தேசிய ஆன்மா!

-ஹெச்.வி.சேஷாத்ரி

தனிநபர்களைப் போலவே தேசங்களும் தங்களுடைய உள்ளார்ந்த ஆற்றல்களை முழுமையாக வெளிப்படுத்தி மலரும்போது தான் தனது இருப்பில் அல்லது வாழ்க்கையில் நிறைவைக் காண்கின்றன. இது எப்போது சாத்தியம் என்றால், அவை தனது உத்வேகத்தின் ஊற்றுக்களை, தனது வலிமையை, தனது வாழ்வின் லட்சியத்தை உணர்வுபூர்வமான ஆர்வத்துடன் புரிந்துகொள்ளும்போது மட்டுமே.

தனது வாழ்வின் லட்சியத்தைக் குறித்த விழிப்புணர்வு இல்லாதபோது, தனது அடையாளம் குறித்த விழிப்புணர்வு இல்லாதபோது, தேசத்திற்கு எதிரான சக்திகள் நாட்டின் உள்ளும் புறமும் இருந்து ஏற்படுத்தும் ஒவ்வொரு தள்ளுமுள்ளுக்கும் உள்பட்டு தேசம் தனது பாதையிலிருந்து விலகி விலகிச் செல்வது வெளிப்படையானதே.

தன் அடையாளம் குறித்த சிக்கல்:

சுவாமி விவேகானந்தர் நம் தேசஅரங்கிற்கு வந்தபோது மரணத்தை ஒத்த சிக்கல் ஒன்று, தேசத்தின் மனதைச் சூழ்ந்திருந்தது. அது, தேசத்தின் சுயஅடையாளம் மற்றும் தேசிய வாழ்வின் நோக்கம் குறித்த குழப்பம். இது தான் பிரச்னை.

ஆங்கிலேயர்கள் தங்கள் யுக்தியைத் திட்டமிட்டுத் தீட்டி இருந்தனர். அதன்படி, பாரதத்தின் புதல்வர்கள்ஆன்மா அற்றவர்களாக, தேசிய உணர்வு அற்றவர்களாக ஆகி,  பாரதத் தாயின் கைகளையும் கால்களையும் தாங்களாகவே பிணைத்து ஆங்கிலேயர்களின் காலடியில் போட்டுவிடுவார்கள்;  பல கொடூரமான படையெடுப்புகளை முறியடித்த, அண்மையில், 700 ஆண்டு கால இஸ்லாமிய ரத்தக்கறை படிந்த படையெடுப்பைப் பணியச் செய்த பிரமாண்டமான பாரத தேசத்தை தங்களைப் போன்ற சிறிய நாடு ஆயுத பலத்தால் கட்டியாள முடியாது என்பதை ஆங்கிலேயர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

இந்திய மக்கள் தங்கள் கடந்த காலசாதனைகள் குறித்த பெருமித உணர்வை, மனித வாழ்வின் உயர்ந்த பண்புகளை முழுமையாக தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க எல்லாவகையிலும் முயல்வதை, லட்சியத்தை நிறைவேற்ற முழுவாழ்வையும் தியாகம் செய்வதைத் தகர்த்து, அவர்கள் தங்களுக்கு மனோரீதியாக அடிமைப்பட்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்பதை ஆங்கிலேயர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

இந்த நோக்கத்துடன் ஆங்கிலேயர்கள் திட்டமிட்டரீதியில் பல்முனைத் தாக்குதல்களை நடத்தினர். நம் தர்மத்தைமுற்றிலும் மூடநம்பிக்கைகள் கொண்டது, காட்டுமிராண்டிப் பழக்க வழக்கங்களைக் கொண்டது, உருப்படியாக ஏதும் அற்றது, ஆன்மிக அல்லது தார்மிக சாரம் அற்றது என்று கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் தாக்கினர். (இதுபோன்ற கருத்துக்களைக் கொண்ட நூல் ஒன்றை மேயோ என்ற அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரி எழுதியிருந்தார். அந்நூலை காந்திஜி ‘பாதாளச் சாக்கடை ஆய்வாளரின் அறிக்கை’என்று விவரித்திருந்தார்.)

ஆங்கிலேய எஜமானர்களுக்கு விசுவாசமாக நிர்வாகத்தை நடத்தும் ‘கறுப்புத் தோல் ஆங்கிலேயர்களை’ உருவாக்கும் அவமானகரமான மெக்காலே கல்வித் திட்டத்தின் மூலம் நமது பாரம்பரிய, உயர்ந்த கல்வி முறையைத் தாக்கினர். (நம் கல்வி முறையை காந்திஜி  ‘அழகிய மரம்’ என்று குறிப்பிட்டுள்ளார்).

ஆதிக்க சக்தியான ஆங்கிலேயர்கள் கையிலேயே அனைத்து அதிகாரங்களும் குவியும்படியாக மைய ஆட்சி அதிகார அமைப்பை ஏற்படுத்தியதன் மூலம், இஸ்லாமிய ஆட்சி அதிர்வுகளையும் மீறி பாதிக்கப்படாமல் நிலைபெற்று காலத்தை வென்று தொடரும் நமது பஞ்சாயத்து சுயஆட்சி முறையைத் தகர்த்தனர்.

நமது பாரம்பரிய கலை, கைத்தொழில்களை அழித்து, சுயசார்புடையதாக இருந்த நமது பொருளாதாரத்தைத் தகர்த்து, பிரிட்டிஷ் தொழில் மற்றும் வர்த்தகத்தைச் சார்ந்து வாழும் கூலிப்படையாக நம் மக்களைத் தாழ்த்தினர்.

இறுதியாக, ‘பாரதம் என்றொரு தேசமே இருந்ததில்லை.தொடர்ந்து படையெடுத்து இம்மண்ணை வென்று ஆட்சி செய்தவர்களுக்கே இம்மண்ணின் மீது உரிமை இருந்தது. எனவே பிரிட்டிஷார் பாரதத்தை அடிமைப்படுத்தியதாக கூறுவது தவறு. ஏனெனில் வரலாற்று ரீதியாக பாரதம் என்ற தேசமே இதற்கு முன்பு இருந்ததில்லை. பிரிட்டிஷாரின் மேன்மையானஆட்சியின் போது தான் பாரதம் என்ற புதிய தேசமே பிறந்தது’ என்ற திட்டமிட்ட பொய்யான தொடர்ப் பிரசாரத்தால் நம்முடைய தேசம் என்பதன் கருத்தியல் சாரத்தையே மறுத்துத் தகர்த்தனர்.

மேற்சொன்ன எல்லா வகையான தாக்குதலிலும் ஹிந்துக்களே பிரிட்டிஷாரின் முக்கியக் குறியாக இருந்தனர். ஏனெனில், ஹிந்து தான் பாரதத்தின் தேசிய சமுதாயம். ஹிந்து தன் தேசிய அந்தஸ்தை உணர்ந்து எழுச்சி பெற்றால் அது பாரதத்தில் தங்கள் ஆட்சிக்கு சாவு மணியாகும் என்பதை பிரிட்டிஷார் மிகச் சரியாக அறிந்திருந்தனர்.

தேசிய வாழ்வின் எழுச்சிக் குரல்:

நம் தேசிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டமுன்னோடிகள் பலர். அவர்களில், தேசிய ஆன்மாவைச் சாகடிக்கும் ஆதிக்கச் சக்தியின் யுக்திக்கு மிக பலமான எதிரடி கொடுத்தவரில் சுவாமி விவேகானந்தர் முதலாமவர். கூனிக் குறுகி, தன்னை ஹிந்து என்று கூறிக் கொள்ளவே அவமானப்பட்டு, முரண்டு பிடித்துக்கொண்டிருந்த ஹிந்துவின் இதயத்தில் ‘மனித வாழ்வின்எல்லா அம்சங்களிலும் உயர்ந்த, தனிச்சிறப்பான சாதனைகளைப் படைத்து ஹிந்து தேசம்’ என்ற சரியான பெருமித உணர்வை அவர் ஏற்படுத்தினார்.

அவரது கனல் வார்த்தைகள் சிலவற்றைக் கேட்போம்:

 “நாம் ஹிந்துக்கள்…. ஹிந்து என்ற பெயர் எல்லாவகையிலும் ஒளி பொருந்தியதாக, ஆன்மிக மயமானதாக, போற்றுதலுக்குரியதாக, விளங்கவைப்பது நம்மைச் சார்ந்தே உள்ளது. நம்முடைய செயல்களால் இச்சொல்லே எந்த மொழியிலும் ஏற்றமிகு சொல்லாக விளங்கவைப்போம். ஹிந்துவாகப் பிறந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனால் வெளிப்படையாக சொல்லப் போனால் இந்தப் பெருமிதம் என்னால் வந்ததல்ல, என்முன்னோர்களால் ஏற்பட்டது. கடந்த காலத்தை நான் ஆழ்ந்து கற்கக் கற்க… அந்தப் பெருமித உணர்வு மேலும் அதிகரிக்கிறது. நம்மை உறுதியாக நிரூபிக்க வேண்டிய தைரியமும் வலிமையும் என்னுள் பெருகுகிறது. புழுதியிலிருந்து என்னை மேலெழச் செய்கிறது. நம்முடைய முன்னோர்களால் நமக்களிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய திட்டத்தைச் செயல்படுத்த என்னைத் தூண்டுகிறது.”

ஹிந்துவின் மனதில் தீவிரமான சுயமரியாதை உணர்வை ஏற்படுத்துவதுடன் அவர் நின்றுவிடவில்லை. தேசம் என்ற வகையில் அதன் தொன்மையான லட்சியத்தை நோக்கி சாகாவுணர்வுடன் பயணிக்கத்தூண்டினார். “ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு தலைவிதி உள்ளது. வெளிப்படுத்த ஒரு செய்தி உள்ளது. செய்ய வேண்டிய கடமை ஒன்றுள்ளது. எனவே, துவக்கம் முதலே, நம்மினத்திற்கு உள்ள ஆன்மிகக் கடமையைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று சுவாமி விவேகானந்தர் அறிவித்துள்ளார்.

இதை நம்முடைய ‘தேசத்தின் ஆன்மா’ என்று அழைத்த சுவாமிஜி, “ஹிந்து தேசத்தை இதுவரை யாராலும் அழிக்க முடியவில்லை. எனவே அது, பற்பல இன்னல்களையும், துன்பங்களையும் மீறி, இன்னமும் உயிரோடு இருக்கின்றது” என்று உறுதிபடக் கூறுகிறார்.

‘பாரதத்தில் தேசியமே இல்லை. அதிலும் குறிப்பாக ஹிந்து தேசியமே இல்லை’ என்ற பொய்யை சுவாமி விவேகானந்தர் உடைத்தெறிய ஆரம்பித்தார். ஒரே ஆன்மத் துடிப்பு கொண்ட மக்களால் உருவாக்கப்பட்டதே தேசியம் என்று கூறிய அவர், இதன்மூலம் தேசம், தேசியம் என்ற கருத்தோட்டத்தின் மையத்தையே தொட்டுக் காட்டினார். பொதுவான வரலாறு, புவியியல், மொழிகளிடையே ஒற்றுமை, பரஸ்பர பாசவுணர்வு, எதிர்காலம் குறித்த ஒரே நாட்டம் ஆகியவை தேசத்தின் ஆன்மிக அடையாளத்தை வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அலசி ஆராய்ந்து பார்த்தால் தேசத்தின் ஒற்றுமை என்பது அதன் உளவியல் என்று அவர் கூறியுள்ளார்.

பிரபல நவீன இந்திய வரலாற்றாளரான டாக்டர் ஆர்.சி.மஜும்தார், இந்திய தேசியத்திற்கு ஆன்மிக அடித்தளத்தைத் தந்தவர் சுவாமி விவேகானந்தர் என்று கூறுகிறார். “சுவாமி விவேகானந்தரின் வேதாந்தப் பாடங்களும் பகவத் கீதையும் பல பலிதானிகளின் தேசியவாதிகளின் வாழ்க்கையிலும் செயல்களிலும் ஊடுருவி இருந்தது. பல கடினமான துன்பங்களை ஏற்றுக் கொள்ளவும், மகிழ்ச்சியுடன் தியாகங்களைச் செய்யவும், அச்சமின்றி மரணத்தைத் தழுவவும் அவர்களுக்கு ஊக்கம் அளித்தது சுவாமி விவேகானந்தரின் போதனைகளே” என்கிறார் டாக்டர் மஜும்தார்.

“சுவாமி விவேகானந்தர் ஹிந்து மதத்தைக் காப்பாற்றினார். இந்தியாவைக் காப்பாற்றினார். அவர் மட்டும் இல்லாவிட்டால் நாம் நம் மதத்தை இழந்திருப்போம். நாம் சுதந்திரம் அடைந்திருக்க மாட்டோம்”என்று கூறியுள்ளார்  ராஜாஜி.

சுவாமி விவேகானந்தர் மட்டுமல்ல, 19, 20ஆம் நூற்றாண்டில் நம் தேச மறுமலர்ச்சிக்கு, எழுச்சிக்குப் பாடுபட்ட அனைத்துத் தலைவர்களும் நம் தேசத்தைப் பற்றிக் குறிப்பிட ‘ஹிந்து’ என்ற சொல்லையும் அதன்ஆன்மிகப் பண்புகளையும் சகஜமாகப் பயன்படுத்தியுள்ளார்கள். உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் சுதந்திர பாரதம் அமையும் என பிபின் சந்திரபால் கனவு கண்டார். சனாதன தர்மத்துடன் ஹிந்து ராஷ்டிரம் எழும் என மகரிஷி அரவிந்தர் அறிவித்தார். சனாதன தர்மத்தின் உயிர்த் துடிப்புள்ள செய்தியைப் பரப்புவதற்காகவே பாரதம் விடுதலை பெறும் என்று அவர் உறுதிபட அறிவித்தார்.

லோகமான்ய பாலகங்காதர திலகரோ ‘தர்ம ராஜ்ஜியம்’ என்றார். காந்திஜிக்கு அது ராம ராஜ்ஜியமாக இருந்தது. அன்னிபெசன்ட் அம்மையார், ‘ஹிந்துயிசம் பாரதத்தின் ஆன்மாவாகவும் உயிர் மூச்சாகவும் தெரிகிறது. ஹிந்துயிசம் இல்லாத பாரதம் பாரதமாகவே இருக்க முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி விவேகானந்தரும் அவருக்குப் பின் வந்து தேசத்தின் போக்கைத் தீர்மானித்த தலைவர்களும் தேசம் பற்றிச் சுட்டிக்காட்டியுள்ள தெளிவான, ஒளிபொருந்திய ஓவியத்தைப் பின்புலமாகக்கொண்டு பார்க்கும் போது, சுதந்திர பாரதம் என்ற கப்பல் அந்த இலக்கை அடைவதில் தட்டுத் தடுமாறுவது ஏன், எப்படி என்பதை இப்போது சுலபமாகக் கண்டுபிடித்து விடமுடியும்.

இன்றுள்ள நம் தேசத் தலைவர்கள், சுவாமி விவேகானந்தருக்கும் அவருக்குப் பின் வந்து தேசத்தைக் கட்டமைத்த தலைவர்களுக்கும் உதட்டளவில் புகழ்பாடிவிட்டு அவர்களுடைய வாழ்க்கைச் செய்தியை காற்றில் பறக்க விட்டனர். எந்த மேற்கத்தியக் கவர்ச்சியில் விழ வேண்டாமென அவர்கள் எச்சரித்தார்களோ, அதே கவர்ச்சியில் ஆழமாக வீழ்ந்துவிட்டனர்.

பண்புள்ள மனிதனை உருவாக்கும் கல்வி:

மிக முக்கியமானது புதிய இளைய பாரதத்தை உருவாக்குவதற்கான கல்வித் திட்டம். கல்வித் திட்டமானது ‘பண்புள்ள மனிதனை’ உருவாக்குவதாக, ‘மனிதனுக்குள்ளே ஏற்கனவே உள்ள பூரணத்தை’ வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும் என சுவாமி விவேகானந்தர் மீண்டும் மீண்டும் அலுக்காமல் வலியுறுத்தி வந்தார்.

“இரும்பினை ஒத்த தசைகளும் எஃகினை ஒத்த நரம்புகளும் வானத்து இடியினை ஒத்த இதயமும்” கொண்ட பிரம்மச்சரியம், அவர் கூறிய கல்வித் திட்டத்தின் உயிர்மூச்சாகும். இதற்கு ஒளிபொருந்திய எடுத்துக்காட்டாக அவரையே நாம் சுட்டிக்காட்டலாம்.

அவரது ஆளுமைக்கு ஏற்பவே இருந்தது அவர் கூறிய கல்வித் திட்டம். “நம் தேசத்தின் ஆன்மிக, லௌகீகக் கல்வி அனைத்தும் நம் கையிலேயே இருக்க வேண்டும். நம் தேசியச் சிந்தனைகளுக்கு ஏற்ப, தேசிய முறைமைகளுக்கு ஏற்பமுழுக் கல்வித் திட்டமும் அமைய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று நாம் காணும் நிலை என்ன? இன்றுள்ள கல்வியின் பிரதான நோக்கம் வேலை தேடுவதாக, போக நாட்டம் ஏற்படுத்துவதாக, மேற்கத்திய வாழ்க்கை முறையை எந்த மாற்றமும் இன்றி அப்படியே பின்பற்றுவதாக, பொருளியல் வாழ்க்கையை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. நம் இளைய சமுதாயத்தினர் நம் தேசத்தின் உயர்ந்த லட்சிய ஒளியை இழந்து விட்டனர். ஆன்மாவை இழந்து அர்த்தமற்ற கலவரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று நம்மைச் சுற்றி எங்கும் காணப்படும் பண்பற்ற தன்மை, ஊழல், பணம் மற்றும் ஆட்சி அதிகாரத்தின் பேய் நடனம், வக்கிரமடைந்துள்ள ஜனநாயக முறைமை, இவை அனைத்தும் சமுதாயத்தின் உயர்நிலையில் உள்ளவர்களிடம் தொடங்கி அடித்தளம் வரை வேர் விட்டுள்ளதற்குக் காரணம் தேசத்தின் இதயத்தில் ஏற்பட்டுள்ள ஆன்மிக வெறுமையே.

இந்தச் சரிவுக்குக் காரணம் என்ன? நம் நாடு குறித்துத் திட்டமிடும் தலைவர்கள் தேசியப் பண்புகளை மறுத்து மேற்கத்திய பண்புகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றத் தொடங்கியதால் (இதுகுறித்து சுவாமிஜி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்) இன்று பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம் நாடு ஏகாதிபத்திய சக்திகளின் பொருளாதார பிடிக்குள் சிக்கியுள்ளது.

சுவாமி விவேகானந்தர் எச்சரித்ததிலிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகிச் சரிந்துள்ளோம்? “நீங்கள் எந்த அந்நிய நாட்டு உதவியையும் சார்ந்து இருக்கக் கூடாது.  தனிநபர்களைப் போலவே தேசமும் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளவேண்டும்”என்று சுவாமிஜி கூறியுள்ளார். இனிமேல் “நவீன இந்தியாவின் புனித வழிபாட்டுத் தலங்களாக பாக்ரா அணையும் சிந்திரி உரத் தொழிற்சாலையும் தான் விளங்கப் போகின்றன” என்ற பண்டித நேருவின் அறிவிப்பு சுவாமிஜியின் கூற்றிலிருந்து நாம் விலகிவிட்டோம் என்பதன் அடையாளம்.

இதற்கு மாறாக, 

“குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயம் போன்ற ஆலயங்கள் உங்களுக்கு மிக அதிகஅளவில் ஞானத்தை வழங்கக் கூடியவை. எந்த நூலைக் காட்டிலும் மிக அதிகமான அளவில் இன வரலாற்றைப்பற்றிய புரிதலை ஏற்படுத்தக் கூடியவை. இதுபோன்ற கோயில்கள் நூற்றுக் கணக்கான படையெடுப்புகளின் தழும்புகளைச் சுமந்திருக்கின்றன.

“நூற்றுக் கணக்கான புனரமைப்பை ஏற்றிருக்கின்றன. தொடர்ந்து அழிக்கப்பட்டு, அந்த அழிவிலிருந்து தொடர்ந்து மீண்டெழுந்து புத்துயிர்ப்பும் வலிமையும் பெற்றுத் திகழ்கின்றது என்பதை கவனியுங்கள். இதுதான் தேசத்தின் உள்ளம். இதுதான் தேசத்தின் மைய உயிரோட்டம். இதைப் பின்பற்றுங்கள், இது உயர்வுக்கு இட்டுச் செல்லும். இதைக் கைவிட்டால் நீங்கள் மரணமடைவீர்கள்”

-என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

சுவாமிஜியின் இந்தக் கூற்றை நாம் நினைவில் வைத்திருந்தோமானால்  அயோத்தியாவில் ஸ்ரீ ராமஜென்மபூமியும்  காசியில் ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோயிலும் இதுபோன்ற இன்னும் பிறவும் சுதந்திர பாரதத்தின் குழந்தைகளுக்கு தேச எழுச்சியின் உயிரூற்றுகளாக இன்று விளங்கி இருக்கும். நமது அரசு நிர்வாகத் திறன் உண்மையிலேயே ஆன்மிக அடிப்படை அற்றுப் போனதே நமது ஜனநாயக நடைமுறைகளின் சரிவுக்கும் காரணமாகும். சுவாமிஜி இதுகுறித்து தொலைநோக்குடன் எச்சரித்திருந்தார்.

சமூக, அரசியல் முன்னேற்றங்களின் தேவையை வலியுறுத்திய போதிலும், நமது அடிப்படை  ‘தேசிய உயிரோட்டமும்’ ‘தேசிய மனமும்’ தேசவாழ்வின் நோக்கமும் ஆன்மிகத்தை மையமாகக் கொண்டிருப்பதை அலட்சியப்படுத்தக் கூடாது என்று சுவாமிஜி மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார்.

ஆனால் இவ்வளவு எச்சரிக்கைகளுக்குப் பிறகும் கூட சுதந்திர பாரதத்தின் ஆட்சியாளர்கள் மேற்கத்திய பாதையைப் பின்பற்றினர். ஆட்சி அதிகாரமும் பணபலமும் இரண்டாம் பட்சமே. தார்மிகமும் ஆன்மிகமுமே தலையாயது என்ற நமது கடந்த கால சமூக நெறியைக் கண்கொண்டு காணக் கூட மறுத்தனர்.

ஆன்மிக சாரமற்றுப் போனதாலே அரசு அதிகாரமும் அதன் உடன்வரும் பொருளாதார, இதர சுகங்களுமே இன்றைய அரசியல்வாதிகளின் உந்து சக்தியாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. தேசத்தின் ஒற்றுமை அவர்கள் கையில் ஒரு விளையாட்டுப் பொருளாகிவிட்டது. ‘தேசிய ஒருமைப்பாடு’, ‘மதச்சார்பின்மை’, ‘சோஷலிசம்’, ‘ஜனநாயகம்’ போன்ற கனத்த வார்த்தைகளை அவர்கள் வெற்று கோஷங்களாக முழங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பிரிவினை சக்திகளும் அந்நிய சக்திகளின் ஊடுருவலும் அவர்களுக்குத் தெரிந்தே, சில நேரங்களில் அவர்களுடைய ஆதரவுடனும் வளர்ந்து உரிமை பெற்று வருகின்றன.

ஆன்மிக அடிப்படையில் ஏழைகளை உயர்த்துவது:

தேசிய மறுமலர்ச்சியில் ஏழைகளை, தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவதற்கு முன்னுரிமை அளித்த முதல் ஆன்மிகப் பேரொளி சுவாமி விவேகானந்தர் தான். “எவனுடைய உள்ளம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்”என்று அவர் கூறியுள்ளார்.

“ஏழை, துயரத்தில் உள்ளவன், போக்கிரி போன்ற வடிவத்தில் உள்ள என் இறைவனை எல்லா ஆன்மாவின் ஒட்டுமொத்தமானவனாக நான் நம்பும் அந்த ஒரே இறைவனை வழிபட, நான் ஆயிரக் கணக்கான இன்னல்களை ஏற்றுக் கொள்ளவும் மீண்டும் மீண்டும் பிறப்பேனாக” என்று சுவாமிஜி பிரார்த்திக்கிறார்.

இதே கருத்தை ஒட்டி அவர் நம்நாட்டு இளைய சமுதாயத்தினருக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

“இறைவன் மீது ஆழ்ந்தநம்பிக்கையும் நல்லொழுக்கமும், ஏழைகள் மீது கொண்ட அன்பாலும் பரிவாலும் சிம்மத்தைப் போன்ற தைரியம் பெற்ற ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக சென்று முக்தியின் செய்தியைப் பரப்புவார்கள். உதவியின் செய்தியைப் பரப்புவார்கள். சமூக எழுச்சியின், சமத்துவத்தின் செய்தியைப் பரப்புவார்கள்.”

‘சமூக எழுச்சி’க்கான ஆன்மிகப் பாதையையும்அவர் அதே முக்கியத்துவத்துடன் வலியுறுத்தி உள்ளார். “அவர்களது சமய உணர்வைப் புண்படுத்தாமல் அவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தை உங்கள் முன்னால் வைத்திருங்கள். அவர்களது உள்ளார்ந்த ஆன்மிக இயல்பை மாற்றாமல், அதேவேளையில் அவர்கள் இழந்துள்ள தனித்தன்மையை மீட்டுக்கொடுக்க உங்களால் முடியுமா?” என்று சுவாமிஜி கூறியுள்ளார்.

இது குறித்த கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது, இன்றைய கோஷங்கள் அவரது அறைகூவலுக்கு நேரெதிர்த் திசையில் இருக்கின்றன. ஜாதி உணர்வைத் தூண்டும் அரசியல்,  ஜாதிகளிடையே போட்டி, மோதல் இவற்றுடன் சமூகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மக்களிடையே ஹிந்து விரோத உணர்வை (குறிப்பாக ஹிந்து ஆன்மிகப் பண்புகளுக்கு), எதிரான வெறுப்புணர்வை சமூக நீதி என்ற பெயரில் வளர்த்தல்ஆகியவை தொடர்ந்து நடக்கின்றன. ஆன்மிகத்தின் நிழல்கூட தன்மீது படாத, அதிகாரவெறி பிடித்த அரசியல்வாதிகள் தங்களுக்கென வாக்குவங்கிகளை உருவாக்க இதைத் தூண்டி வருகின்றனர்.

உயர்ந்த நல்லிணக்கவாதி:

ஹிந்து சமுதாயத்திலுள்ள பல்வேறு ஜாதிகளையும் பிரிவுகளையும் ஒருங்கிணைக்கக் கூடிய மிக சக்தி வாய்ந்த ஆன்மிகவாதியாக சுவாமி விவேகானந்தர் விளங்கினார். “நாம் புத்தரின் அன்புள்ளமும் சங்கரரின் அறிவும் இணையப் பெற்றவர்களாக, தானும் தன் உற்றார் உறவினர்களும்  ஹிந்து சமயத்தைப் பாதுகாக்க ரத்தம் சிந்திய போதிலும் நன்றிகெட்ட தனத்துடன் தன்னைக் கைவிட்டவர்கள் மீது எந்த சுடுசொல்லையும் கூறாத ‘குரு கோவிந்த சிம்மனைப் போன்ற லட்சிய பிடிப்பும்’ இணைந்தவர்களாக விளங்கவேண்டும்” என சுவாமிஜி நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.

“நான் சொல்வதைக் கவனியுங்கள். நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிம்மனாக மாற வேண்டும்” என்று  சுவாமிஜி கூறியுள்ளார்.

சுவாமி விவேகானந்தர் வரையறுத்த சனாதன தர்மமோ எல்லாவற்றையும் உள்ளடக்கியது. “மிக உயர்ந்த ஆன்மிக தளத்திலுள்ள வேதாந்த தத்துவத்திலிருந்து, அதை எதிரொலிக்கும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், சிலை வழிபாடும் அதற்கேயுரிய பல்வேறு புராணக்கதைகள் வரை எல்லாவற்றிற்கும் ஹிந்துவின் மதத்தில் அதற்கே உரிய இடம் உண்டு.”

ஒரு இறைத் தூதர், ஒரு நூல், ஒரே வழிபாட்டு முறை, நம்பிக்கை உள்ளவர்- நம்பிக்கை அற்றவர், நம்பிக்கை உள்ளவர்களுக்கு சொர்க்கம்- இல்லாதவர்களுக்கு கொடும் நரகம் என்ற கருத்தோட்டம் – இதுவே மத நம்பிக்கை என்று மதத்தைக் கீழான நிலைக்கு இட்டுச் செல்வோர் மத்தியில்,  சுவாமி விவேகானந்தர் ஹிந்துத்துவக் கண்ணோட்டத்தில் மதம் என்ற வார்த்தையை தெளிவுபடுத்துகிறார். ஹிந்துக்கள் எதை தர்மம் என்று குறிப்பிடுகிறார்களோ, பொருள் கொள்கிறார்களோஅதற்கு இணையான வார்த்தை ‘மதம்’ அல்ல என்று சுவாமிஜி விளக்குகிறார்.

ஹிந்துயிசம் பற்றி அறிந்துள்ள எல்லா உயர்ந்த அறிஞர்கள் அவர்கள் மேல்நாட்டினராக இருந்தாலும் கீழை தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் – நம்முடைய உச்ச நீதிமன்றமும் கூட – ‘தர்மம்’ என்றால் என்ன? அது ‘மதம்’ என்பதிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? எல்லா காலங்களுக்கும் எல்லா மக்களுக்கும் எல்லா வாழ்க்கை நிலைகளுக்கும் ஏற்புடைய மனிதப்பண்புகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக ‘தர்மம்’விளங்குவதை அழகாக, தெளிவாக விளக்கியுள்ளனர்.

தன்னை மையமாகக் கொண்ட,  தன்னுடைய வழிமட்டுமே சரியென்றும் மற்றவை தவறென்றும் கூறும் கொள்கைகளை அகற்றி அனைத்தையும் அரவணைத்து, ஒத்திசைத்துக் கொண்டு செல்லும் கருத்தை நம் நாட்டுமக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு செய்தால் மட்டுமே தேசிய ஒருமைப்பாடு என்று பேசுகிறார்களே, அது வலிமையான அடித்தளத்தின் மீது உறுதியாக இருக்கும்.

தூங்கிய சிங்கம் விழிப்புறுகிறது:

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் வார்த்தைகளும் அவரது எச்சரிக்கைகளும் ஒருபுறம். மறுபுறமோ அதற்கு நேர்மாறாக நம் தேசத்தில் எல்லா நிலைகளிலும் இன்று நிலவும் கொள்கைகளும் நடவடிக்கைகளும் இருப்பதைக் காண்கிறோம். இதைத் தடுத்து நிறுத்துவதற்கு இதுவே சரியான நேரமல்லவா?

ஹெச்.வி.சேஷாத்ரி

தற்கொலைப் பாதையில் சரிந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையைத் தடுத்து நிறுத்தவும், சரியான பாதையில் செலுத்தவும், ஆன்மாவைத் தட்டி எழுப்பும் சுவாமி விவேகானந்தரின் அழைப்பையும் அவர் காட்டிய வழியையும் உண்மையுடன் பின்பற்றும் நம் அனைவரின் முன்னுள்ள சவால் அல்லவா?

சுவாமி விவேகானந்தர் கூறியபடி நம் தேசிய மனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தேசமறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் பணி மீண்டும் துவங்கியுள்ளது. தேசம் விழிப்புற்று வருகிறது. இன்று அதிகாரத்திலுள்ள சாரமற்ற ஒரு கொள்கையை மறுத்து அது சங்க நாதம் செய்கிறது. அதன் விழிப்பும் எழுச்சியும் இலக்கை – சுவாமி விவேகானந்தர் முன்வைத்த லட்சியத்தை – அடைந்து அதை நிதர்சனம் ஆக்கும் வரை தொடர்ந்து பயணிக்கும் என்பதற்கான அடையாளங்களை வெளிப்படுத்தி வருகின்றது.

இந்தலட்சியத்தை – நம் நாட்டை மட்டுமல்ல-  ஒட்டுமொத்த மனித இனத்தையே மீட்டெடுக்கும் இந்த உயர்ந்த லட்சியத்தை அடைய நம் சக்தியின் ஒவ்வொரு துளியையும் பயன்படுத்துவதை விட நம்மை உயர்த்தக் கூடியது எது?

சுவாமி விவேகானந்தரின் சங்க நாதம் இது:

“இறைவன் கருணையால், ஹிந்துக்களாகிய நாம் மிகவும் முக்கியமான, பொறுப்பான பணியைச் செய்யவேண்டிய நிலையில் உள்ளோம். மேற்கத்திய நாடுகள் ஆன்மிக உதவி கோரி நம்மிடம் வருகின்றன. உலகில் மனித வாழ்வின் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தார்மிகப் பொறுப்பு பாரதத்தின் மக்களுக்கு உள்ளது. அதற்கு அவர்கள் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். நான் உயர்வாக யோசித்துப் பார்ப்பவன்.  ஒட்டுமொத்த உலகையும் ஹிந்து இனம் வெற்றி பெறும் என்பது என்னுடைய எண்ணம்.”

குறிப்பு:

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அகில பாரத பொதுச்செயலாளராக இருந்த உயர்திரு. ஹொ.வெ.சேஷாத்ரி (1926- 2005),  ஹிந்துத்துவ சிந்தனையாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.  ‘தேசப் பிரிவினையின் சோக வரலாறு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

இக்கட்டுரை ஆங்கிலப் பத்திரிகையான ‘பிளிட்ஸ்’ மாத இதழில் (1993 ஆகஸ்டு) வெளியானது.  பிற்பாடு  ஆர்.எஸ்.எஸ். வார இதழ்  ‘விஜயபாரதத்தில்’  வெளியானது. இதை தமிழில் வழங்கி இருப்பவர்,  திருநின்றவூர் கே.ரவிகுமார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s