-திருநின்றவூர் ரவிகுமார்

அத்தியாயம்- 5
பரோடா – 2
அரவிந்தர் வழக்கமான அரசியல்வாதி அல்ல. அவருக்கு பதவி, புகழ், பணம் இதிலெல்லாம் நாட்டம் இல்லை. இயல்பாகவே அவர் மென்மையானவர். அமைதியாகச் செயல்படுபவர். ஒளி வெள்ளத்தில் நிற்காமல் திரைக்குப் பின்னால் நின்று செயல்படுவதையே அவர் விரும்பினார். இந்திய அரசியலில் அவர் களமாடியது சில ஆண்டுகளே. ஆனால் இந்தியா பற்றிய அவரது சிந்தனைகள், அதன் எதிர்காலம் பற்றிய அவரது கணிப்புகள் ஆகியவை முற்றிலும் சுயமானவை. அவருக்கே உரித்தானவை. அதை அரசியல் களத்தில் அவர் முன்னிறுத்திய பாங்கும் அலாதியானது. அந்த வகையில் அவர் விதைத்தவை வேர்விட்டு வளர்ந்தன. அதைப் புரிந்துகொள்ள அந்தக் காலத்தில் நிலவிய அரசியல் சூழ்நிலையைப் புரிந்து கொள்வது தேவையாகிறது.
இந்தியா பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் அடியெடுத்து வைத்தபோது அதன் நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. 1857 முதல் இந்திய சுதந்திரப் போருக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனியின் கையில் இருந்த நிர்வாகம் நேரடியாக பிரிட்டிஷ் அரசின் கைக்கு மாறியது. இந்தியாவுக்கான பொறுப்பாளர் (செக்ரட்டரி ஆப் ஸ்டேட் ஃபார் இந்தியா) என்றொரு பதவி உருவாக்கப்பட்டது. அவர் பிரிட்டிஷ் அரசில் முக்கியமான அமைச்சரானார் (இந்தியா மந்திரி). இந்தியாவைப் பற்றிய எல்லா விஷயங்களுக்கும் அவர்தான் பொறுப்பாளர். ஆனால் அவர் எப்போதும் இந்தியாவின் உள் நிர்வாகத்தில் தலையிட்டதில்லை.
அதுவரை கவர்னர் ஜெனரலாக இருந்தவருக்கு புதியதாக வைஸ்ராய் என்ற பதவியும் கொடுக்கப்பட்டது. வைஸ்ராய் என்பவர் இங்கிலாந்து அரசரின் பிரதிநிதி. இந்தியா பற்றிய விஷயங்களில் அவருக்குத் தான் உச்சபட்ச அதிகாரம் இருந்தது. அவருக்கு உதவி செய்ய இரண்டு சிறிய ஆலோசனைக் குழுக்கள் இருந்தன. ஒன்று நிர்வாக சம்பந்தமானது. மற்றது சட்டம் இயற்றுவது தொடர்பானது. இரண்டு கவுன்சில்களிலும் நியமன உறுப்பினர்களே இருந்தார்கள். அதில் இந்தியர்கள் எவரும் இல்லை. இது மேல்மட்ட அதிகார நிலை.
பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியா பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. மாகாணங்கள் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு கவர்னர் இருந்தார். அவர் வைஸ்ராய்க்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். கவர்னருக்கு ஆலோசனை கூற சில கவுன்சில்கள் இருந்தன. அதிலும் இந்தியர்கள் யாரும் இல்லை. சர்வ வல்லமை படைத்ததாக இருந்தது கவர்னரின் செயலகம். அதிலும் பிரிட்டிஷாரே இருந்தனர். அவர்கள் தான் நிர்வாகத்தைக் கண்காணித்தனர்.
நடைமுறையில் நாட்டின் சிவில் நிர்வாகம் முழுக்கவும் ஐசிஎஸ் எனப்பட்ட இந்திய சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மூலமாக நடந்தது. ஐசிஎஸ் என்பது நிறைய அதிகாரங்களைக் கொண்டதாகவும் கௌரவம் மிக்கதாகவும் இருந்த தனி அமைப்பு. அதற்கு ஆண்டுக்கு ஒருமுறை லண்டனில் தேர்வு எழுத வேண்டும். யார் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் என்று கூறப்பட்டாலும் 1870 வரையில் வெறும் பதினாறு இந்தியர்கள் மட்டுமே தேர்வெழுதினார்கள். அதில் ஒரே ஒருவர்தான் தேர்வானார் என்று பிரிட்டிஷ் ஆவணங்கள் கூறுகின்றன. தங்கள் சொந்த நாட்டை நிர்வாகிப்பதில் இந்தியர்களின் பங்கு இவ்வாறாகத் தான் இருந்தது. இந்தக் கசப்பான உண்மையைத் தெரிந்துதானோ என்னவோ, டாக்டர் கிருஷ்ணதன கோஷ் தன் மூன்று மகன்களையும் குழந்தை பருவத்திலேயே இங்கிலாந்தில் ஆங்கிலேயர்களைப் போலவே வளர்த்தார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இரண்டு விஷயங்கள் இந்தியாவில் நடந்தன. ஒன்று, பிரிட்டிஷ் அதிகாரம், ஆதிக்கம் இந்திய அரசியல் களத்தில் அதிகரித்தது. இரண்டாவது, ஆங்கில மொழி மற்றும் ஆங்கிலக் கல்வி. இதனால் இந்திய சமூக, சமய, பண்பாட்டில் மேற்கத்திய சிந்தனையில் தாக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் மேற்கத்தியப் பண்பாடு கண்மூடித்தனமாக ஏற்கப்பட்டு, அப்படியே பின்பற்றப்பட்டாலும் விரைவில் தீவிரமான சிந்தனையாளர்கள் இந்திய சமுதாயத்தில் தோன்றினார்கள். மேற்கத்திய தாக்கத்தின் பின்னணியில் தங்களுடைய பாரம்பரியத்தை மறுவிசாரணை செய்தார்கள்.

இவ்விஷயத்தில் முன்னோடி, ராஜா ராம்மோகன் ராய் என்று பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, பங்கிம் சந்திர சாட்டர்ஜி, பாலகங்காதர திலகர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதி, ரவீந்திரநாத் தாகூர் என பலரும் இவ்விஷயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினர். அரவிந்தரின் வாழ்வில் சம்பந்தப்பட்ட சிலர் மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி இந்தப் பட்டியல் நீண்டது.
தேசிய வாழ்வில் இவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது என்பதை அனைவரும் அறிவார்கள். அதன் விளைவாக இந்திய சமுதாயத்திலும் சமயங்களிலும் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது. அது அரசியல் களத்திலும் எதிரொலித்தது வியப்பில்லை.
1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அரசியல் விழிப்புணர்வு ஆரம்பத்தில் மெதுவாகவும் தெளிவற்றும் உறுதியற்றும் இருந்தது. காங்கிரசின் முதல் தலைமுறை தலைவர்களான மகாகோவிந்த ரானடே, சுரேந்திரநாத் பானர்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே போன்றோர் தேசபக்தி உள்ளவர்களாக இருந்த போதிலும் அரசியலில் மிதவாதப் போக்கைக் கடைபிடித்தனர். பிரிட்டிஷாரை அவர்கள் தட்டிக் கேட்கவில்லை.
அவர்களுக்கு பிரிட்டிஷாரின் நீதிமுறை பற்றியும் அவர்களது நோக்கம் பற்றியும் நல்லெண்ணம் இருந்தது; இந்தியர்களின் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால் பிரிட்டிஷார் அதை நிறைவேற்றித் தருவார்கள் என்று கருதினர். எனவே பொருளாதாரம் சார்ந்த பல்வேறு சீர்திருத்தங்கள், வைஸ்ராய் மற்றும் மாகாண கவுன்சிலில் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்களை இயற்றுவார்கள். அந்தக் கூட்டங்களில் நிறையப் பேசுவார்கள். சின்னதாக தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள்.
காங்கிரஸ் பற்றியும் அதன் தீர்மானங்கள் பற்றியும் பிரிட்டிஷாரின் அணுகுமுறை எப்படி இருந்தது? பிரிட்டிஷார் இந்தியாவை ஆள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் ஏன் அதிகாரத்தில் இருக்கிறார்கள்? என்று இந்தியர்கள் கேட்காத வரை அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அதுவரை காங்கிரஸ் ஒரு அழுத்தத்தை வெளியேற்றும் பாதுகாப்புக் குமிழி (ப்ரஷர் வால்வ்) போல இருக்க அனுமதித்தார்கள். சின்னதாக ஏதாவது இந்தியர்களுக்கு செய்தால் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துவார்கள் . உண்மையில், சாரமான எதையும் அவர்கள் தரவில்லை. இந்தியர்கள் சுய ஆட்சிக்குத் தயாரில்லை என்றும், அவர்களுக்குள் உள்ள வேறுபாடுகளையும் சச்சரவுகளையும் பிரிட்டிஷாரால் மட்டுமே தீர்க்க முடியும் என்றும் கூறி வந்தார்கள். அவர்களது ஆட்சியை நியாயப்படுத்தி வந்தார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் அரவிந்தர் 1893இல் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார்.
அவர் பரோடாவுக்கு வந்த பிறகு அவருடன் கேம்பிரிட்ஜில் படித்த கேசவ்ராவ் தேஷ்பாண்டே என்பவர் பம்பாயிலிருந்து வெளிவந்த ‘ஹிந்து பிரகாஷ்’ என்ற ஆங்கில- மராத்தி வார இதழின் ஆசிரியராக இருந்தார். அவர் அரவிந்தரை அணுகி தன்னுடைய பத்திரிகையில் கட்டுரைகள் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு ஏற்கனவே அரவிந்தரின் கருத்துக்கள் பற்றி நன்கு தெரியும். 1893 ஆகஸ்ட் முதல் 1894 மார்ச் வரை அரவிந்தர் அந்தப் பத்திரிகையில் ‘பழைய விளக்குகளுக்கு பதிலாக புத்தொளி’ என்ற தலைப்பில் ஒன்பது கட்டுரைகளை எழுதினார். காங்கிரசின் பழைய கருத்துகளுக்கும் கண்ணோட்டத்திற்கும் மாற்றாக தன்னுடைய புதிய சிந்தனைகளை அவர் அதில் முன்வைத்திருந்தார். அந்தக் கட்டுரைகளில் அவர் பெயர் போடவில்லை. காரணம் அவர் அப்போது பரோடா சமஸ்தானத்தில் பணியில் இருந்தார். அவரது கருத்துக்கள் மகாராஜாவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதால் அவ்வாறு செய்தார்.
அந்தத் தொடரின் முதல் கட்டுரை இப்படி தான் தொடங்குகிறது, “குருடனை குருடன் வழி நடத்தினால் இருவரும் படுகுழியில் தானே விழுவார்கள்?” இவ்வாறு ஆரம்பித்து காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியை துதி பாடுவதிலேயே நிறைய நேரத்தைச் செலவிடுகிறது. உண்மையைப் பேச மறுக்கிறது. இந்த பலவீனம் காலப்போக்கில் போய்விடும் என்பதற்கு மாறாக, அது பழக்கமாக ஆகி பழக்கம் என்பதிலிருந்து கொள்கையாகவே மாறிவிட்டது என்று விளாசித் தள்ளினார்.
பல்வேறு கோணங்களில் காங்கிரஸ் அமைப்பையும் அதன் கொள்கைகளையும் நோக்கங்களையும் அவர் தொடர்ந்து விமர்சித்தார்:
"காங்கிரஸ் தேசம் தழுவிய அமைப்பும் அல்ல, அது நாட்டு மக்களின் வெகுஜனப் பிரதிநிதியும் அல்ல. தூரத்து இடி முழக்கம் போல எழும் இந்திய பாட்டாளி சமுதாயத்தின் உறுமல் காங்கிரஸ் காதில் விழவே இல்லை. அவர்கள்தான் உண்மையான சக்தி. ஆனால் காங்கிரஸோ நீதிமன்றத்தில் தர்க்கம் செய்வது போல பிரிட்டிஷ் அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ்காரர்கள் ஆணவம் மிக்கவர்கள். அவர்களுடைய நீதி உணர்வின் மீது நம்பிக்கை வைப்பது அர்த்தமற்றது. அவர்களை எதிர்கொள்ள நம் நாட்டின் ஆண்மையுணர்வைக் கட்டி எழுப்ப வேண்டும். எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு பொறுமையாக இருக்கும் நம் சகோதர இந்தியர்களை ஒருங்கிணைக்க வேண்டும். நம்முடைய உண்மையான எதிரி நமக்கு வெளியே இல்லை. மாறாக நமக்குள்ளே இருக்கும் பலவீனமும் கோழைத்தனமும் சுயநலமும் மூடநம்பிக்கைகளும் மனசாய்வுகளுமே ஆகும்"
-என்று எழுதிய அரவிந்தர் முத்தாய்ப்பாக “காங்கிரசின் நோக்கங்கள் தவறானவை. அதை அடைவதற்கான வழிமுறைகளும் தவறானவை. அதிலும்கூட அவர்கள் முனைப்புடனும் முழுமூச்சுடனும் ஈடுபடவில்லை. அதன் தலைவர்கள் சரியானவர்களோ நம்பிக்கை உரியவர்களோ அல்லர். சுருக்கமாக சொன்னால் நம்மை வழி நடத்துபவர்கள் குருடர்கள். குறைந்த பட்சம் ஒற்றைக் கண்ணர்கள்” என்று எழுதியிருந்தார்.
இதை எழுதும்போது அரவிந்தருக்கு வயது இருபத்தியொன்று. இந்த வயதில் இவ்வளவு அறிவுடனும் தெளிவாகவும் எழுதிய இந்தியத் தலைவர்கள் யாரும் இல்லை என்று துணிந்து கூற முடியும். இயல்பாகவே இந்தக் கட்டுரைகள் காங்கிரஸ் தலைவர்களிடையே கொத்தளிப்பை ஏற்படுத்தின. அப்போது காங்கிரஸில் பெரும் தலைவராக இருந்த ரானடே பத்திரிகை முதலாளியைக் கூப்பிட்டு, ‘இதுபோன்ற கட்டுரைகளை வெளியிட வேண்டாம். அரசு உங்களை கைது செய்து சிறைப்படுத்தும்’ என்று அச்சுறுத்தினார். பத்திரிகை ஆசிரியரான தேஷ் பாண்டே அரவிந்தரிடம், ‘அரசியல் தத்துவங்களைப் பற்றி எழுதுங்கள். நடைமுறை அரசியல் பற்றி வேண்டாம்’ என்றார். ஆனால், அரவிந்தருக்கு அதில் ஆர்வம் இல்லை. இப்படி காங்கிரஸ்காரர்களால் கட்டுரைகள் வெளியாவது நிறுத்தப்பட்டது.

அரசியல் களத்தில் அரவிந்தரின் முதல் நுழைவு இதுபோல மோதலுடன் துவங்கியது. இதனால் அவர் சிறிது காலம் அமைதியாக இருந்தார் என்றாலும் அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் மோதல் தீவிரம் அடைந்தது. ஆனால் அவர் கட்டுரைகளைப் படித்த பலரும் இன்றில்லை என்றாலும் ஒருநாள் அவர்தான் இந்தியாவை வழிநடத்துவார் என்று கருத்து கொண்டனர். நீதிபதி ரானடே ‘ஹிந்து பிரகாஷ்’ கட்டுரைகளால் கலங்கினார். அதை எழுதியவரைப் பார்க்க வேண்டும் என்றார். அரவிந்தர் அவரைச் சந்தித்தார். அதுபற்றி அவரே பின்னாளில் எழுதியுள்ளார்:
"பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கிலாந்திலிருந்து தாயகம் திரும்பிய பின் காங்கிரசை கடுமையாக விமர்சித்து ‘ஹிந்து பிரகாஷ்’ பத்திரிகையில் கட்டுரைகளை எழுதி இருந்தேன். அது இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைக் கண்ட (அமரர்) மகா கோவிந்த ரானடே என்னைப் பார்க்க விரும்பினார். நான் அவரைப் பார்த்தபோது, ‘இதுபோன்ற கட்டுரைகளை எழுதுவதை விட்டுவிட்டு ஏதாவது காங்கிரஸ் வேலையைச் செய்யுங்கள். சிறை சீர்திருத்தங்கள் பற்றி கவனம் செலுத்துங்கள்’ என்றார். இந்த ஆலோசனையை எதிர்பார்க்காத நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். உடனடியாக மறுத்தும் விட்டேன். ஆனால் இது ஒரு முன்னறிவிப்பு என்று எனக்கு அப்போது தோன்றவில்லை. பின்னாளில் ஓராண்டுக் காலம் என்னை சிறையில் அடைத்தபோது சிறையின் கொடூரத்தையும் சிறைச்சாலை நடைமுறைகளின் அர்த்தமற்ற தனத்தையும் தெரிந்து கொண்டேன். சிறை சீர்திருத்தங்கள் தேவை என்பதை புரிந்து கொண்டேன்"
-என்று அரவிந்தர் தனது சிறை அனுபவங்களில் எழுதி உள்ளார்.
அந்த காலகட்டத்தில்தான் பங்கிம் சந்திர சாட்டர்ஜி காலமானார். அவரைப் பற்றி 1894 ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 27 வரை ஹிந்து பிரகாஷில் அரவிந்தர் ஏழு கட்டுரைகளை எழுதினார். அதில் சாட்டர்ஜியை ஒரு அறிஞராக, கவிஞராக, வக்கீலாக, கட்டுரையாளராக, நாவலாசிரியராக, தத்துவவாதியாக, விமர்சகராக, அதிகாரியாக, மத சீர்திருத்தவாதியாக என்று அவரது பல்வேறு முகங்களை வெளிக்கொணர்ந்தார்.
"இந்தியாவை உருவாக்கியவர்கள் என்ற மகுடத்தை சமூக சீர்திருத்தவாதிகள் என்று கூச்சலிட்டுக் கொண்டிருப்பவர்கள் தலையில் வைக்க முடியாது. மாறாக பதவியோ அதிகாரத்தையோ விரும்பாமல், இயற்கை எப்படி அமைதியாக ஆனால் அன்போடு தொடர்ந்து செயல்படுகிறதோ அதுபோல, செயல்பட்ட பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்குத் தான் பொருத்தமானதாக இருக்கும். அவர் இதை அடைய வேண்டும் என்ற நோக்கமற்றுச் செயல்பட்டவர் என்பதற்காக அல்ல. தன்னுடைய இருப்பதை முழுமையாக மொழிக்கும் இலக்கியத்திற்கும் தேசத்திற்கும் கொடுத்தவர் என்பதற்காக"
-என்று அரவிந்தர் எழுதியிருந்தார்.
ஆரம்பத்தில் ஹிந்து பிரகாஷ் கட்டுரைகளுக்கு வந்த எதிர்வினைகளால் அரவிந்தர் அரசியலில் இருந்து சில ஆண்டுகள் ஒதுங்கி இருந்தார். ஆனால் தாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் எப்போது செயல்பட வேண்டும் என்பதையும் தீர்மானிக்க கள நிலவரத்தைக் கூர்ந்து கவனித்து வந்தார். அதே வேளையில் அவர் படிப்பில் மூழ்கினார். தன் நாட்டின் நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள அவர் நூல்களைக் கற்கத் தொடங்கினார்.
அரவிந்தர் வரலாற்றைக் கற்றதிலிருந்து ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டார். எந்த நாடும் போராடாமல் விடுதலை அடைந்ததில்லை. எனவே அவரது போராட்ட அணுகுமுறை திரிசூலம் போல மூன்று முனைகளைக் கொண்டிருந்தது. ஒன்று, ஆயுதப் போராட்டம். அதற்கான சிந்தனைகளையும் கருத்துகளையும் ரகசியமாக மக்களிடையே விதைப்பது, அதற்கான அமைப்பைக் கட்டமைப்பது. இரண்டாவது, முழுமையான சுதந்திரம் என்ற கருத்திற்காக வெகுஜன இயக்கத்தை நடத்துவது. ஏனெனில் பெரும்பாலான இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சி வல்லமையுள்ளது என்றும் பூரண விடுதலை என்பது பைத்தியக்காரனின் பிதற்றல் என்றும் நம்பி வந்தனர். மூன்றாவது, அரசுக்கு ஒத்துழைக்காமல் இருக்கவும் சாத்விக எதிர்ப்பின் மூலம் அரசு எந்திரத்தை செயலிழக்க செய்யவும் பொதுமக்களின் மனங்களைத் தயார்படுத்துவது. இதையே மகாத்மா காந்தி பின்னால் இயக்கமாக முன்னெடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், வலிமையான பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் என்பதை அவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு அவர் பதில் சொல்லியுள்ளார்.
"அப்போது ஆயுதங்களும் ஆயுத மோதல்களும் அவ்வளவு பயங்கரமானதாக இல்லை. ரைஃபிள்கள்தான் முக்கியமான ஆயுதம். எந்திரத் துப்பாக்கிகள் அவ்வளவு பலனளிப்பதாக இல்லை. இந்தியா நிராயுதபாணியாக இருந்தது. கட்டுக்கோப்பான ஓர் அமைப்பும் கொஞ்சம் வெளிநாட்டு உதவியும் கிடைக்குமானால் அந்த சிரமத்தைக் கடந்து விடலாம். இந்த நாடோ பரந்து விரிந்தது. பிரிட்டிஷ் ராணுவமோ சிறியது. மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரில்லா முறையிலான போரே மிகப் பெரிய பலனைத் தந்துவிடும். இந்திய ராணுவத்திலும் புரட்சியை ஏற்படுத்த முடியும்"
-என்று அவர் விளக்கியுள்ளார்.
1900iல் அரவிந்தர் அதற்கான செயல்களில் இறங்கினார். ஜதீன் பானர்ஜி என்ற வங்காள இளைஞரை பரோடா ராணுவத்தில் சேர்த்து பயிற்சி பெற வைத்தார். பிறகு அவரை வங்காளத்திற்கு அனுப்பி அதற்கான பணிகளைத் துவங்கினார். சுமார் இருபது முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பலனளிக்கும் திட்டத்தை முன்னிறுத்தி அவர் செயல்படத் துவங்கினார்.
அது பற்றி தினேந்திர குமார் ராய் விரிவாக எழுதியுள்ளார். “இடது கையில் ஒரு கூஜாவும் மறு கையில் நீண்ட தடியும் பிடித்தபடி நல்ல உயரமான, வாட்டசாட்டமான ஒரு வங்காள இளைஞர் எங்கள் வீட்டுக்கு வந்தார். ‘வங்காளி என்பதால் என்னை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்க மறுக்கிறார்கள். இந்திய சமஸ்தான ராணுவத்தில் சேர முடியுமா என்று இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கிறேன்’, என்று என்னிடம் சொன்னார். அரவிந்தருக்கு அந்த இளைஞரின் உறுதியும் தைரியமும் பேரவாவும் பிடித்துப் போனது.”
அரவிந்தர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அவனை வட இந்தியாவைச் சேர்ந்த பிராமணன் என்று கூறி பரோடா ராணுவத்தில் சேர்த்தார். ஓராண்டு காலப் பயிற்சிக்கு பிறகு அவனை வங்காளத்துக்கு அனுப்பினார். அங்கு ஆயுதப் போராட்டத்திற்கான சூழ்நிலையை உருவாக்க ஒரு செயல் திட்டத்தையும் அவனுக்கு அளித்தார். அதன்படி அவன் அங்கு சென்று புரட்சிக்கு ஆட்களைத் தேர்வு செய்வது, அதற்காக பணம் திரட்டுவது, ஆயுதங்களை வாங்குவது அல்லது தயாரிப்பது, இளைஞர்களை குழுக்களாக ஒருங்கிணைத்து அவர்களுக்கு தீவிர உடல், மன பயிற்சி அளிப்பது என்பதுடன் ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் இத்தகைய குழுக்களை ஏற்படுத்துவதென்பதே அவர் கொடுத்த செயல் திட்டம்.
1893இல் முதல்முறையாக அரவிந்தர் வங்காளம் சென்றார். அதன் பின் விடுமுறை கிடைக்கும்போதும் கல்லூரியின் ஆண்டு விடுமுறையின் போதும் அவர் வங்காளம் சென்று வந்தார். 1901இல் கல்கத்தா சென்றபோது அவர் வாழ்வில் முக்கியமானதொரு நிகழ்வு நடந்தது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அரசு அதிகாரியாக இருந்த பூபால சந்திர போஸின் மகளான மிருணாளினியை மணந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது இருபத்தியெட்டு. மணமகளுக்கு வயது பதினான்கு. அவள் அழகி. படித்தவள். உயர்குடியைச் சேர்ந்தவள். திருமணம் பற்றி, மணமகள் வேண்டுமென அரவிந்தர் பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்த வங்க மொழிக் கல்லூரியின் முதல்வரான கிரிஷ் சந்திரபோஸ் தனது நெருங்கிய நண்பரான பூபால சந்திர போஸிடம் பேசி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார். அப்போது பிரபலமானவர்களாக இருந்த ஜெகதீச சந்திரபோஸ், சின்ஹா பிரபு போன்றவர்கள் அந்தத் திருமணத்திற்கு வந்திருந்தனர்.
அரவிந்தர் இந்து முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்றார். அதில் ஒரு பிரச்னை எழுந்தது. அவர் கடல் கடந்து சென்று வந்தவர் என்பதால் பிராயசித்தம் (பரிகாரம்) செய்ய வேண்டும் என்றார்கள். அரவிந்தர் தன் தந்தையைப் போலவே அதைச் செய்ய மறுத்துவிட்டார். மாற்று யோசனைகளையும் நிராகரித்துவிட்டார். பின்பு பிராமண புரோகிதருக்கு நிறைய சன்மானம் கொடுத்து சரிக்கட்டிய பிறகு ’ஹிந்து சாஸ்திரம், சமுதாயத்தின் முகம்’ காப்பாற்றப்பட்டது. திருமணத்துக்குப் பிறகு மனைவி மிருணாளினி, தன் தங்கை சரோஜினியுடன் அரவிந்தர் பரோடா சென்றார்.
அந்தக் காலகட்டத்தில்தான் அரவிந்தரின் தம்பி பரீந்திரனும் பரோடா வந்து சேர்ந்தார். தாயின் உடல்நலக் குறைவு, தந்தையின் திடீர் மறைவு ஆகியவற்றால் பரீந்தரின் கல்வி பாதிக்கப்பட்டது. ஆனாலும் அவர் பள்ளி கல்வியை முடித்துவிட்டு கல்லூரி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். படிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் அவர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். பாட்னா கல்லூரியில் சேர்ந்தபோது அங்கு தேநீர்க் கடையை நடத்தினார். அந்தக் காலத்தில் அது மிகவும் புதுமையான முயற்சி. இப்படி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறாமல், கல்வியும் தடைபட்ட நிலையில் அண்ணன் மூலமாக ஏதாவது செய்ய முயற்சிக்கலாமென பரோடா வந்தார்.
பரீந்தர் அப்போது இளைஞர். தைரியமும் அபாரத் திறமையும் உள்ளவர். சட்டென்று மாறக்கூடிய மனநிலை கொண்டவர். ஏற்கனவே தியோகாரில் இருந்த புரட்சிக் குழுவில் பங்கேற்றவர். பரோடா வந்தபோது அதில் தீவிரமாக ஈடுபட முனைந்தார். விரைவில் அவர் காசிராவ் ஜாதவின் தம்பி லெப்டினன்ட் மாதவ ராவுடன் நெருக்கமானார். அவர் பரோடா ராணுவத்தில் அதிகாரியாக இருப்பவர். அவரிடம் பரீந்தர் ஆயுதங்களைக் கையாள பயிற்சி பெற்றார். மாதவ ராவ் பின்னாளில் சிறப்பு ராணுவப் பயிற்சிக்காக ஐரோப்பா சென்றார். அதற்கான செலவை அரவிந்தர் ஏற்றுக்கொண்டார். பரீந்தருக்கு ஆன்மிகக்
களத்தில் வெவ்வேறு அம்சங்களில் ஈடுபாடு இருந்தது. ஆவிகளுடன் பேசுவது, எழுத்தியக்கப் பலகை (உள்மன ஓட்டங்களை – யாரும் கைபிடிக்காமல் – பென்சில் தானே எழுதும்) போன்றவற்றில் ஈடுபாடு இருந்தது. அவருடன் சில நேரங்களில் அரவிந்தரும் கலந்துகொள்வார். ஒருமுறை அவருடைய தந்தையின் பெயரில் ஒரு ஆவி வந்து, ‘பரீன் சின்னக் குழந்தையாக இருந்தபோது அவனுக்கு நான் ஒரு தங்க கைகடிகாரம் தந்தேன்’ என்றது. அதை முற்றிலும் மறந்திருந்த பரீன் வியப்புடன் அதை ஆமோதித்தார். திலகர் எப்படிப்பட்டவர் என்று அந்த ஆவியிடம் கேட்டபோது, ‘உங்கள் எல்லா வேலையும் சீரழிந்து, பலரும் தலைகவிழ்ந்து நிற்கும்போது அந்த மனிதரின் தலை மட்டும் உயர்ந்தே இருக்கும்’ என்றது. இது திலகர் பெருமானின் அரசியல் மேன்மையைப் பற்றிய குறிப்பிடத்தக்கதோர் கூற்று. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆவி வந்து, ‘கோவில் கட்டு’ என்றது. பங்கிம் சந்திரரின் நாவலான ஆனந்த மடத்தில் அரசியல் சன்னியாசிகளுக்காக நிறுவப்பட்ட பவானி கோயில் போன்றதொரு கோயிலைச் சொல்வதாக பொருள் கொள்ளப்பட்டது.
பரீனுக்கு பயிற்சிகள் முடிந்த பிறகு அரவிந்தர் அவரை ஜதின் பானர்ஜியுடன் சேர்ந்து புரட்சிப் பணியில் ஈடுபடும்படி வங்காளத்துக்கு அனுப்பினார். அவரும் 1902இல் தனது கல்லூரி விடுமுறையின் போது ஜதீன், பரீனுடன் மிதினாபூர் சென்று அங்குள்ள இளைஞர்களைச் சந்தித்தார். அங்குதான் அவர் ஹேமச்சந்திர தாஸ் என்ற புரட்சிப் போராளியைச் சந்தித்தார். கல்கத்தாவில் பாரிஸ்டர் மித்தர் என்பவரைச் சந்திக்க ஜதின் ஏற்பாடு செய்தார். மித்தர், ‘இளைஞர் உடற்பயிற்சி சங்கம்’ என்ற பெயரில் இளைஞர்களை புரட்சிகரப் பணியில் ஈடுபட ஆர்வமூட்டி வந்திருந்தார். மித்தர் உடனடியாக அரவிந்தரின் பணியில் ஈடுபட முன்வந்தார். அரவிந்தர் அவருக்கு தனது அமைப்பின் ரகசிய உறுதிமொழியைச் செய்து வைத்தார். ஏற்கனவே ஹேமச்சந்திர தாஸுக்கு இப்படிப்பட்ட ரகசிய உறுதிமொழியை அவர் செய்திருந்தார். ஒரு கையில் பகவத் கீதையும் மற்றொரு கையில் வாளும் பிடித்தபடி, பாரத மாதா விடுதலைக்காக எல்லாவிதமான முயற்சிகளிலும் ஈடுபடுவதாக உறுதி ஏற்பதாக, அது இருந்தது. வங்காளத்தில் இதற்கான ஆறு மையங்களை ஏற்படுத்தவும் அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டது.
மகாராஷ்டிராத்தில் தாகூர் ராம் சிங் என்ற உதய்பூரைச் சேர்ந்த இளவரசர் தலைமையில் ரகசியமாக புரட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு செயல்படுவதாக தெரிந்து அரவிந்தர் அவரை பம்பாயில் சந்தித்து அவருடன் இணைந்து கொண்டார். அந்த அமைப்பின் உறுதிமொழியை ஏற்றார்.
தாகூர் தேச விடுதலைக்காக புரட்சி செய்ய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் ரகசியமாக ஊடுருவல்களை ஏற்படுத்தி வந்தார். அரவிந்தர் இந்தியாவின் மத்திய பகுதிகளுக்கு (இப்போதைய உ.பி, பிஹார், ம.பி) சென்று அங்குள்ள படைப்பிரிவின் அதிகாரிகளைச் சந்தித்து வந்தார். இவ்வாறு அவர் கிழக்கு, மேற்கு இந்திய பகுதிகளிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்தினார். இதற்கு திலகர் பெருமானின் ஆசியும் ஆதரவும் அரவிந்தருக்குக் கிடைத்தது. அவர்கள் இருவரும் அகமதாபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின்போது நீண்ட கலந்துரையாடல் செய்திருந்தனர். திலகர் பெருமானைப் பற்றி அரவிந்தருக்கு பெரும் மதிப்பு இருந்தது. அரசியல் களத்தில் இந்த இருவரின் நெருக்கமும் தேசிய இயக்கத்தில் மிக முக்கியமான பங்களிப்பை ஏற்படுத்தியது.
1903 இல் அரவிந்தர் மீண்டும் கல்கத்தா சென்றார். ஜதீனுக்கும் பரீனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. ஜதீன் சமரசம் இல்லாத கடுமையான ராணுவக் கட்டுப்பாட்டை தங்கள் அமைப்பில் வலியுறுத்தினார். இதனால் இளைஞர்கள் அவரிடம் இருந்து விலகினர். அரவிந்தர் அவர்களிடையே பேசினார். பிறகு பாரிஸ்டர் மித்தர், சகோதரி நிவேதிதை, பாரிஸ்டர் சித்ரஞ்சன் தாஸ், சுரேந்திரநாத் தாகூர், ஜதீன் ஆகிய ஐவர் குழுவை தலைமை தாங்க ஏற்படுத்தினார். கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தாலும் மித்தர் தலைமையில் பணி வேகமாக வளர்ந்தது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அமைப்பில் சேர்ந்தனர். சில அரசு ஊழியர்களும் ரகசியமாக தங்கள் ஆதரவை அளித்தனர். 1905இல் ஆங்கில அரசு செய்த வங்கப் பிரிவினை அந்த அமைப்பின் வளர்ச்சிக்கு மேலும் வழி வகுத்தது.

அந்தக் காலகட்டத்தில்தான் அரவிந்தருக்கும் சகோதரி நிவேதிதைக்கும் இடையேயான நட்பும் கூட்டாகச் செயல்படுவதும் உறுதிப்பட்டது. 1902இல் சகோதரி நிவேதிதை பரோடாவில் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அப்போது அவரை ரயில் நிலையத்திற்குச் சென்று அரவிந்தர் வரவேற்றிருந்தார். அரவிந்தர் காளி வழிபாடு செய்பவர் என்று சகோதரி நிவேதிதை கேள்விப்பட்டிருந்தார். சகோதரி நிவேதிதை எழுதிய ‘அன்னை காளி’ என்ற நூலை அரவிந்தர் ஏற்கனவே படித்திருந்தார். அதை வெகுவாகப் பாராட்டியும் இருந்தார். சகோதரி நிவேதிதை பரோடா மகாராஜாவைச் சந்தித்து புரட்சிகரப் பணிக்கு அவரது ஆதரவைக் கோரினார். அந்தச் சந்திப்பின்போது அரவிந்தர் உடனிருந்தார். மகாராஜாவோ, திரு (அரவிந்த) கோஷ் மூலமாக பதில் அனுப்புகிறேன், என்று சகோதரியிடம் சொல்லி அனுப்பி விட்டார். அவருக்கு அதில் சேர விருப்பமில்லை. ஆனால் அரவிந்தருக்கு அதில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது அவருக்கு வியப்பளித்தது.
அரவிந்தருக்கு சகோதரி நிவேதிதை மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவரைப் பற்றி பேசும்போதெல்லாம் உயர்வாகவே பேசுவார்:
"அவர் ஒரு உண்மையான புரட்சியாளர். தலைவர். மிகவும் வெளிப்படையாக புரட்சிக் கருத்துக்களைப் பேசக் கூடியவர். அவர் எதையும் மறைப்பதில்லை. அவர் பேசும்போது அந்த வார்த்தை மூலம் அவரது ஆன்மாவே வெளிப்படும். நாங்கள் எப்போது சந்தித்தாலும் அரசியல் பற்றியும் புரட்சியைப் பற்றியும் பேசுவோம். அவர் கண்களில் ஒரு தீவிரத்தையும் எந்தக் கணமும் சமாதி நிலையில் ஆழ்ந்துவிடும் திறனையும் நான் கண்டேன். அவரது ‘அன்னை காளிஎன்ற நூல் அகிம்சை பற்றியது அல்ல. அது புரட்சியைப் பற்றியது. அவரே ஒரு தீப்பிழம்பு. அவர் இந்தியாவுக்கு ஆற்றிய சேவை மகத்தானது"
-என்று அரவிந்தர் கூறியுள்ளார்.
புரட்சி இயக்கம் வலிமை பெற்று வருவதைக் கண்டதும் பரீனுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆவி சொன்ன ‘கோயில் கட்டு’ என்ற கருத்துக்கு வடிவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் வளர்ந்தது. அதற்குத் தகுதியான இடம் தேடி விந்திய மலைப்பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தார். அவ்வாறு அலைந்தபோது ‘மலைக் காய்ச்ச’லால் பாதிக்கப்பட்டார். அது கொடுமையான நோய் மட்டுமல்ல, அந்தக் காலத்தில் குணப்படுத்த முடியாத நோய்.
நோயுற்ற நிலையில் அவர் பரோடா வந்து தன் அண்ணனிடம் சேர்ந்தார். உடல் மெலிந்து படுத்த படுக்கையாக்க் கிடந்தார். அப்பொழுது ஒரு நாள் ஒரு நாக சன்னியாசி அரவிந்தரின் வீட்டுக்கு வந்தார். படுத்துக் கிடப்பது யாரென்று கேட்டார். விவரம் சொல்லப்பட்டதும் ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வரும்படி சொன்னார். சில மந்திரங்களை ஓதி அந்தக் குவளை தண்ணீரில் கத்தியால் குறுக்கும் நெடுக்குமாகக் கீறினார். பிறகு அந்தத் தண்ணீரைக் குடிக்கும்படி பரீனிடம் கொடுத்து, ‘நாளை இந்த காய்ச்சல் உன்னை விட்டு விலகும்’ என்று சொன்னார். பல நாட்கள் இருந்த காய்ச்சல் அடுத்த நாளே மாயமாய் மறைந்தது.
அந்தச் சம்பவம் பற்றி அரவிந்தர், “யோக சக்திக்கு இது ஒரு சிறந்த சான்று. யோகாவிற்கு இப்படிப்பட்ட சக்தி இருந்தால் அதை ஏன் தேச நன்மைக்காக பயன்படுத்தக் கூடாது என்று நான் நினைக்கத் தொடங்கினேன். அந்தச் சம்பவம்தான் என்னை யோகாவை நோக்கி திசை திருப்பியது. ராமகிருஷ்ணரின் செய்தி எனக்குரிய பாதையைக் காட்டியது. ஆகவே தான் யோகாவுக்கு நான் புறவாசல் வழியாக வந்தவன் என்று சொல்கிறேன்” என்று எழுதியுள்ளார்.
யோகாவை நோக்கி தான் வந்த விதம் பற்றி அரவிந்தர் இப்படி எழுதி இருந்தாலும், அவர் ஒரு பிறவி யோகி. இந்திய மண்ணை அடைந்தவுடன் அவருக்கு ஏற்பட்ட அரிய ஆன்மிக அனுபவம் பற்றி நாம் ஏற்கனவே படித்தோம். அதேபோல பரோடாவில் நடந்த இன்னொரு சம்பவத்தையும் இங்கே குறிப்பிடலாம். அது அவர் பரோடா வந்த முதல் ஆண்டிலேயே நடந்தது.
அரவிந்தர் பழைய காலத்து குதிரை வண்டி ஒன்றை வைத்திருந்தார். அது விக்டோரியா வண்டி எனப்பட்டது. அந்தக் குதிரை பெரிய குதிரை. ஆனால் அது நடப்பது கழுதையைப் போல நிதானமாக இருக்கும். சவுக்கடி கொடுத்தாலும் பலனில்லை. அந்த வண்டியில்தான் அரவிந்தர் போவார். ஒரு நாள் திடீரென்று அந்த குதிரை கட்டுக்கடங்காமல் போனது. விபத்து ஏற்படுவது தவிர்க்கவே முடியாது என்ற நிலை. அப்பொழுது அரவிந்தர் விபத்து ஏதும் நடக்கக் கூடாது என்று மனதில் சங்கல்பித்தார். உடனே அவரிடமிருந்து ஒரு ஒளி வெளிப்பட்டு சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னாளில் இந்த அனுபவம் பற்றி ‘இறைத்தன்மை’ என்ற தலைப்பில் பதினாறு வரியில் ஒரு பாடல் இயற்றினார். அந்த அனுபவம் அரவிந்தர் தன்னுள் உள்ள இறைத்தன்மையை அறிந்த முதல் சம்பவம் என்று கூறலாம்.
அதற்கு பத்தாண்டுகள் கழித்து 1903இல் இதே போன்றதொரு அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. அப்போது அவர் மகாராஜாவுடன் காஷ்மீருக்குப் போயிருந்தார். அங்குள்ள சங்கராச்சாரியார் குன்றின் உச்சியில் ஏற்பட்ட அனுபவத்தை ‘அத்வைதம்’ என்ற ஒரு பாடலில் கூறியுள்ளார். அதே ஆண்டு நர்மதை நதிக்கரையில் உள்ள ஒரு காளி கோயிலுக்கு நண்பர்களின் வற்புறுத்துதலால் சென்றார். விக்ரக வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத அவருக்கு அந்த நதிக்கரை கோயிலில் அந்த விக்கிரகத்தில் உயிரோட்டத்துடன் தெய்வீக சக்தி வெளிப்பட, காளி அவருக்கு காட்சி அளித்தாள். “எதிர்பாராத அந்தத் தருணத்தில் ஒரு சக்தி, ஒரு முகம் வெளிப்பட்டு என்னை நோக்கியது. என் உள்மனது அவள் லோக மாதா என்று உணர்ந்தது” என்று அரவிந்தர் எழுதியுள்ளார்.
அரவிந்தர் யோகப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் தன்னுடைய நண்பரும் பொறியாளருமான தேவதார் என்பவர் மூலம் பிராணாயாமம் செய்யத் தெரிந்து கொண்டிருந்தார்.
"தினசரி ஐந்து அல்லது ஆறு மணி நேரம் நான் அதைப் பயிற்சி செய்தேன். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பயின்றேன். விளைவாக என்னுடைய மூளை மிகவும் பிரகாசமானது. என் புத்தியின் செயல்பாடுகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆனது. வழக்கமாக மாதத்திற்கு இருநூறு கவிதை வரிகளை எழுதுவேன். அந்தப் பயிற்சிக்குப் பிறகு ஒரே நாளில் நான் பக்கம் பக்கமாக எழுத முடிந்தது. எண்ணவோட்டங்களும் தடைபடாமல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. பிராணயாமம் செய்யும்போது என் மூளையைச் சுற்றி ஒரு விதமான மின்சக்தி சூழ்ந்து இருந்ததை உணர்ந்தேன். அதனால் அந்த நேரத்தில் கொசுக்கள் கூட என்னைக் கடிப்பதில்லை. என்னுடைய ஆரோக்கியம் மேம்பட்டது. எனது தோலில் நிறம் கூடியது. என்னுடைய உமிழ்நீரின் தன்மை மாறியது. அதனால் தான் தோலின் நிறம் கூடியது என்று நினைக்கிறேன். நான் சைவ உணவுக்கு மாறிவிட்டேன். ஆனால் இதெல்லாம் மேலும் முன்னேற்றம் அடையவில்லை. அரசியல் செயல்பாடுகள் என்னை மிகவும் தீவிரமாகச் சூழ்ந்திருந்தன. அதனால் என்னால் தொடர்ந்து பிராணாயாமத்தைச் செய்ய முடியவில்லை. நான் மிகவும் ஆரோக்கியமற்ற நிலைக்கு தள்ளப்பட்டேன்"
-என்று கூறியுள்ளார்.
அரவிந்தருக்கு ஏற்பட்டிருந்த அனுபவங்கள் அற்புதமானவையாக இருந்தாலும் 1904இல் தான் அவர் யோகப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார் என்று சொல்லலாம். எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது என்று கேட்டபோது அவர் கூறியதாவது:
"அது கடவுளுக்குத் தான் தெரியும். பரோடாவில் இருந்த நண்பர்கள் என்னை யோகப் பயிற்சிகளை செய்யும்படி சொன்னபோது அவற்றை நான் ஏற்கவில்லை. அது வாழ்வை மறுக்கும் செயல் என்று நான் கருதினேன். அதற்காக சன்னியாசியாக காடுகளில் சென்று இருக்க வேண்டுமென நான் நினைத்திருந்தேன். என் இதயமோ இந்த நாட்டின் விடுதலைக்காக துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் பரீனின் காய்ச்சல் குணமானது என் கண்ணை திறந்தது. யோகாவை பற்றி என்னுடைய பார்வையின் தவறு புரிந்தது. மெதுவாக என் மனம் அதன்பால் திரும்பியது. 'நீ (கடவுள்) இருப்பது உண்மையானால் என் மனதை நீ அறிவாய். உனக்குத் தெரியும், எனக்கு மோட்சத்தின் மீது ஆசை இல்லை. பிறரைப் போல எனக்கு எந்த விஷயத்திலும் ஈர்ப்பு இல்லை என்பதும் உனக்குத் தெரியும். இந்த நாட்டை உயர்த்துவதற்கு, என் நாட்டு மக்களுக்கு சேவை புரிவதற்கு எனக்கு வல்லமை வேண்டும். அதை நீ எனக்கு அருள்வாயாக' என்ற பிரார்த்தனையுடன் தான் யோகப் பாதையில் அடி எடுத்து வைத்தேன்"
-என்று அரவிந்தர் கூறியுள்ளார்.
யோகப் பயிற்சியும் விடுதலை அரசியலும் ஒன்றுக்கொன்று முரணானது அல்ல. மாறாக ஒன்றை ஒன்று சார்ந்தது என்று அரவிந்தர் கருதினார்.
1905 வாக்கில் அரவிந்தர் நர்மதை நதிக் கரையில் உள்ள கர்நாலி என்ற இடத்திலிருந்த சுவாமி பிரம்மானந்தரின் ஆசிரமத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தார். (இவர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் முதல் தலைவராக இருந்த பிரம்மானந்தர் அல்ல. இவர் வேறு) அந்த மகாயோகியின் முதல் சந்திப்பிலேயே அரவிந்தர் மிகவும் ஈர்க்கப்பட்டார். வழக்கமாக அந்த சுவாமியை யாராவது வணங்கினால் அவர் கண்ணை மூடி அமர்ந்த நிலையில் ஏற்றுக் கொள்வார். ஆனால் அரவிந்தர் சென்றபோது ஏதோ முக்கியமான நபரைப் பார்ப்பது போல கண்ணைத் திறந்து கூர்ந்து நோக்கினார். “அந்தக் கண்கள் மிக அழகானவை. அவை என் உள்ளே ஊடுருவி அதில் ஆழ்ந்திருப்பதை எல்லாம் பார்த்தன” என்று அரவிந்தர் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சுவாமி பிரம்மானந்தரைப் பற்றி சுவாரசியமான சில விஷயங்களை அரவிந்தர் எழுதியுள்ளார். அந்த சுவாமியின் வயது பற்றி பல்வேறு கருத்துக்கள் உலவி வந்தன. சிலர் அவருக்கு வயது நானூறு என்றனர். சிலர் அதற்கும் மேல் என்றனர். அரவிந்தர் கூறுகிறார்:
“நானூறு வயது என்பதெல்லாம் மிகையான கற்பனை. அவர் எண்பது ஆண்டுகளாக நர்மதை நதிக்கரையில் இருக்கிறார். அவர் இங்கு வரும்போது வயது முதிர்ந்தவர் போலத் தான் தோற்றம் அளித்திருக்கிறார். நான் அவரைப் பார்த்த கொஞ்சம் காலத்திலேயே அவர் காலமானார். நான் பார்த்தபோது அவரது தலைமுடியும் தாடியும் வயதானவர்களுக்கு உரிய வகையில் வெள்ளை நிறத்தில் இருந்தன. ஆனால் அவர் நல்ல உடல்வாகு கொண்டவராக, உயரமானவராக, பல மைல்கள் நடக்கக் கூடியவராக, அதுவும் இளம் சீடர்களால் பின்பற்ற முடியாதபடி வேகமாக நடப்பவராக இருந்தார். அவர் தலை பெரியதாக இருந்தது. முகமும் பிரமிக்கத் தக்கதாக இருந்தது. அது பழங்கால மனிதர்களின் தோற்றத்தை நினைவூட்டுவதாக இருந்தது. அவர் தன் கடந்த காலத்தைப் பற்றியோ தன் வயதைப் பற்றியோ பேசுவதில்லை. ஓரிரு சந்தர்ப்பத்தில் பேசியதாகத் தெரிகிறது. அப்படி பேசிக் கேட்டவர்களில் ஒருவர் மஜும்தார். அவர் பரோடா அதிகாரி. அவர் சுவாமியின் பல்வலியைப் போக்க ஒரு மருந்தைக் கொடுத்துள்ளார். அதை வாங்க மறுத்து சுவாமிஜி, 'நான் மருந்து சாப்பிடுவதில்லை. எனக்கு எல்லாமே இந்த நர்மதை தண்ணீர்தான். இந்த பல்வலி எனக்கு பாவோ கிர்டி காலத்திலிருந்து இருக்கிறது’ என்று சொல்லி உள்ளார். பாவோ கிர்டி என்றால் அது மராட்டிய படைத்தளபதி சதாசிவராவ் பாவோ. அவர் 1761 ஜனவரி மாதத்தில் நடந்த பானிபட் போர்க்களத்தில் திடீரெனக் காணாமல் போனவர். அவர் உடலும் கிடைக்கவில்லை. பலர் பாவோதான் பிரம்மானந்தர் என்கிறார்கள். அது ஒரு கற்பனை என்று எனக்கு தோன்றுகிறது. பிரம்மானந்தரைத் தெரிந்த எவரும் அவர் சொல்வதை ஏற்க மறுத்ததே இல்லை. அவர் மிகவும் எளிமையான மனிதர். அவர் புகழை விரும்பியவர் அல்லர். தன்னை முன்னிலைப்படுத்தியவரும் அல்லர். அவர் உடல் தளர்ந்து, நோயுற்று காலமாகவில்லை. நர்மதை நதிக்கரையில் அவர் நடந்து கொண்டிருந்தபோது ஒரு துருப்பிடித்த ஆணி அவர் காலில் ஆழமாக தைத்ததால் ரத்தம் விஷமாகி அவர் காலமானார்"
-என்று எழுதியுள்ளார். இதெல்லாம் ஒரு விஷயத்தை சொல்லுகின்றன. மக்கள் பொதுவாக வயது பற்றியும் அன்றாட வாழ்க்கை பற்றியும் நினைத்திருப்பதெல்லாம் உயர்ந்த யோகிகளுக்குப் பொருந்தாது. அந்தக் காலகட்டத்தில்தான் அரவிந்தர் ‘பவானி மந்திர்’ (பவானி கோயில்) என்ற சிறு நூலை எழுதினார். பரீந்தர் தான் அந்தக் கருத்தை முதலில் சிந்தித்தார். பாரத அன்னையை பாரத சக்தியாக, பவானி பாரதியாக்க் கருதி அவளுக்குக் கோயில் எழுப்ப வேண்டும். அது புதிய புரட்சிகரக் கருத்துக்களை வலிமையாக பிரசாரம் செய்ய வழிவகுக்கும். எனவே இதுபற்றி ஒரு புதிய நூலை எழுதும்படி அவர் அரவிந்தரைக் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று எழுதப்பட்டதே ‘பவானி மந்திர்’.
“மலைகளிடையே பவானிக்கு கோயில் எழுப்பப்பட வேண்டும். அவளே அன்னை. வரம்பற்ற சக்தி அவளே. காலத்திற்கு ஏற்ப அவள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறாள். இந்தக் காலகட்டத்திற்கு அவள் வலிமை என்ற ரூபம் கொண்டுள்ளாள். அதனால் அவள் பெயர் பவானி. புதிதாக உருவாக்குவது, ஏற்கனவே இருப்பதை மறுவார்ப்பு செய்வது என அவள் லீலையை எங்கும் பார்க்கலாம். பழையவற்றில் தன் சக்தியைப் பாய்ச்சி அவற்றை புதிய புயலாக வடிவெடுக்க வைக்கிறாள். நாம் சக்தியைக் கைவிட்டு விட்டோம். ஆகவே அவளும் நம்மைக் கைவிட்டு விட்டாள். சக்தி நம்முடைய இதயத்தில் இல்லை. நம் அறிவில் இல்லை. நம் கரங்களில் இல்லை. எனவே இந்தியர்களாகிய நாம் சோம்பலை உதறித் தள்ளிவிட்டு அன்னை பவானி பாரதியை (இந்தியாவை) பீடத்தில் ஏற்ற வேண்டும். இந்தியா என்பது மலைகளும் காடுகளும் நதிகளும் சமவெளிகளும் கொண்ட நிலப்பரப்பு அல்ல. பேச்சு வழக்கில் உள்ள வெறும் சொல் அல்ல. மனதில் தோன்றிய கற்பனை அல்ல. அது மகத்தான சக்தி. லட்சக்கணக்கான மக்கள் வடிவில் வெளிப்படும் தேசம் என்ற ஒற்றை சக்தி. ஆயிரக்கணக்கான வடிவில் தோன்றிய ஒரே மகிஷாசுர மர்த்தினி அவள். இந்தியா என்ற அந்த சக்தி, பவானி பாரதி, முப்பது கோடி மக்களின் ஒன்றுபட்ட சக்தி இன்று செயலற்று கிடக்கிறது. தமஸில் மூழ்கி உள்ளது. சுயநலத்திலும் அறியாமையிலும் ஆழ்ந்துள்ள தம் மைந்தர்களால் அவள் அவல நிலையில் இருக்கிறாள். மூன்று விஷயங்கள் இன்று தேவைப்படுகின்றன. ஒன்று, அன்னைக்கு ஒரு கோயில். இரண்டாவது, மிகுந்த வலிமைமிக்க மனிதர்களான கர்ம யோகிகளுக்கான புதிய அமைப்பு. மூன்றாவது, சோ-ஹம். இது வலிமைமிக்க வேதாந்த சூத்திரம். கர்ம, பக்தி யோகத்தால் உயிர்ப்பூட்டப்பட்ட ஞானம் இது. இது மனிதர்களை எல்லாவிதமான பலகீனம், பயத்திலிருந்து விடுவிக்கக் கூடியது. இதனால் இந்தியா மறுபிறப்பு எடுக்கும். இந்தியா மறுபிறப்பு எடுக்க வேண்டும். ஏனெனில் எதிர்கால உலகத்தின் தேவை அது. வாருங்கள், அன்னையின் அழைப்பைக் கேளுங்கள். அவள் ஏற்கனவே உங்கள் உள்ளத்தில் குடிகொண்டு இருக்கிறாள். வழிபடுங்கள், அவள் வெளிப்படக் காத்திருக்கிறாள். உங்களில் அவள் குடிகொண்டு இருப்பதை உணர்ந்தவர்கள் எவரோ அவர்கள் தங்கள் சுயநலம் என்னும் கருந்திரையை விலக்கி, மோகம் என்னும் சிறையில் இருந்து வெளியே வாருங்கள். உங்களால் உடல், மனம், அறிவு, பேச்சு, பணம், செயல், பிரார்த்தனை, வழிபாடு என்று எந்தெந்த வகையில் முடியுமோ அந்த வகையில் அவளுக்கு உதவி செய்யுங்கள். உங்கள் சக்திக்கு ஏற்ப உதவுங்கள். அதில் பின்வாங்காதீர்கள். அவள் பிரகாசத்துடன் வெளிப்படும்போது நீங்கள் அவளது முகமாக இருப்பீர்கள்”
-என்று ‘பவானி மந்திர்’ நூலில் அரவிந்தர் எழுதியுள்ளார்.
அந்த நூலில் உள்ளது போல கோயிலும் எழும்பவில்லை. கர்ம யோகிகளின் புதிய அமைப்பும் உருவாகவில்லை. பரீந்தர் மணித்தோலா தோட்டம் என்னும் இடத்தில் சிறிய புரட்சியாளர் குழுவைக் கொண்டு அந்த இரண்டையும் செயல்படுத்திப் பார்க்க முயற்சித்தார். வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் அந்த சிறிய நூல் நூற்றுக் கணக்கானவர்களுக்கு தெம்பையும் உற்சாகத்தையும் அளித்தது. ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அன்று மட்டும் அல்ல, நம் ஒவ்வொருவரின் இதய கோயிலிலும் பாரத அன்னையை நிறுவி வழிபட வேண்டும் என்ற அரவிந்தரின் அறைகூவல் இன்றும் நம்முன் உள்ளது.
1905 மார்ச் மாதத்தில் கல்லூரியின் முதல்வராக இருந்த ஆங்கிலேயர் ஓராண்டு கால விடுப்பில் சென்றதால் அரவிந்தர் பொறுப்பு முதல்வரானார். 1906 பிப்ரவரி மாதம் வரை அந்த பணியில் இருந்தார். பின்னர் விடுப்பு எடுத்துக்கொண்டு வங்காளம் சென்றார். அந்த வேளையில் பெரிய மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டன. 1905 அக்டோபர் மாதத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி பிரிட்டிஷ் அரசு வங்காளத்தைப் பிரித்தது. அதன் விளைவுகள் பயங்கரமானவையாக இருந்தன. அரவிந்தர் அப்போது வங்காளத்தில் நிலவிய சூழ்நிலைப் பற்றி தன் ஆட்கள் மூலம் தொடர்ந்து அறிந்து வந்தார். 1905 டிசம்பரில் காங்கிரஸ் மாநாடு காசியில் நடந்தது. அதற்கு அவர் சென்று நாட்டின் நாடித்துடிப்பைத் தெரிந்து கொண்டார். யோகா, ஆயுதப் போராட்டத்திற்கு தயாரிப்புப் பணிகள், அரசியல், கல்லூரியில் வகுப்பு எடுப்பது, தனக்காக நூல்களைப் படிப்பது என எல்லாவற்றையும் அவர் ஒருங்கே செய்து வந்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த நிலையிலும் அவர் மனதில் தணியாமல் இருந்த தாகத்தைப் பற்றி அப்போது தன் மனைவி மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அது மனைவிக்கு எழுதிய தனிப்பட்ட கடிதம் தான். வெளியிடுவதற்காக எழுதப்பட்டதல்ல. ஆனால் 1908 மே மாதத்தில் அவர் கைது செய்யப்பட்டபோது போலீசார் அவர் வீட்டில் இருந்த கடிதங்களைக் கையகப்படுத்தி நீதிமன்றத்தில் சான்றாவணங்களாகச் சமர்ப்பித்தனர். அதிலிருந்து நமக்கு அவரது இறைத் தேடலும் தேசபக்தியும் எந்தவித முரண்பாடும் இல்லாமல் ஒன்றாக இணைந்து இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். தன் மனைவி தன்னை சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதும் தன்னைப் பின்தொடர வேண்டும் என்ற ஆவலும் அதில் வெளிப்படுகின்றன.
அரவிந்தர் தன் மனைவிக்கு ஆகஸ்ட் 1905இல் எழுதியுள்ள கடிதத்தில்,
"என்னிடம் மூன்று கிறுக்குத்தனங்கள் உள்ளன. முதலாவது, என்னுடைய கல்வி, திறமை, சாதனைகள், சம்பாத்தியம் எல்லாம் இறைவன் எனக்கு இட்டது. இதில் குடும்பத்தை நடத்துவதற்கு எவ்வளவு பணம் அவசியமோ அதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். மிகுதியானதை இறைவனிடமே திருப்பித் தந்துவிட வேண்டும். என்னுடைய வசதிக்காகவும் சொகுசுக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் அதிலிருந்து செலவு செய்தால் நான் திருடன் என்றே என்னை கருதுவேன்... இரண்டாவது கிறுக்குத்தனம் என்னை அண்மையில் பீடித்தது. இறைவனைக் காண வேண்டும் என்பதே அது. இறைவன் இருப்பது உண்மையானால் அவரைச் சந்திக்க, அவரது இருப்பை உணர ஏதேனும் வழி நிச்சயம் இருக்கும். அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நான் அதில் பயணிப்பேன். இந்து மதம் இந்த விஷயத்தில் பொய் சொல்லவில்லை என்பதை கடந்த ஒரு மாத கால அனுபவத்தில் தெரிந்து கொண்டுள்ளேன். அதே பாதையில் உன்னையும் அழைத்துச் செல்ல நான் விரும்புகிறேன்... மூன்றாவது, மற்றவர்கள் இந்த நாட்டை வயல்வெளிகள், புல்வெளிகள், காடுகள், மலைகள், நதிகள் கொண்ட நிலப்பரப்பாக, அசித்தாகப் பார்க்கிறார்கள். ஆனால் எனக்கோ அவள் உயிர்ப்புள்ள தாய். அவளை நான் வணங்குகிறேன், வழிபடுகிறேன். தன் தாயின் மார்பில் ஓர் அரக்கன் அமர்ந்து அவள் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தால் அதைப் பார்த்து அவளது மகன் என்ன செய்வான்? அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருப்பானா அல்லது அவளை காப்பாற்ற விரைவானா? வீழ்ச்சி அடைந்த இந்த இனத்தை தூக்கி நிறுத்தும் வல்லமை எனக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன். அது உடல் வலிமை அல்ல, அறிவு வல்லமை. ஷத்திரிய சக்தி மட்டுமே வல்லமை அல்ல. பிராமண சக்தியும் உள்ளது. அது அறிவை அடிப்படையாகக் கொண்டது. இது எனக்கு புதியதாக ஏற்பட்ட உணர்வு அல்ல. இது நான் பிறக்கும்போதே என் எலும்பு மஜ்ஜையில் உள்ள உணர்வு. இறைவன் இந்த மாபெரும் விஷயத்தை சாதிப்பதற்காகவே என்னை உலகிற்கு அனுப்பியுள்ளார். எனக்கு பதினான்கு வயதிருக்கும்போது இந்த விதை முளைக்கத் தொடங்கியது. பதினெட்டு வயதில் அடித்தளம் அசைக்க முடியாதபடி உறுதிப்பட்டது"
-என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
வேறு ஒரு கடிதத்தில், “இந்த இருண்ட காலத்தில் தேசமே அடைக்கலம் தேடி என் கதவைத் தட்டுகிறது. என்னுடைய சகோதர, சகோதரிகளான முப்பது கோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும். இந்த ரகசியத்தை தான் நான் உனக்கு சொல்ல விரும்புகிறேன்” என்று எழுதியுள்ளார்.
நாம் கண்டது வெறும் சாரம்தான். ஆரம்ப நாட்களிலேயே அவர் எவ்வளவு உயர்வாகச் சிந்தித்தார், செயல்பட்டார் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள அந்தக் கடிதங்கள் அனைத்தையும் நீங்கள் படிக்க வேண்டும்.
மிருணாளினிக்கு அந்தக் கடிதங்கள் புதிராக இருந்திருக்கலாம். அவளுக்கு வயது அப்போது பதினெட்டு. பக்குவப்பட்ட மனிதர்களுக்கே இது சற்று கடினம் தான். தியாகத்தையும் துறவு மனப்பான்மையையும் கோரும் குறுகிய, ஆழம் மிகுந்த பாதையை தன் கணவர் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று அந்த இளம்பெண் புரிந்து கொண்டாள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் தன் கணவர் சிறைப்பட்டபோது ஏற்பட்ட துன்பத்தை அவள் மிகுந்த மனவுறுதியுடன் எதிர்கொண்டாள். அவர் மீது அவளுக்கு இருந்த அன்பும் பக்தியும் சற்றும் குறையவில்லை.
1906 ஜூன் மாதத்தில் விடுப்பு முடிந்ததும் அரவிந்தர் பரோடா திரும்பினார். சில நாட்கள் தான் அங்கு தங்கியிருந்தார். ஜூன் 19 ஆம் தேதி முதல் ஓராண்டு காலம் சம்பளமற்ற விடுப்பில் வங்காளத்திற்கு திரும்பிச் சென்றார். பரோடாவுடன் அவருக்கு இருந்த நீண்டகாலத் தொடர்பு அத்துடன் முடிவுக்கு வந்தது என்பதை வரலாறு சொல்கிறது. வங்காளத்தில் கிளர்ச்சியும் போராட்டங்களும் தொடங்கி நாடு முழுவதும் பரவியது. தேசத்திற்கு மிக முக்கியமான அந்தத் தருணத்தில் அரவிந்தர் தனது சீரிய பங்கை ஆற்ற அங்கு சென்றார்.
$$$