எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…

-சேக்கிழான்

“ராமக்ருஷ்ணோ தயானந்தோ ரவீந்த்ரோ ராமமோஹன:
ராமதீர்த்தோ(அ)ரவிந்தஸ்ச விவேகானந்த உத்யசா: 
தாதாபாயீ கோபபந்து: திலகோ காந்திராத்ருதா:
ரமணோ மாலவீயஸ்ச ஸ்ரீசுப்ரஹ்மண்ய பாரதீ”
   
         (ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் இருந்து)

காந்தி என்ற பெயரை நான் முதன்முதலில் கேட்டது, ஒரு கேலிப்பொருளாக. அதுவும் ‘காந்தி’ என்ற சொல்லாலேயே நான் கேலி செய்யப்பட்டேன். அப்போது எனக்கு ஆறு வயது. பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, பக்கத்து வீட்டு அண்ணன்கள் ஹக்கீமும் அபுவும் என் பின்னால் “காந்தி, காந்தி” என்று பள்ளியிலிருந்து வீடு வரை சொல்லிக் கொண்டே வந்தனர். அது என்ன என்று தெரியாதபோதும், அந்தச் சொல்லால் அவர்கள் என்னை கேலி செய்வது புரிந்தது.

வீடு திரும்பியதும், அம்மாவின் மடியில் முகம் புதைத்து அழுதேன். ஹக்கீமும் அபுவும் என்னை  ‘காந்தி’ என்று சொல்லி கேலி செய்வதாக விசும்பிக்கொண்டே சொன்னேன். அம்மா சிரித்தார். “காந்தின்னு தானே சொன்னார்கள். நல்லது தானே? அவர் நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மாவாக்கும். இன்னொரு முறை கேலி செய்தால் ஆமாண்டா நான் காந்தித் தாத்தா தான் என்று சொல்லி விடு” என்ற அம்மா, காந்தியின் தாடை போல நீண்டிருந்த எனது தாடையை முத்தமிட்டுக் கொஞ்சியதும், மகாத்மா காந்தி பற்றி ஏதோ சொன்னதும் இன்னமும் நினைவில் இருக்கிறது.

அடுத்தடுத்த வகுப்புகளில் பயிலும்போது காந்தி தாத்தாவும் நேரு மாமாவும் யார் என்பது தெரிய வந்தது. அப்போதெல்லாம் சுதந்திர தினத்தில் கொடியேற்றி ஆசிரியர் ஒருவர் நாட்டின் விடுதலை பற்றிப் பேசுவார். அப்படித்தான் மகாத்மாவின் சித்திரம் எனக்குள் வளர்ந்தது. மகாகவி பாரதியும் நேதாஜியும் வ.உ.சி.யும் மட்டுமே அப்போது இந்தக் குட்டி மூளைக்குள் புகுந்திருந்தன.

***

நான்காம் வகுப்பு படித்தபோது ஒருநாள் எனது அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். “இத்தனை நாட்களுக்குப் பிறகு ஓர் உண்மையான காந்தியவாதி பிரதமர் ஆகி இருக்கிறார். இனியாவது நாடு திருந்துமா?” என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்டது மொரார்ஜி தேசாய் பற்றி. மறுநாள் பள்ளிக்கு சென்றபோது பெட்டிக்கடையில் விற்ற மொரார்ஜி தேசாய் படத்தை 50 காசு கொடுத்து வாங்கி சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன்.

காந்தி குல்லாய் போட்ட தேசாய் என்னைப் பார்த்து வாஞ்சையுடன் சிரிப்பது போலிருந்தது. அந்த ஆண்டு பள்ளியில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் காந்திஜி குறித்து 5 நிமிடம் பேசியதாக ஞாபகம். பள்ளி ஆசிரியர்களின் மகன் என்பதால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

***

ஆறாம் வகுப்பு படித்தபோது மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ துணைப்பாட நூலாக இருந்தது. அது மாணவர்களுக்கேற்ற வகையில் சுருக்கி எளிமையாக்கப்பட்டதாக இருந்தது. அதை இரண்டே நாளில் படித்து முடித்துவிட்டேன். அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனது தந்தை, மறுநாள் முழுமையான ‘சத்திய சோதனை’ நூலை வாங்கிவந்து கொடுத்தார். எனது வாசிப்பு வேகம் அவரைக் கவர்ந்திருக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மோகன்தாஸின் கதையைப் படித்தபோது என்னை அறியாமல் கண்ணீர் உகுத்தேன். காந்தி என்பவர் சாதாரணமானவர் அல்ல என்று மனதில் பதிந்தது. ஆனால், தனது பலவீனங்களையும் அவர் சொல்லிச் செல்வது அந்த வயதில் எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.

***

எங்கள் வீட்டுக்கு கல்கி, ஞானபூமி, தினமணி ஆகிய பத்திரிகைகள் வந்துகொண்டிருந்தன. கல்கியில் ராஜ்மோகன் காந்தி எழுதிய ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு தொடர் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அதில்தான் இந்திய வரலாற்றின் ஊடும் பாவுமான தோற்றத்தை முதன்முதலில் தரிசித்தேன். ராஜாஜி வாழ்க்கையைச் சொல்கையில் அப்போதைய இந்தியாவின் அவலத்தையும் பெருமையையும் கூடவே பதிவு செய்திருக்கிறார் ராஜ்மோகன் காந்தி. இஸ்லாமியர்களின் மதவெறிப்போக்கால் நாடு அடைந்த நாசங்களை அதில்தான் முதன்முதலாக நான் படித்தேன்.

பாரதம் பிளவுபட்ட நாட்களின் வலியையும், அதனால் ஏற்பட்ட பேரழிவையும் படித்தபோது, மகாத்மா காந்தி மீது எனக்கு கோபம் வந்தது. இத்தனைக்குப் பிறகும் காந்திஜி முஸ்லிம்களை ஆதரித்ததை என்னால் ஏற்க முடியவில்லை. இதையெல்லாம் விவாதிக்கும் அளவுக்கு நான் வளர்ந்த கிராமத்தில் நண்பர்களும் இல்லை.

ஞானபூமி மாத இதழைப் படித்தபோது, நமது மதத்தின் அருமை பெருமைகள் புரியத் துவங்கின. அவ்வப்போது துக்ளக் வார இதழை அப்பா வாங்கி வருவார். அதையும் படித்து விடுவேன். அதிலிருந்து, மொரார்ஜி ஆட்சியை இந்திரா காந்தி கவிழ்த்து விட்டதை அறிந்துகொண்டேன்.

காந்தி என்ற பெயரில் உள்ள ஒருவர் இப்படி செய்யலாமா என்று எனது சந்தேகத்தை அம்மாவிடம் கேட்டபோது, அவர்தான், மகாத்மா காந்திக்கும் இந்திரா காந்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விளக்கமாகச் சொல்லி புரியவைத்தார்.

தினமணி நாளிதழில் வெளியான செய்திகள் மூலமாக ஓரளவு தேசிய அரசியல் நிலவரத்தை அறிந்திருந்தேன். இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது நடந்த கலவரங்கள் குறித்த செய்திகள், எனக்கு சுதந்திரம் பெற்றபோது நேரடி நடவடிக்கை எடுத்த முஸ்லிம் லீகின் கலவரங்களை நினைவுபடுத்தின. அவர்களுக்கு மட்டும் விசேஷமான மதிப்பு கருணாநிதி உள்ளிட்ட அரசியல்வாதிகளால் அளிக்கப்படுவதை விபரீதமாக உணர்ந்தேன்.

இந்த பத்திரிகை வாசிப்பனுபவம் மூலமாக, காந்திஜி மூளையற்ற ஒரு சுயநலவாதி என்ற எண்ணத்தை எப்படியோ நான் அடைந்து விட்டிருந்தேன். தனது மதத்துக்கே கேடு விளைவித்த ஒரு அரசியல் தலைவரான அவரை கோட்சே என்ற ஹிந்து மத வெறியன் சுட்டுக் கொன்றது நியாயமே என்ற முடிவுக்கும் நான் வந்திருந்தேன்.

***

ஒரு நாள் இரவில் சாப்பாட்டு வேளையில் பேசிக்கொண்டிருந்தபோது, காந்தி கொல்லப்பட்டது மிகவும் சரி என்று நான் சொன்னேன். அப்போது எனக்கு அநேகமாக 12 வயது இருக்கலாம். உடனே எனது அம்மா கடுமையாக என்னைத் திட்டினார். “உனக்கு என்ன தெரியும் அவரைப் பற்றி? அவரைப் போன்ற மகான்கள் கோடியில் ஒருவர் தான் பிறப்பார்கள். அவரைப் பற்றி பேசவே நமக்கு அருஹதை இல்லை. இப்படியெல்லாம் எப்போதும் பேசாதே” என்றார் மிகவும் கோபத்தோடு. அப்பா ஏதும் சொல்லவில்லை.

எனக்கு அம்மாவின் கோபம் ஏன் என்று புரியவில்லை. இத்தனைக்கும் எங்கள் வீட்டில் ஆன்மிக நம்பிக்கையும் ஹிந்து சமய உணர்வும் அதிகமாக இருந்ததற்குக் காரணமே அம்மா தான்.

மறுநாள் கோவை சென்றிருந்த அப்பா, ‘ஜனகணமன’ என்ற புத்தகத்தை வாங்கி வந்து கொடுத்தார். அது எழுத்தாளர் மாலன் எழுதிய புதினம். அதற்கு முன் தமிழ்வாணன், சாண்டில்யன், ராஜேஷ்குமார், லக்‌ஷ்மி, சுஜாதா ஆகியோர் எழுதிய புதினங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் மாலனின் புதினம் என்னை அப்படியே வசீகரித்துக் கொண்டது.

மகாத்மா காந்தி கொலை தொடர்பான புதினம் அது. வித்யாசமான மாறுபட்ட காட்சி நடையில் அவர் எழுதியிருந்த அந்த சிறு புதினத்தை ஒரே இரவில் படித்து முடித்தேன். அந்தக் கதையின் முன்னுரையில் மாலன் தனது அனுபவம் ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார்.

சாப்பாட்டு மேஜையில் அரசியல் பேசிக் கொண்டிருந்தபோது, காந்திஜியைப் பற்றி அவமரியாதையாக ஏதோ சொல்லிவிடுகிறார் மாலன். அதைக் கேட்டு அவரது தாய் கண்ணீர் விட்டு அழுதார் என்று அதில் மாலன் குறிப்பிட்டிருப்பார். கிட்டத்தட்ட எனக்கும் அதேபோன்ற அனுபவம் தானே கிடைத்தது?

எந்த ஒன்று எனது தாயையும் மாலனின் தாயையும் சீற்றத்துக்குள்ளாக்கியது? நிச்சயமாக காந்தி ஒரு மகாத்மா தான். அதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், அவரது அரசியல் பார்வை சரியல்ல என்பதே எனது கருத்தாக இருந்தது. ஆனாலும், கோட்சே செய்தது சரியா, தவறா என்ற ஊசலாட்டம் எனக்குள் இருந்தது.

***

பக்கத்து விட்டு அண்ணன் பஞ்சலிங்கம் ஒருநாள் மாலை என்னை ஊர் மத்தியில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். ஷாகாவுக்குப் போகலாம் என்று கூப்பிட்டார். அங்கு உடற்பயிற்சி, சிலம்பம் எல்லாம் சொல்லித் தருவதாகச் சொன்னார். எனக்கு ‘ஜனகணமன’ புதினத்தில் ஆர்.எஸ்.எஸ். பற்றிப் படித்திருந்தது நினைவில் வந்தது. காந்திஜி கொலையில் தொடர்புடைய இயக்கம் அது என புதினத்தில் வரும். ஆனால், கோட்சே தனது வாக்குமூலத்தில் அதை மறுத்ததையும் மாலன் புதினத்தில் குறிப்பிட்டிருப்பார். ராஜ்மோகன் காந்தியின் ராஜாஜி வாழ்க்கை வரலாறிலும் ஆர்.எஸ்.எஸ். பற்றிய குறிப்புகள் இருந்தன.

உடனே அவருடன் சென்றுவிட்டேன். வடசித்தூரில் ஷாகா ஆரம்பித்து அப்போதுதான் ஆறு மாதங்கள் ஆகி இருந்தன. பெருமாள் முதலியார் வீட்டு வளாகத்தில், காலி மைதானத்தில், வட்டத்துக்குள் ‘ஓம்’ வரைந்து கற்பூரம் காட்டி ஷாகா துவக்கினர். எனக்கு புதுமையாகவும், வியப்பாகவும் இருந்தது. சுமார் 20 பேர் உடற்பயிற்சி செய்வதை வேடிக்கை மட்டும் பார்த்தேன். இப்படி ஒரு வாரம் ஓடியது. வட்டமாக உட்கார்ந்து பாடும்போது மட்டும் சேர்ந்துகொள்வேன்.

தினமும் என்னை ஷாகா அழைத்துச் செல்ல இளங்கோ, பிரகாஷ் ஆகிய வயதில் மூத்த இருவர் எனது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் எனது அம்மா, அப்பாவிடம் படித்தவர்கள் என்பதால், அவர்களும் எதுவும் சொல்லவில்லை. எங்கள் பகுதியில் இருந்து மட்டும் 8 பேர் ஒன்றாகத் திரண்டு செல்வோம். ஷாகாவில் எண்ணிக்கை 40 ஆனது. நான் அங்கிருந்த நண்பர்களால் குழந்தை போல நடத்தப்பட்டேன். ஆனால், ஆர்.எஸ்.எஸ். பற்றி நான் படித்திருந்ததை எல்லாம் அவர்களிடம் சொன்னபோது, அவர்கள் வியப்புடன் கேட்டார்கள்.

அடுத்த வாரமே ‘விஜயபாரதம்’ வார இதழ் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டது. வாரவாரம் கோபால் அண்ணன் அதை சைக்கிளில் வந்து கொடுத்துப் போவார். எனக்கு முன்னரே அப்பா அதைப் படித்து முடித்திருப்பார். அதில் ஓர் இதழில் மகாத்மா காந்தி பற்றி மிகவும் பெருமையாக எழுதி இருந்ததைக் கண்டதும் குழம்பினேன். அதன் பிறகு இரண்டு நாட்கள் ஷாகா செல்லவில்லை.

அந்த வாரமே எங்கள் வீட்டுக்கு வந்த ஆர்.எஸ்.எஸ். கோவை மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் ஜியிடம் அதுபற்றிக் கேட்டேன். அவரோ, “இவ்வளவுதானா? நாம் தான் சங்கத்தின் பிராதஸ்மரணத்திலேயே காந்திஜியையும் போற்றிப் பாடுகிறோமே?” என்று கூறி அந்த குட்டிப் புத்தகத்தையும் கொடுத்தார். அதில் காந்திஜி மட்டுமல்லாது, நமது நாட்டின் பெருமிதத்துக்குரிய வீரர்கள், தலைவர்கள், ஞானிகளின் பெயர்கள் பலவும் இடம் பெற்றிருப்பதைக் கண்டேன்.

அவர் சொன்னது இன்றும் என் நினைவில் இருக்கிறது. “காந்திஜி மகத்தான ஒரு மானிடர். அவரும் மனிதர்தான். தவறு செய்யாத மனிதர்கள் இல்லை. ஆனால், தனது மனசாட்சிப்படி வாழ்ந்தவர் அவர். அவரது அரசியல் முடிவுகள் சில தவறி இருக்கலாம். ஆனால், அவர் தனக்கென எந்த முடிவையும் எடுக்கவில்லை. நேருவை பிரதமர் ஆக்கியதுதான் காந்திஜி செய்ததில் பெரும் தவறு. ஆனால், அவர் நினைத்திருந்தால் அவரே பிரதமர் ஆகி இருக்க முடியும் அல்லவா? அவர் ஓர் உண்மையான ஹிந்து துறவி போல வாழ்ந்தவர். நமது ஆன்மிக மரபை அரசியலில் இணைத்து பரீட்சார்த்தம் செய்து பார்த்தவர் அவர். காந்திஜி இல்லாதிருந்தால், எதிலும் அக்கறையற்ற நமது நாட்டு மக்களை இவ்வளவு விரைவாக ஆங்கிலேயருக்கு எதிராகத் திரட்டி இருக்க முடியாது…”

***

ஏகாத்மதா ஸ்தோத்திரத்தின் 29வது பத்தி.

இடையே பத்தாம் வகுப்பு தேர்வு காரணமாக சில மாதங்கள் ஷாகா செல்லவில்லை. மாநில அரசியலில் பல மாற்றங்கள். ஊரில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட அதிமுக ஆதரவு பெற்ற முஸ்லிம் ஒருவர் தேர்தலில் வெல்ல பாலக்காட்டிலிருந்து ஒரு ரவுடி கும்பலை அழைத்து வந்திருப்பதாக ஊர் முழுவதும் பேச்சாக இருந்தது. அவர்கள் அனைவரும் இஸ்லாமிய அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. இதற்கு எதிராக  ஒட்டுமொத்த ஊரும் ஒருங்கிணைந்தது. திமுக சார்பில் ஒரு ஹிந்து வேட்பாளரை நிறுத்த ஊர்ப் பெரியவர்கள் திட்டமிட்டார்கள். உள்ளூர் கட்சி அரசியலை மீறி, தொகுதி எம்.எல்.ஏ.வின் மிரட்டலை மீறி அவர் வெற்றி பெற்றார். அதன் பின்னணியில் ஷாகாவுக்கு வந்தவர்களுக்கும் பெரும் பங்கிருந்தது.

***

பொள்ளாச்சி அருகிலுள்ள செங்குட்டைப்பாளையத்தில் பிராத்மிக் சிக்‌ஷண வர்க எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அறிமுக பண்புப் பயிற்சி முகாம் 1987-இல்  நடந்தது. அதில் பங்கேற்றபோது, சங்கத்தின் கொள்கைகள், தேசிய சிந்தனை, மகாத்மா காந்தி குறித்த தெளிவான பார்வை, ஹிந்து என்பது மதமல்ல, ஒரு வாழ்க்கை முறை என்ற கண்ணோட்டம் ஆகியன மனதில் பதிந்தன. டாக்டர் பீமராவ் அம்பேத்கர் மீது நான் கொண்டிருந்த தவறான அபிப்பிராயமும் அப்போதுதான் விலகியது.

முகாம் நடந்த இடம் சுவாமி சித்பவானந்தரின் பூர்வாசிரம வீடு. ஒருகாலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக வெறுத்த சித்பவானந்தர் எவ்வாறு அதன் ஆத்ம சிநேகிதராக மாறினார் என்பதை முகாமில் பேசிய இல.கணேசன் ஜி மூலம் அறிந்தேன். மேலும், நாகபுரியில் நடந்த இதேபோன்ற சங்க முகாமுக்கு மகாத்மா காந்தி வந்து சென்றதையும் அவர் எடுத்துரைத்தார்.

முகாமில் நடைபெறும் பண்புக் கதைகளில் எந்த மனக்கிலேசமும் இல்லாமல் மகாத்மா காந்தியின் வாழ்க்கை சரித நிகழ்வுகள் சொல்லப்பட்டதைக் கேட்டபோது, காந்திஜி குறித்த தெளிவான சித்திரம் எனக்குள் உருவாகத் துவங்கியது.

***

அடுத்து பல்வேறு சங்க நிகழ்வுகள், முகாம்கள், ஷாகா விழாக்கள், என அடுத்த பத்தாண்டுகள் வேகமாகக் கழிந்தன. அயோத்தி ராமர் கோயில் இயக்கமும் தேசிய அரசியலில் நிகழ்ந்த மாற்றங்களும், நாட்டின் சரித்திரத்தைத் திருத்தி எழுதின.

சங்கத்தில் பலநிலைகளில் உள்ள தலைவர்களுடனான தொடர்பால் மகாத்மா காந்திஜி குறித்த வெறுப்பு மறைந்து, அவர் குறித்து நெஞ்சு விம்ம பெருமிதம் அடைந்தேன். எனது விபாக் பிரசாரக் சு.விஸ்வநாதன்ஜி குருபூஜை விழாவில் பேசியபோது காந்திஜியும் சங்க ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவாரும் உரையாடியதைச் சொன்னார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே துணை அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்.ஸை நடைமுறைப்படுத்தலாமே என்று காந்திஜி கேட்டதாகவும், அரசியலில் சங்கத்துக்கு நாட்டமில்லை என்று டாக்டர்ஜி கூறியதாகவும் அவர் சொன்னார். சங்கம் என்பது கலாசார ரீதியாக இந்த நாட்டை ஒருங்கிணைக்கும் பணிக்காகவே உருவாக்கப்பட்டது என்ற டாக்டர்ஜியின் கருத்து என் உள்ளத்தில் ஆழப் பதிந்தது.

இருந்தாலும் மதம் குறித்த குழப்பம் தொடர்ந்தது. பேசுகையில் ஹிந்து தர்மம் என்கிறோம். ஆனால், ஹிந்துக்களை மதரீதியாக ஒருங்கிணைக்கும் பணியில் சங்கம் ஈடுபடுகிறது. இது மதவாதம் ஆகாதா? எனது தாலுகா பிரசாரகர் சுவாமிநாதன்ஜி இதற்கு தகுந்த விளக்கம் அளித்தார். “இந்த நாட்டின் பூர்விகக் குடிமக்கள் ஹிந்துக்கள். அவர்கள் மதரீதியாக ஹிந்துக்கள் என்று அடையாளப்படுத்தப்படுவது இப்போதுதான். ஹிந்து என்ற பெயரே பிறரால் நமக்குச் சூட்டப்பட்டதுதான். இந்த நாட்டின் மக்கள் பிற சமயங்களுக்கு மாறும்போது, நமது சமயத்தின் எதிரிகள் ஆகிவிடுகிறார்கள் என்று விவேகானந்தர் அதனால்தான் சொன்னார். நம்மைப் பொருத்த வரை நாடே முக்கியம். அதை வலுப்படுத்தும் எதையும் ஆதரிப்போம். இப்போதைக்கு பிளவுபட்டுக் கிடக்கும் ஹிந்து சமுதாயம் ஒன்றாக வேண்டி இருக்கிறது. இது நடந்தாலே பிற சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்துவிடும்” என்றார் சுவாமிநாதன்ஜி.

***

சங்கத்தில் நான் சேர்ந்து இந்த ஆண்டுடன் 38 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1992இல்   அயோத்தி இயக்கத்தின் போது சங்கம் தடை செய்யப்பட்டபோது, சங்கம் மீது கடுமையான வெறுப்பு உமிழும் பிரசாரம் ஊடகத்தில் நடத்தப்பட்டது. அப்போது காந்திஜி கொலையில் சங்கத்துக்கு தொடர்பிருந்ததாக மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.

சங்கத்தில் சேர்வதற்கு முன் காந்திஜி கொல்லப்பட்டது சரியே என வாதிட்டவன் நான். சங்கம் எனது பார்வையை மாற்றியது. இப்போது சங்கம் அந்தப் பாதகத்தைச் செய்யவில்லை என்று வாதிடும் நிலையில் நான் இருந்தேன். இது சங்கத்தை வெளியில் இருந்து பார்ப்போருக்கு புரியவே வாய்ப்பில்லை.

இப்போதும்கூட, சங்கத்தின் செல்வாக்கைத் தாங்கிக்கொள்ள முடியாமல், போகிற போக்கில், காந்தியைக் கொன்றவர்கள் தானே நீங்கள் என்று கேலி செய்து செல்பவர்களைக் காண்கிறேன். அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களிடம் விவாதித்து நமது சக்தியை விரயம் செய்ய வேண்டியதில்லை என்ற முடிவுக்கு இறுதியில் நான் வந்திருக்கிறேன். 

ஜெயமணிஜியின் கிராம விகாஸ் பரிஷத் அனுபவங்களையும், சிவராம்ஜியின் எளிமையான வாழ்க்கையையும்  நேரில் அறிந்தவன் நான். சங்க காரியாலயத்தில் தினமும் பாடும் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் மகாத்மா காந்தியை வணங்கி வருபவன்  நான். மகாத்மாவின் கிராம முன்னேற்றத்தை தனது வாழ்வின் இறுதி லட்சியமாகக் கொண்டு, கோண்டாவில் தவவாழ்க்கை வாழ்ந்த நானாஜி தேஷ்முக் பற்றி இவர்களிடம் சொல்வதில் எந்தப் பொருளும் இல்லை.

‘மகாத்மா காந்தியும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்’ என்ற தலைப்பில் பெரிய புத்தகமே எழுதலாம். மதமாற்றத்துக்கு கண்டனம், பசுவதைக்கு எதிர்ப்பு, சுதேசிப் பொருளாதாரம், கிராம முன்னேற்றம், தேசிய சிந்தனை, ராமராஜ்யம், தீண்டாமையை ஒழிக்க முயற்சி, அர்ப்பண மனோபாவம், பொது வாழ்வில் நேர்மை… என எத்தனையோ விஷயங்கள் சங்கத்துக்கும் காந்திஜிக்கும் பொதுவாக இருக்கின்றன. அவற்றை எல்லாம் இந்த மண்டூகங்களுக்கு விளக்கிச் சொல்லிப் பயனில்லை.

எனது கவலை அதுவல்ல. அரசியல் அரங்கில் செய்யப்படும் வெறுப்பூட்டும் பிரசாரத்தால் ஆவேசம் அடையும் ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் பலர் சமூக ஊடகங்களில் காந்திஜியை தவறாக விமர்சிப்பதைக் காணும்போதுதான் வேதனை மிகுகிறது.

அவர்களுக்காகவே எனது அனுபவங்களை எழுதத் துணிந்தேன். இந்த ஆண்டு மகாத்மா காந்திஜியின் 150வது ஜயந்தியை ஒட்டி தேசிய சிந்தனைக் கழகம் வாயிலாக பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். நம்மைப் பொருத்த வரை, மகாத்மா காந்தி, வாராது வந்த மாமணி. எனவே தான் அவரை   ‘வாழ்க நீ எம்மான்!’ என்று பாரதியின் பாடலால் பாடி மகிழ்கிறோம்.

மகாத்மா காந்தி ஓர் உண்மையான ஹிந்து. மதத்தால் மட்டுமல்ல, கலாசாரத்தால், தர்மத்தால், பண்பாட்டால் அவர் ஓர் உன்னதமான ஹிந்து. தனது பெருந்தன்மையாலும், அவசர முடிவுகளாலும் அவர் சில பிழைகளைச் செய்திருக்கலாம். ஆனால், அவர் மகத்தான ஒரு மானுடர். ஹரிஜன முன்னேற்றத்துக்கான அவரது தவிப்பு தேசநலன் சார்ந்ததும் கூட. பாரதம் குறித்த அதி உன்னதமான கனவுகள் கண்ட மாபெரும் தேசபக்தர் காந்திஜி. தனது மரணத்தால், உயிர்த் தியாகத்தால், தனது மாண்பை அவர் நிறுவிச் சென்றுவிட்டார்.

மகாத்மா காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால், அவரது பிற்கால அரசியல் சிந்தனைகள் வெளிப்பட வாய்ப்பு இருந்திருக்கக் கூடும். அப்படி நிகழும் வாய்ப்பு இருந்திருந்தால், விடுதலைக்குப் பின் காங்கிரஸைக் கலைக்கச் சொன்ன அவரது இருப்பிடம், இறுதியில் சங்கமாகத் தான் இருந்திருக்கும் என்பது எனது ஊகம்.

***

ராமனும் கிருஷ்ணனும் ஆண்ட பூமி இது. வேதங்களும் சங்கப் புலவர்கள் யாத்த கவிதைகளும் இன்றும் வாழும் பூமி இது. கல்வி, கணிதம், அறிவியல், சிற்பம், கட்டடக் கலை, விவசாயம், போர்க்கலை, இலக்கியம், மருத்துவம், சமயம், வணிகம், அரசியல், வாழ்வியல் என பல துறைகளிலும் உயர்ந்தோங்கி விளங்கிய நாடு பாரதம். உலகுக்கு உயர் பண்பாட்டை போதிக்கும் சான்றோர் பூமி இது.

இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த வீழ்ச்சிக்குப் பிறகு நவீன இந்தியாவைக் கட்டமைக்க எத்தனையோ மகான்கள் பாடுபட்டிருக்கின்றனர். அவர்களுள் முதன்மையானவர் சுவாமி விவேகானந்தர். அவரது அடியொற்றி தேசிய அரசியலில் சாதனை புரிந்தவர் மகாத்மா காந்தி. அதேபோல, சுவாமிஜியின் வழிகாட்டலில் சமுதாயத்தில் மாற்றம் விளைவித்தவர் டாக்டர்ஜி. இந்த இரு புள்ளிகளும் இணையும் இடத்தில்தான் நமது நாட்டின் விஜயத் துவஜத்துக்கான கம்பத்தை நாட்ட முடியும்.

$$$

One thought on “எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…

  1. காந்தி தனது பெருந்தன்மையாலும் அவசர முடிவுகளாளும் சில பிழைகள் செய்தார் மற்றபடி அவர் நல்லவர் என கூறுவது சிறுபிள்ளைதனம். அவர் செய்த ஒங்வொன்றும் மிக நுட்பமாக வருங்காலத்தில் இந்துக்கள் மீண்டெழாதவாறு எல்லாவற்றையும் செய்துள்ளார். நேருவை தேர்ந்தெடுத்தது தவறு என கூறும் நீங்கள் அவர் எந்த அதிகாரத்தை பயன்படுத்தி நேருவை தேர்ந்தெடுத்தார். பாமரனை ஏமாற்றும் தந்திரத்தில் தலை சிறந்தவர் காந்தி. அந்த தந்திரத்தாலேயே அவர் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகியும் இந்நாட்டின் ஆணிவேரான இந்துக்கள் எழவே முடியாமல் செய்த நாசக்காரன் என்பது தான் அவரது சரித்திரத்தை ஆராய்தால் நாம் புரிந்து கொள்ளவதாகும்.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s