புதிய கோணங்கி

-மகாகவி பாரதி

மகாகவி ஒரு தீர்க்கதரிசி. அவர் தனது அசரீரி போன்ற கவிதையை மிக அழகான கதைக்குள் திணித்து இங்கே முரசறிவித்திருக்கிறார். அந்த முண்டாசுக் கோணங்கி வேறு யாருமல்ல, நமது மகாகவியே தான். இக்கவிதை, பாரதியின் பல்சுவைப் பாடல்களில் முழுமையாக இருக்கிறது...

வேதபுரத்தில் ஒரு புது மாதிரி குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருக்கிறான். உடுக்கைத் தட்டுவதிலே முப்பத்தைந்து தாளபேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களும் காட்டுகிறான். தாள விஷயத்திலே மஹா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணி மூட்டை சுமந்து கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான். தலையிலே சிவப்புத் துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிறான். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு. மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆள் நெட்டை தடியன். காலிலே ஹைதராபாது ஜோடு மாட்டியிருக்கிறான். நேற்றுக் காலையிலே, இவன் நம்முடைய வீதி வழியாக வந்தான். உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வது போலே செய்கிறான், நல்ல கெட்டிக்காரன் அவன் சொன்னான்-

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு 

நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது 
ஜாதிகள் சேருது, சண்டைகள் தொலையுது; 
சொல்லடி, சொல்லடி சக்தி மாகாளீ, 
வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு! 

தரித்திரம் போகுது, செல்வம் வருகுது; 
படிப்பு வளருது பாவம் தொலையுது; 
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் 
போவான்,போவான் ஐயோவென்று போவான். 

வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது 
தொழில் பெருகுது, தொழிலாளி வாழ்வான் 
சரித்திரம் வளருது சூத்திரம் தெரியுது 
யந்திரம் பெருகுது தந்திரம் வளருது 

மந்திர மெல்லாம் வளருது, வளருது! 
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு 
சொல்லடீ, சொல்லடீ, மலையாள பகவதீ 
அந்தரி, வீரி, சண்டிகை சூலி!

இப்படி அவன் சொல்லிக்கொண்டே போவதை நான் மெத்தையிலிருந்து கேட்டேன். இதென்னடா புதுமையாக இருக்கிறதென்று ஆச்சரியத்துடன் அவனை நிற்கச் சொன்னேன். நின்றான். கீழே இறங்கிப்போய், அவனை ஸமீபத்திலே அழைத்து எந்த ஊர் என்று கேட்டேன். சாமி, குடுகுடுக்காரனுக்கு ஊரேது, நாடேது? எங்கேயோ பிறந்தேன், எங்கேயோ வளர்ந்தேன். எங்கெல்லலாமோ சுற்றிக் கொண்டு வருகிறேன் என்றான்.

அப்போது நான் சொன்னேன்:

உன்னைப் பார்த்தால் புதுமையாகத் தெரிகிறது. சாதாரணக் கோணங்கிகளைப் போலில்லை. உன்னுடைய பூர்வோத்தரங்களைக் கூடிய வரையில் ஸவிஸ்தாரமாகச் சொல்லு. உனக்கு நேர்த்தியான சரிகை வேஷ்டி கொடுக்கிறேன் என்றேன். அப்போது குடுகுடுக்காரன் சொல்லுகிறான்: சாமி, நான் பிறந்த இடம் தெரியாது. என்னுடைய தாயார் முகம் தெரியாது. என்னுடைய தகப்பனாருக்கு இதுவே தொழில், அவர் தெற்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். ஒன்பது கம்பளத்தார் என்ற ஜாதி, எனக்குப் பத்து வயதாக இருக்கும்போது, தஞ்சாவூருக்கு என் தகப்பனார் என்னை அழைத்துக் கொண்டு போனார். அங்கே வைசூரி கண்டு செத்துப் போய்விட்டார். பிறகு நான் இதே தொழிலினால் ஜீவனம் செய்து கொண்டு பல தேசங்கள் சுற்றி ஹைதராபாத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது இருபதிருக்கும். அங்கே ஜான்ஸன் என்ற துரை வந்திருந்தார். நல்ல மனுஷ்யன். அவன் ஒரு ‘கம்பெனி ஏஜெண்டு’ இந்தியாவிலிருந்து தாசிகள், நடுவர், கழைக் கூத்தாடிகள், செப்பிடு வித்தைக்காரர், ஜாலக்காரர் முதலிய பல தொழிலாளிகளைச் சம்பளம் கொடுத்துக் கூட்டிக் கொண்டு போய், வெள்ளைக்கார தேசங்களிலே, பல இடங்களில் கூடாரமடித்து வேடிக்கை காண்பிப்பது அந்தக் கம்பெனியாரின் தொழில். விதிவசத்தினால் நான் அந்த ஜான்ஸன்துரை கம்பெனியிலே சேர்ந்தேன். இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய தேசங்களிலே ஸஞ்சாரம் செய்திருக்கிறேன். அமெரிக்காவுக்குப் போயிருக்கிறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்பு சண்டை தொடங்கினபோது, மேற்படி ‘கம்பெனி’ கலைந்து போய் விட்டது. எங்களுக்கெல்லாம் பணம் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பி விட்டார்கள். உயிருள்ளவரை போஜனத்துக்குப் போதும்படியான பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆனாலும், பூர்வீகத் தொழிலைக் கைவிடுவது நியாயமில்லையென்று நினைத்து இங்கு வந்த பின்னும் பலவூர்களில் சுற்றி, இதே தொழில் செய்து வருகிறேன்.

ஐரோப்பா முதலிய தேசங்களில் சுற்றின காலத்தில் மற்றக் கூத்தாடிகளைப் போலே வீண் பொழுது போக்காமல், அவ்விடத்துப் பாஷைகளைக் கொஞ்சம் படித்து வந்தேன். எனக்கு இங்கிலீஷ் நன்றாகத் தெரியும். வேறு சில பாஷைகளும் தெரியும், அனேக புஸ்தகங்கள் வாசித்திருக்கிறேன். இங்கு வந்து பார்க்கையிலே அவ்விடத்து ஜனங்களைக் காட்டிலும் இங்குள்ளவர்கள் பல விஷயங்களிலே குறைவு பட்டிருக்கிறார்கள்.

நம்முடைய பரம்பரைத் தொழிலை வைத்துக் கொண்டே ஊரூராகப் போய் இங்குள்ள ஜனங்களுக்குக் கூடிய வரை நியாயங்கள் சொல்லிக் கொண்டு வரலாமென்று புறப்பட்டிருக்கிறேன். இது தான் என்னுடைய விருத்தாந்தம்‘ என்றான்.

ஒரு ஜரிகை வேஷ்டி எடுத்துக் கொடுக்கப் போனேன்; போன தீபாவளிக்கு வாங்கினது; நல்ல வேஷ்டி.

சாமி, வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டு அவன் மறுபடி உடுக்கை யடித்துக் கொண்டு போய் விட்டான். போகும் போதே சொல்லுகிறான்:

குடுகுடு, குடுகுடு, குடுகுடு, குடுகுடு, 

சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது, 
தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது, 
எட்டு லச்சுமியும் ஏறி வளருது, 
பயந் தொலையுது, பாவந் தொலையுது, 

சாத்திரம் வளருது, சாதி குறையுது, 
நேத்திரம் திறக்குது, நியாயந் தெரியுது, 
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது, 
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது, 

சொல்லடீ சக்தி, மலையாள பகவதி, 
தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது...

என்று சொல்லிக் கொண்டே போனான். அவன் முதுகுப் புறத்தை நோக்கி, தெய்வத்தை நினைத்து, ஒரு கும்பிடு போட்டேன்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s