புதுச்சேரியில் புயற் காற்று

-மகாகவி பாரதி

புதுவையில் 1016-இல் வீசிய புயலின் பாதிப்புகளை நேர்முக வர்ணனையுடன் செய்தியாக்கி இருக்கிறார் மகாகவி பாரதி. ”ஏழை ஜனங்களின் கஷ்டங்கள் பொறுக்கக்கூடிய நிலைமையிலேயில்லை. தெய்வந்தான் ரக்ஷிக்க வேண்டும்.” என்று செய்தியின் இடையே கூறும் பாரதியின் மானுடநேயம் கவனிக்கத் தக்கது...

27 நவம்பர் 1916                                            நள கார்த்திகை 13

இரவு

நள வருஷம் கார்த்திகை மாதம் 8ம் தேதி புதன்கிழமை இரவு புதுச்சேரியில் யுகப் பிரளயத்தைப் போலே யிருந்தது.

நெடும் பொழுதாக – புதன்கிழமை மாலை தொடங்கியே – மழையும் காற்றும் கடுமையாகத் தான் இருந்தன. இடைவிடாத மழை. இடைவிடாத காற்று.

இரவு பதினொரு மணிக்குமேல் பெரிதாக வளர்ந்துவிட்டது. ஊழிக் காற்று; படீல், படீல், படீல்.

வீடுகள் இடிந்து விழுகின்றன; மரங்கள் சாய்கின்றன; காந்த விளக்குக் கம்பி அறுந்து போகிறது. நான்கு சுவர்களும் மேலே விழுந்துவிடும் போலிருந்தன; நல்ல கோட்டை போன்ற வீட்டிலே இருந்தேன். இருந்தாலும் சத்தம் பொறுக்க முடியவில்லை ஊழிக்காற்று. மருத்துக்களின் களியாட்டம். 

வெளியே என்ன நடக்கிறதென்று சாளரத்தைத் திறந்தால் மழை நீர் சரேலென்று வெள்ளமாக உள்ளே பாய்கிறது. ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஒரே பேரிருள். திறந்த சாளரத்தை மூடுவது பிரமப் பிரயத்தனம்.

காலைப் பொழுது

கார்த்திகை மாதம் 9ம் தேதி வியாழக்கிழமை நல்ல பொழுது விடிந்தது. புயற்காற்று நின்றது.

ஊர்க்காரர் வெளியேறி வீதிக்கு வந்தார்கள். புதுச்சேரிப் பட்டணத்தை நேற்றுப் பார்த்த கண்ணுக்கு இன்று அடையாளம் தெரிய இடம் இல்லை; தெருவெல்லாம் ஒடிந்த மரங்கள். தென்னையும் பூவரசும் வீதிகளில் அதிகம். நூற்றில் எண்பது முறிந்து கிடந்தன. ஓடுகளும், மாடங்களும், கூரைகளும் சேதப்படாத வீடு நான் ஒன்றுகூடப் பார்க்கவில்லை. சில கூரைகள் நெடுந்தூரம் தள்ளி விழுந்து கிடந்தன. காலையில் தபால் வரவில்லை. தந்திக் கம்பிகளும் காந்த விளக்குத் தொழிற்சாலையின் தலை விழுந்துவிட்டது. சுற்று வீதியில் ஏழைக் குடிசைகள் அழிந்து போய்விட்டன. உயிர்ச் சேதமும் நிகழ்ந்திருக்கிறது. தொகை தெரியவில்லை…

இதுவரை கிடைத்த தகவல்:-

முத்தியால் பேட்டையில் 6000 வீடு நெசவு காரருண்டு. அனேகமாக அத்தனை வீட்டிலும் தறி, சாமான் எல்லாம் சேதம். பெரும்பாலும் வீடுகளே சேதம். மொத்த நஷ்டம் கணக்கிட முடியவில்லை. ஜனச் சேதம் அதிகமில்லை.

பாக்கமுடையான் பேட்டையில் கிராமத்தில் பெரும்பகுதி அழிந்து போய்விட்டது. ஜனச் சேதம் அதிகம்.

அரியாங்குப்பம், குறிச்சிக்குப்பம் முதலிய பாக்கத்துக் கிராமங்களிலெல்லாம் ஜனச் சேதமும் வீடு நஷ்டமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

பல வாலிபர்கள் ஜனக் கஷ்டத்தை இயன்ற வரை நீக்கும் பொருட்டாக அன்னதானம் செய்து வருகிறார்கள். இன்று கூட ஊதலடிக்கிறது.

புயற்காற்றுத் தேவரை வணங்குகிறோம் அவர்கள் உலகத்தில் சாந்தி யேற்படுத்துக.

(வெள்ளி நவம்பர் 24, புதுச்சேரி)

புதன்கிழமை ராத்திரி அடித்தது புயற்காற்றில்லை. அது மருத்து தேவர்களின் களியாட்டம். தெருவெல்லாம் ஒடிந்த மரம். காடு தோட்டமெல்லாம் அழிந்த வனம். பயிரெல்லாம் வெள்ளம் போன தரை. 

வீடெல்லாம் இடி சுவர்; பல கிராமங்களிலே கூடை வீடுகள் அநேகமாக ஒன்றுமில்லை யென்று சொல்லுகிறார்கள். கடற்பாலத்திலே போட்டிருந்த ஆஸனப் பலகைகளைக் காற்றுக் கொண்டு போய்விட்டது. கலவை காலேஜில் பெரிய மகிழ மரம் ஒடிந்து விழுந்துவிட்டது. ஜன்னல்கள் சேதம். இன்று வெள்ளிக்கிழமையான போதிலும் காற்றுக்காக ரஜா. பெரிய காலேஜிலும் ரஜா.

அனேகமாக எல்லாக் கச்சேரிகளிலும் ரஜாவாகவே நடந்து வருகிறது. காந்த விளக்குக் கம்பிகளை இப்போதுதான் ஒரு ஓரத்தில் ஓட்டத் தொடங்கியிருக்கிறார்கள். தெருவில் வெட்டுண்டு கிடக்கும் மரங்களை இன்னும் எல்லா இடங்களிலும் எடுக்கத் தொடங்கவில்லை. பல இடங்களில் காக்கைகள் விழுந்து செத்துக் கிடக்கின்றன. இந்த மாதிரி உற்பாதம் எந்தக் காலத்திலும் பார்த்தது கிடையாது என்று பெரிய கிழவர்களெல்லாம் சொல்லுகிறார்கள்.

ராஜாத் தோட்டம்

இந்த ஊரில் ராஜாத் தோட்டம் ஒன்றிருந்தது. ஆஹா! என்ன நேர்த்தியான உபவனம். வாயு அந்தத் தோட்ட முழுவதையும் அழித்துவிட்டான். மரங்களெல்லாம் கையாலே ஒடிக்கப்பட்ட கரும்பைப் போலே ஒடியுண்டிருக்கின்றன. ஊரைச் சுற்றிலும் நாலு குக்கிராமங்கள் ஜலத்துக்குக் கீழே. இங்கே பஞ்சம். வாழைத் தோட்டங்களை இழந்தார் பலர். வெற்றிலைத் தோட்டமிழந்தவர் பலர். நேற்றுப் பகலில் சலவைப் பங்களாவுக்கு எதிரே வயல் நடுவிலுள்ள ஒரு திட்ட மேலே ஏழெட்டுப் பேர் நின்று கொண்டிருந்தார்கள். சுற்றிலும் தண்ணீர். ராத்திரி மழைக்கெல்லாம் அந்தத் திட்டை வெளியிலே நின்று விறைத்தார்கள். பகலிலே ஆட்கள் போய் நீரிலே நீந்தி இழுத்துக்கொண்டு வந்தார்கள். தண்ணீரில் எத்தனை ஜனங்கள், எத்தனை ஆடுமாடுகள் மிதந்து போயிருக்கக் கூடுமோ? கணக்குத் தெரிய இடமில்லை. விறகு வெட்டிகளுக்கு நல்ல லாபம். தென்னை மரத்தை வெட்டித் தள்ளினால் இரண்டு ரூபாய் கூலி. வீடு காப்புக்காக அபாயமாகத் தோன்றும் தென்னை மரங்களையெல்லாம் வெட்டுகிறார்கள்…

அன்னதானம்

அன்னதானம் பல இடங்களில் நடக்கிறது. கஞ்சி விடுகிறார்கள். கஷ்ட நிவர்த்தி போதாது. ஏழை ஜனங்களின் கஷ்டங்கள் பொறுக்கக்கூடிய நிலைமையிலேயில்லை. தெய்வந்தான் ரக்ஷிக்க வேண்டும்.

  • சுதேசமித்திரன் (27.11.1916)

$$$

குறிப்பு: 

இந்தக் கடுமையான புயற்காற்றைப் பற்றி  ‘கவிச் சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம்’ என்னும் நூலில் திரு.ஆக்கூர் அனந்தாச்சாரி அவர்கள் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்:

‘ஓர் நாளிரவு முழுதும் பாண்டியில் கடும் புயலும் மழையும் மாறி மாறி அடித்தன. வெள்ளைக்காரத் தெருவில் பாபு அரவிந்த கோஷும், ஈசுவரன் தர்ம ராஜா கோவில் தெருவிலுள்ள வீடொன்றில் ஸ்ரீமான் பாரதியாரும், மற்றொன்றில் வ.வே.சு. அய்யரும் குடியிருந்தனர். ஏறக்குறைய எல்லா வீடுகளும் புயலுக்கும் மழைக்கும் சரணாகதி யடைந்து தரையோடு தரையாய்ப் போயின. ஜனங்கள் மழை குளிர் இவற்றால் நடு நடுங்கிப் போயினர். வ.வே.சு. அய்யர் வீட்டில் முழங்கால் வரை ஜலம். தமது குழந்தைகளைத் தோளின்மேல் சுமந்து நின்றவண்ணமாக இரவெல்லாம் இருந்தார். பாரதியார் அதற்கு முந்தின நாள் குடியிருந்த வீடு திடீரென்று விழுந்தது. ஆனால் அன்று புதிதாய்க் குடிபுகுந்த வீடோ அப்பெரும் புயல் மழை இவற்றை லக்ஷியம் செய்யாமல் ஒருவாறு தாங்கியது. ஆனால் நெற்குவியல் மாத்திரம் நனைந்துவிட்டது. பாரதியார் வீட்டுக் கண்ணாடி ஜன்னல்களைச் சுவரில் ஓயாமல் மோத  வைப்பதே காற்றின் வேலையாயிருந்தது. கண்ணாடி உடைந்து, தூள் படுத்திருக்கும் அவரது குழந்தைகள் மீது விழுந்தது. அப்போது அவைகளுக்கு எவ்வித ஆபத்தும் வரக் கூடாதெனப் பராசக்தியைப் பிரார்த்தித்தார். இச் சம்பவத்தால், 

‘காற்றடிக்குது கடல் குமுறுது’ முதல்

‘தீனக் குழந்தைகள் துன்பப்படா திங்கு
தேவியருள் செய்ய வேண்டுகின்றோம்’

வரை உள்ளதோர் ஸ்வாரஸ்யமான கீதம் பிறந்தது.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s