-உ.வே.சாமிநாதையர்

முதல் பாகம்
24 A. புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றல்- அ
அட்சய வருஷம் வைகாசி மாதத்திற்குமேல் (1866) பாண்டி நாட்டின்கண் உள்ளனவாகிய சூரைக்குடி (சூரைமாநகர்), கண்டதேவி என்னும் இரண்டு ஸ்தலங்களின் புராணங்கள் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துத் தமிழிற் செய்யுள் நடையாக இவராற் செய்யப்பட்டன. அவ்விரண்டு ஸ்தலங்களிலுமுள்ள செல்வர்களுக்கு இவருடைய பெருமையை எடுத்துக் கூறி இவரைக் கொண்டு புராணங்கள் செய்விக்கும்படி தூண்டியவர் கோயிலூர்ச் சிதம்பர ஐயாவும் இவருடைய மாணாக்கராகிய நாராயண செட்டியாரும் ஆவர். இத்தலங்களுக்கும் முன் புராணஞ் செய்த கோயிலூர் என்னும் ஸ்தலத்திற்கும், பிற்காலத்துப் புராணஞ் செய்த வீரவனத்திற்கும், புறப்பட்டுப் போகும் காலத்தில் பிரயாணச் செலவுகள் திருவாவடுதுறை ஆதீனத்தாராலும், அந்த ஸ்தலங்களில் இருக்குங் காலத்திலும் மீண்டு வரும் காலத்திலும் ஏற்படும் செலவிற்குரிய பொருள்கள் அப்புராணங்களை ஆக்குவிக்கும் தனவைசியப் பிரபுக்களாலும் கொடுக்கப்பட்டன. மேற்கூறிய நான்கு புராணங்களுள் ஒவ்வொன்றற்கும் இவர் பெற்ற பரிசில் அவ்வப் புராணங்களிலுள்ள செய்யுட்களின் தொகையளவே. இந்தப் புராணங்கள் நான்கும் இயற்றி அரங்கேற்றிய காலத்தேதான் பரிசிற்றொகைகளைச் செலவிடாமல் இவர் கண்ணிற் கண்டனரென்பார்கள். நூல் செய்யத் தொடங்கிய கால முதல் அரங்கேற்றிப் பரிசில் பெற்று நகர வட்டகையிலிருந்து மீளும் வரையில் உடனிருந்து ஆதரித்து வந்தவர் மேற்கூறிய நாராயண செட்டியாரே.
சூரைமாநகர்ப் புராணம் இயற்றி அரங்கேற்றுவதற்கு அவ்வூருக்குச் சென்று ஒரு மைதானத்தின் பக்கத்திலுள்ள ஒரு விடுதியில் இவர் மாணவர்கள் முதலியவர்களுடன் தங்கியிருந்தார். அவ்வூரிலுள்ள நகர வைசிய கனவான்கள் அடிக்கடி வந்து விசாரித்து இவரைத் தக்க வண்ணம் கவனித்து ஆதரித்து வந்தார்கள். ஒவ்வொரு நாளும் பிற்பகலில் ஸ்ரீ சங்கரநாதர் சந்நிதியிற் பலர் கூடிய அவைக்களத்திற் புராணம் அரங்கேற்றப்பெற்று வந்தது. யாவரும் கேட்டு மகிழ்வாராயினர். ஒவ்வொருநாளும் அரங்கேற்றுவதற்கு வேண்டிய செய்யுட்கள் காலையில் இவரால் இயற்றப்பெற்று வந்தன.
‘நாலடிக்குக் குறையாமற் பாட வேண்டும்’
அப்பொழுது அத்தலத்திற் பக்தியுள்ள சனங்களுள் அயலூராரில் ஒரு சாரார் கற்கண்டு, பழம் முதலிய பொருள்கள் நிறைந்த பல தட்டங்களை ஏந்திக் கொண்டு கூட்டமாக வந்து முன்னே வைத்து இவரைக் கண்டு சில உபசார வார்த்தைகளைச் சொல்லி ஒடுக்க வணக்கத்தோடு நின்றனர். அவர்கள் நின்ற நிலை ஏதோ ஒன்றைச் சொல்லும் நோக்கத்தோடிருப்பதாக இவருக்குப் புலப்படுத்தியது. இவர் அக்குறிப்பையறிந்து, ”ஏதேனும் சொல்ல எண்ணியிருந்தால் நீங்கள் சொல்லலாமே” என்றனர். அவர்கள் தங்கள் எண்ணத்தை உடனே வெளியிடுதற்குத் துணியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, ”இவ்வளவு பெரியவர்களிடம் நாம் ஒன்றைச் சொன்னால் ஏதாவது தீமை விளைந்துவிட்டால் என்ன செய்கிறது!” என்று அஞ்சினார்கள்; பின்பு எவ்வாறேனும் தங்கள் எண்ணத்தைத் தங்களுக்குள் பிராயத்தில் முதிர்ந்த ஒரு பெரியவரைக் கொண்டு சொல்லிவிட வேண்டுமென்று துணிந்து அங்கேயுள்ள ஒரு பெரியாரைச் சொல்லச் சொன்னார்கள்.
அப்பெரியவர் உடல் நடுங்க மருண்ட பார்வையோடு, “ஐயா, நாங்கள் பூர்வசன்மத்திற் செய்த பெரும் புண்ணியமே உங்களை இவ்விடம் வருவித்தது. இல்லாவிட்டால் வருவீர்களா? உங்களுக்குள்ள பாட்டுப் பாடும் திறமையையும் வாக்கின் பெருமையையும் நாங்கள் அதிகமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் பெரிய கவலையொன்று ஏற்பட்டிருக்கின்றது. அதைச் சொல்லுவதற்கும் அச்சமாயிருக்கிறது; சொல்லாமலிருக்கவும் முடியவில்லை. இந்த ஊரார் கொடுக்கும் பொருள் அழிந்து போகக்கூடியது. நீங்கள் செய்யும் நூலோ எந்த நாளிலும் அழியாதது; எந்தக் காலத்தும் உங்களுடைய பெருமையையும் தலத்தின் பெருமையையும் தெரிவித்துக்கொண்டே அது விளங்கும். ஆதலால் நாங்கள் அறிவில்லாதவர்களென்பதை உத்தேசித்துப் பாடல்களைக் குறைத்துவிடக் கூடாது. நாங்கள் ஏதாவது குற்றஞ் செய்தல் கூடும்; அதை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். எங்கள்மேற் கோபங்கொண்டு அறம் வைத்துப் பாடவுங் கூடாது. ஒவ்வொரு பாடலும் நாலடிக்குக் குறையவும் கூடாது. அப்படிக் குறைந்தாற் கோயிலைச் சேர்ந்தவர்களுக்கும் அடுத்த ஊரிலுள்ள எங்களுக்கும் கெடுதி நேருமல்லவா? எங்களை வாழ்விக்க வந்த தெய்வம் போல நீங்கள் விளங்குவதனால் துணிந்து எங்கள் பிரார்த்தனையைத் தெரிவித்துக் கொண்டோம்” என்று தழுதழுத்த நாவாற் சொல்லி முடித்தார்.
அப்போது மற்ற எல்லோரும், ”எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று ஒருமிக்கச் சொல்லி அஞ்சலி செய்தார்கள். இவர் எல்லோரையும் இருக்கும்படி செய்து, “நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். பாடல்களையும் பாடல்களின் அடிகளையும் குறைக்க மாட்டேன்; அறம் வைத்தும் பாட மாட்டேன். ஒவ்வொரு பாட்டும் நான்கு அடிகளுக்குக் குறையாமலே இருக்கும். உங்களுடைய அன்பை மிகவும் பாராட்டுகிறேன்” என்றார். உலகியலறிவு மிக்க இக் கவிஞர் பெருமான் கூறிய சொற்கள் அந்தக் கூட்டத்தினருக்கு இருந்த அச்சத்தை அடியோடே நீக்கிவிட்டன. அவர்கள் தங்கள் வேண்டுகோள் பயனுற்றதென்ற மகிழ்ச்சியோடும் எழுந்து விடைபெற்றுச் சென்றார்கள்.
அக்கூட்டத்தினருடைய சாத்துவிக இயல்பைத் தெரிந்த இவர், ”இத்தகையவர்கள் இருக்கும் இடத்தில் நாம் வருதற்கு முடியுமா? நாம் இங்கே வந்து பாடுதற்குக் காரணம் நாராயண செட்டியாரல்லவா?” என்று நினைந்து,
வெண்பா "பாடுவதெங் கேயிந்தப் பாண்டிநாட் டெல்லைவந்து கூடுவதெங் கேயொருபாற் கோதையான் - நீடுபுகழ்ப் பாரா யணனென்றிப் பார்முழுதுங் கொண்டாடும் நாரா யணனிலையேல் நாம்"
என்ற செய்யுளைப் பாடினார்.
சூரைமாநகர்ப் புராணம்
சூரைமாநகர்ப் புராணத்துள்ள படலங்கள் – 10; செய்யுட்கள் – 539. இந் நூலை ஆக்குவித்த பிரபு காரைக்குடி முரு. லெ.இலக்குமணச் செட்டியாருடைய புத்திரரும் பெருங்கொடையாளியென்று புகழ்பெற்று விளங்கியவருமான கிருஷ்ண செட்டியாராவர். அவருடைய பெருமையும் அவர் இந்நூல் செய்வித்தமையும் பின்புள்ள செய்யுட்களால் புலப்படும்:
விருத்தம் “முகைமுறுக் குடைந்து நறவு கொப்புளிக்கும் முண்டகத் தடம்புடை யுடுத்துத் தகைகெழு வளஞ்சால் சூரையம் பதியிற் றவலரும் வதரிநன் னீழல் நகையமர் சிறப்பி னாளும்வீற் றிருக்கும் நலங்கெழு சுந்தரப் பெருமான் பகைதவிர் தெய்வ மான்மிய மென்னப் பகர்தரு பெருவட மொழியை'' “மொழிபெயர்த் தெடுத்துத் தமிழினாற் பாடி முடித்திட வேண்டுமா லென்று கழிமகிழ் சிறப்புக் காரையம் பதிவாழ் கனமிகு வணிகர்தங் குலத்தோன் பொழிபெருஞ் சீர்த்தி புனையிலக் குமணப் புண்ணியன் புரிதவத் துதித்தோன் வழிவழி யறமே பயின்றிடு நலத்தான் மழையெனப் பொழிகர தலத்தான்” “வளரொளி யனைய தளிப்பணி சிறப்பின் மல்குறப் புதுக்கிய வள்ளல் கிளர்மணித் தடந்தோட் கிருட்டின மகிபன் கெழுதரு சிரத்தையிற் கேட்பத் தளர்வகன் றரிய தவம்பல வியற்றிச் சார்தருஞ் சிவபத மெளிதே விளர்தபப் புகுவா மென்பதுட் கருதி விருப்பமிக் குரைத்திட லுற்றேன்.” (சூரைமாநகர்ப் புராணப் பாயிரம்)
இந்த ஸ்தல விநாயகர்கள்: காட்சி விநாயகர், சங்கர விநாயகரென இருவர்; இறைவன் திருநாமங்கள்: சங்கரநாதர், சுந்தரநாத ரென்பன; அம்பிகையின் திருநாமங்கள்: பார்வதி, மீனாட்சி என்பன.
இந்நூற் செய்யுட்களுட் சில வருமாறு:
குதிரைகளின் வருணனை “வாதவூ ரடிகளுக் காக வையமுற் றாதரஞ் செயப்பிரா னமைத்த வாம்பரி போதர ஏற்றது போற்றுஞ் சூரைவாழ் மேதகு பரிக்குமு னிற்றல் வெள்கியே.” ஸ்தல விருட்சமாகிய இலந்தை “புரிந்து நீழன்மாத் திரஞ்செயுங் கடம்புபோ லாது பரிந்து நீழலும் படர்சுவைக் கனிகளு முதவித் தெரிந்து தீங்கனி தெவ்வுவா னடைதரு தெவ்வும் இரிந்து போகுகண் டகமுங்கொண் டிலகுமோர் வதரி.” (கடம்பென்றது மதுரையில் ஸ்தலவிருட்சமாக உள்ள கடப்பமரத்தை.) கண்ணைப் பெறுதற்குச் சூரியன் செய்த துதி “முழுதுல கிறைஞ்சா நிற்கு முதல்வரின் முகத்துக் கண்ணா இழுதையே னமர்த லாலே யெவ்வுயிர்க் குங்கண் ணானேன் பழுதிலத் தகையே னோக்கும் பார்வையின் றிருத்த னன்றோ எழுவிடம் பருகி வானத் தெவரையும் புரந்து ளாயே.”
சங்கப் புலவர்கள் சிவஸ்தல தரிசனம் செய்யப் புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்து இங்கே வந்து பூசித்தனரென்ற வரலாறு, சங்கப் புலவர் பூசித்த படலத்திற் சொல்லப்படுகின்றது. அவர்கள் திருப்பரங்குன்றம் முதலிய தலங்களைத் தரிசித்து வந்தார்களென்றுள்ள பகுதியில் ஒவ்வொரு தலத்துக்கும் ஒவ்வொரு பாடல் அமைந்துள்ளது. ஒவ்வொரு செய்யுளும் சிவபிரான் புகழை எதுகை நயத்தோடு புலப்படுத்துகின்றது.
“ஒருபுற நீலி யானை யொண்பிட்டுக் கூலி யானை மருவருள் கோலி யானை மடர்க்கருள் பாலி யானை இருளறு வாலி யானை யிருஞ்சடா மோலி யானைக் கருதுநெல் வேலி யானைக் கைகுவித் திறைஞ்சிப் போற்றி.”
அப்புலவர்கள் சூரைமாநகரில் நெடுநாள் தங்கியிருந்து ஒரு நாள் மதுரை ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளை நினைந்து ஆராமை மீதூர, “திருவாலவாயுடையான் சேவடிகள் மறந்தனமால்” என வருந்தினார்கள். அச்செய்தியைக் கூறும் செய்யுட்களில் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் முறையே அழகுபடச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
ஓர் ஏழை மனிதரால் உபசரிக்கப்பெற்றது
இப்புலவர் கோமான் கண்டதேவிப் புராணம் செய்வதற்குத் தேவிகோட்டை நகர வைசிய கனவான்களால் அழைக்கப்பெற்று சுப்பு ஓதுவாரென்பவரோடும் மாணாக்கர்களோடும் வேலைக்காரர்களோடும் திருவாவடுதுறையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்; பட்டுக்கோட்டையைக் கடந்து போகும்பொழுது சூரியாஸ்தமனமாயிற்று. தங்குவதற்கு ஓர் இடமும் காணப்படவில்லை. செல்லச் செல்ல ஊரொன்றும் காணப்படவில்லை. அப்பால் 9-மணிக்கு மேல் ஒரு சிற்றூர் போய்ச் சேர்ந்தனர். அங்கே சந்தித்தவர்களைச் சமையல் செய்வதற்கு இடம் அகப்படுமாவென்று விசாரித்தபொழுது அவர்கள் அக்கிரகாரத்திற்குப் போகலாமென்று சொன்னார்கள். விசாரித்துக்கொண்டு அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே ஒரு வீடே இருந்தது. அதுவும் மிகச்சிறிய பனையோலைக் குடிசை. அங்கே போய் உடன் வந்த வேலைக்காரர்களைக்கொண்டு சமையல் செய்வதற்கு இடம் அகப்படுமோவென்று கேட்கச் சொன்னார்; ஒருவர் சென்று விசாரித்தார். அந்த வீட்டில் ஆண்பாலார் ஒருவரும் அப்பொழுது இல்லை. சில குழந்தைகளோடு கணவனுடைய வரவைப் பார்த்துக்கொண்டே திண்ணையிலிருந்த ஓர் இளம் பார்ப்பனி பல ஆண்பாலார்களின் கூட்டத்தைப் பார்த்துப் பயந்து, ”இங்கே அதற்குச் செளகரியப்பட மாட்டாது” என்று சொல்லித் திடீரென்றெழுந்து கதவைச் சார்த்திக்கொண்டு உள்ளே போய்விட்டாள். இவர் உடன் வந்த வண்டிகளை அவ் வீட்டின் முன்புறத்திலுள்ள களத்தில் அவிழ்த்துப் போடச் சொல்லிவிட்டுச் சிலரோடு சென்று சிறிது தூரத்திலிருந்த ஊருணியொன்றைக் கண்டுபிடித்து அதில் அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டார். சந்திரன் நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. இவர் மீண்டும் மேற்கூறிய களத்திற்கு வந்து சமையல் செய்துகொள்வதற்கு வேறு ஒருவித வழியும் இல்லாமையை அறிந்து படுக்கையை விரிக்கச் சொல்லிப் பொறுக்க முடியாத பசியோடும் உடன் வந்தோருடைய பசியைத் தீர்க்கக் கூடவில்லையே யென்ற வருத்தத்தோடும் படுத்துக்கொண்டனர். மற்றவர்கள் பக்கத்திலிருந்து தம்முள்ளே பேசிக்கொண்டிருந்தார்கள்.
இப்படியிருக்கையில் அங்கேயுள்ள வீட்டுக்காரராகிய பிராமணர் உணவுப் பொருள்கள் முடிந்த ஒரு மூட்டையைத் தலையில் வைத்துக்கொண்டு வெகு வேகமாக வந்து தம்முடைய வீட்டுக் கதவைத் தட்டினர். அது தெரிந்த இவருடைய மாணாக்கர்கள் அவரை வற்புறுத்தியழைத்தார்கள். அவர், ‘இவர்கள் யாரோ? அன்னம் போட வேண்டுமென்று ஒருவேளை கேட்டால் நாம் இவ்வளவு பேர்களையும் எப்படி உண்பிப்போம்’ என்று அஞ்சி விரைவாக உள்ளே சென்று தம் மனைவியைக் கூடையொன்றைக் கொண்டு வரச்செய்து தாம் கொணர்ந்த தானியத்தை அக் கூடையிற் கொட்டி, “இரண்டு நாளைக்கு நமக்கு ஆகாரத்துக்குக் கவலையில்லை” என்று சொல்லி மனைவியை மகிழ்வித்தார். பின்பு தம்முடைய நியமத்தை முடித்துக்கொண்டு மத்தியான்னமே நீரிற் சேர்த்திருந்த அன்னத்தையுண்டார். அப்பாற் கவலையற்றுப் பனையகணிக் கட்டிலொன்றை ஆரற்சுவர் சூழ்ந்த அந்த வீட்டு உள் முற்றத்திலே போட்டு அதில் படுத்துக்கொண்டனர். படுத்தவர் தமக்கு இரண்டு நாளைக்கு ஆகாரத்துக்குக் கவலையில்லையென்ற மகிழ்வினால்,
விருத்தம்
“உனதுசரற் காலமதி யனைய மெய்யும் உடல் குழைந்த பிறைச்சடையுங் கரங்க ணான்கும் அனவரத முறும்பய வரத ஞான அருட்பளிங்கு வடமொடுபுத் தகமு மாக நினைகிலர்முன் வழுத்திலர்பின் வணங்கா ரெங்கன் நிறைத்தபசுந் தேனுமடு பாலுந் தூய கனியுமென மதுரம்விளைந் தொழுகு பாடற் கவிதைபொழி வதுகயிலைக் கடவுள் வாழ்வே” (ஸெளந்தரிய லஹரி)
என்னும் செய்யுளை இசையோடு பாடினர். பின்னும் சில பாடல்களைச் சொல்லி இன்புறுவாராயினர். அப்பாட்டுக்கள் இவருடைய பக்கத்திலிருந்த மாணாக்கர்களுடைய காதில் விழவே அவர்கள், ”இவ்வீட்டு ஐயர் தமிழ் படித்தவர் போலே காணப்படுகிறார். இப்பொழுது, ‘உனது சரற்காலம்’ என்னும் பாடல் முதலியவற்றைச் சொல்லுகிறார்” என்றார்கள். கேட்ட இவர், “அவரை எப்படியாவது இங்கே அழைத்து வந்து அந்தப் பாடல்களை என் முன்னே சொல்லச் செய்யுங்கள்” என்று சொன்னார். அவர்கள் அவ்வாறே சென்று அவ்வீட்டுக் கதவைப் பலமாகத் தட்டி உள்ளே இருந்தவரை அழைத்தார்கள்.
அவர் முன்னமே இக்கூட்டத்தைக் கண்டு பயந்தவராதலின் உடனே வெளியே வரவில்லை. ‘இவர்கள் சமையல் செய்து போடும்படி சொல்வார்கள் போலிருக்கிறது; நாம் என்ன செய்வோம்!’ என்றெண்ணி, ”காலை முதல் அயலூருக்குச் சென்று அலைந்து இப்பொழுது தான் வந்து கிடைத்த ஸ்வல்ப ஆகாரத்தையுண்டு களைத்துப் படுத்திருக்கிறேன். என்னால் இப்பொழுது ஒன்றுஞ் செய்யமுடியாது” என்று உள்ளே இருந்தபடியே கூறினார். அவர்கள், ”ஐயா, நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். எங்கள் எசமானவர்கள் உங்களுடைய பாடல்களைக் கேட்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இங்கேயிருந்து சொல்லுகிற பாடல்களை அங்கே வந்து சொன்னால் திருப்தியடைவார்கள்” என்று சொன்னார்கள்.
“நான் பாடும் பாட்டைக் கேட்டு இந்த நடுக்காட்டில் மகிழக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்? அப்படியானால் வருவதற்கு என்ன ஆட்சேபமிருக்கிறது?” என்று சொல்லிக்கொண்டே விரைந்துவந்து கதவைத் திறந்தார்; திறந்தவர் தமது பனையகணிக் கட்டிலையும் கையிலெடுத்துக்கொண்டு இவரிருக்கும் இடத்திற்கு வந்து அந்தக்கட்டிலைப் பக்கத்திற் போட்டுக்கொண்டு அதன் மேல் இருந்தார். பக்கத்திலுள்ளவர்கள் பாடல்களைச் சொல்லச் சொன்னார்கள். பின்பு தாம் முற்கூறிய செய்யுளை மற்றொரு முறை சொன்னார். அடுத்த செய்யுட்களையுஞ் சொன்னார்.
அவற்றைக் கேட்ட இவர், ”நீங்கள் என்ன என்ன படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்கவே, அவர், ”நான் யாசகம்பண்ணப் படித்திருக்கிறேன். தமிழ் வித்துவானாக இருந்த என்னுடைய தகப்பனார் எனது இளமையில் சொல்லிக்கொடுத்த சில நூல்களிலுள்ள பாடல்கள் எனக்கு ஞாபகமுண்டு. அவற்றை எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருப்பது வழக்கம். படிக்க வேண்டுமென்றாற் புத்தகங்கள் இல்லை. என் வீட்டிலிருந்த புத்தகங்களை யெல்லாம் யாரோ வாங்கிக்கொண்டு போய்விட்டனர். அவர்கள் அவற்றைத் திரும்பக் கொடுக்கவில்லை. யாரிடத்திலாவது போய்ப் பாடம் கேட்பதற்கும் நேரம் இல்லை. சூரியோதய முதல் அஸ்தமனம் வரையில் வயிற்றுப் பிழைப்புக்கே அலைய வேண்டியிருக்கிறது. அப்படி யாரிடத்திலாவது சென்று புத்தகம் வாங்கிப் படிக்கலாமென்றால், என்னை நம்பி யார் கொடுப்பார்கள்? என்னைப் பார்த்தால் அவர்களுக்குப் படிப்பவன் போலத் தோற்றாதே. எங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்து எங்களுக்கு இந்தப் பக்கங்களில் மகமை உண்டு. அறுப்புக்காலங்களில் களங்களுக்குச் சென்று காத்திருந்து கிடைக்கும் தானியங்களை வாங்கிவருவேன். என்னுடைய நாட்களெல்லாம் இப்படியே போகின்றன. இந்த நிலையில் தெரிந்தவற்றையாவது ஓய்ந்த வேளையிற் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். இந்த மட்டிலாவது தேவி அனுக்கிரகம் இருப்பதைக் குறித்துப் பாடிக் கொண்டிருந்தேன். தமிழ்ப் பாஷையில் எனக்கு விசேஷமான பிரீதியுண்டு. யாரிடத்திலாவது போய்ப் பாடங்கேட்கலாமென்று நினைத்தாலோ, இந்தப்பக்கத்திற் பாடஞ் சொல்லத் தக்கவர் யாருமில்லை; சொல்லக் கூடியவர்கள் இருந்தாலும் சுலபமாக அவர்கள் சொல்லிக்கொடுப்பதில்லை. அவர்களுக்கு நாள் முழுதும் பணிவிடை செய்தாலும் ஏதோ கடனுக்காகச் சொல்லிக் கொடுப்பார்கள். என்னுடைய நிலைமை ஜீவனத்திற்கே தாளம் போடும்பொழுது அவர்களை அண்டி நான் எப்படி கற்க வேண்டிய நூல்களைக் கற்க முடியும்?
மாயூரத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் என்று ஒரு சிறந்த தமிழ் வித்துவான் இருக்கிறாராம்; ஏழைகளாயுள்ளவர்களுக்கு அன்னமும் வஸ்திரமும் அளித்துச் சிலவருஷம் வைத்திருந்து அவர்களை நன்றாகப் படிப்பித்து அனுப்புவது அந்த மகானுக்கு வழக்கமாம். அவரிடத்திற் சிலமாதம் படித்தாலும் படிப்பவர்கள் கல்விப்பெருக்கத்தை யடைவார்களென்று சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட மகோபகாரியைப் போல இக் கலிகாலத்தில் யார் இருக்கிறார்? அந்தப் புண்ணியவானிடத்திலே போய்ப் படிக்க அவா இருக்கிறது. அதற்கும் முடியவில்லை. எனக்குக் *1 கால் விலங்கு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த லக்ஷணத்திற் சில குழந்தைகளும் உண்டாகியிருக்கின்றன. நான் இவர்களைப் பாதுகாப்பேனா? அவரிடத்தில் போய்ப் படிப்பேனா? சாணேற முழஞ் சறுக்குகிறதே. நான் என்ன செய்வேன்! அந்த மகானை ஒரு முறை இந்தக் கண்களாற் பார்த்துவிட்டாவது வரலாமென்று முயன்றாலோ அதற்கும் முடியவில்லையே! என்னுடைய நிலைமை ஒன்றுஞ் சொல்லக் கூடியதன்று” என்று சொல்லிவிட்டுப் பின்னும் தம்முடைய கஷ்டங்களைச் சொல்லினர்; பக்கத்திலிருந்த மாணாக்கர்களில் ஒருவர் ‘இது தான் நல்ல சமயம்’ என்றெண்ணி அவருடைய சமீபத்தில் வந்து முதுகைத்தட்டி அவர் செவியிற் படும்படி ரகஸ்யமாக, “இங்கே படுத்திருக்கும் இவர்களே நீர் சொல்லிய பிள்ளையவர்கள். இப்பொழுது கண்டதேவிப் புராணம் அரங்கேற்றுவதற்குப் போகிறார்கள்” என்று சொன்னார்.
உடனே ஹாஹா வென்று அவர் துள்ளி எழுந்தார். அவருடைய வியப்பு அவரைச் சில நிமிஷ நேரம் மௌனமாக இருக்கச் செய்துவிட்டது; “நான் என்ன புண்ணியஞ் செய்தேனோ? இந்த இடம் என்ன மாதவம் செய்ததோ?” என்று ஆடிப்பாடித் திகைத்து ஒன்றுந் தோன்றாதவராய் நின்றார். நின்றவர், “இதோ வந்துவிட்டேன்” என்று சொல்லிவிட்டு ஓடினார்; அவர் ஓடியதற்குக் காரணம், விரைவிற் சமையல் செய்வித்து எல்லோருக்கும் ஆகாரம் பண்ணுவிக்க நினைந்து அரிசி முதலியவை எங்கேனும் வாங்கி வருதற்காகவே. அப்பொழுது உடன் இருந்தவர்கள் அவருடைய நிலைமையையும் அன்பின் மிகுதியையும் கண்டு வியந்தனர்; “இவருக்கு நாம் சிரமம் கொடுக்கக் கூடாது. இந்த அகாலத்தில் வறியவராகிய இவர் எங்கே போவார்? என்ன பொருளை இந்நேரத்தில் இவ்வூரில் இவரால் தேடிக் கொண்டு வருதற்கு முடியும்?” என்று எண்ணி அவரைப் பின்தொடர்ந்து ஓடிச் சென்று தடுத்தார்கள். அவரிடம், “உங்களுக்கு வேண்டிய பொருள்களை நாங்கள் தருகின்றோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று கூறி அவரை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு வந்து வேண்டிய பாத்திரங்களையும் அரிசி முதலியவற்றையும் கொடுத்தார்கள். அவர் அவற்றைப் பெற்றுத் தம் மனைவியையும் துணையாகக் கொண்டு விரைவிற் சமையல் செய்து பிள்ளையவர்களையும் மற்றவர்களையும் உண்பித்தார்.
அப்பால், மகிழ்ச்சி மேலீட்டால் இராமுழுதும் நித்திரை செய்யாமலே இருந்து தமக்குப் பல நாளாகச் சில நூல்களிலிருந்த ஐயங்களைக் கேட்டுக் கேட்டு நீக்கிக் கொண்டார். காலையில் இவர் புறப்பட வேண்டுமென்று சொல்லவே அவர் ஒரு வேளையாவது தம் வீட்டில் ஆகாரம் செய்து போக வேண்டுமென்று சொல்லி அதற்கு வேண்டிய ஏற்பாடும் செய்தார். இவரும் அதற்கு உடன்பட்டு அன்று பகற் போசனத்தை அவரில்லத்திற் செய்துகொண்டு புறப்பட்டார். புறப்படுகையிற் பிரிவாற்றாது கண்ணீர் விட்டு அவர் வருந்துவாராயினர். அதைக் கண்ட இவர் தம்முடன் கூட வருவதில் அவருக்கு விருப்பம் இருத்தலையறிந்து அவருடைய குடும்பப் பாதுகாப்பிற்குப் போதிய உணவுக்குரிய பொருள்களை வாங்கிக் கொடுக்கும்படி பொருளுதவி செய்துவிட்டு அவரையும் உடனழைத்துச் சென்றார். சில மாதம் அவரை உடன் வைத்திருந்து படிப்பித்து அப்பால் ஊருக்கு அனுப்பினார்.
பிற்காலத்தில் அவர் வருடந்தோறும் திருவாவடுதுறை வந்து சில மாதம் இருந்து வேண்டிய நூல்களைப் பாடங்கேட்டு அறிந்து கொண்டும் மடாதிபதிகளிடம் பரிசு பெற்றுக் கொண்டும் செல்வார்.
கண்டதேவிப் புராணம்
கண்டதேவிப் புராணம் கண்டதேவியின்கண் உள்ள திருக்கோயிலில் ஸ்ரீ சிறையிலிநாதர் ஸந்நிதியில் மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டு நிறைவெய்தியது. அதிலுள்ள படலங்கள் – 19; செய்யுட்டொகை – 884. அப்புராணத்தை ஆக்குவித்தோர் தேவிகோட்டைத் தன வைசியப் பிரபுக்கள்; இது,
விருத்தம் “தரைபுகழ் வேத சாரமாம் விபூதி சாதன மேபொரு ளாக்கொண் டுரைபுகழ் சிறந்த *2தேவிசா லப்பேர் உத்தம வணிகர்கள் யாரும் வரைபுக ழமைந்த கண்டதே வியிற் *3பொன் மாரிபெய் தருளிய பெருமான் குரைபுகழ் விளங்கு தெய்வமான் மியமாய்க் குலவிய பெருவட மொழியை” “மொழிபெயர்த் தெடுத்து மதுரமிக் கொழுகி முழங்கிமுப் புவனமும் போற்றப் பழிதபுத் துயர்ந்து பரவுசெந் தமிழாற் பாடுக வென்றலு மனையார் கழிசிறப் புவகை மீக்கொளப் புகன்ற கட்டுரை மறுப்பதற் கஞ்சி உழிதரற் றகைய மனமுடை யானும் உரைசெயத் துணிந்தனன் மன்னோ”
என்னும் செய்யுட்களால் விளங்கும்.
அப்புராணத்திலுள்ள செய்யுட்களிற் சில வருமாறு:-
(அகத்திய முனிவர் துதி) “பன்னிரு தடங்கைச் செம்மல் பாற்சிவ ஞானம் பெற்றுப் பன்னிரு கதிரு மொன்றாம் பான்மையின் விளங்கி நாளும் பன்னிரு தவமா ணாக்கர் பழிச்சிட மலய மேவப் பன்னிரு சரண நாளுந் தலைக்கொடு பரவு வோமே.“"” (மலையம் மேவு அப்பன்) (திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் துதி) “அறைவட மொழிந வின்ற பாணினி யகத்து நாண இறையமர் மயிலை மூதூ ரிருந்தவோர் தாதுக் கொண்டே நிறைதர வொராறு மேலு நிரப்புதென் மொழிந வின்ற மறையவன் காழி வேந்தன் மலரடிக் கன்பு செய்வாம்“''” (ஒரு தாதுவிலிருந்து வேறு தாதுக்களுண்டாகா வென்பது பாணினீயமுடையார் கொள்கை. ஓர் தாது - எலும்பு.) செருந்திமரம் “நன்மலர் செறிதரு நந்த னந்தொறும் மின்மலர் செருந்திகள் வீயு குப்பன அன்மலர் களத்தினா னருளின் முன்னைநாட் பொன்மழை பொழிந்ததைப் புதுக்கி னாலென.” (நகரப் படலம்)
சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில் நடைபெற்ற பாடங்கள்
அப்பால், இவர் திருவாவடுதுறைக்கு வந்து வழக்கம் போலவே பாடம் சொல்லிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது படித்தவர்கள் முற்கூறிய நமச்சிவாயத் தம்பிரான், தருமபுரம் பரமசிவத் தம்பிரான், நாராயண செட்டியார், இராமசாமி பிள்ளை முதலியவர்கள். அக்காலத்திற் பெரும்பாலும் சுப்பிரமணிய தேசிகரது முன்பே பாடம் நடைபெறும். அவர் ஸம்ஸ்கிருத வித்துவான்களோடு சாஸ்திர ஆராய்ச்சி செய்யும்பொழுது மட்டும் இவர் வேறோரிடத்திற் பாடம் நடத்துவார். கம்ப ராமாயணம் பாடஞ் சொல்ல ஆரம்பித்த பின் சுப்பிரமணிய தேசிகர் இவரைப் பார்த்து, ”மற்ற பாடங்கள் எப்படி நடந்தாலும், கம்ப ராமாயணப் பாடம் மட்டும் நம்முடைய முன்பே நடத்த வேண்டும்” என்று கட்டளையிட அவ்வாறே அது நடைபெற்று வந்தது. அந்நூலை இவர் பாடஞ்சொல்லி வருகையில் இயல்பாகவே அதிற் பழக்கமும் பிரியமும் உள்ள சுப்பிரமணிய தேசிகர் இவர் சொல்வனவற்றைக் கேட்டு மிக்க சந்தோஷத்தை அடைந்து வந்தனர்.
பின்பு கோவைகள் பாடஞ்சொல்லும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் கட்டளையின்படி அப்பொழுது மடத்திலிருந்து கிடைத்த பல கோவைப்பிரதிகளையும் உடன் வைத்துக்கொண்டு பாடங்கேட்பவர் ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு கோவையைக் கொடுத்து ஒவ்வொரு துறைக்கும் உரியனவாக அக்கோவைகள் எல்லாவற்றிலுமுள்ள பாடல்களை முறையே இவர் அவர் முன்னே படிக்கச் செய்துவந்தார். பல ஆசிரியர்களுடைய கருத்தையும் ஆற்றலையும் ஆராய்ந்து அறிந்து தேசிகரவர்கள் மகிழ்ந்தார்கள். இதைப்பற்றிச் சுப்பிரமணிய தேசிகர் பின்னொரு சமயம், “கோவைகளுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நயம் இருந்து வந்தது. ஒரே துறையாக இருந்தாலும் பல வித்துவான்கள் தங்களுடைய புத்திசாதுர்யத்தைக் காட்டியிருத்தல் நன்றாகப் புலப்பட்டது” என்று எங்களிடம் சொன்னதுண்டு,
வன்றொண்டர்
இவரிடம் பாடங்கேட்ட மேற்கூறிய நாராயண செட்டியாரென்பவர் தேவிகோட்டையில் தருமஞ் செய்தலிற் புகழ்பெற்ற குடும்பத்திற் பிறந்தவர்; நேத்திரம் இல்லாதவர். ஆனாலும் நுண்ணிய அறிவுடையவர். வேறொருவர் படிக்க அவர் பாடங்கேட்பார். மடத்திற் கேட்பதன்றி இவர் வீட்டிற்குச் சென்றும் கேட்பதுண்டு. படித்துக் காட்டுவதற்காக ஒருவரும் இல்லாவிடின், பிள்ளையவர்களே படித்துச் சொல்வார்கள். அங்ஙனம் இவர் படிக்க அவர் பாடங்கேட்ட நூல் விநாய க புராணம். அவருக்கு ஞாபக சக்தி அதிகம் உண்டு. பாடம் நடக்கையில் இவ்வளவு பாடல்களாயின; நிறுத்தலாமென்பார். ஒரு பாடலை மறுமுறை கேட்க வேண்டின் ‘மறுத்து’ என்று சொல்வது அவரது இயல்பு. தம்முடைய ஊருக்குச் சென்று பாடங்களைச் சிந்தித்து ஐயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருந்து மீண்டும் பிள்ளையவர்களிடம் வந்து சிலநாளிருந்து நீக்கிக்கொண்டு செல்வது வழக்கம். கேட்கும்பொழுது இன்ன படலத்தில் இன்ன செய்யுளில் இன்ன அடியென்று ஞாபகம் வைத்திருந்தே கேட்பார். அது யாவருக்கும் ஆச்சரியத்தைத் தரும். அவருடைய நித்திய நியமங்கள் பின்வருமாறு:
ஒவ்வொரு நாளும் காலையில் ஸ்நானம் செய்து பின்பு விநாயகருக்கு ஆயிரத்தெட்டுக் குட்டுக்கள் குட்டிக்கொண்டு முடித்து விட்டுப் பஞ்சாட்சரம் ஆயிரத்தெட்டு உரு ஜபிப்பார். அகத்தியத் திரட்டைப் பதம்பதமாக நிறுத்தி உச்சரித்து முழுவதும் பாராயணஞ் செய்து தேவாரத்தில் வேறு சில பதிகங்களையும் திருவாசகத்திற் சில பதிகங்களையும் பாராயணம் செய்துவிட்டுப் பின்பு திருமுருகாற்றுப்படையை ஆறுமுறை பாராயணஞ் செய்வார். அவ்வாறு குறைவின்றிச் செய்து முடித்துவிட்ட பின்புதான் ஆகாரம் செய்துகொள்வார். நியமம் பகலில் முடியாவிடின் மாலையில் தொடர்ந்து செய்து விட்டுத்தான் சாப்பிடுவார். ஒருநாள் செய்யாவிடின் மறுநாள் நிறைவேற்றி விட்டே உண்பார். அவருடைய கல்வியறிவின் முதிர்ச்சிக்குக் காரணம் அவருடைய சிவபக்தியும், நித்திய நியமங்களுமே என்று உடனிருந்த எல்லோரும் சொல்வார்கள். அவர் திருவாவடுதுறைக்கு வந்திருந்த ஒருசமயம் பல சிவநேசச் செல்வர்கள் கூடி அவருடைய ஒழுக்க விசேஷத்தையும் சைவப்பற்றையும் திடபத்தியையும் அறிந்து அவருக்கு வன்றொண்டரென்றே பெயரிட்டு வழங்க வேண்டுமென்று சொன்னார்கள். பிள்ளையவர்கள் கேட்டு, ‘நீங்கள் சொன்னது தக்கதே’ என்று அங்கீகரித்து,
நேரிசை வெண்பா “சத்திவாழ் வாமத்துச் சங்கரன்பொற் றாட்கமலப் பத்தியாற் றேவார பாராய - ணத்தினால் வான்றோய் புகழ்மிகுத்த வன்றொண்ட னென்னும்பேர் சான்றோய் நினக்குத் தகும்”
என்னும் பாடலைக்கூறி அன்றுமுதல் வன்றொண்டரென்றே அழைத்து வருவாராயினர்.
இந்தச் சமயத்திற் செய்த வேறு ஒரு விருத்தமுமுண்டு. அஃது இப்பொழுது கிடைக்கவில்லை.
ஒருசமயம் பெரிய புராணம் நடைபெறும் பொழுது ஒருவர் மிக வேகமாகப் படித்துக்கொண்டு போனார். அந்நூலில் மேல் வரும் ஒரு பாட்டின் பொருளை நன்றாகத் தாம் கேட்டுக்கொள்ள வேண்டுமென்று மிக்க கவலையோடு வன்றொண்டச் செட்டியார் கவனித்து எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தார். படித்தவர் வழக்கம்போல் அந்தப் பாட்டையும் வேகமாகப் படித்துச் சென்றார். அவரைப் பார்த்து, வன்றொண்டர், “ஐயா, இந்தப் பாட்டிற்கு அர்த்தம் செய்து கொண்டீர்களா?” என்று வினவ அவர் பொருள் தெரியாமல் விழித்தார். “ஊரிலிருந்து வரும்பொழுது சந்தேகமாக இருந்த பாடல்களில் முக்கியமான பாடல் இது. எப்பொழுது இது வருமென்று காத்துக்கொண்டே இருந்தேன். வேகமாகப் படித்துச் சென்றதனால் உங்களுக்குத் தெரிந்திருக்குமென்று நினைத்தேன். யாவும் முறையே தெரிந்த ஐயா அவர்கள் இங்கே இருக்கும் பொழுது ஐயங்களை நன்றாக நீக்கிக் கொள்ளாமற் போகலாமா? வேறு யாரிடத்தில் கேட்கப் போகிறோம்? நான் சொல்வதைப்பற்றிக் கோபித்துக்கொள்ளக் கூடாது” என்றார். பிள்ளையவர்கள் அந்தப் பாட்டிற்கு நன்கு பொருள் கூறினார். அந்தப் பாடல் இன்னதென்று இப்பொழுது தெரியவில்லை.
திருத்துருத்திப் புராணம்
குற்றாலமென்று வழங்குகின்ற திருத்துருத்தி ஸ்தலபுராணத்தை அத்தலத்திலுள்ள ஆதி சைவர்களும் மற்ற தொண்டர்களும் கேட்டுக்கொள்ள இவர் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துக் காப்பியமாகச் செய்தனர். வடமொழிப் புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னவர் திருக்கோடிகாவல் ராமகுட்டி சாஸ்திரிகளென்பவர்; அதைத் தமிழில் எழுதியவர் திருவாவடுதுறை நமச்சிவாயத் தம்பிரானவர்கள். அப்புராணம் இயற்றி முடிந்தவுடன் அவ்வூரின்கண் உள்ள திருக்கோயில் மகா மண்டபத்திற் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. அப்பொழுது அவ்வூர்ச் செங்குந்தச் செல்வர்களாகிய சிங்காரவேல் முதலியாரென்பவரும் அவருடைய சகோதரராகிய தியாகராச முதலியாரென்பவரும் இப்புலவர் பெருமானுக்கு உயர்ந்த சம்மானங்கள் செய்தார்கள். தங்களுடைய இனத்தாரையும் மற்ற செல்வர்களையும் செய்யும்படி செய்வித்தார்கள். பிற்காலத்தும் பலவகையாக இவரை ஆதரித்து வந்தார்கள்.
திருத்துருத்திப்புராணம் 39 – படலங்களும் 1617 – செய்யுட்களும் அடங்கியது.
இந்தத் தலம் காவிரி ஆற்றினிடையில் இருந்தமையின் திருத்துருத்தியெனவும் *4, குத்தாலமென்னும் ஒருவகை மரத்தைத் தல விருட்சமாக உடைமையின் *5 குத்தாலமெனவும் வழங்கப்படும். குத்தாலமென்பதன் சிதைவே குற்றாலமென்பது. அப்பெயர் உத்தாலகமெனவும் வழங்கும். பாண்டி நாட்டிலுள்ள திருக்குற்றாலம் தெனாது உத்தாலகவனமெனவும் இத்தலம் வடாது உத்தாலகவனமெனவும் வழங்கப்பெறும். இங்கே திருக்கோயில் கொண்டெழுந்தருளிய சிவபெருமான் திருநாமம் சொன்னவா றறிவாரென்பது; அது,
''சொன்னவா றறிவார் துருத்தியார்''
எனச் சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரத்திலும் அருளிச் செய்யப்பட்டிருக்கிறது. இத்திருநாமம் வடமொழியில் உக்தவேதீசுவரரென்று வழங்கும்.
இப்புராணத்தில் உள்ள சுந்தரதீர்த்தப் படலத்தில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் சரித்திரம் விரிவாக அமைக்கப்பட்டுள்ளது.
அம்பிகை பசுவடிவங்கொண்டருளித் திருவாவடுதுறைக்கு வந்து ஸ்ரீ மாசிலாமணியீசரைப் பாலால் அபிடேகம் செய்ததைக் கூறும் பகுதியிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:-
விருத்தம் “உண்மை யாண்மனத் துத்தமர் பரசிவன் ஒருமகன் பரைக்கென்று வண்மை யாகம மோதுவர் மற்றது வாய்மையென் றுறத்தேர்ந்தாம் அண்மை யேயன்றிச் சேய்மையே சிவலிங்கத் தண்ணலைக் கண்டாலும் கண்மை நீத்தபைங் கோமுலை சுரந்துபால் கனிந்துகுத் திடலானே” வேறு “இறைவன்பா லுவந்தா ளிறைவியென் றெவரும் எடுத்தியம் பிடுவது மிருக்க இறைவிபா லுவந்தா னிறைவனென் றெவரும் எடுத்தியம் பிடுவது மெழுந்த திறைவனன் றாடப் பால்பொழி வதிலோர் இணையிலா தமைகுறித் தன்றோ இறைவியை யின்னு மொப்பிலா முலையாள் என்றிசைத் துய்யுமா லுலகம்.'' (கோமுத்திப் படலம், 6, 7.) (திருவாவடுதுறையிலுள்ள அம்பிகையின் திருநாமம் ஒப்பிலா முலையாளென்பது.)
சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட் கொள்ளுதற்காக விருத்தவடிவம் கொண்டருளியதைக் கூறும் பகுதியிலுள்ள இரண்டு செய்யுட்கள் வருமாறு:-
விருத்தம் “கிழவடி வன்றி வேறு கிளரொரு வடிவங் கொள்ளிற் பழவழக் கென்று ஞாலங் கொளாதெனும் படியை யுன்னி விழவுமை திருமு கத்தோர் வெள்ளிய முறுவ றோன்ற அழகிய விருத்த ரானா ரறையுமூ வடிவு மில்லார்” “வளமலி திருநெல்வேலி வைப்பிடைக் கொண்ட தேயோ கொளமலி பிறிதோர் தேத்துக் கொண்டதோ வுணர்த றேற்றேம் தளமலி மலர்க்கை வேணுத் தண்டமொன் றூன்றக் கொண்டு” (சுந்தர தீர்த்தப். 37, 41.) (திருநெல்வேலியிலும் பாசூரிலும் ஸ்தல விருட்சம் மூங்கில்.)
பதிகங்கள்
மேற்கூறிய சிங்காரவேலு முதலியார் முதலிய செங்குந்தச் செல்வர்கள் தங்களுடைய தெருவிற் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் *6 கச்சிவிநாயகர் மீது ஒரு பதிகமும் *7 சுப்பிரமணியக்கடவுள் மீது ஒரு பதிகமும் இயற்ற வேண்டுமென்று விரும்பியபடி இரண்டும் அக்காலத்தில் இவராற் செய்யப்பெற்றன.
''கலைவழி நினைப்பரவு செங்குந்தர் மரபும்
கதித்துநீ டூழி வாழ்க''
எனக் கச்சி விநாயகர் பதிகத்திலும்,
''விருப்பொடு நினைப்போற்றும் செங்குந்தர் தம்மரபு
மேன்மேலு மோங்கிவாழ்க''
எனச் சுப்பிரமணிய ஸ்வாமி பதிகத்திலும் இவர் செங்குந்தர்களைப் பற்றிக் கூறியிருக்கின்றனர்.
*8 திருவாவடுதுறை யமக அந்தாதி
“சிவஞான சுவாமிகள் காஞ்சீபுரத்திற்கு யமகவந்தாதி செய்திருக்கிறார்கள். இத்தலத்திற்கு என்ன காரணத்தாலோ செய்யவில்லை. தங்கள் வாக்கினாலாவது ஒரு யமகவந்தாதி செய்ய வேண்டும்” என்று திருவாவடுதுறையிலிருந்த சில தம்பிரான்களும் பிறரும் கேட்டுக்கொள்ள அவ்வாறே ஒரு யமக அந்தாதியை இவர் இயற்றினார்.
அவ்வந்தாதியில் யமகவ்கை அழகாக அமைந் திருக்கின்றது; ‘நவகோடி சித்த’, ‘கனகத்தியாகந்த’, ‘மாளிகைத் தேவனை’, ‘பஞ்சாக்கரவை’, ‘அரசவனத்தை ‘, ‘ காமாசிலாமணி’ என்று அத்தலத்தின் தொடர்புடைய சொற்றொடர்களையும், ‘அண்ணாமலையத்தனை’, ‘தக்க சிதம்பரவா’ , ‘வரசங்கமங்கை’, ‘தலையாலங்காடவர்’ என்று பிற தலப்பெயர்களையும், ‘மானக்கஞ்சாற’, ‘கண்ணப்பரை வரை’ என்று நாயன்மார் பெயர்களையும் யமகத்திலமைத்து அவற்றிற்கேற்பப் பொருளை முடித்திருத்தல் இவருடைய கவியாற்றலைப் புலப்படுத்துகின்றது.
***
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. கல்யாணம் ஆகியிருக்கிறதென்று பொருள்.
2. தேவிசாலம் – தேவிகோட்டை
3. காங்கேயனென்னும் அரசனுக்காகச் சிவபெருமான் இத்தலத் திற் பொன்மாரி பெய்வித்தனரென்பர். அதனால் இத்தலத்திற்குப் பொன்மாரியென்று ஒரு பெயருண்டு.
4. துருத்தி – ஆற்றிடைக்குறை.
5. குத்தாலம் – ஒருவகை ஆத்திமரமென்பர்.
6. ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 1-10;
7. மேற்படி. 11-20.
8. மேற்படி. 1925-2026.
$$$