-மகாகவி பாரதி
ஆங்கிலேய அரசின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு மகாகவி பாரதி இருக்கிறாரா என்பதை அறிய அவ்வப்போது ஒற்றர்கள் அவரை வேவு பார்ப்பதுண்டு. புதுவையிலிருந்து பிரிட்டிஷ் இந்தியா வந்தபோது கைதான பாரதி - அவரது வழக்கறிஞரின் அறிவுரைப்படி- சில விதிமுறைகளுக்கு உட்படுவதாக வாக்களித்ததால் தான் விடுதலை செய்யப்பட்டார் என்பதை மனதில் இருத்திக் கொண்டால், இக்கட்டுரையில் உள்ள அவல நகைச்சுவையும், தன்னைக் கட்டிப்போட்ட ஆங்கிலேய அரசு மீதான பாரதியின் வெறுப்பும் புலப்படும். அதையும் தராசு கட்டுரையாக வடிக்கும் துணிவு, சுயநலமற்ற எழுத்தாளனுக்கே உரியது.

12. சுதேசமித்திரன் 26.03.1917
நேற்று மாலை தராசுக் கடைக்கு சதுரங்க பட்டணத்திலிருந்து ஒரு மாத்வ (ராவ்ஜீ) வாலிபன் வந்தான். “தராசுக் கடை இதுதானா?” என்று கேட்டான். “ஆம்” என்றேன். என் பக்கத்திலிருந்த தராசை ஒரு கோணப் பார்வையாகப் பார்த்தான். கொஞ்சம் மீசையைத் திருத்திவிட்டுக் கொண்டான். மூக்குக் கண்ணாடியை நேராக்கிக் கொண்டான். மனதுக்குள் ஏதோ இங்கிலீஷ் வார்த்தைகள் சொல்லிக் கொண்டான். என்னை ஒரு பார்வை பார்த்தான்.
நான் கேட்கிற கேள்விக்கு விடை நீர் சொல்லுவீரா? இந்தத் தராசு சொல்லுமா? என்று கேட்டான்.
தராசு தான் சொல்லும் என்றேன்.
நம்பிக்கை கொள்ளாதவன் போலே விழித்தான்.
அப்படித்தான் சென்னப் பட்டணத்தில் கேள்விப்பட்டேன். ஆச்சரியமான தராசு! உமக்கெங்கே கிடைத்தது? தமிழ் தான் பேசுமோ? இங்கிலீஷ் தெரியாதாமே? ‘வொன்-டர்-புல், வெரி, வெரி வொன்-டர்-புல் என்று இங்கிலீஷில் கொண்டு சமாப்தி பண்ணினான்.
நீ கேட்க வந்த விஷயங்களைச் சொல். வீணாக நேரம் கழிப்பதில் பயனில்லை என்று நினைப்பூட்டினேன்.
அந்தப் பிள்ளையின் பெயர் வாஸுதேவராவ். வாஸுதேவராவ் சொல்லுகிறான்:- வாலன்டீர் பட்டாளம் சேர்க்கிறார்களே, அந்த விஷயம் உம்முடைய தராசுக்குத் தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன். எல்லாம் தெரிந்து எந்தக் கேள்வி கேட்டாலும் விடை சொல்லக்கூடிய மாயத் தராசுக்கு இது தெரியாமலிருக்குமா? ‘அப்கோர்ஸ்’ தெரிந்துதான் இருக்கும். அதிலே சேரலாமா? சேர்ந்தால் பயனுண்டா? இதுவரை நம்மவர்களுக்கு தளகர்த்த பதவி கொடுப்பதில்லையென்று வைத்திருந்த வழக்கத்தை மாற்றி இப்போது புதிய விதிப்படி நமக்கு ராணுவ உத்தியோகங்கள் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களென்று தெரிகிறது. இது நம்பத்தக்க செய்திதானா? நான் எப்படியேனும் நம்முடைய பாரத மாதாவுக்கு உழைக்க வேண்டுமென்ற கருத்துடனிருக்கிறேன். இந்த பட்டாளத்தில் நாம் சேர்வதானால் நமது தேசத்துக்கு ஏதேனும் நன்மையேற்படுமா என்ற விஷயம் என் புத்திக்கு நிச்சயப்படவில்லை. அதை உம்முடைய கீர்த்தி பெற்றதராசினிடம் ஆராய்ச்சி செய்ய வந்தேன் என்றான்.
“ஆராய்ச்சியா?” என்று தராசு கேட்டது.
அதற்கு வாஸுதேவன் சொல்லுகிறான்:- “ஆம்! ஆராய்ச்சி; அதாவது பரியாலோசனை; இதை இங்கிலிஷில் கன்சல்டேஷன் என்று சொல்வார்கள். இங்கிலீஷ் பாஷையில் சொல்லக்கூடிய ‘ஐடியாஸ்’ நம்முடைய தாய்ப் பாஷைகளில் சொல்ல முடியவில்லை. ‘நெவர்மைண்ட்’. அதுவே விஷயம். ‘கிப்ளிங்’ என்ற இங்கிலீஷ் கவிராயர் சொல்வது போலே, ‘அது மற்றொரு கதை’; நான் கேட்க வந்த விஷயத்துக்கு விடை சொல்ல வேண்டும்” என்றான்.
அப்போது நான் வாசுதேவனை நோக்கி, “நீ ஏன் கேட்கிறாய்? நீ பட்டாளத்தில் சேரப் போகிறாயா?” என்றேன்.
அதற்கு வாஸுதேவன்:- “ஆஹா! நான் சேர்வதென்றால் ஏதோ சாமான்யமாக நினைத்துவிட வேண்டாம். எனக்குச் சென்னப்பட்டணம் முதல் டின்னவெல்லி வரைக்கும் ஒவ்வொரு முக்கியமான ஊரிலும் சிநேகிதர் இருக்கிறார்கள். நான் சேர்ந்தால் அவர்களத்தனைபேரும் சேர்வார்கள்; நான் சேராவிட்டால் அவர்கள் சேர மாட்டார்கள்” என்றான்.
தராசு கடகடவென்று சிரித்தது.
வாசுதேவனுடைய கன்னங்கள் சிவந்து போயின. மூக்குக் கண்ணாடியை நேரே வைத்துக் கொண்டான். மீசையைத் திருகினான். “வாட்இஸ் திஸ்!” இந்தத் தராசு என்னை நோக்கி ஏன் சிரிக்கிறது?” என்று மகா கோத்துடன் என்னை நோக்கிக் கேட்டான்.
அப்போது தராசு சொல்லுகிறது:- “முந்தி ஒரு தடவை ஒரு வக்கீல் என்னிடம் வந்து எனக்குச் சில ஞானோபதேசங்கள் செய்து விட்டுப் போனார். அதாவது, ராஜ்ய விஷயங்களைப் பற்றி நான் எவ்விதமாக அபிப்பிராயங்களும் சொல்லக் கூடாதென்றும், சண்டை சமயத்தில் ராஜ்ய விஷயங்களைப் பற்றி யாரும் ஒரு வார்த்தைகூடப் பேசாமலிருப்பதே நாம் இந்த ராஜாங்கத்தாருக்குச் செலுத்த வேண்டிய கடமையென்றும் பலமுறை வற்புறுத்திச் சொன்னார். நானும் அவர் சொல்வது முழுதும் நியாயமென்பதை அங்கீகரித்து, நம்மால் கூடியவரை இந்த ராஜாங்கத்தாருக்குத் திருப்தியாகவே நடந்துவிட்டுப் போகலாமென்ற எண்ணத்தால் அவருடைய சொற்படி நடப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். நீயோ, ராஜ்ய விஷயமான கேள்வி கேட்கிறாய். என்ன செய்வதென்று யோசனை பண்ணுகிறேன்” என்று தராசு சொல்லிற்று.
அப்போது வாசுதேவன்:- “நோ, நோ, நோ’; இல்லை. இல்லை. நீ என்னை கேலிபண்ணிச் சிரிக்கிறாய். நான் மதிப்புடன் கேட்க வந்தேன். உன்னுடைய குணம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. போனால் போகட்டும்; நீ சிரித்ததைப் பற்றி எனக்குப் பெரிய காரியமில்லை. உன்னைப் பொறுத்து விடுகிறேன். நான் கேட்க வந்த விஷயத்துக்கு விடை சொல்லு” என்றான்.
அதற்குத் தராசு:- “தம்பி, நான் உனக்கு பயந்து ஒன்றையும் மறைத்துப் பேசவில்லை. நீ கேட்க வந்த விஷயத்துக்கு மறுமொழி ஏற்கெனவே சொல்லியாய்விட்டது. சிரித்தது உன்னைக் குறித்தே தான். அதில் சந்தேகமில்லை என்றது. காரணமென்ன? என்று வாசுதேவன் சினத்தோடு விசாரித்தான்.
தேசத்துக்குச் சண்டை போடக்கூடிய வீரனாக உன்னைப் பார்க்கும்போது தோன்றவில்லை. சண்டையிலே சேர்கிறவன் இத்தனை ஆராய்ச்சியும், பரியாலோசனையும், கன்ஸல்டேஷனும் நடத்த மாட்டான். படீலென்று போய்ச் சேர்ந்துவிடுவான் என்று தராசு சொல்லிற்று.
என்னை நீ போலீஸ்காரனென்று நினைக்கிறாயா? என்று வாசுதேவன் கேட்டான்.
நான் அப்படிச் சொல்லவில்லை என்றது தராசு.
நான் போய் வரலாமா! என்று வாசுதேவன் கேட்டான்.
போய் வா என்றது தராசு.
அவன் போன பிறகு தராசு என்னிடம் சொல்லுகிறது:- இவன் உளவு பார்க்க வந்தவன், சந்தேகமில்லை. பட்டாளத்தில் சேர்ந்து தேசத்தைக் காப்பாற்றக்கூடிய யோக்யதையுடையவன் இத்தனை வீண் பேச்சுப் பேச மாட்டான். அவனுக்கு இத்தனை கர்வமிராது.
- சுதேசமித்திரன் (26.03.1917)
$$$