-சேக்கிழான்

திருவருட்பிரகாச வள்ளலார்
(பிறப்பு: 1823, அக். 5 – முக்தி: 1873, ஜன. 30)
‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய ஆன்மநேய அருளாளர், வடலூர் திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலார். கடும் பஞ்சத்தில் தமிழகம் துயருற்றபோது, அன்னசாலையைத் துவங்கி லட்சக் கணக்கான மக்களின் பசிப்பிணி தீர்த்தவர் வள்ளலார். அவரது பிறந்த தின இருநூற்றாண்டு இன்று (அக். 5) தொடங்குகிறது.
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், சிதம்பரம் அருகிலுள்ள மருதூரில் ராமையா பிள்ளை- சின்னம்மையாருக்கு மகவாக, 1823, அக்டோபர் 5-ஆம் தேதி பிறந்தவர் ராமலிங்கம். உடன்பிறந்தோர் நால்வர். பிறந்த ஆறு மாதத்தில் தந்தை இறக்க, தமையனின் பாதுகாப்பில் வளர்ந்தவர். இவர்களது குடும்பம் சென்னை அருகிலுள்ள பொன்னேரிக்கு குடிபெயர்ந்தது.
அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவாற்றி குடும்பத்தைப் பராமரித்து வந்தார். அதன் காரணமாக இயல்பிலேயே ஆன்மிக நாட்டமும், இறைஞானமும் வாய்க்கப் பெற்றவராக வளர்ந்த ராமலிங்கம், சிறுவயதிலேயே ஆன்மிக உபன்யாசம் செய்து புகழ் பெற்றார். சென்னை கந்தகோட்டத்தில் உறைந்த முருகனை வழிபட்டு வந்த அவர், விரைவிலேயே உருவமற்ற அருட்பெருஞ்சோதியே கடவுள் என்று உணர்ந்தார்.
சன்மார்க்கம் உதயம்:
பிறப்பால் சைவ சமயத்தினராக இருந்தாலும், அனைத்து சமயங்களையும் நேசிக்கும் உள்ளம் கனிந்தவராக ராமலிங்கர் இருந்தார். தனது ஞானப்பெருக்கால் ‘சன்மார்க்கம்’ என்ற புதிய தத்துவத்தை அவர் நிறுவினார். புலால் மறுத்தல், பிறவுயிர்க் கொலை தவிர்த்தல், சாதி- மத- இன- மொழி பேதங்களை மறுத்தல், கடவுளருக்கு உயிர்ப்பலி தடுத்தல் ஆகியவற்றை ஊர்தோறும் சென்று பிரசாரம் செய்தார்.
ராமலிங்கர் சமய உபன்யாசகர் மட்டுமன்று. அவர் ஓர் உரையாசிரியர், கவிஞர், இதழாசிரியர், பதிப்பாளர், தீர்க்கதரிசி, சமூக சீர்திருத்தவாதி, சமூக சேவகர் எனப் பல பரிமாணங்களை உடையவர்.
தனது போதனைகளைப் பரப்ப, ஜீவ காருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் ஆகிய உரைநூல்களை ராமலிங்கர் இயற்றினார். தமிழின் உரைநடைப் போக்கில் இவரது எழுத்துகள் பெரும் மாற்றம் நிகழ்த்தியவையாகக் கருதப்படுகின்றன.
இவர் இயற்றிய ஆன்மிகப் பாடல்களின் திரட்டு ஆறு திருமுறைகளாக ‘திருவருட்பா’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. ஆசிரிய விருத்த நடையில் அமைந்த 5,818 அருட்பாடல்கள் திருவருட்பாவில் இடம்பெற்றுள்ளன.
அமுதசுரபி ஆனவர்:
இவர் வாழ்ந்த காலம் தமிழகத்தில் பெரும் பஞ்சம் வாட்டியது. ஆங்கிலேய ஆட்சியின் தடையற்ற தானிய ஏற்றுமதியாலும், இயற்கை வஞ்சித்ததால் ஏற்பட்ட வறட்சியாலும் லட்சக் கணக்கான மக்கள் பஞ்சத்திற்கு பலியாகினர். அப்போது ஏழை மக்களுக்கு உணவளிக்க வடலூரில் தருமசாலையைத் துவக்கினார் ராமலிங்கர். இதற்காக வடலூர் மக்களிடம் இரந்து பெற்ற 80 காணி நிலத்தில் அணையா அடுப்புடன் கூடிய தருமசாலையை நிறுவினார் ராமலிங்கர்.
1867, மே 23-ஆம் தேதி தருமசாலை துவங்கியது. அன்றுமுதல் இன்றுவரை, அங்கு இடையறாது அன்னதானம் நடைபெற்று வருகிறது. பஞ்சத்தால் உணவின்றித் தவித்த லட்சக் கணக்கான மக்களை பேரழிவிலிருந்து காத்ததால் அவர் ‘வள்ளலார்’ என்ற நாமம் பெற்றார். ஏழைகளுக்கு உணவளிக்க செல்வந்தர்களிடம் கெஞ்சி யாசகம் கேட்கவும் வள்ளலார் தயங்கவில்லை.
ஞானப் பகலவன்:
பசிக்கொடுமை போக்கியதுடன் மக்களின் அஞ்ஞான இருள் போக்கவும் வள்ளலார் முயன்றார். சமய நல்லிணக்கம், தீண்டாமைக்கு எதிர்ப்பு போன்ற முற்போக்குக் கருத்துகளுடன் ஆன்மநேய ஒருமைப்பாட்டை விளக்கி, எவ்வுயிர்க்கும் பேதமில்லாப் பெருநிலையை மனிதர்கள் அடைய வேண்டும் என்று வள்ளலார் போதித்தார்.
இதற்காக, வடலூரில் சத்தியஞான சபையை வள்ளலார் நிறுவினார். அங்கு அருட்பெருஞ்சோதி வழிபாட்டை புதிய வழிமுறையாக்கினார். சோதி வடிவானவன் இறைவன்; அவனை சக மானுடருக்கு சேவை செய்வதன் மூலமாகவும், உள்ளார்ந்த தியானம் மூலமாகவும் உணர முடியும் என்பதே வள்ளாரின் உபதேசம்.
ஐம்பது ஆண்டுகாலம் எறும்பு போல சுறுசுறுப்புடன் மானுட சேவையாற்றிய வள்ளலார், 1873, ஜனவரி 30-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, தைப்பூசத் திருநாளன்று, தான் நிறுவிய சத்தியஞான சபையில் ஏற்றிவைத்த சோதியிலேயே கலந்தார்; தனது பூதஉடல் யாருக்கும் புலப்படாமலேயே மறைந்தார். அதன் காரணமாக நித்ய சிரஞ்சீவியாக வள்ளலார் வழிபடப்படுகிறார்.
இன்றும் ஆண்டுதோறும், தைப்பூச நன்னாளன்று வள்ளலார் அன்பர்கள், வடலூர் அருகே மேட்டுக்குப்பத்தில் லட்சக் கணக்கில் திரண்டு வள்ளலார் விழா கொண்டாடுகின்றனர். அன்று ஒருநாள் மட்டும் சத்தியஞான சபையில் ஏழு திரைகளை நீக்கி சோதி வழிபாடு நடத்தப்படுகிறது.
குறிப்பு: வள்ளலாரின் பிறந்த தின இரு நூற்றாண்டு இன்று துவங்குகிறது. அன்னாரது ஆன்மிக, வாழ்வியல் சிந்தனைகளைப் போற்றுவோம்; வாழ்வில் கடைப்பிடித்து உயர்வோம்!