ஒரு தீர்க்கதரிசியின் பார்வையில் இந்திய வரலாறு

-பேரா.  சி.ஐ.ஐசக்

முன்னுரை:

பாரத வர்ஷத்தின் இந்த ஆண்டு ஒரு குறிப்பிடப்பட வேண்டிய ஆண்டாகும்.  ஒரு தீர்க்கதரிசியின் 150வது ஜயந்தியைக் கொண்டாடும் ஆண்டு.  ஒரு துறவி என்பதற்காக சுவாமி விவேகானந்தர் தன் எல்லைகளை ஆன்மிக வட்டத்திற்குள் மட்டும் குறுக்கிக் கொண்டு விடாமல் பருப்பொருள் உலகிலும் தனது உறுதியான கால்தடங்களைப் பதித்தவர்.  பட்டறிவிலும், அறிவு நெறியிலும் மேலோங்கிய இந்திய மண்ணில் ஆன்மிகத்திலும், பருப்பொருளிலும் ஒருங்கே தன் முத்திரையைப் பதித்தவர் சுவாமி விவேகானந்தர்.  இந்திய இளைஞர்களின் திறமையில் அவர் தனது உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.  அதை வழிமொழிவது போல அவர்களை “அம்ருதஸ்ய புத்ர” (அமுத மைந்தர்கள்) என்ற உபநிடத வாக்கியத்தை மேற்கோள் காட்டுவார்.

பாரதம் பத்தாயிரம் ஆண்டுகள் நிலையான, தொடர் வரலாற்றினை உடையது.  வேறு எந்த தேசமும் இதுபோன்ற நெடிய வரலாற்றைக் கொண்டதில்லை.  இந்த நாட்டில் முன்னேறி மேல் எழும்பி வளர்ந்த எந்த இயக்கங்களிலும், அலைகளிலும் பலவித சுழற்சிகளைக் காண நேரிடும். இந்தச் சுழற்சிகள் அனைத்துமே பழைமையான பாரம்பரியத்திலும்,  நன்னெறிகளிலும் ஊறித் திளைத்தவை.  இந்த சுழற்சி முந்தைய சுழற்சியை முற்றிலும் அழித்து எழும்பிய சுழற்சியாக இல்லாமல், பழைய சுழற்சியின் புதிய, மெருகுபடுத்தப்பட்ட மாற்றமாகவே விளங்குகிறது.  வேதகாலம் முதற் கொண்டு இன்றைய காலகட்டம் வரையில் இதுவே இந்திய வரலாற்றின் மகத்துவமாகும். இதனை நாம் இதிகாச, புராணங்களில் தொடங்கி, பௌத்த, சமண இலக்கியங்கள், ஆன்மிக மற்றும் மதம் சாரா இலக்கியங்களிலும் காண இயலும்.  அதனால் தான் இந்திய வரலாறு துண்டிக்கப்படாத ஒரு நீள் பாரம்பரியத் தொடர்ச்சியாகும்.

ஆனால் கல்வித் துறை இந்த வரலாற்றை அணுகும் விதம் தான் பிரச்சனைக்குரியதாக உள்ளது.  காலனிய ஆதிக்கத்திற்குப் பின் ஐரோப்பிய மைய நோக்கிலேயே நமது வரலாறு பார்க்கப்படுகிறது.  வரலாற்று நிபுணர்களும், கல்வியாளர்களும் இந்த ஐரோப்பிய வழியிலேயே நமது பாரம்பரியத்தை நமக்கு சுட்டிக் காட்டுகின்றனர். இதனால் பாரத மக்கள் சமூகத்தில் குறிப்பாக இந்திய மாணவர் மத்தியில் ஒருவகை பிரிவினைவாதம் உள்மன ரீதியாகத் தோற்றுவிக்கப்படுகிறது.  இத்தகைய  பிளவுகளை பல இந்திய உளவியல் மேதைகள் கண்டுணர்ந்து, அவற்றைச் சீர் செய்வதற்கான வழிகளையும் சொல்லிச் சென்றுள்ளனர்.

அத்தகைய மேதைகளின் வரிசையில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர்.  அடிப்படையில் அவர் ஒரு துறவி மட்டுமல்ல.  தத்துவஞானியும் கூட.  சத்தியத்தை வெளிக் கொணரும் உண்மை வரலாற்றின்  பங்கினை நன்கு உணர்ந்தவர்.  உலக வரலாறு மற்றும் நமது பாரத வரலாறு குறித்த அவரது கருத்துக்களை நாம் வகைப்படுத்துவோம்.

வரலாற்றிற்கு இந்தியப் பார்வையுடன் கூடிய விளக்கம் காணப் பரிந்துரை:

ஜேம்ஸ்மில் போன்ற வரலாற்று விற்பன்னர்களின் செய்கையால் நமது இந்திய வரலாறு தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.  இது பாரதத்தின் ஆன்மாவையும், தேசியவாதத்தையும் குலைப்பதற்கு திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதியாகும்.  இந்தியாவிற்கு என்று தனி வரலாறு கிடையாது என்பதும், வரலாற்று உணர்வே கிடையாது என்பதும் ஒரு பொய்யான, போக்கிரித்தனமான சித்தரிப்பாகும்.  கிரேக்கப் பனுவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நமது இதிகாச, புராணங்கள், சரிதங்கள், இலக்கிய நூல்கள் முதலியவற்றை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை.

வரலாறு என்பது நமது முந்தைய தவறுகளைத் திருத்திக் கொள்ள உதவும் ஒரு குறியீட்டு முள்ளாக இருக்க வேண்டும்.  நமது வழி இந்தக் குறிக்கோளுக்கு உதவியாக பன்னெடுங்காலமாக செயல்பட்டு வருகிறது.  காலனியச் செயல்பாடுகள் இதற்கு முற்றிலும் வேறாக நமது பாரம்பரியத்திற்கு முரணான வரலாற்றை எழுதி விடுகிறது.  இந்து சமுதாயத்தின் உயர்மதிப்பை மீண்டும் உயிர்ப்பித்து,  இளமையும், தெம்பும் ஊட்டுவதில் தான் சுவாமி விவேகானந்தரின் மொத்த முயற்சியும் வலுப்பெற்றிருந்தது.

அவரது முதல் அக்கறையே நம்முடைய வரலாற்று அறிவின் போக்கினையும் இலக்கையும் மாற்றி அமைப்பதில் தான் முனைந்திருந்தது.   ராமகிருஷ்ண மடத்தை நிறுவுவதில் தொடங்கி, மகாசமாதி அடையும் வரை இந்த நோக்கம் ஒன்றே அவரது சொல்லிலும்  செயலிலும் எதிரொலித்தது.

சென்ற நூற்றாண்டின் ஓர் ‘இந்துப்புயல்’ என கருதப்பட்ட சுவாமி விவேகானந்தரின் கவனம் தொன்மை பாரதத்திற்கும், நவீன பாரதத்திற்கும் ஒரு பாலம் அமைப்பதில் தான் இருந்தது.  அவருடைய மத நிறுவனம் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களால் இவ்வாறு சித்தரிக்கப்படுகிறது *1 “நெறி பிறழ்ந்தவர் என சித்தரிக்கப்பட்டதால் மனம் வெதும்பிக் கிடந்த இந்து ஆன்மாவிற்கு விவேகானந்தர் அருமருந்தாய்த் தோன்றி அதன் பாரம்பரியத் தொன்மை வேர்களை நம்பிக்கை வலுவூட்டி பலப்படுத்தினார்” *2.

எனவே தான் விவேகானந்தர் வரலாற்றின் மறைந்து கிடக்கும் சத்தியத்தை நம்பினார்.  ஞான மரபு முறைகளை அறிந்துகொள்ள அவர் இந்திய வழிகளைக் கண்டுபிடித்தார்.  “ஒவ்வொரு நாடும் தமக்கே உரிய வினோதமான செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.  சில நாடுகள் அரசியல் மூலம் தம்மை வெளிப்படுத்திக் சொள்கின்றன; சில நாடுகள் சேவை மூலம் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன; மற்ற நாடுகள் வேறு வேறு வழிகளில் தம்மை வெளிப்படுத்துகின்றன.  எம்மைப் பொருத்த வரையில் நமது செயல்பாடுகளின் இயங்குதளமாக மதமே விளங்குகின்றது. ஆங்கிலேயர் மதத்தை அரசியல்  மூலம் புரிந்து கொள்ளலாம். அமெரிக்கர்கள் தங்களது சேவைகள் மூலம் மதத்தைப் புரிந்து கொள்ளலாம்.  ஆனால் ஓர் இந்து அரசியலை மதம் மூலம் தான் புரிந்து கொள்கிறான். சமுதாய அமைப்பை மதம் மூலமே புரிந்து கொள்கிறான்.  அவனைப் பொறுத்த வரையில் அவனுக்கு மதம்  மூலமே அனைத்தும் விளக்கப்படுகிறது” *3.

இந்திய வரலாற்று ஆய்வினை அவர் தமக்கே உரிய முறையில் நமக்கு வழங்கியுள்ளார் *4. அதன் நோக்கம் எந்த ஒரு நாட்டையும், எந்த ஓர் இனத்தையும் குறைத்து மதிப்பிடவில்லை.  வரலாற்றின் தந்தை என கருதப்பட்ட கிரேக்க அறிஞன் ‘ஹிரோடோடஸ்‘ கூட கிரேக்கம் சார்ந்து தான் சிந்தித்தான்; செயல்பட்டான் *5.

கார்ல் மார்க்ஸிடம் இருந்து விவேகானந்தர் முற்றிலும் வேறுபட்டார்.  சுவாமிஜியைப் பொருத்த மட்டிலும், “நாகரிகத்தின் வரலாறு என்பது பருப்பொருளில் புதைந்து கிடக்கும் ஆன்மாவைத் தொடர்ந்து வாசிப்பதாகும்”  *6 “அனைத்து சமுதாயத்தின் வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறே ஆகும்” என்ற மார்க்ஸின் கருத்துடன் இவருடைய கருத்து முற்றிலும் வேறுபட்டதாகும் *7.

மேலும் சுவாமிஜியைப் பொருத்த வரை  “மொத்த மனித இனத்தின் வரலாறு என்பது இயற்கை விதிகளுக்கு, அதாவது வேதகால வர்ணாஸ்ரம விதிகளுக்கு எதிரான போராட்டமே” *8  அவரைப் பொருத்த வரை மனிதன் எந்த நிலையிலும் மிருகம் அல்லன்.  மாறாக பிரபஞ்ச உண்மைகளை அறியத் துடிக்கும் ஓர் உன்னதமான பிறவி.  அதற்காக அவர் மார்க்சிஸத்தை ஒரேடியாக நிராகரிக்கவில்லை.  “நான் சோஷலிஸத்தை முழுமையாக எதிர்க்கவில்லை.  ஏனெனில் சோஷலிஸம் என்பது முழுமையான கருத்துருவாக்கம் என்பதனால் அன்று.  பட்டினி கிடப்பவனுக்கு பாதி ரொட்டி துண்டு மேல் அல்லவா?” *9.

எனவே தான் அதிகார மாற்றத்தின் முன்மாதிரி வடிவை அவரால் முன்னேற்ற வழிகளில் தெளிவாகக் கூற முடிந்தது.  அதாவது வர்ணாசிரம அடிப்படையிலான பகுப்பு *10 பேதம் குறித்த சுவாமிஜியின் பார்வை மார்க்ஸின் பார்வையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது.  “ஆனால் உலக வரலாற்றைக் கூர்ந்து பார்க்கும் பொழுது இயற்கை விதியை உறுதி செய்யும் விதமாக நான்கு சாதிகளான பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் போன்ற பிரிவினர் எல்லா சமுதாயத்திலும் நிலவி வந்துள்ளனர். முறைப்படி ஒவ்வொரு பிரிவும் அடுத்தடுத்து உலகை ஆண்டு வந்திருக்கிறது” *11.

நிச்சயம் இது அறிவு சார்ந்த முறையில் வரலாற்றை அணுகுவதாகும்.  மேலும் இது பல ஆய்வுகளுக்கு உட்பட்டது.  அவரைப் பொருத்த வரையில் இந்த அதிகார மாற்றமோ அல்லது பரிணாமமோ மாற்ற முடியாத பிரபஞ்ச விதியான வர்ணாசிரம தர்மத்துடன் ஒரே தளத்தில் இருப்பதாகும்.  இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது.  “முதல் மூன்று வர்ண வகுப்புகளும் முன்னிலை பெற்று விட்டன.  இப்பொழுது நான்காவது பிரிவான சூத்திரர்களின் காலம்.  இதை எவராலும் தடுக்க இயலாது” *12.

சூத்திர ராஜ்ஜியம் என்பது அவரைப் பொருத்த வரையில் பெறப்படவேண்டிய உயர்நிலையோ அல்லது பெறப்பட வேண்டிய புனித ஆசீர்வாதமோ அல்ல.  முதல் மூன்று ஆளுமைகளும் தத்தமக்குரிய பலமும், பலவீனமும் உடையவை *13.

சுவாமிஜி கூறுவதைக் கேட்போம்.  “இறுதியில் சூத்திர ராஜ்ஜியம் வரும்.  உடல் உழைப்பால் பெறப்படும் வசதிகள் பரவலாக்கப்படுவதே இதன் பலனாகும்.  கலாசாரம் தன் நிலையிலிருந்து கீழே இறங்கும்.  அறிவில் தாழ்ந்த கல்வி எங்கும் பரவலாக்கப்படும்.  அசாதாரண அறிவுத் திறம் மிகமிகக் குறைவாகக் காணப்படும்” *14.

தீர்க்கதரிசியான சுவாமிஜி சூத்திர ராஜ்ஜியத்தின் குறைபாடுகளை தொலைநோக்குடன் பார்க்கிறார். “இந்தப் புதிய ராஜ்ஜியத்தின் முதல் கிரணம் மேலைநாடுகளின்  கீழ்வானத்தில் மின்னி எழும் …………. ….. ……. …… ……… ஏனெனில் காலம் காலமாய் கடுமையான அழுத்தத்தினாலும், ஆதிக்கத்தினாலும் பன்னெடுங்காலமாக விதியெனச் சொல்லி சூத்திரர்கள் குறுகிய மனம் படைத்தவராய், அடிமைகளாய், மேல்சாதியினரின் அடிவருடும் ஈனப்பிறவிகளாய், மிருகங்களாய் நடத்தப்பட்டு வந்தனர் *15”.

சூத்திர ராஜ்ஜியத்தை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது. வேறு வடிவங்களுக்கான தேடுதலே மனிதனை இந்த இடத்தில் கொண்டு நிறுத்தியுள்ளது.  இந்தத் தேடுதல் சில தொலைநோக்குப் பார்வைகளால் முந்தைய பல வடிவங்களின் குறைகளையும், பற்றாக்குறையையும் நிராகரித்துள்ளது.  எதிர்பாராத சிலவற்றை நிதர்சனத்தில் கொண்டு வந்ததுள்ளது.  “சோஷலிசம் அல்லது கம்யூனிசம் பேசும் நாடுகளில் காணப்படும் நிலைமை ஏனைய சமூக அமைப்பைக் கொண்ட மற்ற நாடுகளில் உள்ள நிலைமையை விட கொடுமையற்றது எனக் கூற இயலாது அல்லது சோஷலிசமும், கம்யூனிசமும் உலவும் நாடுகளில் மனிதன் தன் சுயமரியாதையை முழுவதும் மீட்டுவிட்டான் என்று கூற இயலாது.  சூத்திரர் பிரிவில் நிலவும் கொடுமைகள் மேற்கூறிய நாடுகளிலும் நிலவுகிறது” என்கிறார் சுவாமிஜி *16.

அகன்ற பார்வை உடைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விமர்சகர்கள்,  சுவாமிஜியின் இந்த புதிய சித்தாந்தம் மனித இனத்தை  இழிவுபடுத்துவதாகவே குற்றம் சாட்டினர்.  அவர்கள் சுவாமிஜியின் பொருளாதாரப்  பரிணாமத்தின் விளக்க உருவை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.  மற்ற பிரிவில் இருந்த பொருத்தமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய அவரது பாரதம் சார் பார்வையுடன் கூடிய தேடுதலைப் புரிந்து கொள்ளவில்லை.

சுவாமிஜியைப் பொருத்த வரை நமது நாகரீகத்தின் மொத்த வரலாறுமே இவ்வாறு கூறப்படும் இயற்கை விதியினை எதிர்த்து நடத்திய தொடர் போராட்டமே ஆகும். *17

சுவாமிஜியின் சூத்திர ராஜ்ஜியம் குறித்த சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளும் எவரும், சுவாமிஜி எந்த கருத்துருவாக்கத்தின் மீது தனது வாதங்களை முன்வைக்கிறாரோ அந்த கருத்துருவாக்கத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவருடைய கருத்துருவாக்கத்தின் ஒரு நுனியைப் பற்றிக் கொண்டு மற்ற பகுதியை விமர்சிப்பது என்பது அறிவியல் அணுகுமுறையாகாது.

சூத்திர ராஜ்ஜியம் குறித்த கருத்தினை அதன் இடம் பொருளிலிருந்து முற்றிலும் நீக்கிவிட்டு, அதனை ஒட்டுமொத்த வடிவமைப்பிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு, அது ஒரு புரட்சிகரமான சிந்தனைக் குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான சர்வாதிகாரத்தை முன்வைக்கும் கருத்துருவாக்கம் எனக் கொள்ள இயலாது.

அரசியல் பரிணாமத்தில் ஒவ்வொரு காலமும் அதனுடைய ஏற்றங்களையும், தாழ்வுகளையும் கொண்டது.  தாழ்த்தப்பட்டவை மேல் வந்து அரசாளும்பொழுது சமூகம் இன்னும் வேறுபல வடிவங்களைத் தேடி ஓடுகிறது.  நான்குவித வர்ணாசிரம அரசுகளிலும் நல்ல விஷயங்களின் ஓர் இயைந்த கலவையைத் தான் சுவாமிஜி கொண்டுவர எண்ணினார்.  அப்படிப்பட்ட ஒன்றே ஒரு நிலையான லட்சிய முறையாகும் என்று நம்பினார்.  “ஒரு நாட்டில் குருமார்களின் ஞானமும், ராணுவ கலாசாரமும், பொருளாதாரப் பகிர்வும், நான்காம் வர்ணத்தினரை சமமாகப் பாவிக்கும் நிலையும் தம்மிடமுள்ள கெட்ட விஷயங்களை விட்டொழித்து இருக்குமேயானால் அதுவே ஒரு மிகச் சிறந்த நிலையாகும்” *18

முரண்படாத நம்பிக்கைகளும் வரலாறும்:

ஒரு இந்துவிற்கு வரலாறு என்பது அவன் மதம் சார்ந்த தீவிர நம்பிக்கைகள் அல்ல.  ஆனால் செமிட்டிக்  (இறுகலான, குறுகலான  நம்பிக்கை உடையவர்கள்) மதத்தவர்களுக்கு  மதம் என்பது பாவு நூலாகவும், ஊடு நூலாகவும் உள்ளது.  அவர்களுடைய நம்பிக்கை ஆன்மிகத்தின் மிக வலுவற்ற அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது.  19ஆம் நூற்றாண்டின்  ஆரம்பத்தில் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர வளர தேவாலயங்கள் தங்கள் பகுத்தறிவு அடித்தளத்தை இழக்கத் தொடங்கின.  எனவே அவை இப்பொழுது குருட்டு நம்பிக்கையில் தான் எழுப்பப்பட்டுள்ளன.  எங்கு பிறந்ததோ அங்கேயே அவற்றால் உயிருடன் இருக்கப் போராட வேண்டியுள்ளது.  “ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.  வரலாற்று ஆய்விற்கும் நமது குறிக்கோளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.  நமது குறிக்கோள் தர்மத்தை அடைவதற்கான ஞானத்தைப் பெறுவதாகும்.  மொத்த விஷயத்தையும் பொய் என நிரூபித்தாலும் அதனால் நமக்கு துளியும் நட்டம் வந்து விடாது” *19.

அப்படி எனில் ஒட்டுமொத்த வரலாற்றினால் நமக்கு என்ன தொடர்பு?  வரலாற்றிலிருந்து ஒரு பெயர் விடுபடுவதோ, ஒரு நிகழ்வு விட்டுப் போவதோ ஒரு இந்துவிற்குப் பெரிய விஷயமே இல்லை.  அவனுடைய அக்கறை எல்லாம் வரலாற்றில் தர்மம் வீற்றிருக்க வேண்டும்.  ‘சதபத பிராமணம்‘ என்ற மிகத் தொன்மையான நூலில் பாண்டவர்களின் பெயர் விடுபட்டிருப்பதற்கு ஒரு இந்தியனின் ஆன்மிக மனம் பெரிதாக அலட்டிக் கொள்ளாது.  மாறாக,  மகாபாரதமும் ஏனைய நூல்களும் யுதிர்ஷ்டிரன், அர்ஜுனன், பீமன் போன்றோரைப் பற்றி குறிப்பிடுகின்றன *20.

ஐரோப்பிய நோக்கில் சிந்திக்கும் உலக சிந்தனையாளர்களுக்கு குரு க்ஷேத்திரப் போர் என்பதே சந்தேகத்துக்குரியதாகும்.  “ஆனால் குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால வம்சத்தினருக்கும் இடையில் போர் நிகழ்ந்திருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன……… ஒரு சிலரால் புனையப்பட்ட உருவகமே குருக்ஷேத்திர யுத்தமாகும். அதன் மறைபொருளாய் இருக்கும் முக்கியத்துவத்தை அலசிப் பார்த்தால் அந்தப் போர் என்பது மனிதனிடம் உள்ள நல்ல குணங்களுக்கும், கெட்ட குணங்களுக்கும் இடையில் நடக்கும் போராட்டமே என்பது விளங்கும்.  இதை ஒரு பகுத்தறிவற்ற விஷயம் என ஒதுக்கிவிடமுடியாது” *21.

இந்த கருத்து வேறுபாடு ஒரு இந்துவைப் பொருத்த வரை ஒரு பிளவோ அல்லது அவனது கோவில்களுக்கு நடுவில் தோன்றிய பிரிவோ அல்ல.  அவனுடைய முழு கவனமும் புருஷார்த்தத்தை நோக்கித் தான் உள்ளது.  புருஷார்த்தம் இங்கே அறம், பொருள், இன்பம், வீடு (தர்மார்த்த காம மோட்சம்)  ஆகியவையாகும். அவனைப் பொருத்த வரை வரலாறு என்பது அவனுடைய வாழ்வையும், தர்மத்தையும் தூக்கி நிறுத்தும் ஒரு கதையாடல். அவ்வளவு தான்.

“வெளிநாட்டு மன்னர்களின் படையெடுப்பால் பல கோவில்கள் இடித்துத் தள்ளப்பட்டன.  ஆனால் உடனே ஓர் ஆவேச அலை பாரதத்தில் எழுந்தது.  மீண்டும் அடுக்கடுக்கடுக்காய் கோவில்களும், கோபுரங்களும், எழுப்பப்பட்டன.  தென்னிந்தியாவில் சிதைக்கப்பட்ட சில கோவில்களும், குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயமும் வரலாற்றறிவையும், இனவரலாறு பற்றிய நுட்பமான உள்பார்வையையும் புத்தகங்களை  விட அதிகமாக சொல்லிக் கொடுக்கும்’’  என்பார் சுவாமிஜி *22. சுவாமிஜி கூறும் வரலாறு என்பது நூலறிவைத் தாண்டிய ஒன்று.  அதே நேரம் அவருடைய வரலாறு குறித்த விளக்கங்கள், உலகப் பார்வையுடன் உட்பின்னல் பின்னப்பட்டவை.

இந்தியத் தளத்தில் வரலாறும் தர்மமும்:

மேலும் சுவாமிஜி ஓர் இந்துவின் சிறப்பம்சமாகக் குறிப்பிடுவது அவன் தர்மத்தை எவ்வாறு கடைபிடிக்கிறான், பரிபாலிக்கிறான்,  உலக நடைமுறைக்கு அதனை எவ்வாறு பயன்படுத்துகிறான் என்பதே என்கிறார்.  பாரத நாடு தோன்றிய நாள் முதல் தர்மமும், பர சிந்தனையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தே வளர்ந்து வந்துள்ளன.

ஒரு தேசத்தின் உயிர்த்துடிப்பு எந்த இடத்தில் மையம் கொண்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.  அதன் மீது தான் அந்த தேசத்தின் தேசியம் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.  தேசியத்தின் மீதான நுண்மாண்பு உயிர்ப்புடன் இருக்கும் வரையில் அந்த தேசம் அழிவதில்லை. “நாம் வணங்கும் இத்தாய்த் திருநாட்டை முற்றுகையிட வெளி தேசத்து மன்னர்கள் அலைபோல் வந்தனர்.  ‘அல்லாஹு அக்பர்’ என்ற முழக்கம் வானை முட்டியது.   எந்த இந்துவிற்கும் இது தான் தனது கடைசி தருணம் என்பது தெரியாத நிலை.  வரலாற்றில் சிறப்பு மிக்க வேறு எந்த அந்நிய நாட்டிலும் இப்படி ஒரு துன்பமும்,அடக்குமுறையும் நிலவியதில்லை.   எனினும் நாம் ஒரே இனமாக நின்று எந்தக் கஷ்டத்தையும் சந்திக்க ஆயத்தமாக இருக்கிறோம்.  போகப் போக நமக்குத் தோன்றும் அறிகுறிகள் மூலம் நாம் வலிமை பெற்று வருவதோடு வெளிஇடங்களில் பரவுவதற்கும் நாம் ஆயத்தமாகி விட்டோம் எனத் தெரிகிறது.  உயிர்ப்பின் அறிகுறியே விரிவடைதல்தானே?” *23.

வரலாற்றில் அத்வைதப் புரிதல்:

மேலும் சுவாமி விவேகானந்தர் நமது வரலாற்றிற்கு ஓர் லட்சியத் திருப்பத்தை ஏற்படுத்தித் தருகிறார்.  வரலாற்றுக் கல்வியை தேசிய அளவில் போதிப்பதால் சில இலக்குகளை எட்ட முடியும் என திண்மையாக அவர் நம்பினார்.  “நமது  நாட்டிற்கு இரும்புத் தசைகளும், உருக்கு நரம்புகளும், அசுரத் தனமான உறுதியும் தேவை. இம்மூன்றும் எவராலும் தடை செய்ய முடியாததாகவும், எந்த நோக்கத்திற்காகப் பெறப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும் விதமாக சமுத்திரத்தின் ஆழத்திற்கு சென்று மரணத்தை நேருக்கு நேர் சந்தித்தாலும் கலங்காது அந்த நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக இருக்க வேண்டும்” *24.

இந்த இலக்கினை அடைவதற்கான வலிமையைப் பெற சுவாமிஜி அத்வைத கோட்பாடுகளை நம்புமாறு கூறுகிறார்.  “அத்வைதத்தின் ஆழ்பொருள் கூறுகிறது.  முதலில் உங்களை நம்புங்கள். பிறகு வேறு எதை வேண்டுமானாலும் நம்புங்கள் என்கிறது.  எந்த தேசம் தன்னை முழுமையாக நம்புகிறதோ அந்த தேசமே வலிமையாகவும், மேன்மையாகவும் விளங்குவதைக் காணலாம்” *25.  பிரபஞ்ச ரகசியங்களை ஆழமாக ஆராய்வதற்கு ஓர் இனம் இந்தியனுக்கு இந்த பழமையான  வழியே சதியானது என்பதனை சுவாமிஜி நன்கு உணர்ந்திருந்தார்.

அவர் மேலும், நான்கு கோடி மட்டுமே எண்ணிக்கை கொண்ட ஆங்கிலேயர் முப்பது கோடி இந்தியர்களை அடிமைப்படுத்தியதன் காரணத்தைத் தேடத் தொடங்குகிறார்.

“நான்கு கோடி ஆங்கிலேயர் தங்கள் மனத்திண்மையை ஒருமுகப்படுத்தினர்.  ஆனால் நமதுமனத்திண்மை என்பது ஒவ்வொருவரிடமிருந்து தனித்தனியாக பிரிந்து கிடக்கிறது” *26.

பல தேசங்களின் வரலாற்றைப் பார்க்கும் பொழுது ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. தன்னில் முழுமையான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் தேசமே மேன்மையும வலிமையும் பெறுகிறது.  இதுவே அத்வைதத்தின் கூறாகும்.  (அஹம் ப்ரஹ்மாஸ்மி). அதற்கு அவர் இந்தியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை உதாரணமாகக் கூறுகிறார்.  ராபர்ட் கிளைவ் ஒரு சாதாரண குமாஸ்தாவாகவே இருந்தான்.  பணப்பிரச்சனை ஏற்பட்ட பொழுது பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க  மூளையைக் கசக்கிப் பார்த்தான்.  “அந்த முயற்சிகள் தோல்வி அடைந்தபொழுது அவன் தன்னை நம்பத் தொடங்கினான்.  தான் செயற்கரிய சாதனை புரிய வந்துள்ளதாகக் கருதத் தொடங்கினான்.  அதனால் தான் அவன் ஆங்கில சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியானான்.  அவன் தேவாலய குருமார்களை மட்டும் நம்பியிருந்தால் தன் வாழ்நாள் முழுவதும் மண்டியிட்டபடி  ‘ஓ! பிதாவே! நான் பலமற்றவன்.  நான் கீழானவன்.  நான் பாவி’ என்று புலம்பியபடி முடிவில் ஒரு மனநல காப்பகத்தில் சேர்ந்திருப்பான்”*27.

பாரதத்தில் தோன்றிய ரிஷிகள் மனிதர்களை  “அமிர்தஸ்ய புத்ர-  அதாவது – இறவா மனிதர்கள்” என்று கூறியுள்ளனர்.  அப்படிப்பட்ட ஆசீர்வாதமே ஒரு மனிதனை ஆற்றல் மிக்கவனாக,   தைலியசாலியாக மாற்றுகிறது.  ஆனால் அப்படி ஒரு வார்த்தை  பற்றிய குறிப்பு இவர்கள் ஆராய்ந்த நமது வரலாற்றுப் பக்கங்களில் தென்படவே இல்லை.  செமிட்டிக் வழிவந்த மதமானது மனிதனுக்கு நம்பிக்கையை வளர்ப்பதற்கு பதில் சாபம் கொடுக்கிறது.  “சாம்பலில் தோன்றி சாம்பலில் மறையும் பாவிகளே” *28.

ராபர்ட் கிளைவ் போன்ற தனி மனிதர்கள் இந்த சாபத்தைப்  புறந்தள்ளினார்கள்.  இவனைப் போன்ற தனிமனிதர்களே பிரிட்டிஷ் மணி மகுடத்தை அலங்கரித்த மணிகளாவர்.

பிரபஞ்ச சகோதரத்துவத்தின் வரலாற்றைப் பின்னோக்கி ஆராய ஆராய, அது வேதகாலத்தில் போய் நிற்கின்றது.  யஜூர் வேதம் உலகை ஒரு பறவைக் கூடாகப் பார்க்கிறது.  ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறந்த கவியும், இலக்கண விற்பன்னருமான ‘பத்ரு ஹரி‘ என்பவர் ‘நீதி சதகம்’ என்ற நூலில் உலகம் முழுவதையும் ‘வசு தைவ குடும்பகம்’ என்கிறார்.  உலகம் முழுவதும் ஒரே குடும்பம்.  இது இப்பொழுது கிளம்பியுள்ள  ‘உலகமயமாதல்’ என்ற கருத்துருவாக்கத்தை விட மிகச் சிறந்தது *29.

இப்பொழுது உள்ள மில்லினிய உலக வரலாறு என்பதை எடுத்துக் கொண்டால் மதநல்லிணக்கமே முதன்மை பெறும்.  இந்தியப் பாரம்பரியத்தின் பெருமையையும், அதன் உலகளாவிய பார்வையையும் சுவாமி விவேகானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே கண்டுணர்ந்தார்.  மொத்த வரலாற்றையும் ரிக் வேதத்தில் உள்ள ‘ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி‘ (பரம்பொருள் ஒன்றே; அதனை ஞானிகள் பலவாறாக விளக்குகின்றனர்) என்ற ஒற்றை வாக்கியத்தால் விளக்குகிறார் (ஒப்பீடு: ஒன்று பரம்பொருள்;  நாமதன்  மக்கள்- மகாகவி பாரதி).  “பாரதத்தின் மொத்த சரித்திரத்தையும் இந்த நான்கு வார்த்தைகளால் புரிந்து கொள்ளமுடியும்.  பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட சக்தி வாய்ந்த சரித்திரம்.  ஒரே ஒரு தாரக மந்திரத்தை உள்ளடக்கிய சரித்திரம்…… எனவே தான் இந்த நாடு பொறுமைக்கு உறைவிடமாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளது.  பல்வேறு மதங்களுக்கும், இனங்களுக்கும் தனது வாசலைத் திறந்தே வைத்துள்ளது” *30.

நான்கு வேதங்களின் சாரம் அத்வைதமாகும்.  ஒருமை தத்துவத்தை மையப்படுத்தும் அத்வைதத்தை அனைவருக்கும் போதிக்கத் தொடங்கிய சுவாமிஜி அதுவே மனிதனின் நாளைய மதம் என்றுரைத்தார் *31.

அதன் கூற்றின்படி, படைப்பவனும் படைப்பும் வேறு வேறு அல்ல, ஒன்றாகும்.  வேதங்கள் கூறும் இந்த படைப்பவன்-படைப்பு தத்துவம் மூலம் ஒரு முழுமையைக் காண முடிகிறது.  எனவே சுவாமிஜி நமது மொத்த வரலாற்றையும் அத்வைதத்தை அடித்தளமாகக் கொண்டு முழுவதும் மாற்றி அமைக்கிறார்.  “மொத்தப் பிரபஞ்சத்தையும் நேசிக்க வேண்டுமானால் ஏகன் அனேகன்,அதாவது பரம்பொருள் ஒன்று என்கிற சமஷ்டி தத்துவத்தை நேசிக்க வேண்டும்.  பிரபஞ்சம் குறித்த தேடுதல் என்பது இந்திய தத்துவத்தையும், இந்து மதத்தையும் தேடுவதாகும்.  இந்த பரம்பொருள் ஒன்றை நோக்கியே விஞ்ஞானமோ,  தத்துவார்த்தமோ,  மனவியலோ, காதலோ நகர்ந்து கொண்டிருக்கிறது”  *32.

மிக நெடுங்காலமாகவே மேலைநாட்டு விஞ்ஞானிகள் விஞ்ஞானம் என்பது ஆன்மிக ஆத்மாவை மீட்டெடுப்பதே ஆகும் என்று கூறியுள்ளனர் *33.  மேலைநாடுகளில் மதமும், விஞ்ஞானமும் தீவிரமாக மோதிக் கொண்டு ரத்தம் சிந்த நேரிட்டதை நாம் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய வரலாறுகளில் காண்கிறோம்.

வரலாற்று ஆய்வினால் என்ன பயன்?

கேள்வி எழுகிறது.  சரித்திரம் குறித்த ஆய்வினால் மனித சமுதாயத்திற்கு என்ன பயன்?  உண்மையான முழு வரலாற்றின் தேவையை சுவாமிஜி நன்கு உணர்ந்திருந்தார்.  அவர் கூறுகிறார். “வரலாற்று ஆய்வின் மூலம் அதற்குண்டான பலன் உள்ளது.  நாம் உண்மையை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறோம்.  நம்முடைய அறிவீனத்தால் பொய்யான கருத்துக்கள் நம்மைச் சுற்றி உலவவிடப்படுவதால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.  இது போன்ற ஆய்வுகள்,தேடல்கள் குறித்து சிந்திப்பவர்கள் இங்கு குறைவு.  பல்வேறு பிரிவினரும் பலருக்கு பயன்தரும் நல்ல விஷயங்களை உபதேசிக்கும் பொழுது உண்மைக்குப் புறம்பான விஷயங்களைக் கூறலாம் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்” *34.  சுவாமிஜியின் இக்கூற்று,  ‘முடிவே வழிகளை தீர்மானிக்கிறது’  என்ற பிரபலமான இந்திய மார்க்சிய அணுகுமுறையை விளக்குவதாகவே அமைகிறது.

முடிவுரை:

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த நாட்களில் மேல் எழுந்த கலாச்சாரம், வழிமுறைகள், நாகரிகம் இவற்றுக்கு எதிராக பலவீனப்பட்டுப் போன இந்திய கலாசார த்வனியை சுவாமி விவேகானந்தர் மாற்றி அமைத்தார்.  அவர் தான் இந்தியத் தன்மையுடன் கூடிய வரலாற்றைப் பார்வையின் அவசியத்தை உணர்த்தியவர்.  அவர் ஓர்  கீழ்த்திசை வடிவத்தை உலகம் முழுமைக்கும் முன்வைத்தார்.   ஹிரேடோடஸோ,  தனது அனுவபம் மூலம் ஒரு சோர்வுற்ற வீழ்ச்சியையே வரலாறு என முன்வைக்கிறார் *36.

வரலாற்றுப் பார்வை என வரும்பொழுது விவேகானந்தர் தனதுமுந்தைய  ஆய்வாளர்களிடமிருந்து (relating to approach to history) முற்றிலும் வேறுபடுகிறார்.  அவர் இயற்கையின் வழி (law of nature) என்ற  புதிய உதாரணத்தை முன்வைக்கிறார்.  ஆனால் நமது துரதிருஷ்டம் அந்த புதிய உதாரணத்தை நாம் சரியான முறையில் விவாதிக்கவில்லை *37.

சர்வதேச மனித சமுதாயம் முழுமைக்கும் அவருடைய ஆன்மிகத் தேடல் அத்வைத வழிமுறைகளை முன்வைத்தது.  எனவே அவர் முற்றிலும் சர்வதேச அளவிலேயே  விடுதலை குறித்தும், நவீனத்துவம் குறித்தும் சிந்தித்தார்.  பரிபூரண சுதந்திரத்தின் மீது எழுப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு வருங்கால மனிதனுக்கு அவசியம் என்று சுவாமிஜி உறுதியாக நம்பினார்.

அனைத்து நாட்டுச் சங்கம் (League of Nations) தோன்றுவற்கு முன்பே அவரிடம் இந்த எண்ணம் உதயமாகிவிட்டது.  பண்டிட் ஜவஹர்லால் நேரு அவரைப் பற்றி இவ்வாறு சித்தரிக்கிறார்.  “விவேகானந்தர் ஒரு சர்வதேச கருத்துருவாக்கத்தைப் பெற்று விட்டார் *38;  விடுதலை குறித்து அவர் கூறிய கருத்துக்கள் உபநிடதங்களிலிருந்து எழுந்தவை *39”.

அவர் கீழ்க்கண்ட முதுமொழியை உறுதியாக நம்பினார்:   “சுதந்திரமான  எண்ணமும், செயலுமே வாழ்வின் வளர்ச்சிக்கும்,  மேன்மைக்கும்  அடிப்படையாகும்.  அப்படி ஒரு சுதந்திரம் இல்லை என்றால் மனிதனும், அவனது  இனமும், தேசமும் இருப்பதால் பயன் இல்லை” என்கிறார் *40.

சுருக்கமாகக் கூறுவதென்றால் சுவாமி விவேகானந்தர் நமது வேதங்கள் கூறும் சர்வதேச மற்றும் பிரபஞ்ச சகோதரத்துவத்தைக் கடைபிடிக்குமாறு உலக சமுதாயத்தை வலியுறுத்துகிறார்.

$$$

அடிக்குறிப்பு ஆதாரங்கள்:

1. “Rooted in the past and full of pride in India’s heritage, Vivekananda was yet modern in his approach to life’s problems and was a kind of bridge between the past of India and present.” Jawaharlal Nehru, Discovery of India, Penguin Books, New Delhi, 2004, p 368

2. Ibid

3. Swami Vivekananda, Selections from the Complete Works, 15th Impression, Advaita Ashrama, Kolkota, 1998, p 297

4. P. Parameswaranjee, Marx and Vivekananda, New Delhi, 1987, p 41

5. “He was, of course, partial to the Greeks, but his account is very interesting. ………….”Jawaharlal Nehru, Discovery, op cit, p 46

6. Letters of Vivekananda, Letter to Sr. Nivedida, p 366

7. Karl Marx and Frederick Engels, Manifesto of the Communist Party, Moscow, 1973 edn., p 40

8. Swami Vivekananda, Selections from, op cit, 1998, p115

9. Quoted from P. Parameswaranjee, op cit, p 45

10. For further understanding; see P. Parameswaranjee Marx and Vivekananda, New Delhi, 1987, pp 41 ff.

11. Swami Vivekananda, Complete Works, Advaita Ashrama, Kolkota, 1948, Vol. IV, p 382

12. Ibid.

13. P. Parameswaranjee, op cit, p 42

14. Swami Vivekananda, Complete Works, Advaita Ashrama, Kolkota, Vol. IV, 1965, p 399

15. P. Parameswaranjee, op cit, p 44

16. Ibid

17. P. Parameswaranjee, op cit, p 43

18. Swami Vivekananda, Complete Works, Vol. VI, 1965, p 38

19. Swami Vivekananda, Complete Works, Vol. IV, 1948, p 101

20. Ibid

21. Ibid

22. Swami Vivekananda, Lecturers from Colombo to Almora, Advita Ashrama, Kolkota, 2002, p218.

23. Swami Vivekananda, Lecturers from Colombo to Almora, Advita Ashrama, Kolkota, 2002,  p 312

24. Swami Vivekananda, Selections from, op cit, p 206

25. Swami Vivekananda, Lecturers from Colombo to Almora, op cit, p 378

26. Swami Vivekananda, Selections from, op cit, p 288

27. Swami Vivekananda, Lecturers from Colombo to Almora, op cit, p 378

28. Genesis, [OT], Chapter III, Line 19

29. “A famous disciple of Ramakrishna’s was Swami Vivekananda, who very eloquently and forcibly preached the gospel of nationalism. This was not in any way anti-Muslim or anti anyone else…… . None the less Vivekananda’s nationalism was Hindu nationalism, and it had its roots in Hindu religion and culture”. Jawaharlal Nehru, Glimpses of World History, Penguin Books, New Delhi, 2004, p 507

30. Swami Vivekananda, Lecturers from Colombo to Almora, op cit, pp 12, 13

31. Jawaharlal Nehru, Discovery, op cit, p 369

32.  Swami Vivekananda, Bhakti Yoga, Advaitha Ashram, Calcutta, 22nd Impression, 2000, pp 83, 84

33. “In the materialistic age of ours, says Professor Albert Einstein, the serious scientific workers are the only profoundly religious people” …… Jawaharlal Nehru, Discovery of India, Meridian Books, London, 1960, p 574

34. Swami Vivekananda, Complete Works, Vol. IV, 1948, p 101

35. R. C. Majumdar, An Advanced History of India, [3rd edn], London, rpt. 1970, p 881

36. “Herodotus thought over it [decline Persian Empire] and drew a moral from it. He says that a nation’s history has three stages: success; then as a consequence of success, arrogance and injustice; and then as a consequence of these, downfall”. Jawaharlal Nehru, Discovery of India, Penguin Books, New Delhi, 2004, p 50

37. To condemn Bhagavat Gita, as a reactionary document responsible for India’s downfall [as some Marxist thinkers do] and to lay claim to the Swamiji’s concept of Shudra Raj based on the teachings of Bhagavat Gita, as remarkably progressive, is not only dishonest but also mischievous”. P. Parameswaranjee, op cit, p 43

38. “Even in politics and sociology, problem that were only national twenty years ago can no longer be solved on national grounds only. They are assuming huge proportions, gigantic shapes. They can only be solved when looked in the broader light of international grounds. International organizations, international combinations, international laws are cry of the day. That shows solidarity. In science, every day they are coming to a similar broad view of matter”. Jawaharlal Nehru, Discovery, op cit, pp 369, 370

39. Jawaharlal Nehru, Discovery, op cit, p 89

40. Ibid, p 369

குறிப்பு: 

பேராசிரியர் திரு. சி.ஐ.ஐசக், திருவனந்தபுரத்தில் உள்ள பாரதீய விச்சார் கேந்திரத்தின் துணைத் தலைவர் ஆவார். 

இதனை தமிழாக்கம் செய்த  ஸ்ரீ சத்தியப்பிரியன்,  சேலத்தில் வங்கி அலுவலராகப் பணி புரிந்தவர். ஆன்மிக எழுத்தாளர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s