அரவிந்தர் தனது மனைவிக்கு எழுதிய கடிதம்

மனைவி மிருணாளினியுடன்
அரவிந்த கோஷ்

முன்னுரை

எந்த ஒரு பெண்ணுக்கும் தனது கணவனுடன் நல்வாழ்வு வாழவே ஆசை இருக்கும். மகரிஷி அரவிந்தரின் மனைவி மிருணாளினியும் இதில் விதிவிலக்கல்ல. ஆனால், தான் திருமணம் செய்துகொண்ட கணவர் மற்றவர்களைப் போல சாதாரண மனிதர் அல்ல என்பதை, அவர் தாமதமாகவே உணர்ந்தார்.

1901 ஏப். 30-இல் அரவிந்த கோஷ்- மிருணாளினி போஸ் திருமணம் நடைபெற்றது. அரசு அதிகாரியும் செல்வந்தருமான பூபால் சந்திர போஸின் மூத்த மகள் மிருணாளினி. அப்போது அவருக்கு வயது 14 மட்டுமே; அரவிந்தரின் வயது 28.

இவர்களது இல்லற வாழ்வு நீண்ட நாள் நிலைக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்ட அரவிந்தரால் மற்றையோர் போல வாழ முடியவில்லை. கல்வியாளரான தனது கணவர் அரசுக்கு எதிராகப் போராடுவதை அவரது மனைவியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்த அரவிந்தரால் மனைவிக்கு நேசத்தைக் காட்ட முடியவில்லை.

இதனால் இருவரிடையே மனக்கசப்பு நேரிட்ட வேளையில், அரவிந்தர் தனது மனைவி மிருணாளினிக்கு 1905 ஆக. 30 இல் எழுதிய கடிதம் இது…

அலிப்பூர் வெடிகுண்டு சதி வழக்கில் அரவிந்தர் கைது செய்யப்பட்டபோது, அவரது வீட்டில் சோதனை நடத்திய பிரிட்டீஷ் போலீஸார், பல கடிதங்களைக் கைப்பற்றினர். அவற்றுள் ஒன்று, அவர் தனது பிரிய மனைவி மிருணாளினிக்கு எழுதிய இக்கடிதம்.  

ஆங்கிலேய அரசால் வேட்டையாடப்பட்டு, பாண்டிசேரிக்கு தப்பி வந்த அரவிந்தர் அங்கு ஆன்மிக ஞானியாக மலர்ந்தார். பின்னாளில் தனது கணவருடன் வாழ விரும்பிய மிருணாளினி பாண்டிசேரி கிளம்பிய நிலையில் இன்ஃப்ளூயென்ஸா காய்ச்சலால் 1918 டிச. 17இல் காலமானார்.

நாட்டு நலனுக்காக தன்னை அர்ப்பணித்த அரவிந்தரின் வாழ்வில் இருக்கும் சோகமயமான பக்கம் இது. அரவிந்தரின் தியாகத்துக்கு சற்றும் குறைந்ததல்ல அவரது மனைவியின் தியாகம். அரவிந்தரின் கடிதத்தில் தனது பிரிய மனைவி மீது கொண்டிருந்த நம்பிக்கையும் அன்பும் புலப்படுகின்றன. இதுபோன்ற ஈடற்ற இழப்புகளின் மீதுதான் நமது சுதந்திர ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.

$$$

அன்புக்குரிய மிருணாளினி,

உன்னுடைய ஆகஸ்டு 24 ஆம் தேதிக் கடிதம் கிடைத்தது. உனது பெற்றோருக்கு மீண்டும் அதே துயரம் ஏற்பட்டிருப்பதை அறிந்து வருந்துகிறேன். நம்மை விட்டுப் போய்விட்டது எந்தப் பையன் என்று நீ எழுதவில்லை. இதைப் போன்ற நஷ்டம் ஏற்படும்போது நம்மால் என்னதான் செய்ய முடியும்? சுகத்தை நாடினால் அதன் நடுவே துக்கம் இருப்பதும், இன்பத்துடன் எப்போதும் துன்பம் ஒட்டிக் கொண்டிருப்பதும்தான் இந்த உலகத்தின் இயல்பு. இந்த விதி குழந்தைகள் மீதுள்ள ஆசைக்கு மட்டும்தான் என்றில்லை; எல்லா விதமான ஆசைகளுக்கும் இதுவே விதி. அமைதியான உள்ளத்தோடு எல்லாச் சுகத்தையும் எல்லாத் துக்கத்தையும் அவன் காலடியில் அர்ப்பணித்துவிடுவது ஒன்றே இதற்கு மருந்தாகும்.

இப்பொழுது நான் முன்பு குறிப்பிட்ட அந்த விஷயத்தைப் பற்றி எழுத நினைக்கிறேன். யார் விதியோடு உன்னுடைய விதி முடிச்சுப் போடப்பட்டுள்ளதோ, அவன் மிகவும் அசாதாரணமான குணமுடையவன் என்பதை நீ இதற்குள் புரிந்து கொண்டிருப்பாய். நான் வேலை செய்யும் துறையும், எனது வாழ்க்கையின் நோக்கமும். எனது மனப்பாங்கும் இன்று இந்நாட்டில் வாழும் மக்களுடையவை போலில்லை. நான் எல்லா வகையிலும் அவர்களிடமிருந்து வேறுபட்டு அசாதாரணமானவனாக இருக்கிறேன். அசாதாரண நோக்கம், அசாதாரண முயற்சி, அசாதாரணமான ஆசைகளை உடைய ஒருவனைப் பற்றி சாதாரண மனிதர்கள் என்ன சொல்லுவார்கள் என்பது உனக்குத் தெரிந்திருக்கலாம். அவர்கள் அவனைப் பயித்தியக்காரன் என்பார்கள். அந்தப் பயித்தியக்காரன் தான் எடுத்த காரியத்தில் வெற்றி கண்டுவிட்டால் அவனை மகா மேதாவி என்று புகழ்வார்கள். தங்கள் வாழ்க்கை லட்சியத்தில் வெற்றி பெறுவோர் எத்தனை பேர்? ஆயிரம் பேர்களில் ஐந்து அல்லது ஆறு பேரே அசாதாரணமாயிருப்பார்கள்: இந்த ஐந்து அல்லது ஆறு பேரில் ஏதோ ஒருவன் வெற்றி பெறுவான். என்னைப் பொறுத்த வரை, வெற்றி இருக்கட்டும், நான் முழுவதுமாகக் களத்தில் இறங்கக்கூட இல்லை. அப்படியிருக்கும் போது நீ என்னைப் பயித்தியக்காரன் என நினைக்காமல் வேறு எப்படி நினைக்கமுடியும்? ஒரு பெண்ணுக்கு ஒரு பயித்தியக் காரனுடன் மாட்டிக்கொள்வது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம்? ஏனெனில், பெண்களின் அபிலாஷைகளெல்லாம் லௌகிக சுக துக்கங்களிலேயே கட்டுப்பட்டுள்ளன. ஒரு பயித்தியக்காரனால் தனது மனைவியை  சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியாது. அவளுடைய வாழ்க்கையைத் துன்பம் நிறைந்ததாகத்தான் அவனால் ஆக்க முடியும்.

இந்து மதத்தைத் தோற்றுவித்தவர்கள் இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தார்கள். அவர்கள் அசாதாரண குணமுடையவர்களை, அசாதாரண முயற்சிகளை, அசாதாரண ஆர்வங்களைப் பெரிதும் விரும்பினார்கள். அவன் பயித்தியக்காரனோ மேதாவியோ, அசாதாரண மனிதனுக்கு அவர்கள் அதிக மதிப்புக் கொடுத்தார்கள். ஆனால் அசாதாரண மனிதனால் மனைவிக்குப் பெரிய சங்கடமாயிற்றே, அந்தப் பிரச்சனைக்கு முடிவு என்ன? பண்டை ஞானிகள் இவ்வாறு முடிவு செய்தார்கள். பெண் குலம் கடைபிடிக்கவேண்டிய மந்திரம்  ‘கணவனே பரம குரு’ என்பதுதான். மனைவி கணவனின் சகதர்மிணி; அவனுடைய தர்மத்தில் பங்கு பெறுகிறவள். அவன் தன்னுடைய சுவதர்மமாக ஏற்றுக்கொண்டுள்ள காரியத்தில் அவள் பக்கத்துணையாக நின்று ஆலோசனைகள் கூறி உற்சாகமூட்டிக் கைகொடுக்க வேண்டும். அவனைத் தனது தெய்வமாகக் கொண்டு அவன் மகிழ்வதில் மகிழ்ந்து அவன் துக்கத்தைத் தன் துக்கமாகக் கொள்ள வேண்டும். ஒரு பணியைத் தேர்ந்தெடுப்பது ஆண்மகனின் வேலை. ஆணுக்கு உற்சாகமூட்டித் துணை நிற்பது பெண்ணின் கடமை. இப்பொழுது நீ தீர்மானிக்க வேண்டியது இதுதான். நீ இந்துமதம் காட்டும் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறாயா, புதிய நாகரிகத்தின் லட்சியத்தை மேற்கொள் ளப் போகிறாயா?

உனது முற்பிறவிகளில் செய்த தீய வினைகளின் பயனாய் ஒரு பயித்தியக்காரனுக்கு மனைவி ஆகியிருக்கிறாய். நம்முடைய தலைவிதியுடன் ஓர் உடன்பாட்டிற்கு வந்து விடுவது நல்லது. ஆனால், அந்த உடன்பாடு எப்படி இருக்கப் போகிறது? மற்றவர்களின் அபிப்பிராயத்தின் அடிப்படையில் நீயும் உனது கணவனைப் பயித்தியக்காரன் என ஒதுக்கிவிடப் போகிறாயா? பயித்தியக்காரன் தன்னுடைய பயித்தியப் போக்கில்தான் போய்க்கொண்டிருப்பான். உன்னால் அவனைப் பிடித்து நிறுத்த முடியாது. அவனுக்கு உன்னைவிடப் பலம் அதிகம். அப்படியானால், நீ ஒன்றும் செய்யாமல் மூலையில் இருந்துகொண்டு அழப் போகிறாயா, அல்லது அவனுடன் சேர்ந்து நடை போடப் போகிறாயா? கணவன் குருடனாக

இருந்ததால் நன்றாக இருந்த தனது கண்கள் மீது துணியைக் கட்டிக்கொண்டு தானும் குருடியாக நடந்துகொண்ட ராணியைப்போல பயித்தியக்காரக் கணவனுக்கு ஜோடியான பயித்தியக்கார மனைவி ஆகப் போகிறாயா? நீ என்னதான் பிரம்மசமாஜப் பள்ளிகூடத்தில் படித்தாலும் நீ இந்துக் குடும்பத்துப் பெண்தான். இந்து மூதாதையரின் ரத்தம் உனது நாடிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆகவே, இரண்டாவது சொன்ன வழியைத்தான் தேர்ந்தெடுப்பாய் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

என்னைப் பிடித்துள்ள பயித்தியங்கள் மூன்று. முதலாவது பயித்தியம் – கடவுள் எனக்குக் கொடுத்துள்ள திறமைகள், மேதை, கல்வி, புலமை, செல்வம் எல்லாம் அவனுடைமைகளே என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னையும் குடும்பத்தையும் பராமரிப்பதற்கு இன்றியமையாத அளவிற்கு மட்டுமே எனது சொந்தக் காரியத்திற்காக நான் இவைகளைச் செலவிடலாம். மீதியைக் கடவுளுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். நான் எல்லாவற்றையும் எனது சுகபோகத்திற்காகச் செலவு செய்தேனானால் நான் ஒரு திருடன். கடவுளிடமிருந்து செல்வத்தைப் பெற்று அதை அவருக்குத் திருப்பிக் கொடுக்காதவன் திருடனாவான் என இந்துமதம் சொல்கிறது. இதுவரை நான் ரூபாயில் இரண்டு அணாவைக் கடவுளுக்குக் கொடுத்து விட்டு மீதிப் பதினாலு அணாவை எனது சொந்தச் சுகத்திற்காகச் செலவு செய்து வந்திருக்கிறேன். இவ்வாறு உலக இன்பங்களில் மூழ்கிய நான் கடவுளுக்குச் சரியான கணக்குக் கொடுக்கவில்லை. இப்படி எனது வாழ்நாளில் பாதி வீணாகப் போயிற்று.

விலங்குகூடத் தன் வயிற்றையும் தனது குடும்பத்தின் வயிற்றையும் நிரப்புவதிலும் குடும்பத்தின் சந்தோஷதிற்காக உழைப்பதிலும் திருப்தி அடைகிறது. இதுவரை நான் ஒரு விலங்கைப் போலவும், ஒரு திருடனைப் போலவும் நடந்து வந்திருக்கிறேன் என்பதை நான் உணர்ந்துவிட்டேன். அதற்காகக் கழிவிரக்கம் கொள்கிறேன். என்மீது எனக்கு அருவருப்பு உண்டாகிறது. இனியும் அவ்வாறு வாழ மாட்டேன். இப்பாவ வாழ்க்கையைக் கட்டோடு விட்டுவிட்டேன்..

கடவுளுக்குக் கொடுத்தல் என்றால் என்ன? நல்ல காரியங்களுக்காகச் செலவழித்தல் என்று பொருள். உஷாவுக்கும் சரோஜினிக்கும் நான் பணம் கொடுத்ததை எண்ணி வருந்தவில்லை. பிறருக்கு உதவுவது புனிதமான கடமை; அடைக்கலமாக வருகிறவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது அதை விடவும் புனிதமான கடமை. ஆனால், தனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும் கொடுப்பதால் கடவுளுக்குக் காட்ட வேண்டிய கணக்குச் சரியாகிவிடாது. இத் துயர் மிகுந்த காலத்தில் நாடு முழுவதுமே அடைக்கலம் வேண்டி எனது வாசலில் வந்துள்ளது. இந்நாட்டில் எனக்கு முப்பது கோடி சகோதர சகோதரிகள் இருக்கின்றனர். அவர்களுள் பலர் பட்டினியால் மடிந்து கொண்டிருக்கின்றனர்; பெரும்பான்மையினோர் துன்பத்திலும் துயரத்திலும் சித்திரவதைப்பட்டு எப்படியோ உயிரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் உதவ வேண்டும்.

நீ என்ன சொல்கிறாய்? என்னுடன் வந்து இந்த விஷயத்தில் என் லட்சியத்தில் பங்கேற்பாயா? சாதாரண மக்களுடைய உணவையே உண்டு, அவர்களைப் போலவே ஆடை அணிந்து, உண்மையான தேவைகளுக்குப் போக மீதியைக் கடவுளுக்குக் கொடுத்துவிடுவோம். இதுவே நான் செய்யப் போவது. அதற்கு நீ சம்மதம் தெரிவித்து, அந்தத் தியாகத்தைச் செய்ய முன்வந்தால் எனது நோக்கம் நிறைவேறும்,  ‘நான் கொஞ்சமும் முன்னேற்றம் அடையவில்லையே’ என்று குறைபட்டுக் கொண்டிருக்கிறாய். இதோ நீ முன்னேறுவதற்கான ஒரு வழியைக் காட்டியிருக்கிறேன். இந்த வழியில் நடப்பாயா?

எனது இரண்டாவது பயித்தியம் அண்மையில்தான் ஏற்பட்டது. எந்த வழியிலாவது கடவுளை நேருக்குநேர் காண வேண்டும் என்பதே அந்தப் பயித்தியம். எப்போதாவது கடவுள் பெயரைச் சொல்வது, நாலு பேருக்குத் தெரியும்படியாகப் பிரார்த்தனை செய்வது, தான் எவ்வளவு பெரிய பக்திமான் என்று காட்டிக்கொள்வது- இதுதான் இப்பொழுது மதமாகி விட்டது. இவற்றிலெல்லாம் என் மனம் செல்லவில்லை. கடவுள் இருப்பது உண்மையானால் அவரை அனுபவமாகத் தெரிந்துகொள்வதற்கு, அவரை நேருக்குநேர் சந்திப்பதற்கு எப்படியும் ஒரு வழி இருந்தே ஆக வேண்டும். இந்த வழி எவ்வளவு கடினமாக இருந்தபோதிலும் இந்த வழியில் செல்வதென்று முடிவு செய்துவிட்டேன். அந்த வழி நமது உடலிலேயே, நமது மனத்திலேயே இருக்கிறது என இந்துமதம் கூறுகிறது. அந்தவழியில் செல்வதற்கான விதிமுறைகளை அது வகுத்துள்ளது; நான் அதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டேன். ஒரு மாதத்திற்குள்ளாகவே இந்து மதம் கூறுவது  பொய்  அன்று என்பதை அறிந்துகொண்டேன். அது கூறும் அடையாளங்களை என் அனுபவத்தில் என்னிடத்திலேயே காண்கின்றேன். இப்பொழுது உன்னையும் அதே வழியில் இட்டுச்செல்ல விரும்புகின்றேன். உன்னால் எனக்குச் சமமாக நடக்க முடியாது. ஏனெனில், அதற்கு வேண்டிய ஞானம் உன்னிடம் இல்லை. ஆனால் என்னைப் பின்பற்றி வரத் தடையேதும் இல்லை. யார் வேண்டுமானாலும் இந்த வழியில் சென்று பூரண நிலையை அடையலாம். ஆனால், இந்த வழியில் செல்வது எனத் தீர்மானிப்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. உன்னை யாரும் அந்த வழிக்கு இழுக்க முடியாது. இதற்கு நீ உடன்படுவதாயிருந்தால், அதைப்பற்றி விவரமாக எழுதுகிறேன்.

எனது மூன்றாவது பைத்தியம் இது. மற்றவர்கள் இந்நாட்டைச் சில சமவெளிகளும், வயல்களும், காடுகளும், மலைகளும் கொண்ட உயிரற்ற சடப்பொருளாகக் கருதுகிறார்கள். ஆனால் நானோ இந்நாட்டைத் தாயாகக் காண்கிறேன். அவளைத் தாயாகப் போற்றித் தொழுகின்றேன்.  ‘தனது தாயின் மார்புமீது ஓர் ராட்சசி உட்கார்ந்துகொண்டு அவளுடைய ரத்தத்தை உறிஞ்சத் தொடங்கினால் ஒரு மகன் என்ன செய்வான்? நிம்மதியாக உட்கார்ந்து அறுசுவை உணவு உண்டு கொண்டிருப்பானா? மனைவி மக்களுடன் கொஞ்சுவானா? இல்லை தனது தாயைக் காப்பாற்ற விரைவானா? வீழ்ந்து கிடக்கும் இந்த இனத்தைத் தூக்கிவிடுவதற்கான பலம் என்னிடம் இருப்பதை நான் அறிவேன். என்னிடம் உடல் பலமில்லை – நான் வாளோ துப்பாக்கியோ கொண்டு போரிடப் போகவில்லை. ஆனால், ஞான சக்தி கொண்டு போரிடப் போகிறேன். க்ஷத்திரிய பலம் ஒன்றுதான் பலமென்பதில்லை; ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட பிரம்ம தேஜஸ் இருக்கிறது. இந்த உணர்வு எனக்குப் புதிதன்று. இது இன்று நேற்று வந்ததன்று. நான் இந்த உணர்வுடனேயே பிறந்திருக்கிறேன், அது எனது எலும்பிற்குள்ளேயே இருக்கிறது. இப்பெருங் காரியத்தைச் சாதிக்கவே ஆண்டவன் என்னை இப்புவிக்கு அனுப்பியுள்ளான். இந்த எண்ணம் எனது பதினான்காவது வயதிலேயே முளைவிடத் தொடங்கியது; பதினெட்டு வயதானபோது அத்தீர்மானம் அசைக்க முடியாதபடி உறுதிப்பட்டுவிட்டது. எனது அத்தையின் பேச்சைக் கேட்டுவிட்டு, யாரோ சில பொல்லாத மனிதர் உனது சாதுக் கணவனை இந்தத் தப்பான பாதையில் இழுத்துவிட்டதாக நினைத்துவிட்டாய். ஆனால், உனது சாதுக் கணவனே- அது நல்லதோ கெட்டதோ – அவர்களையும் இன்னும் நூற்றுக்கணக்கான மற்றவர்களையும் இந்தப் பாதைக்குக் கொண்டு வந்திருக்கிறான்; இன்னும் ஆயிரக்கணக்கான பேரைக் கொண்டுவரப் போகிறான். இந்த வேலை எனது ஆயுட்காலத்தில் நடந்துவிடும் என்று சொல்லவில்லை; ஆனால் அது நடக்கப்போவது நிச்சயம்.

இப்பொழுது, இது விஷயமாய் நீ என்ன செய்யப் போகிறாய்? மனைவியே கணவனின் சக்தி, அவனுடைய பலம். நீ உஷாவின் நல்ல சிஷ்யையாக இருந்து வெள்ளைத் துரைகளுக்குத் துதிபாடிக் கொண்டிருக்கப் போகிறாயா? உனது அலட்சியத்தினால் உனது கணவனின் பலத்தைக் குறைக்கப் போகிறாயா அல்லது உனது அனுதாபத்தாலும் ஊக்கத்தாலும் அவனுடைய பலத்தை பெருக்கப் போகிறாயா?  ‘என்னைப் போன்ற சாதாரணப் பெண்ணால் இப்பெரிய காரியங்களிலெல்லாம் என்ன செய்ய முடியும்? எனக்கு மனோபலமோ புத்திக்கூர்மையோ கிடையாது; இவ்விஷயங்களைப்பற்றிச் சிந்திக்கவே எனக்குப் பயமாயிருக்கிறது’ என நீ சொல்லக் கூடும். ஆனால் இதைத் தீர்ப்பதற்கு எளிமையான வழி ஒன்று இருக்கிறது. கடவுளைச் சரணடைந்துவிடு. கடவுளை அறிவதற்கான பாதையில் இறங்கிவிட்டால் விரைவிலேயே அவன் இக் குறைகளை எல்லாம் நீக்கிவிடுவான். கடவுளைச் சரணடைந்தவனிடமிருந்து பயம் மெல்ல மெல்லப் போய்விடுகிறது. நீ என்மீது நம்பிக்கை வைத்து, கண்டவர்கள் பேச்சையெல்லாம் கேட்காமல் என் பேச்சை மட்டுமே கேட்பாயானால், எனது பலத்தையே நான் உனக்குத் தருவேன்; அதனால் என்னுடைய பலம் குறைந்துபோகாது, கூடவே செய்யும். மனைவியே கணவ னின் சக்தி, பலம் என்கிறோம். அதன் பொருள் மனைவியினிடத்தில் தனது உயர்ந்த ஆர்வங்களின் எதிரொலியைக் கேட்கும்போது, சொந்த பிம்பமாகவே அவளைக் காணும்போது, அவனுடைய பலம் இரு மடங்காகப் பெருகுகிறது என்பது தான்.

 ‘நேர்த்தியான ஆடைகளை அணிய வேண்டும், சுவையான பண்டங்களை உண்ண வேண்டும், ஆடவும் பாடவும் இன்பங்களை எல்லாம் அனுபவிக்கவும் வேண்டும்’ என்று நினைக்கும் நிலையிலேயே நிரந்தரமாக இருந்துவிடப் போகிறாயா? அதுபோன்ற மனப்பான்மையை முன்னேற்றம் எனச் சொல்ல முடியுமா? தற்சமயம் இந்நாட்டுப் பெண்களின் வாழ்க்கை இந்தக் குறுகிய இகழ்ச்சிக்குரிய போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு என்னைப் பின்பற்றி வா. கடவுளின் வேலையைச் செய்யவே உலகிற்கு வந்திருக்கிறோம்; அதைத் தொடங்குவோம்.

உன்னுடைய சுபாவத்தில் ஒரு குறை இருக்கிறது. நீ மிகவும் அப்பாவியாய் இருக்கிறாய். யார் எதைச் சொன்னாலும் அதற்குச் செவி கொடுக்கிறாய். அதனால் உன்னுடைய மனம் அமைதியற்றிருக்கிறது; உனது புத்திக் கூர்மை வளர முடியவில்லை; உன்னால் உனது வேலையில் ஒருமுனைப்பட முடியவில்லை. இதைத் திருத்த வேண்டும். ஒருவருக்கு மட்டும் செவி கொடுத்து நீ அறிவு பெற வேண்டும். உனக்கு ஒரே குறிக்கோள் இருக்க வேண்டும். உறுதிகொண்ட மனத்துடன் அதை நிறைவேற்ற வேண்டும். பிறருடைய அவதூறுகளையும் ஏளனங்களையும் பொருட்படுத்தாது உனது ஆர்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

உன்னிடம் இன்னொரு குறையும் இருக்கிறது. அது உனது சுபாவத்திலுள்ள குறையன்று. அது இந்தக் காலத்திற்குரிய குறை. இன்று வங்காளிகளால் பெரிய விஷயங்களுக்குச் செவி கொடுக்கவே முடியவில்லை. மதம், பரோபகாரம், உயர்வான ஆர்வங்கள், மேலான முயற்சிகள், நாட்டின் விடுதலை இவை போன்ற உயர்ந்த பெருமைக்குரிய விஷயங்களையெல்லாம் கேலிக்குரியவையாக்கிவிட்டனர். எதற்கும் மதிப்பென்பதே இல்லை. உன்னுடைய பிரம்மசமாஜப் பள்ளிக்கூடத்திலிருந்து இந்தக் குறைபாடு உன்னிடமும் சிறிது இடம்பெற்றுள்ளது. தேவகட்டத்து மக்களிடம் இக்குறைபாடு பெரும் அளவில் வளர்ந்துள்ளது. உறுதியான மனத்துடன் இந்த மனப்பாங்கினை உதறித்தள்ள வேண்டும். உன்னால் அதை எளிதாகச் செய்ய முடியும். நீயாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் உன்னுடைய உண்மையான சுபாவம் மலர்ச்சியடையும். பிறருக்கு நன்மை செய்வதிலும் தியாகத்திலும் உனக்கு இயற்கையாகவே விருப்பம் உள்ளது. உன்னிடம் மன உறுதிதான் இல்லை. கடவுளை வழிபடுவதன் மூலம் நீ அதைப் பெறலாம்.

இதுவே நான் உன்னிடம் சொல்ல விரும்பிய என்னுடைய ரகசியம். இதை வேறு ஒருவருக்கும் சொல்லாதே. நான் கூறிய விஷயங்களையெல்லாம் பற்றி அமைதியாகச் சிந்தித்துப் பார். இதில் பீதியடைவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் சிந்திப்பதற்கு நிறைய இருக்கிறது. தொடக்கத்தில் ஒவ்வொரு நாளும் ஓர் அரைமணி நேரம் இறைவனைத் தியானித்து உனது ஆர்வத்தை ஒரு பிரார்த்தனையாக அவனிடம் முறையிடலாம். அப்படிச் செய்து வந்தால் படிப்படியாக மனம் பக்குவமடையும்.

அவனிடம் நீ செய்ய வேண்டிய பிரார்த்தனை இதுதான்:  “எனது கணவரின் வாழ்க்கையில் அவருடைய லட்சியப் பாதையில், கடவுளை அடைய வேண்டுமென்னும் அவருடைய முயற்சியில் நான் ஒரு தடையாக இல்லாதிருக்க அருள். நான் என்றும் அவருக்குத் துணையாகவும் அவருடைய கருவியாகவும் இருப்பேனாக”.  நீ இதைச் செய்வாயா?

உனது….

$$$

One thought on “அரவிந்தர் தனது மனைவிக்கு எழுதிய கடிதம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s