சத்திய சோதனை- 4(26-30)

-மகாத்மா காந்தி

நான்காவது பாகம்

26. சத்தியாக்கிரகத்தின் பிறப்பு

     என்னளவில் நான் மேற்கொண்ட பிரம்மச்சரியமாகிய ஆன்மத் தூய்மை, சத்தியாக்கிரகத்திற்குப் பூர்வாங்கமானதாகும்படி செய்வதற்காக ஜோகன்னஸ்பர்க்கில் சம்பவங்கள் தாமாகவே உருவாகிக்கொண்டு வந்தன. பிரம்மச்சரிய விரதத்தில் முடிந்த என் வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்கள் எல்லாமே அந்தரங்கத்தில் என்னைச் சத்தியாக்கிரகத்திற்குத் தயார் செய்து வந்தன என்பதை இப்பொழுது காண முடிகிறது. சத்தியாக்கிரகம் என்ற சொல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னாலேயே அத்தத்துவம் தோன்றி விட்டது. அது பிறந்தபோது, அதை இன்னதென்று சொல்ல எனக்கே தெரியவில்லை. குஜராத்தியிலும் கூட அதைக் கூற ஆங்கிலச் சொற்றொடரான பாஸிவ் ரெஸிஸ்ட்டன்ஸ் (Passive Resistance – சாத்விக எதிர்ப்பு) என்பதையே உபயோகித்தோம். ஐரோப்பியர்களின் கூட்டமொன்றுக்குச் சென்றிருந்தபோது, ‘சாத்விக எதிர்ப்பு’ என்பதற்கு மிகக் குறுகிய பொருளே உண்டு என்பதைக் கண்டேன். மேலும், அது பலவீனங்களின் ஆயுதமாகவும் கருதப்பட்டது. அதில் பகைமைக்கு இடம் உண்டு என்பதையும், முடிவில் அதுவே பலாத்காரமாக வளர்ந்து விடக்கூடும் என்பதையும் அறிந்தேன். இந்தக் கருத்துக்களை எல்லாம் நான் மறுத்துக் கூறி, இந்தியரின் இயக்கத்தினுடைய உண்மையான தன்மையை விளக்க வேண்டி இருந்தது. இப் போராட்டத்தைக் குறிப்பிடுவதற்கு ஒரு புதிய சொல்லை இந்தியர் கண்டுபிடித்தாக வேண்டும் என்பது தெளிவாயிற்று.

நான் எவ்வளவோ முயன்று பார்த்தும் ஒரு புதிய பெயரைக் கண்டுபிடிக்க என்னால் முடியவில்லை. ஆகவே, இது சம்பந்தமாகச் சிறந்த யோசனையைக் கூறுபவருக்கு ஒரு சிறு பரிசு அளிப்பதாக ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகை மூலம் அறிவித்தேன். இதன் பயனாக மகன்லால் காந்தி ‘சதாக்கிரகம்’ (சத்-உண்மை; ஆக்கிரகம்-உறுதி) என்ற சொல்லைச் சிருஷ்டித்துப் பரிசைப்பெற்றார். ஆனால், அது இன்னும் தெளிவானதாக இருக்கட்டும் என்பதற்காக அதைச் ‘சத்தியாக்கிரகம்’ என்று மாற்றினேன். அதிலிருந்து அப்போராட்டத்திற்குக் குஜராத்தியில் அச்சொல் வழங்கலாயிற்று.

இந்தப் போராட்டத்திற்குச் சரித்திரமே, என்னுடைய தென்னாப்பிரிக்க வாழ்க்கையின் சரித்திரமும் – முக்கியமாக அந்த உபகண்டத்தில் நான் நடத்திய சத்திய சோதனையின் சரித்திரமும் – ஆகும்.

இந்தச் சரித்திரத்தின் பெரும் பகுதியை எராவ்டாச் சிறையில் இருக்கும்போது எழுதினேன். நான் விடுதலையான பிறகு மீதத்தைப் பூர்த்திசெய்தேன். அது ‘நவ ஜீவ’னில் பிரசுரமாகிப் பின்னர் புத்தகரூபமாக வெளிவந்தது. ‘கரண்ட் தாட்’ பத்திரிகைக்காக ஸ்ரீ வால்ஜி கோவிந்தஜி தேசாய், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருகிறார். சீக்கிரத்தில் அதைப் புத்தக ரூபத்தில் வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்.

தென்னாப்பிரிக்காவில் நான் செய்த மிகவும் முக்கியமான சோதனைகளை அறிய விரும்புவோருக்கு உதவியாக இருக்கட்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இன்னும் படிக்காதவர்கள் நான் எழுதிய ‘தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகத்’தைப் படிக்கும்படி சிபாரிசு செய்வேன். அதில் எழுதியிருப்பதை இங்கே நான் திரும்பச் சொல்லப் போவதில்லை. ஆனால், பின்வரும் சில அத்தியாயங்களில் அந்தச் சரித்திரத்தில் கூறப்படாத என் வாழ்க்கையின் சொந்தச் சம்பவங்கள் சிலவற்றை மாத்திரமே கூறுவேன். இவற்றைச் சொல்லி முடித்ததும், இந்தியாவில் நான் செய்த சில சோதனைகளைக் குறித்து உடனே கூற ஆரம்பிப்பேன். ஆகையால், இந்தச் சோதனையை வரிசைக்கிரமத்தில் கவனிக்க விரும்புகிறவர்கள், தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக சரித்திரத்தை முன்னால் வைத்துக் கொள்ளுவது நல்லது.

$$$

27. மேலும் உணவுப் பரிசோதனைகள்

     மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் பிரம்மச்சரியத்தை அனுசரிக்க வேண்டும் என்பதில் நான் ஆர்வத்துடனிருந்தேன். அதேபோல் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கே அதிக அளவு என் காலத்தைச் செலவிடவும், தூய்மையை வளர்த்துக் கொண்டு அதற்கு என்னைத் தகுதியுடையவனாக்கிக் கொள்ளவும் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆகையால், என் உணவு சம்பந்தமாக மேலும் பல மாறுதல்களைச் செய்துகொண்டு, எனக்கு நானே அதிகக் கட்டுப்பாடுகளையும் விதித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. முன்னால் செய்த மாறுதல்களெல்லாம் பெரும்பாலும் தேகாரோக்கியத்தை முன்னிட்டுச் செய்தவை. ஆனால், புதிய சோதனைகளோ, சமய நோக்கில் செய்தவை.

உண்ணாவிரதமும், ஆகாரக் கட்டுப்பாடும் என் வாழ்க்கையில் இப்பொழுது முக்கியமானவைகளாயின. நாவின் சுவையில் அவாவுடையவனிடமே பெரும்பாலும் காமக்குரோதங்கள் இயல்பாகக் குடிகொள்ளும். என் விஷயத்திலும் அவ்வாறே இருந்தது. காம இச்சையையும் நாவின் ருசியையும் அடக்க முயன்றதில் நான் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி இருந்தது. அவைகளை முற்றும் அடக்கிவிட்டேன் என்று நான் இன்னும் சொல்லிக் கொள்வதற்கில்லை. என்னைப் பெருந்தீனிக்காரனாகக் கருதி வந்தேன். எனது கட்டுத்திட்டம் என்று நண்பர்கள் எதை நினைத்தார்களோ அது கட்டுத்திட்டமாக எனக்கு என்றும் தோன்றவில்லை. நான் இன்று கொண்டிருக்கும் அளவுக்குக் கட்டுத்திட்டங்களை வளர்த்துக் கொள்ளத் தவறியிருப்பேனாயின், மிருகங்களிலும் இழிந்த நிலைக்கு நான் தாழ்ந்துபோய் வெகுகாலத்திற்கு முன்பே நாசமடைந்து இருப்பேன். என்றாலும், என்னுடைய குறைபாடுகளைப் போதிய அளவுக்கு நான் அறிந்திருந்ததால், அவைகளைப் போக்கிக் கொண்டுவிடப் பெரும் முயற்சிகளை நான் செய்தேன். இந்த முயற்சிகளின் பலனாக இவ்வளவு காலமும் இவ்வுடலுடன் காலந்தள்ளி வருவதோடு அதைக் கொண்டு என்னால் இயன்ற பணியையும் செய்து வருகிறேன்.

என் குறைகளை நான் அறிந்திருந்ததோடு மனத்துக்கு இசைந்த சகாக்களின் தொடர்பும் எதிர்பாராத விதமாக ஏற்பட்டது. ஏகாதசி தினத்தன்று பழங்கள் மாத்திரமே சாப்பிடுவது அல்லது பட்டினி விரதம் இருப்பது என்று ஆரம்பித்தேன். ஜன்மாஷ்டமி முதலிய விரத தினங்களையும் அனுஷ்டிக்கத் தொடங்கினேன்.

முதலில் பழ ஆகாரத்துடன் ஆரம்பித்தேன். ஆனால், நாவின் சுவையடக்கத்தைப் பொறுத்த வரையில் பழ ஆகாரத்திற்கும் தானிய ஆகாரத்திற்கும் எந்த விதமான வித்தியாசமும் எனக்குத் தோன்றவில்லை. தானிய ஆகாரத்தைப் போலவே பழ ஆகாரத்திலும் நாவின் சுவை இன்பத்திற்கு இடமுண்டு என்பதைக் கண்டேன். பழ ஆகாரத்தில் பழக்கப்பட்டுவிட்டால் அதில் ருசி இன்பம் இன்னும் அதிகமாகிவிடவும் கூடும். ஆகையால், பட்டினி இருப்பது அல்லது விடுமுறை நாட்களில் ஒரே வேளைச் சாப்பாட்டுடன் இருப்பது என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தேன். பிராயச்சித்தம் செய்து கொள்ளுவது போன்ற சந்தர்ப்பம் வந்தால், அதையும் பட்டினி கிடப்பதற்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

உபவாசத்தினால் உடலிலிருந்து கழிவுப் பொருள்கள் நன்றாக வெளியேறிவிடுவதால் சாப்பாடு அதிக ருசியாக இருந்தது; நன்றாகப் பசி எடுத்தது. பட்டினியைப் புலன் அடக்கத்துக்கு மட்டுமின்றிப் புலன் நுகர்ச்சிக்கும் சக்தி வாய்ந்த சாதனமாகப் பயன்படுத்தலாம் என்பது அப்பொழுது எனக்குத் தெரிந்தது. நான் கண்ட இந்த திடுக்கிடும் உண்மைக்கு, பின்னால் எனக்கு ஏற்பட்ட இதே போன்ற அனுபவங்களையும், மற்றவர்களின் அனுபவங்களையும் சான்றுகளாகக் காட்டலாம். என் உடல் நிலையை அபிவிருத்தி செய்யவும், அதற்கு பயிற்சி அளிக்கவும் விரும்பினேன். ஆனால், இப்பொழுது எனது முக்கியமான நோக்கம், கட்டுத்திட்டங்களும் சுவையடக்கமுமே. ஆகையால், முதலில் ஓர் ஆகாரத்தையும், பிறகு மற்றோர் ஆகாரத்தையும் தேர்ந்தெடுத்துச் சோதித்தேன். அதே சமயத்தில் அளவையும் குறைத்தேன். ஆனால் சுவை இன்பம் மாத்திரம் எனக்கு முன்பு இருந்ததைப் போன்றே இருந்தது. ஒன்றைவிட்டு மற்றொன்றைச் சாப்பிட ஆரம்பித்த போது, முன்னால் சாப்பிட்டதைவிடப் பின்னால் சாப்பிட்டது புதிதாகவும், அதிக ருசியுள்ளதாகவும் எனக்குத் தோன்றிற்று.

 இச்சோதனைகளைச் செய்வதில் எனக்குப் பல தோழர்களும் இருந்தனர். இவர்களில் முக்கியமானவர் ஹெர்மான் கால்லென்பாக். இந்த நண்பரைக் குறித்து  தென்னாப்பிரிக்கச் சக்தியாக்கிரக சரித்திரத்தில் முன்பே எழுதியிருக்கிறேன். ஆகையால், அதைப்பற்றி நான் இங்கே திரும்பச் சொல்லப் போவதில்லை. பட்டினியானாலும் சரி, உணவு மாற்றமானாலும் சரி, கால்லென்பாக் எப்பொழுதும் என்னுடன் இருப்பார். சத்தியாக்கிரகப் போராட்டம் உச்சநிலையில் இருந்தபோது, அவருடைய இடத்தில் நான் அவருடன் வசித்து வந்தேன். எங்கள் உணவு மாறுதல்களைக் குறித்து விவாதிப்போம். பழைய சாப்பாட்டை விடப் புதிய சாப்பாட்டில் அதிக இன்பத்தை அனுபவிப்போம். இப்படிப்பட்ட பேச்சுக்கள் அந்த நாளில் அதிக இன்பமானவைகளாக இருந்தன. அவை தகாத பேச்சுக்களாக எனக்குத் தோன்றவே இல்லை. ஆனால், உணவின் சுவையில் கவனம் செலுத்துவது தவறு என்பதை அனுபவம் எனக்குப் போதித்தது. நாவின் சுவையைத் திருப்தி செய்வதற்காகச் சாப்பிடக் கூடாது; உடலை வைத்திருப்பதற்கு என்று மாத்திரமே சாப்பிட வேண்டும். உணர்ச்சி தரும் ஒவ்வோர் உறுப்பும் உடலுக்கும், உடலின் மூலம் ஆன்மாவுக்கும் ஊழியம் செய்யும்போது அதனதன் இன்ப நுகர்ச்சி மறைந்து போகிறது. அப்பொழுது தான் அதற்கென்று இயற்கை வகுத்திருக்கும் கடமையை அது செய்ய ஆரம்பிக்கிறது.

இயற்கையோடு இசைந்த இந்த நிலையை அடைவதற்கு எத்தனைதான் பரிசோதனைகள் நடத்தினாலும் போதுமானவையாக மாட்டா; எந்தத் தியாகமும் இதற்கு அதிகமாகாது. ஆனால், துரதிருஷ்டவசமான இக்காலத்தின் போக்கோ இதற்கு எதிரிடையான திக்கில் பலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அழியும் உடலை அலங்கரிப்பதற்காகவும், மிகச் சொற்ப காலம் அது நீடித்திருப்பதற்கு முயலுவதற்கும், ஏராளமான மற்ற உயிர்களைப் பலியிட நாம் வெட்கப்படுவதில்லை. இதன் பலனாக நம்மையே உடலோடும், ஆன்மாவோடும் மாய்த்துக் கொள்ளுகிறோம். பழைய நோய் ஒன்றைப் போக்கிக் கொள்ள முயன்று, நூற்றுக்கணக்கான புதிய நோய்களுக்கு இடந்தருகிறோம். புலன் இன்பங்களை அனுபவிக்க முயன்று முடிவில் இன்பானுபவத்திற்கான நமது சக்தியையும் இழந்துவிடுகிறோம். இவை யாவும் நம் கண் முன்னாலேயே நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இவற்றைப் பார்க்காமல் இருப்பவர்களைப் போன்ற குருடர்கள் வேறு யாருமே இல்லை. உணவுச் சோதனைகளின் நோக்கத்தையும், அவற்றிற்குக் காரணமாக இருந்த கருத்துக் கோவையையும் இதுவரை எடுத்துக் காட்டினேன். இனி உணவுச் சோதனைகளைக் குறித்துக் கொஞ்சம் விவரமாகவே கூற நினைக்கிறேன்.

$$$

28. கஸ்தூரிபாயின் தீரம்

     என் மனைவி தனது வாழ்க்கையில் மும்முறை கடுமையான நோய்வாய்ப்பட்டு மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்தாள். குடும்ப வைத்திய முறைகளினாலேயே அவள் குணமடைந்தாள். சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருந்த போதோ அல்லது ஆரம்பம் ஆவதற்கிருந்த சமயத்திலோ அவள் முதல் முறை கடுமையாக நோயுற்றாள். அவளுக்கு அடிக்கடி ரத்த நஷ்டம் ஏற்பட்டு வந்தது. ரண சிகிச்சை செய்வது அவசியம் என்று ஒரு வைத்திய நண்பர் ஆலோசனை கூறினார். முதலில் கொஞ்சம் தயங்கினாள் எனினும் பிறகு சம்மதித்தாள். அவள் அதிகப் பலவீனமாக இருந்ததால் மயக்க மருந்து கொடுக்காமல் டாக்டர் ரண சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. கிசிச்சை வெற்றிகரமானதாயிற்று. ஆனால், அவள் அதிக நோவை அனுபவிக்க நேர்ந்தது. நானே அதிசயிக்கத்தக்க தீரத்துடன் அதை அவள் சகித்துக்கொண்டாள். டாக்டரும், அவருக்குத் தாதியாக இருந்து பணிவிடை செய்த அவருடைய மனைவியும் அதிகக் கவனத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டார்கள். இது டர்பனில் நடந்தது. பிறகு நான் ஜோகன்னஸ்பர்க் போக டாக்டர் அனுமதித்தார். அவளைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்றும் சொன்னார்.

ஆனால், அவளுடைய உடல்நிலை அதிக மோசமாகி விட்டது என்று சில தினங்களுக்கெல்லாம் எனக்குக் கடிதம் வந்தது. படுக்கையில் உட்காருவதற்குக் கூட அவளுக்குப் பலமில்லை என்றும் ஒரு சமயம் பிரக்ஞை இல்லாமல் இருந்தாள் என்றும் அறிந்தேன். என்னுடைய சம்மதமில்லாமல் அவளுக்கு மதுவாவது, மாமிசமாவது கொடுக்கக் கூடாது என்பது டாக்டருக்குத் தெரியும். எனவே, ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் என்னுடன் டெலிபோனில் பேசி, அவளுக்கு மாட்டு மாமிச சூப் கொடுக்க அவர் அனுமதி கேட்டார். இதற்கு நான் அனுமதி கொடுக்க முடியாது என்று அவருக்கு பதில் சொல்லிவிட்டேன். ஆயினும், இது விஷயமாக அபிப்பிராயம் கூறக்கூடிய நிலையில் அவள் இருந்ததால், அவளைக் கலந்து ஆலோசிக்கலாம் என்றும், அவள் இஷ்டம்போல் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னேன். ஆனால், டாக்டரோ, “இவ்விஷயத்தில் நோயாளியின் விருப்பத்தைக் கேட்க நான் மறுக்கிறேன். நீங்கள் தான் இதில் அபிப்பிராயம் கூற வேண்டும். நான் கொடுக்க விரும்பும் ஆகாரத்தைக் கொடுக்கும் சுதந்திரத்தை எனக்கு அளிக்க நீங்கள் மறுப்பதானால், உங்கள் மனைவியின் உயிருக்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன்” என்றார்.

அன்றே ரெயிலில் டர்பனுக்குப் புறப்பட்டேன். அங்கே போனதும் டாக்டரைச் சந்தித்தேன். அவர் நிதானத்துடன் சமாசாரத்தை என்னிடம் கூறினார். “தங்களுடன் டெலிபோனில் பேசுவதற்கு முன்னாலேயே ஸ்ரீமதி காந்திக்கு மாட்டு மாமிச சூப் கொடுத்துவிட்டேன்” என்றார்.

“டாக்டர், நீங்கள் செய்தது பெரும் மோசம்” என்றேன்.

“ஒரு நோயாளிக்கு மருந்தோ, ஆகாரமோ இன்னது கொடுப்பதென முடிவு செய்வதில், மோசம் என்பதற்கே இடமில்லை. நோயுற்றிருப்போரையோ, அவர்கள் உறவினரையோ இவ்விதம் ஏமாற்றிவிடுவதன் மூலம் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடிவதாயின், டாக்டர்களாகிய நாங்கள் ஏமாற்றுவதையே புண்ணியமாகக் கருதுகிறோம்” என்றார் டாக்டர்.

இதைக் கேட்டதும் நான் பெரிதும் மனவேதனை அடைந்தேன். என்றாலும், அமைதியுடன் இருந்தேன். டாக்டர் நல்லவர்; என் சொந்த நண்பர். அவருக்கும், அவருடைய மனைவிக்கும் நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன். என்றாலும், அவருடைய வைத்திய தருமத்தைச் சகித்துக் கொள்ள நான் தயாராயில்லை.

“டாக்டர், இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம் என்பதைச் சொல்லுங்கள். என் மனைவி சாப்பிட விரும்பினாலன்றி, என் மனைவிக்கு ஆட்டிறைச்சி அல்லது மாட்டு இறைச்சி கொடுப்பதை நான் அனுமதிக்கவே மாட்டேன். இதனால், அவள் இறந்துவிட நேர்ந்தாலும் சரிதான்” என்றேன்.

“உங்களுடைய தத்துவத்தை நீங்கள் தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மனைவி என்னிடம் சிகிச்சையில் இருக்கும் வரையில் நான் விரும்பும் எதையும் அவருக்குக் கொடுக்கும் உரிமை எனக்கு இருக்க வேண்டும். இது உங்களுக்குப் பிடிக்கவில்லையானால், அவரை அழைத்துக்கொண்டு போய்விடும்படியே வருத்தத்துடன் நான் கூற வேண்டியிருக்கும். என் வீட்டில் அவர் சாக நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்றார், டாக்டர்.

“அப்படியானால், அவளை உடனே அழைத்துக்கொண்டு போய்விட வேண்டும் என்கிறீர்களா?”

“அவரை அழைத்துக்கொண்டு போய்விட வேண்டும் என்று நான் எப்பொழுது சொன்னேன்? இதில் எனக்குப் பூரண உரிமையை நீங்கள் கொடுக்க வேண்டும் என்றே கூறுகிறேன். அப்படிக் கொடுத்தால் நானும் என் மனைவியும் அவருக்காக எங்களாலானதை எல்லாம் செய்யத் தயாராக இருக்கிறோம். அவரைப்பற்றி நீங்களும் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் திரும்பிப் போகலாம். இந்தச் சிறு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், என் இடத்திலிருந்து அவரை அழைத்துக்கொண்டு போய்விடுங்கள் என்று சொல்ல என்னைக் கட்டாயப் படுத்தியவர்களாவீர்கள்.”

என் புதல்வர்களில் ஒருவனும் என்னுடன் இருந்தான் என்று நினைக்கிறேன். என் கருத்தை அவனும் முற்றும் ஆதரித்தான். தன் தாயாருக்கு மாட்டு மாமிச சூப் கொடுக்கக் கூடாது என்றான். பிறகு நான் கஸ்தூரிபாயிடமே இதைக் குறித்துப் பேசினேன். உண்மையில் அவள் அதிகப் பலவீனமாக இருந்தாள். இதுபற்றிக் கலந்து ஆலோசிக்கும் நிலையிலும் அவள் இல்லை. என்றாலும், அவளுடன் ஆலோசிக்க வேண்டியது என் வருந்தத்தக்க கடமை என்று எண்ணினேன். டாக்டரும் நானும் பேசிக்கொண்டிருந்த விவரத்தை அவளிடம் கூறினேன். அவள் தீர்மானமாகப் பதில் சொல்லி விட்டாள். “நான் மாட்டு மாமிச சூப் சாப்பிட மாட்டேன். இவ்வுலகில் மானிடராய்ப் பிறப்பதே அரிது. அப்படியிருக்க இத்தகைய பாதகங்களினால் இவ்வுடலை அசுத்தப்படுத்திக் கொள்ளுவதைவிட உங்கள் மடியிலேயே இறந்து போய்விட நான் தயார்” என்றாள்.

அவளுக்குச் சொல்லிப் பார்த்தேன். என்னைப் பின்பற்றித் தான் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்றேன். மதுவையும் மாமிசத்தையும் மருந்தாகச் சாப்பிடுவதில் தவறு இருப்பதாக நினைக்காமல் நண்பர்களான ஹிந்துக்கள் சிலர் சாப்பிட்டிருக்கும் உதாரணங்களையும் அவளுக்கு எடுத்துக் கூறினேன். அவள் பிடிவாதமாக இருந்தாள். “தயவு செய்து என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடுங்கள்” என்றாள்.

நான் மிகுந்த ஆனந்தமடைந்தேன். எனக்குக் கொஞ்சம் மனக்கலக்கமும் ஏற்பட்டது. என்றாலும், அவளை எடுத்துக்கொண்டு போய்விடத் தீர்மானித்தேன். நான் செய்துவிட்ட இம்முடிவை டாக்டருக்கு அறிவித்தேன். அவருக்கு ஒரே கோபம் வந்து விட்டது. அவர் சொன்னதாவது: “எவ்வளவு ஈவிரக்கமில்லாத மனிதர் நீங்கள்! இப்பொழுது அவருக்கு இருக்கும் தேக நிலையில் இந்த விஷயத்தை அவரிடம் சொல்லவே நீங்கள் வெட்கப்பட்டிருக்க வேண்டும். இங்கிருந்து எடுத்துக்கொண்டு போகக் கூடிய நிலையில் உங்கள் மனைவி இல்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். கொஞ்சம் உடம்பு அசங்கினாலும் அவரால் தாங்க முடியாது. வழியிலேயே அவர் இறந்துவிட நேர்ந்தாலும்கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். அப்படியிருந்தும் நீங்கள் பிடிவாதம் செய்வதானால், உங்கள் இஷ்டம்போல் செய்து கொள்ளுங்கள். அவருக்கு மாட்டு மாமிச சூப் கொடுக்கக் கூடாது என்றால், அவரை ஒருநாள் கூட என் இடத்தில் வைத்துக்கொண்டு அந்த ஆபத்துக்கு உடன்பட நான் தயாராக இல்லை.”

ஆகவே, அந்த இடத்தைவிட்டு உடனே புறப்பட்டுவிட முடிவு செய்தோம். மழை தூறிக்கொண்டிருந்தது. ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கொஞ்ச தூரம் போக வேண்டும். டர்பனிலிருந்து போனிக்ஸுக்கு ரெயிலில் போய் அங்கிருந்து எங்கள் குடியிருப்புக்கு இரண்டரை மைல் போக வேண்டும். நான் பெரும் அபாயகரமான காரியத்தையே மேற்கொண்டேன் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால், கடவுளிடம் நம்பிக்கை வைத்து இவ்வேலையில் இறங்கினேன். முன்கூட்டி போனிக்ஸுக்கு ஓர் ஆள் அனுப்பினேன். ஓர் ஏணை, ஒரு புட்டி சூடான பால், ஒரு சுடுநீர்ப் புட்டி ஆகியவைகளுடன் ஸ்டேஷனுக்கு வந்து எங்களைச் சந்திக்குமாறு வெஸ்ட்டுக்குச் சொல்லியனுப்பினேன். ஏணையில் வைத்து  கஸ்தூரிபாயைத் தூக்கிச் செல்ல ஆறு ஆட்களும் வேண்டும் என்று அறிவித்தேன். அடுத்த ரெயிலில் கஸ்தூரிபாயை அழைத்துச் செல்ல ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போக ஒரு ரிக்ஷாவை அமர்த்தினேன். அபாய நிலையிலிருந்த அவளை அதில் வைத்துக் கொண்டு புறப்பட்டேன்.

கஸ்தூரிபாயை உற்சாகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக அவள் எனக்கு ஆறுதல் கூறினாள். “எனக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது. நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்றாள்.

பல நாட்களாக ஆகாரமே இல்லாததனால் அவள் எலும்பும் தோலுமாக இருந்தாள். ஸ்டேஷன் பிளாட்பாரம் மிகப் பெரியது. ரிக்ஷாவைப் பிளாட்பாரத்திற்குள் கொண்டு போக முடியாததனால் கொஞ்ச தூரம் நடந்துதான் ரெயில் நிற்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும் ஆகையால், அவளை என் கைகளிலேயே தூக்கிக் கொண்டுபோய் ரெயில் வண்டியில் ஏற்றினேன். போனிக்ஸ் ஸ்டேஷனிலிருந்து ஏணையில் வைத்துக் கொண்டு போனோம். அங்கே நீர்ச் சிகிச்சை செய்ததில் கொஞ்சம் கொஞ்சமாகப் பலம் பெற்று வந்தாள்.

நான் போனிக்ஸ் போய்ச் சேர்ந்த இரண்டு மூன்று நாட்களுக்கெல்லாம் ஒரு சாமியார் அங்கே வந்து சேர்ந்தார். டாக்டர் கூறிய யோசனையை ஏற்றுக்கொள்ள நாங்கள் எவ்விதம் பிடிவாதமாக மறுத்து விட்டோம் என்பதை அவர் அறிந்தார். கஸ்தூரிபாயின் நிலைக்காக அனுதாபம் கொண்டு, எங்களுடன் வாதாடி எங்களைத் திருப்பிவிடுவதற்காகவே அவர் வந்தார். சாமியார் அங்கே வந்தபோது என் இரண்டாவது மகன் மணிலாலும், மூன்றாவது மகன் ராமதாஸு ம் அங்கே இருந்ததாக எனக்கு ஞாபகம். மாமிசம் சாப்பிடுவது மத விரோதமாகாது என்று அவர் வாதித்தார். இதற்கு மனுஸ்மிருதியிலிருந்து ஆதாரங்களையும் எடுத்துக் கூறினார். என் மனைவியின் முன்னிலையில் அவர் இவ்வாறு விவாதம் செய்தது எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனால், மரியாதைக்காக நான் அவரைத் தடுக்காமல் இருந்தேன். மனுஸ்மிருதியின் சுலோகங்கள் எனக்குத் தெரியும். என்னுடைய நம்பிக்கையைப் பொறுத்தவரையில் அவை தேவையும் இல்லை. அந்தச் சுலோகங்களெல்லாம் இடைச் செருகல்கள் என்று கருதும் ஒரு சாராரும் இருக்கிறார்கள். அப்படி இவை இடைச் செருகல்கள் அல்ல என்றே வைத்துக்கொண்டாலும் என்னுடைய சைவ உணவுக் கொள்கை சமய நூல்களை ஆதாரமாகக் கொள்ளாமல் சுயேச்சையாகக் கைக்கொள்ளப் பட்டதாகும். கஸ்தூரிபாயின் மன உறுதியும் அசைக்க முடியாதது. சாத்திரங்களைப் பற்றி அவள் எதுவும் அறியாள். தன்னுடைய மூதாதையரின் பாரம்பரிய தருமமே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. குழந்தைகளும் தந்தையின் கொள்கையில் உறுதி கொண்டிருந்தன. ஆகையால், அவர்கள் சாமியாரின் வாதங்களை அலட்சியமாகக் கருதி எதிர்த்துப் பேசினர். இந்தச் சம்பாஷணைக்குக் கஸ்தூரிபாய் உடனே ஒரு முடிவு கட்டிவிட்டாள். “சுவாமிஜி, நீங்கள் என்ன சொன்னாலும் சரி, மாட்டு மாமிச சூப் சாப்பிட்டுக் குணமடைய நான் விரும்பவில்லை. தயவுசெய்து என்னை மேற்கொண்டும் தொந்தரவு செய்யாதீர்கள். நீங்கள் விரும்பினால் என் கணவருடனும் குழந்தைகளோடும் விவாதித்துக் கொள்ளுங்கள். ஆனால், நான் ஒரு தீர்மானம் செய்துகொண்டு விட்டேன்” என்று சொல்லிவிட்டாள்.

$$$

29. குடும்ப சத்தியாக்கிரகம்

     சிறை வாழ்க்கையில் முதல் அனுபவம் எனக்கு ஏற்பட்டது 1908-ஆம் ஆண்டில். கைதிகள் அனுசரித்தாக வேண்டிய சில கட்டுத் திட்டங்கள், ஒரு பிரம்மச்சாரி அதாவது புலனடக்கம் செய்துகொள்ள விரும்புகிறவர் தாமாகவே அனுபவிக்க வேண்டியவைகளாக இருந்தன என்பதைக் கண்டேன். உதாரணமாக, அத்தகையதோர் கட்டுத் திட்டம், தினம் கடைசிச் சாப்பாட்டைச் சூரியன் மறைவதற்கு முன்னால் முடித்துக் கொண்டு விட வேண்டும் என்பது. இந்தியக் கைதிகளுக்கோ, ஆப்பிரிக்கக் கைதிகளுக்கோ தேநீரோ அல்லது காப்பியோ கொடுப்பதில்லை. சமைத்த உணவில் வேண்டுமானால் அவர்கள் உப்புச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், ருசியைத் திருப்தி செய்வதற்காக என்று மாத்திரம் அவர்கள் எதையும் சாப்பிடக் கூடாது. எங்களுக்குக் கறிமசாலைப் பொடி கொடுக்கும் படியும் உணவைச் சமைக்கும்போதே அதில் உப்பைச் சேர்த்துக் கொள்ள அனுமதிக்குமாறும் சிறை வைத்திய அதிகாரியைக் கேட்டேன். அதற்கு அவர் கூறியதாவது: “ருசி பார்த்துச் சாப்பிடுவதற்காக நீங்கள் இங்கே இல்லை. உடல்நலனைப் பொறுத்த வரையில் கறிமசாலைப்பொடி அவசியமே இல்லை. சமைக்கும் போது உப்பைச் சேர்ப்பதற்கும் பின்னால் உப்புப் போட்டுக் கொள்ளுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.”

அதிகக் கஷ்டத்தின் பேரிலேயே ஆயினும், பின்னால் இந்தத் தடைகளுக்கெல்லாம் விமோசனம் ஏற்பட்டது. ஆனால், அவை இரண்டும் புலனடக்கத்திற்குச் சிறந்த விதிகள். வெளியிலிருந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அநேகமாக வெற்றி பெறுவதில்லை. ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் தமக்குத் தாமே விதித்துக் கொண்டவையாக இருப்பின், நிச்சயமாக நல்ல பலனை அளிக்கின்றன. ஆகவே சிறையிலிருந்து விடுதலையானாலும் அவ்விரு விதிகளையும் எனக்கு நானே விதித்துக் கொண்டேன். சாத்தியமான வரையில் தேநீர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். கடைசிச் சாப்பாட்டைச் சூரியன் மறைவதற்கு முன்னால் முடித்து விடுவேன். இவ்விரண்டையும் அனுசரிப்பதற்கு இப்பொழுது எந்த முயற்சியுமே எனக்குத் தேவையில்லை.

உப்பை அடியோடு விட்டுவிட வேண்டிய சந்தர்ப்பமும் எனக்கு ஏற்பட்டது. இந்தத் தடையைப் பத்து ஆண்டுகாலம் தொடர்ந்து அனுசரித்து வந்தேன். மனிதனுடைய உணவில் உப்பு அவசியமான பொருள் அல்ல என்று சைவ உணவைப் பற்றிய ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன். உப்பு இல்லாத உணவே உடலின் சுகத்திற்கு நல்லது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இதிலிருந்து பிரம்மச்சாரிக்கு உப்பில்லாத உணவு நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். பலவீனமான உடம்பைக் கொண்டவர்கள் பருப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நான் படித்திருந்ததோடு அதன் உண்மையை அறிந்துமிருந்தேன். எனக்கோ, பருப்பு வகைகளில் அதிகப்பிரியம்.

ரண சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வந்த கஸ்தூரிபாய்க்குத் திரும்பவும் ரத்த நஷ்டம் ஏற்பட ஆரம்பித்தது. இந்த நோய் சுலபத்தில் குணமாகாது என்றும் தோன்றிற்று. நீர்ச் சிகிச்சையினாலும் குணம் ஏற்படவில்லை. என்னுடைய சிகிச்சை முறைகளை அவள் எதிர்க்கவில்லையாயினும் அவற்றில் அவளுக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனாலும் வெளி வைத்திய உதவி வேண்டும் என்று அவள் கேட்கவே இல்லை. ஆகவே, என் வைத்திய முறைகளெல்லாம் பயன்படாது போய்விட்டதால் உப்பையும் பருப்புவகைகளையும் தள்ளும்படி அவளைக் கேட்டுக் கொண்டேன். தக்க ஆதாரங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி நான் எவ்வளவோ விவாதித்துப் பார்த்தும் இதற்கு அவள் சம்மதிக்க மறுத்து விட்டாள். கடைசியாக அவள் எனக்கு ஒரு சவாலும் விட்டாள். உப்பையும் பருப்பையும் விட்டுவிடுமாறு எனக்கு யாராவது யோசனை கூறினாலும் அவற்றை என்னாலும் விட்டுவிட முடியாது என்றாள். இதைக் கேட்டு நான் வருந்தினேன். என்றாலும் அதே சமயத்தில் மகிழ்ச்சியும் அடைந்தேன். அவளிடம் எனக்குள்ள அன்பைப் பொழிவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்பதே மகிழ்ச்சிக்குக் காரணம். நான் அவளிடம் சொன்னேன்: “நீ தவறாக நினைத்து விட்டாய். நான் நோயுற்று இருந்து, இவற்றையும் மற்றவைகளையும் தவிர்த்து விடுமாறு வைத்தியர் யோசனை கூறினால், கொஞ்சமும் தயங்காமல் அப்படியே செய்வேன். அது போகட்டும் வைத்திய ஆலோசனை எதுவும் இல்லாமலேயே, நீ விட்டாலும் விடாது போனாலும், உப்பையும் பருப்புக்களையும் ஓர் ஆண்டுக்கு நான் கைவிடுகிறேன்.”

இதைக் கேட்டதும் அவள் திடுக்கிட்டுப் போனாள். மிகுந்த துயரத்தோடு அவள் கூறியதாவது: “தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் இயல்பு தெரிந்திருந்தும் நான் இப்படி உங்களுக்குக் கோபம் மூட்டியிருக்கக் கூடாது. உப்பையும் பருப்பையும் சாப்பிடுவதில்லை என்று உறுதி கூறுகிறேன். கடவுள் ஆணை; உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன். இந்த விரதத்தை மட்டும் நீங்கள் விட்டுவிடுங்கள். இப்படி நீங்கள் என்னைத் தண்டிக்கக் கூடாது.”

“உப்பையும் பருப்பையும் சாப்பிடாமல் இருப்பது உனக்கு மிகவும் நல்லது. அவைகள் இல்லாமல் நீ நன்றாகவே இருப்பாய் என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகமில்லை. என்னைப் பொறுத்தவரையில், நான் நிச்சயமாக எடுத்துக் கொண்டுவிட்ட விரதத்தைக் கைவிட முடியாது. இது எனக்கும் நன்மையே செய்வது நிச்சயம். ஏனெனில், ஒரு கட்டுத்திட்டம், அது எக்காரணத்தினால் ஏற்பட்டதாயினும், மனிதருக்கு நல்லதே. ஆகையால், என்னைப்பற்றிக் கவலைப்படாதே. இது எனக்கு ஒரு சோதனை. அதோடு நமது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இது உனக்கு ஓர் தார்மிக ஆதரவாகவும் இருக்கும்” என்றேன்.

எனவே, என்னை மாற்றுவதற்கில்லை என்று விட்டு விட்டாள். “நீங்கள் மிகுந்த பிடிவாதக்காரர். யார் சொன்னாலும் கேட்க மாட்டீர்கள்” என்று கூறிக் கண்ணீர் வடித்து ஆறுதல் அடைந்தாள்.

இந்தச் சம்பவத்தைச் சத்தியாக்கிரகத்திற்கு ஓர் உதாரணமாகவே கொள்ள விரும்புவேன். என்னுடைய வாழ்க்கையின் இனிமையான நினைவுகளில் இதுவும் ஒன்று.

இதற்குப் பிறகு கஸ்தூரிபாயின் தேகநிலை வெகு வேகமாகக் குணமடைந்து வந்தது. இவ்விதம் குணம் ஏற்பட்டது, உப்பும், பருப்பு வகையும் இல்லாத சாப்பாட்டினாலா? அல்லது அதன் பலனாக அவளுடைய ஆகாரத்தில் ஏற்பட்ட மற்ற மாறுதல்களினாலா? வாழ்க்கை சம்பந்தமான மற்ற விதிகளில் சரியாக நடக்கும்படி செய்வதில் நான் கவனமாக இருந்ததன் காரணமாகவா? அல்லது அந்தச் சம்பவத்தினால் உள்ளத்தில் உண்டான ஆனந்தத்தின் பலனாலா? அப்படித்தான் என்றால் எந்த அளவுக்கு? இதை என்னால் சொல்லிவிட முடியாது. ஆனால், அவள் துரிதமாய் குணமடைந்து வந்தாள். ரத்த நஷ்டம் அடியோடு நின்றுவிட்டது. அரைகுறை வைத்தியன் என்று எனக்கு இருந்த மதிப்பும் அதிகமாயிற்று.

என்னைப் பொறுத்த வரையில், உப்பையும் பருப்பையும் தவிர்த்துக் கொண்டதால் நன்மையே அடைந்தேன். விட்டு விட்ட பொருள்களைத் தின்ன வேண்டும் என்ற ஆசையும் எனக்கு வரவில்லை. ஒரு வருடமும் விரைவில் கடந்துவிட்டது. முன்னால் இருந்ததைவிட என் புலன்கள் கட்டுக்கு அடங்கியவைகளாக இருந்ததைக் கண்டேன். இந்தப் பரீட்சை புலனடக்க ஆர்வத்தை அதிகரித்தது. நான் இந்தியாவுக்குத் திரும்பி வெகுகாலம் வரையிலும் உப்பையும் பருப்பு வகைகளையும் தின்னாமலேயே இருந்து வந்தேன். 1914-இல் லண்டனில் இருந்தபோது, ஒரே ஒரு முறை மாத்திரம் அந்த இரண்டையும் நான் சாப்பிட வேண்டியதாகி விட்டது. அந்தச் சந்தர்ப்பத்தைக் குறித்தும், இந்த இரண்டையும் நான் எவ்விதம் திரும்பவும் சாப்பிட ஆரம்பித்தேன் என்பது பற்றியும் பிந்திய அத்தியாயம் ஒன்றில் கூறுகிறேன்.

தென்னாப்பிரிக்காவில் எனது சகஊழியர்கள் பலரிடத்திலும் கூட, உப்பும் பருப்புமில்லாத உணவை நான் சோதனை செய்து நல்ல பலனையே கண்டிருக்கிறேன். இத்தகைய உணவின் நன்மையைக் குறித்து வைத்திய ரீதியில் இருவகையான அபிப்பிராயங்கள் இருக்கக் கூடும். ஆனால், தார்மிக ரீதியில், தன்மறுப்பு எல்லாமே ஆன்மாவுக்கு நல்லதுதான் என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை. புலனடக்கத்துடன் இருப்பவருக்கும், புலன் நுகர்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவருக்கும் எவ்விதம் வாழ்க்கை வழிகளில் வேறுபாடு இருக்குமோ அதே போல, அவ்விரு தரத்தினரின் உணவிலும் வேறுபாடு இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தை அடைய விரும்புகிறவர்கள், சுகபோக வாழ்விற்கு ஏற்ற அனுஷ்டானங்களைக் கைக்கொண்டே தங்கள் லட்சியத்தில் தோல்வியை அடைந்து விடுகிறார்கள்.

$$$

30. புலனடக்கத்தை நோக்கி

     என் உணவில் சில மாறுதல்களைச் செய்வதற்குக் கஸ்தூரிபாயின் தேக அசௌக்கியம் எவ்வாறு காரணமாக இருந்தது என்பதை முந்திய அத்தியாயத்தில் விவரித்திருக்கிறேன். பிந்திய கட்டமொன்றில், பிரம்மச்சரியத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக மற்றும் பல மாறுதல்கள் செய்யப்பட்டன.

இவற்றில் முதலாவது பால் சாப்பிடுவதை விட்டுவிட்டது. பால் மிருக உணர்ச்சியைத் தூண்டுகிறது என்று ராய்ச்சந்திர பாயிடமிருந்தே முதன்முதலில் அறிந்தேன். சைவ உணவைப் பற்றிய புத்தகங்களும் இக்கருத்தைப் பலப்படுத்தின. ஆனால், நான் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்ளாமல் இருந்த வரையில் பால் சாப்பிடுவதை விட்டுவிட நான் துணியவில்லை. உடலை வளர்ப்பதற்குப் பால் அவசியமானது அல்ல என்று நான் முன்னமே அறிந்திருந்தேன். ஆனால், அதை விட்டுவிடுவது எளிதாக இல்லை. புலனடக்கத்திற்காகப் பாலைத் தவிர்த்துவிட வேண்டும் என்ற அவசியம் எனக்கு வளர்ந்து விட்டபோது, கல்கத்தாவிலிருந்து வந்த சில பிரசுரங்களை நான் காண நேர்ந்தது. பசுக்களையும் எருமைகளையும் அவற்றின் சொந்தக்காரர்கள் எவ்வளவு கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது அவற்றில் விவரிக்கப்பட்டிருந்தது. இது என்னிடம் ஆச்சரியகரமான பலனை உண்டுபண்ணியது. ஸ்ரீ கால்லென்பாக்குடன் இதைக் குறித்து விவாதித்தேன்.

‘தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக சரித்திரம்’ என்ற புத்தகத்தில் ஸ்ரீ கால்லென்பாக்கை வாசகர்களுக்கு நான் அறிமுகம் செய்து வைத்திருந்த போதிலும், முந்திய ஒரு அத்தியாயத்தில் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், அவரைக் குறித்து இங்கே மேலும் கொஞ்சம் சொல்ல வேண்டியது அவசியம் என்று எண்ணுகிறேன். முதன்முதலில் தற்செயலாகவே நாங்கள் சந்தித்தோம். அவர் ஸ்ரீ கானுக்கு நண்பர். அவருடைய உள்ளத்தின் ஆழத்தில் பர உலகப்பற்று இருப்பதை ஸ்ரீ கான் கண்டுபிடித்ததால், அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அவரை அறிய ஆரம்பித்ததும், சுகபோக வாழ்க்கையிலும் ஆடம்பரத்திலும் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன். ஆனால் எங்களுடைய முதல் சந்திப்பிலேயே சமய சம்பந்தமாக மிகவும் நுணுக்கமான கேள்விகளை எல்லாம் அவர் கேட்டார். பேச்சின் நடுவில் கௌதம புத்தரின் துறவைப் பற்றியும் பேசினோம். எங்களுடைய பழக்கம் சீக்கிரத்தில் நெருங்கிய நட்பாகக் கனிந்தது. எங்கள் இருவரின் எண்ணங்களும் ஒன்றுபோல் ஆயின. என் வாழ்க்கையில் நான் செய்து கொள்ளும் மாறுதல்களைத் தாமும் தமது வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்.

அச்சமயம் அவருக்கு மணமாகவில்லை, வீட்டு வாடகையைச் சேர்க்காமல் தமக்கு மாத்திரம் மாதம் ரூ. 1,200 செலவழித்து வந்தார். இப்பொழுதோ, மாதம் ரூ. 120 மாத்திரம் செலவு செய்து கொள்ளும் அளவுக்குத் தமது வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டு விட்டார். என் குடித்தனத்தை எடுத்துவிட்ட பிறகு, முதல் தடவை சிறையிலிருந்து விடுதலையான பின்னர், நாங்கள் இருவரும் சேர்ந்து வசிக்கத் தொடங்கினோம். நாங்கள் நடத்தியது மிகவும் கஷ்டமான வாழ்க்கையே.

இந்த சமயத்தில்தான் பாலைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். ஸ்ரீ கால்லென்பாக் கூறியதாவது: “பாலினால் ஏற்படக் கூடிய தீய விளைவுகளைக் குறித்து நாம் ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறோம். அப்படியானால், நாம் ஏன் அதை விட்டு ஒழித்து விடக் கூடாது? நிச்சயமாக அது அவசியமானதே அல்ல.” இந்த யோசனையைக் கேட்டு எனக்கு ஆச்சரியமும் திருப்தியும் ஒருங்கே ஏற்பட்டன. அதைச் சந்தோஷமாக வரவேற்றேன். அப்பொழுதிலிருந்தே பால் சாப்பிடுவதை விட்டுவிடுவதென்று இருவரும் பிரதிக்ஞை செய்து கொண்டோம். இது நடந்தது டால்ஸ்டாய் பண்ணையில், 1912ல்.

ஆனால், பாலை மறுப்பது மாத்திரம் எனக்குப் போதிய திருப்தியளித்து விடவில்லை. இதற்குப் பின் சீக்கிரத்திலேயே பழ ஆகாரத்தை மாத்திரம், அதுவும் சாத்தியமான வரையில் மலிவான பழங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்வது என்று தீர்மானித்தேன். மிகுந்த வறுமையிலிருக்கும் மக்களின் வாழ்க்கையையே நாங்களும் வாழவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

பழ ஆகாரம் அதிகச் சௌகரியமானதாகவும் கூட இருந்தது. சமைப்பது என்ற வேலையே இல்லை. பச்சை நிலக் கடலை, வாழைப் பழங்கள், பேரீச்சம் பழங்கள், எலுமிச்சம் பழங்கள், ஆலிவ் எண்ணெய் ஆகியவையே எங்கள் வழக்கமான சாப்பாடு.

பிரம்மச்சரியத்தை அடைய விரும்புவோருக்கு இங்கே ஓர் எச்சரிக்கையைச் செய்ய வேண்டியிருக்கிறது. பிரம்மச்சரியத்திற்கும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நான் எடுத்துக்காட்டியிருந்த போதிலும், இதில் மனமே மிகவும் முக்கியமானது என்பது நிச்சயம். தான் அறிய அசுத்தமானதாக இருக்கும் மனத்தைப் பட்டினியினால் சுத்தம் செய்துவிட முடியாது; உணவில் செய்கிற மாறுதல்கள் அதனிடம் பலனை உண்டாக்காது. மனத்திலிருக்கும் காம விகாரங்களைத் தீவிரமான ஆன்ம சோதனையினாலும், ஆண்டவனிடம் அடைக்கலம் புகுவதனாலும், அவன் அருளினாலுமன்றிப் போக்கிக் கொண்டு விடவே முடியாது. ஆனால், உடலுக்கும் உள்ளத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சிற்றின்ப இச்சை கொண்டுள்ள மனம், சுவையானவைகளையும் சுகபோகத்திற்கானவைகளையுமே எப்பொழுதும் நாடும். இந்தப் புத்திப் போக்கைப் போக்கிக் கொள்ளுவதற்கு உணவுக் கட்டுத் திட்டங்களும், பட்டினி இருப்பதும் அவசியமானவை என்று தோன்றலாம். சிற்றின்ப வயப்பட்டுள்ள மனம், உணர்ச்சிகளை அடக்குவதற்குப் பதிலாக அவற்றிற்கு அடிமையாகிவிடுகிறது. ஆகையால் உணர்ச்சியைத் தூண்டிவிடாத சுத்தமான உணவும், அவ்வப்போது பட்டினி இருந்து வருவதும் உடலுக்கு அவசியம்.

உணவுக் கட்டுத் திட்டங்களையும் பட்டினி இருப்பதையும் அலட்சியம் செய்கிறவர்களைப் போலவே, எல்லாவற்றையும் இவற்றிற்காகத் தத்தஞ் செய்கிறவர்களும் தவறையே செய்கின்றனர். புலனடக்கத்தை நோக்கிப் போகும் மனமுடையவர்களுக்கு, உணவுக் கட்டுத் திட்டங்களும் பட்டினியும் அதிகப் பயனளிப்பவை என்று என் அனுபவம் போதிக்கிறது. உண்மையில் இவற்றின் உதவியினாலன்றி உள்ளத்திலிருக்கும் காம விகாரங்களை அடியோடு போக்கிக் கொண்டு விடவே முடியாது.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s