எனது முற்றத்தில் – 23

-எஸ்.எஸ்.மகாதேவன்


23. நமக்குள் ஐக்கியம் காண அற்புத சாதனம்  மொழி

கங்கையில் நீராடிவிட்டு கரையேறினார் லாகிரி மகாசயர்.  சரீரப் பிரக்ஞையே இல்லாத ஆத்மா அது. அது ஒரு அத்வைத நிலை. அவரது காலில் காயம்பட்டு ரத்தம் வழிவதைப் பார்த்த ஒரு  அன்பர் பதறிப்போய், “ஸ்வாமி,  உங்க கால்ல அடிபட்டிருக்கு. கட்டுப் போடுங்க”  என்றார்.  லாகிரி மகாசயர் கட்டுப் போட்டுக் கொண்டார்.  ஆனால் மற்ற  காலில்.  அந்த அளவுக்கு  இருந்தது அவருக்கு தன் உடல் பற்றிய உணர்வு. இவர் போன்ற நிலையில் வாழ்ந்த பல மகான்களின் வாழ்க்கைக் குறிப்புகளின் தொகுப்பு  ‘அத்வைதமும் ஆட்டிஸமும்’ என்ற தமிழ் நூல். அதன் ஹிந்தி மொழிபெயர்ப்பின் வெளியீட்டு விழாவில் நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றித் தெரிவிப்பதற்கு இந்தக் கட்டுரை வாயிலாக முயற்சிக்கிறேன். ஆட்டிசம் நிலையில் உள்ள ஒருவர் அந்த லாகிரி மகாசயர் போலத்தான்  தென்படுவார். அவரது குடும்பத்தார் அவரை ஆயுசுக்கும் பார்த்துப் பார்த்து பராமரிக்க வேண்டியிருக்கும். 

சங்கீதம் அல்லது பஜனை, ஆட்டிஸம் பாதித்தவர்களின் கவனத்தை ஈர்த்து  சில பல அன்றாட பணிகளில் ஈடுபட வைக்கிறது என்பதால் அந்த  அணுகுமுறையைக்  கையாண்டு ஆட்டிசம் பாதித்தவர்களின் குடும்பங்களுக்கு சற்றே ஆறுதல்  கிடைக்கச் செய்யும் பணியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டிருக்கும் லக்ஷ்மிதான்  ‘அத்வைதமும் ஆட்டிஸமும்’ நூலாசிரியர். அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நாடு நெடுக இருப்பதால் அந்த நூலை ஹிந்தியிலும் வெளியிட்டார் (தமிழிலிருந்து ஹிந்திக்கு மொழிபெயர்த்துக் கொடுத்தேன்). ஹிந்தி நூலின் வெளியீட்டு விழா, சென்னை, திருமயிலை, பாரதிய வித்யா பவன் அரங்கில் செப்டம்பர் 24 அன்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், திருமயிலை பி.எஸ். உயர்நிலைப் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவரும் முன்னாள் காவல் துறை அதிகாரியுமான கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் முதல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார்கள். ஆளுநர் ரவி ஹிந்தி நூலைப் படித்திருந்தார் போலிருக்கிறது.  அவரது பேச்சு உணர்ச்சிகரமாக இருந்தது; அது மட்டுமல்ல, இவ்வளவு பெரிய  மன- உடல் பிரச்னை  (மத்திய அரசின் கணிப்புப் படி 50 லட்சம் பிள்ளைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது) ஊரில் இருப்பதே கூட சமுதாயத்துக்கு தெரியாமல் இருக்கிறது; இதை எதிர்கொள்ள விழிப்புணர்வுப்  பணி அவசியம்  என்று அவர் சுட்டிக்காட்டினார்.

திரு.எஸ்.எஸ்.மகாதேவனை கௌரவிக்கும்
தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி.

மொழிபெயர்ப்பாளரை கௌரவிக்கும்போது சம்பிரதாயமாக பொன்னாடை போர்த்தி வணக்கம் தெரிவிப்பதோடு நில்லாமல் ஆளுநர் என்னை கட்டியணைத்துக் கொண்டார். ஆட்டிஸ நூல் மட்டுமல்ல விஷயம் என்பது புரிந்தது.  தமிழ் கூறும் நல்லுலகம் கண்ட பல மகான்கள் பற்றி ஹிந்தி வாயிலாக நாட்டின் மற்ற மாநிலங்களின் மக்கள் தெரிந்துகொள்ள இந்த ஹிந்தி மொழிபெயர்ப்பு ஒரு கருவி என்பதால் ஆளுநருக்கு மனநிறைவு ஏற்பட்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இப்படி எனக்குத் தோன்ற ஒரு காரணம் உண்டு.   

ஆத்திசூடியை ஹிந்தியில் மொழிபெயர்த்த மாணவி அப்சரா குடும்பத்துடன் தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி.

ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய இரண்டையும் ஹிந்தியில் மொழிபெயர்த்த திருச்சி பிளஸ் டூ மாணவி அப்சராவை சில வாரங்களுக்கு முன் ஆளுநர் அடையாளம் கண்டு, குடும்பத்துடன் ராஜ்பவன் வரவழைத்துப் பாராட்டியிருக்கிறார்.  தமிழில் உள்ள ஞானம் ஹிந்தி வாயிலாக நாடெங்கும் பரவ அந்த மொழிபெயர்ப்பு கருவி ஆயிற்று என்பதுதான் ஆளுநருக்கு உவப்பு அளித்திருக்கிறது. 

முன்னதாக, நூறு ஆண்டுகளாய் தமிழில் இல்லாமல் போய்விட்ட யோகா குறித்த முக்கியமான நூல் ஒன்று (ஹடயோக பிரதீபிகை) மூல சமஸ்கிருதத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டு அது தற்கால  தமிழ் நடையில் யோகா ஆர்வலர்களுக்கு கிடைக்கிறது என்று கேள்விப்பட்டு ஆளுநர் ரவி, தமிழாக்கம் செய்த இண்டிகா யோகா அமைப்பின் ஆராய்ச்சித் துறை இயக்குனர் டாக்டர் ஜெயராமன் மகாதேவனை அழைத்துப் பாராட்டினார். பாரதிய மொழிகளிடையே ஞானப் பரிமாற்றம் இனி எவ்வளவு முக்கியம் என்பதை ஆளுநர் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறார் என்பது தெளிவு.

ஹடயோக பிரதீபிகையைதமிழாக்கம் செய்த டாக்டர் ஜெயராமனைப் பாராட்டும் தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி.

முன்பு ஒரு முறை  ‘எனது முற்றத்தில்’ கட்டுரையில்  நான் சுட்டிக் காட்டியது போல ஆங்கிலத்தை பாலமாகப் பயன்படுத்தாமல் ஒரு இந்திய மொழியிலிருந்து இன்னொரு இந்திய  மொழிக்கு நேரடியாக தகவல் கொண்டுசெல்லும் மொழிபெயர்ப்பு ஜீவன் உள்ளதாகவே  இருக்கும்.  அப்படிப்பட்ட மொழிபெயர்ப்பு செய்வோர் வெகு சொற்பம்.  பிரயாசை அதிகம் தேவைப்படும் வேலை அது.

‘ஸ்வராஜ்யா’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும் நூலாசிரியருமான அரவிந்தன் நீலகண்டன் ஒரு தகவல் சொன்னார். போன நூற்றாண்டைய வங்கப் பஞ்சம் பற்றிய  வங்க மொழி நாவல் ஒன்றை ஆங்கில மொழிபெயர்ப்பின் உதவியோடு தமிழாக்கம் செய்ய உட்கார்ந்த சேது அருணாசலம் என்ற அன்பர், பாரதச் சூழலில் ஜனித்த மரபுச் சொற்றொடர்கள் (இடியம்) தரும்  சரியான புரிதல் ஆங்கிலம் என்ற ஊடகத்தில் சிதைந்து விடுகிறது என்பதால் வங்க மொழியைக் கற்றுக்கொண்டு நேரடியாக வங்காளியில் இருந்து தமிழுக்கு அந்த நாவலை மொழிபெயர்த்தாராம்! வாழ்க சேது! பெருகுக அவரனையோர் கூட்டம்!

மொழியை வைத்துப் பிரிவினை பேசலாமா என்று அரசியல்வாதிக்குத் தான்  தோன்றுகிறது. கலாச்சார வளாகத்தில் மக்களை ஐக்கியப்படுத்துவது மொழி என்பது படிப்படியாக மக்கள் கவனத்திற்கு வந்து கொண்டிருக்கிறது; இது நல்ல சேதி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s