-கவியரசு கண்ணதாசன்

.
அறிமுகம்…
ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக எஸ்.பி. சௌத்ரியாக, ‘தங்கப் பதக்கம்’ திரைப்படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார் சிவாஜி கணேசன். படத்தை இயக்கிய மாதவன், திரைக்கதை வசனம் எழுதிய மகேந்திரன், இசை அமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் தொழில்பக்தியையும் எடுத்துக்காட்டிய திரைப்படம் அது.
காவல் பணியில் நேர்மையாக இருந்த சௌத்ரியின் கண்டிப்பு பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடும் மகன் பிற்பாடு இளம் குற்றவாளியாகி விடுகிறான். அவன் வீடு திரும்புகையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் திரைக்கதை. தந்தையின் கண்டிப்புக்கும் மகனின் வீம்புக்கும் இடையிலான தாயின் பாசப் போராட்டத்தை கே.ஆர்.விஜயா அற்புதமாகக் காட்டி இருப்பார். “ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்” என்பது போன்ற நம்ப இயலாத, முட்டாள்தனமான நாயக வசனம் பேசாத காவல் துறை அதிகாரியாக சிவாஜி இப்படத்தில் மிரட்டி இருப்பார். அதனால் தான் இப்படம் இன்றும் முன்னுதாரணமாகப் பேசப்படுகிறது.
உறவுகளின் சிக்கலில் சின்னாபின்னமாகிறது சௌத்ரியின் குடும்பம். இறுதியில் மனம் திருந்தாமல் தேசத்துரோக்க் குற்றத்தில் ஈடுபடும் தனது மகனை தானே சுட்டுக் கொல்கிறார் எஸ்.பி. சௌத்ரி. அதற்காக அரசின் தங்கப் பதக்கம் அவருக்கு வழங்கப்படுகிறது. படம் பார்க்கும் நமக்கு கண்களில் நீர் திரையிடுகிறது.
இத் திரைப்படத்தில், தனது மகனின் பிறந்த நாளில் அன்னையும் தந்தையும் பாடும் இனிய பாடல் இது. திரைக்கதையின் ஓட்டத்தை உணர்ந்து, விதியின் பாதையை பூடகமாகக் கூறிவரும் பாடலும் கூட. அன்னையும் தந்தையும் எத்துணை பாசத்துடன் தனது மகன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கனவாகக் காண்கிறார்கள் என்பது இப்பாடலில் காட்டப்படும்போதே, பின்னாளில் நிகழ உள்ள அபத்தமான திருப்பங்கள் நமக்குப் புலப்படத் துவங்கும். கவியரசு கண்ணதாசனின் இனிய திரைப்பாடல்களுள் ஒன்று இது.
$$$
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்…
அன்பு மணி வழங்கும் சுரங்கம், வாழ்க வாழ்க!
அன்னை:
எங்கள் வீடு கோகுலம்!
என் மகன் தான் கண்ணனாம்!
தந்தை வாசுதேவனோ தங்கமான மன்னனாம் (2)
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்…
அன்பு மணி வழங்கும் சுரங்கம், வாழ்க வாழ்க!
தந்தை:
அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் கொண்டது (2)
பிள்ளைச் செல்வம் என்னும் வண்ணம்
கண்ணன் பிறந்தான்!
நன்றி என்னும் குணம் கொண்டது,
நன்மை செய்யும் மனம் கொண்டது,
எங்கள் இல்லம் என்னும் பேரை
கண்ணன் வளர்ப்பான்!
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்…
அன்பு மணி வழங்கும் சுரங்கம், வாழ்க வாழ்க!
அன்னை:
வெள்ளம் போல ஓடுவான்,
வெண் மணல் மேல் ஆடுவான்!
கானம் கோடி பாடுவான்,
கண்ணன் என்னைத் தேடுவான்!
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்!
தந்தை:
மாயம் செய்யும் மகன் வந்தது,
ஆயர்பாடி பயம் கொண்டது!
அந்தப் பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்
இந்தப் பிள்ளை நலம் கொள்ளவும்
என்னைப் பார்த்து எனை வெல்லவும்
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து
நான் வளர்ப்பேன்!
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்…
அன்பு மணி வழங்கும் சுரங்கம், வாழ்க வாழ்க!
அன்னை:
கோலம் கொண்ட பாலனே,
கோவில் கொண்ட தெய்வமாம்!
தாயில் பிள்ளைப் பாசமே
தட்டில் வைத்த தீபமாம்!
தந்தை:
பாசம் என்று எதைச் சொல்வது?
பக்தி என்று எதைச் சொல்வது?
அன்னை, தந்தை காட்டும் நல்ல
சொந்தம் அல்லவா?
பிள்ளை என்னும் துணை வந்தது,
உள்ளம் எங்கும் இடம் கொண்டது!
இல்லம் கண்டு தெய்வம் தந்த
செல்வம் அல்லவா?
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம், வாழ்க வாழ்க!
திரைப்படம்: தங்கப் பதக்கம் (1974) இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடகர்கள்: டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா.