-எஸ்.எஸ்.மகாதேவன்

24. காரைக்குடியில் ஒரு கலக்க(ம்)ல்!
“தாய் நல்லுணவு சமைப்பதைப் பின்பற்றி குழந்தை மணற்சோறாக்கி விளையாட்டுச் சமையல் செய்வதைப் போல, அந்த மகானுடைய செய்யுளை நான் அன்பினால் மொழிபெயர்க்க நேர்ந்தது” என்கிறார் பாரதியார். எந்த மகான்? ஸ்ரீ அரவிந்தர் தான். செய்யுள்? இதோ சில வரிகள் (முழு செய்யுளும் என் வசம் உள்ளது; 1966இல் ஒரு தினமணி ஞாயிறு மலர் இணைப்பில் பிரசுரமானது; ‘பாரதியார் கவிதைகள்’ பதிப்புகளில் ‘கடல்-கண்ணி’ என்ற இந்த செய்யுள் தென்படுவதில்லை):
“வெள்ளைத் திரையாய், வெருவுதரு தோற்றத்தாய்! கொள்ளை ஒலிக்கடலே! நல்லறம் நீ கூறுதிகாண். விரிந்த பெரும்புறங்கள் மேல்எறிந்துன் பேயலைகள் பொருந்தும் இடையே புதைந்த பிளவுகள்தாம் பாதலம்போல் ஆழ்ந்திருப்பப் பார்க்கரிதாய் அவற்றின் மீது அலம்பி நிற்கும் ஒரு வெள்ளைச் சிறுதோணி”
பாரதியாரே மகான் என்று வர்ணிக்கிறார் அரவிந்தரை.
தாம்பரம் வர்த்தக பிரமுகர், தேசியவாதி மீனாட்சிசுந்தரம் பல ஆண்டுகளுக்கு முன், அரவிந்தரைப் பற்றி பேசுங்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டபோது எனக்கு தூக்கிவாரிப் போட்டது. காரணம், நான் பேச வேண்டிய இடம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம். அங்கு வள்ளல் கருணாநிதி செட்டியார் உபயத்தால் வருடாந்தர ஸ்ரீ அரவிந்தர் நினைவுச் சொற்பொழிவு நடக்கும். அதில்தான் அந்த ஆண்டு நான் போய் பேச வேண்டியிருந்தது. மொட்டை மாடியில் சிறுவர்களை உட்கார வைத்து அரவிந்தர் பற்றி கதை சொல்லலாம். ஒரு பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்றுவது என்றால், உதறலுக்குக் கேட்கவா வேண்டும்? அப்போது நான் ‘இந்தியா டுடே’ தமிழ்ப் பதிப்பில் காப்பி எடிட்டராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
1972 ஆம் ஆண்டில் ஸ்ரீ அரவிந்தர் நூற்றாண்டு வந்தது. அப்போது நான் ‘தியாகபூமி’ வார இதழில் உதவி ஆசிரியர். அரவிந்தர் பற்றி சிறப்பிதழ் வெளியிட பலரிடம் கட்டுரை கேட்டு கடிதம் போட்டிருந்தோம். தமிழகத்தின் முன்னாள் கல்வியமைச்சர் ஒருவருக்கும் கடிதம் போயிருந்தது. அவரிடமிருந்து பதிலாக வந்த ஒரு அஞ்சல் அட்டை ‘தியாகபூமி’ அலுவலகத்தில் அனைவருக்கும் லேசான அதிர்ச்சி அளித்தது. “மன்னிக்கவும். எனக்கு ஸ்ரீ அரவிந்தர் பற்றி அதிகம் தெரியாது” என்பது அந்த அஞ்சலட்டை சொன்ன சேதி. அரவிந்தரைப் பற்றிப் பேசு என்று மீனாட்சிசுந்தரம் சொன்னதும் நான் மிரள இதுவும் ஒரு காரணம். ஒரு முன்னாள் கல்வி அமைச்சருக்கே புரியாத ஒரு அசாதாரண ஆன்மிக ஆளுமை பற்றி சாதாரண பத்திரிகையாளனான நான் என்ன சொல்லப் போகிறேன்?

காரைக்குடிக்கு ரயில் ஏறும் வரை குழம்பினேன். என் இல்லத்தரசி வசந்தா தான் தைரியம் சொல்லி அனுப்பினார். சிகாகோ சர்வமத சபையில் முதல் முறையாக எழுந்து நின்று பேசும்போது சுவாமி விவேகானந்தருக்கும் இதுபோல தயக்கம் இருந்ததால் அவர் அன்னை சரஸ்வதியை தியானித்து ‘அமெரிக்க சகோதர சகோதரிகளே’ என்ற மந்திரச் சொற்களை உச்சரித்து அமெரிக்காவை மண்டியிடச் செய்தார் என்ற சம்பவத்தை விவரித்து என்னை வழியனுப்பினார் (நல்ல வேளை, காரைக்குடி மக்களுக்கு அப்படி ஒன்றும் ஆகிவிடவில்லை).
அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்க வைத்தார்கள். அங்கு ஒரு நிலைக் கண்ணாடியில் என் உருவத்தைப் பார்த்ததும் எனக்கு அபார தைரியம் வந்துவிட்டது. காரணம் நீள நெடுக வளர்ந்திருந்த என் பல மாத தாடி!
பேச எழுந்ததும், என் தாடி ஒரு கம்பீரமான சூழ்நிலையை அங்கே உருவாக்கி விட்டதோ என்று எனக்கு இன்றுவரை சந்தேகம். ஏனென்றால் அன்றைய தினத்தில் மாணவர்கள் கிளர்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதற்கு நடுவிலும் எம்.ஏ. படிக்கும் மாணவ மாணவிகளுடன் துறைத் தலைவரும் துணைவேந்தரும் நிகழ்ச்சியில் முழுமையாகக் கலந்து கொண்டார்கள். கிளர்ச்சி பற்றிய செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் பலரும் (காவல் துறையினரும் கூட) என் பேச்சைக் கேட்கும் பேறு பெற்றார்கள்!

அப்படி அன்று என்ன பேசினேன்? முன்பு ‘தியாகபூமி’யின் அரவிந்தர் நூற்றாண்டு மலருக்காக வந்த கட்டுரைகளைப் படித்த ஞாபகம் இருந்தது. குறிப்பாக ‘அரவிந்தம்’ என்ற தலைப்பில் (பின்னாளில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில பாரத பொதுச்செயலாளராக உயர்ந்த) சிந்தனையாளரும் எழுத்தாளருமான ஹெச்.வி.சேஷாத்ரி எழுதியிருந்த நீண்ட கட்டுரை கை கொடுத்தது. சுதந்திரப் போராட்டச் சூழலில் ஆன்மிகத்தை நோக்கி அரவிந்தர் வாழ்வில் ஏற்பட்ட திருப்பத்தை விவரித்ததுடன் மனித குல பரிணாம வளர்ச்சியில் அதி மானசம் போன்ற உயர்நிலைகளை அடையும் தருணம் வந்து கொண்டிருக்கிறது என்ற அரவிந்தரின் நம்பிக்கையூட்டும் கருத்தையும் அந்தக் கட்டுரையில் பதிவு செய்திருந்தார் பெரியவர் சேஷாத்ரி.
நிகழ்ச்சி முடிந்த பின் காரைக்குடி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் சென்றேன். ராமநாதபுரம் விபாக் பிரசாரகர் சுந்தர.ஜோதி அன்று காரைக்குடியில் இருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவருடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு காரைக்குடியை ஒரு சுற்று சுற்றி வரலாம் என்று புறப்பட்டேன். குறிப்பாக ரயில்வே அலுவலர்கள் குடியிருப்பு (50 வயதான) எனது இலக்கு. ஒருவயது கைக் குழந்தையாக அங்கே நான் தவழ்ந்தது பற்றி என் பெற்றோர் சொல்வார்கள். அந்தக் காலத்தில் என் தந்தையார் அங்கே ரயில்வே அலுவலராக இருந்தாராம். அங்கு போய்விட்டு பிறகு ஊருக்கு வெளியே வயல் நடுவே சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தேன். திடீரென்று என் இடது புறமிருந்த ஊரிலிருந்து ஒரு நடுத்தர வயதுக்காரர் ஓடிவந்து “ஸ்வாமிஜி, என் குழந்தைக்கு இன்று பெயரிட்டுக் கல்யாணம். தாங்கள் வந்து பெயர் சூட்ட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். முன்பின் அறிமுகமில்லாத ஒருவரின் குழந்தைக்கு எப்படி பெயர் வைப்பது என்ற யோசனையுடன் “ரயிலுக்கு நேரம் ஆகிறது. மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர் அல்லது ஊர்ப் பெரியவர் உங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டுவது தான் சரியாக இருக்கும்’’ என்று அவரோடு வாதாடி விடைபெற்றேன்.
ஒரு விஷயம் சட்டென்று உறைத்தது. குடும்பஸ்தன் ஆன என்னை ஸ்வாமிஜி என்று அந்த அன்பர் அழைக்க என்ன காரணம் என்று யோசித்தேன். என் தாடிதான் என்று எனக்கு விடை கிடைத்தது. சென்னை திரும்பியதும் முதல் காரியமாக தாடிக்கு விடைகொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். ஆனால் தாடிப் புராணம் அத்துடன் போகவில்லை.
சென்னை திரும்பியதும் இந்தியா டுடே தென்னக பதிப்புகளுக்கு (தமிழ், தெலுங்கு, மலையாளம்) பொறுப்பாளராக இருந்த நிர்வாக ஆசிரியர் சேகர் குப்தா தில்லியிலிருந்து சென்னை அலுவலகம் வந்திருந்தார். என்னைப் பார்த்ததும், “மிஸ்டர் மஹாதேவன்! நாம் இருவரும் சந்தித்து பல மாத காலம் ஆகிறது என்பதை உங்கள் தாடி சொல்லி விட்டது” என்று ஜோக் அடித்தார். காரைக்குடியில் நினைத்திருந்தபடி மரியாதையாக என் தாடிக்கு விடைகொடுத்து விட்டேன்.
***
அக்டோபர் 5 அன்று நாகபுரி ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழா; அதில் பேருரை நிகழ்த்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், தன் சொற்பொழிவின் முடிவில் படித்துக் காட்டிய அரவிந்தரின் ஐந்து கனவுகள்:
1. இந்தியாவிற்கு சுதந்திரத்தையும் ஒற்றுமையையும் அளிக்கும் புரட்சிகரமான இயக்கம்.
2. ஆசியா மறுமலர்ச்சி அடைந்து, விடுதலை பெற்று, தொன்றுதொட்டு மனித நாகரிகத்திற்கு பெரிதும் உதவியது போல மீண்டும் உதவுதல்.
3. மனிதஇனம் முழுவதும் புதிய, பரந்த, ஒளிபொருந்திய, சிறந்த வாழ்வு பெறுதல். அது முற்றிலும் நிறைவேறுவதற்கு உலகின் பல்வேறு மனித இனங்களும் ஒன்றுபடுதல், அதேநேரம் ஒவ்வொரு இனத்தின் தனித்தன்மை கொண்ட தேசிய வாழ்வும் பாதுகாக்கப்படுதல். மனிதகுல ஒருமைப்பாட்டு உணர்வு வலுவாகச் செயலாற்றி அவற்றை ஒன்றாகப் பிணைத்தல்.
4. ஆன்மிக ஞானத்தையும் வாழ்வை ஆன்மிக மயமாக மாற்றும் வழிமுறைகளையும் இந்தியா உலகிற்குக் கற்பித்தல்.
5. இறுதியாக பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய அடி எடுத்து வைத்தல். அதன்மூலம் உணர்வு ஓர் உயர்நிலைக்கு உயர்ந்து செல்லுதல்.
$$$