-உ.வே.சாமிநாதையர்

13. பங்களூர் யாத்திரை
அருணாசல முதலியார் வீடு வாங்கியளித்தது
இவருக்குச் சொந்த வீடு இல்லாமையையும் குடிக்கூலி கொடுத்துச் சிறியதொரு வீட்டில் இருத்தலையும் அறிந்த அருணாசல முதலியாரென்பவர் இவருடைய 33-ஆம் பிராயமாகிய பிலவங்க வருஷத்தில் மலைக்கோட்டைத் தெற்கு வீதியிற் சைவத்தெருவில் தென்சிறகிலிருந்த மெத்தை வீடொன்றைத் தமது சொந்தப் பொருள் கொடுத்து இவர் பெயருக்கு வாங்கி இவரை அதில் இருக்கச் செய்து இல்வாழ்க்கை நடைபெறுதற்குரிய பண்ட வகைகளும் பொருளும் பிறவும் வேறுவேறாக அப்பொழுதப்பொழுது உதவி செய்து ஆதரித்துவந்தார். திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களென்று உலகமெல்லாம் கொண்டாடும் வண்ணம் செய்தது இந்த அருணாசல முதலியாருடைய பேருதவியே.
அந்த வீட்டில் இவர் இருந்து வழக்கம்போற் பாடஞ் சொல்லுதல் முதலியவற்றைச் செய்து வருவாராயினர். தமக்கு இத்தகைய செளகரியங்கள் அமைந்தது திருவருட் செயலேயென நினைந்து மகிழ்ந்தார். மாணவர்களைப் பிறருடைய விருப்பத்தை எதிர்பாராமல் தங்கியிருக்கச் செய்வதற்கு அவ்விடம் தக்கதாயிருந்தது பற்றி இவருக்குண்டான களிப்பிற்கு அளவில்லை.
ஆயினும் ஸ்ரீரங்கம் முதலிய அயலூர்களிலிருந்து அடிக்கடி நடந்து வந்தும் காலத்தில் உணவில்லாமலும் நல்ல உடையில்லாமலும் விவாகமில்லாமலும் வீடில்லாமலும் பல மாணவர்கள் வருந்தியிருந்தமையால், அவர்களுக்கு நல்ல சௌகரியங்கள் அமைய வேண்டுமென்ற எண்ணம் இவருக்கு உண்டாயிற்று. அது குறித்துத் தெய்வப் பிரார்த்தனை செய்வதும் உண்டு.
அக்காலத்தில் இவரிடம் பாடங்கேட்ட மாணவர்களிற் பலர் இவர் செய்யுள் செய்யுங் காலத்தில் அவற்றை ஏட்டில் எழுதுவார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள் வயலூர் வாத்தியாராகிய சுந்தரம் பிள்ளையும் சோமரசம் பேட்டை முத்துசாமி முதலியாருமாவர்.
களத்தூர் வேதகிரி முதலியார்
களத்தூர் வேதகிரி முதலியார் என்ற வித்துவான் ஒருவர் சென்னையிலிருந்து ஒரு சமயம் திரிசிரபுரத்திற்கு வந்தார். அவர் இயற்றமிழாசிரியர் இராமாநுச கவிராயருடைய மாணாக்கர்; அக்காலத்திற் பல தமிழ் நூல்களை அச்சிட்டவர். அவர் வந்தபொழுது திரிசிரபுரத்தார் அவரை மிகவும் பாராட்டினார்கள். பிள்ளையவர்களிடத்தில் அழுக்காறுற்ற சிலர், “இவரைக் கண்டால் பிள்ளையவர்கள் அடங்கிவிடுவார்கள்” என்று நினைத்து அவரை இவரிடம் அழைத்து வந்தார்கள். அவரோடு சென்னையிலிருந்து வந்தவர்கள் சிலர் இவருடைய ஆற்றலை அறிந்து கொள்ளாமல் அயலிலிருந்து அவரை மிகச் சிறப்பிப்பாராய், “முதலியார் இலக்கண இலக்கியத்தில் அதிகப் பயிற்சியுள்ளவர். இலக்கணச் சூத்திரங்களில் ஐம்பதினாயிரம் இவருக்கு மனப்பாடமாக இருக்கின்றன” என்றார்கள். முதலியார் அவ்வளவுக்கும் உடன்பட்டவர்போன்று நகைத்துக்கொண்டிருந்தார். உடனே இவர், “அப்படியா!” என்று வியந்து தம் பக்கத்திலிருந்த தியாகராச செட்டியாரை நோக்கி, “முதலியாரவர்கள் படித்த நூல்களிலுள்ள சூத்திரங்களின் எண்களை நூல்களின் விவரணத்துடன் கேட்டு எழுதிக் கூட்டிச் சொல்ல வேண்டும்” என்றார். அவரும் அப்படியே கேட்டுவர முதலியார் மிக முயன்று சொல்லியும் சில ஆயிரங்களுக்கு மேற் சூத்திரங்களின் தொகை செல்லவேயில்லை. முதலியாரைப் புகழ்ந்தவர்கள் ஒன்றும் மேலே சொல்ல இயலாதவர்களாகி விழித்தார்கள். அப்போது ஊரார் உண்மையை நன்றாக அறிந்து கொண்டவர்களாய்ப் படாடோபத்தினாலும் பிறர் கூறும் புகழ்ச்சியினாலும் ஒருவருடைய கல்வியை அளவிடுவது பிழையென்பதை உணர்ந்து கொண்டார்கள். இவரோ ஒன்றும் சொல்லாமல் மெளனமாக இருந்துவிட்டார். அப்புறம் இவரிடத்துச் சிலநேரம் பேசியிருந்துவிட்டு முதலியார் தம்மிடம் சென்றனர்.
உறையூர்ப் புராணம் இயற்றத் தொடங்கியது
இவர் இவ்வாறு திரிசிரபுரத்தில் இருந்து வருகையில் உறையூரிலுள்ள நண்பர்களும் பிரபுக்களுமாகிய சிலர் இவரிடம், “தாங்கள் உறையூர்ப் புராணத்தைத் தமிழிற் செய்யுள் நடையிற் செய்து தர வேண்டும்” என்று விரும்பினார்கள். “தியாகராசலீலையைப் போல நாடு நகரச் சிறப்புக்களுடன் கற்பனைகள் பலவற்றை அமைத்துப் பாடவேண்டும். அந்தத் தியாகராசலீலை முற்றுப்பெறவில்லை. இப்புராணம் முழுமையும் வடமொழியில் இருப்பதால் தாங்கள் இதனைப் பாடி முடிக்க வேண்டும்” என்றார் சிலர். அவ்வாறு செய்வதற்குச் சமயம் எப்பொழுது நேரப்போகிறதென்று காத்திருந்த இவருக்கு அவர்கள் வேண்டுகோள் ஊக்கத்தை அளித்தது. வடமொழியிலுள்ள புராணத்தை வடமொழிப் பயிற்சியுள்ள தக்க வித்துவான்கள் சிலருடைய உதவியால் தமிழ் வசன நடையாக மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு நல்ல நாள் பார்த்துப் பாடத் தொடங்கினார்.
பங்களூர்த் தேவராச பிள்ளை பாடங்கேட்க விரும்பியது
அக்காலத்தில் இவருடைய கீர்த்தி நெடுந்தூரம் பரவலாயிற்று. பங்களூரிலிருந்த தேவராச பிள்ளையென்னும் கனவான் சில நண்பர்களால் இவருடைய கல்வி மிகுதியையும் பாடஞ் சொல்லுந் திறமையையும் கேள்வியுற்றார். அவர் இருந்தவிடம் பங்களூர்த் தண்டு. அவர் மிகுந்த செல்வமுடையவர். அவருடைய தந்தையார் கம்பெனியாருக்கும் மைஸூர் ராஜாங்கத்தாருக்கும் பொதுவான ஒரு துபாஷ் வேலையில் இருந்தவர். தேவராச பிள்ளைக்குப் பங்களூரிற் சில பெரிய வீடுகளும் தோட்டங்களும் இருந்தன. அவர் மிக்க பொருள் வருவாயோடு கெளரவமும் வாய்ந்தவர்.
அவர் தமிழிற் சில நூல்களை ஆங்குள்ள கல்விமான்களிடத்து முறையே கற்றவர்; மேலும் பல நூல்களைக் கற்றறிய விரும்பினார். பிள்ளையவர்களிடம் படித்தால் விரைவில் விசேஷ ஞானத்தை அடையலாமென்பது அவருக்குத் தெரியவந்தது. இவர்பால் தாமும் பாடங்கேட்க வேண்டுமென்ற ஆசையால் தமக்குப் பழக்கமுள்ள தக்கவர்களை இவரிடம் அனுப்பித் தமது கருத்தைத் தெரிவித்தனர். வந்தவர்கள் இவரைக் கண்டு தேவராச பிள்ளையினுடைய செல்வ மிகுதியையும் குண விசேடங்களையும் படித்தவர்களை ஆதரிக்கும் இயல்பையும் ஓய்வு நேரங்களில் தக்கவர்பால் தமிழ் நூல்களை அன்புடன் பாடங்கேட்டு வருதலையும் தெரிவித்ததுடன், “உங்களிடம், தாம் முன்னமே கற்ற நூல்களை ஒருமுறை மீட்டுங் கேட்டுத் தெளிந்து கொண்டு பின்பு கேளாதவற்றை முறையே பாடங் கேட்டுத் தம்மாலியன்ற செளகரியங்களை உங்களுக்குச் செய்விக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு மிகுதியாக உண்டு. அவருக்கு பங்களூரிலுள்ள லௌகிக வேலைகளின் மிகுதியால் இங்கே வந்து படித்தற்கு இயலவில்லை. நீங்கள் பங்களூருக்கு வந்தால், தாம் ஜாக்கிரதையாக நடந்து கொள்வதற்குத் தடையிராதென்று சொல்லி உங்களுடைய கருத்தை அறிந்து வர வேண்டுமென்று எங்களை அனுப்பினர்” என்றனர். இவர், “இங்கே படித்துக்கொண்டு உடனிருப்பவர்களை அழைத்து வரலாமோ?” என்று கேட்க, வந்தவர்கள், “எவ்வளவு பேர்களை வேண்டுமானாலும் அழைத்து வரலாம்” என்றார்கள். விருப்பத்தோடு பாடங் கேட்பவர்களுக்குப் பாடஞ் சொல்லுதலையே விரதமாகக் கொண்டவராதலால், இவர் சிறிது யோசித்து, “அங்கு வந்தே சொல்லுவதற்கு யாதொரு தடையுமில்லை” என்று விடையளித்தனர். வந்தவர்கள் இதைக்கேட்டு மனமகிழ்ந்து பங்களூர் சென்று தேவராச பிள்ளையிடம் தெரிவிக்கவே அவர் மிகவும் ஆனந்தத்தை அடைந்தார்.
பங்களூர் சென்றது
உடனே தேவராச பிள்ளை, “இங்கே எழுந்தருளிப் படிப்பித்து என்னை உய்விக்க வேண்டும்” என்று பிள்ளையவர்களுக்கு ஒரு கடிதம் மூலமாக விண்ணப்பம் செய்துகொண்டனர்; பின்பு பிரயாணத்திற்கு வேண்டிய செளகரியங்களைச் செய்து கொடுத்து ஜாக்கிரதையாக இவரை பங்களூருக்கு அனுப்ப வேண்டுமென்று திரிசிரபுரத்திலுள்ள தம்முடைய நண்பர்களுக்கும் எழுதினர். அவர்கள் அவ்வண்ணமே செய்தமையால் இவர் செளகரியமாகக் குடும்பத்துடனும், உடன் வருவதாகக் கூறிய சுப்பராய செட்டியார் முதலிய மாணாக்கர்களுடனும் பங்களூருக்குச் சென்றனர். செல்லுகையில் அந்நகருக்கு அருகில் உள்ள ஸ்ரீ மடவாளீசுவரமென்னும் சிவஸ்தலத்தில் இவர் தங்கினார். சீதோஷ்ண நிலையின் வேறுபாட்டால் இவருக்கு அங்கே சுரநோய் கண்டது. இவர் வந்திருத்தலையும் சுரத்தால் வருந்துதலையும் தேவராச பிள்ளை அறிந்து அங்கே சென்று எல்லோரையும் பங்களூருக்கு அழைத்து வந்து தக்க வைத்தியர்களைக் கொண்டு மருந்து கொடுப்பித்தனர். சிலநாளில் இவருக்கிருந்த சுரநோய் நீங்கியது.
தேவராச பிள்ளை இவருக்குத் தனியே ஒரு வீட்டை அமைத்து, சொன்னவற்றைக் கவனித்துச் செய்தற்குரிய வேலைக்காரர்களை நியமித்து உடன் வந்தவர்களுக்கும் இவருக்கும் வேண்டிய எல்லாவித சௌகரியங்களையும் செய்வித்தனர். அவருடைய அன்புடைமையையும் வள்ளன்மையையும் கண்ட பிள்ளையவர்களுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. பங்களூருக்கு இவர் வந்த காலம் இவருடைய 35-ஆம் பிராயமாகிய ஸெளமியவருஷம்.
தேவராச பிள்ளை பாடங்கேட்டது
தேவராச பிள்ளை நல்லதினம் பார்த்துப் பாடங்கேட்க ஆரம்பித்தார். முன்பே தாம் படித்திருந்த நூல்களிலுள்ள ஐயங்களை வினாவி முதலில் தெளிந்து கொண்டார். பின்பு திருவிளையாடல் முதலிய காப்பியங்களையும் நன்னூல் முதலிய இலக்கணங்களையும் முறையே கற்றுச் சிந்தித்து வருவாராயினர். இம்முறையில் ஐந்திலக்கணங்களையும் பல காப்பியங்களையும் கற்றனர். ஐந்திலக்கணங்களையும் அவர் கற்றமையை அவர் இயற்றிய,
“சிவபரஞ் சுடரி னிணையடி மலரைத் திரிகர ணத்தினும் வழாது
பவமறத் தினமும் வழிபடு குணாளன் பகர்திரி சிரபுரத் தலைவன்
சிவமுறு தென்சொ லைந்திலக் கணத்திற் றெளிவுறச் சிறியனேற் கருளும்
நவமுறு புகழ்மீ னாட்சிசுந் தரவே ணாண்மல ரடிமுடி புனைவாம்”
என்னும் துதிச்செய்யுளாலும் உணரலாம்.
சிவஞான முனிவருடைய தவசிப் பிள்ளையைக் கண்டது
பிள்ளையவர்கள் வந்து இருத்தலையறிந்து அப்பக்கத்தில் தமிழ் பயில்வோர்கள் சிலர், ‘நாம் முறையே கற்றுக்கொள்வதற்கு இதுதான் சமயம்’ என்றெண்ணித் தாம் கற்றுக்கொள்ள வேண்டிய நூல்களை இவருக்குள்ள ஓய்வுநேரங்களில் வந்து பாடங் கேட்பாராயினர். தமிழ்ப் பண்டிதர்களும் அப்படியே அடிக்கடி வந்து சல்லாபஞ்செய்து தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்துகொண்டு சென்றனர். அவர்களோடு பேசிக் கொண்டிருக்கையில் இவர், “இவ்வூரில் தமிழ் படித்தவர்கள் யார் யார் இருந்தார்கள்?” என்று விசாரித்த பொழுது அவர்கள் சிலரைக் குறிப்பிட்டதன்றி, “திருவாவடுதுறை யாதீன வித்துவான் சிவஞான முனிவரிடம் தவசிப் பிள்ளையாக இருந்தவர் இப்போது முதியவராக இங்கே இருக்கிறார்” என்று தெரிவித்தார்கள்.
உடனே இவர் கையுறைகளுடன் சென்று அவரைப் பார்த்து, சிவஞான முனிவருடைய உருவ அமைப்பு, அவருடைய இயற்கைகள், அவருக்கு உவப்பான உணவுகள், அவருடைய பொழுதுபோக்கு, உடனிருந்தவர்களின் வரலாறு, கச்சியப்பமுனிவர் வரலாறு, பிற சரித்திரங்கள் முதலியவற்றைப் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொண்டார். தாம் அவ்வூரில் இருந்த வரையில் அவருக்கு வேண்டிய பொருள்களை அனுப்பிவந்தார். இவர் பிற்காலத்தில், அவரைச் சந்தித்ததைப் பற்றிச் சொல்லியபொழுது தாம் அறிந்துகொண்டனவாக அறிவித்த செய்திகள் வருமாறு:
“சிவஞான முனிவர் காஞ்சீபுரத்தின் ஒருபாலுள்ள திருவாவடுதுறை மடத்தில் இருந்துவந்தார். அந்த மடத்தில் மெய்கண்ட சிவாசாரியருடைய கோயில் இருந்தது. அவ்வூரிலிருந்த செங்குந்தர்கள் தினத்திற்கு ஒரு வீடாக முறைவைத்துக்கொண்டு உணவுப் பண்டங்கள் கொடுத்து அவரை ஆதரித்து வந்தார்கள். அங்கே இருக்கையில் காஞ்சிப் புராணம், சிவஞானபோத பாஷியம் முதலியவற்றை இயற்றினார். தம்மை ஆதரித்து வந்த செங்குந்தர்களுக்குப் பஞ்சாட்சர உபதேசமும் தீட்சையும் செய்வித்துப் பூசையும் எழுந்தருளுவித்தார். ஒருமுறை சென்னைக்குச் சென்றிருந்த பொழுது அங்கே உள்ள கனவான்களிற் பலர் அவரை ஆதரித்து உபசரித்தனர். சில காரணம் பற்றி அவர் வேறு ஒன்றும் உண்ணாமல், இப்பொழுது ஒரு மண்டலம் விரதம் அநுஷ்டிக்க வேண்டியவனாக இருக்கிறேன்' என்று சொல்லிப் பாலும் பழமுமே உண்டு வந்தார்.”
இந்தச் செய்திகளைத் தமக்குச் சொன்ன தவசிப்பிள்ளைக்கு அப்போது பிராயம் 90 இருக்குமென்று பிள்ளையவர்கள் கூறியதுண்டு.
உறையூர்ப் புராணம் பாடிவந்தது
இவர் பங்களூருக்கு வருகையில் உறையூர்ப் புராணத் தமிழ் வசனத்தைக் கையில் எடுத்து வந்திருந்தனர். ஓய்வு நேரங்களில் மெல்ல மெல்ல யோசித்து அதனைச் செய்யுளாகப் பாடிவந்தனர். யாதொரு கவலையும் இல்லாத காலத்தில் அப்புராணம் பாடப் பெற்றமையால் அதற்கும் பிற்காலத்திலே பாடியவற்றிற்கும் வேறுபாடுகள் காணப்படும்.
பிற்காலத்தில் ஒரு சமயம் இவர் இயற்றிய அம்பர்ப் புராணத்திற் சில பகுதிகளைக் கேட்டு வந்த தியாகராச செட்டியார், “பாலியத்திற் செய்த உறையூர்ப் புராணத்தைப் போல இப்புராணம் யோசித்துச் செய்யப்படவில்லை. அம்மாதிரி செய்தால் மிக நன்றாகவிருக்கும்” என்றபொழுது இவர், “அவ்வாறு அந்நூல் அமைந்ததற்குக் காரணம் வல்லூர்த் தேவராச பிள்ளையின் பேருபகாரந்தான். அவ்வாறு யாரேனும் என்னைக் கவலையில்லாமல் ஆதரித்து வைத்திருந்தால் இன்னும் எவ்வளவோ செய்வேனே!” என்று விடையளித்தார்.
குசேலோபாக்கியானம் இயற்றியது
இவரிடம் பாடம் கேட்டுவந்த தேவராச பிள்ளை இவர் உறையூர்ப் புராணச் செய்யுட்களைப் பாடிவரும் சில சமயங்களில் உடனிருப்பதுண்டு. யாப்பிலக்கணத்தைப் படித்ததனாலும் இவர் பாடிவருவதைக் கண்டதனாலும் அவருக்குத் தாமும் பாட வேண்டுமென்னும் அவர் உண்டாயிற்று. சில தனிப்பாடல்களைப் பாடி இவரிடம் காட்டித் திருத்திக்கொண்டார். பின்பு தெலுங்கு பாஷையில் வழங்கிவந்த குசேலோபாக்கியானத்தை மொழிபெயர்த்துச் செய்யுள் நடையில் இயற்றவேண்டுமென்று நினைத்தார். அதனைத் தெலுங்கிலிருந்து தமிழ் வசன நடையிற் பெயர்த்து வைத்துக்கொண்டு ஆரம்பித்தார். நூலொன்றைத் தொடர்ந்து பாடிக்கொண்டு போகும் ஆற்றல் அவருக்கு அப்போது இல்லாமையால் சில பாடல்களைப் பாடுவதற்குள் அவருடைய ஊக்கம் தளர்ந்துவிட்டது; தேகமும் மெலிந்து விட்டது.
அவர் அவ்வாறு குசேலோபாக்கியானத்தைப் பாடி வருவதையும் அதனைச் செய்வதனால் வருந்துவதையும் சிலராலறிந்த பிள்ளையவர்கள் அவரைக் கண்டபொழுது, “உங்களுக்குக் குசேலோபாக்கியானத்தைச் செய்யுளுருவத்திற் பார்க்க எண்ணமிருந்தால் ஓய்வு நேரங்களிற் பாடி முடித்து விடுகிறேன். நன்றாகப் பாடுதற்குப் பழகிக்கொண்டு பின்பு ஏதேனும் நூல் இயற்றலாம். இப்போது இதனை இம்மட்டோடே நிறுத்திவிட்டுக் கவலையின்றி இருங்கள்” என்று சொன்னார். ஆசிரியருடைய வார்த்தையை மறுத்தற்கஞ்சி அவர் அம் முயற்சியை நிறுத்தி விட்டார்.
ஆனாலும் அந்த நூல் செய்யப்படவில்லையேயென்ற குறை அவருக்கிருந்ததைக் குறிப்பாலறிந்த இக் கவிஞர் கோமான் அவர் பாடியிருந்த செய்யுட்களைத் திருத்தி அவருக்குக் காட்டிவிட்டு மேலே உள்ள பாகத்தை அவர் முன்பாகவே நாளொன்றுக்கு ஐம்பது செய்யுட்களுக்குக் குறையாமற் பாடிக் கொண்டே வந்து சில தினங்களில் முடித்தனர். இவர் பாடுங் காலத்தில் யாதொரு வருத்தமுமின்றிப் பாடுவதையும் வந்தவர்களோடு இடையிடையே பேசிக்கொண்டிருப்பதையும் அதனாற் பாடுதலுக்குச் சிறிதும் இடையூறில்லாமையையும் நேரே அறிந்த தேவராச பிள்ளை மிகவும் வியப்புடையவராகி, “ஐயா! நீங்கள் தெய்வப் பிறப்போ! சாதாரண மனிதராக உங்களை நினைக்கவில்லை. சில பாடல்கள் செய்வதற்குள்ளே நான் பட்ட பாடு தெய்வத்திற்கும் எனக்குமே தெரியும். இனிமேல் நான் உங்களிடத்தில் விசேஷ மரியாதையோடு நடப்பேன். இப்பொழுது தான் உங்களுடைய பெருமை எனக்குத் தெரியவந்தது. ஒரு பாட்டையாவது நீங்கள் திரும்பத் திருத்தச் சொல்லவில்லையே. நீங்கள் இவ்வளவையும் மனத்திலே யோசித்து முடித்துக் கொள்கிறீர்களே! ஒரு பாட்டெழுதுவதற்குள் நான் கிழித்த காகிதங்கள் எவ்வளவோ இருக்கும்!” என்று சொல்லிச் சொல்லி ஆனந்தமுறுவாராயினர்.
குசேலோபாக்கியானம் எளிய நடையில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற நூல்களில் உள்ளவற்றைப் போல நாட்டுச் சிறப்பு நகரச்சிறப்பு முதலியன இதன்கண் விரிவாக இல்லை. சம்பாஷணைகளாக உள்ள பகுதிகள் மிக்க விரிவாகவும் வாசிப்பவர்களுக்கு மேன்மேலும் படிக்க வேண்டுமென்னும் உணர்ச்சியை உண்டுபண்ணுவனவாகவும் இருக்கின்றன. குசேலரது இல்வாழ்க்கைத் தன்மையும், அவருடைய வறுமை நிலையும், அவருடைய மக்கள் படும் பசித்துன்பமும், பொருளுடையார் இயல்பும், முயற்சியின் பெருமையும், குசேலர் மிக வருந்தித் துவாரகை சென்று சேர்வதும், அங்கே கண்ணபிரானது அரண்மனையின் வாயில் காவலர் அவரைக் கண்டு இகழ்ந்து கூறுவதும், துவாரபாலகருள் ஒருவர் உண்மை ஞானியரது தன்மையைக் கூறுதலும், குசேலர் உள்ளே சென்றவுடன் கண்ணபிரான் அவரை உபசரித்தலும், அவர் கொணர்ந்திருந்த அவலை உண்டலும், அவலை ஒரு பிடிக்குமேல் உண்ணாமல் உருக்குமிணிப் பிராட்டி தடுத்ததும், குசேலர் வெறுங்கையோடு அனுப்பப்பட்டபோது பல மகளிர் பலவிதமாகக் கூறுதலும், கண்ணன் பொருளொன்றுங் கொடாமல் வறிதே தம்மை அனுப்பியது நன்மையே என்று குசேலர் எண்ணித் திருப்தியுறலும், அவர் தம் ஊர்வந்து சேர்ந்து கண்ணன் திருவருளால் உண்டாகிய செல்வமிகுதியைக் காண்டலும், பிறவும் இனிய நடையில் அமைக்கப்பட்டுள்ளன. உலகியல்புகள் பல அங்கங்கே விளக்கப்பட்டிருக்கின்றன. நகைச்சுவையையுடைய செய்யுட்கள் பல இதன்கண் உண்டு. இறுதியிற் குசேலர் திருமாலைத் தோத்திரம் செய்வதாக உள்ள பகுதியில் பத்து அவதாரமூர்த்திகளுடைய பெருமைகளும் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் இராமாவதாரம், கிருஷ்ணாவதார மென்பவற்றைப்பற்றிய சரித்திரங்கள் சில செய்யுட்களிற் சுருக்கமாகச் சொல்லப்படுகின்றன. இந் நூலிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:
இரத்தலின் இழிவு
“பல்லெலாந் தெரியக் காட்டிப் பருவரன் முகத்திற் கூட்டிச்
சொல்லெலாஞ் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி
மல்லெலா மகல வோட்டி மானமென் பதனை வீட்டி
இல்லெலா மிரத்த லந்தோ விழிவிழி வெந்த ஞான்றும்.”
குசேலருடைய மக்கள் உணவு முதலியவற்றை விரும்பிப் படும்பாடும் தாயின் துயரமும்.
“ஒருமகவுக் களித்திடும்போ தொருமகவு கை நீட்டு முந்தி மேல்வீழ்ந் திருமகவுங் கைநீட்டு மும்மகவுங் கைநீட்டு மென்செய் வாளாற் பொருமியொரு மகவழுங்கண் பிசைந்தழுமற் றொரு மகவு புரண்டு வீழாப் பெருநிலத்திற் கிடந்தழுமற் றொருமகவெங் ஙனஞ்சகிப்பாள் பெரிதும் பாவம்.” “அந்தோவென் வயிற்றெழுந்த பசியடங்கிற் றில்லையென அழுமா லோர்சேய் சிந்தாத கஞ்சிவாக் கிலையெனக்கன் னாயெனப்பொய் செப்பு மோர்சேய் முந்தார்வத் தொருசேய்மி சையப்புகும்போ தினிலொருசேய் முடுகி யீர்ப்ப நந்தாமற் றச்சேயு மெதிரீர்ப்பச் சிந்துதற்கு நயக்கு மோர்சேய்.” “அடுத்தமனைச் சிறானொருவ னின்றுநும தகங்கறியென் னட்டா ரென்று தொடுத்துவினா யினனாலச் சொற்பொருள்யா ததுதானெச் சுவைத்தன் னாய்நீ எடுத்துரையென் றிடுமழவுக் குரைப்பினது செய்யெனிலென் செய்வா மென்று மடுத்தவஃ தறிந்திலே னெனமற்றொன் றுரைத்ததனை மறக்கச் செய்வாள்.” “குண்டலமோ திரங்கடகஞ் சுட்டியயன் மனையார்தங் குழவிக் கிட்டார் புண்டரிகக் கண்ணன்னே யெனக்குநீ யிடாதிருக்கும் பொறாமை யென்னே கண்டெடுத்திப் போதிடெனக் கரைமதலைக் கில்லாதான் கடன்றந் தானுக் கெண்டபச்சொல் வார்த்தையென நாளைக்கு நாளைக்கென் றியம்பிச் சோர்வாள்.”
செல்வத்தின் இழிவு
“கோடிபொன் னளிப்ப னின்றே கோடிரோர் மாத்தி ரைக்குள்
ஊடிய கிளைக்கோர் வார்த்தை யுரைத்தடை குவனென் றாலும்
தேடிய கால தூதர் சிமிழ்த்தல்விட் டொழிவ ரேகொல்
வாடிய மருங்கு னங்காய் மாண்பொருட் பயன்கண் டாயோ.”
வாயில் காவலர் குசேலரை அவமதித்துக் கூறல்
“வகுத்தபல் லுலகும் போற்ற மாற்றலர் கூற்றூர் மேவச் செகுத்தர சாளுங் கண்ணச் செம்மலெங் கேநீ யெங்கே இகுத்தபல் துவாரக் கந்தை யேழைப்பார்ப் பானே சற்றும் பகுத்தறிந் திடலற் றாய்கொல் பயனின்மூப் படைந்தாய் போலும்.” “சிவிகைமுன் னூர்தி வேண்டுஞ் செழும்பொருட் செலவு வேண்டும் குவிகையே வலரும் வேண்டுங் கோலமார்ந் திருக்க வேண்டும் கவிகைதாங் குநரும் வேண்டுங் கையுறை சிறப்ப வேண்டும் அவிகையில் விளக்கம் வேண்டு மரசவை குறுகு வார்க்கே.”
அப்போது குசேலர் எண்ணுதல்
“மின்செய்த மதாணி யாமுத் தாரமாம் விளங்கு பட்டாம்
பொன்செய்த வூர்தி யாமிப் போதியாம் பெறுவ தெங்கே
நன்செய னம்மூ தாதை நாளினுங் கேட்ட தின்றால்
என்செய்வா மெண்ணா தொன்றை யியற்றுத லென்றுந் தீதே.”
கண்ணபிரான் அவலை உண்டல்
“முன்னுமிவ் வவலொன் றேனு முனைமுறிந் ததுவு மின்று
பன்னுமுட் டையுமின் றாகும் பட்டவங் கையும ணக்கும்
கொன்னும்வாய் செறிப்பி னம்ம குளமும் வேண் டுவதின் றென்னா
உன்னுபல் லுலகு முண்டோ னொருபிடி யவறின் றானே.”
மகளிர் கூற்று
“எளியோன் பாவ மித்தனை தூர மேன்வந்தான்
அளியார் தேனே பாலே யெனவினி தாப்பேசிக்
களியா நின்றோர் காசும் மீயான் கழிகென்றான்
தெளியார் நல்லோ ரிவனுரை யென்றார் சிலமாதர்.”
சூத சங்கிதை இயற்றியது
தேவராச பிள்ளையினுடைய ஆவலையறிந்த பிள்ளையவர்கள் அவ்வப்பொழுது செய்யுள் செய்யும் முறைகளையும் கருத்தை அமைக்கும் வழிகளையும் அவருக்குக் கற்பித்து வந்தனர். அவ்வாறு இவர் கற்பித்தமையால் தேவராச பிள்ளைக்கு ஊக்கமுண்டாயிற்று. நண்பர்கள் சிலருடைய தூண்டுதலினால் சூதசங்கிதையைத் தமிழில் வசன நடையாக மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு செய்யுள் நடையாக இயற்றத் தொடங்கினர். அதுவும் குசேலோபாக்கியானத்தின் செய்தியாகவே முடிந்தது. அதனால், பெரிய நூலாகிய அதனை நிறைவேற்றுவது அசாத்தியமென்று நினைத்து அதுவரையில் தாம் இயற்றியிருந்த பாடல்களைக் கிழித்தெறிந்துவிட்டார். ஆனாலும் செய்யக் கூடவில்லையே என்ற குறை அவருடன் போராடிக் கொண்டிருந்தது. அதனைக் கேள்வியுற்ற பிள்ளையவர்கள் அவரிடம் வலிந்து சென்று, “நீங்கள் இது விஷயத்திற் சிரமம் வைத்துக் கொள்ள வேண்டாம். இந்த அருமையான வேலையை என்னிடம் ஒப்பித்துவிடுங்கள். உங்கள் முன்னிலையிலேயே செய்து முடித்துப் பின்பு திரிசிரபுரம் செல்லுவேன்” என்று சொல்லி அவரிடம் இருந்த மொழிபெயர்ப்புவசனத்தைத் தாம் வாங்கி வைத்துக்கொண்டு பாட ஆரம்பித்துச் சில மாதங்களிற் செய்து முடித்தார்.
சூதசங்கிதையென்பது ஸ்கந்த புராணத்திலுள்ள ஆறு சங்கிதைகளில் ஒன்று. சிவமான்மிய காண்டம், ஞானயோக காண்டம், முக்தி காண்டம், எக்கியவைபவ காண்டமென்னும் நான்கு பிரிவுகளை உடையது; சிவபெருமானுடைய பலவகைப் பெருமைகளையும், பல தலவரலாறுகளையும், தீர்த்த வரலாறுகளையும், பல உபநிஷத்துக்களின் கருத்தையும் விளக்கிக் கூறுவது. சிவபிரான் புகழைப் பாடிப் பாடிச் சுவைகண்ட பிள்ளையவர்களுடைய அன்புப் பெருக்கு, சூதசங்கிதையில் நன்கு வெளிப்படும். தலவரலாறுகளைக் கூறுவதிலும், அவற்றைப் பலவகையாகச் செய்யுட்களிற் பொருத்தி அணி செய்வதிலும் இவருக்கு விருப்பம் அதிகம். ஆதலின் இந்நூலில் தலவரலாறுகள் கூறப்படும் இடங்களில் அத்தலப் பெயர்களைத் திரிபிலமைத்தல், அத்தலவிசேடங்களைச் சுருக்கி ஒரு செய்யுளிற் கூறல், அத் தலப்பெயர்க்கு ஏற்ற சந்தத்தை எடுத்தாளல் முதலியன காணப்படும். வஞ்சித் துறை போன்ற சிறிய பாட்டுக்களில் வரலாறுகளை விரைவாகக் கூறிக்கொண்டு போகும் இடங்கள் சில இதில் உண்டு. இந்நூலிலிருந்து சில பாடல்கள் வருமாறு:
மாங்கனியைக் குரங்கு உதிர்த்தல்
“ஒற்றைமாங் கனிமெய் யடியவர்க் குதவி யும்பர்க்கு மரியநன் கதியை உற்றசீ ரம்மை யார்தொழி னன்றென் றுவந்தெனப் பன்முசுக் கலைகள் சொற்றவவ் வனத்திற் செற்றதே மாவிற் தூங்கிய தேங்கனி பலவும் நற்றவச் சைவர் பெரியவர் கொள்ள நாடொறு நாடொறு முதிர்க்கும்.” (புராண வரலாறு, 7.)
நாகங்கள்
“பொறிய டக்கமும் போகுகா லின்மையும் பொருந்தி நெறியின் 1வந்ததே யுண்டுகந் தரந்தொறு நிலவும் குறிகொள் யோகியர் தந்நிகர்த் தாரெனக் குறித்துச் செறியு மாமணிப் புறவிளக் கிடுஞ்செழும் பணிகள்.” (ஞானயோகத்தை யுணர்ந்தவா றுரைத்தது, 20.)
வாரணவாசி (காசி)
"சீரணவா சிரியனருள் வழிநின்று செறிசென்ம
காரணவா சிரியவிரித் தருண்மேவுங் கருத்தினனாய்த்
தோரணவா சிகைமலியுஞ் சுடர்வீதி நெடுமாட
வாரணவா சியையடைந்து மாண்கங்கைத் துறைமூழ்கி.”
மடக்கு
“மூவருக்கு மிளையான்றீ முயற்சியினு மிளையான்வெம் பாவவினைத் திறமொழியான் படிறுகுடி கொளுமொழியான் ஓவின்மறை யொழுக்கொருவி யுறுபொருள்கண் மிக்கீட்டி யேவிகக்கு நெடுங்கண்விலை யேழையரில் லகத்திறுப்பான்.” (அடியார் பூசாவிதியு மவரைப் போற்றினோர் பேறு முரைத்தது, 19, 27.)
துதி
“மூவா முதலே முடியா முடிவே முக்கண்ணா தேவா தேவர்க் கிறையே கறையேய் சீகண்டா கோவா மணியே முத்தே யமுத குணக்குன்றே ஆவா வடியே னாற்றே னுடையா யருளாயோ.” (ஞானி பணிவிடைப் பேறு சொற்றது, 33.)
பங்களூரில் இருந்தபொழுது இவர், தம்முடன் வந்திருந்த தம் மாணவராகிய சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைக் கொண்டு தமிழருமையறிந்த சில பிரபுக்களின் முன்னிலையில் சில முறை அவதானம் செய்வித்துத் தக்க பொருளுதவி பெறச் செய்வித்தனர்.
திரிசிரபுரம் மீண்டது
அப்பால் பிள்ளையவர்கள் திரிசிரபுரத்திற்கு வரவேண்டிய இன்றியமையாத காரியம் இருந்தமையால் ஊர் செல்ல வேண்டுமென்று தேவராச பிள்ளைக்குக் குறிப்பித்தனர். அது விஷயத்திற் சிறிதும் உடன்பாடில்லாத அவர் பிறகு ஒருவாறு உடன்பட்டு ரூபாய் ஐயாயிரமும் உயர்ந்த பீதாம்பரம் முதலியவைகளும் இவர் முன்னே வைத்துச் சாஷ்டாங்கமாக வந்தனம் செய்து, “இவற்றை அங்கீகரித்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் ஐயா அவர்கள் விஷயத்தில் கடப்பாடுடையேன்; நான் அவ்விடத்திற்கு அடிமை” என்று தம்முடைய பணிவைப் புலப்படுத்தி மிகவும் வேண்டினர். அதுவரையில் அத்தகைய தொகையைக் காணாதவராதலால் அதனை மிகுதியென்று இவர் எண்ணி அடைந்த வியப்பிற்கு அளவில்லை. தேவராச பிள்ளையினுடைய அன்புடைமையை நோக்கிய பொழுது கைம்மாறு கருதாமற் பாடஞ்சொல்லும் இயல்பினராகிய பிள்ளையவர்களுக்கு, ‘இவருக்கு நாம் யாது செய்வோம்?’ என்ற எண்ணம் உண்டானமையால் அவரை நோக்கி, “உங்களுடைய அன்பிற்கு நான் வேறு என்ன செய்யப் போகிறேன்? இங்கே நான் வந்தபின்பு உங்கள் உபகாரத்தால் முற்றுப்பெற்ற குசேலோபாக்கியானம், சூதசங்கிதை யென்னும் இரண்டையும் உங்களிடம் கொடுத்துவிடுகிறேன். உங்கள் பெயராலேயே இவற்றை அச்சிற் பதிப்பித்து வெளியிட்டுக் கொள்ளுங்கள். அங்ஙனம் செய்தால் தான் எனக்குத் திருப்தியாகவிருக்கும். தமிழ், ஸம்ஸ்கிருதம், தெலுங்கு முதலிய பாஷைகளிற் கவிகள் தாம் செய்த நூல்களை இவ்வாறு தங்களை ஆதரித்த பிரபுக்களின் பெயராலே வெளியிடுவது பழைய வழக்கந்தான். இதைப்பற்றித் தாங்கள் சிறிதும் யோசிக்க வேண்டாம். இல்லையாயின் நான் மிக்க குறையுடையவனாவேன். என்னுடைய இஷ்டத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும்” என்று இரண்டு புத்தகங்களையும் அவர் கையிற் கொடுத்தார். அவர் ஒன்றும் விடை சொல்லத் தெரியாமல் பிரமித்து நின்றார். அவருக்கு அவற்றைத் தாம் பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை; அஞ்சினார். பக்கத்தில் இருந்தவர்கள் இவருடைய குறிப்பையறிந்து அதை வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்திப் பின்பு அவர் பொருட்டுத் தாங்களே வாங்கி வைத்துக் கொண்டனர்.
புறப்படுகையில் வேறு சில பிரபுக்களும் இவருக்குப் பொருளுதவி செய்தனர். அப்பால் பிரயாணத்திற்கு வேண்டிய செளகரியங்களெல்லாம் தேவராச பிள்ளையாற் செய்விக்கப் பெற்றன. இவர் மாணாக்கர்களுடன் ஸெளக்கியமாகத் திரிசிரபுரம் வந்து சேர்ந்தனர்.
பின்பு *2 அந்நூல்கள் தேவராச பிள்ளையைச் சார்ந்தவர்களால் அச்சிடப் பெற்றன. அச்சிடுவதற்கு முன் அச்செய்தி சிலரால் இவருக்குத் தெரிய வந்தது. இவர் தாமே சிறப்புப் பாயிரம் பாடிக் கொடுத்ததன்றித் தம் மாணவர்களையும் நண்பர்களையும் பாடிக் கொடுக்கச் செய்தனர். அந்நூல்களிரண்டும் அச்சிடப்பெற்றுத் தேவராச பிள்ளையின் பெயராலேயே உலாவி வரலாயின.
தேவராச பிள்ளை அடிக்கடி பிள்ளையவர்களுக்குக் கடிதம் எழுதி வருவார். ஒவ்வொரு கடிதத்தின் தலைப்பிலும் குருஸ்துதியாக ஒரு செய்யுள் எழுதுவதுண்டு. அவ்வாறு எழுதியவற்றுள் இரண்டு குருவணக்கமாகச் சூதசங்கிதையிற் சேர்க்கப்பட்டன. அவர் பின்பு செய்யுள் செய்யும் பயிற்சியை விருத்தி செய்து கொண்டு பல பிரபந்தங்களை இயற்றினார். அவற்றை அப்பொழுதப்பொழுது இவருக்கு அனுப்புவார். இவர் அவற்றைச்செப்பஞ் செய்து சிறப்புப்பாயிரம் பாடி அனுப்புவார். அவை அச்சுப் பிரதிகளிற் காணப்படும்.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. வந்ததே – காற்றையே, கிடைத்ததையே; சிலேடை.
2. குசேலோபாக்யானம் பதிப்பிக்கப்பட்ட காலம் சாதாரண வருஷம் சித்திரை மாதம்; சூதசங்கிதை பதிப்பிக்கப்பட்ட காலம் இராக்ஷஸ வருஷம் கார்த்திகை மாதம்.
$$$