந்நாதனாகக் கொண்டாடப்படும் விக்கிரகங்களுக்கும், படங்களுக்கும் எவ்வளவு மதிப்பிருக்க வேண்டும்?” என்றார். அரசன் மறுமொழி சொல்ல வாயில்லாது மௌனமானார். பின்னர், அவ்வரசனுக்கு விக்கிரகாராதனையிலே நம்பிக்கையுதித்தது.

இன்னொரு சமயத்திலே எவரும் அறியாது இவர் இவ்விந்தியா தேசம் முழுதும் கௌபீனம் ஒன்றையே ஆடையாய்க் கொண்டிருந்த காலத்திலே, ஒருவர் இவரிடத்திலே மிகுந்த பக்தி வாய்ந்தவர், இவரை ரெயிலில் இரண்டாவது வகுப்பு வண்டியில் ஏற்றிவிட்டு, அந்தப் பிரவேச சீட்டை இவருடைய கௌபீனத்தின் ஒரு ஓரத்திலே முடிந்து விட்டிருந்தார். இவருடன் அதே வண்டியில் இரண்டு ஆங்கிலேய சிப்பாய்கள் உட்கார்ந்திருந்தனர். இவர் ஆஜானுபகுவாய், எவ்வித உடையுமில்லாது கௌபீனம் மாத்திரம் தரித்திருப்பதையும், சரீரமெல்லாம் விபூதி பூசியிருப்பதையும் பார்த்து, இவருக்கு ஆங்கில பாஷை தெரியாதென்று நினைத்துக்கொண்டு, இவரைக் கேவலமாகத் பலவிதத்திலும் திட்டி ஏளனம் செய்து கொண்டே வந்தார்கள். இரண்டு மூன்று நிலையங்கள் கடந்தன. ஸ்வாமிகளுக்குக் கொஞ்சம் தாகம் மேலிட்டது. வண்டியிலிருந்து கொண்டே ஒரு நிலையத்தில் இருப்புப் பாதையதிகாரியொருவரை நோக்கி  “I want water” (எனக்குத் தண்ணீர் வேண்டும்) என்றார்.  உடனே அவ்வதிகாரியின் முயற்சியால் ஸ்வாமிகள் தமது தாகத்தைத் தணித்துக் கொள்ளவே, வண்டி நிலையத்தை விட்டுப் புறப்பட்டது. வண்டியிலிருந்த அந்த இரண்டு ஆங்கிலச் சிப்பாய்களும், இவர் ஆங்கிலம் பேசியதைக் கண்டு திகைத்துப் போய், ஸ்வாமிகளைப் பார்த்து, நாங்கள் இவ்வளவு தூரம் உங்களைக் கேவலமாய்ப் பேசிவர, தாங்கள் ஆங்கிலம் அறிந்திருந்தும் மறுமொழியே கூறாது ஏன் இருந்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு ஸ்வாமிகள் நான் மூடர்களைப் பார்த்தது இது முதல் தடவையன்று. ஆதலால் நான் பேசாதிருந்தேன் என்றார். அவர்களுக்கு இம்மறுமொழி மிகுந்த கோபத்தையுண்டாக்கிற்று என்றாலும், இவருடைய சரீரக் கட்டையும் கண்ணிலே பிரகாசிக்கும் உக்கிரத்தையும் கண்டு பயந்து சும்மாயிருந்து விட்டார்கள்.

பின்னொரு சமயத்திலே, ஸ்வாமிகள் ஐரோப்பாவிலிருந்து இந்தியா திரும்பி வருகிறார்.கப்பல் மத்திய தரைக்கடலில் வந்து கொண்டிருக்கிறது.அக்கப்பலில் ஒரு பாதிரி, வாலிப வயதுடையவர்; இவரும் வருகிறார். இந்தப் பாதிரி இந்தியாவையும்,  இந்தியர்களையும் வாயில் வந்தவாறு வைது,  அங்குள்ளவர்களிடமெல்லாம் வெகு இழிவாகப் பேசுகிறார். ஸ்வாமிகள் கொஞ்ச நேரம் மௌனமாயிருந்தும், பொறுக்க முடியாமல் அந்தப் பாதிரியாரிடம் வாதம் செய்ய ஆரம்பித்தார்.ஆனால் அந்தப் பாதிரி வாதத்துக்கு இணங்குவதாயில்லை. மேன்மேலும் திட்டிக் கொண்டே போனார்.  ஸ்வாமிகளுக்கு பொறுக்க முடியாததாகிவிட்டது. சட்டென்று ஸ்வாமிகள் எழுந்திருந்து அவன் கழுத்தில் அணிந்திருந்த் கழுத்துப்பட்டைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, இப்பொழுது என்ன சொல்கிறாய்? மரியாதையாக,  இனிமேல் எனது தேசத்தைப் பற்றி நிந்திக்காமலிருக்கிறாயா? இல்லையேல் கடலில் தூக்கியெறிந்து விடட்டுமா? என்றார். பாதிரி நடுங்கிவிட்டான். அதுமுதல் அவன் ஸ்வாமிகளிடத்தில் மிகுந்த பயபக்தியுடையவனாகி, வழிநெடுக அவருக்கு சிசுருஷை செய்து கொண்டு வந்தான். ஸ்வாமிகளுக்கு அவனைக் கொல்ல வேண்டுமென்று, அல்லது ஹிம்சிக்க வேண்டுமென்று எண்ணமுண்டா? ஆனால் அப்படியாவது மிரட்டினால் தான் அவன் அடங்குவான். உள்ளத்திலே தீய எண்ணம், ஹிம்சைச் சிந்தனையிருக்கக் கூடாது. ஆனால், வெளியில் பார்ப்பவர் பயப்பட வாழ வேண்டும். இந்தக் கொள்கையை ஜனங்கள் கைக்கொள்கிறதில்லை.

நிற்க, இவர் மகா வைராக்கியசாலியாகவும்,  ஜிதேந்திரியராயும் இருந்தார். இவருடைய மனமானது சிற்றின்பத்தில் சென்றதே கிடையாது.  இவர் நல்ல வாலிப வயதிலே கல்லூரி மாணாக்கராய் இருந்தபொழுது, தமது அறையில் உட்கார்ந்துகொண்டு சில சமயங்களிலே, தனியே பலவித பாட்டுக்கள் பாடி களித்துக் கொண்டிருப்பார். அந்த அறையின் ஜன்னலோரத்தில், எதிர்வீட்டுப் பெண் பதினெட்டு வயதுள்ளவள், அதி சௌந்தர்யவதி,  வந்து நின்று இவருடைய பாட்டிலே பரவசமாகி மகிழ்ச்சியடைந்து போவது வழக்கமாயிருந்தது. இது அவருக்குத் தெரியாது.  ஒரு நாள் மாலையில் எட்டு மணி இருக்கும். இவர் தமது அறையில் உட்கார்ந்து ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருக்கிறார். அந்தப் பெண் வழக்கம் போல ஜன்னலோரத்தில் நின்று கொஞ்ச நேரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு,  பின்னர் சந்தோஷ மேலீட்டினால், அவரிடத்தில் காதல் கொண்டவளாகி, அவருடைய அறைக்குள்ளே சட்டென்று நுழைந்து அவருடைய எதிரிலே நின்றாள்.

அவர் நிமிர்ந்து பார்த்துத் திடுக்கிட்டு “ நீ யார்? எங்கு வந்தாய்?” என்று கேட்க, அவள், “நான் எதிர் வீட்டுப் பெண். தங்களுடைய பாட்டிலே சொக்கித் தினந்தோறும் ஜன்னலோரத்தில் வந்து நின்று கேட்டுவிட்டுப் போவது வழக்கம். இன்று என்னையறியாது எனக்குத் தங்கள் மீது மையல் உண்டாகிவிட்டது! உள்ளே வந்துவிட்டேன்” என்றாள். அவர் ”இது நல்லதன்று, நீ சிறு பெண். போ உன் வீட்டுக்கு. இனிமேல் இத்தகைய மூர்க்க குணங்களை விட்டுவிடு” என்று சொல்லிக் கடிந்து போகச் சொல்லிவிட்டு, அன்று முதல் தாம் மேல் மாடியில் வசிக்கத் தொடங்கினதுமன்றியில், தமது வாசஸ்தலத்தில் தனித்துப் பாடுவதையும் நிறுத்திவிட்டார். இன்னும் அமெரிக்கா சென்றிருந்த பொழுது, இவருடைய அழகிலும், அறிவிலும், வாக்கு வல்லமையிலும் ஈடுபட்டு, எத்தனையோ கோடீஸ்வரிகள், “ஸ்வாமி! நானும் என்னுடையவைகளும் தங்களுக்கு அடிமைகள்” என்று கூறி வந்ததுண்டு. ஸ்வாமிகள், அந்தத் தூண்டுதல்களியெல்லாம், இயேசுநாதர் “சாத்தானே! தூரப்போ” என்று சொன்னது போல் உதறியெறிந்து விட்டார்.

அமெரிக்காவிலே ஒரு கோடீஸ்வரி.  உலகிலே எந்த தேசத்து அரசர்களும் ஜமீந்தார்களும் தனவந்தர்களும் அமெரிக்கா சென்றால், அவள் வீட்டில் விருந்துண்ணாது திரும்பமுடியாது. அவ்வளவு செல்வாக்குள்ளவள் அவள். அவளை ஒரு பத்திரிக்கைப் பிரதிநிதி கண்டு, “அம்மே நினது மாளிகையில் உலகத்துப் பெரிய மனிதர்களெல்லாம் வந்து தங்கிப் போகிறார்களே, இவர்களுள் நீ அறிந்த மட்டில் சிறந்த மனிதர் யார்? என்று கூற முடியுமா? என்று கேட்க, அவ்வம்மையார் “நான் பார்த்த மட்டில் இரண்டு பேர்களைச் சிறந்த மனிதர்கள் என்று கருதியிருக்கிறேன். ஒன்று ஸ்வாமி விவேகானந்தர்; மற்றவர், ஜெர்மன் சக்கரவர்த்தி” என்று பதில் கூறினாள்.

இத்திருவிடைளையாடல்களையெல்லாம் செய்யத் திருமேனியெடுத்த இப் பெரியார், தமது குழந்தைப் பருவத்திலேயே உறங்குவதற்காகக் கண்ணை மூடினால் உள்முகத்திலே ஒரு ஜோதி தோன்றுவது வழக்கமாயிருந்தது. இவர் குழந்தை விளையாட்டெல்லாம் பெரியோர்களைப் போல நடித்தலும், பெரியோர்களைப் போலிருத்தலுமாம். ஒரு நாள் இவரும் இவரது சகாக் குழந்தைகளும் சமாதி நிஷ்டையில் உட்கார்வதாகப் பாவித்துக்கொண்டு, எல்லோரும் கண்ணை மூடி உட்கார்ந்தார்கள். சுமார் ஐந்து நிமிஷ நேரங் கழிந்தபின், ஒருவன் மெல்ல கண்ணைத் திறந்து பார்த்தான். அங்கு ஒரு பெரிய க்ருஷ்ண சர்ப்பம் சுவற்றின் ஓரமாக மெல்ல ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது. அவன் கண்டு நடுங்கிப் பெருங் கூச்சலிட்டான். எல்லாரும் கண்ணை விழித்துப் பார்த்து திக்பிரமை கொண்டவர்கள் போன்று “ஐயோ! ஐயோ!” என்று கதறிக்கொண்டு மூலைக்கொருவராய் ஓடி கண்டவர்களிடமெல்லாம் சொன்னார்கள். உடனே பெருங்கூட்டம் கூடிவிட்டது. கூச்சலும் சந்தடியும் பெருத்துவிட்டது. பாம்போ, படமெடுத்துச் சீறுகின்றது. ஆனால், இவ்வளவு ஆரவாரத்துக்குமிடையே, இதொன்றும் அறியாதவராய் நமது பெரியார் (குழந்தை) கண்ணை மூடி வீற்றிருக்கின்றார். நிஷ்டை கலையவில்லை, பாவனை பலித்துவிட்டது. விளையாட்டு உண்மையாய் விட்டது.

கடைசியாக, மிகமிகக் கஷ்டப்பட்டு, அந்தப் பாம்பை அடித்துத் துரத்திய பின்னர், இப்பையனைப் போய் எழுப்பினார்கள். இம்மாதிரி உலகை மறந்து சிலை போல் உட்கார்ந்திருப்பது தகாதென்று மாதா கடிந்து கொண்டாள். குழந்தைப் பருவத்திலேயே இவ்விதமான மனத்தை ஒருமுகப்படுத்தக்கூடிய சக்தி அவருக்கிருந்ததென்றால், பிற்காலத்தில் அவர் அதிதீவிர வைராக்கியசாலியாய், சகஜ நிஷ்டாபரராய் விளங்கியது ஆச்சர்யமன்று.

அவர் தமது குருவினுடைய பரம கிருபைக்குப் பாத்திரமாகி, அக்கிருபையின் சக்தியினாலே அடக்கமுற்று, மௌனமுற்று ஈஷனாத்திரவ்யங்களில் எள்ளளவும் சம்பந்தமற்றவராகிச் சுமார் பன்னிரண்டு வருஷகாலம் தேசம் முழுதும் சுற்றிச் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். குருவருள் பலித்து, திருவருள் உண்டாயிற்று. நாவிலே சரஸ்வதி நர்த்தனம் செய்யத் தொடங்கினாள். ஐந்து நிமிஷ நேரத்துகுள்ளே அமெரிக்கா தேசம் முழுதையும் கைக்குள்ளே போட்டுக் கொண்டார். உலக் முழுதும் அவருடைய ஜோதி பிரகாசிக்க ஆரம்பித்தது. ஞானத்தைக் காளமேகம் போன்று வருஷித்தார். கோடையிடி போன்று கர்ஜித்தார்.

இந்திய தேசத்தின் மீது, தனது ஜென்ம பூமியின்மீது, மகரிஷிகளின் நாடாகிய இப்பரத கண்டத்தின்மீது, அவருக்கிருந்த அன்புக்கு ஓர் அளவேயில்லை. தேசாபிமான சிம்ஹமெனத் திகழ்ந்து, தேசத்திலே ஒரு புதிய உணர்ச்சியையும் ஆதர்சத்தையும் உண்டாக்கினார். உறங்கிக் கிடந்த ஜனங்களைத் தட்டியெழுப்பிவிட்டார். உண்மையை உரைத்தார். ஆண் மக்களாக வேண்டுமென்றார்.

ஆனால், இவருடைய ஏகாந்த, சிஷ்ய சகவாசமே இவருடைய உண்மையை ஆயிரம் மடங்காகப் பிரகாசிக்கச் செய்கின்றது. அமெரிக்காவிலே கோடைகாலத்தில் ஜனங்கள் நகரங்களில் வசிக்க முடியாமல் கிராமங்களுக்குச் சென்றுவிடுவது வழக்கம். அதுபோலவே நமது ஸ்வாமிகளும் தமது ஸ்த்ரீ சிஷ்யரரொருவருடைய வேண்டுகோளுக்கிணங்கி அவருடைய வாசஸ்தலத்திலே போய் சுமார் இரண்டு மாத காலம் வசித்து வந்தார். அவ்வம்மையாருடைய வாசஸ்தலம் நான்கு பக்கங்களிலும் நதிகளால் சூழப்பட்டு, ஸகஸ்ரதீபவனம் (ஆயிரந்தீவு) என்னும் அழகிய பெயர் வாய்ந்ததாயிருந்தது. அந்த ஸகஸ்ரதீபவனத்திலே தினந்தோறும் ஸ்வாமிகள் தமது சிஷ்யர்கள் சில பேருக்கு உபதேசம் செய்து கொண்டு வந்தார்.

சுப்பிரமணியசிவா

அந்த உபதேசங்களை சிஷ்யர்கள் அவ்வப்போது குறித்துக் கொண்டு வந்தார்கள். பின்னர், அவ்வுபதேசங்களையெல்லாம் சேர்த்து  “அருள்மொழிகள்” எனப் பெயரிட்டு அமெரிக்காவிலே புத்தக ரூபமாக அவற்றை வெளிப்படுத்தினார்கள். அப்புத்தகம் ஒன்றை ஆதாரமாகக் கொண்டுதான் நான் இப்பொழுது மொழி பெயர்த்திருக்கிறேன். அக்காலத்தில் ஸ்வாமிகள் அடக்கமே ரூபமாய், அருள்பெற்று விளங்கினார். அவருடைய அதரங்களின் வழியே அருள் பொங்கி வழிந்தது. அந்த அமிர்தப் பெருக்கே “அருள் மொழிகள்” என்னும் பெயருடன் இப்பொழுது வெளிவருகின்றது. துக்க நிவர்த்தியையும், மோக்ஷப்ராப்தியையும் நாடும் எந்தத் தமிழருக்கும் இந்த நூல் அரும்பெரும் துணையாய் நிற்குமென்பதில் சந்தேகமில்லை.

கடைசியாக ஒரு வார்த்தை. இந்த ‘அருள்மொழிகள்’  உயர்ந்த உண்மைகளை  பண்டித, பாமர, சாதாரண சர்வ ஜனங்களுக்குமாக தெளிவாக வந்திருக்கின்றன. இதுவே அருள் பெற்றாரது லக்ஷணம். தாயுமானவர், ராமலிங்க ஸ்வாமிகள் முதலிய அருளாளர் வாக்குகளிலே ஜனங்களுக்கு எவ்வளவு ருசி ஏற்படுகின்றதோ, அவ்வளவு ருசி இந்த ‘அருள்மொழி’களிலும் இருக்கின்றதென்பதில் சந்தேகமில்லை.

“காக முறவு கலந்துண்ணக்
   கண்டீர்; அகண்டா கார சிவ
போக மெனும்பே ரின்பவெள்ளம்  
   பொங்கித் ததும்பிப் பூரணமாய்
யேக வுருவாய்க் கிடக்குதையோ!
   இன்புற் றிடநா மினியெடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச் 
   சேர வாரும்!’’

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s