தராசு கட்டுரைகள்- 14

-மகாகவி பாரதி

14. சுதேசமித்திரன் (தேதி தெரியவில்லை)

-1-

புதுக்கோட்டை ராஜா ஆஸ்திரேலிய மாதை விவாகம் செய்து கொண்டது சரிதானா? என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்.

பெரிய மூட்டை; சீமை வியாபாரம்; நாட்டு வியாபாரத்துக்குத் தான் நம்முடைய தராசு உதவும். வேறு கடைக்குக் கொண்டு போம் என்று ஜவாப் சொல்லி விட்டேன்.

அது போனால் போகட்டும். அந்த ராஜா சமீபத்தில் ஒரு பிரசங்கம் செய்திருக்கிறார். அதில் நமது நாட்டு ஸ்த்ரீகளைக் கொஞ்சம் குறைவாகச் சொல்லியிருப்பது போல என் புத்திக்குப் புலப்படுகிறது. ‘ஹிந்து’ பத்திரிகையில் இதைப் பற்றி ஒரு தந்தியிருக்கிறது. வாசித்துக் காட்டுகிறேன் என்று அந்த நண்பர் சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தார்.

அவர் பின்வருமாறு படித்ததுக் காட்டினார்:- புதுக்கோட்டை ராஜா தமது பிரஜைகளுக்குச் செய்த பிரசங்கத்திலே சொல்லுகிறார்:- 

என் குடிகளே, எனது பத்தினிக்கு நீங்கள் செய்த ராஜோபசாரத்தால் என்ன விளங்குகிறது? என்னையும், எனது ராஜ்யத்தையும் பற்றிய சகல விஷயங்களிலேயும் நீங்கள் எனது தீர்மானத்தை பக்தி விசுவாசத்துடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறீர்களென்பது தெளிவாகிறது. என்னையும் எனது ராணியையும் வரவேற்பதில் நீங்கள் செய்த ஆனந்த கோஷங்களினால் என்ன தெரிகிறது? வைதிக ஆசாரங்களுக்கு விரோதமாகத் தோன்றக்கூடிய செய்கைகளிலேகூட நீங்கள் சிறிதேனும் திகைப்பில்லாமல் என்னிடம் ராஜபக்தி செலுத்துவீர்களென்று தெரிகிறது. சில வருஷங்களாக எனது விவாகத்தைப் பற்றி ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டு வந்தேன். இன்னவிதமான பத்தினி இருந்தால் நான் நமக்குக் குடும்ப சந்தோஷமும், ராஜ்யபாரத்திலே உதவியும் உண்டாகுமென்பதைப் பற்றி என்னுடைய பயிற்சியிலிருந்தும், யாத்திரைகளிலிருந்தும் எனக்குச் சில விசேஷ அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருந்தன. நமது ஜன சமூகம் இப்போதிருக்கும் நிலைமையில் நான் விரும்பிய குணங்களுடைய ஸ்திரீ நமக்குள் அகப்படுவது சாத்தியமில்லையென்று கண்டேன். இதற்காக சுதேசிய அபிமானத்தின் வெளித்தோற்றத்தைக் கொஞ்சம் இழந்து விடுதல் அவசியமென்றும் நிச்சயித்தேன். ‘சுதேசிய அபிமானத்தின் வெளித்தோற்றம்’ என்று சொல்லுகிறேன். ஏனென்றால் எத்தனையோ அன்னிய தேசங்களிலே பிறந்தாலும் தாம் சுவீகாரம் செய்துகொண்ட தேசத்தாருடன் பரிபூர்ணமாக ஒற்றுமைப்பட்டுப் போவதை நாம் அறிவோம். இத்தனை காலம் கழித்துக் கடைசியாக எனது அபீஷ்டங்களுக்கு இணங்கிய பத்தினியை எனக்கு ஈசன் அருள் செய்திருக்கிறார். எங்களிருவருடைய ஆட்சியிலே இந்த ராஜ்யம் முன்னைக் காட்டிலும் அதிக சேமத்துடனும் சந்தோஷத்துடனும் இருக்குமென்று நம்புகிறேன்”

என்பதாக அந்த நண்பர் ஒரு மட்டில் வாசித்து முடித்தார்.

“சரி, அனுபவக் குறைவினால் சொல்லி விட்டார். அகல்யா பாயி முதலிய ஹிந்து ராணிகளைப் பற்றி அவர் தக்க ஆராய்ச்சி செய்ததில்லை” என்று ஜவாப் தெரிவித்தேன். “அடா, இப்போது கூட பரோடா மஹாராணி இல்லை?” என்று மற்றொருவர் குறுக்கிட்டார்.

“வேறு விஷயம் பேசுவோம்” என்று சொல்லிவிட்டேன்.

தீர்ப்பு எப்படியிருக்குமென்பதை நீங்களே ஊஹித்துக் கொள்ளலாம்.

***

-2-

நேற்றுக் காலையிலே பொழுது விடிந்து இரண்டு நாழிகைக்கு முன்னே நமது தராசுக் கடைக்குச் சென்னப் பட்டனத்திலிருந்து ஒரு வக்கீல் வந்தார். இவருக்கு 40 வயதிருக்கும். ஜாதியிலே பிராமணர், சிவப்பு நிறம். உருளைக் கிழங்கைப் போலே நல்ல வட்டமான சதை பற்றிய முகம். நெற்றியிலே கோபீ சந்தனம். இலேசான தொப்பை. அதை மறைத்து ‘அல்பகா’ என்ற பட்டுத்துணியுடுப்பு. காலிலே இங்கிலீஷ் செருப்பு, தலையிலே மஸ்லின் பாகை. தங்க விளிம்புடைய மூக்குக் கண்ணாடி உடுப்புப் பையிலே தங்கக் கடியாரம், சங்கிலி முதலியன.

இவருக்குக் கண்ணிலே ஒரு குறை. சமீபத்திலிருக்கிற பொருள் நேரே தெரியாது; தூரத்திலேயிருப்பது தெரியும். எனவே, கண் முன்னே பெரிய தராசு தொங்க விட்டிருப்பதை இவர் காணாமல் கொஞ்சம் விலகியிருந்த நமது நண்பர் எலிக்குஞ்சுச் செட்டியாரை நோக்கித் திரும்பிக் கொண்டு:- தராசே, தராசே, உன்னுடைய கீர்த்தி சென்னப் பட்டணமெல்லாம் பரவியிருக்கிறது. உன்னிடம் சில கேள்விகள் கேட்கும்பொருட்டு வந்தேன். கேட்கலாமா?” என்றார்.

அதற்குச் செட்டியார்:- “நான் தராசில்லை. சாமி; நான் எலிக்குஞ்சு செட்டியார். அதோ கிழக்கே தொங்கவிட்டிருக்கிறதே, அதுதான் தராசு. பக்கத்திலிருக்கிறாரே, அவர்தான் தராசுக் கடை அய்யர்” என்றார்.

வக்கீல் கொஞ்சம் வெட்கமடைந்தார். நான் விஷயத்தை அறிந்துகொண்டு வேண்டிய உபசார வார்த்தைகள் சொல்லி முடித்த பிறகு தராசினிடம் வக்கீல் கேள்விகள் போடத் தொடங்கினார்:-

வக்கீல்:- “நமது தேசத்துக் காருண்ய கவர்ன்மெண்டார் நமக்கு எப்போது ஸ்வராஜ்யம் கொடுப்பார்கள்?”

தராசு:- “ஒவ்வொரு கிராமத்திலும் ஜனத் தலைவர் பள்ளிக்கூடங்கள் வைத்து, தேச பாஷைகளில் புதிய படிப்பு சொல்லிக் கொடுக்க ஏற்பாடுசெய்தால், உடனே கொடுத்துவிடுவார்கள்.”

வக்கீல்:- “அது எப்போது முடியும்?”

தராசு:- நீர் போய் எனக்கு கிராமங்களில் நான் சொல்லியபடி பள்ளிக்கூடங்கள் ஏற்பாடு செய்து விட்டுப் பிறகு வந்து கேளும். சொல்லுகிறேன்.”

வக்கீல்:- “அது சரி, மற்றொரு கேள்வி கேட்கிறேன். செத்துப்போன பிறகு மறு ஜென்மமுண்டா?”

தராசு:- “உண்டு. மனோதைரியமில்லாத பேடிகள் புழுக்களாகப் பிறப்பார்கள். பிறர் துன்பங்களை அறியாமல் தமதின்பத்தை விரும்பினோர் பன்றிகளாகப் பிறப்பார்கள். சொந்த பாஷை கற்றுக்கொள்ளாதவர் குரங்குகளாகப் பிறப்பார்கள். சோம்பேறிகள் எருமைகளாகப் பிறப்பார்கள். அநீதி செய்வோர் தேளாகப் பிறப்பார்கள். பிறரை அடிமைப்படுத்துவோர் வண்ணான் கழுதைகளாகப் பிறப்பார்கள். ஸ்திரீகளை இமிசை செய்வோர் நபும்சகராகப் பிறப்பார்கள். சமத்துவத்தை மறுப்போர் நொண்டிகளாகப் பிறப்பார்கள். கருணையில்லாதவர் குருடராகவும், தமது கல்வியைப் பிறருக்குக் கற்றுக் கொடாதவர் ஊமைகளாகவும், அச்சமுடையோர் ஆந்தைகளாகவும் பிறப்பார்கள். மறு ஜன்மம் வரையிலே கூடப் போக வேண்டாம். இந்த ஜன்மத்திலேயே பாவி, கோழை முதலியவர்கள் தாழ்ந்த ஜந்துக்களாக இருப்பதை அவர்களுடைய அந்தக்கரணத்திலே பார்க்கலாம்”.

வக்கீல்:- ஏன் தராசே, பயப்பட்டால் அது கூட ஒரு பாவமா?

தராசு:- ஆம். அதுதான் எல்லாப் பாவங்களுக்கும் வேர். அதர்மத்தைக் கண்டு நகைக்காமல் எவன் அதற்கு பயப்படுகிறானோ அந்த நீசன் எல்லாப் பாவங்களும் செய்வான். அவன் விஷப்பூச்சி; அவன் தேள்; அவனை மனித ஜாதியார் விலக்கி வைக்க வேண்டும்.

வக்கீல்:- அப்படியானால் மனோதைரியம் ஒரு புண்ணியமா?

தராசு:-ஆம் அது தெய்வபக்திக்கு சமமான புண்ணியம். உண்மையான தெய்வபக்தியிருந்தால் மனோதைரிய முண்டாகும்; மனோதைரியம் இருந்தால் உண்மையான தெய்வபக்தி உண்டாகும். மனோதைரியத்தினால் ஒருவன் இந்த ஜன்மத்திலேயே தேவநிலை பெறுவான். ஆண்மை, வெற்றி முதலிய தெய்வ சக்திகள் அவனைச் சேரும். அஞ்சாத மனோதைரியத்தைக் காட்டிலும் சிறந்த புண்ணியம் இவ்வுலகத்திலே இல்லை; வானத்திலுமில்லை, அதனால் மனிதன் எல்லா இன்பங்களையும் பெறுவான்.

வக்கீல்:- சரி, வேறொரு கேள்வி கேட்கிறேன்; ஒருவனுக்கு வக்கீல் வேலையில் நல்ல வரும்படி வராவிட்டால் அதற்கென்ன செய்யலாம்?

தராசு:- அந்த வேலையை விட்டு வியாபாரம் அல்லது கைத்தொழில் தொடங்கலாம். பள்ளிக்கூடங்கள் நடத்தலாம். சாஸ்திர ஆராய்ச்சிகள் செய்யலாம்.

வக்கீல்:- சாஸ்த்ர ஆராயச்சி செய்தால் பணம் வருமா? லட்சுமிக்கும் சரஸ்வதிக்கும் விரோதமென்று சொல்லுகிறார்களே?

தராசு:- அதெல்லாம் பழங்கதை. எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேர். உலகத்தில் இப்போது அதிகச் செல்வத்துடன் இருக்கும் ஜாதியாரெல்லாம் சாஸ்திர வலிமையாலே செல்வம் பெற்றார்கள்.

வக்கீல்:- இன்னுமொரு கேள்வி. இழந்துபோன யௌவனத்தை மீளவும் பெற வேண்டுமானால் அதற்கு வழியென்ன?

தராசு:- ஒரு வருஷம் மனதிலும் சரீரத்திலும் பிரமசரிய விரதத்தை அனுசரிக்க வேண்டும். காலையில் ஸ்நானம் செய்ய வேண்டும். கைகால்களை உழைக்க வேண்டும். யௌவனமுடைய பிள்ளைகளுடன் சகவாசம் செய்ய வேண்டும். பயத்தை விட வேண்டும். மனோதைரியம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தெய்வ பக்தி உண்டாக்கிக் கொள்ள வேண்டும். பிறரைத் தாழ்வாக நினைக்கலாகாது. புதிய புதிய கல்விகள் கற்க வேண்டும்.”

வக்கீல்:- “கண் நோய் குணப்பட வழியுண்டா?”

தராசு:- உண்டு. மூக்குக் கண்ணாடியைக் கழற்றியெறிந்து விடும். தெரிந்தவரை படித்தால் போதும். மனதிலே தோன்றிய உண்மைகளையும் நியாயங்களையும் வழக்கத்திலே கொண்டு வர முயற்சி செய்யும். எதிலும், எப்போதும், யாருக்குப் பயந்தும், மனம் வேறு செய்கை வேறாக நடிக்கலாகாது. தாழ்ந்த ஜாதியாருக்குப் பள்ளிக்கூடம் போட்டுப் பாடஞ் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யும். கண் நேராகிவிடும்.”

வக்கீல்:- நீ சொல்லும் மருந்தெல்லாம் ஒரு மாதிரி வினோதமாக இருக்கிறதே!

தராசு:- வேறு கேள்வியுண்டா?

வக்கீல்:- இல்லை. தராசே, நமஸ்காரம், நான் போய் வருகிறேன்.

திரும்பிப் போகும்போது வக்கீல் முகமலர்ச்சியுடன் போனார். தராசு அவரைக் காட்டி, இன்னும் ஒரு வருஷத்தில் இவர் மனிதனாய் விடுவார் என்று சொல்லிற்று.

  • சுதேசமித்திரன் (தேதி தெரியவில்லை)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s