-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
53. மயிலும் மகாதேவனும் (சிலேடை)
.
ஆகாஸேன சி’கி ஸமஸ்தபணினாம் நேத்ரா கலாபீ நதா-
sனுக்ராஹி ப்ரணவோபதேச’ நினதை: கேகீதி யோ கீயதே/
ச்’யாமாம் சை’லஸமுத்பவாம் கனருசிம் த்ருஷ்ட்வா நடந்தம் முதா
வேதாந்தோபவனே விஹார-ரஸிகம் தம் நீலகண்டம் பஜே//
.
வான்குடுமி கண்ணாயிரம் போர்வை மேலுடுத்தி
அண்டியோர் அருள்சுரபி அடிநாதம் முழங்கி
மலையுதித்த மேகத்தின் காந்தத்தால் நடனமாடி
மறைவனம் விளையாடும் நீலகண்டம் நினைமனமே!
.
மல்லிகையையும் அதனை விரும்புகின்ற வண்டையும் அடுத்தடுத்து சிவபெருமானுக்கு சிலேடையாக அமைத்துப் பாடிய ஸ்ரீஆதிசங்கரர், அடுத்தபடியாக மேகத்தையும் அதனை விரும்புகின்ற மயிலையும் சிவபெருமானோடு இணைத்து இரட்டுற மொழிந்துள்ளார்.
. இதற்கு முந்தைய பாடலில் மேகத்தைப் பார்த்தோம். இப்போது மயிலுக்கான சிலேடை: மயிலுக்கு வானத்தை நோக்கி உயர்ந்து நிற்கும் குடுமி போன்ற கொண்டை உள்ளது. அது மேலே விரித்தாடும் தோகை (கலாபம்), ஆயிரம் கண்களையுடைய போர்வைபோல அழகுடன் காட்சி தருகிறது. தன்னை அண்டி நிற்கின்ற உழவர்களுக்கு தீய ஜந்துக்களில் இருந்து பாதுகாப்பைத் தருகிறது மயில். அது அகவும்போது (குரல் எழுப்பும்போது) அடி வயிற்றில் இருந்து சப்தம் எழுவதுபோல் மிகுந்த ஓசையுடன் முழங்குகிறது. மலை மீது தோன்றுகின்ற மேகம் மயிலைக் கவர்ந்திழுப்பதால், அது தனது தோகையை விரித்து ஆனந்த நடனமாடுகிறது. பொதுவாக மக்களின் கண்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கின்ற வனப்பகுதிகளிலே ஆனந்தத்துடன் விளையாடுகிறது. மயிலின் கழுத்து நீல நிறத்துடன் காணப்படுகிறது. அப்படிப்பட்ட மயிலை, மனமே நீ நினைப்பாயாக!
இப்போது, சிவபெருமான் எப்படி மயில்போல ஆகிறார் என்பதைக் காண்போம்: சிவபெருமான் ஆகாசத்தையை தமது தலைமுடியாகக் கொண்டவர். ஆயிரம் கண்களையுடைய ஆதிசேஷனையை அவர் போர்வைபோல் போர்த்திக் கொண்டிருக்கிறார். அண்டி நிற்கும் அடியவர்களுக்கு எல்லையில்லாத அருளைச் சுரக்கிறார் மகேஸ்வரன். பிரபஞ்சத்தின் அடிநாதமாகிய பிரணவத்தை அவர் உபதேசிக்கிறார். அந்த அடிநாதமும் அந்தப் பரம்பொருளின் தத்துவத்தையே முழங்குகிறது. மலையிலே உதித்த பார்வதி ஆகிய மேகத்தின் மீது ஆசைப்பட்டு ஆனந்த நடனமாடுகிறார் சிவபெருமான். மறை எனப்படும் வேத, வேதாந்த வனங்களிலே விளையாடுகிறார் எம்பெருமான். அப்பேர்ப்பட்ட நீலநிறக் கழுத்தை உடைய நீலகண்டனாகிய மயிலை எனது மனமே நினைப்பாயாக!
$$$