ஸ்வதந்திர கர்ஜனை- 1(4)

-தஞ்சை.வெ.கோபாலன்

பாகம்-1; பகுதி- 4

அயோத்தி நவாபின் வீழ்ச்சி

அயோத்தி ராமபிரான் தோன்றியதால் பெருமை பெற்ற தலம். சரயு நதி பாய்ந்து அயோத்தியை வளம் பரப்பிய செய்தியை கம்பன் தன் காப்பியத்தில் அழகாக எடுத்துரைக்கிறான். அப்படிப்பட்ட வளம் பொங்கி வழியும் அயோத்தியின் மீது ஆங்கில கம்பெனியாருக்கு ஒரு கண் உண்டு. 1764 முதலே அயோத்தியை ஆண்ட நவாபுக்கும் ஆங்கில கம்பெனியாருக்கும் தொடர்பு உண்டு. அயோத்தியின் வளமும் செல்வமும் ஆங்கிலேயர்களின் கண்களை உறுத்திக் கொண்டுதான் இருந்தது.

‘ஆதரவற்றுக் கிடக்குதையா இங்கு வேரில் பழுத்த பலா’ என்று விதவைகளைக் கண்டு பாடினார் பாரதிதாசன். அதைப்போல அயோத்தி இத்தனை வளங்கள் இருந்தும், அது தங்கள் கைகளுக்கு வரவில்லையே என்று ஏங்கினர் ஆங்கிலேயர்கள். அதற்காக அயோத்தி சுல்தானுக்கு ஆங்கிலேயர்கள் தூது விட்டனர். அயோத்தியைப் பாதுகாப்பதற்காக  தங்கள் படைகளைக் கொண்டுவந்து இங்கு நிறுத்திக்கொண்டனர். படைகளைக் கொண்டுவந்து நிறுத்தினால் போதுமா, அவற்றின் செலவுகளை அயோத்தி சுல்தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றனர். செலவு எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு பதினாறு லட்சம்!  அந்தப் பணத்தை மக்களிடம் கம்பெனி வசூல் செய்து கொள்ளத் தொடங்கியது. அயோத்தியின் கஜானா காலி.

அயோத்தியின் பாதுகாப்புக் கருதி கம்பெனி சுல்தானுக்கு ஒரு ஆலோசனை -அல்ல அல்ல- ஒரு கட்டளையை ஆங்கிலேய நிர்வாகம் அனுப்பியது. அதன்படி சுல்தான் படைகளில் இருந்த இந்திய சிப்பாய்களையெல்லாம் நீக்கிவிட்டு, ஆங்கிலேய சிப்பாய்களை நியமிக்க வேண்டுமென்றது. ஆங்கிலேயர்களுக்கு அயோத்தியின் கஜானா காலியானது ஒருபொருட்டல்ல, ஆனால் அயோத்தியின் வளம் நிறைந்த பூமி கிடைக்கிறதல்லவா, அது போதுமே! இவற்றையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள 1801-ஆம் வருஷம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

1847-ஆம் வருஷம் வாஜித் அலிஷா என்பவர் அயோத்தியின் நவாபாக முடிசூட்டிக் கொண்டார். இளைஞரான நவாப், அயோத்தி என்னவோ தன்னுடைய அதிகாரத்தின் கீழ் இருப்பதாக பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். சிப்பாய்களுக்கு தினம் உடற்பயிற்சி சொல்லித் தரப்பட்டது. இதையெல்லாம் உடனடியாக நிறுத்தச் சொல்லி ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டார்கள். இந்த நிலையில் நாடு பிடிக்கும் திட்டத்தின் நாயகன் டல்ஹவுசி இந்தியா வந்தான்.

அயோத்தியைக் கைப்பற்றுவது எப்படி? யுத்தம் செய்து அயோத்தியைக் கைப்பற்றுவது தவறான விளைவுகளை ஏற்படுத்தும். பஞ்சாபையும், பர்மாவையும் கைப்பற்றியதைப் போல துரோகச் செயலால் அயோத்தியைக் கைப்பற்றுவது இயலாது; காரணம் அயோத்தியில் ஆங்கிலேய ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்ள ஒரு நபர்கூட கிடையாது. நவாபுக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு, ஆதரவு இருந்து வந்தது. மற்ற பிரதேசங்களில் மன்னருக்கு வாரிசு இல்லை என்று நாட்டைப் பிடுங்கியது போல அயோத்தியில் செய்ய முடியாது; காரணம் மன்னருக்கு ஏராளமான பிள்ளைகுட்டிகள்.

கடைசியில் வெள்ளைக்காரர்களுக்கு சுல்தான் செய்த மாபெரும் தவறு ஒன்று கண்ணில் பட்டது. அது, சுல்தான் தனது அயோத்தியை செழுமையாகவும், நல்ல வளத்தோடும் வைத்திருந்த குற்றம் தான். ஒரு இந்திய அரசன் இப்படிப்பட்ட வளம் பொருந்திய நாட்டை, நாம் இங்கு இருக்கும்போது ஆள்வதா? கூடாது. 1856-ஆம் வருஷம் டல்ஹவுசியின் ஒரு கட்டளை மூலம் நவாபின் நிர்வாகம் திருப்திகரமாக இல்லை என்று கூறி நாடு பிடுங்கிக் கொள்ளப்பட்டது.

இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டிக்க வேண்டிய சரித்திர ஆசிரியர்களில் ஒருவரான அர்னால்டு என்பவர்,  டல்ஹவுசியின் நடவடிக்கையை ஆதரித்துச் சொல்லும் காரணத்தைப் பாருங்கள்: ‘நவாப், தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு சால்வைகளைப் பரிசாகக் கொடுத்தார், அப்படிக் கொடுக்கலாமா? அங்கு நடந்த கோயில் திருவிழாவின்போது வாணவேடிக்கைகளை நடத்தினார். செய்யலாமா?’ அதனால் நாடு அவரிடமிருந்து பிடுங்கப்பட்டது என்கிறார் அர்னால்டு. எப்படியிருக்கிறது நியாயம்?

அயோத்தி நவாப் வாஜித் அலி ஷா

நாடு பிடுங்கப்படும் உத்தரவின் நகலில் கையொப்பமிட சுல்தான் மறுத்துவிட்டார். கையொப்பமிடாவிட்டால் நாடு பிடுங்கப்படுவதோடு, ராஜாவுக்கு எந்தவித மானியமும் கொடுக்க முடியாது என்றனர் ஆங்கிலேயர்கள். இந்த அநியாயம் கண்டு சுல்தான் ரத்தக் கண்ணீர் வடித்தார்.

‘ஓஹோ?’ சுல்தானுக்கு அத்தனை திமிரா? நாம் தயாரித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட மாட்டாரா?’ சரியென்று கம்பெனி படைகள் லக்னோ நகருக்குள் பிரவேசித்தன. அரண்மனைச் செல்வங்கள் சூறையாடப்பட்டன. ராணிகள் அவமதிக்கப்பட்டனர். நவாப் சிம்மாசனத்திலிருந்து பிடித்துத் தள்ளப்பட்டார். அரண்மனை முழுவதும் ஆங்கிலச் சிப்பாய்களின் வசம் விழுந்துவிட்டது.

தொடர்ந்து ஏழை விவசாயிகள் வரிக்காகக் கசக்கிப் பிழியப்பட்டனர். வெள்ளையர் வகுத்ததே நியாயமாயிற்று. இப்படியொரு இக்கட்டான சமயத்தில் பழிவாங்கப்பட்ட அயோத்தி சுல்தானின் ஆட்களும், சுதந்திரம் வேண்டுமென்ற கோஷத்துடன் கொதித்துப் போய் சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தனர். எரிமலை வெடிக்கும், அப்போது நாம் பாய்ந்து போரிட்டு வெள்ளை அரக்கர்களை வெளியேற்ற வேண்டுமென பொறுமை காத்தனர் அயோத்தி வீரர்களும்,  மக்களும், சுல்தானின் ஆதரவாளர்களோடு.

ஆங்கிலேயர்களுக்கு 1836 முதலே இந்தியா முழுவதையும் கிறிஸ்தவ நாடாக ஆக்கிவிட வேண்டுமென்கிற வெறி. ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் இவர்கள் அங்கிருந்த மக்களை சுலபமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற முடிந்தது. ஆனால் இங்கு, இந்த பண்டைய பெருமை வாய்ந்த பாரத பூமியில் இங்குள்ள மக்களை, அதாவது ஹிந்து, இஸ்லாமிய மதத்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவது ஒன்றும் அத்தனை சுலபமாக இல்லை. என்ன செய்வது?

இந்த நோக்கத்தில் அவர்கள் பட்ட பாடு, அடடா! எத்தனை பிரசுரங்கள், எத்தனை பிரசங்கங்கள், அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராயின.

1857-இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில், கிழக்கிந்திய கம்பெனியின் தலைவன் மாங்கிள்ஸ் என்பான் ஆற்றிய உரையில் சொல்கிறான்: “பரந்து விரிந்த வளம் மிகுந்த பாரத சாம்ராஜ்யத்தை கடவுள் நம்மிடம் கொடுத்துள்ளான். இந்த தேசத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை கிறிஸ்தவக் கொடி தான் பறக்க வேண்டும். அந்தக் குறிக்கோளை அடைய ஒவ்வொரு ஆங்கிலேயனும் முழுமூச்சாகப் பாடுபட வேண்டும். இந்தியாவை ஒரு கிறிஸ்தவ நாடாக ஆக்குவதில் அணு அளவும் தயக்கமோ, தாமதமோ கூடாது!”

1836-இல் லார்டு மெக்காலே என்பான் வங்காளத்தில் முதன்முதலாக ஆங்கிலக் கல்வி அறிமுகம் செய்விக்கப்பட்டபோது சொல்கிறான்: “நம்முடைய இந்தக் கல்வித் திட்டம் தொய்வின்றிப் பின்பற்றப்படுமானால், இன்னும் முப்பது வருட காலத்தில் வங்காளத்தில் ஒரு ஹிந்துவோ அல்லது ஒரு இஸ்லாமியனோ இருக்க முடியாது. எல்லோரும் கிறிஸ்தவனாக மதமாற்றம் செய்யப்பட்டு விடுவார்கள். இது என்னுடைய உறுதியான, அசைக்க முடியாத நம்பிக்கை.”

ஒளரங்கசீப் கடைபிடித்த கட்டாய மதமாற்றக் கொள்கை ஆங்கிலேயர்களுக்கு ஆதர்ஷமாகத் திகழ்ந்தது. ஒரு சமுதாயத்தை முழுவதுமாக கவர்ந்துகொள்ள வேண்டுமானால், முதலில் அவர்களது மதத்தை அழித்தொழித்துவிட வேண்டுமென்கிற ஒளரங்கசீபின் கொள்கை இவர்களுக்குப் பிடித்திருந்தது.

ஒரு மதத்தினருக்குள் ஏதாவது ஒரு மாற்றம் கொண்டுவர வேண்டுமானால், அது சம்பந்தப்பட்ட மாற்றங்களை அந்தந்த மதத்தார் மட்டுமே கூடி முடிவு செய்திடல் வேண்டும். இதில் அந்நியர் எவரும் தலையிடும் உரிமை கிடையாது. அப்படி அந்நியருக்கு அந்த அதிகாரம் கொடுக்கப்படுமாயின், முதலில் அவர்கள் குறைபாடுகளைத் தீர்க்க முயல்வதுபோல உள்நுழைந்து பின்னர் மதத்தின் ஆணிவேரையே அறுத்து வெந்நீரை ஊற்றி அழித்துவிடுவார்கள்.

இந்தியாவில் மதமாற்றம் செய்திட இங்கிலாந்திலிருந்து ஏராளமான பாதிரிமார்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். ஆங்காங்கே கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதற்காக அரசாங்கம் ஏராளமான பணத்தை வாரி இறைத்தது. இந்தச் சூழ்நிலையில் நிலைமையின் கடுமையை உணர்ந்த இந்துஸ்தானத்து வீரர்கள் ஒன்று திரண்டனர். ரகசியமாகக் குறியீடுகள் மூலம் செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

“ஹே, ஹிந்துஸ்தானமே! விழித்துக்கொள். ஆபத்து வந்து வாயில் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. எழுந்திரு! இந்த நாட்டுக்காகவும், இதுநாள் வரை நாம் பாதுகாத்து வந்திருக்கிற ஹிந்து தர்மத்திற்காகவும் உயிர்த்தியாகம் செய்வோமென்ற உறுதியை எடுத்துக் கொள். மாபாதக பகைவர்களை ஒழித்து மீண்டும் நம் சுயராஜ்ய உரிமையை அடைவாயாக!” என்றெல்லாம் எழுச்சிக் குரல் எழுப்பப்பட்டன. சாதாரண இந்திய சிப்பாய்கள் தங்கள் உரிமையை மீட்டெடுக்கத் தன் கத்தியைத் தீட்ட ஆரம்பித்தான்.

இந்தியாவில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இழிவுகளுக்கு ஆட்படுத்தப்படுவதை எண்ணி, இதற்காக வெள்ளைக்காரர்கள் மீது வஞ்சம் தீர்க்க இந்தியர்கள் சமயம் பார்த்துக் காத்திருந்தனர். இந்தியா முழுவதும் ஒரு ரகசிய இயக்கம் உருவாகிக் கொண்டிருந்தது. வெளியுலகம் இப்படிக் கொதித்துக் கொண்டிருக்க, நானாசாஹேப் வசித்து வந்த பிரம்மவர்த்தத்தில் வேறொரு போர்த்திட்டம் தயாராகிக் கொண்டிருந்தது. லண்டனிலும் கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு திட்டம் தயாராகி வந்தது.

நானா சாஹேப் நாட்டின் நிலைமையை நன்கு ஆராய்ந்து பார்த்து இனி வன்முறையாலன்றி இந்த அடிமைத் தனத்தை வேறு முறைகளால் நீக்கமுடியாதென்பதை உணர்ந்தார்.

நானா சாஹேப், டில்லி சக்கரவர்த்தி பகதூர்ஷா, மெளல்வி அகமதுஷா, கான் பகதூர்கான் ஆகிய தலைவர்கள் இதே கருத்தைக் கொண்டிருந்தார்கள். 1855 இறுதியில் நாட்டின் பல பகுதிகளுக்கும் தூதுவர்கள் சென்றார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவர்களது நோக்கம். இந்தியாவின் பல பகுதி மன்னர்களுக்கும் நானா கடிதம் அனுப்பினார். ஒரே நேரத்தில் அன்னியர்களை எதிர்த்து ஒரு புரட்சி இயக்கத்தைத் தோற்றுவிப்பதன் அவசியம் விளக்கப்பட்டிருந்தது.

தில்லி அரசாங்கம் கைநழுவிப் போய், சுல்தான் செங்கோட்டையில் புகலிடம் தேடிக் கொண்டிருந்தார். பழைய பெருமையை மீட்டெடுக்க அவருக்கும் ஆசைதான். இந்தியாவில் மத அடிப்படையிலும் மதபோதனைகள் நடந்து வந்த இடங்களில் ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் மறைவாக ஒரு பெரும் தீ உருவாகும் சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

இப்படி நாலாபுறங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு பெரிய எழுச்சியை, எரிமலையின் குமுறலை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். அப்போது தான் வங்கத்தில் பாரக்பூரில் ஆங்கிலேயர்களின் படைப்பிரிவில் பணிபுரிந்துவந்த ஒரு இந்திய சிப்பாய், மங்கள் பாண்டே தனது முதல் துப்பாக்கி வேட்டினை எழுப்பினான்;  புரட்சித் தீ பற்றிக் கொண்டது.

(கர்ஜனை தொடர்கிறது…)

$$$

2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 1(4)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s