-கவியரசு கண்ணதாசன்

கட்டிய மனைவி உடல்நலம் குன்றி இருக்கும்போது அவளைக் கண்ணும் கருத்துமாக காக்கும் மருத்துவர் கணவனாக சிவாஜி கணேசன் நடித்த அற்புதமான திரைப்படம் ‘பாலும் பழமும்’. இன்றைய தமிழ்த் திரையுலகம் பலநூறு முறை பார்க்க வேண்டிய (இம்போசிஷன்) திரைப்படம் அது. அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கவியரசரின் காவிய வரிகள் இவை...
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே!
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே! (பாலும்)
பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே!
பேசிப் பழகும் மொழி மறந்தாயே!
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே!
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே! (பாலும்)
உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே!
உறங்க வைத்தே விழித்திருப்பாயே!
கண்ணை இமைபோல் காத்திருப்பாயே!
காதற் கொடியே கண் மலர்வாயே! (பாலும்)
ஈன்ற தாயை நான் கண்டதில்லை!
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை!
உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்!
உதய நிலவே கண் மலர்வாயே! (பாலும்)
திரைப்படம்: பாலும் பழமும் (1961) இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடகர்: டி.எம்.சௌந்தர்ராஜன்