-மகாகவி பாரதி

13. சுதேசமித்திரன் 11.07.1917
தராசுக்கடையை நெடுநாளாக மூடி வைத்துவிட்டேன். விஷயம் பிறருக்கு ஞாபகத்திலிருக்குமோ, மறந்து போயிருக்குமோ என்ற சந்தேகத்தால் எழுத முடியவில்லை. தராசுக்கடை என்பதென்ன? பத்திரிகை படிப்போர் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். ஞாபகம் இல்லாவிட்டாலும் பெரிதில்லை. அந்தக் கடையை மாற்றிவிட்டேன்; தராசு என்ற மகுடமிட்டு இனிமேல் எழுதப்படும் வினாவிடைகளில் கதைக்கட்டு சுருங்கும்; சொல் நேர்மைப்படும்.
தராசு என்பது தர்க்க சித்தாந்தம். ஒரு கட்சி சொல்லி அதற்கு ப்ரதி கட்சி சொல்லி அங்கு தீர்ப்புக் காணுவதே தராசின் நோக்கம்.
என்னுடைய சிநேகிதர் வேணு முதலியார் என்றொருவர் உண்டு. அவர் வைஷ்ணவர். அவர் வாயினால் பேசுவதே கிடையாது. ஆஹாரவ்யவஹாரங்கள் எல்லாம் குறிகளால் நடத்திவருகிறார். அவர் தமிழில் ஒரு வியாசம் “ஊமைப் பேச்சு” என்ற மகுடத்துடன் எழுதி வெளியிட்டிருக்கிறார். ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு அந்த நூல் அச்சிடப்பட்டது. சமீபத்தில் நான் அவரிடம் விசாரணை செய்தபோது ஒரு பிரதிகூட மிச்சம் இல்லை என்று சொன்னார்.
அந்தப் புஸ்தகத்தின் கருத்து எப்படி என்றால்:-
ஒரு மனிதன் தனது மனக்கருத்தை வெளிப்படச் சொல்ல வேண்டும் என்றால், அதற்கு பாஷை அவசியம் இல்லை. பாஷை அவசியம் என்று சாதாரண ஜனங்கள் நினைக்கிறார்கள். அது பிழை.
பாஷையானது மனதின் இன்றியமையாத கருவி அன்று. வண்டி ஓடும்போது சக்கரம் கீச்சென்று கத்துவது போல், மனம் சலிக்கும் போது நாக்கு தன் வசம் இன்றிப் படைத்துக் கொள்கிறது.
பலவேறு நாடுகளில் பல வேறு பாஷையாக ஏற்பபட காரணம் என்னவென்றால், அது கால தேசவர்த்தமானங்களுக்கும் ஜனங்களுக்கும் உள்ள தொடர்களின் வேற்றுமையாலே ஏற்படுகிறது.
பட்சிகளின் மனக்கிளர்ச்சிக்குத் தக்கபடி இயற்கையில் அவற்றின் வாய்க்கருவி கூவுகின்றது: மிருகங்களிலும் அங்ஙனமே காண்கிறோம். அவையெல்லாம் ஒரு பாஷை பேச வேண்டும் என்று கற்பிதம் பண்ணிக் கொண்டு இலக்கணம் போட்டுப் பேசவில்லை. பசி வந்தால் குஞ்சு இன்ன வகை கத்தும் என்ற நியதி இருக்கிறது. அதைத் தாய் அறிந்து கொள்ளுகிறது. நாக்கே இல்லாவிட்டாலும் மனிதர் பரஸ்பரம் சம்பாஷணை அதாவது வ்யாபார சம்பந்தங்கள் நடத்திக் கொள்ளலாம். பேசத் தெரியாத ஜந்துக்கள் எத்தனையோ கூட்டம் போட்டுக் குடித்தனம் பண்ணி வருகின்றன. மனிதருக்குள்ளே ஊமையின் கருத்தை அவன் எப்படியேனும் பிறருக்குத் தெரியும்படி செய்துவிடுகிறான்.
இங்ஙனம் பலவித நியாயங்கள் காட்டி வேணு முதலியார் தமது நூலில் மனிதனுக்கு பாஷையே மிகை என்று ஸ்தாபனம் செய்திருக்கிறார். ஆனால் மேற்படி விதியை அவர் தமது நடையில் பழக இல்லை. அவர் எப்போதும் சளசள என்று வாயினால் பேசாவிட்டாலும் எழுதிக் குவிக்கிறார். எழுத்து பாஷையின் குறிதானே, வேணு முதலியாரே? நீர் பாஷையே மிகை என்று சொல்லிவிட்டு ஓயாமல் எழுதி எழுதிக் கொட்டுகிறீரே? என்று அவரிடத்தில் கேட்டால், அவர் பேச்சே துன்பம்; எழுத்து சுகம் என்று எழுதிக் காட்டுகிறார். இன்னும் ஒரு வேடிக்கை; ‘வாயினால் பேசக் கூடாது’ என்று விரதம் வைத்துக் கொண்டு வேணு முதலியார் பாட்டுப் பாடுவதில் சலிப்பது கிடையாது. இவரும் நமது வேதாந்த சிரோமணி ராமராயர் என்ற மித்திரரும் சிலதினங்களின் முன்பு (சந்திர கிரஹணம் பிடித்த தினத்தின் மாலையில்) என்னைக் கடற்கரையில் பார்த்தார்கள்.
“தராசுக்கடை கட்டியாய் விட்டது போல் இருக்கிறதே?” என்று ராமராயர் சொன்னார். “இங்கே செய்வீர். இன்னே செய்வீர்” என்று வேணு முதலியார் காம்போதி ராகத்தில் பாடினார். “தராசுக் கடையை இங்கே இப்போது திறக்க வேண்டும்” என்ற கருத்துடன் வேணு முதலி பாடுகிறார்” என்று ராமராயர் வ்யாக்யானம் பண்ணினார்.
“திறந்தோம்” என்றேன்.
ராமராயர் சொல்லுகிறார்:- “நான் ஒரு கட்சி சொல்லுவேன். எதிர்க்கட்சியை வேணு முதலியார் பாட்டிலே பாடிக் காட்ட வேண்டும். காளிதாசர் தீர்ப்புச் சொல்ல வேண்டும். இதுதான் தராசுக்கடை” என்றார்.
“சம்மதம்” என்றேன். வேணு முதலியாரும் தலையை அசைத்தார்.
ராமராயர் சொல்லுகிறார்:- “அனிபெஸன்ட் அம்மை ‘தியாஸபி’ நடத்தினதெல்லாம் ஸ்வராஜ்ய வேலைக்கு அடிப்படையென்று நம்புகிறேன்.
வேணு முதலியார் பாடுகிறார்:-
“நந்தவனத்திலோ ராண்டி; அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி; அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.”
ராமராயர்:- “அன்ய ஜாதியிலே பிறந்த போதிலும் நான் அனிபெஸன்டை ஹிந்துவாகவே பாவிக்கிறேன்.”
வேணு முதலியார்:-
“தன்னைத்தான் ஆளவேண்டும் தன்னைத்தான் அறியவேண்டும் தன்னைத்தான் காக்கவேண்டும் தன்னைத்தான் உயர்த்த வேண்டும்.”
ராமராயர்:- ‘ஸ்வராஜ்யம் என்பது விபரீதம் அன்று. அதை ஆங்கிலர் கொண்டாடுவது ஆச்சர்யமில்லை. ஆங்கில ஸ்திரீகளும் புருஷர்களும் நம்மிடம் நேசம் காட்டும்போது நாம் சந்தேகப்படுவது நியாயமில்லை. ஆங்கிலேயர்களில் நல்லவர்களே இருக்கக் கூடாதா? எல்லாரும் மனித ஜாதிதானே? ஹிந்துக்களுக்கு ஸ்வராஜ்யம் உடன் பிறந்த உரிமை என்பதை ஒப்புக் கொள்ளும் பிறரை நாம் மித்திரராகவே கொள்ள வேண்டும். இங்கிலாந்திலுள்ள ராஜ வம்சத்தாருக்கு நாம் ஸ்வராஜ்யம் பெறுவதனாலே எவ்விதமான நஷ்டமும் கிடையாது. பொது ஜனங்களுக்கும் அப்படியே. பார்லிமெண்டாருக்கும் அப்படியே. நம்முடைய உபத்ரவம் இல்லாமலிருந்தால் அவர்கள் உள்நாட்டு விஷயங்களை அதிக சிரத்தையுடன்கவனிக்க இடம் உண்டாகும். சிற்சில வியாபாரிகளுக்கும் சில உத்தியோகஸ்தர்களுக்கும் நாம் ஸ்வராஜ்யம் செலுத்துவதனாலே வரும்படி குறையும். ஆதலால் இந்த வியாபாரிகளின் கூட்டத்தையும் உத்யோகக் கூட்டத்தையும் சேராத ஆங்கிலேயர்களுக்கு நம்மிடம் அபிமானம் ஏற்படுதல் அசாத்யமன்று. அது நம்பத் தக்கதாகும் என்றார்.
வேணு முதலியார் பாடுகிறார்:-
நல்ல விளக்கிருந்தாலும் கண் வேண்டும், பெண்ணே; நாலு துணையிருந்தாலும் சுய புத்தி வேண்டும்; வல்லவர்க்கு மித்திரர்கள் பலருண்டு, பெண்ணே; வலிமையிலார் தமக்குலகில் துணேயேது, பெண்ணே?
ராமராயர் சொல்லுகிறார்:- அதிகாரிகள் அனிபெஸன்ட் சொல்வதைத் தடுக்க முடியாது. லோகத்தின் அபவாதத்துக்கு பயப்படுவார்கள். அனிபெஸன்ட் சீக்கிரம் விடுதலை பெறுவாள். அவளைப் பிடித்து வைத்ததனாலே இப்போது உலகமெங்கும் இந்தியாவின் நிலைமை தெரியக் காரணம் ஏற்படும். ஆங்கில ராஜாங்கத்துக்கு விரோதமான ராஜத்துரோகம் செய்கிறாள் என்ற வார்த்தையை அனிபெஸன்ட் விஷயத்தில் எவனும் சொல்லத் துணியமாட்டான். ஸ்வராஜ்யம் கேட்பது ராஜத்துரோகம் இல்லை’ என்பதை இங்கிலாந்து ஜனங்களும் ராஜாவும் தெரிந்து கொள்ளுவதற்கு அனி பெஸன்ட் செய்த காரியம் உதவியாயிற்று.
வேணு முதலியார் பாடுகிறார்:-
சொல்லால் முழக்கிலோ சுகமில்லை மவுனியாய்ச் சும்மா இருக்க அருள்வாய், சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக வாரியே.”
அப்போது ராமராயர் என்னை நோக்கி, “காளிதாசரே, உம்முடைய தீர்ப்பென்ன? தராசின் தீர்ப்பைச் சொல்லும்” என்று கேட்டார்.
அதற்கு நான்
"நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்ல தன்றே மறப்பது நன்று." "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு." "தோன்றிற் புகழொடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று." "வேண்டிய வேண்டியாங் கெய்தலான், செய்தவம் ஈண்டு முயலப் படும்."
என்ற நாலு குறளையும் சொன்னேன்.
“தராசின் கருத்தை நீர் நேரே சொல்லாதபடி, வேணு முதலியைப் போலே பாட்டில் புகுந்த காரணம் என்ன?” ராமராயர் கேட்டார்.
“தராசு ராஜாங்க விஷயத்தை கவனியாது. சண்டை முடிகிறவரையிலும் ராஜாங்க விஷயமான வார்த்தை சொல்லுவதிலே தராசுக்கு அதிக ருசி ஏற்படாது. சண்டை பெரிது; நம்முடைய கடை சாதாரணம்; ராஜாங்க விசாரணைகளோ மிகவும் கடிமை. ஆதலால் அனிபெஸன்டின் ராஜாங்கக் கொள்கையை நாம் நிர்ணயிக்க இடமில்லாவிடினும், அவள் சரியான ஹிந்து ஆதலால் நம்முடைய சகோதரி என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஹிந்து மதத்தை அவள் போற்றுகிறாள். அதனால் அவளுடைய ஜன்மம் கடைத்தேறும். வேதம் என்று சொன்னால் பாவம் போகும். பகவத் கீதையை நம்புகிறவர்கள் யாராயினும் அவர்கள் நமக்கு சகோதரரே. ‘தியாசபி,’ ‘ஹோம் ரூல்’ இரண்டுக்கும் சம்பந்தமில்லை; அது வேறு, இது வேறு. ஹிந்துக்கள் அனிபெஸண்டுக்கு நன்றி கூறவேண்டும். தமக்குத் தாமே உதவி செய்து கொள்ள வேண்டும்.”
- சுதேசமித்திரன் (11.07.1917)
$$$