-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்-1; பகுதி- 3
எரிமலையின் குமுறல் (நானா சாஹேப்)
வீரத்தின் விளைநிலம் மராட்டிய மாநிலம்; சத்ரபதி சிவாஜி ஆண்ட புண்ணிய பூமி. சிவாஜியின் வாரிசுகள் ஆண்டு பின்னர் அவர்களின் அமைச்சர்களான பேஷ்வாக்கள் ஆட்சி புரிந்த இடம். மாதேரன் மலைச் சிகரங்கள் அழகு செய்யும் அலங்கார பூமியில் ஒரு சின்னஞ்சிறு கிராமம், அங்கு மாதவராவ் நாராயண் பட் என்பவர் வாழ்ந்தார். மிக மிகச் சாதாரண குடும்பத்தில் வந்தவர். அவருடைய மனைவி கங்காபாய் என்பவர்.
இவர்கள் செய்த தவப் பயனாய் 1824-இல் இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அடடா! அந்தக் குழந்தை பின்னாளில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று யார் தான் எதிர்பார்த்தார்கள்?
பேஷ்வாக்களின் கடைசி மன்னரான பேஷ்வா பாஜிராவ், ஆங்கில கம்பெனியாரின் தொல்லை தாங்க முடியாமல் ராஜ்யத்தைத் துறந்து கங்கைக் கரையில் அமைந்த பிரம்மவர்த்தம் எனும் கிராமத்தில் போய் வாழ்ந்தார். அப்படி அவர் அரசு துறந்தமைக்காக ஆங்கில கம்பெனியார் அவருக்கு 8 லட்சம் ரூபாய் மானியமாகக் கொடுத்து வந்தனர்.
மராட்டிய மாநிலத்தின் பெருமைக்குரிய மன்னராக இருந்தவர் நாட்டையும், அரச பதவியையும் துறந்து ஒரு கிராமத்துக்குக் குடிபெயர்கிறார் என்றதும் ஏராளமான மராத்திய குடும்பங்களும் அவருடன் குடிபெயர்ந்து அந்த கிராமத்தில் வசிக்கச் சென்றனர். அங்கு வந்து குடியேறியவர்களுக்கெல்லாம் மன்னர் பாஜிராவ் எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார். அப்படி அங்கு வந்து குடியேறியவர்களில் மாதவராவ்- கங்காபாய் குடும்பமும் ஒன்று. இந்தத் தம்பதியரின் குழந்தையும் அங்கு வந்து சேர்ந்தது.
நாளடைவில் மன்னர் பாஜிராவின் அன்பிற்கு உரியவனாக ஆனான் அந்தக் குழந்தை. அவன் தான் புகழ் பெற்ற ‘நானா சாஹேப்’ என்று பின்னாளில் அழைக்கப்பட்டவன். இந்த குழந்தையின்பால் அன்புகொண்ட பாஜிராவ் அவனை 1827 ஜூன் 7-ஆம் தேதி தத்து எடுத்துக் கொண்டார். ஏழையின் வீட்டுச் செல்லப் பையன் மன்னரின் வாரிசாக ஆனான்.
பிரம்மவர்த்த அரண்மனையில் மன்னரின் சுவீகார புத்திரன் நானா சாஹேபுடன் விளையாட்டுத் தோழர்களாக விளங்கிய மற்ற இருவரும் பின்னாளில் முதல் சுதந்திரப் போரில் வீர சாகசங்களைப் புரிந்தவர்கள். அவர்கள் தாந்தியா தோபே, லக்ஷ்மிபாய் ஆகியோர். இந்த பிரம்மவர்த்த அரண்மனை தான் முதல் சுதந்திரப் போர் மூலம் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆணிவேரையே ஆட்டிப் பார்க்க அஸ்திவாரமிட்ட இடம்.
இங்கு வாழ்ந்த பாஜிராவிடம் பணிபுரிய வந்த மராத்தியக் குடும்பங்களில் மாரபந்து- பாகீரதிபாய் தம்பதியரும் அடங்குவர். இவர்களுக்கு 1835-இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் வீரத்தின் சின்னமாக வாழ்ந்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பதைப் பின்னர் பார்க்கப் போகிறோம். அந்தக் குழந்தையின் அழகு சொல்லி முடியாது, அத்தனை அழகு! அதனால்தான் அவளை ‘சபீலி’ அதாவது அழகி என்று எல்லோரும் அழைத்தார்கள். அவள்தான் ‘ராணி லக்ஷ்மி பாய்’ என்று அழைக்கப்பட்ட வீரமங்கை.
மன்னரின் சுவீகாரப் புதல்வன் நானா சாஹேபும், சபீலி எனும் லக்ஷ்மி பாயும் அரண்மனை ஆயுதசாலையில் ஆயுதப் பயிற்சி பெற்றனர். வாட்போரில் நிகரில்லாதவர்களாக விளங்கினர். குதிரை சவாரியில் தலைசிறந்து விளங்கினர். நானாவுக்கு பதினெட்டு வயது ஆனபோது லக்ஷ்மி பாய்க்கு 7 வயது. இருவரும் வளர்ந்து பெரியவர்களான போது லக்ஷ்மி பாயை ஜான்சி மன்னர் கங்காதரராவ் பாவாசாஹிபுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
இந்த நிலையில் பாஜிராவ் காலமானதும், நியாயமாக அவரது சுவீகாரப் புதல்வன் நானாசாஹேப், மன்னரின் சொத்துக்களுக்கும் ராஜமானியத்துக்கும் உரியவனாகிறான். ஆனால் டல்ஹவுசி எனும் ஆங்கிலேயன் இவர்களின் தலைவிதியை மாற்றியமைத்தான்; சுவீகாரம் அங்கீகரிக்கப்படவில்லை, நானாவுக்கு எந்த உரிமையும் கிடையாது, மன்னரின் அத்தனை சொத்துக்களும் கம்பெனிக்கே சொந்தம் என்றான். நானா உரிமைக்காகப் போராடினார், ஆனால் வெறிபிடித்து நாடு பிடிக்கும் கூட்டத்தார் இணங்க மறுத்தனர். இரக்கம் என்பதையே அறியாத அரக்க குணம் படைத்த வெறியர்களாக இருந்தனர் வெள்ளையர்கள்.

(பிறப்பு: 1824, மே 19- 1857-ல் மாயம்)
பேஷ்வா பாஜிராவ் காலமானார் எனும் செய்தி கிடைத்த அடுத்த கணம் பேஷ்வாவுக்குக் கொடுக்கப்பட்ட் வந்த மானியமான ரூபாய் எட்டு லட்சமும் நிறுத்தப்பட்டுவிட்டது. அவருடைய சொத்துக்களுக்கு நானா சாஹேப் உரிமை கொண்டாட முடியாது என்று அனைத்தையும் கம்பெனியார் எடுத்துக் கொண்டுவிட்டனர். தன்னுடைய உரிமையை நிலைநாட்ட நானா பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியாருக்கு விரிவான மனு ஒன்றை எழுதி அனுப்பினார். அதில் அவருக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் குறித்துப் பட்டியலிட்டார்.
தர்ம நியாயங்களை மிகவும் ஆணித்தரமாக எடுத்துக் கூறும் அந்த மனுவை, நானாவின் மிக நெருங்கிய நண்பரும், பன்மொழியில் வல்லவரும், மிகுந்த தேசபக்தி மிக்கவருமான அஸிமுல்லாகான் என்பவரிடம் கொடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பினார். 1857-இல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போரில் இந்த அஸிமுல்லாகானின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த அஸிமுல்லாகான் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். இயற்கையில் தனக்கமைந்த அறிவாற்றல் காரணமாக மிக உயர்ந்த பதவியையும், நானா சாஹேபின் நம்பிக்கையையும் பெற்றவர். அவருக்கு ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் நல்ல பாண்டித்தியம் இருந்தது. எனவே இவரையே நானா இங்கிலாந்துக்குத் தன் சார்பில் அனுப்பி வைத்தார். இங்கிலாந்தில் இந்த அஸிமுல்லாகானின் அழகிய தோற்றத்தையும் கம்பீரத்தையும் பார்த்து மயங்கி இவரிடம் காதல் கொண்ட வெள்ளைக்காரப் பெண்கள் ஏராளம்.
இங்கிலாந்தில் அஸிமுல்லாகானின் பயணம் தோல்வியில் முடிந்தது. இனி என்ன செய்வது எனும் யோசனை இவரை வருத்தியது. லண்டனில் சதாரா-வைச் சேர்ந்த ரங்க பாபுஜி எனும் தேசபக்தரை அஸிமுல்லாகான் அடிக்கடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இவ்விருவரின் ரகசிய ஆலோசனையின்படி இனி கடைசி ஆயுதமாக பிரிட்டிஷாரை எதிர்த்து சாம, பேத, தான முறைகளின் தோல்விக்குப் பிறகு தண்டம் ஒன்றே வழி என முடிவுக்கு வந்தனர்.
இதற்கிடையே நானா சாஹேபுக்கு மராத்திய, சாங்கிலி பிரதேச மன்னரின் மகளோடு திருமணம் நடந்தது. பேஷ்வா பாஜி ராவின் மரணத்துக்குப் பின் நானா அவர் வாழ்ந்த பிரம்மவர்த்தத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார். அங்கு பாய்ந்து வரும் பாகீரதி நதியின் எழிலில் மனம் பறிகொடுத்தார். நானா சாஹேபைப் பற்றி வெள்ளை வரலாற்றாசிரியர்கள் கேவலமாக எழுதியிருந்த போதிலும், உண்மையில் அவர் பெருந்தன்மை மிக்கவர், இரக்க சிந்தையுள்ளவர், சிறந்த கல்விமான், சகலகலாவல்லவர், அரசியல் வானில் தன் உரிமையை நிலைநாட்ட எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தவர்.
தோற்றத்திலும் நானா சாஹேப் கம்பீரமானவர். அடர்ந்த தலைமுடி, பலம் பொருந்திய தோள்கள், ஊடுருவிப் பார்க்கும் கண்கள், துரோகச் செயல்களால் ஆத்திரமடைந்து சிவந்த கண்கள், இடையில் பெருமைமிக்க உடைவாள் (அதன் அப்போதைய பெறுமானம் 3 லட்சம் ரூபாயாம்) இப்படி காட்சியளித்தவர்.
இப்படி நானாவின் அரண்மனை களையிழந்து போன நிலையில் ஒரு துக்க சம்பவமும் நடந்துவிட்டது. 1858-ஆம் ஆண்டில் ராணி லக்ஷ்மி பாயின் கணவர் திடீரென காலமானார். ராணி லக்ஷ்மி பாய் தனது அன்பிற்குரிய குழந்தையாக இருந்த தாமோதரன் எனும் சிறுவனை தத்து எடுத்துக் கொண்டார்.
ஆனால், ஆங்கிலேயர்கள் இந்த சுவீகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜான்சியை வாரிசு இல்லாத ராஜ்யமாகக் கருதி தாங்களே எடுத்துக் கொண்டார்கள். ஆங்கிலேயர்களின் நீசத்தனமான, ஈனத்தனமான பேராசையை அறிந்து ராணி லக்ஷ்மி பாய் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். “என் ஜான்சியை வெள்ளையர்களுக்கு அள்ளிக் கொடுக்க நான் சம்மதியேன். அவர்கள் ஆண்மை உள்ளவர்களாயின் கத்தி முனையில் வெற்றிபெற முயற்சி செய்து பார்க்கட்டும்” என்று கர்ஜனை புரிந்தாள் லக்ஷ்மி பாய்.
இப்படி எரிமலையின் உச்சியில் கோபத்தின் தழலால் வெந்து கொண்டிருந்த இவ்விரு தேசபக்தர்களும் பிறகு பற்றி எரிந்த புரட்சி வேள்வியில் தங்களை எப்படி ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.
$$$
2 thoughts on “ஸ்வதந்திர கர்ஜனை- 1(3)”